அத்தியாயம் – 17

அடுத்த நாள் மாலையில், மதுரை வீட்டின் வரவேற்பறையில் கூடியிருந்தனர் பசுபதி குடும்பத்தினர்.  நேற்றிலிருந்து அழுது அழுது, மீனாவின் முகம் வீங்கி இருந்தது.  நேற்று மதியம் போல், ஜெயந்தி சென்ற பின், படுக்கையறைக்குள் நுழைந்தவர் ஒரு நாளாகியும் வெளியே வரவில்லை.  உமேஷும் பார்வதியும் சென்னையிலிருந்து வந்த பின் தான் அவருடைய அறையிலிருந்து வெளியே வந்தார்.  மனைவியின் போக்கில் மனவேதனை அடைந்திருந்தார் நாகேஸ்வரன். 

வீட்டிலிருந்த வேலையாள்களை சீக்கிரமாகவே அனுப்பி விட்டார் நாகேஸ்வரன். இன்று, கடைக்கும் செல்லவில்லை அவர்.  இரண்டு கடைகளையும் ஏகாம்பரம் தான் கவனித்துக் கொண்டார். அவரும் சற்று முன்னால் தான் வீடு வந்து சேர்ந்திருந்தார்.

பார்வதி வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே,”என்னைக் கேட்காம என் பையனுக்குக் கல்யாணம் பேச நீங்க யார்?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டார் மீனா.

மருமகளின் ஆக்ரோஷத்தில் திடுக்கிட்டுப் போனார் பார்வதி.  அந்த நேரத்தில், உமேஷின் கண்களுக்கு அவனுடைய அம்மா, அம்மாவாகத் தெரியவில்லை.  நேற்று காலையிலிருந்து இது போன்ற பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்ததால், நாகேஸ்வரனும் ஏகாம்பரமும் அமைதியாக இருந்தனர்.

அதுவும், நேற்றிரவு, உமேஷ், உமாவின் கல்யாணத்தைப் பற்றி ராம நாதனுடன் நாகேஸ்வரன் பேசி முடித்த பின், மீனாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை அவரால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.  இத்தனை வன்மம் எதற்காக? உமாவும் அவரைப் போல் ஒரு பெண்தானே என்று தோன்றியது. அரக்கி மீனாவை எப்படி அவருடைய மகன் சமாளிக்கப் போகிறானென்று கவலையானார்.

“பாட்டி பேசலை..நான் தான் பேசினேன்..முதல்லே அப்பாகிட்டே தான் சொன்னேன்.” என்றான் உமேஷ்.

“உன்னோட அப்பா என்னைக்கு என் பேச்சைக் கேட்டிருக்கார்..அப்படிக் கேட்டிருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று கேட்டு விட்டு, பெரிதாக அழுதார் மீனா.

உடனே,”மீனா, உமேஷ் உன்கிட்டே சொல்லியிருக்கணும்..சொல்லலை..அது தப்பு தான்.” என்றார் நாகேஸ்வரன்.

“அதை இப்போ சொல்லுங்க..அவன் உங்ககிட்டே சொன்ன அன்னைக்கே ஏன் என்கிட்டே நீங்க சொல்லலை..உங்கம்மாவும் நீங்களும் சேர்ந்து என் பையன் மனசை கலைச்சிட்டீங்க…அன்னைக்கு ஆஸ்பத்திரிலே என்ன நடந்திச்சுன்னு கேட்டேனில்லே.. உங்களோட வாய்லேர்ந்து இந்த மாதிரின்னு ஒரு வார்த்தை வந்திச்சா?..அத்தையும் வாயை மூடிட்டு இருந்திட்டு இன்னைக்கு இப்படியொரு காரியத்தைச் செய்திருக்காங்க.” என்றார் மீனா.

“மீனா, கொஞ்சம் நேரம் பேசாம இரு..உன் பையனுக்குக் கல்யாணமா ஆகிடுச்சு? இப்படி கூச்சல் போடிட்டு இருக்க..நான் இருக்கேன்..அந்தப் பொண்ணு நம்ம வீட்டுப் பொண்ணா இருந்திருந்தா அன்னைக்கே அழைச்சிட்டு வந்திருப்போமே..அப்படி இல்லைன்னு தானே ப்ரீத்தியை மட்டும் அழைச்சிட்டு வந்தோம்.” என்றார் ஏகாம்பரம்.

“அன்னைக்கு ப்ரீத்தியை சொந்தப் பேத்தின்னு அழைச்சிட்டு வந்தீங்க..இன்னைக்கு இந்தப் பொண்ணை பேரனோட மனைவியா அழைச்சிட்டு வரப் போறீங்க..கடைசிலே உங்க பொண்ணு அவ போன பிறகும் இந்த வீட்லே அவளோட இரண்டு பொண்ணுங்களையும் கொண்டு வந்து சேர்த்திட்டா.” என்று வருடக்கணக்காக மனத்தில் சேர்த்து வைத்திருந்த கசப்பை வெளியேற்றினார் மீனா.

அதுவரை பொறுமையாக இருந்த உமேஷ்,”அத்தையைப் பற்றி பேச நம்ம யாருக்கும் தகுதியே இல்லை..அவங்களுக்கு அந்த மாதிரி ஓர் எண்ணம் இருந்திருந்தா, நம்மளோட தொடர்பு வைச்சுக்கிட்டு இருந்திருப்பாங்க…

அவங்க உயிரோட இருந்த போது அவங்களைப் பற்றி ஒண்ணுமே நம்மகிட்டே பகிர்ந்துக்கலை..அவங்களோட சந்தோஷம், துக்கம் ஏதுவுமே நமக்குத் தெரியாது..உமாவைத் தத்து எடுத்தது தெரியாது, ப்ரீத்தி பிறந்தது தெரியாது..அவங்க போனதைப் பற்றி நமக்கு யாரும் தகவல் கொடுக்காம இருந்திருந்தா இன்னைக்கும் அவங்க உயிரோட இருக்காங்கண்ணு நினைச்சுக்கிட்டு, வாழ்ந்திட்டு இருந்திருப்போம்…

அவங்களோட மகள்களைத் திட்டம் போட்டு நம்ம வீட்டுக்கு யாரும் அனுப்பலை..ப்ரீத்தியை இரத்த சொந்தம் அழைச்சிட்டு வந்தீங்க..எனக்குச் சொந்தமானவளா உமாவை நான் அழைச்சிட்டு வரேன்..இதிலே நீங்க எதுக்கு ம்மா நடுவுலே வர்றீங்க?” என்று கேட்டான் உமேஷ்.

“எனக்குப் பிடிக்கலை.” என்றார் மீனா.

“என்ன பிடிக்கலை?”

“அந்தப் பொண்ணை நீ கல்யாணம் செய்துக்கறது எனக்குப் பிடிக்கலை.”

“எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு அதனாலே அவளைக் கல்யாணம் செய்துக்கறேன்.”

“நான் உன்னோட அம்மா டா..எனக்குப் பிடிக்க வேணாமா?” என்று கேட்டார் மீனா.

அதே கேள்வியால் தான் ஜெயந்திக்கும் ராஜசேகருக்கும் இடையே சண்டை மூண்டது. உமாவைப் பற்றி,  முக்கியமான விஷயத்தை உமேஷ் மறைத்து விட்டதாக ராஜசேகரிடம் புகார் செய்தாள் ஜெயந்தி.  அதற்கு,

“நமக்குத் தெரிய வேண்டிய விஷயத்தை, நம்ம வீடு தேடி வந்து, உன்னோட வீட்டுக்குச் சொல்றத்துக்கு முன்னாடி நம்மகிட்டே சொன்னார்..இதைத் தெரியப்படுத்தலைன்னா அதுக்கு ஏதாவது காரணமிருக்கும்..உன் அண்ணனோட சொந்த விஷயம் இது.. நீ தலையிடாத.” என்று எச்சரிக்கை செய்தான்.

“அண்ணன் எப்படி அந்தப் பொண்ணைக் கல்யாணம் செய்துக்கலாம்..அம்மாக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை.” என்றாள் ஜெயந்தி.

“உங்கம்மாவுக்குப் பிடிச்ச பொண்ணை தான் உன் அண்ணன் கல்யாணம் செய்துக்கணுமா?” என்று ராஜ சேகர் கேட்க,

“ஆமாம்…அவங்களுக்குப் பிடிக்கணும்.”

“அப்போ, நீயும் அப்படித் தான் என்னைக் கல்யாணம் செய்துக்கிட்டேயா..உங்கம்மாக்கு பிடிச்சதாலே தானா?” என்று கேட்டவுடன்.

விஷயம் வேறு பாதையில் போவதை உணர்ந்து, படபடப்புடன்,“இல்லை..இல்லை..நம்ம விஷயம் வேற.” என்றாள் ஜெயந்தி.

“நீ முதல்லே அங்கேயிருந்து கிளம்பு..நல்ல விதமா யோசிப்பேன்னு உங்கண்ணன் நல்ல எண்ணத்திலே உன்னை அழைச்சிட்டுப் போனான்..நீ அவன் வாழ்க்கையைக் கெடுத்திடுவே.” என்று கோபத்துடன் பேசி அழைப்பைத் துண்டித்தான் ராஜ சேகர்.  அதற்கு அடுத்த நிமிடமே நாகேஸ்வரனை அழைத்து, ஜெயந்தியை உடனே அனுப்பி வைக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டான்.  மேலும், உமேஷின் வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை அவனைத் தவிர வேறு யாருக்குமில்லை என்று அவருக்குத் தெரியப்படுத்தி, எது நடந்தாலும் தன்னுடைய ஆதரவு உமேஷிற்கு தான் என்று தெளிவுப்படுத்தினான்.  

மாப்பிள்ளையின் விருப்பப்படி உடனடியாக மகளை அவளுடைய புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார் நாகேஸ்வரன்.  அவளுடைய கணவனுக்கு அவளது மனத்தைப் புரிய வைப்பது முக்கியமென்று உடனே ராஜபாளையம் கிளம்பிச் சென்றாள் ஜெயந்தி. மகளிடமிருந்து ஆதரவை எதிர்பார்த்த மீனா ஏமாற்றமடைந்தார்.  அதனால், தனியாக, தன்னுடைய யுதத்தை நடத்திக் கொண்டிருந்தார். 

“அவளோட ஃபோன்லே பேசியிருக்கீங்களா? நேர்லே பழகியிருக்கீங்களா? இல்லை அவளைப் புகைப்படத்திலேயாவது பார்த்திருக்கீங்களா..இது எதையுமே செய்யாம எப்படி உங்களுக்கு உமாவைப் பிடிக்கலைன்னு சொல்றீங்க?” என்று கேட்டான் உமேஷ்.

அதற்கு மீனா பதில் சொல்வதற்குள்,”அந்த மாதிரி பொண்ணை நம்ம குடும்பத்து மருமகளா அழைச்சிட்டு வர முடியாது.” என்றார் ஏகாம்பரம்.

அதைக் கேட்டு உக்கிரமான உமேஷ்,”எந்த மாதிரி பொண்ணு?” என்று உறுமினான்.

உடனே,”அப்பா, தேவையில்லாம பேசாதீங்க..உமாவைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது.” என்று முதல் முறையாக நாகேஸ்வரன் நடுவில் வந்தார்.

“நீ சும்மா இருடா..அவளோட குடும்பம் எந்த மாதிரி குடும்பம்? அவளோட அம்மா யார்? ஏன் இவளை ஆஸ்ரமத்திலே விட்டாங்க? இவ நல்ல பிறப்பா…” என்று அடுக்கிக் கொண்டே போக,

“போதும் தாத்தா..இது தான் கடைசி முறை இதைப் பற்றி பேசறது..இதுவரை ராம் அங்கிள் அவளுக்கு ஒரு பைசா செலவழிக்கலை..நீங்க கொடுத்த பணத்திலே தான் அவளைப் படிக்க வைச்சிருக்காங்க..ராம் அங்கிளோட வைஃப் அவளை அவங்க குடும்பத்திலே ஒருத்தியா நடத்தறதில்லை..ஆனா, அவ, இரத்த சம்மந்தம் இல்லாத ராம் அங்கிளோட வைத்தியதுக்குப் பணம் கொடுத்திருக்கா..இன்னைக்கும் சுந்தரி பாட்டிக்கு அவ தான் செலவு செய்யறா..நமக்கு என்ன? போகட்டும்னு விட்டிருக்கலாம்..அப்படிச் செய்யலை..தன்னாலே முடிஞ்சதைச் செய்யணும்னு பிரதிபலன் எதிர்பார்க்காமச் செய்திட்டு இருக்கா.. அதனாலே அவளோட குடும்பம், தானம், தருமம் செய்யற குடும்பமா இருக்கணும்..நம்மை போல பிச்சை போடற குடும்பமா இருக்காது..

அவளோட அம்மா, இதயத்திலே இரக்கம், ஈரம் இருக்கறவங்களா இருந்திருக்கணும்..அதான் அவளை கருலேயே கொல்லாம, தன் உயிரைக் கொடுத்து அவளுக்கு உயிர் கொடுத்திருக்காங்க..அதான் அவளும் அப்படி இருக்கா..

அத்தையும் மாமாவும் உயிரோட இருந்திருந்தா உமாவை எனக்குக் கட்டி வைச்சிருக்க மாட்டாங்க.. என்னை விட நல்ல மாப்பிள்ளையா அவளுக்குப் பார்த்திருப்பாங்க..அவளோட தகுதிக்கு நான் சரியான ஜோடி கிடையாது..ஆனா எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு..அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு..இது போதும் ஒரு கல்யாணத்துக்கு..அத்தை, மாமாவை போல.” என்று அந்த வாதத்திற்கு முடிவு கட்டினான் உமேஷ்.

“எல்லாம் உன்னாலே தான்..நீதான் உன் பொண்ணைச் சரியா வளர்க்கலை..அவ செய்தது..அவ செத்த பிறகும் இத்தனை வருஷம் கழிச்சு நம்மளோட நிம்மதியை அழிக்குது.” என்று பார்வதி மீது பாய்ந்தார் ஏகாம்பரம்.

வீட்டிற்கு வந்ததிலிருந்து வாயைத் திறக்காமல் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பார்வதி.

“பாட்டி எதுக்கும் காரணமில்லை..அவங்களோட மனசுக்குப் பிடிச்சவங்களை அத்தை கல்யாணம் செய்துகிட்டாங்க..நானும் அதைத் தான் செய்யப் போறேன்..இந்தக் கல்யாணம் நடக்கும்..எப்படி நடக்கப் போகுதுங்கறது உங்களோட கைலே தான் இருக்கு தாத்தா.” என்றான் உமேஷ்.

மகனின் உறுதியைப் பார்த்து, விஷயம அவரது கையை மீறிப் போய் விட்டது என்று மீனாவிற்கு அச்சம் ஏற்பட்டது.  ஏகாம்பரத்திற்கு அது போல் எதுவும் ஏற்படவில்லை.  அதற்குக் காரணம் எந்தக் காலத்திலும், எந்தச் சூழ் நிலையிலும் அவருடைய மகன் அவரைக் கைவிடமாட்டாரென்று எண்ணியிருந்தார். ஆனால்,

“உமாக்கும் உனக்கும் கல்யாணம் இங்கே தான் நடக்கப் போகுது..எல்லா ஏற்பாட்டையும் நானே பார்த்துக்கறேன்.” என்றார் நாகேஸ்வரன்.

அதைக் கேட்டு,”நாகு.” என்று கத்தினார் ஏகாம்பரம்.

“நீங்க உங்க பேரனோட முடிவுக்கு ஒத்துக்கறதும் ஒத்துகாததும் உங்க இஷ்டம் ப்பா..என் பையன் சந்தோஷம் எனக்கு முக்கியம்..உமாவை அவன் கல்யாணம் செய்துக்கறதுலே எனக்கு பூரணச் சம்மதம்.” என்றார் ஒரே முடிவாக நாகேஸ்வரன்.

அதுவரை அமைதியாக இருந்த பார்வதி,”சீக்கிரம் கல்யாணத்தை முடிடா நாகு..என் பேரன் பொண்டாட்டியை நானே ஆர்த்தி கொட்டி இந்த வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு வரேன்.” என்றார்.

அவர் சொன்னதைச் நடத்திக் காட்டினார் பார்வதி. மருமகள் மீனாவை எந்த விஷயத்திலும் கலந்து ஆலோசிக்கவில்லை.  நீ ஒதுங்க நினைத்தாய்.  அப்படியே இருந்துகொள் என்று, பசுபதி பட்டு, பசும்பொன் தாலி என்று சகலத்தையும் தனது மேற்பார்வையில், ஜெயந்தியின் உதவியோடு செய்து முடித்தார்.  அவருடைய ஒரே மகனின் கல்யாணத்தில், விருந்தினர் போல் பங்கேற்றார் மீனா.  திடீரென்று அந்தக் குடும்பத்தில் அவருக்கு என்ன ஸ்தானமென்று அவருக்கே புரியவில்லை.  பார்வதியிடமிருந்து நேரடியாக உமாக்குச் சென்றது பசுபதி குடும்பத்தின் பாரம்பர்யம்.  எல்லா இடத்திலும், பார்வதியும் நாகேஸ்வரனும் எந்த விதமான சச்சரவும், சண்டையும் இல்லாமல் அனைத்தையும் சுமூகமாக நடத்தினர்.  தன்னுடைய விருப்பத்திற்குக் கணவர் மரியாதை கொடுக்கவில்லை என்று நாகேஸ்வரன் மீது கோபமாக இருந்த மீனாவிற்கு, ஒரு நொடியும், அவர்களுடைய ஒரே மகனின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறார் கணவரென்று தோன்றவில்லை.

கல்யாணத்திற்கு இரண்டு நாள்கள் முன்பு, தன்னுடைய பேத்திகள், ப்ரீத்தி, உமாவோடு மதுரை வந்து சேந்தார் சுந்தரி.  கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு அவருடைய குடும்பத்தினருடன் வந்தார் ராம நாதன்.  அவர்களுக்கான பயண ஏற்பாடு, தங்குவதற்கான ஏற்பாடு இரண்டையும் பார்த்துக் கொண்டது நாகேஸ்வரன் தான்.

ப்ரீத்தி, உமாவுடன் மதுரையில் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தார் சுந்தரி.  அவருடைய வீடு, அவருடை மகன் படித்த கல்லூரி என்று சுந்தரேசனின் வாழ்க்கையின் முக்கியமான இடங்களை, நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். வீட்டிற்குப் போகாமல், சுந்தரி பாட்டி, உமாவுடன் அதிக நேரம் செலவிட்டாள் ப்ரீத்தி.  அதற்கு வேறொரு காரணமும் இருந்தது.  உமாவின் மீது மீனாவுக்கு இருந்த வெறுப்பையும், உமேஷின் மீது மீனாவிற்கு இருந்த வருத்தத்தையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.  

கிட்டதட்ட இரண்டு வாரங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பியவளிடம் அவர் சரியாகப் பேசவில்லை.  அதில் கலக்கம் அடைந்திருந்தாள் ப்ரீத்தி. பார்வதியும் ஜெயந்தியும் எப்போதும் போல் பழகியதால் அவளுடைய கலக்கம் சிறிது மட்டுப்பட்டிருந்தது.  அதுவும், அவளுடைய மாமா, நாகேஸ்வரன், ப்ரீத்தி குட்டி என்று அவளை அணைத்தவுடன் அவளுக்கு அழுகை வந்தது.  முதல்முறையாக, இவரும் பாட்டியும் இல்லையென்றால் தன்னுடைய வாழ்க்கை கூட பாசமில்லா பாலைவனமாக தான் இருந்திருக்குமென்று தோன்றியது.  இவர்களைப் பார்த்து தான் உமேஷும் ஜெயந்தியும் அவளைச் சொந்த உடன் பிறப்பு போல் பாவிக்கிறார்களென்று புரிந்தது.  உறவுக்காரகள் இருந்தாலும், உமாவைப் போல் அவளும் ஓர் அனாதை என்ற எண்ணத்தை, அவளுடைய மனத்தில், அவருடைய நடவடிக்கையால் விதைத்து விட்டார் மீனா.