அத்தியாயம்-17-1

எந்த வித குறையும் இல்லாமல், எல்லா விதத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது உமேஷ், உமாவின் திருமணம்.  சிவரஞ்சனி, சுந்தரேசனின் பெரிய புகைப்படத்தை மணமேடைக்கு பின்னால் வைத்து, பாரம்பர்யத்தை உடைத்து, அவனுடைய மனம் கவர்ந்த கன்னியை யாரிடமிருந்தும் தானமாகப் பெறாமல், அவனருகில் அமர்த்தி, உமாவின் பார்வதியின் கழுத்தில், மீனாக்ஷி, சுந்தரேஸ்வரர் பொறித்திருந்த திருமாங்கல்யத்தை அணிவித்து அவளுடையவனான் உமேஷ் பசுபதி.  

அதைக் கண்டு, முதல் வரிசையில் அமர்ந்திருந்த சுந்தரி பாட்டியின் மனமும், கண்களும் நிறைந்தது. அவரருகே குடும்பத்துடன் அமர்ந்திருந்த மீராவிடம்,”நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மீரா.” என்றார் சுந்தரி.

பசுபதி குடும்பத்தினரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின், சுந்தரி பாட்டி குடும்பத்திடம் ஆசிர்வாதம் பெற்றனர் புது மணத் தம்பதியர், உமேஷும் உமாவும்.  இந்துவின் முகத்தில், அவநம்பிக்கை, பிரமிப்பு இரண்டு கலந்து ஒரு கலவையான உணர்வு இருந்தது.  உமாவின் திருமணச் செய்தியைக் கேட்டதிலிருந்து இப்போது வரை நம்பிக்கை இல்லாமல் வளைய வந்தவரின் பாதங்களில் மணமக்கள் விழுந்த போது, இது முழுக்க முழுக்க நிஜமென்று அவர் உணர்ந்த தருணத்தில், அதிர்ச்சியில், பலகீனமாக உணர்ந்தார். ராம நாதன் முற்றிலும் வேறாக உணர்ந்தார். உமாவின் தாய், தந்தை இடத்தில் அவர்களை நிறுத்தாமல், அவருடைய அண்ணன், அண்ணி புகைப்படத்தை வைத்து, யாரிடமும் தாரை வார்க்க கோரிக்கை வைக்காமல், என்னுடையவள், யாரிடமும் கேட்கப் போவதில்லை என்று அவனுடைய கல்யாணத்தை உமேஷ் நடத்திக் கொண்ட விதத்தில், மன நிறைந்து போய், இத்தனை வருடங்களாக அவருடைய இதயத்தில் வீற்றிருந்த பாரம் இறங்க, இலகுவாக உணர்ந்தார்.  அதனால், மகிழ்ச்சியாக திருமண நிகழ்வுகளில் பங்கேற்றார். 

ஜெயந்தி, ப்ரீத்தி இருவரும் ஒரே போல் பட்டுப் புடவை உடுத்தியிருந்தனர். பரீத்தியின் மாப்பிள்ளை வீட்டினரும் கல்யாணத்தில் கலந்து கொண்டனர். ஆனால், விஜய்யுடனும் அவனின் குடும்பத்தினருடன் சகஜமாக பேசவில்லை ப்ரீத்தி.  அதைக் கவனிக்கும் நிலையில் குடும்பத்தினர் இல்லை.  அவளுடைய அம்மா இடத்திலிருந்து பார்வதிக்கு உதவி செய்து, உறவுக் கூட்டதைச் சமாளித்துக் கொண்டிருந்தாள் ஜெயந்தி. ஏகாம்பரமோ பசுபதி வீட்டுக் கல்யாணம் என்ற கௌரவத்திற்காக மண்டபத்தில் இருந்தார்.  அப்படியொரு கட்டாயம் இல்லையென்றால் அன்றைக்கும் கடைகளைக் கவனிக்கச் சென்றிருப்பார்.  நாகேஸ்வரனுக்குப் பாதி நேரம் மனைவியுடன் மல்லுகட்டுவதிலும் மீதி நேரம், தந்தைக்கும் மகனுக்கும் நடுவே பாலமாக இருப்பதிலும் கடந்து சென்றது.  உமா, உமேஷின் கல்யாணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்கள், ப்ரீத்தியிடமும் பாதிப்பை ஏற்படுத்துக்கிறது என்று யாருமே உணரவில்லை.

ஜெயந்தி, ப்ரீத்தி, உமா மூவருக்கும் புது உறவு ஏற்பட்டதால், அந்தக் கும்பலில் தனியாக உணர்ந்த கவிதா, தனது கணவனின் வேலையைக் காரணம் காட்டி, விடுமுறை கிடைக்கவில்லை என்று பொய் சொல்லி, முகூர்த்த சாப்பாடு முடிந்தவுடன் சென்னைக்குக் கிளம்பி விட்டாள். இத்தனை வருடங்களாக அவரும் உமாவை ஒதுக்கி வைத்ததால், இனி எப்படி? என்று புரியாமல், அங்கே இருக்கப் பிடிக்காமல், அவருடைய மகள் கவிதாவுடன் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார் இந்து.  ராம நாதனும் சுந்தரி பாட்டியும் மறுநாள் காலையில் சென்னைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். 

கல்யாணம் முடிந்த பின், மணமக்களை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் பார்வதி.  அங்கேயிருந்து நேரே அவருடைய வீட்டிற்கு அழைத்து வந்தார். மீனாவை எதிர்பார்க்காமல் தானே அனைத்துச் சடங்குகளையும் செய்து முடித்து, உமாவைப் ப்ரீத்தியின் அறைக்கு அழைத்துச் சென்றார். மணமக்களுடன் வீட்டிற்கு வந்திருந்த ஜெயந்தியை அவளுடைய அம்மாவின் நடத்தைச் சங்கடத்தில் ஆழ்த்தியது.

கல்யாணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் இன்று கல்யாணத்திலும் அவர் ஒட்டாமல் நடந்து கொண்டது அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.  அவளுடைய கணவன் சொன்னது போல், அவருடைய பிடிவாதம் அபத்தமாகத் தோன்றியது.

வரவேற்பறையில் ஏகாம்பரம், நாகேஸ்வரன், உமேஷ், ராஜ சேகர் அமர்ந்திருந்தனர்.  மாடிக்கும், கீழுக்கும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தான் விக்ரம்.

அவருடைய அறையில் தனியாக அமர்ந்திருந்த மீனாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் ஜெயந்தி.  

“ஏன் அம்மா இப்படி நடந்துக்கற? அப்படி என்ன செய்திட்டான் அண்ணன் நீ இப்படி முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டு, எதிலேயும் கலந்துக்காம, ஒதுங்கி நின்னுகிட்டு இருக்க?” என்று கேட்டாள்.

“எனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லியும் இந்தக் கல்யாணம் நடந்திருக்கு..நான் என்ன நினைச்சா என்ன? எப்படி இருந்தா என்ன? அந்த எண்ணத்திலே தானே உன்னோட அப்பாவும் பாட்டியும் கல்யாணத்தை நடத்தியிருக்காங்க..உன்னோட தாத்தாக்குப் பசுபதி பரம்பரையோட கௌரவம் முக்கியம்..அதனாலே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டார்..எனக்கு அப்படியா..என்னோட ஒரே புள்ளை, அவனோட கல்யாணம் என்னைக் கேட்காம நடந்திடுச்சு..இப்போ வீட்டுக்குள்ளேயும் அழைச்சிட்டு வந்தாச்சு..ப்ரீத்தியை வேணாம்னு சொன்னேயே இப்போ இந்தப் பொண்ணைக் கட்டி வைச்சிருக்கேயேன்னு என் வீட்லே கேட்கறாங்க..என்னாலே அவங்களுக்கெல்லாம் பதில்  சொல்ல முடியலை.” என்று சொல்லி அழுதார்.

அவளுடைய அம்மாவின் அழுகையைப் பார்த்து துளி கூட இரக்கம் வரவில்லை ஜெயந்திக்கு.  

“என்ன பேசறேன்னு புரிஞ்சு தான் பேசறேயா?  அண்ணியைப் பிடிச்சிருக்குன்னு கல்யாணம் செய்திட்டு இருக்கான் அண்ணன்..அவனோட மனசுக்குப் பிடிச்ச பொண்ணு அத்தையோட தத்துப் பொண்ணாகிடுச்சு..அதுக்கு யார் என்னம்மா செய்ய முடியும்? கல்யாணத்துக்கு முன்னே அவங்களோட பேசாம இருந்தே அப்போ யாரும் எதுவும் சொல்லலை..ஆனா இப்போவரை அண்ணிகிட்டே நீ ஒரு வார்த்தை கூட பேசலை..இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ம்மா..இனியும் நான் இங்கே இருந்தேன் உனக்கு பிடிச்சதுனாலே தான் உன் மாப்பிள்ளையை நான் கட்டிக்கிட்டேன்னு அவர் முடிவே கட்டிடுவார்.. 

நீ மட்டும் பாட்டியோட வேலூருக்குப் போயிருந்த..ப்ரீத்திக்கும் சேர்த்துப் பணத்தைக் கொடுத்திட்டு..எந்த விதமான குற்ற உணர்வுமில்லாம திரும்பி வந்திருப்ப.. சே.” என்று அவளுடைய மனக்குமுறலைக் கொட்டி விட்டு, அரைமணி நேரம் கழித்து, பார்வதியின் கெஞ்சலுக்கு இறங்கி வராமல், அவளுடைய கணவனோடு புறப்பட்டுச் சென்று விட்டாள்.

இத்தனை தூரம் பிடிவாதமாக இருப்பார் மீனா என்று பார்வதியும் எண்ணவில்லை.  சிறிது சிறிதாக மனம் மாறி, திருமண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரென்று தான் எண்ணியிருந்தார்.  ஆனால், இப்படிக் கடைசி வரை, உமாவை வீட்டிற்கு அழைத்து வந்த பின்னும் அவளைப் புறக்கணிப்பார் என்று நினைக்கவேயில்லை.  வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய அழைத்த போது, ‘நீங்க செய்திட்டீங்க..போதும்.’ என்று முகத்தில் அடித்தார் போல் பதில் கொடுத்தார். கல்யாணம் வரை பொறுத்து இருந்த மீனா, அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல், பேசியது உமாவைத் தீயாகச் சுட்டது.  

நேற்று தான் முதல் முறையாக அவளுடைய மாமியாரை மண்டபத்தில் சந்தித்தாள்.  அவரின் ஒதுக்கம் அப்போது வெளிப்படையாகத் தெரியவில்லை.  இப்போது அவருடையை பேச்சை கேட்டு அவளுள் நடுக்கம் உண்டானது.  ப்ரீத்தியால் வர்ணிக்கப்பட்ட  மீனா இவரில்லை.  

பார்வதிக்கும் அவருடைய மருமகள் திடீர் புதிராகிப் போனார்.  எப்படி? யார்? அந்தப் புதிரை விடுவிக்கப் போகிறார்களென்று கவலையானது அவருக்கு.  உமாவிடம் என்ன குறையை மீனா கண்டாரென்று அவருக்குத் தெரியவில்லை.  அப்பா, அம்மா இல்லாதது, உறவினர்களின் ஆதரவு இல்லாதது அவளுடைய குற்றமா? அப்படியே அது குற்றமாக இருந்தாலும் அதற்கு உமா என்ன செய்ய முடியுமென்று அவருக்குப் புரியவில்லை.  

சென்னையிலிருந்து திரும்பியதிலிருந்து அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்தவருக்கு, அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. இதுவரை மகனின் துணையோடு செயல்பட்டவருக்கு, இனி வீட்டில் மீனாவின் பாராமுகத்தை எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை.  ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள் உமா.  அதற்கு பின் உமேஷும் அவளும் சென்னைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

மதியத்திலிருந்து மாலைவரை ப்ரீத்தியுடன் அவளுடைய அறையில் இருந்தாள் உமா.  அவளுடைய உடைமைகளெல்லாம் சுந்தரி பாட்டியுடன் தங்கியிருந்த அறையில் இருந்தது.  அவள் வேறு உடைக்கு மாற அவளுடைய பெட்டி தேவைப்பட்டது.  அதனால், உமேஷிற்கு அவனுடைய கைப்பேசியில் அழைப்பு விடுத்தாள் உமா.  அவளுடைய அழைப்பு ஏற்கப்படவில்லை.  ஏனோ மனத்தில் சஞ்சலம் ஏற்பட்டது. உடனே,

“ப்ரீத்தி, உன்னோட அண்ணன் வெளியே இருந்தா கொஞ்சம் அழைச்சிட்டு வாயேன்.” என்று ப்ரீத்தியை வெளியே அனுப்பினாள் உமா.  மதியத்திலிருந்து பார்வதி பாட்டியையும் காணவில்லை. சிறிது நேரம் கழித்து பார்வதியுடன் உள்ளே வந்தாள் ப்ரீத்தி.

பார்வதியின் முகமே சரியில்லை. அதனால்,

“என்ன பாட்டி? என்ன ஆச்சு?” என்று விசாரித்தாள்.

“சுந்தரி அம்மாவை ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்கு.” என்றார்.

காலையில், கல்யாணத்தில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டவர் இப்போது ஆஸ்பத்திரியிலா? உமாவினால் நம்ப முடியவில்லை.

“அவங்களுக்கு என்ன ஆச்சு பாட்டி?”

“தெரியலை..கொஞ்ச நேரம் முன்னாடி உமேஷுக்கு ராம நாதன் ஃபோன் செய்திருந்தார்..நாகுவும் உமேஷும் கிளம்பிப் போனாங்க..இப்போ தான் நாகு ஃபோன் செய்து அவன் அப்பாக்கு விஷயத்தைச் சொன்னான்.” என்றார்.

அதற்கு பின் நடந்தது அனைத்தும் அன்று காலையில் நடந்த கல்யாணத்தைப் போலவே கனவாக தோன்றியது உமாவிற்கு.  இரவு எட்டு மணி வரை கல்யாணப் புடவையில், ப்ரீத்தியின் அறையில் அமர்ந்திருந்தவளை நேரே அவள் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றான் உமேஷ்.  அங்கே வேறு புடவைக்கு மாறிக் கொண்டு, சுந்தரி பாட்டியைப் பார்க்கச் சென்றாள் உமா.  ஏற்கனவே கவலையில் இருந்த ப்ரீத்தியையும் அவனுடைய பாட்டியையும் தொந்தரவு செய்ய விரும்பாமல், உமாவின் பெட்டியை ஆள் அனுப்பி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யும்படி அவனுடைய அம்மாவுக்குத் தெரிவித்தான். 

அந்த இரவை ராம நாதனுடன் ஆஸ்பத்திரியில் கழித்தனர் உமேஷும் உமாவும்.  அடுத்த நாள் விடியற்காலையில், போதும் என்ற எண்ணத்துடன் அவருக்குப் பிடித்த ஊரிலிருந்து வேறு உலகத்திற்குச்  சென்றார் சுந்தரி.  

ஆஸ்பத்திரிக்கு வந்த நாகேஸ்வரன், பார்வதி, ப்ரீத்தியுடன் உமாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் உமேஷ். ராம நாதனுக்குத் துணையாக இருந்து அனைத்துக் காரியங்களையும் செய்து முடித்தான்.  அப்போதே சென்னைக்கு செல்ல விரும்பியவரை, அவருடைய உடல் நிலையைக் காரணம் காட்டி, சில மணி நேரத்திற்கு அவருடைய பயணத்தைத் தள்ளிப் போட்டான் உமேஷ்.  வீடு வந்து சேர்ந்தவன், நேரே மாடிக்குச் சென்று அவனுடைய அறையில் குளித்து விட்டு கீழே வந்தான்.

வரவேற்பறையில் நாகேஸ்வரன் மட்டும் அமர்ந்திருந்தார். பெண்கள் யாரும் கண்ணில் படவில்லை.  

“ராம் அங்கிள் இப்போவே சென்னைக்குப் போகணும்னு சொல்றார்..கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கேன்..இரண்டு மணி நேரம் கழிச்சு வண்டி அனுப்பி விடணும்.” என்றான்.

“என்னாலே நடந்தை நம்ப முடியலை டா..உமாக்கு ஏதாவது நல்ல வழி காட்டுங்கன்னு அம்மாகிட்டே கேட்டிருக்காங்க..நேத்து உங்க கல்யாணத்தைப் பார்த்திட்டு கண்ணை மூடினவங்க தான்..சுய நினைவுக்கு வரவேயில்லை..அதே நினைப்போட இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாங்க.” என்றார்.

உமேஷும் அதே போல் தான் உணர்ந்தான்.  திடீரென்ற அவருடைய முடிவு அவனை நிலைகுலைய வைத்திருந்தது.  சில நாள்களாக தான் அவரைத் தெரியும். அவனுக்கே இப்படி இருக்கும் போது உமாவின் நிலையை எண்ணிக் கவலை கொண்டவன்,

“அப்பா, எங்கே யாரையும் காணும்? எனக்குப் பசிக்குது.” என்றான்.

“நேத்து மண்டபத்திலேர்ந்து வந்த பிறகு எங்களோட அறையை விட்டு உன்னோட அம்மா வெளியே வரலை..சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டுப் படுத்திட்டா..காலைலே டிஃபன் சாப்டிட்டு உள்ளே போனவ இப்போவரை ஆளைக் காணும்..உமாவும் உன்னோட பாட்டியும் ப்ரீத்தி அறைலே இருக்காங்க.” என்றார்.

ப்ரீத்தியின் அறை கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் உமேஷ்.  நேற்றிரவு உடுத்தியிருந்த அதே புடவையில், ப்ரீத்தியின் கட்டிலில், கண் மூடிப்  படுத்திருந்தாள் உமா.  அவளருகே பார்வதியும் ப்ரீத்தியும் அமர்ந்திருந்தனர். அறைக்குள் நுழைந்தவன்,

“பாட்டி, எனக்குப் பசிக்குது..சாப்பிட ஏதாவது எடுத்திட்டு வாங்க.” என்றான்.

“நேத்திலேர்ந்து இவளும் எதுவும் சாப்பிடலை டா..குளிச்சிட்டுச் சாப்பிடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்..கேட்க மாட்டேங்கறா.” என்றார் பார்வதி.

உமேஷின் வருகையை உணர்ந்து, திடுக்கிட்டு எழுந்தவள், கட்டிலிருந்து இறங்கி, அவனருகே சென்று,”என்னை என் வீட்டுக்கு கொண்டு போய் விட்டிடுங்க..பளீஸ்.” என்றாள்.

அதைக் கேட்டு அந்த அறையிலிருந்த மூவரின் உள்ளமும் நொறுங்கிப் போனது.  அவனுடைய மனவலியை  மறைத்துக் கொண்டு,”போறேன்..கண்டிப்பா அழைச்சிட்டுப் போறேன்..முதல்லே நீ குளிச்சிட்டு வா..சாப்டிட்டுக் கிளம்பலாம்.” என்றான் உமேஷ்.

உமேஷைப் பார்க்காமல், வேறு யாரையும் நோக்காமல் அவளுடைய கண்மணிகளை உருட்டி, அறையின் மூலைகளை மாறி மாறி பார்த்தபடி,“எனக்கு இங்கே எதுவுமே வேணாம்…எனக்குப் போகணும்.” என்றாள் உமா.

சுந்தரி பாட்டி கணித்ததைப் போல் அவருடைய இறப்பிற்குப் பின் யாருமில்லா அனாதையாக உணர்ந்தாள் உமா. நேற்று நடந்த திருமணத்தின் மூலம் அவளுக்குக் கணவனானவனையும் அவனுடைய குடும்பத்தினரையும் அவளுடைய உறவாகக் கருதவில்லை.  அந்த வீட்டை அவளுடைய வீடாக நினைக்கவில்லை.  அப்படி அவளை உணரவிடவில்லை. அவளை உணர வைக்க யாரும் முயற்சி செய்யவில்லை. அது புரிந்ததால்,

“போகலாம் உமா….நேத்து உடுத்தின இதே புடவைலே எப்படிச் சென்னை வரை போக முடியும்?” என்று கேட்டான்.

“எனக்கு வேற டிரெஸ் இல்லை.”

“ஏன்? உன்னோட பெட்டி எங்கே? இன்னும் அது வீட்டுக்கு வரலையா?” என்று  கூச்சல் போட்டான் உமேஷ்.

அதில் பயந்து போய் அவனிடமிருந்து சற்றுத் தள்ளி நின்று கொண்டாள் உமா.

அவனுடைய கூச்சலைக் கேட்டு அங்கே வந்த நாகேஸ்வரன்,”என்ன டா? எதுக்கு டா சத்தம் போடற?”

“இவளோட பெட்டி எங்கே ப்பா?” என்று கேட்டான்.

“எனக்குத் தெரியாது டா.” என்றார் நாகேஸ்வரன்.

“நேத்து நீங்க ஆஸ்பத்திரிலே இருந்த போது, அம்மாக்கு ஃபோன் செய்து இவ பெட்டியை எடுத்திட்டு வர ஆள் அனுப்பச் சொன்னேன்..யாரை அனுப்பினாங்கன்னு விசாரிச்சு சொல்லுங்க..பெட்டி இன்னும் இங்கே வரலை.” என்று விளக்கம் கொடுத்தவனுக்கு, அந்தப் பெட்டி, அதே இடத்தில் தான் இருக்கிறதோ? என்று சந்தேகம் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதை உறுதி செய்தார் நாகேஸ்வரன்.

“நேத்துலேர்ந்து இவ சாப்பிடவேயில்லை..இப்போ இவளுக்கு மாற்றுத் துணி இல்லை..என்ன ப்பா நடக்குது நம்ம வீட்லே?” என்று நாகேஸ்வரனிடம் கோபப்பட்டான் உமேஷ்.

“இப்போ, உடனே ஆள் அனுப்பி அந்தப் பெட்டியை எடுத்திட்டு வரச் சொல்றேன்.” என்று சொல்லி விட்டு அறையிலிருந்து வெளியேறயிருந்த நாகேஸ்வரனிடம், 

”ப்ரீத்தி மாமா, எனக்கு துணி, சாப்பாடெல்லாம் கொடுக்க நீங்க கஷ்டப்பட வேணாம்..என்னோட வீடு சென்னைலே இருக்கு..அங்கே எனக்கு டிரெஸ், சாப்பாடெல்லாம் இருக்கு..என்னை அங்கே கொண்டு போய் விட்டிடுங்க.” என்றாள் இருபத்தி ஐந்து வயது உமா பார்வதியினுள் இன்னமும் உயிரோடு இருந்த பத்து வயது உமா பார்வதி.