அவள் சொன்னதைத் திரித்துச் சொன்னவுடன், படபடப்புடன்,”ஐயோ பாட்டி..இவங்க தான் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க.” என்று உண்மையை உடைத்தாள் உமா.
பேரன் மீது கண்டனப் பார்வை வீசிய பார்வதி, உமாவிடம்,”நீ அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும்..இதெல்லாம் இவனோட வேலைன்னும் எனக்குத் தெரியும்.” என்றார்.
உடனே, தோரணையாக, கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, கால்கள் இரண்டையும் முன்னால் நீட்டிக் கொண்டு,”சொல்லுங்க பார்வதி..உங்களுக்கு என்னோட வேலை பற்றி என்ன தெரியும்..சொல்லுங்க..நானும் தெரிஞ்சுக்கறேன்.” என்றான் உமேஷ்.
“உன்னைப் பற்றி எல்லாம் தெரியும் டா..நீ என்ன வேலையெல்லாம் செய்வேன்னு தெரியும்” என்று பேரனிற்குத் தெரிவித்தவர், உமாவிடம்,”இரண்டு கடைலேயும் சேலை, சுடிதார், பாவாடை, சட்டை, பேண்ட்ன்னு எல்லாம் வித்திட்டு இருந்தோம்..பெரிய கடைக்கு சேலை உடுத்திக்கிட்டு வந்த பெரியம்மா இவனாலே சுடிதார் போட்டுக்கிட்டு வெளியே போனாங்க..அந்தக் கதையை, இன்னைவரை, கடைத் தெரு முழுக்க, கதை கதையாப் பேசறாங்க..பாரம்பர்யத்தைப் பாழாக்கறான் இவன்னு சேலையையும் சுடிதாரையும் தனித் தனியா, பெரிய கடை, சின்ன கடைன்னு பிரிச்சு வைச்சிட்டோம்..மனிதவளத்திலே வேலை பார்க்கறதுனாலே அவன் இஷ்டத்துக்கு மனுஷாளை மயக்கி மண்டையாட்ட வைச்சிடுவான்.” என்றார் பார்வதி.
“அந்தப் பெரியம்மா அவங்க பேத்திக்குச் சுடிதார் வாங்க வந்தாங்க. கடையிலேர்ந்து திரும்பிப் போகும் போது பேத்தியைப் போலவே சுடிதார் போட்டுக்கிட்டு போனாங்க..அன்னைக்கு ஒண்ணுக்கு இரண்டு உருப்பிடி வித்துக் கொடுத்தேன்..பாட்டிக்கும் பேத்திக்கும் நடுவுலே புது உறவை ஏற்படுத்திக் கொடுத்தேன்..அவங்க மனசுலே இருந்த இஷ்டத்தைக் கண்டு பிடிச்சு, அதை நிறைவேற்றி வைச்சேன்..இஷ்டமில்லாம யாரையும் எதையும் செய்ய வைக்க முடியாது..இஷ்டமே இல்லாதவங்க மேலே இன்வஸ்ட் செய்யறது வீண் வேலை…
ஒருத்தர்கிட்டே ஒரு துளி இஷ்டமிருந்தாக் கூட அவங்களைப் பலவிதத்திலே ஊக்கப்படுத்தி அதைப் பெரிசாக்கறது என்னோட வேலை..இப்போவும் அதைத் தான் செய்தேன்.” என்ற உமேஷின் விளக்கத்தை, ஒரு சொட்டு பெருங் கடலாக மாறிய மாயத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“டேய்..இப்போ அதையெல்லாம் பேசி என்னைத் திசை திருப்பற வேலை வைச்சுக்காதே…இவ சொன்னான்னு நீ ஏன் டா பொய் சொன்ன?” என்று விடாப்பிடியாக அதே கேள்வியைக் கேட்டார் பார்வதி.
பார்வதி அருகில் நின்றிருந்த உமாவைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் உமேஷ்.அவளோ, உள்ளே அலைக் கடலாய், வெளியே ஆழ்க் கடலாய், இன்னமும், விரித்திருந்த வலது உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அதைப் பார்த்து ஒரு முடிவிற்கு வந்தவன்,
“ஐயோ பாட்டின்னுசொன்னா..அதுக்கு அப்புறம் ஒண்ணுமே சொல்லலை..அப்படி அமைதியா இருந்தா என்ன நினைப்பாங்க? பிடிச்சிருக்குன்னு தானே நினைப்பாங்க..அதான் அப்படிச் சொன்னேன்..இப்போ அது அப்படி இல்லை..அமைதியா இருந்தது பிடிக்காததுனாலேன்னு சொல்றா..
என்னோட மேரிட் லைஃப்லே மேன்பவரை சரியா உபயோகிச்சு..உங்க இரண்டு பேருக்கும் சரியா வேலையைப் பிரிச்சுக் கொடுத்து..சரிசமமாக் கவனிச்சு..உங்க இரண்டு பேருக்கும் இடையே சண்டை வராம, இரண்டு பேரையும் சந்தோஷமா வைச்சுக்கணும்னு நினைச்சேன்..உன்னை அவளுக்குப் பிடிக்கலை பாட்டி..அதனாலே என்னோட எல்லா வேலையையும் நீ தான் செய்யணும்..கல்யாணத்துக்கு பிறகு உன்னோட புருஷனுக்கு நீ எதுவும் செய்யறதில்லைன்னு என் பொண்டாட்டியை நீ ஏதாவது பேசினே, வேலை வாங்கினே நான் பொல்லாதவனாயிடுவேன்.” என்று அவன் மனத்தில் இருந்ததை வெளிப்படையாகச் சொல்லி விட்டு அவனுடைய மதியச் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான் உமேஷ்.
அவனுடைய வார்த்தைகள் ஏற்படுத்தியிருந்த அதிர்ச்சி, அவளுடைய மௌனத்திற்கு அவன் கொடுத்த புது அர்த்தம், எல்லாம் சேர்ந்து உமாவை மயக்க நிலைக்குத் தள்ளியது.அவர்களுக்குள் நடந்ததில் திடீரென்று பார்வதி பாட்டி எப்படி உள்ளே வந்தார்? என்று உமாவிற்குத் தெரியவில்லை. அவளுடைய வலது உள்ளங்கையையிலிருந்து பார்வையை அகற்றாமல், அவளருகில் இருந்த பார்வதியிடம்,
“திடீர்னு இவங்க எப்படி உங்களைப் பற்றி பேசறாங்கன்னு புரியலை பாட்டி..நான் அந்த மாதிரி உங்களைப் பற்றி நினைக்கவே இல்லை பாட்டி..இவங்களா ஏதேதோ சொல்றாங்க.” என்றாள்.
“ஐயோ பாட்டின்னு கத்தி நீதான் அவங்களை நமக்கு நடுவுலே கொண்டு வந்த..இப்போ அவங்களைப் பிடிக்கலைன்னு வேற சொல்லிட்ட.” என்றான்.
“ஐயோ பாட்டி..நான் அப்படிச் சொல்லவே இல்லை..அமைதியா தான் இருந்தேன்.” என்று அடம் பிடித்தாள் உமா பார்வதி.
“அந்த அமைதிக்கு நான் சொன்ன அர்த்தமில்லைன்னா வேற என்ன அர்த்தம்?” என்று விடாப் பிடியாக அவன் பிடித்த பிடியை உடும்பாகப் பிடித்துக் கொண்டிருந்தான் உமேஷ்.
அதற்கு, சற்றே குரலை உயர்த்தி,“வேற எந்த அர்த்தமுமில்லை..பிடிச்சிருக்கு..போதுமா?” என்றாள் பொறுமை இழந்திருந்த உமா பார்வதி.
அவன் சொன்னதைச் செய்யாமல், அமைதியாக, அதே இடத்தில் அவள் நிற்க, அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த பார்வதி, பேரன் கேட்டதைச் செய்தார்.காரக் குழம்பை அவனுக்குப் பரிமாறினார்.
எப்போதும் அமைதியாக அனைத்தையும் கடந்து போகும் இயல்புடையவள்,“நான் பாட்டியைத் தான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.” என்று அவள் இயல்புக்கு மாறாக நடந்து கொண்டு, உமேஷை உசுப்பேற்றினாள் உமா.
அதைக் கேட்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், அவனுடைய தலையை நிமிர்த்தி, அவனை நேராகப் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி,நாவால் சப்புக் கொட்டி, கண்களைச் சிமிட்டி,“நான் பிடிச்சிருக்குன்னு சொன்னது காரக் குழம்பை.” என்றான்.
உடனே, அதிர்ச்சியில்,”ஐயோ பாட்டி” என்று கத்தினாள் உமா பார்வதி. இந்த முறை, தள்ளாடியபடி, சமையலறைக்கு வந்த சுந்தரி பாட்டி,
“என்ன ஆச்சு? ஏன் ஐயோ பாட்டின்னு கத்தற?” என்று கேட்க,
“ஐயோ பாட்டீடீ” என்று அவளை அறியாமல் உமா பார்வதி மறுபடியும் கூச்சலிட, அதைக் கேட்டு உரக்கச் சிரித்தான் உமேஷ் பசுபதி.
உடனே,”நீ சுந்தரி பாட்டியோட போ..நான் இவனுக்குச் சாப்பாடு போட்டிட்டு வரேன்.” என்று உமாவை சுந்தரியுடன் அனுப்பி வைத்தார் பார்வதி.
“டேய்..ஏன் டா இப்படிச் செய்யற? ரொம்பஅமைதியான பொண்ணாத் தெரியறா..அவளோட எதுக்கு இப்படி அடாவடித்தனம் செய்யற?” என்று பேரனிடம் கேட்டார் பார்வாதி.
“நான் பிடிச்சிருக்குன்னு சொன்ன பிறகும் நேரடியா என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லாம வேற ஏதோ சொல்லிட்டு இருக்கா.” என்றான் தவிப்பான குரலில். பேரனின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்ட பார்வதி,
“ரசமும் பொரியலும் போதும்னு சுந்தரி அம்மா சொன்ன பிறகும், உனக்காக தான் காரக் குழம்பு செய்து வைச்சிருக்கா.” என்றார் பார்வதி.
“அது தெரிஞ்சு தானே அவகிட்டே பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.”
“நான் பேசறத்துக்குள்ளே உனக்கு என்ன டா அவசரம்?”
“சுந்தரி பாட்டி எப்படி ஆகிட்டாங்கன்னு கவனிச்சீங்களா?”
“என்ன டா இப்படி ஆயிட்டாங்க? ஆஸ்பத்திரிலே பார்க்கும் போது நல்லா தானே இருந்தாங்க.”
“அதுக்கு அப்புறம் இங்கே இருந்த போது கூட நல்லா தான் இருந்தாங்க..திடீர்னு இப்படி ஆயிட்டாங்க..அதான் உமா எனக்கு ஃபோன் செய்து ப்ரீத்திகாக ஏங்கறாங்கன்னு சொன்னவுடேனேயே அவளை சென்னைக்கு அழைச்சிட்டு வந்திட்டேன்..இரண்டு பேத்திங்களோட இருக்கட்டும்னு தான் அவங்களையும் இங்கே கூட்டிட்டு வந்தேன்..இங்கே ப்ரீத்தியோட எப்படிப் பழகறாங்க?”
“அங்கே போல தான்..முதல்லே கொஞ்சம் அழுதாங்க..அப்புறம் சாதாரணமா இருந்தாங்க..சாப்பிட்டாங்க..இப்போ நாங்க இரண்டு பேரும் பேசிட்டு இருந்தோம்..உன்னை உமாக்கு பிடிச்சிருந்தா தான் கல்யாணம்னு சொல்லிட்டாங்க.” என்றார் பார்வதி.
“அந்தக் கவலை இனி வேணாம்..கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் நடத்த முடியும்னு பார்க்கணும்.” என்றான் உமேஷ்.
அதற்கு பார்வதியிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.அதை உமேஷும் பொருட்படுத்தவில்லை.
உமாவின் கையைப் பிடித்திருந்த சுந்தரி, புன்னகையோடு”உன் மனசுலே இருக்கறதை நீ வாய்விட்டு சொன்னதே கிடையாது..எப்படி உன் விருப்பத்தை தெரிஞ்சுக்கறதுன்னு கவலையா இருந்திச்சு எனக்கு..உன் பிடித்தம் தான் எனக்கு முக்கியம்னு சொல்லிட்டு இருந்தேன் அப்போ காத்து மூலம் உன் விருப்பத்தை எனக்கு அனுப்பி விட்டிட்டே.” என்றார்.
“ஐயோ பாட்டி.” என்று சங்கடத்துடன் அவரது தோளில் முகத்தைப் புதைத்து கொண்டாள் உமா.
“உன்னைப் பற்றிய கவலை ஒரு நொடிலே காணாமப் போயிடுச்சு உமா..பசுபதி குடும்பத்துக்குப் போகப் போற..சந்தோஷமா இருக்கு.” என்றார்.
சில நிமிடங்கள் கழித்து பார்வதியுடன் சுந்தரி பாட்டியின் அறைக்குச் வந்தான் உமேஷ்.கட்டில் மீது அமர்ந்திருந்த உமா எழுந்து கொண்டாள்.
“சாப்பிட்டீங்களா தம்பி?” என்று விசாரித்தார் சுந்தரி பாட்டி.
எப்போதும் கலகலவென்று பேசும் உமேஷ்,“ம்ம்.” என்றவுடன் கவலையானார் சுந்தரி பாட்டி.
“ஏன் காரக் குழம்பு நல்லா வரலையா தம்பி?..இன்னைக்கு ஏதோ அவசரத்திலே செய்திட்டா போலே..அடுத்த முறை நிதனாமா செய்யச் சொல்றேன்..நானும் கூட இருந்து பார்க்கறேன்.” என்றார் சுந்தரி.
உடனே, அவரருகே சென்று, அவருடைய கையைப் பற்றி,”அப்போ எங்க கூடஎப்போதும் இருக்கப் போறீங்கன்னு சொல்றீங்க..சரி தானே?” என்று கேட்டான்.
அவன் கேட்டது யாருக்குமே புரியவில்லை. அதைப் புரிந்து கொண்டு,”எங்க கல்யாணத்துக்கு அப்புறம் இவ வேலைக்குப் போகட்டும், வெளிநாட்டுக்குப் போகட்டும்..நீங்க என்னோட தான் இருக்கணும்..பிடிக்காத இடத்துக்கு போக வேண்டிய கட்டாயம் இனி உங்களுக்கு வராது.” என்றான் உமேஷ்.
அதைக் கேட்டு கண்ணீர் பெருகியது சுந்தரிக்கு, அதைத் துடைத்துக் கொண்டு,”நீங்க பெரிய குடும்பம் தான் தம்பி..உங்க பெரிய மனசு யாருக்கு வரும்.” என்றார்.
“என்னை விட பெரிய மனசு உங்க பேத்திக்கு.” என்றான் உமேஷ்.
“அந்த மனசுக்கு அவ நல்லபடியா இருக்கணும்.” என்றார் சுந்தரி பாட்டி.அப்போது, “உமா” என்று அழைத்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்த ப்ரீத்தி, அனைவரும் சுந்தரி பாட்டியின் அறையில் இருப்பதைப் பார்த்து,”என்னை மட்டும் மாடிக்கு அனுப்பிட்டு நீங்கெல்லாம் பேசிட்டு இருக்கீங்களா?” என்றாள்.
எதுக்குச் சிரிக்கறான்? என்று அவனைப் புதிராகப் பார்த்தாள் ப்ரீத்தி.
“இனி அவளை ‘அண்ணி’ ந்னு கூப்பிடப் பழகிக்கோ.” என்றார் சுந்தரி பாட்டி.
அவர் சொன்னதை கேட்டு, அதிர்ச்சியில் உறைந்து போன ப்ரீத்தியிடம்,”அப்படி அவளை உனக்கு கூப்பிட வேணாம்னா வேற நல்ல பெயரா தேர்ந்தெடு, மாத்திடலாம்” என்றான் உமேஷ்.
“நீங்க யாருமே என்கிட்டே சொல்லவே இல்லை..இது கூட தெரியாம எத்தனை முட்டாளா நான் இருந்திருக்கேன்னு நினைச்சு எனக்கு கோபமா வருது.” என்று சிணுங்கினாள் ப்ரீத்தி.
“உமாக்கிட்டே பேசிட்டு தானே உனக்குச் சொல்ல முடியும்..இப்போ தானே பேசினேன்..முதல் ஆள் நீதான்..உனக்குத் தான் சொல்லியிருக்கேன்…இன்னும் ராமுக்கு தெரியாது.” என்றார் சுந்தரி பாட்டி.
உடனே, உமேஷிடம்,”ஜெயந்தி அக்காகிட்டே அன்னைக்கே சொல்லிட்டீங்களா?” என்று கேட்டாள் ப்ரீத்தி.
“இல்லை..அப்பாக்கும் பாட்டிக்கும் தான் சொன்னேன்.”
”பாட்டி…நீங்க என்கிட்டே சொல்லவே இல்லை.” என்று பார்வதியிடம் கோபப்பட்டாள் ப்ரீத்தி.
“நேத்து நைட்டு இங்கே வந்து இறங்கினவுடனே என்ன சொன்னேன்? அக்கான்னு கூப்பிட வேணாம்..நல்லதாப் போச்சுன்னு சொன்னேனில்லே.” என்றார் பார்வதி.
“ஹாங்..அப்படிச் சொன்னா இப்படின்னு நான் அர்த்தம் செய்துக்க முடியுமா?” என்று கேட்டாள் ப்ரீத்தி.
“இங்கே நாம வந்ததை வைச்சு உன்னோட தாத்தா எல்லாத்தையும் அர்த்தம் செய்திட்டு இருப்பார்..அங்கே என்ன நடக்குதுன்னு தெரியலை.” என்று கவலைப்பட்டார் பார்வதி.
உடனே, யோசனையில் ஆழ்ந்த உமேஷ்,”இன்னைக்கு நைட் ராம் அங்கிள்கிட்டே அப்பா பேசிடுவாங்க..நாளைக்கு காலைலே எல்லாம் தெளிவாகிடும்.” என்றவன், உமாவிடம்,”உன்னாலே இந்த வாரம் வீட்லேர்ந்து வேலை பார்க்க முடியுமா?” என்று கேட்டான்.
“முடியும்.” என்றாள் உமா. உடனே, சுந்தரி பாட்டியிடம்,”மாத்திரை மருந்தெல்லாம் நேரத்துக்குச் சாப்பிட்டுக்கிட்டு ஒழுங்கா இருக்கணும்..தினமும் ப்ரீத்திகிட்டேயிருந்து ரிப்போர்ட் எடுத்துப்பேன்..கல்யாணம் வரை அவ உங்களோட தான் இருப்பா..முடிஞ்சா நாளைக்கே பாட்டியை மதுரைக்கு அழைச்சிட்டுப் போயிடுவேன்.” என்று திட்டமிட ஆரம்பித்தான்.
“டேய்..நிஜமா தான் சொல்றேயா? சும்மா சொல்றேன்னு நினைச்சுக்கிட்டேன்.. நாளைக்கா? இரண்டு நாள் முன்னாடி தான் இங்கே வந்தேன்..நான் எதுக்கு டா?” என்று கேட்டார் பார்வதி
“நீங்க செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கும் பாட்டி.” என்றான் உமேஷ்.
ப்ரீத்தியின் கல்யாண வேலையை எடுத்துச் செய்வது மீனா தான்.அதனால், தனக்கு என்ன வேலை இருக்கப் போகிறது என்று நினைத்த பார்வதி அறியவில்லை, அவருடைய மகன், பேரன் இருவரின் சமாதான முயற்சிகளும் வீணாகி, அவருடைய மருமகள் மீனா, உமேஷின் கல்யாண வேலைகளில் அவரைஈடுபடுத்திக் கொள்ளப் போவதில்லையென்று.
“லேட்டாயிடுச்சு..நான் கிளம்பறேன்.” என்று உமேஷ் கிளம்ப, அவன் பின்னால் சென்ற ப்ரீத்தி,”நிஜமாவே பாட்டியை மதுரைக்கு அழைச்சிட்டுப் போறீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம்…நாளைக்குச் சாயங்காலம்..அடுத்த நாள் சாயங்காலம் நான் திரும்பிடுவேன்..பாட்டி அங்கே தான் இருப்பாங்க.” என்றான்
“துணைக்குப் பாட்டி இல்லாம நான் மட்டும் எப்படி இங்கே தனியா இருப்பேன்? என்று கேட்டாள் ப்ரீத்தி.
கடந்த சில நாள்களில் நடந்த நிகழ்வுகளில் அவளும் குழப்பத்தில் இருக்கிறாளென்று உணர்ந்த உமேஷ்,”அத்தை, மாமா இறந்து போன பிறகு என்ன நடந்திச்சு, நம்ம வீட்டு ஆளுங்க ஏன் அப்படி நடந்துகிட்டாங்கன்னு எனக்கும் தெரியாது ப்ரீத்தி..ஆனா உமாக்கு நடந்தது தப்பு..அதைப் பற்றியெல்லாம் பேசி, சண்டை போட்டு நேரத்தை வீணாக்க நான் விரும்பலை..அவளை யார் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காமப் போனாலும்..அவ என்னோட மனைவி..உன்னோட குடும்பம். ” என்றான் உமேஷ்.
“நேத்து நைட் அண்ணியோட தான் தூங்கினேன்..நான் தான் நிறைய பேசினேன்..அவங்க பேசவேயில்லை..என்னைச் சந்திச்சது சந்தோஷமான்னு கூட தெரியலை..சுந்தரி பாட்டி எப்போவும் என்னைத் தொட்டு பார்த்து அழுதிட்டு இருக்காங்க.” என்று கண்கலங்கினாள் ப்ரீத்தி.
“அவங்க இரண்டு பேருக்கும் நீ நிஜம்னு உணர சில நாள்கள் ஆகும்..சுந்தரி பாட்டி கொஞ்ச நாள்லே சகஜமாகிடுவாங்க..உன்னோட அண்ணி எப்போவும் இப்படித் தான் இருப்பான்னு நினைக்கறேன்..உன்னோட சித்தப்பா வீட்லே வளர்ந்தாலும் தனியா தான் வளர்ந்திருக்கா..அவளை நாம தான் கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும்..நம்ம வீட்டு விஷயங்கள்..நம்ம மூணு பேர் பற்றி அவகிட்டே பேசிட்டு இரு..நீயும் அவளோட பேசாம இருந்தீன்னா அவ இன்னும் கூட்டு உள்ளே போயிடுவா.” என்றான் உமேஷ்.
“சரி” என்றாள் ப்ரீத்தி.
ப்ரீத்தி பேசியதைக் கேட்டு கேட்டு, நாகேஸ்வரன், மீனா, ஜெயந்தி, விக்ரம், ராஜசேகர், விஜய், என்று அனைவரையும் அதே போல் உருவகப்படுத்திக் கொண்டாள் உமா.கல்யாணத்தின் போது, அந்த உருவங்கள் உயிர்ப் பெற்று அவளுடன் இயல்பாக பழக, அதில் இருவர் மட்டும் ஜடமாக இருந்தனர்.