“நீ இன்னும் தூங்கலையா..வேலை பார்த்திட்டு இருக்கேயா? என்று பேச்சை அவள் புறம் சாமார்த்தியமாகத் திருப்பி, அடுத்த சில நிமிடங்களில், அவளுடைய கம்பெனி, வேலை பற்றிய விவரங்களை சேகரித்து, அவனுடைய ஹச் ஆர் வேலையைச் சரியாக செய்து, அவளுடைய பொறுமையின் எல்லையை, அமைதியின் ஆழத்தை சோதித்துக் கொண்டிருந்தான்.
அதை உமா உணர்ந்த தருணத்தில்,”லேட்டாயிடுச்சு..நான் தூங்கணும்.” என்று சாதுர்யமாக உரையாடலை முடிக்க உமேஷ் நினைக்க,”என்ன சொன்னான்?” என்று அழைப்பின் காரணத்தில் போய் நின்றாள் உமா.
அதற்கு,”உன்னைப் பொண்ணு கேட்டு வந்தாங்கறத்துக்காக அவனைத் தான் நீ கட்டிக்கணும்னு கட்டாயமில்லை..அவனை உனக்குப் பிடிக்கலைன்னு உன்னோட பாட்டிகிட்டே சொல்லிடு..அடுத்த முறை உன் வீட்டுக்கு நான் வரும் போது உன்னோட பாட்டி வாயாலே அதைக் கேட்க விருப்பப்படறேன்..அந்த அடுத்த முறை நாளைக்குக் காலையா கூட இருக்கலாம்.” என்றுஉமாவின் செயல்திறனை மதிப்பீடு செய்ய, இலக்கு வைத்தான் ஹெச் ஆர் உமேஷ்.
இவன்கிட்டே எல்லாத்தையும் பாட்டி சொல்லிட்டாங்களா? காலைலே ஆஸ்பத்திரிலே என்னைப் பற்றி தான் இரண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்களா? என்று யோசித்துக் கொண்டிருந்தவளிடம்,”என்ன? பாட்டிகிட்டே நீயே சொல்லிடுவே தானே? என்று கேட்டான்.
அதற்கு உமா பதில் சொல்லவில்லை.அமைதியாக இருந்தாள்.சில நொடிகள் காத்திருந்த உமேஷ், கைப்பேசி அழைப்பு துண்டிக்கப்படவில்லை என்றவுடன்,”சரி..உன் சார்பா நானே சொல்லிடட்டுமா?” என்று கேட்க, அவளின் அமைதியை உடைத்து,”அவன் என்ன சொன்னான்?” என்று அதே இடத்தில் நின்றாள் உமா.
அதைத் தெரிந்து கொள்ளாமல் அவனை அவள் விடப் போவதில்லையென்று உணர்ந்தவன்,“வயிறு வலிக்குதுன்னு சொன்னான்.” என்று பொருந்தாத, அதே சமயம், பொருள் பொதிந்திருந்த பதிலைக் கொடுத்தான்.அடுத்த நொடி அழைப்பைத் துண்டித்தாள் உமா.அவனுடைய கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்த உமேஷின் முகத்தில், அந்த இரவு வேளையில், கோடி சூரியன்கள் உதித்தது. அதே நேரத்தில், உமாவும் அவளுடைய கைப்பேசியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில், அன்று காலையில், உமேஷின் உதடுகளிலிருந்து தன் பயணத்தை ஆரம்பித்திருந்த அந்த லேசான புன்னகை, அதன் பயணத்தை முடித்து, உமாவின் உதடுகளில் இளைப்பாறிக் கொண்டிருந்தது.
அவன் மிரட்டியதை போல் அடுத்த நாள் வராமல், அதற்கு அடுத்த நாள் காலையில், ஒன்பது மணிக்கு உமாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தான் உமேஷ்.கதவைத் திறந்த சுந்தரி பாட்டிக்கு அவனைப் பார்த்த நொடி, சந்தோஷம், சஞ்சலம் இரண்டும்.
“வாங்க தம்பி.” என்று வரவேற்றார்.
உமேஷின் கையில் பழமுதிர்ச் சோலை பை இருந்தது.அதை வரவேற்பறையிலிருந்த மேஜையில் வைத்தவன்,”குட் மார்னிங் பாட்டி..எப்படி இருக்கீங்க?” என்று உற்சாகத்துடன் விசாரித்தான்.
அதுவரை களையிழந்து, இன்னொரு காலை வேளையைக் கடனேயென்று கடத்திக் கொண்டிருந்த சுந்திரி சுறுசுறுப்பானார்.மாடியை நோக்கி,
“உமா, பசுபதி தம்பி வந்திருக்கார்.” என்று குரல் கொடுத்தார்.
“வரேன் பாட்டி.” என்று பதில் மட்டும் வந்தது மாடியிலிருந்து.
“சொல்லுங்க..உடம்புக்கு ஒண்ணுமில்லையே?” என்று மறுபடியும் விசாரித்தான் உமேஷ்.
“நல்லா இருக்கேன் ப்பா..நீ உட்கார்..உமா வந்திடுவா..குளிச்சிட்டு இருப்பா..நீ குடிக்க தண்ணீர் கொண்டு வரேன்.” என்று, தண்ணீர் கொண்டு வரச் சமையலறையை நோக்கிச் சென்றார்.அவன் கொண்டு வந்திருந்த பையுடன் அவரைப் பின் தொடர்ந்த உமேஷ்,சமையலறையிலிருந்த உணவு மேஜையில் அந்தப் பையை வைத்தான். அலமாரியைத் திறந்து சுந்தரி பாட்டி கிளாஸை எடுப்பதற்குள், அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து, மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக் கொண்டான். அதைப் பார்த்து,
“கிளாஸ் எடுக்கறத்துகுள்ளே அப்படியே குடிச்சிட்டேயா ப்பா. என்றார்.
“தாகமா இருந்திச்சு.” என்றான்.
அவனுடைய முகமும் களைப்பாக இருந்ததைக் கண்டு கொண்டாலும், சாப்பிடுகிறாயா? என்று அவனை உபசரிக்கவில்லை.அப்போது, தலைக்குக் குளித்து, தலையில் ஈர துண்டுடன், மஞ்சள் நிறப் பருத்தி சல்வார் கமீஸில் சமையலறைக்குள் நுழைந்தாள் உமா.அவனுடைய வீடு போல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தவனை,”வாங்க” என்று வரவேற்றது முட்டாள்தனமாகப் பட்டது அவளுக்கு.
தலையசைவில் அதை அங்கீகரித்தான் உமேஷ். அந்த அறையிலிருந்து அவனை வெளியேற்ற நினைத்தவள்,”பாட்டி, டயமாயிடுச்சு..நீங்க டிஃபன் சாப்பிடணும்.” என்று உமேஷ் அருகே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டாள்.அது, அவன் வெளியேறுவதற்கான குறிப்பு என்று உணர்ந்தாலும், சட்டமாக அதே இடத்தில் அமர்ந்திருந்தான் உமேஷ்.
அதில் சங்கடமாக உணர்ந்த சுந்தரி, மெதுவாக நடந்து வந்து நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவர்முன் சாப்பிடும் தட்டை வைத்தாள் உமா. கேஸ்ஸரோலிருந்து இரண்டு சப்பாத்திகளை வைத்து, அதற்குத் துணையாக ஒரு கிண்ணத்தில் வெளிர் பச்சை நிறத்தில் எதையோ வைத்தாள். அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் உமேஷ்.
உடனே,“டிஃபன் சாப்பிடுறீங்களா தம்பி?” என்று கேட்டார் சுந்தரி.
“உங்க பேத்தியோட சமையல் பார்க்கவே நல்லா இல்லை..சாப்பாடு, துணிமணியெல்லாம் பார்வைக்குப் பளிச்சுன்னு இருந்தாதான் விலை போகும்..இதென்ன பச்சையும் மஞ்சளும் சேர்ந்து ஒரு கலர்..இந்தக் கலர் துணியெல்லாம் விற்பனையாகாது..முக்கால்வாசி மக்கள், ப்ரைட் கலர்லே தான் டிரெஸ் போடறாங்க..நாங்களும் எது விக்குதோ அதைத் தான் ஸ்டாக் செய்யறோம்.” என்று வெகு இயல்பாக அவனுடைய எண்ணத்தைச் சுந்தரி பாட்டியோடு பகிர்ந்து கொண்டு,”நீங்கமுதல்லே சாப்பிடுங்க..அஞ்சு நிமிஷம் கழிச்சு..உங்களுக்கு எதுவும் ஆகலைன்னா நான் சாப்பிடறேன்.” என்று உமாவைச் சீண்டினான் உமேஷ்.
அதில் கொதி நிலையை அடைந்திருந்தாலும், எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தாள் உமா.உமேஷ் சொன்னதைக் கேட்டு சுந்தரிக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டே,
“நான் தான் இவளுக்குச் சமைக்கக் கத்துக் கொடுத்தேன் தம்பி..நம்பிச் சாப்பிடுங்க.ஒண்ணும் ஆகாது..இது, துவரம் பருப்புலே கொஞ்சமா வெந்தயம் போட்டு வேக வைச்சு, தேங்காய, பச்சை மிளகாய், சீரகத்தை அரைச்சு ஊத்தி செய்த பச்சை தக்காளி கூட்டு..எங்க வீட்லே வேலை செய்யறவ அவங்க வீட்டுத் தோட்டத்திலிருந்து கொண்டு வந்த தக்காளி.” என்று சிபாரிசு செய்ய, ஆவலோடு பாட்டியின் கிண்ணத்தை அவன் எடுக்கப் போக, அதற்கு முன் அந்தக் கிண்ணத்தை எடுத்து,”இதிலே உப்பு கம்மியா இருக்கும்..உங்களுக்கு வேற தரேன்.” என்றாள் உமா.
மதுரையில், அவனுடைய வீட்டில் செய்வது போல், பார்வதி பாட்டிக்குப் பதிலாக, சுந்தரி பாட்டியுடன், கதையளந்தபடி காலை உணவை உண்டு முடித்தான் உமேஷ்.உமா அவளுக்காக செய்து வைத்தது, அதற்கு மேலும் என்று அவன் போக்கில் கணக்கில்லாமல் சாப்பாத்தியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் உமேஷ்.அவனுடய வயிறும் மனதும் திருப்தியாக உணர்ந்த போது, பொறுமையாக ஒவ்வொரு சப்பாத்தியாக சுட்டு எடுத்தவளிடம்,
“எனக்கு போதும்.” என்றுதெரிவித்தான்.அதைக் கண்டு கொள்ளாமல், அமைதியாக, அவளுடைய வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் உமா.
உடனே,“பாட்டி, உங்களோட சமையல் சூப்பர்.” என்று வேண்டுமென்றே அவளைச் சீண்டினான். ‘கால் கடுக்க நாம சப்பாத்தி சுட்டுப் போட்டா, இவங்க பாட்டிக்குச் சூப்பர் போடறாங்க’ என்று பொங்க, அது வெளியே விழாமல், மனதுக்கு மூடி போட்டாள்.
அதற்கு,”அடுத்த முறை மதியம் சாப்பாட்டுக்கு வாப்பா..காரக் குழம்பு செய்யச் சொல்றேன்.” என்று மதிய உணவிற்கு அழைப்பு விடுத்தார் சுந்தரி.
ஸின்சியராக,“வரேன் பாட்டி..ஒரு மணி நேரம் முன்னாடி தகவல் கொடுத்தாச் சரியா இருக்குமா?” என்று விசாரித்தான்.
“இரண்டு மணி நேரம் வேணும் ப்பா..இவ வீட்லேர்ந்து வேலை பார்க்கறா..உடனே வேலையை விட்டிட்டு சமைக்க வர முடியாது.” என்றார் சுந்தரி.
‘இந்தப் பாட்டிக்கு என்ன ஆயிடுச்சு? இவங்களை எதுக்கு சாப்பிடக் கூப்பிடறாங்க..இவங்களும் வரேன்னு சொல்றாங்க..வேலை வெட்டியில்லாம சுத்திட்டு இருக்கறது தான் இவங்க வேலையா?’ என்று யோசித்தவள், அதை,”பாட்டி, அவங்களுக்கு வேலை வெட்டி இருக்காதா? சும்மா சும்மா இத்தனை தூரம் வரமுடியுமா? அதுவும் சாப்பாட்டுக்கு?” என்று வெளியிட்டாள்.
அதற்கு,”என் வேலை என்னென்னு எனக்குத் தெரியும் பாட்டி..நான் வந்தா உங்க பேத்தியோட வேலை ஜாஸ்தி ஆகுது போலே.” என்றான். உடனே,
“அதெல்லாம் இல்லை ப்பா..சாப்பாட்டுக்கு இவ்வளவு தூரம் வரணுமான்னு நினைக்கறா..நாங்க தினமும் சாப்பிடறதை தான் உனக்கும் கொடுக்கப் போறோம்..தகவல் கொடுத்திட்டு வா ப்பா.” என்றார்.
“சரி பாட்டி..ஒரு நாள் மதியச் சாப்பாட்டுக்கு வரேன்.” என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டவன், கிட்சன் சிங்கில் கை கழுவிக் கொண்டே,”அந்தப் பைலே இருக்கற பழமெல்லாம் உங்களுக்குத் தான்..ஒண்ணு விடாம சாப்பிடணும்..அடுத்த முறை நான் உங்களைப் பார்க்கற போது, உங்களோட கன்னம் இரண்டும் அந்த ஆப்பிள் போல ஆரோக்கியமா, உதடு இரண்டும் மாதுளம் பழம் போல சிகப்பா, கைகள் இரண்டும் வாழைப்பழம் போல வழுவழுப்பா இருக்கணும்..அப்படி இல்லை..உங்களைச் சிறையெடுத்திட்டுப் போய் வெறும் பழ ஆகாரம் தான் கொடுப்பேன்.” என்றான்.
அவனுடைய வர்ணனையை கேட்டு பாட்டி, பேத்தி இருவருக்கும் சிரிப்பு வந்தது.சுந்தரி சத்தமாகச் சிரிக்க, உமா, மௌனமாக, மனதுள் சிரித்தாள்.
“உமா, நீ சாப்டிட்டு வா..நானும் தம்பியும் வாசல்லே இருக்கோம்.” என்று உமேஷை அழைத்துக் கொண்டு சமையலறையிலிருந்து வெளியேறினார் சுந்தரி.
உமா அவளுடைய காலை உணவை முடித்து விட்டு வரும் வரை, வரவேற்பறையில், சுந்தரியின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் உமேஷ். கொஞ்சம் நேரம் மதுரையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.அவருடைய வீடு, அதை விற்றுவிட்டு அந்தப் பணத்தில், கவிதாவிற்கு ஃபிளாட் வாங்கிக் கொடுத்தது.ராம நாதன் இன்னும் வாடகை வீட்டில் இருப்பது என்று பேச்சு அவர் குடும்பத்தைப் பற்றி இருந்தாலும், ஒருமுறை கூட ப்ரீத்தியைப் பற்றி விசாரிக்கவேயில்லை. மதுரையிலிருந்து சென்னைக்குப் பேச்சு மாறியுவுடன், அவனுடைய வேலையைப் பற்றி, சென்னையின் அனுபவங்கள் பற்றி சந்தரியிடம் பகிர்ந்து கொண்டான் உமேஷ். திடீரென்று, அவனுடைய கையைப் பற்றி,
“தம்பி..உமாக்கு அந்த எதிர்வீட்டுப் பையன் வேணாம் தம்பி..அவளுக்குப் பிடிக்கலை..அது தெரியாம, எனக்கு அப்புறம் அவ தனியாகிடுவாங்கற பயத்திலே அவ கல்யாணத்தை நடத்தி வைக்கச் சொல்லிக் கேட்டிட்டேன்.. மன்னிச்சிடுங்க தம்பி.” என்றார்.
அதற்கு,”அந்த மாதிரி பயமெல்லாம் இனி வேணாம்..நான் இருக்கேன்..கவலைப்படாதீங்க.” என்று சுந்தரிக்குத் தைரியம் கொடுத்தான் உமேஷ். அப்போது, அவனுடைய கைப்பேசி அழைக்க, அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, வாசல் கதவைத் திறந்து வெளியே சென்றான்.
சில நிமிடங்கள் கழித்து, வரவேற்பறைக்கு வந்த உமாவின் கையில் தண்ணீரும், மாத்திரையும் இருந்தது.அதை சுந்தரி பாட்டியிடம் கொடுத்து விட்டு,”அவங்க கிளம்பிட்டாங்காளா பாட்டி?’ என்று விசாரித்தாள்.
“இல்லை..ஃபோன் வந்தது..வெளியே போய் பேசிட்டு இருக்கார்.” என்று பதில் அளித்து விட்டு, மாத்திரை போட்டுக் கொண்டு தண்ணீரை அருந்தினார் சுந்தரி.கால் மணி நேரம் கழித்து உமேஷ் உள்ளே வந்த போது, வரவேற்பறையில் இருந்த பெரிய சோபாவில் கண்ணயர்ந்து இருந்தார் சுந்தரி பாட்டி. அவர் மீது மெலிதான போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தாள் உமா.கதவு வழியாக வந்த வெளிச்சத்தில் தலையைத் திருப்பிப் பார்க்க,
அடுத்த நாலைந்து நாள்களுக்கு அவனிடமிருந்து தகவலில்லை. முதல் இரண்டு நாள்களில், நினைத்த போதெல்லாம், ‘பசுபதி தம்பிகிட்டேயிருந்து தகவல் ஏதாச்சும் வந்திச்சா? மதியச் சாப்பாட்டுக்கு வர்றாரா?’ என்று கேட்டு கேட்டு உமாவை உண்டு இல்லை என்று படுத்திக் கொண்டிருந்தார் சுந்தரி. ஒவ்வொரு முறையும் ‘இல்லை’ என்று சொன்ன போது, சுந்தரி பாட்டியின் முகம் சோபை இழந்தது.அவர் படும் அவஸ்தையைச் சகித்துக் கொள்ள முடியாமல், உமேஷிற்கு அழைப்பு விடுத்து, அவனைப் பாட்டியுடன் பேச வைக்கலாமா? என்று கூட யோசித்தாள்.ஆனால், அதைச் செயல்படுத்த தைரியம் வரவில்லை.
இந்த இடைவெளியில், ஓர் இரவு மட்டும் அவர்களுடன் தங்கி விட்டுச் சென்றார் ராம நாதன். இப்பொழுதெல்லாம் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால், எந்த நேரமும் அவளுடைய வீட்டையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த ஜானகியையும் ஈஷ்வரையும் பார்த்து எரிச்சல் அடைந்தாள். அவனைப் பிடிக்கவில்லை என்று பாட்டியிடம் தெளிவாகச் சொன்ன பின் அவனைப் பற்றிய பேச்சு வீட்டில் எழுவதில்லை.ஆனாலும், மனத்தில், உமேஷிற்கும் அவனுக்கும் இடையே நடந்த உரையாடல் என்னவாக இருக்கும் என்று எண்ணி எண்ணி மண்டை காய்ந்து கொண்டிருந்தாள்.
மீரா விடுமுறையில் இருந்ததால், வீட்டிலிருந்து உமா வேலை செய்ததால், எதிர் வீட்டிலிருந்தவனுக்கு அவளை எப்படி அணுகுவது என்று புரியவில்லை. அதே சமயம், உமாவின் சித்தப்பாவைத் தவிர விருந்தினர்கள் யாரும் அவளைச் சந்திக்க வரவில்லை என்று ஆறுதல் அடைந்திருந்தான்.
அவனுடைய வீட்டினருடன் பேசுவதையே நிறுத்தியிருந்த உமேஷ், சுந்தரி பாட்டியின் வீட்டிற்குப் போய் வந்த பின், அவனுடைய குடும்பத்தினருடன் பழையபடி பேச ஆரம்பித்திருந்தான். அதன் விளைவாக, ஊருக்கு வரவேண்டுமென்று பாட்டி, அப்பா, அம்மா மூவரும் மாறி மாறி அழைக்க, ஏதாவது காரணம் சொல்லி பயணத்தைத் தவிர்த்து வந்தான். அதைச் செயல்படுத்த முடியாமல், மேன்பவர் காஸ்ட்டிங் (manpower costing), மீட்டிங் என்று மண்டை காய்ந்து போயிருந்தான் ஹெச் ஆர் உமேஷ். வேலை பளுவிலிருந்து மீள, உள்ளம் சிறிது நேரம் இளைப்பாற, உமாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
இரண்டு மணி நேரத்தில், காரக் குழம்பு, முருங்கைக்காய் சாம்பார், பருப்பு ரசம், அவியல், அவரைக்காய்க் கூட்டு, வெண்டைக்காய் மோர்க் குழம்பு, உருளைக் கிழங்கு பொரியல், வெள்ளரிக்காய்ப் பச்சடி, வடை, பால் பாயசம் என்று உமேஷ் அனுப்பியிருந்த நீளமான மெனுவிலிருந்து, சுந்தரி பாட்டிக்கு ஒவ்வொரு ஐட்டமாகப் படித்துக் காட்டி,”பாருங்க..உங்களோட பசுபதி தம்பி இரண்டு மணி நேரத்திலே எத்தனை ஐட்டம் செய்யச் சொல்லியிருக்கார்ன்னு..இதையெல்லாம் செய்ய, காய்கறி நறுக்கவே இரண்டு மணி நேரத்துக்கு மேலே ஆகும்.” என்றாள்.
“அவங்க பெரிய குடும்பமில்லே..தினமும் கல்யாணச் சாப்பாடு தான் சாப்பிடுவாங்க.” என்று உமேஷுக்கு ஆதரவாகப் பேசினார்.
“ஐயோ பாட்டி..எல்லாம் செய்ய முடியாது..நான் அவங்ககிட்டேயே எது வேணும்னு கேட்டுக்கறேன்.” என்று சொல்லி விட்டு, உமேஷிற்கு,’என்ன செய்யணும்னு சொல்லுங்க.’ என்று செய்தி அனுப்பினாள்.
அடுத்த நொடி,’ஜஸ்ட் காரக் குழம்பு.’ என்று பதில் அனுப்பினான்.உடனே, அவளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்,
‘அவன் என்ன சொன்னான்?’என்று மெசேஜ் போட்டாள். பதில் கொடுக்காமல் பத்து நிமிடம் போல் அவளைக் காக்க வைக்க, ஏன்யென்று யோசனையுடன், கைப்பேசியை அவள் பார்த்துக் கொண்டிருக்க,’வெய்யில் அதிகம்னு வானிலையைக் குறை சொன்னான்.’ என்று பதில் வந்தது.
உமாவின் அதே கேள்விக்கு, அதே பொருளுடன், ஒவ்வொரு முறையும் புதுப் பதிலுடன் வந்தான் உமேஷ்.