“நீ ஓகேன்னா, மேற்கொண்டு போட்டோ பறிமாறிக்கலாம். அவங்களுக்கு ஜாதகம் பார்க்கற நம்பிக்கையெல்லாம் கிடையாதாம்”, என்று தகவல் சொல்ல, வேறு வழியில்லாது வரன் பற்றிய விவரத்தைப் பார்த்தாள்.

“ஏன் சித்தி..”, என்று முனக, “இந்தாடி… வயசு இருவத்தி எட்டாச்சு.  நீயாவும் பண்ணிக்கற மாதிரி தெரியலை. இன்னமும் மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்காத. வேற வேலை மாறணும் செட்டாகணும்னு எல்லா காரணமும் ஆச்சு”, என்று கோபித்துக்கொள்ள, அவர் திருப்திக்காக சரியென்றாள்.

இராகு காலத்தில் துர்கைக்கு விளக்கு போட அவளை அழைத்துச் சென்றவர், ஆறு மணி தாண்டியதும் பையன் வீட்டிற்கு அழைத்துவிட்டார். அடுத்த அரை மணியில் இரஞ்சித் போட்டோ அவர் வாட்சப்பிற்கு வந்தது. ஜெயந்தியின் புகைப்படம் அவர்களிடம் சென்றது.

“சித்தி… இது என்ன இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்கீங்க?”, என்று அதிர்ந்தாள் ஜெயந்தி.

“அதெல்லாம் அப்படித்தான். நீ பாரு. பிடிச்சிருக்கா?”

“விளையாடாதீங்க சித்தி. போட்டோ பார்த்தா வாழ்க்கையை முடிவு செய்ய முடியும்?”, என்றவள் அவர் நீட்டிய புகைப்படத்தைப் பார்க்க அதில் இருந்தவன் ஒல்லியாக உயரமாக இருந்தான். அடுத்த போட்டோ பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் முகம் திருத்தமாக இருந்தது. முன் மண்டை கொஞ்சம் பெரிதாக இன்னும் சில வருடங்களில் வழுக்கை வரும் என்று பறை சாற்றியது. முப்பத்தியிரண்டு வயது, ஐ.டி வேலை என்றதில் கண்ணாடி நிரந்திரமாக குடியிருந்தது.

பெரிதாக மறுப்பு சொல்ல எதுவுமில்லாததில், “நேர பார்த்து பேசினாத்தான் சித்தி எதுவும் சொல்ல முடியும்”, என்று கைபேசியை திருப்பிக்கொடுத்தாள்.

அதிலேயே மகிழ்ந்தவர், “சரி, அவங்க பக்கமும் பார்த்துட்டு வரட்டும். நான் ஏற்பாடு பண்ணிட்டு சொல்றேன்.”

அலுவலகத்தில் மும்மரமாக வேலையில் இருந்தாள் ஜெயந்தி. தீக்ஷனா இரண்டு நாட்களாக எட்டிப்பார்க்காததில் ஒரு ஆசுவாசம். மோகன் அவள் ஏதோ கேரளா ட்ரிப் சென்றுள்ளதாகக் கூறியிருந்தான்.

பின் மதியம் சஞ்சய், ஜெயந்தியை அழைத்தான். அடுத்த பிராஜெக்ட் ரெட்மி கோட்டேஷன் டெண்டர் முறையில் என்பதால்  அதைப் பற்றி பேச்சு ஓடியது.

“அடுத்த இரண்டு நாள் ஃப்ரீயா வெச்சுக்கங்க ஜெயந்தி, எதுன்னாலும் உங்க கீழ இருக்கவங்க பார்த்துக்கட்டும். இதை முடிக்கறதுதான் பிரதானம்”, என்று அறிவுறுத்தினான் சஞ்சய்.

பேச்சு அடுத்து புதிய அமெரிக்க ப்ராஜெக்ட் பற்றி ஆரம்பித்தது. “நவீன் விசா ரெடின்னா அடுத்த மாசம் கிளம்பிடலாம். மூணு வாரம் இருக்க மாதிரி பார்த்துக்கோங்க. அதுக்குமேல ரிஸ்க். அடுத்து முடியற ஸ்டேஜ்ல போய்க்கலாம். இடையில் நான் எப்படியும் போவேன்”, என்று சொல்ல,

“பாவம் மஞ்சு. அவளுக்கு போக வாய்ப்பு அமையல”, என்று வருத்தப்பட்டாள் ஜெயந்தி.

“அவங்க பிரியப்படலை ஜெயந்தி. அம்மாக்கு ஹெல்த் ப்ராப்ளம்னு வெளி நாடு எங்கேயும் போக மாட்டேன்னு சொல்லித்தான் ஜாயின் பண்ணாங்க.”

“ம்ம்.. தெரியும். இருந்தாலும்…அவளோட திறமை வளர்ச்சி வீணாப்போகுதே. ”, என்று பார்த்தவளை ஒரு புன்னகையுடன் பார்த்தான் சஞ்சய்.

“என்ன செய்யலாம்? கண்டிப்பா நல்ல டாலன்ட்தான். வர வாய்ப்பு விட்டுட்டு அம்மாக்கான்னு இருக்கறதும் தப்பு சொல்ல முடியாதே. இந்த காலத்துல இது அபூர்வம், அதுக்கு நாம மரியாதை குடுக்கணும் ஜெயந்தி.”

அவன் பேசுவதில் இருக்கும் நியாயம் ஜெயந்திக்கும் புரிந்ததுதான். “ஒரு மாசம், இரண்டு மாசத்துலன்னு  முடியறதில்லை அவங்க ஹெல்த் விஷயம். இத்தனை மாசத்துல இந்த வாழ்க்கைக்கு பழகியிருப்பாங்க. இனி பொண்ணைப் பத்தி யோசிக்கணுமில்லையா? சில  நேரம் யாராவது மூணாவது மனுஷங்க அவ அப்பா அம்மாக்கு எடுத்து சொல்லி புரியவைச்சா அவங்க கேட்டுக்க வாய்ப்பிருக்கு சஞ்சய்.” அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் விடை பெற்றுக்கொண்டு கிளம்புபவளை பார்த்திருந்தான் சஞ்சய்.

நினைவு சனிக்கிழமை காலைக்கு சென்றது. தீக்ஷனா பேசியிருப்பாள் என்று தெரியும். ஸ்ரீதர் அழைத்திருந்தார். முகமன் முடிந்ததுமே

“என்ன சஞ்சய், கிளைய்ன்ட் டின்னர்ல பாதியிலேயே கிளம்பிட்டியாம்? தீக்ஷனாவையும் தனியா விட்டுட்டு போயிட்டியாம்? என் பொண்ணு லேட் நைட் வரவேணாம்னு அங்க ரிசார்ட்லேயே ரூம் எடுத்து தங்கிட்டாளாம்? உங்கிட்ட இதை எதிர்பார்க்கலை நான்”, என்று எகிறினார்.

வந்த எரிச்சலை உள்ளடக்கி, “இவ்வளவுதான் உங்களுக்குத் தெரியும்னா, உங்களுக்கு வந்த தகவல் அரைகுறையா வந்திருக்கு அங்கிள். மே பீ விஷயத்தை முழுசா தெரிஞ்சிகிட்டு வாங்களேன், அப்ப பேசுவோம்?”

“என்ன தெரியலை எனக்கு? நீதான் சொல்லேன்?”

“தீக்ஷனா உங்ககிட்ட கம்ப்ளெய்ன் பண்ணுவா, அதுக்கு  நான் விளக்கம் குடுக்கணும், நீங்க ஜட்ஜ்மென்ட் குடுக்கணும்னு இந்த வட்டத்தை ப்ரேக் பண்ண நினைக்கறேன் அங்கிள்.”, பிடிகொடுக்காமலேயே பேசினான்.

அதில் ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தார் ஸ்ரீதர்.

“சஞ்சய்…அம்மா இல்லாத பொண்ணுன்னு செல்லமா வளர்த்துட்டேன். அவளை நீ ஹாண்டில் பண்ணுவன்னு நினைச்சேன். கல்யாணம்னு ஒன்னு முடிஞ்சிருச்சுன்னா நீங்க இரண்டு பேருமே பார்த்துக்கோங்கன்னு நான் தலையிட மாட்டேன்பா.”, இறங்கி வந்தார்.

“இந்த கொஞ்ச நாளா நானும் யோசிச்சுட்டுத்தான் இருக்கேன். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா ரிலாக்ஸ்டா ஒரு கம்பனி, நல்ல ம்யூசிக், சிம்பிளான வீட்டு  சாப்பாடுன்னு எதிர்பார்ப்பு இருக்கற நானும், சாயந்திரமான எந்த பார்ட்டி, எந்த பப் போலாம், ஃப்ரெண்ட்ஸ் கூட டான்ஸ், ஃபான்சி டின்னர் போலாம்னு யோசிக்கற தீக்ஷனாவும் செட் ஆவோம்னு தோணலை அங்கிள். இருவத்தி இரண்டு வயசுல இப்படி இருந்தப்போ, அந்த வயசு எஞ்சாய் பண்றான்னு நினைச்சேன். இப்ப அவளுக்கும் முப்பது ஆகப்போது, ஆனா அதுக்கான மெச்சூரிட்டி வரலை.”, இன்றே இதை பேசவேண்டும் என்று நினைக்கவில்லை ஆனால் உடைத்தே பேசிவிட்டான்.

மறுமுனையில் கண்டிப்பாக திகைப்புதான் ஸ்ரீதருக்கு. அவர் மகளைப்பற்றி அவர் அறியாததா. அதனால்தானே சஞ்சய் போன்ற நிதானமான, பொறுமையான ஒருவன் மருமகனாக வரவேண்டும் என்று நினைத்தது.

“கல்யாணம்னு ஒன்னு ஆனா மாறிடுவா சஞ்சய். நான் அவகிட்ட பேசறேன். என் பொண்ணு மட்டுமில்லை, உன் கம்பனி, என் கம்பனியும் இதுல சம்பந்தப்பட்டிருக்கு. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே சஞ்சய்.”, என்றார் நாசூக்காக.

“இதை நான் யோசிக்காமலா இருப்பேன் அங்கிள்?  நீங்க சொன்னதை அப்படியே யோசிப்போமா? கல்யாணம் செய்துக்கறோம்னே வைங்க. தீக்ஷனாவால இங்க இருக்க முடியாது, அங்கதான் இரண்டு பேரும் லைஃப் ஓட்டணும். என் வேலையில நான் பிசியா இருக்க, அவ பார்ட்டியில பிசி ஆகிருவா. கொஞ்ச நாள்ல இது அவளுக்கு ஈகோ பிரச்சனையாகும், வேற உறவுகளை நாடிப் போகலாம். ஒன்னு டைவர்ஸ் ஆகும், இல்லை இதை நான் கண்டுக்காம என் போக்குல தனியா இருக்கணும். நாளைக்கு உங்க பிசினஸ் நான் எடுத்து நடத்தினாலும், அவளைப் பொறுத்த வரை நான் பணம் சம்பாதிக்கற ஒரு மெஷின், அதுவும் அவள் அப்பாவோட சொத்து. இப்படித்தான் வாழ்க்கை இருக்கும். இது எதுவுமே எனக்கு உடன்பாடில்லை அங்கிள். தி வால்ட் பொறுத்தவரை உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க. பட் தீக்ஷனாவோட என் வாழ்க்கைங்கறது ஆப்ஷன் இல்லை.”

தெளிவாக தன் முடிவை தெரிவித்துவிட்டான்.

“இது ஜெயந்தி பார்த்து வந்த முடிவா சஞ்சய்? அதனால தான் தீஷாவை விட்டுட்டு அவளை பத்திரமா வீட்டுக்கு அழைச்சிட்டு போனியா?  என் பொண்ணு சொன்னது மாதிரி உனக்கு அவளை பிடிக்கவும்…”

“அது உங்களுக்கு அனாவசியம் அங்கிள். ஜெயந்தியை இதுல கொண்டு வரவேணாம். தீக்ஷனாவை அம்போன்னும் விடலை. மோகன் இருந்தான். அவந்தான் ரூம் அரேஞ்ச் செய்து, அவ கொஞ்சம் அதிகமா குடிச்சிருக்கவும், பத்திரமா அவளை ரூமுக்கு கொண்டுபோய் விட்டான், எனக்கு அப்டேட்டும் செய்தான். அவனும் அங்கதான் ரூம் எடுத்து தங்கியிருந்தான்.”

மோகனிடம் பேசியிருந்தார் என்பதால் இதெல்லாம் ஸ்ரீதருக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். சஞ்சய், ஜெயந்தி பற்றிய பேச்சை கத்தரித்ததே அவள் மீதான அவன் விருப்பத்தை கோடிட்டுக் காட்டியது.

அவரிடம் எந்த பதிலும் வரவில்லை என்றதும் “நான் தீக்ஷனாகிட்டயும் என் முடிவை பத்தி பேசறேன் அங்கிள்.” என்று முடித்து வைத்தான்.

ஆனால் அன்று மதியமே தீக்ஷனா தன் நண்பிகள் இருவருடன் கேரளா சென்றுவிட்டாள்.

மகனின் இந்தப் பேச்சை கேட்டிருந்த தமயந்திக்கு அத்தனை நிம்மதி. அன்று இரவு குருபரனிடம் ஆனந்தக் கண்ணீர் பெருக செய்தியைப் பகிரவும்,

“ஹப்பாடி, தீக்ஷனா பிரச்சனை ஒரு மாதிரி முடிஞ்சுது தமையா. இப்ப ஜெயந்தியைப் பத்தி இன்னும் நல்ல விதமா சஞ்சய் யோசிக்கணும். கண்டிப்பா அவனுக்கு இப்பவே கொஞ்சம் பிடிக்கும்னுதான் நினைக்கறேன். அவன் வாழணும்னு நினைக்கற வாழ்க்கைக்கு ஜெயந்திதான் பெஸ்ட்.  அவகூட கார்ல வந்தப்போ அவனே உன் புருஷனைப் பத்தி, உன்னைப் பத்தியெல்லாம் பேசியிருக்கான். ஜெயந்தி எங்கிட்ட சொன்னா. நல்ல வேளை உன் பேரை சஞ்சய் சொல்லலை. இல்லைன்னா ஜெயந்தி நான் முதல்ல அவளை பொண்ணு கேட்டதும் சஞ்சய்க்குன்னு கண்டுபிடிச்சிருப்பா.”

இவர்கள் இருவரும் இப்படி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்க, அங்கே ரமாதேவி வரன் பார்த்ததோ, அதற்கு ஜெயந்தி வரனிடம் பேசிப்பார்க்க சம்மதம் சொன்னதோ தெரியவில்லை.

எங்கே இதைப்பற்றி பேச்செடுத்தால், குருபரன் மறுபடி என் தமையா மகனை கட்டிக்கொள் என்று சொல்லப் போகிறாரோ என்று ஜெயந்தியும் மறைத்துவிட்டாள்.