அத்தியாயம் – 9

ஈ.சி.ஆர் சாலையில் வழுக்கிக்கொண்டு ஓடியது சஞ்சயின் ஆடி கார். இரவு மணி பத்தரையை தாண்டியிருந்தது. காரில் மெலிதான பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, ஜெயந்தி,

“நீங்க சீக்கிரம் கிளம்பினதுல ஸ்டீவ் தப்பா எதுவும் நினைச்சுப்பாரா? ம்ப்ச், பேசாம நான் ஓலா எடுத்தே வந்திருப்பேன்.”

“ஷ்…அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. நான் பொறுப்புன்னு சொல்லித்தான் உங்களை டின்னருக்கு வர சொன்னேன் ஜெயந்தி. ஆல்சோ, பார்ட்டி பண்றதுல இராம்மோகன் அவங்களுக்கு நல்லா ஈடு குடுப்பான்.”

அதற்கு மேல் என்ன சொல்ல? தீக்ஷனா எப்படி வீட்டுக்குப் போவாள் என்று ஜெயந்திக்கு கேட்கத் தோன்றவில்லை. சஞ்சயும் கூறவில்லை. அவளைப் பற்றி நினைக்கும்போதே கனன்றது.

டின்னருக்கு சென்றதிலிருந்தே குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தாள். நேரடியாக இல்லாமல் மறைமுகமாக, அதனால் அமைதியாக இருந்தாள். ஸ்டீவ், ரோஜர் மற்றும் தெரசாவுடன் பேச்சு அமெரிக்கா ஊர், உணவு,  பேஸ்பால், பாஸ்கெட்பால் என்றே சுற்றி வர, இதைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாததால் ஜெயந்தி அமைதியாகவே இருந்தாள். சஞ்சய், இராம்மோகன் இருவரும் அங்கே சில வருடங்கள் படிக்க, வேலை பார்க்க என்று இருந்ததால் அவர்களுக்கு பேச இருந்தது.

முதலில் சகஜமாக நினைத்தவள், சஞ்சய், மோகன் பேச்சை மாற்ற முற்பட்ட போதும் லாவகமாக தீக்ஷனா மீண்டும் அமெரிக்கா கூட்டிச் சென்றுவிட, ‘அடப் போடி சரிதான்’ என்று கவனிப்பதைக் கூட குறைத்துக்கொண்டாள்.

முதலில் சாம்பெயின் அனைவருக்கும் பரிமாறப்பட்ட போது, இவள் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொண்டாள், அதற்கும் தீக்ஷனாவிடமிருந்து ஒரு கேலிப் பார்வை வந்தது.

தெரசா ஜெயந்தியின் சுருள் முடியைப் பார்த்து இயற்கையாகவே உனக்கு இப்படி இருக்கிறதா, சுருட்ட  நாங்களெல்லாம் எத்தனை மெனக்கெட வேண்டியிருக்கு என்று சொல்லி சிரித்தபோதும், பொறுக்க முடியாமல் பேச்சை மாற்றினாள் தீக்ஷனா. ஒரு பக்கம் இவளைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. தன்னை மட்டுமே எல்லாரும் பாராட்டவேண்டும் என்ற சிறுபிள்ளை பிடிவாதம் போல படுத்திக்கொண்டிருந்தாள்.

இரண்டு மணி  நேரம் கடந்திருக்க டின்னர் முடிந்திருந்தது. அதற்குள் பல கோப்பை மதுபானமும் முடிந்திருக்க சற்று சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள். ரோஜர் அவள்புறம் குனிந்தவன், “ஹேய் ப்ரிட்டி கேர்ள், என்னோட ஒரு வாக் வரியா”, என்று கேட்கவும் சற்றே பின்னுக்கு நகர்ந்தவள், “இல்லை ரோஜர். நான் கிளம்பணும். நேரமாகிருச்சு”, என்று எழுந்தாள்.

“என்ன இவ்வளவு சீக்கிரமாவா? இனிதானே ஃபன் பண்ணணும்?”, என்று விதவிதமாக ஸ்டீவும் தெரசாவும் கேட்க, தீக்ஷனா, “என்ன ஜெயந்தி? இருந்து ரோஜருக்கு கம்பனி குடு”, என்றாள் அவனைப் பார்த்து கண்ணடித்தபடியே.

சுர்ரென்று கோபம் தலைக்கேற, “அது என் வேலையில்லை தீக்ஷனா”, என்று அழுத்தமாகக் கூறியவள், வேகமாக அவ்விடத்தைவிட்டு நகர, “சரியான மிடில் க்ளாஸ் மென்ட்டாலிட்டி” என்று முணுமுணுக்க, ஒரு நொடி நின்று அவளைப் பார்த்தவள், “ஆமாம், உன் பணக்கார  நரி புத்தி எனக்கு வேணாம்”, என்று  நக்கலாகக் கூறி நடந்துவிட்டாள்.

அவள் பின்னோடு அடுத்த சில நிமிடங்களில் சஞ்சய் வந்திருந்தான்.

“ஜெயந்தி… இரு… இந்த நேரம் தனியா எப்படி போவீங்க? நான் ட்ராப் பண்றேன்”, என்று கார் பார்க் பக்கம் வர கைகாட்டினான்.

“நீங்க ட்ரிங் பண்ணிருக்கீங்க. வேண்டாம்”

முறைத்தவன், “ஒரு க்ளாஸ் ஷாம்பெயின், அதுவும் பாதிக்கு மேல குடிக்கலை. போலீஸ்ல மாட்டினாக்கூட லிமிட்டுக்குள்ளதான் இருக்கும். நீங்களும் படுத்தாம வாங்க”, என்று முன்னே நடந்தான்.

கடுப்புடனேதான் காரில் அமர்ந்தாள். சஞ்சய் காரை கிளப்பியதுமே, “உங்களுக்கு பிடிக்காதுதான், ஆனாலும் தீக்ஷனா இன்னிக்கு நடந்துகிட்ட முறைக்கு நான் சாரி கேட்கறேன். அதுவும் கடைசியா அவ பேசினது ரொம்ப தப்பு”, என்று சங்கடமாக மன்னிப்புக் கோரினான்.

“அப்போ சொன்னதுதான். மன்னிப்பு அவங்கதான் கேட்கணும், வேணும்னா அவங்களை கேட்க வைக்க உங்களால முடியாததுக்கு சாரி சொல்லுங்க, அதை ஏத்துக்கறேன்”, என்றாள் மையமாக.

உதடு குவித்து தன் இயலாமையை வெளிப்படுத்தியவன், ஒரு பெருமூச்சுடன், “ம்ம், அதுக்கும் சாரி. அவளோட இருக்கறது ஒரு சிக்கலான சிச்சுவேஷன்”, என்றதோடு அங்கே பேச்சு நின்றுவிட்டது.

தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை சில நிமிடங்களுக்குப் பிறகு கலைத்தான். “என்ன பயங்கரமா யோசிக்கறீங்க? தெரிஞ்சிக்கலாமா?”

அவனின் புறம் திரும்பியவள், “தீக்ஷனா எதுக்கு என்னை டார்கெட் பண்றாங்கன்னு யோசிக்கறேன். அவங்களுக்கு ஜால்ரா தட்டலைன்னு ஒருஅலட்சியம் ஒரு கடுப்பு இருந்தது. இன்னிக்கு ஒரு மாதிரி வன்மமா மாறியிருக்கு.”, யோசனையாகவே வந்தது ஜெயந்தியின் குரல்.

“ஹே.. வன்மம் எல்லாம் அதிகம் ஜெயந்தி”

“இல்லை, டின்னர்ல என்னை பேசவே விடாதபடி எனக்குத் தெரியாத விஷயமா பேசினாங்க”, என்று ஆரம்பித்து, ஒவ்வொன்றாக அவள் தடுத்ததைக் கூறி முடிவாக, “அப்போ நான் இதென்ன சின்னபிள்ளைத்தனமா இருக்கேன்னுதான் நினைச்சேன். ஆனா இப்ப யோசிக்கும்போது அவங்க க்ரெடிட் எடுத்துக்க இல்லை, என்னை மட்டம்தட்டி காட்டணும்னுதான் ப்ளான். ரோஜரோட போகமாட்டேன்னு சொன்னதும் என்னை மிடில் க்ளாஸ் மென்ட்டாலிட்டின்னு சொன்னது கூட என்னை ஒருவேளை டிரிக்கர் பண்ணி அவனோட போக வைக்கவான்னு  யோசனை. போயிருந்தா கண்டிப்பா பிரச்சனை ஆகியிருக்கும். இப்படி கிளம்பி வந்ததும் என்னை கட்டுப்பட்டியா காட்டுது. அதாவது அவங்க பார்வையில நான் அன்-ஃபிட். ஆனா இது யாருக்காக காட்டறாங்க. கிளையன்ட்டுக்காக இல்லை. கண்டிப்பா உங்களுக்காகத்தான். அது ஏன்னு யோசிக்கறேன். முன்னவும் அந்த மாதிரிதான் ஆச்சு”, என்று ஜெயந்தி பேசிக்கொண்டே போக,

“அவளை பத்தி விடுங்க ஜெயந்தி”, என்று நிறுத்தினான் சஞ்சய்.

“நான் எதுவுமே தப்பா நினைக்கலை. நீங்க முடியாதுன்னு சொன்னது கரெக்ட்தான். ஒரு கிளையன்ட்கிட்ட நீங்க ப்ரோஃபெஷனலா நடந்துகறதுக்கு மேல வேற தேவையும் இல்லை. அவ அப்படி ஒரு நினைப்பில் இருந்தா அது அவளைத்தான் மோசமா காட்டுது. நாம வேற பேசலாமே?”,என்று தன்மையாகவே கூறினான் சஞ்சய்.

முயன்று புன்னகைத்தவள், “சரி. என்ன டாபிக் பேசலாம்னு சொல்லுங்க?” எனவும்,

“உங்களைப் பத்தி சொல்லுங்களேன் ஜெயந்தி?” என்று ஆச்சரியப்படுத்தினான்.

அதில் சிரித்தாள். “என்னைப் பத்தி எல்லாமே விசாரிச்சிருப்பீங்களே? புதுசா என்ன இருக்க சொல்ல?”

புன்சிரிப்புடன், “ம்ம்..உங்க பயோடேட்டா தெரியும், அப்பா அம்மா தவறிட்டாங்க, உங்க சித்தி நம்பர் எமெர்ஜென்சி கான்டாக்டா தந்திருக்கீங்க. பட் காலேஜ் லைஃப் எப்படியிருந்தது, உங்க சித்தி கூட நெருக்கமா, என்ன மாதிரி சினிமா பார்ப்பீங்க, இப்படி தெரியாதே?”

“ஓஹ்…தெரியாத சில விஷயத்தையும் எங்கிட்டயே கேட்டு வாங்கறீங்க”, என்று கலாய்த்தாலும் விவரம் கூறினாள். அதில் சித்தி தன்னை கல்யாணம் செய்யச் சொல்லி கேட்பதையும் கூறினாள்.

“ஓஹ்… என் அம்மா போனதுக்கு அப்பறம் நான் பெரிசா உறவுக்காரங்களோட டச்ல இல்லை. முன்னாடியே கொஞ்சம் அப்படித்தான். இப்ப சுத்தம்! அதனால கம்பெல் பண்ண யாரும் இல்லை. மோகன் அம்மாதான் எங்க இரண்டு பேரையும் திட்டுவாங்க”, என்று சஞ்சய் பகிர்ந்துகொண்டான்.

“ஓஹ்..உங்க அப்பா?”

“இல்லை, நான் காலேஜ் படிக்கும்போதே இறந்துட்டார்.”

“…”

ஒரு சில நொடிக்குப் பின், “அனேகமா என்னாச்சுன்னு இந்த இடத்துல கேட்பாங்க. உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையா இல்லை அடுத்தவங்க பர்சனல்னு அமைதியா இருக்கீங்களா?”

சஞ்சய் கேட்டதும் சற்றே முழித்தவள், “இல்லை … அப்பா அம்மா இல்லைன்னதும் அடுத்து என்ன பேசன்னு தெரியலை”, என்று சற்று அசடு வழிந்தாள்.

அதில் சிரித்தவன், “அப்பா பிசினஸ் லாஸ், நம்பின உறவுகளுடைய துரோகம்னு நிறைய கஷ்டத்துல மனசு ஒடிஞ்சு போய் இறந்துட்டார். அம்மாக்காகவும், நாங்க எல்லார் முன்னாடியும் நிமிர்ந்து நிக்கணும்னு இருந்த வெறியில மீண்டு வந்தேன். ஸ்டூடன்ட் லோன்லயும் ஸ்காலர்ஷிப்லையும்தான் யூ.எஸ் போனதே. இரண்டு வருஷம் வேலை பார்த்தப்போ அம்மாவை கூட வரவெச்சு பார்த்துகிட்டேன், அடுத்து கம்பனி ஆரம்பிச்சப்பறம் அம்மா கூட இருக்க நேரமே இல்லை. ஒரு வருஷம் முன்ன அம்மா இறந்தது கஷ்டம்தான், ஆனா இப்ப தேறிகிட்டேன். மோகன் அப்பறம் வேலை இரண்டும்தான் என்னை மீட்டுது.”

கடினமான நாட்கள் கடந்து வந்ததை எந்த ஒரு அலட்டலோ, டிராமாவோ இல்லாமல் கூறியது பிடித்திருந்தது.

பேச்சு கொஞ்சம் அவனைப் பற்றி, பின்பு பொதுவாக படம், உலக அரசியல், என்று நீள வீடு வரும் வரையிலும் கூட அலுப்பு தட்டவில்லை.

“தாங்க்ஸ் ஜெயந்தி. இப்படி ஜஸ்ட் ஒரு சாதாரண பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு. நைஸ் கான்வர்சேஷன். மண்டே பார்க்கலாம்”, என்று எளிமையாக விடை பெற்றுக்கொண்டான்.

தன் வீட்டிற்கு வந்த ஜெயந்திக்குமே மனது மகிழ்ச்சியாக இருந்தது. தேவையற்ற ஒரு வார்த்தை, பார்வை என்று எதுவும் இல்லாது, இயல்பான ஒரு சந்திப்பு. முன்பு இருந்த அவளது மன நிலையை சஞ்சய் முற்றிலுமாக மாற்றியிருந்தான்.

ஞாயிறு ரமா சித்தி வீட்டிற்கு வந்திருந்தாள். மதிய உணவு முடிந்து சித்தி சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருக்க, சித்தப்பாவே தன் மனைவி கண்ட கனவைப் பற்றி பேசினார்.

“அட சித்தி…அதெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க எதையாவது நினைச்சிக்காதீங்க.”

“நீ வேற ஜெய்… அன்னிக்கே அந்த ஏஜென்சிக்கு போய் உனக்கு வந்த வரன் யாரு, நம்பர் குடுங்கன்னு சண்டை போட்டு வாங்கிட்டு வந்தா”, என்று சித்தப்பா சுவாரசியமாக தகவல் சொன்னார்.

“ஷ்…சித்தி, அதான் வந்து பேசினாங்க. நான் வேணாம்னு சொல்லிட்டேனே, அப்பறம் ஏன்? இன்னேரம் வேற பொண்ணு பார்த்துகிட்டு இருப்பாங்க”, என்றவளைப் பார்த்த சித்தி, “அதெப்படி உனக்குத் தெரியும்? திரும்ப பேசினாங்களா? நம்பர் எதாவது குடுத்தாங்களா?”

“இருங்க இருங்க”, என்றவள் குருபரன் கூறியது என்று சொல்ல முடியாமல், “அது, நான் வேணாம்னு சொன்னதும் வேற வரன் பார்த்திருப்பாங்களேன்னு பொதுவாதான் சொன்னேன். நம்பர் எல்லாம் கிடையாது”, என்று சமாளித்தாள். ‘அதான் நேரவே வந்து உட்கார்ந்துக்கராரே’ என்று நினைத்துக்கொண்டாள்.

“இல்ல, அந்த பையன் ப்ரோஃபைல் மூடிட்டாங்களாம்.  நான் நம்பரை வாங்கி போன் பண்ணேனா…”, என்று ஆரம்பிக்க,

சித்தப்பா இராமசுப்பு ஏற்ற இறக்கத்துடன் மாடு சினை பிடிக்கக் கேட்ட கதையை சுவாரசியமாகக் கூற வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் ஜெயந்தி.

“அச்சோ சித்தி… ஏன் இந்த வேண்டாத வேலை உனக்கு?”

அன்றைய நிகழ்வில் புன்னகைத்த சித்தியும், “போடி… ஒரு நிமிஷம் கதி கலங்கிடுச்சு எனக்கு. போகுது உன் ப்ரோஃபைல் திரும்ப ஆக்டிவேட் பண்ணதுல இரண்டு வரன் வந்திருக்கு. ஒன்னு நானே வேணாம்னு சொல்லிட்டேன். பையனுக்கு படிப்பு இல்லை வேலையும் சுமார்தான். இன்னொன்னு நல்லாத்தான் இருக்கு. நீ பாரு”, என்று உள்ளே சென்று வரனின் விவரத்தை கொண்டு வந்து காண்பித்தார்.