தீக்ஷனாவிடம் பேசச் சென்றவன் பத்து நிமிடத்தில் மறுபடியும் டெக்-டீம் இருந்த மீட்டிங் அறைக்குள் நுழைய, கடுகடுத்த முகத்தோடு வெளியே வந்த தீக்ஷனா, ஜெயந்தியை முறைத்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.

பின் மதியம் அவள் மோகன் அறைக்குச் செல்ல, “வாங்க ஜெயந்தி. காலையில நான் இங்க இல்லாம போனதுல ஒரு குட்டிப் பிரளயமே நடந்திருக்கு போல?” என்று வரவேற்றான்.

“அட நீங்களுமா? தீக்ஷனாக்கு அப்படி என்ன பிரச்சனை என்னோடன்னு புரியலை. வேணும்னுதான் அப்படி நடந்துகிட்டாங்கன்னு நல்லாவே தெரியுது. சும்மா அமைதியாவே போயிட்டு இருக்கமாட்டேன்னு உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேனே மோகன்”, என்றபடியே கணினியோடு அமர்ந்தாள்.

அதைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த சஞ்சய், “டேய் சாரில்லாம் சொல்லிடாதே, மேடம்க்கு தீக்ஷனாதான் சாரி சொல்லணுமாம். நம்ம சொல்றது வேணாமாம்”, நக்கலாக சொல்லியபடியே அமர்ந்தான்.

“தப்பு பண்ணாம நீங்க எதுக்கு சொல்லணும்?”

“ஜெயந்தி, அவ சஞ்சய் மேல கொஞ்சம் பொசசிவ். அதுதான்…”, மோகன் இழுக்க,

புருவம் சுருக்கி்னாள், “நான் என் எல்லையிலதான நிக்கறேன்? அவங்களை தூண்டற மாதிரி நான் எதுவுமே செய்யலையே?”

“இல்ல…அந்த வாலிபால் மேட்ச் அப்பறம்…” என்று மோகன் எதோ சொல்லப்போனவனை “டேய்… விடு, ஜெயந்தி எதுவும் செய்யலை. தீஷா தப்பா புரிஞ்சிட்டு இருக்கா. பேசிக்கலாம். இப்ப நாளைக்கு வரவங்ககிட்ட சொல்ல வேண்டிய விஷயத்தை பார்க்கலாம்”, கத்தரித்து நிறுத்தினான் சஞ்சய்.

ஒரு மணி நேரம் சென்று ஜெயந்தி கிளம்பவும், சற்று தளர்ந்து அமர்ந்தனர் நண்பர்கள் இருவரும்.

“சஞ்சய்… இதுக்கு முன்னாடியும் நீ பொண்ணுங்களோட பேசியிருக்க, அப்பல்லாம் இல்லாம இப்ப ஏன் தீக்ஷனா பொங்கறா? வேற எதுவும் விஷயமா?”

“இல்லடா… அது அன்னிக்கு அவ கூட போகாம ஜெயந்தியோட மீட்டிங் உட்கார்ந்தது, நீ சொன்ன வாலிபால் அப்பறம் அவ அப்பா ஸ்ரீதர் சர் கிட்டவும் அன்னிக்கு ஜெயந்தி பத்தி நல்ல விதமா பேசினதுன்னு எல்லாமா சேர்ந்து” தோளை குலுக்கியவன், “ஜெயந்தியும் சும்மாயில்லை. டப்பு டப்புன்னு அவ மூக்கை உடைக்கறா. மத்தவங்க மாதிரி தீஷாக்கு மயங்காம, பயந்துக்காம அலட்சியம் பண்றதுல இன்னும் காண்டாகறா தீஷா.”

“சீக்கிரம் தீஷா கிளம்பினா தேவலை”, மோகன் சொல்ல, கண்களை உருட்டிய சஞ்சய், “இந்த முறை எங்கிட்டருந்து ஒரு பதிலை வாங்கணும்னு முடிவோட இருக்கா. சீக்கிரம் கிளம்புவான்னு தோணலை.”

“அடப்பாவி… என்ன சொல்லப்போற? ஸ்ரீதர் சர் எதுவும் சொன்னாரா?”

“ஹ்ம்ம்… ஒரு மாதிரி ஹிண்ட் பண்ணார்.”

“…”

“ம்ப்ச்…அவர்கிட்ட முடியாதுன்னும் சொல்ல முடியலை. ப்ராக்டிகலா பார்த்தா கம்பனிக்கும் நல்லதுதான். இவளானா பொறுமையை ரொம்ப சோதிக்கறா.“

காதை தீட்டிக்கொண்டு இவர்கள் பேச்சை கவனித்துக்கொண்டிருந்தனர் தமையாவும் குருபரனும். அதன் விளைவு மறு நாள் விடியற்காலை ஜெயந்தியின் ரமா சித்தியின் படுக்கையறையில் நின்றுகொண்டிருந்தார் குருபரன்.

இப்படியெல்லாம் அவர் யார் வீட்டிலும்  நுழைந்ததேயில்லை. சஞ்சய் பேச்சைக் கேட்டு தமயந்தி சலங்கை கட்டாத குறையாக ஆடித் தீர்க்க, வேறு வழியின்றி அவர் கூறிய இந்த முயற்சிக்கு செவி சாய்த்து முன்பொரு முறை ஜெயந்தியை பின் தொடர்ந்து வந்ததில் வீட்டை பார்த்திருக்க, இதோ வந்துவிட்டார்.

மெல்ல ரமாதேவி படுத்திருந்த பக்கம் வந்தவர், தலைமாட்டுக்கருகில் அமர்ந்தவாறு, “எம் பொண்ணை இப்படியேவா ரமா விடுவ? எதோ வரன் வந்துச்சே, யாரு எவருன்னு போய் விசாரிச்சு சரி வருமான்னு பார்க்கலாமில்ல? என் பொண்ணு வேணாம்னா விட்டுதுடா தொல்லைன்னு இருந்துடுவியா? இதுதான் உன் அக்கா மேல இருக்க பாசமா?” என்று பேச, ரமா விழித்துவிட்டார்.

“அய்யோ மாமா அப்படில்லாம் இல்ல?” என்று எழுந்து அமர, அது கூட தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தார் அவர் கணவன் இராமசுப்பு.

“ஏங்க… எந்திரிங்க… அட”, என்று பட் பட்டென்று தோளில் அடிக்க, “ஏய்..சனியனே… ஏண்டி நடு இராத்திரியில அடிக்கற?”

“என்னது சனியனா…யோவ் கொன்னுடுவேன்! நானே பயந்துபோயிருக்கேன்.”

அதற்குள் தூக்கம் தெளியவும், கடிகாரத்தைப் பார்த்த மூர்த்தி, “விடியக்காலை நாலரை மணிக்கு என்னடி பிரச்சனை உனக்கு? கனவு எதுவும் கண்டியா?”

“ஹ்ம்ம்… ஆமாங்க.. மாமா…ஜெயந்தி அப்பாங்க… கனவுல குரல் மட்டும் கேட்டுச்சுங்க…”, என்று குருபரன் கூறியதை சொல்லவும், “ம்ப்ச்… அதெல்லாம் இல்லடி…அவளுக்கு கல்யாணம் முடிக்கலையேன்னு உனக்குள்ள இருக்கற குற்ற உணர்வுதான் கனவா வந்திருக்கும்.வேணும்னா அந்த ஏஜென்சிக்கு இன்னிக்கு ஒரு நடை போய் பேசிட்டு வா. இப்ப படு”, என்றதோடு மனிதர் திரும்பவும் போர்வைக்குள் புகுந்து கொண்டார்.

கணவர் சொன்ன ஐடியா பிடித்திருக்க, அதை அன்றே செயல்படுத்தினார் ரமா. பதினொரு மணியளவில் அந்த கல்யாண ஏஜென்சியில் ஒரு பெண்ணோடு தர்க்கம் செய்துகொண்டிருந்தார்.

“ஏம்மா, என் பொண்ணுக்கு வந்த வரன், நேரே அவளை பார்க்க போயிடவும், வேண்டாம்னு சொல்லிட்டா. அதனால எங்கிட்ட டீடெயில் குடுங்கன்றேன். அதெப்படி முடியாதுன்னு சொல்லுவ? இந்த ரசீது பாரு. நாந்தான் பணம் கட்டி ரெஜிஸ்டர் பண்ணேன். என் பொண்ணு போன் பண்ணி ப்ரொஃபைல் மூட சொன்னா எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேணாமா?” மூச்சு விடாமல் பேச எதிரே இருந்த பெண் ‘அய்யோடா…காலையிலேயே கரைச்சலா?’ என்று வெறுத்துப்போய்,

“ப்ரோஃபைல் திரும்ப திறக்கறது நீங்க மானேஜர் கிட்ட பேசிக்கோங்க மேடம். நான் கடைசியா உங்க பொண்ணு டீட்டெய்ல்ஸ் கேட்டது யாருன்னு பார்க்கறேன்”, என்று சென்றாள்.

மானேஜரோடு அரை மணி நேரம் போராடி இம்முறை எந்த வரனாக இருந்தாலும் தன்னை மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையோடு மீண்டும் ஜெயந்தியின் பதிவை ஆக்டிவேட் செய்துவிட்டார்.

“மேம், சஞ்சய்னு ஒரு வரனுக்கு பார்க்கத்தான் கேட்டிருந்தாங்க. ஆனா இப்ப அவர் ப்ரொஃபைலும் மூடிட்டாங்க. ஒரு வேளை கல்யாணம் முடிஞ்சிருச்சோ என்னவோ. வரனோட அம்மா பேரு தமயந்தி. அவங்க போன் நம்பர் இதுதான்.”, சீட்டை தந்துவிட்டு விட்டால் போதுமென்று ஓடிவிட்டாள்.

வால்ட்டின் மீட்டிங் அறையில் இரு ஆண்கள் ஒரு பெண் என்று மூன்று வெள்ளைக்காரர்களுடன் சஞ்சய், மோகன், தீக்ஷனா மற்றும் ஜெயந்தி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பிரசென்டேஷன் எல்லாம் திருப்திகரமாக முடிந்திருக்க, மாலை டின்னர் பற்றி  பேச்சு எழுந்தது. மூவரில் முதன்மையாக இருந்த ஸ்டீவ், “எங்க நன்றியை சொல்ல ஒரு டின்னர் ட்ரீட் நாங்க தரோம். நீங்க நாலு பேருமே வரணும்”, என்று அழைத்தார்.

இதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லையென்றாலும், தவிர்ப்பதும் நல்லதல்ல என்று புரிந்து, ஜெயந்தியும் வர சம்மதித்திருந்தாள்.

வீட்டிற்கு வந்த ரமாதேவி, ஏஜென்சி பெண் தந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்துவிட்டார்.

“ஹலோ…”, என்றது ஒரு பெண்ணின் குரல்.

“ஹான்…ஹலோ நான் ரமாதேவி பேசறேன்…எனக்கு உங்க நம்பர் ஏஜென்சில குடுத்தாங்க. அது…”

“ஓ…ஆமாம் ஏஜென்சியிலர்ந்து எங்களுக்கும் சொன்னாங்க. எந்த தேதி இங்க வர உங்களுக்கு தோதுபடும்?”

இப்படி கேட்டதில் முழித்த ரமாதேவி, “அது… நாங்க வரணுமா? வழக்கமா நீங்கதான வந்து..”

“ஆங்… நாங்க வரதெல்லாம் முடியாதுங்க. உங்களுக்கு இஷ்டம்னா நீங்கதான் அழைச்சிட்டு வரணும். எங்களாலல்லாம் அலைய முடியாது.”

என்ன இப்படி கட் அண்ட் ரைட்டா பேசறாங்க என்று ரமா தடுமாறி நிற்க, “ஒரு நாளே போதும், நீங்க இரண்டு நாள் வேணும்னு ஏஜென்சிகிட்ட சொன்னீங்களாம்?” என்ற அடுத்த கேள்வியில் குழம்பிவிட்டார்.

என்னத்த சொல்லி வெச்சா அந்த ஏஜென்சி பொண்ணு? ஒரு வேளை ப்ரோஃபைல் மீண்டும் ஆக்டிவேட் செய்ததை சொல்கிறாரோ என்று நினைத்தவர், “அது நாள் கணக்கா என்ன? நான் சொல்ற வரைக்கும் இருக்கணும்னு சொன்னேனே?”, யோசனையாகக் கேட்டார்.

எதிர்புறம் இருந்த பெண்மணி சிரிக்கும் சத்தம் கேட்டது. “நீங்க புதுசுன்னு அந்த பொண்ணு சொன்னது சரியாத்தான் இருக்கு. என் காளைகிட்ட ஒரு நாள் விட்டாலே கரு தங்கிடும். எங்க ஜில்லாவுல கேட்டுப் பாருங்க அவன் திறமையை!”

காதில் விழுந்த வார்த்தைகளை கிரகிக்க ஒரு சில நொடிகள் ஆனது ரமாதேவிக்கு. “ஹேய்.. என்ன பேசறீங்க?  இந்த பேச்சு வார்த்தைக்கெல்லாம் நான் புதுசா இருந்தாலும், முறை தெரியாதவ இல்லை. பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட பேசற மாதிரியா பேசறீங்க?”

“பொண்ணு வீட்டுக்காரங்களா?  அது சரி… ரொம்ப பாசமா வளர்த்திருப்பீங்க போல. நாங்களும் அப்படித்தான். என்ன முறை தப்பி பேசிட்டேன்னாம் நானு?”, நக்கல் வழிந்தது கேள்வியில்.

“ஒரு நாள் விடணுமா என் பொண்ணை? உங்க பிள்ளை திறமையை ஜில்லா பேசும்னு நீங்களே சொல்றீங்க, என்ன மாதிரி காரெக்டரா இருப்பான் அவன்? சீ …சீ, அதான் நேரா பொண்ணுகிட்டயே பேச வந்தீங்களா? அவ வேண்டாம்னு சொன்னது சரியா போச்சு.. அய்யய்ய…என்ன குடும்பம் இது…”, என்று ரமாதேவி எகிற,

“ஏய்…இந்தாம்மா நிறுத்து? என்ன பேசற? எந்த மாடுகிட்ட நாங்க போய் பேசினோம்? இதுல அது வேணாம்னு வேற..”

“ஏ… மரியாதையா பேசு… என் பொண்ணை மாடுன்னு சொல்லுவியா?”

“நீ வேணா பொண்ணுன்னு சொல்லிக்கோ நான் ஏன் சொல்லணும்? சினைக்கு விடணும்னா தேதிய சொல்லிட்டு கூட்டிட்டு வா. வரதுக்கு முன்னாடி பாதி காசை ஜிபே பண்ணனும்”, ரமாதேவிக்கு தலையை சுற்றி குருவிகள் வட்டமடிப்பது போல் தோன்றியது.

முதலில் மாடு என்றதும், இப்போது சினைக்கு விடுவதை பேசுவதும் அவரை குழப்பி விட, போனை ஒரு முறை பார்த்தவர்,

“ஒரு நிமிஷம்… மணமாலை ஏஜென்சியில உங்க பையனுக்கு வரன் பதிஞ்சியிருந்தீங்களா?”

“என்னாது… புள்ளைக்கு வரனா? என் அண்ணன் மகளைக் கட்டி அவனுக்கே இரண்டு பசங்க இருக்கு. யாரும்மா நீ?”

“நீங்க தமயந்தி தானே?” ,என்று போன் நம்பரையும் கூறினார் ரமா.

“நம்பர் என்னதுதான்.. பேரு…தமயந்தியா? அப்படி யாரும் இல்லையே, நான் சொர்ணம்.”

“ஏஜென்சிலருந்து பேசினாங்கன்னு சொன்னீங்க?”

“ஆமா…மாட்டு ஏஜென்சி. சினைக்கு விட காள மாடு வேணும்னு கேட்டு பதிவு பண்ணுவாங்க. அப்ப நீங்க மாடு பதிவு பண்ணலையா…ஓ…அதான் பொண்ணு..”, என்றவர் சிரிக்கத் தொடங்க… ரமாதேவி செய்வதறியாது, “ராங் நம்பர்..சாரி”, என்று வைத்துவிட்டு படபடக்கும் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டே சோஃபாவில் சரிந்தார்.