அத்தியாயம் – 8

திங்கள்கிழமை அலுவலகம் வழமையான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.  சஞ்சய் டெக் டீமுடன் ஐக்கியமாகியிருக்க, மோகனைக் காணவில்லை. முக்கியமாக தீஷனாவையும் காணவில்லை.

நெட்டி முறித்து எழுந்த ராகினி, “ஜெய் வா, ஒரு காபி சாப்பிட்டு வரலாம், காலையில வந்ததுலர்ந்து பிசி”, என்று இழுத்துக்கொண்டு சென்றாள். அலுவலகத்திலும் பேச்சு சுற்றுலா பற்றியே சுற்றி வந்தது. வாலிபால் போட்டியில் தோற்றிருந்தாலும், ஆண்கள் டீம் நூலிழையில் வெற்றி பெரும் அளவு கொண்டு சென்றதில் பெண்கள் அணி கெத்தாகவே சுற்றிக்கொண்டிருந்தது.

“சஞ்சையும் தீக்ஷனாவும் பாஸ்கெட் பால் ஆடினது பார்த்தியா? அப்படியே பழைய ஷாருக் கஜோல் படம் மாதிரியே இல்ல?“, ரஞ்சனி கேட்கவும் ஆமோதித்தவள், “என்ன படத்துல அவங்க ட்ராக் இல்ல புடவை கட்டியிருப்பாங்க. கொஞ்சம் பெரிய ஷார்ட்சா போட்டிருக்கலாம் தீக்ஷனா. பசங்க ஆட்டத்தை பார்த்தாங்களான்றது டவுட்தான்.” ஜெயந்தி சொல்லவும் இருவருமே சிரித்தார்கள். “அது சரி, அவங்க மாதிரி நச்சுன்னு தொடை இருந்தா போடலாம். நமக்கிருக்கறதுக்கு தொள தொள ட்ராக் பான்ட்தான் விதி! ஆனாலும் சஞ்சய் சர் செம்ம பா. அவங்களும் என்னன்னவோ ட்ரை பண்றாங்க. அத்தனை அழகுக்கும் அசர மாட்டேங்கறார்”, ராகினியே சொல்லவும், ஜெயந்தி, “அவங்க ட்ரை பண்றது சரி, அதுக்காக அவர் சைட் எதுவும் இல்லைன்னு தெரியுமா? இவங்க மாதிரி அவர் வெளிப்படையா இல்லாம இருக்கலாமே”, தோள் குலுக்கினாள்.

“சஞ்சய் சர் எம்.எஸ் அமெரிக்கால படிக்கும்போது தீக்ஷனா அப்பா ஸ்ரீதர் சர் தான் அவருக்கு மென்ட்டர், கைட் எல்லாம். நம்ம பாஸ் கம்பனி தொடங்கவும் அவரும் ஒரு பார்ட்னர், அங்க முதல் சில கிளையன்ட்ஸ் பிடிச்சு கொடுத்ததும் அவர்தான். தீக்ஷனா எம்.பி.ஏ முடிச்சு வரவும், அமெரிக்க ஆஃபீஸ் அவங்க பார்த்துக்கறாங்க. இந்த சிச்சுவேஷன்ல அவங்க ஓப்பனாவே விரும்பினா, நம்ம சாரால மறுக்கவா முடியும்? அதுவும் தீக்ஷனா மாதிரி அழகை யார் வேணாம்னு சொல்லுவா?”,ராகினி பின்னணி விளக்கவும், புருவங்களை உயர்த்திய ஜெயந்தி, “சரி அவங்க கதை நமக்கெதுக்கு, வா போலாம்”, என்று அழைத்து வந்துவிட்டாள்.

அவள் எதிர்பார்த்திருந்தபடியே குருபரன் இந்தப் பேச்சை கேட்டிருந்தார். இவள் வீடு சென்றதுமே, அவர் இருப்பை தெரிவித்தார்.

“வாங்க சர். கேட்டீங்களா ராகினி சொன்னதை? எப்படியிருந்தாலும் அவங்கதான் கல்யாணம் செய்துப்பாங்க போல. இல்லைன்னா பிசினஸ் உறவும் சிக்கலாகிடும்”, என்று ஜெயந்தி கூறவும், “ம்ம்.. நானும் அப்ப அங்கதான் இருந்தேன் ஜெயந்திமா. ஆனா இது தப்புமா. அவனுக்கு அவ சரியா வரமாட்டா“, என்றார் கவலையாக.

“ஏன் சர்? இரண்டு பேருமே நல்லா படிச்சிருக்காங்க. ஜோடிப் பொருத்தம் கூட செம்மையா இருக்கு. அவங்களை கல்யாணம் பண்ணா அவங்கப்பா ஷேரும் இவருக்கு வந்துடும். சொத்து, படிப்பு, அழகு எல்லாம் இருக்கு. அப்பறம் என்ன?”

“ம்க்கும்… விட்டா நீயே போய் கல்யாணத்துக்கு தேதி குறிப்ப போல? நீயும் சஞ்சையும் வாலிபால் ஆடவும், அந்த பொண்ணு கண்ணுல வந்த கோவத்தை நீ பார்க்கலையே? சஞ்சய் டையர்டா இருந்தாலும், முடியாது என் கூட நீ பாஸ்கெட் பால் ஆடணும்னு வம்பு பண்ணி உனக்குப் போட்டியா ஆடினா தெரியுமா? எப்பவும் அவதான் வெளிச்சத்துல இருக்கணும். எல்லார் கண்ணும் அவ மேலதான் இருக்கணும். அடுத்தவங்களுக்கு அடென்ஷன் போச்சுன்னா இவளுக்கு தாங்க முடியாது. சஞ்சய் என்னேரமும் இவ பின்னாடியே வால் பிடிச்சிட்டா சுத்த முடியும்? சண்டைதான் வரும். அதோட அவனை அமெரிக்கா கூட்டிட்டு போயிடுவா. இவன் தனியாளா நின்னுடுவான்.”, புலம்ப ஆரம்பித்துவிட்டார் குருபரன்.

“அச்சோ சர். சஞ்சய் என்ன குழந்தையா? இங்க மட்டும் அவர் தனியாளா இல்லாம குடும்பத்தோடையா இருக்கார்? எனக்குத் தெரிஞ்சு கங்கா சர், மோகன் தவிர்த்து யாரும் இருக்கற மாதிரி தெரியலை. வேற யாரும் சொந்தம்னு கிட்டவே சேர்க்கலைன்னு  நீங்கதானே சொன்னீங்க?”

“ம்ம்.. சொன்னேன். அவனுக்கு பொண்டாட்டியா வரவளாவது குடும்பத்தை இழுத்து பிடிச்சு அவனை பார்த்துக்குவான்னு நினைக்கறது தப்பா? இங்க இந்த மேனா மினுக்கிய பார்த்துக்கவே இவனையும் சேர்த்து பத்தாள் வேணும்!”

குருபரனின் நொடிப்பில், “சர்! என்ன பேச்சு இது? தீக்ஷனாவை பிடிக்கலைங்கறதுக்காக அப்படில்லாம் திட்டக்கூடாது”, என்று அதட்டினாள்.

“சாரிமா… இந்த தமையா புலம்பலைக் கேட்டு கேட்டு அவ மாதிரியே எனக்கும் பேச்சு வருது”, மன்னிப்பு வேண்டினார்.

“என்ன சொல்றாங்க உங்க கேர்ள் ஃப்ரெண்டு? அதை சொல்லுங்க. அவங்க பிள்ளைக்கு வரன் பார்த்துட்டீங்களா?”, பேச்சை மாற்றுவதாக நினைத்துக் கேட்டாள்.

“அவ கரைச்சல் பெரும் கரைச்சலா இருக்கு ஜெயந்திமா”, என்று பாவமாகக் கூற கலகலத்துச் சிரித்தாள் ஜெயந்தி.

“சார்…செத்தே போனாலும் இந்தக் காதல் படுத்தற பாடு அடங்காதா? ஆவியாகியும் இப்படி நிம்மதியில்லாம தமையா ஆன்ட்டி ஒரு பக்கம் சஞ்சய் மறுபக்கம்னு பிரச்சனையா இழுத்து விட்டுக்கறீங்களே! பாவம் நீங்க”, வருத்தப்பட்டாள்.

‘இரண்டு பிரச்சனையும் ஒன்னுதான், தீர்வு நீதான்.ஆனா அதைச் சொன்னா நீயும் என்னை பந்தாடுவியே’, என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டார்.

அடுத்த நாள் தீக்ஷனா அலுவலகத்தில் ஆஜாராகிவிட்டாள். “கைஸ்… நாளைக்கு நம்ம முக்கியமான கிளையன்ட் ஃபார்திங்க்ஸ் ஆளுங்க விசிட் வராங்க.  நம்ம இந்தியன் ஸ்டைல்ல வெல்கம் பண்ணனும்”, என்று ஆரம்பித்தவள், வழக்கமான மாலை போட, சந்தன குங்குமம் வைக்க என்று பெயர்களை படித்தவள், இதில் கலந்து கொள்ளாமல் கணினியில் கவனம் பதித்திருந்த ஜெயந்தியைப் பார்த்து,

“ஹேய் ஜெய்… லிசின் அப்… நாளைக்கு மார்னிங் சீக்கிரம் வந்து நம்ம லோகோவை ரங்கோலி மாதிரி …அது அந்த கனேஷா போட்டியே, அது மாதிரி போட்டுடு, அவங்களுக்கு பிடிக்கும்”, என்று ஆர்டர் போட்டு அவள் பதிலுக்குக் கூட காத்திராமல், “ராகினி, 4 பொக்கே ரெடியா வரணும், ரிசெப்ஷன்ல ஒரு பெரிய ஃப்ளவர் அரேஞ்மென்ட் இருக்கணும்”, என்று பட்டியல் வாசித்தாள்.

“தீக்ஷனா.. கோலம் போடறதெல்லாம் என் ஜாப் ஸ்கோப்ல கிடையாது. வேற ஆளைப் பாருங்க”, என்று கூறிவிட்டு மீண்டும் கணினிக்குள் தலையை நுழைத்துக் கொண்டாள்.

தீக்ஷனா முகம் சிவந்துவிட, பல்லைக் கடித்தவள், “ஜெயந்தி உங்க மானர்ஸ் எங்க? நான் உங்க சுப்பீரியர். இப்படித்தான் பேசுவீங்களா?”

“இங்க என்னோட ரிப்போர்டிங் மானேஜர் இராம்மோகன். அடுத்து சஞ்சய். நீங்க இல்லை தீக்ஷனா. அப்படியிருக்க, நீங்க எனக்கு நேரடியா எப்படி வேலை சொல்லலாம்? இது என் வேலையே இல்லை, அதை ரிக்வெஸ்ட்டாக் கூட கேட்கலை. ஆர்டர் போடறீங்க? உங்க மானர்ஸ் எங்கன்னு நானும் கேட்கலாமா?”,

குரல் உயர்த்தவில்லை, ஆனால் அழுத்தமாக வந்தது கேள்வி. குரல் உயர்த்தவில்லை என்றாலும் அனைவருக்குமே கேட்டது. ஏனென்றால் அங்கே இருந்தவர்கள் அனைவருமே வாயடைத்துப்போய்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“டாம் யூ… “, என்றவள் விருட்டென்று டெக் டீம் கூடியிருந்த மீட்டிங் அறைக்குள் சென்றாள். அடுத்த நிமிடம் அங்கிருந்தவர்களை வெளியேற்றியிருந்தாள். சஞ்சயிடம் புகார் படித்துக்கொண்டிருப்பாளாகயிருக்கும்.

“என்ன ஜெய் இது?”, ராகினி அருகில் வரவும், “அவ வீட்டு வேலைக்காரியா நானு? இவ ஆடறதுக்கெல்லாம் நான் ஆட முடியாது”, என்றாள் ஜெயந்தியும் சற்று உஷ்ணமாக.

சஞ்சய் புஜத்தை பிடித்த படியே ஒரு வெற்றிப் புன்னகையோடு வந்தாள் தீக்ஷனா.

“சாரி ஜெயந்தி. இரண்டு நிமிஷம் பேசலாமா?”, என்று சஞ்சய் கேட்கவும், “எல்லார் முன்னாடியும்தானே இஷ்யூ நடந்தது. இதுல தனியா பேச என்ன இருக்கு சஞ்சய்?”, எழுந்து நின்று பதிலளித்தாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், சுற்றியிருப்பவர்களைப் பார்த்து, “வேலையைப் பாருங்க கைஸ்” எனவும் கலைந்தனர்.

“ஓகே..என்னாச்சு ஜெயந்தி?”

சஞ்சய் கேள்வியில் புருவம் உயர்த்தியவள், “தீக்ஷனா சொல்லவும்தானே மீட்டிங்கை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க சஞ்சய்?”

“சீ… என்ன திமிர் பாரு”, தீக்ஷனா இடைபுக, “மைண்ட் யுவர் வொர்ட்ஸ் தீக்ஷனா” என்று ஜெயந்தி எச்சரித்தாள்.

“ப்ச்… ப்ளீஸ் லேடீஸ்”,  நெற்றியை தேய்த்தவன், “உங்க பக்கம் என்ன பிரச்சனைன்னு கேட்டேன் ஜெயந்தி”, என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.

“உங்க கம்பனி ஃபைனான்ஸ் ஹெட்டாதான் சேர்ந்திருக்கேன். முறைவாசல் பண்றதுக்கு வரலை.  நாளைக்கு கிளையன்ட் அடுத்த அஞ்சு வருஷ காஸ்ட் ப்ரோஜெக்ஷன்ஸ் கேட்பாங்க, ஸ்லைட்ஸ் ரெடி பண்ண சொல்லியிருக்கீங்க. அந்த வேலையை பார்க்கணும், பஞ்சாயத்து பேச எனக்கு நேரமில்லை.”

“ப்ளீஸ்… உங்க டாலன்ட் காட்ட முடியுமான்னுதானே கேட்டாங்க அதுக்கேன் முறைவாசல்னெல்லாம் சொல்றீங்க ஜெயந்தி?”

அதில் எரிச்சல் மண்டியது ஜெயந்திக்கு. “இதோ நம்ம எச். ஆர் ராகினி ஐ விட்னஸ் இருக்காங்க. தீக்ஷனாவும் நானும் பேசினதை அவங்ககிட்ட கேட்டுக்கோங்க. அதுக்கு மேலேயும் நான் தப்புன்னா, அப்ப பேசுவோம்.பட் என்னால கோலமெல்லாம் போட முடியாது சஞ்சய்.”

அவள் கத்தரித்துப் பேசியது கடுப்படித்தாலும், தவறு அவள் மேல் இல்லை என்பது புரிந்தது. ஆனாலும் தீக்ஷனாவை அமைதிப்படுத்த, ராகினியை அழைத்துக் கொண்டு அவன் அறைக்குச் செல்ல, உடன் வரப் பார்த்த தீக்ஷனாவை, “திஷா, ராகினியோட நான் தனியா பேசணும். நீ இருந்தா சரி வராது”, என்று கழட்டிவிட்டுச் சென்றான்.

அவள் புசு புசுவென்று மூச்சு விட்டு காலியாக இருந்த மோகன் அறைக்குள் புகுந்து கொள்ள, நமுட்டுச் சிரிப்புடன் வேலையை ஆரம்பித்தாள் ஜெயந்தி.

“க்கா… என்னாச்சு? அழகி அவமானப்பட்ட மொமென்ட் மிஸ் பண்ணிட்டேனே… அப்படியே முகமெல்லாம் சிவந்துடுச்சாமே?”, மஞ்சு ஓடி வந்து விசாரித்தாள்.

“ஆக யாரும் வேலை செய்யறதா இல்லை, என்னையும் செய்ய விடறதா இல்லை. அப்படித்தானே? இந்த தீக்ஷனா வந்தாலும் வந்தாங்க, பொழுது தண்டமாத்தான் போகுது. போய் வேலையைப் பாரு, லஞ்ச்ல பேசலாம்”, என்று விரட்டினாள்.

பத்து நிமிடம் கழித்து ராகினி திரும்பி வந்தவள், “நடந்ததை அப்படியே சொன்னேன் ஜெய். சஞ்சய்க்கு உன் மேல தப்பில்லைன்னு தெரியும்”, என்று தகவல் சொன்னாள்.

“தெரிஞ்சு? அவங்களை எங்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லப் போறாரா இல்லை அவங்ககிட்டதான் இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு கண்டிக்கப்போறாரா? இரண்டும் இல்லை. எங்கிட்ட வந்து சாரி சொல்லுவார். அது எதுக்கு? போவியா?”, என்று திரும்ப, அங்கே சஞ்சய் நின்றுகொண்டிருந்தான்.

பேசியது கண்டிப்பாகக் கேட்டிருக்கும், ஆனால் முகத்தில் பிடிபட்ட பாவனையே காட்டாது அவனைப் பார்த்தாள் ஜெயந்தி.

அவளை பார்த்து உதட்டை சுழித்தவன், “சாரி சொல்லலாம்னுதான் வந்தேன். அதான் வேணாம்னு சொல்லிட்டீங்களே. ஓகே.”, என்று நடையைக் கட்டினான்.

ராகினி, “என்ன ஜெய்? வேற வேலைக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்டியா?” கவலையாக கேட்டாள்.

“இந்த ஒரு ரீசனுக்கு என்னை அனுப்பினா நஷ்டம் அவங்களுக்குத்தான் ராகினி. தன்மானத்தை விட்டுட்டு வேலை பார்க்கவேண்டிய அவசியம் எனக்கில்லை”, தோளை குலுக்கிவிட்டு வேலையை தொடர்ந்தாள்.