மறு நாள் காலையில் சஞ்சையுடனே ஆர்பாட்டமாக வந்தாள் தீக்ஷனா. கையில்லாத அடர் சிகப்பு ஷார்ட் டாப் உடல் அழகை எடுத்துக்காட்ட, நீள சிறு பூக்கள் போட்ட ஸ்கர்ட் மென் இடையை பற்றி கணுக்கால் வரை தழுவி நின்றது.
தீக்ஷனாவின் குணம் பிடிக்காவிட்டாலும், அவள் தன்னை அலங்காரம் செய்துகொள்ளும் விதமும், ஆளுமையான அந்த உடல் மொழியும் ஜெயந்திக்கு பார்க்கப் பிடித்தது. விரசமில்லாத கவர்ச்சி அவளுக்கு கைவந்த கலையாக இருந்தது. பயல்கள் எல்லாம் மின்சாரம் தாக்கியது போல பார்ப்பதில் தவறில்லைதான். ஆனால் தினமும் இப்படி வந்து வேலையை கெடுப்பதுதான் அவள் மீது எரிச்சலை வரவழைத்தது.
நடுவில் நின்று கைதட்டியவள், எல்லோரையும் பெரிய மீட்டிங் அறைக்கு அழைத்தாள். ஒரு சிறு சிரிப்புடன், மீட்டிங் அறையை நோக்கி சஞ்சயும் நடக்க மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.
“மச்சி… அனேகமா எங்கேஜ்மென்ட் முடிஞ்சிருச்சுன்னு சொல்லப்போறாங்க. உன் ஒரு தலைக் காதல் புட்டுக்கிச்சுடா”, மஞ்சு நவீனின் தலையில் தட்டி உச்சு கொட்டினது அவர்கள் பின்னே வந்த ஜெயந்தியின் காதில் விழுந்தது.
“ஏய்…அடங்கு. எப்படி இருந்தாலும் அவங்க என் ட்ரீம் கேர்ள்தான், அதெல்லாம் விட்டுத்தரமாட்டேன்”, என்று நவீன் பதிலில காரி துப்புவதுபோல பாவனை செய்தாள் மஞ்சு.
குருபரன் அங்கே இருக்கிறாரா தெரியவில்லை. இப்படித்தான் சங்கதி என்றால் அவர் வருத்தப்படுவார். இவளுக்குமே சஞ்சய்க்கு இவள் பொருத்தமில்லை என்றுதான் தோன்றியது. ‘ஏய்.. பார்த்த நாலு நாள்ல எப்படி சொல்லுவ? அவர் லைஃப் அவர் சாய்ஸ்’, என்று மனதை அடக்கியபடி உள்ளே நுழைந்து ஒரு மூலையில் நின்று கொண்டாள்.
“ஒரு சந்தோஷமான விஷயம் கைஸ். எதிர்பார்த்ததுதான். இருந்தாலும், கன்ஃபர்ம் ஆனாதானே சந்தோஷம்?”, என்று சஞ்சய் கேட்டு நிறுத்த, அங்கே ஒரே அமைதி. தீக்ஷனா ஒரு பெரிய புன்னகையுடன் சஞ்சய் தோளில் தொங்காத குறையாக அவன் புஜம் பற்றி நின்றாள்.
அமெரிக்க க்ளையன்ட் பேரைச் சொல்லி, “புது ப்ராஜெக்ட் சைன் ஆகியிருக்கு. ஜெயந்தி, மோகன் அப்பறம்”, என்று அமெரிக்க ஆஃபீசில் இருந்த சிலரின் பேர்களை சொல்லி, ” ப்ரபோசல் ரெடி செஞ்சு, கிளையன்ட் கிட்ட அற்புதமா பேசி, நம்மால முடியும்ங்கற நம்பிக்கையும் கொடுத்தவங்களுக்கு நன்றி”, என்று பேச, டெக் டீம் ஆண்கள் ஒரு பெரிய நிம்மதியுடன் படபடவென்று கைதட்டினர். ஜெயந்திக்கு சிரிப்பு வந்த்து.
அவள் அருகில் இருந்த மஞ்சு, “போச்சு… நம்ம ஆஃபீஸ் கைப்புள்ளையை கையிலயே புடிக்க முடியாது…”, என்று கூற, “அது யாரு மஞ்சு?” எனக் கேட்டாள்.
“இந்த நவீன் பயதான். யூ.எஸ் ஆஃபீஸ் அனுப்புவாங்க. தீக்ஷனாவோட இன்னும் கடலை போட்டு காதல் பயிரை வளர்ப்பான்”, கொஞ்சம் கடுப்புடனே கூறினாள்.
“ஏன், உனக்கு போகணுமா?”
“ம்ப்ச்… அம்மாக்கு ஒரு பக்கம் ப்ராலிசிஸ். நான், அப்பா இரண்டு பேரும் பாத்துக்கறோம்க்கா. நான் இப்படி மூணு மாசமெல்லாம் கிளம்பிட்டா அப்பாவால தனியா முடியாது. அம்மா வேற வெளி ஆள்கிட்டல்லாம் கம்ஃபர்டபிளா இருக்க மாட்டாங்க. இல்லைன்னா இவனுக்கு முந்தி நான் பொட்டியை கட்டியிருப்பேன். நான் இங்கருந்துதான் வேலை பார்ப்பேன்”, என்று கூற ஜெயந்தியால் பதில் பேச முடியவில்லை.
அதற்குள் ப்ராஜெக்ட் பற்றிய மேல் விவரம், அதன் முக்கியத்துவம் என்று கூறியவன், “கண்டிப்பா எல்லாரும் நிறைய வேலை பார்க்கவேண்டியிருக்கும். நமக்கு நிறைய டைம் கிடையாது. அதனால ப்ராஜெக்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இந்த வீக்கென்ட் ஒரு டே-ட்ரிப் எல்லாருமா போய் எஞ்சாய் பண்ணிட்டு வருவோம்”, என்று முடிக்க, எல்லோருமே ஆர்பரித்தனர்.
அந்த சனிக்கிழமை பேருந்தில் மஹாபலிபுரம் பக்கமிருந்த ஒரு ரிசார்டிற்கு சொகுசுப் பேருந்தில் ஆரவாரமாக சென்று கொண்டிருந்தனர் தி வால்ட் நிறுவனத்தின் விழுதுகள். ஆணி வேரில் ஒரு பாதியான இராம் மோகன் மட்டுமே அவர்களுடன் இருந்தான். சஞ்சயும் தீஷனாவும் நேராக வந்துவிடுவார்கள் என்று மோகன் சொன்னதுமே இளைஞர்கள் கூட்டத்தின் ஆர்வம் சற்று மட்டுப்பட்டது. பெண்களின் கிண்டல் கேலியில் சற்று நேரத்தில் கலகலப்பு மீண்டது.
ரிசார்ட்டில் இறங்கியதும் காலை உணவு ப்ஃபே முறையில் இருக்க, கூட்டம் முதலில் வயிற்றை கவனித்துக்கொண்டு பின்பு கான்ஃப்ரென்ஸ் அறையில் கூடியது. மோகன் அனைவரையும் வரவேற்று இந்த நாளை இனிதான நினைவுகளாக மாற்றிக்கொள்ள சில அறிவுரைகள் கூறி முடித்துக் கொள்ள, அடுத்து எஹ்.ஆர். ராகினி அன்றைய அட்டவணையைக் கூறினாள்.
ரிசார்ட்டில் உள்ள உள் வெளியரங்க விளையாட்டு பொழுதுபோக்குகள் பற்றி விளக்கி, மதிய பஃபே நேரம் என்று சொல்லி முடிக்க,
“மோகன்ணா…. எப்போ வருவாங்க தீஷா மேம்?”, என்று ஒரு குரல் வந்தது.
“டேய்… யாரது?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாலும், “கிளம்பிட்டாங்க. இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வருவாங்க. நீங்க போய் எஞ்சாய் பண்ணுங்க. இன்னிக்கு முழுசும் இங்கதான் இருப்பாங்க” என்று அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தான். “பசங்களா…. நோ சரக்கு! எந்த எக்ஸ்க்யூசும் ஒத்துக்க மாட்டேன். ஞாபகம் இருக்கட்டும்”, என்று எச்சரித்துவிட்டே இறங்கினான்.
பாட்மின்ட்டன், பாஸ்கெட் பால் என்று குழுக்கள் பிரிய, ஒரு பக்கம் வாலி பால் ஆட ஆயத்தமாயினர்.
“என்ன ஜெய்… நீ என்ன கேம் ஆடுவ?”, ராகினி கேட்க, “வாலிபால் காலேஜ்ல ஆடினது ராகி, வேடிக்கைதான் பார்க்கப் போறேன்”, என்று வாலிபால் கோர்ட்அருகில் இருந்த நீள்விருக்கையில் அமர்ந்தாள்.
ஒரு புறம் மஞ்சுவோடு இன்னும் இரண்டு பெண்கள், எதிரே நவீனும் உடன் இருவர் ஆட ஆரம்பித்திருந்தனர். ஆண்கள் ஆணி எளிதாக வென்று கொண்டிருந்தது. நவீன் தலைமையில் பெண்கள் அணியை பங்கம் செய்து கொண்டிருந்தனர். இந்த அலப்பறையில் ஜெய் கண்ணில் நீர் வர சிரித்துக்கொண்டிருந்தாள்.
“அக்கா… அவனுங்க எப்படி கலாய்க்கறாங்க. நீங்க சிரிக்கறீங்க”, இடுப்பில் கை வைத்து கடுப்பைக் காட்டிய மஞ்சு, தன் இரு புறம் நின்ற பெண்களைப் பார்த்து, “அவனுங்க சொல்ற மாதிரி உங்களை வெச்சிகிட்டு ஊர்காய் கூட போட முடியாதுடி. அதான் வெளிய போகுதுன்னு தெரியுதில்ல? அப்பறம் எதுக்கு போய் தொட்ட? அவனா பாயிண்ட் குடுத்து கூட நமக்கு எடுத்துக்க வக்கில்லை”, என்று தலையை தட்ட, “போ…அதான் எனக்கு ஆட வராதுன்னு சொன்னேன். நீதான் ஆள் பத்தலைன்னு இழுத்துட்டு வந்த”, என்று தவறிழைத்தவள் கத்தினாள்.
“ஏய்… சந்தோஷமா விளையாட சொன்னா…என்ன சண்டை?”, அங்கே வந்த ராகினி, “மஞ்சு…ஜெய் காலேஜ்ல வாலிபால் சேம்ப். இழுத்து போடு”, என்று பற்ற வைத்தாள்.
“..க்கா. வாங்க. நீங்க வரதுக்காக கேர்ள்ஸ் டீமுக்கு ஒரு பாயின்ட் ஃப்ரீயா தரோம். வந்து காப்பாத்துங்க அவங்களை”, என்று நவீன் இன்னமும் சீண்ட, ஜெயந்தி களத்தில் இறங்கினாள்.
வாலிபாலை லேசாக சுழற்றி, இரண்டு தட்டு தட்ட, தானாகவே ஒரு மலர்ச்சி. ஒரு சிறிய புன்னகையுடன், சற்றே தூக்கிப் போட்டு சர்வீஸ் அடிக்க, குத்தீட்டி போல சரியாக இருவர் நடுவில் வந்து தரையை தாக்கியது பந்து.
ஹோ என்று பெண்கள் கூட்டம் ஆர்பரிக்க, “மச்சி… ஏஸ் டா”, என்று நவீனுடன் நின்றவன் சொல்ல, “ரேஞ்ச் தெரியாம இழுத்துவிட்டுட்டோமா..”, என்று பல்லிடுக்கில் கவலையை தெரிவித்த நவீன், மீசையில் மண் ஒட்டாத குறையாக, “ஆங்… ஆரம்பம் நல்லாதான் இருக்கு. அடுத்து பார்க்கலாம்”, என்றான் கெத்தாக.
அடுத்த சர்வ் தொட மட்டுமே முடிந்தது. “க்கா… இப்படி போட்டா, நாங்க என்ன படுத்துகிட்டா சர்வ் எடுக்க முடியும்?”, மற்றொருவன் கத்த,
“ஆஹாங்…. வேணா ஆளுக்கு ஆறடி குழி வெட்டி நில்லுங்களேன்?”, மஞ்சு குதூகலமாக கலாய்த்தாள்.
“சரி… அந்த மாதிரி போடலை”, என்று ஜெய் இந்த முறை மேலாக சர்வீஸ் போட, பந்து சில முறை இங்கேயும் அங்கேயுமாக பறந்தது. பெண்கள் புறம் வர, எகிறி ஸ்மாஷ் அடித்து பாயின்ட்டை பிடித்தாள் மஞ்சு. மீண்டும் ஆர்பரிப்பு.
இவர்கள் போட்ட சத்தத்தில் அருகில் ஆடிக்கொண்டிருந்தவர்களும் வேடிக்கை பார்க்க வர, ஆண்களுக்கு இன்னமும் பிரஷர் கூடியது. கூட்டமும் இரு பாலராகப் பிரிந்து ஊக்கமளிக்க, ஆட்டம் சூடுபிடித்தது.
சஞ்சய், தீக்ஷனாவோடு மோகனும் அங்கே வந்தான். அதில் ஆட்டம் சற்று நிற்கவும், “சஞ்சைண்ணா…. ஜெயந்திக்கா அநியாயத்துக்கு ஆடறாங்க. நீங்க வாங்க, கொஞ்சம் களத்தை லெவல் பண்ணுங்க. மானப் பிரச்சனையாப்போச்சு”, என்று நவீன் வேண்டுகோள் விடுத்தான்.
“டேய்… இப்பதான் வந்தேன்”, என்று சஞ்சய் சொல்ல, “மத்ததெல்லாம் அப்பறம், எல்லா லீடும் போச்சு. இப்ப லெவன் ஆல். விட்டா ஒரே ஆளா எங்களை பொட்டலம் கட்டிடுவாங்க அப்பறம் வருஷம் பூரா அந்த ராட்சசி என்னை வெச்சு செய்வா”, சஞ்சய் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.
ட்ராக், டீஷர்ட்டில் கூட அழகாக இருந்த தீக்ஷனாவை பார்த்துக்கொண்டிருந்த ஜெயந்தி, சஞ்சய் களத்தில் இறங்கவும், “என்ன மஞ்சு, சஞ்சய் நல்லா ஆடுவாரா?”, என்று கேட்கவும், “இதுவும் பாஸ்கெட் பாலும் சூப்பரா ஆடுவார்க்கா”, பதிலளித்தாள். இதில் ஜெய்ந்தி பாராமல் விட்டது, சஞ்சய் எதோ தீக்ஷனாவிடம் சொல்வதும், அது பிடிக்க வில்லையென்றாலும் உதட்டை இழுத்து வைத்து ஒரு புன்னகையோடு அவள் தலையாட்டுவதும்.
ஆட்டம் சூடு பிடிக்க, அனைவருமே கூடிவிட்டனர். ஆண்கள் அணியில் ஒருவன் வெளியேறியிருக்க, இரு டீமும் இப்போது சம பலத்துடன் மீண்டும் ஆரம்பித்தது. ஒவ்வொரு புள்ளியும் போராடித்தான் வந்தது. அதில் ஜெயந்தி கண்டது, சஞ்சய் மற்ற இருவரையும் ஆட விட்டு, அவர்கள் தவறும்போது லாவகமாக அதை ஈடு செய்து, ஆட்டத்தை நகர்த்தியதுதான். எங்கேயுமே நீ நகர் எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற எண்ணமே இல்லை.
மறுபுறம் இருந்தாலும், பெண்கள் அணி விழுந்து புரண்டு பந்தைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கும் ஊக்கமாக குரல் கொடுத்துக்கொண்டிருந்தான். அவளது சர்வீஸ் எடுக்க அவனால் முடியவும், தனது கேமையும் கூட்டினாள் ஜெயந்தி. அதை கண்டு கொண்டவனும் ஒரு சிரிப்புடன், “வாங்க வாங்க… ஒரு கை பார்க்கலாம்”, என்று கூற, தன்னையும் அறியாது “உங்க சரக்கு என்னன்னும் பார்க்கலாம் வாங்க… பிரிங் இட் ஆன்”, என்று கூவினாள்.
அவன் அடுத்து போட்ட சர்வீசை நெட் அருகிலேயே எகிறித் தடுக்க, நவீன் தடுத்தும் எகிறி வெளியே சென்றது. ஆவள் ஆட்டத்தை கைதட்டி சூப்பர் என்பது போல சைகை காட்டினான். ஹோவென்று பெண்கள் கூட்டம் கத்த, ஆண்கள் ஆளாளுக்கு ஐடியா, மிரட்டல் என்று கத்த, இத்தனை களேபரத்தில் யாராலும் கண்டுகொள்ளாமல் நின்ற தீக்ஷனா கண்ணில் கோபம் மின்னியது.