“அட… நான் ஏம்மா சண்டை போடப்போறேன்? தமையாதான்…”, என்றவர் அதோடு நிறுத்தி, “ஆமாம் ஆஃபீஸ்க்கு சஞ்சய் வந்துட்டானா?”
“ஹ்ம்ம்… இன்னிக்குத்தான் வந்தார்.”
“பார்த்து பேசினியா? உனக்கு என்ன தோணுச்சு?”, கொஞ்சம் ஆர்வமாக வந்தது குருபரனின் குரல்.
புருவம் சுருக்கியவள், “என்ன தோணனும்?”
“அது… இப்பதான அவனை நேர்ல பார்க்கற? நல்லா அழகா இருக்கானா?”
சற்று குழப்பமாக பார்த்தவள், “புரியலை. அவர் எப்படியிருந்தா எனக்கென்ன சர்? வேலை விஷயமா பேசினோம். ம்ம்… நான் குடுத்த ஒரு ஐடியாக்கு பாராட்டினார். என் வேலை என்னை ஃப்ரீயா செய்ய விடுறார். வேறென்ன?”
‘வேற என்னவா, நேர்ல பார்த்து பேசியும் ஒன்னும் பத்திக்கலை போலருக்கே..’ ,என்று தலையில் கைவைத்துக்கொண்ட குருபரனை ஜெயந்தியால் பார்க்க முடியவில்லை.
“அது… இல்லம்மா… அந்தப் பொண்ணு… அதான் அமெரிக்காவுலர்ந்து வந்திருக்காளே…”
“ஆமாம் தீக்ஷனா..”
“அதான், சஞ்சைகூட ரொம்ப ஒட்டி உரசராளே… அவங்களுக்குள்ள எதாவது ஓடுதா?”
“ஜெயந்தி… சஞ்சய் எனக்குத் தெரிஞ்ச பிள்ளை. நிரஞ்சன் உன்னை உபயோகபடுத்திக்கிட்ட மாதிரிதான் இந்தப் பொண்ணும் சஞ்சயை, அவன் திறமையை யூஸ் பண்ணிக்கறாளோன்னு ஒரு சந்தேகம். அதுதான் மா கேட்டேன். ஆனா நிரஞ்சனை விட இன்னுமே கொஞ்சம் பூடகமா நடந்துக்கறாளோன்னு ஒரு எண்ணம். மூணு மணிக்கே நேத்து சஞ்சையை கூட்டிட்டு போயிட்டா போல?”
கடந்த இரண்டு நாட்களாக தீக்ஷனா சஞ்சையோடு ஈஷிக்கொள்வது வெளிப்படையாகவே தெரிந்தது. சஞ்சய் அதற்கு பிரதிபலிப்பதும் இல்லை, தடுப்பதும் இல்லை போல தெரிந்தது. அவளுக்கு தேவையில்லாதது என்று ஜெயந்தி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
“அவர் கம்பனி, அவர் வேலை சர். சீக்கிரம் போனா நான் என்ன சொல்ல முடியும்?”
“ஹ்ம்ம்.. உண்மைதான். அது நீ சொல்ல முடியாதுதான். ஆனா என் சந்தேகம் சரிதானான்னு பார்த்து சொல்லுமா? அப்படி எதாவதுன்னா, கொஞ்சம் எனக்காக உன்னால முடிஞ்ச வரை அவனை பார்த்துக்கம்மா?” கோரிக்கை வைத்தார் குருபரன்.
புரியாது முழித்தாள் ஜெயந்தி. “ சந்தேகமாக இருந்தா நீங்க அங்க வந்து பாருங்களேன் சர். நான் போய் பார்த்தா நல்லாயிருக்குமா? நிரஞ்சனையே என் கால்ல விழ வெச்சீங்க, இங்க லேசா தள்ளினாலே அவ போடற ஹீல்ஸ்க்கு காலை சுளுக்கிக்குவா”, புன் சிரிப்புடன் மறுத்தாள்.
அவள் பேச்சில் நகைத்தவர், “அதான் சொன்னேனே, நான் பார்த்த வரை பூடகமாத்தான் நடந்துக்கறா. சஞ்சய் என்ன நினைக்கறான்னே தெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம் இராம்மோகனை விசாரிச்சு பாரேன். சஞ்சய்க்கு அந்தப் பொண்ணு மேல எதாவது எண்ணமிருக்கான்னு அவனுக்குத் தெரியாம இருக்காது.”
அவளுக்கு அத்தனை உதவி செய்தவரிடம் இதற்கு மேலும் மறுக்க முடியவில்லை. “சரி மோகன் கிட்ட கேட்டுப் பார்க்கறேன் சர்”, என்று ஒத்துக்கொண்டாள்.
மறு நாள் பின் மதியம் மீட்டிங் அறையில் சஞ்சய், மோகன் மற்றும் ஜெயந்தி மும்மரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த ஆறு மாதங்களுக்கான பட்ஜெட் விவாதம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓடிக்கொண்டிருந்தது.
“ஹே கைய்ஸ்… இன்னுமா பேசிட்டு இருக்கீங்க?”, ப்ர்ஃபூம் வாசனை முன்னே வர, தீக்ஷனா ஒரு அழகிய ஃப்ராக் போட்டு அசத்தலாக உள்ளே நுழைந்தாள்.
ஜெயந்தியின் பேச்சு தடைபட்டது அவளை சற்றே எரிச்சலூட்டியது.
மோகன் புன்னகைத்து, “இன்னொரு அரை மணி நேரமாவது ஆகும் தீஷா…எதுவும் வேணுமா?”
“வாட்? இப்பவே லேட், சஞ்சய் கமான் யா. படம் ஆரம்பிச்சிடும், எல்லாரும் வந்திருப்பாங்க”, என்று கையை இழுத்தாள்.
புருவம் சுருக்கி சற்றே அதிருப்தியை காட்டினான் சஞ்சய். “தீஷா. நீதான் வெகேஷன்ல இருக்க. நான் இல்லை. நேத்தும் உனக்காக சீக்கிரமே கிளம்பிட்டேன். ஜெயந்தியோட பேசி டிசைட் பண்ண வேண்டியது இருக்கு. கேன் யூ மேனஜ்?”, என்றான் யோசனையாக.
“ம்ப்ச்.. என்ன ஜெயந்தி? உங்க வேலை கரெக்ட்டா பண்ணா இவ்வளவு நேரம் பேச என்ன இருக்கு? ஆப்ஷன்ஸ் ப்ரெசன்ட் பண்ணா சஞ்சய்க்கு டிசைட் பண்ண ஈசியா இருக்கும். அவரே எல்லாமும் யோசிக்கணும்னா நீங்க எதுக்கு ஃபைனான்ஸ் ஹெட்?”
நேற்று அவளுக்காக லன்ச் ஆர்டர் பண்ணமுடியாதென்றதோடு, வேலை இருப்பதாக சொல்லி அதில் கலந்து கொள்ளவும் இல்லை என்ற கடுப்பை இப்போது தீர்த்துக்கொண்டாள் தீஷனா.
ஏற்கனவே இருந்த எரிச்சலோடு இவளது அலட்டலும் சேர்ந்துகொள்ள, உன் வேலையை பார்த்துட்டு போடி என்று சொல்லத் துடித்த நாவை அடக்கி, அவள் புறம் திரும்பவும் இல்லை பதிலும் கூறவில்லை ஜெயந்தி. தன் கணினித் திரையில் கவனைத்தைப் பதித்தாள்.
இவள் புறக்கணிப்பு மேலும் தீஷனாவை சீண்ட, அவள் வாயை திறக்கும் முன், “தீஷா… நீ வா நாம வெளியே பேசலாம். சஞ்சய் அடுத்த ப்ராஜெக்ட்ஸ்க்கான ஃபைனான்ஸ் பட்ஜெட் பார்த்துகிட்டு இருக்கான். அதை அவனே பார்க்கலைன்னா தூக்கம் வராது”, என்று அவளை நகர்த்திக்கொண்டு சென்றான் மோகன்.
அவர்கள் சென்றதும் ஒரு சங்கடமான அமைதி நிலவியது. “அவ பேசினதுக்கு நான் சாரி கேட்டுக்கறேன் ஜெயந்தி. ப்ளீஸ் இக்னோர் இட்”, என்றான் சஞ்சய்.
அதை ஒரு தலையசைப்புடன் கடந்தவள், விட்ட இடத்திலிருந்து அவள் பேச்சை தொடர்ந்தாள். அவள் செயலில் ஒரு சில நொடிகள் அதிர்ந்தவன், மீட்டுக்கொண்டு அவள் பேசுவதில் கவனம் வைத்தான்.
பத்து நிமிடங்கள் கழித்து மோகன் உள்ளே வந்தான். “மச்சி… எரிமலை எப்ப வெடிக்கன்னு காத்துகிட்டு இருக்கு. நான் கூட்டிட்டு போறேன்னு சொன்னதுக்கு என்னை கிழிச்சிட்டா. நீயேதான் வேணுமாம். சீக்கிரம் முடிச்சிட்டு, மிச்சம் நாளைக்கு பார்த்துக்கோ.”
இதற்கு மேல் என்னால் முடியாது என்று மோகன் இருக்கையில் தளர்ந்தான். ஊஃப் என்று காற்றை ஊதி கடுப்பை வெளியேற்றிய சஞ்சை, மாற்று யோசனைகள் சிலவற்றின் சாதக பாதகங்களில் சில மேல் விவரங்கள் கேட்டுவிட்டு, நாளை காலையில் மீண்டும் பேசுவதாக கூறிவிட்டு அடுத்த பத்து நிமிடங்களில் கிளம்பிச் சென்றான்.
ஜெயந்தியின் முகத்தில் கடுப்பைப் பார்த்த மோகன், “சாரி ஜெயந்தி“, என்று அவன் பங்குக்கு சொல்லவும், “பாஸ் இப்படியிருந்தா, வேலை பார்க்கறவங்க எப்படி மோகன் ஒழுங்கா இருப்பாங்க?”, என்று தாளாமல் கேட்டே விட்டாள்.
“உங்க வேலை பாதிக்குது தெரியுது. தீக்ஷனா இன்னும் ஒரு வாரத்துல கிளம்பிட்டா எல்லாம் சரியாகிடும். சஞ்சய் மாதிரி உழைப்பை யாராலும் போட முடியாது. நீங்களே பார்ப்பீங்க ஜெயந்தி”, என்று நண்பனை விட்டுத்தராமல் பேசினான்.
“இரண்டு பேருக்கும் இஷ்டம்னா பேசாம கல்யாணம் செய்துக்க வேண்டியதுதானே?”, என்று குருபரனை நினைத்து கேட்டேவிட்டாள் ஜெயந்தி.
அவளிடம் அப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவன், “சஞ்சய் பத்தின எந்த காசிப் பேச்சும் வேணாம் ஜெயந்தி. நீங்க அந்த மாதிரின்னு நான் நினைக்கலை”, என்றான் ஒரு மாதிரியாக.
குருபரனை மனதில் தாளித்தவள், “சாரி..நான் அப்படி மீன் பண்ணலை. இன்னிக்கு அடுத்து என்னென்ன செய்யப் போறோம்ன்னு ஒரு தெளிவு கிடைச்சா, அடுத்தடுத்து நான் ரெடி பண்றதுக்கு சரியா இருக்கும். கடைசி நேர டென்ஷன் எனக்குப் பிடிக்காது. அவர் பர்சனல் எனக்கு தேவையே இல்லை.”, எழுந்துக் கொண்டவள், “ஆனா தீக்ஷனாகிட்ட சொல்லி வைங்க, ஆஃபீசே அவங்க சொல்லுக்கு ஆடணும்னு நினைச்சா அதுக்கு நான் ஆள் கிடையாது. இன்னிக்கு அவங்க பேசினதுக்கு நான் சூடா திருப்பி தந்திருக்க முடியும். நீங்களும் சஞ்சையும் எங்கிட்ட தனியா மன்னிப்பு கேட்கறதை விட அவங்க முன்னாடி அப்படி பேசக்கூடாதுன்னு சொல்லியிருந்தா தேவலாம். என்னை மட்டம் தட்டணும்னு ஒரு எண்ணம் அவங்ககிட்ட இருக்கோன்னு ஒரு ஃபீல். திரும்ப என்னை பர்சனலா தாக்கினா ….”, என்று மோகனை முறைத்துவிட்டு சென்றாள்.
“ஐயோ…ஐயோ…. இப்படி பொண்ணுங்க ஈகோக்கு நடுவுல மாட்டிகிட்டியேடா இராமா…. அடுத்த ஒரு வாரம் கலவரமா இருக்கும் போலவே…”, மோகனால் புலம்ப மட்டும்தான் முடிந்தது.
அன்று இரவு குருபரனையும் தாளித்துக்கொண்டிருந்தாள் ஜெயந்தி. அவளுக்குத் தெரியாவிடினும் அவரும் தலையை தொங்கப் போட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
“சார்… இருக்கீங்களா இல்லை நான் வெறும் சோஃபாகிட்ட பேசிகிட்டு இருக்கேனா?”, என்று அதட்டவும்,
“இருக்கேன்மா… கிளம்பறச்சே எப்பவும் சொல்லிட்டுத்தானே போவேன்.”, சற்றே சோகமாக வந்தது அவர் குரல்.
“ம்ம்..இது மட்டும் சொல்லுங்க. உங்க பேச்சைக் கேட்டு நாந்தான் மோகன் கிட்ட அசிங்கப்பட்டேன். அவர் போய் சஞ்சய்கிட்ட சொன்னா இன்னும் அசிங்கம்”, ஒரு கையால் முகத்தை மூடிக் கொண்டாள்.
“சஞ்சய்ன்னு பேர் சொல்லிக் கூப்பிடற?”, கொஞ்சம் மலர்ச்சியாகக் கேட்டார்.
அதில் புருவம் தூக்கியவள், “அதில என்ன? அவர்தான் சார் எல்லாம் வேணாம் பேர் சொல்லி கூப்பிடுங்கன்னு சொன்னார். அங்கே எல்லாருமே அப்படித்தான்” என்று சொல்லவும், மீண்டும் காற்றுப் போன பலூனாய் தளர்ந்தார் குருபரன்.
“ம்ம்.. ஆனா கூட ஒரு ஜி, அண்ணான்னுதான மத்த பசங்க கூப்பிடறாங்க?”
“ஓ.. நானும் அண்ணான்னு கூப்பிடணுமா?” என்றதில் பதறியவர், “அட… அப்படில்லாம் இல்லைம்மா..நீ சஞ்சய்னு பேர் சொல்றதை அவன் ஒன்னும் சொல்லலையே அப்படியே கூப்பிடு. உன்னை விட ஒரு மூணு வயசுதான் பெரியவன்”, குருபரன் சொல்ல அதில் என்ன என்பதுபோல தோளை குலுக்கினாள்.
“அது நீ கொஞ்சம் பக்குவமா கேட்டிருக்கலாம். தடாலுனு நேரா கேட்கவும்தான் அந்த மோகன் பய உஷாராயிட்டான் போல”, அவள் கடிந்து கொள்வாள் என்று தெரிந்தும் குருபரன் வாய்விட்டார். அவர் நிலைமை அப்படி. தமயந்தியை சமாளிக்க முடியவில்லை. தீக்ஷனாவை மகன் தேர்ந்தெடுத்துவிடுவானோ என்று பயத்தில் எல்லா கோவத்தையும் இவரிடம் கொட்டிக்கொண்டிருக்கிறார்.
“சர்…. எனக்கு இதெல்லாம் வராது. புறணி பேசறதே பிடிக்காது. என்னைப் போய் இப்படி கேட்கச் சொன்னா? இவ்வளவுதான் முடியும்.” முறுக்கிக்கொண்டாள்.
“ஐயோ… ஐயோ…. இப்படி இரண்டு பொண்ணுங்ககிட்ட நான் மாட்டிகிட்டு முழிக்கறேனே…”, என்று தமயந்தி, ஜெயந்தி இடையில் மாட்டியதில் இராம்மோகனை அடுத்து குருபரனும் மனதிற்குள் புலம்பினார்.