அத்தியாயம் – 6

தி வால்ட்டின் புது ஃபனான்ஸ் சீஃப் பொறுப்பெடுத்து இரண்டு வாரமாகிறது. கங்காதரன் அவள் என்னவோ நேற்றுதான் காலேஜிலிருந்து வெளியே வந்த பெண் போல அரிச்சுவடியிலிருந்து ஒவ்வொரு விஷயமாக சொல்லித் தந்துகொண்டிருந்தார். ஒரு பக்கம் காமெடியாக இருந்தாலும், சில நேரம், சொல்லீட்டீங்களே, நான் பார்த்துக்கறேனே என்று சொல்ல வாய் பரபரக்கிறது.

மோகன் அவள் நிலைமை புரிந்து அவ்வப்போது பேசிச் செல்வான். “அவர் குழந்தை மாதிரி பார்த்துகிட்டு இருந்தார். ஆரம்பிக்கும்போது எங்களுக்கு நம்பிக்கையானவர் வேணும்னு சொன்னதும், செஞ்சிகிட்டு இருந்த வேலைக்கு வி.ஆர்.எஸ் குடுத்துட்டு எங்களோட வந்துட்டார். அப்ப இது சக்சஸ் ஆகுமான்னு கூட தெரியாது. ஆனாலும் எங்க மேல நம்பிக்கை வெச்சு வந்தார்”, என்று கதை சொல்லுவான். இத்தனைக்கும் உறவு இல்லை. சஞ்சய் அப்பாவின் தோழர், அவர்களின் பக்கத்து வீடு. சிறு வயதிலிருந்து தெரியும். இராம்மோகனும் காலேஜிலிருந்து உற்ற தோழனாய் சஞ்சயின் வீடு செல்வதில் கங்காதரனுக்கும் பழக்கம், அவன் விளையாட்டுத்தனத்தில் அவன்மேல் பிடித்தமும் கூட.

சஞ்சய் அமெரிக்காவில் ஒரு புது கிளையண்ட் பார்த்து அவர்களுக்கான பிசினஸ் பிடிக்க இரண்டு வாரமாக அங்கேயே இருக்கிறான். இவள் வந்த அன்று கிளம்பியிருந்தான். தினமும் மோகன் மதியத்திற்கு மேல் இவளை அழைத்து பேசுவான். அடுத்த நிலைக்கு கம்பனியை எப்படி எடுத்துப் போகப்போகிறார்கள், அதற்கான செலவுகள், தேவையான பணம், அதை பிரட்ட வழிகள், என்று அலச அவள் ஆர்வத்தை அதுதான் தக்க வைத்திருந்தது.

கங்காதரன் டாலியில் ஏற்றி வைத்ததை எப்படி ரிப்போர்ட் எடுத்து தரவேண்டும், அதை எப்படி சரிபார்க்க வேண்டும் என்று முடித்த நேரம், “மாமா.. சஞ்சய் ஒரு ப்ரபோசல் ரெடி பண்ணச் சொல்றான்”, என்று வந்து நின்றான் இராம்மோகன்.

“பேஷா பண்ணலாமேடா”, என்றவர் விவரங்கள் கேட்டறிய, ஜெயந்தியும் கூர்ந்து கவனித்தாள். அவரது வழக்கமான பாணியில் கங்காதரன் செய்ய, அவருக்கு வேண்டிய தரவுகள் எடுத்துக் கொடுத்தபடியே, அதை டாப்ளூவிலும் செலுத்தி விதவிதமாக சார்ட்டுகள் செய்ய, தரவுகள் சொல்லும் செய்தியை கணித்து சொல்ல என்று உதவினாள். மணி ஏழாக, டின்னர் ஆர்டர் செய்திருந்தான் மோகன்.

ப்ரேக் எடுத்து சாப்பிடுவோம் என்று வேலையை நிறுத்தி மீட்டீங் அறையில் உணவை கடை பரப்பியிருந்தார்கள்.

“சாரி ஜெயந்தி, வந்த உடனேயே உங்களை லேட்டா வேலை பார்க்க வெக்கறோம்”, என்று வருத்தம் தெரிவித்தான் மோகன்.

“நீங்களும்தானே கூட வேலை பார்த்துகிட்டு இருக்கீங்க, ப்ரப்போசல்னா டைம் ஆகும்தானே”, ஜெயந்தி சொல்லவும்,

“ரொம்ப சூட்டிகையான பொண்ணு மோகன். சட்டுன்னு சொல்ல வரதை பிடிச்சிகிட்டு அதுக்கேத்த டேட்டா குடுக்கறா. காஸ்டிங் பண்றது சுளுவாக்கிட்டாடா”, மனதார பாராட்டும் கங்காதரனை புன்னகையோடு பார்த்திருந்தாள்.

“ஹ்ம்ம்… உங்க சார்ட்டெல்லாம் வேற லெவல் ஜெயந்தி. இன்னும் ஒரு மணி நேரம், சஞ்சையை கூப்பிட்டு காட்டிடலாம்.

அதன் படியே ஜூம் வழியே சஞ்சையிடம் அவர்கள் தயாரித்திருந்த ப்ரோபோசலை விவரித்தான் மோகன். ஆகும் செலவுகள் பற்றிய பகுதி வரவும், கங்காதரன், “ஜெயந்தி நீயே பேசு, தேவைபட்டா நான் சொல்றேன்”, என்று சொல்லவும், நறுக்கு தெரித்தார் போல தெளிவான ஆங்கிலத்தில் எளிமையாகவே விவரித்தாள்.

கங்காதரன் இடையிடவே இல்லை. சஞ்சையின் முகத்திலும் ஒரு திருப்தி. அவள் பேசி முடிக்கவும் மோகனின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை.

“சஞ்சய், ஜெயந்தி பேசற இங்கிலீஷ் உன்னுதை விட நல்லாருக்குடா. இப்பதான் என் மனசுக்கு திருப்தியா இருக்கு”, என்று இடை புக, சஞ்சையின் முகத்தில் புன்முறுவல்.

“நீயும் மாமாவும் பேசிற இங்லீஷ்க்கு நானே திரும்ப இங்லீஷ்ல ட்ரான்ஸ்லேஷன் பண்ற கொடுமையை இப்ப ஜெயந்திக்கு கைமாத்தி விட்டுடலாம். என்ன ஜெயந்தி, புதுசா வந்திருக்கறதால, நீங்கதான் இந்த பொறுப்பை எடுத்துக்கணும், சரியா?”, என்று கேட்க இவர்கள் நிஜமாகவே சொல்கிறார்களா அல்லது கிண்டல் செய்கிறார்களா என்று பிரித்தறிய முடியாது  முழித்தாள்.

அதில் மோகன் பெரிதாய் சிரிக்க, “டேய், பாவம்டா அந்த பொண்ணு. உங்க அரட்டல் எல்லாம் என்னோட நிறுத்திக்கோங்க. நீ தப்பா  நினைக்காதேம்மா”, என்று அடக்கினார் கங்காதரன்.

“ஜோக்ஸ் அபார்ட் ரொம்ப நல்லா ப்ரெசென்ட் பண்ணீங்க ஜெயந்தி. நாளைக்கும் நீங்களே பேசுங்க. மோகன் சொன்னான், அந்த சார்ட் எல்லாம் டாப்ளூல ரெடி பண்ணீங்கன்னு? ரொம்ப ப்ரோஃபெஷனலா வந்திருக்கு. நாளைக்கு கிளையன்ட் மீட்டிங்ல”, என்று மேலும் விவரங்கள் பேசத் தொடங்கினான்.

பன்னிரெண்டு மணி நேர வித்தியாசத்தில் அவன் இருக்க, மீட்டிங் மறு நாள் இந்திய நேரம் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்தது. மதியம் மூன்று மணிக்குத்தான் இவள் அலுவலகம் வந்ததே.  காலையில் வந்தால் முகம் சோர்வாக இருக்கும் எனவே மதியம் வந்தால் போதும் என்று மோகன் தெளிவாகவே சொல்லி அனுப்பியிருந்தான்.

இவர்களுடன் பேசும்போது டெக்னிகல் பக்கம் போகவில்லை. ஆனால் கிளைன்ட்டின் முன் அவர்கள் பிரச்சனைக்கான தீர்வு எப்படி இருக்க வேணடும், அதற்கு வால்ட் என்ன செய்யும் எவ்வளவு நாட்களில் செய்யும் என்று சஞ்சய் பேச ஜெயந்திி கூட வாய் பிளக்காத குறையாகக் கேட்டிருந்தாள். அழகான ஆங்கிலத்தில் தெளிவான உச்சரிப்புடன் பேசுபவனது ஆளுமை அவன் பேசும் விஷயத்தில் அவனுக்கிருந்த நம்பிக்கை எல்லாம் பார்த்தவள்,  நிரஞ்சன் காட்டும் வாய் ஜாலத்திற்கும், நிஜமான விஷய ஞானமுள்ளவன் பேச்சிற்குமான வித்தியாசத்தை இப்போது கண்டுகொண்டாள்.

அடுத்து மோகன் அவர்கள் கம்பனியின் சேல்ஸ் மற்றும் செயல்பாடுகள் என்று பேசப் பேச, ‘ஏன் இவன் ஆங்கிலத்திற்கு என்ன குறை, நேற்று வேண்டுமென்றுதான் என்னை கிண்டல் செய்திருக்கிறார்கள்’ என்று புரிந்து புன்னகை பூத்தாள்.

இவனும் பேசி முடிக்கும்போது, கிளையன்ட் பக்க ஆட்கள் கேட்ட கேள்விகளுக்கு அசராது பதிலளிக்க சஞ்சைக்கு சற்றும் குறைவில்லாத திறமைசாலி என்று புரிந்தது. அவனது இலகுவான தன்மையும், ஜாலியான பேச்சுகளும் பார்த்து சற்று சாதாரணமாக எண்ணியிருந்த நினைப்பை மாற்றிக்கொண்டாள்.

அடுத்து இவள் முறை வந்தது. திறம்பட பேசி முடித்தாள். முதலில் கொஞ்சம் டென்ஷன் இருந்தாலும் பேசப் பேச இலகுவாகிவிட்டாள். முடிக்கவும் அவர்கள் பக்கத்து கேள்விகள் வர, நிதானமாகவே விளக்கினாள். இதற்கு ஏன் இவ்வளவு என்பது போன்ற சில கேள்விகளுக்கு மட்டும் சஞ்சய் பதிலளித்தான்.

ஒரு வழியாக மீட்டிங் முடியவும், “நல்லா பண்ண ஜெயந்தி. இந்த தொழில் உனக்கு பிடிபட்டிடுச்சுன்னா  சஞ்சய் பதில் சொல்ல வேண்டியிருக்காம அதுக்கு நீயே பதில் சொல்ல ஆரம்பிச்சிடுவ. டொண்ட் வொர்ரி”, என்று மோகன் பாராட்டினான்.

“அதெல்லாம் கற்பூர புத்தி.  இன்னும் இரண்டு ப்ரபோசல் மீட்டிங் பேசினாள்னா உங்களையே தூக்கி சாப்பிட்டுடுவா”, என்று கங்காதரன் பாராட்டினார்.

ஜெயந்தியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. இந்த பாராட்டு, அங்கீகாரத்திற்குத்தானே அங்கே பஞ்சமாகியிருந்தது. அந்த மகிழ்வுடனே வீட்டிற்கு சென்றாள்.

“ஜெயந்திமா… ரொம்ப திருப்தியா இருந்துச்சுமா நீ பேசினது. உன் முகத்தை பார்த்தாவே தெரியுது, உனக்கும் மகிழ்ச்சிதானே”, குருபரன் குரல் கேட்டது.

“நீங்களும் இருந்தீங்களா சர்? ஆமாம், மோகன் கூட செம்ம ஷார்ப்புன்னு இன்னிக்குத்தான் புரிஞ்சுது. நல்ல ஒரு டீம் கூட வேலை பார்க்கும்போது சந்தோஷம் இல்லாம இருக்குமா சர். எனக்கென்னமோ கண்டிப்பா இந்த ஆர்டர் எங்களுக்கு கிடைக்கும்னுதான் தோணுது.”, மகிழ்ச்சியுடனே பேசினாள்.

“ஹ்ம். அந்த சஞ்சய் பத்தி என்ன நினைக்கற? நீ சேர்ந்த போ அவன் கிளம்பிட்டான். இப்பதானே அவனைப் பார்குற?”

நெற்றியை சுருக்கியவள், “அவர் பேசவும்தான் நிஜமா விஷயமுள்ளவங்க பேச்சுக்கும், சீன் போடற நிரஞ்சன் மாதிரி ஆளுக்கும் வித்தியாசம் புரியுது சர்.”

“ம்ம்… அதெல்லாம் மூளைக்காரன். மத்தபடி அவன் சுபாவம் பத்தி?”

“அதைப் பத்தி என்ன சார்? தேவையில்லாத பேச்சு இல்லை. குட். என் மேல நம்பிக்கை வெச்சு உடனே வாய்ப்பு தந்தார். அதை காப்பாத்தினேன்னு நினைக்கறேன்.”

 குருபரன் கண்ணை உருட்டுவது அவளுக்குத் தெரியவில்லை. “ஹ்ம்..இந்த தமையாகிட்ட என்னன்னு சொல்லுவேன்? அவ என்னைப் பார்த்ததும் படபடப்பு வந்துச்சு எனக்கு, அவளுக்கு பட்டாம் பூச்சி பறந்துச்சு. இங்க என்னன்னா இரண்டு பேருக்கும் ஒன்னும் ஆவக்காணோம். ஹ்ம்ம் ஒரு வேளை நேர்ல பார்த்தாத்தான் வருமா? இந்தப் பய வரதுக்குள்ள தமையாவ எப்படி சமாளிக்கப்போறேனோ!”, அவர் புலம்பலோடு சென்றார்.

ஆம் தமயந்தி மகன் தான்  சஞ்சய். அவனுக்குப் பெண் கேட்டுத்தான் ஜெயந்தியிடம் சென்றார் குருபரன். அவளது முழு முதல் எதிர்ப்பில், அதைக் கூறாமல் விடுத்து, வேலை வாங்கிக் கொடுத்தார். இருவரும் ஒன்றாக இருந்தால் பிடித்தம் ஏற்படும் என்ற எண்ணம்.

மெல்ல மெல்ல அலுவலக மக்களை அறிமுகம் செய்துகொண்டாள். கங்காதரன் தவிர்த்து, அனைவருமே இளைஞர் படைதான். ஆண் பெண் கிட்டதட்ட சரி சகவீதமாக இருந்தனர். கலகலப்பாகவே பழகினர். கங்காதரன் விடை பெறும் நாள். “நீங்க கிளம்பிட்டா இந்த பசங்கல்லாம் இங்க அடங்காம ஆடுவாங்களே சார்”, என்று டெக்னிகல் டீம் மஞ்சு சொல்ல, “ஆமாம், பொண்ணுங்க நீங்கல்லாம் அப்படியே வேலையே கதின்னு இருப்பீங்க. நம்பிட்டார் சார்”, என்று இடை புகுந்தான் அவளுடன் வேலை பார்க்கும் நவீன்.

வந்த ஸ்னாக்ஸ் ஐட்டமெல்லாம் ஒரு பிடி பிடித்துக்கொண்டே ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டிருந்தனர். “இவங்களையெல்லாம் நீதான் மா மேய்க்கணும். இப்படி ஜாலியா இருக்கவங்க, திடீர்னு சண்டையடிச்சுக்குவாங்க. சஞ்சய் இருந்துட்டா யார் சரி, யார் தப்புன்னு தீர்ப்பு சொல்லிருவான். மோகனுக்கு இந்த டெக்னிகல் சமாச்சாரம் டீப்பா தெரியாது. விடாக்கண்டன் கொடாக்கண்டனா இரண்டு பக்கமும் நிக்குங்க !”