முகத்தை சுளித்தவள், மீண்டும் ஒரு முறை நடந்ததைக் கூற, அஞ்சலிக்கு குறையாது குருபரனுக்கும் கோவம் வந்தது.
“அந்த புள்ளபூச்சியை சும்மா விடக்கூடாது ஜெயந்திமா. அங்க நான் இல்லாமப் போயிட்டேன!”, என்று வருந்த,
“ஏன், மறுபடி பார்த்தியை நிரஞ்சன் மேல தள்ளிவிட்டிருப்பீங்களா சர்”, என்று கேட்கும்போதே சிரிப்பு வந்தது ஜெயந்திக்கு.
அதில் சிரித்தவர், “ஏன், நிரஞ்சன் தலையில் ஓங்கி குட்டியிருந்தா, அவன் பார்த்தின்னு நினைச்சு குதறியிருக்க மாட்டானா?”, என்று கேட்க, ஜெயந்தி சத்தமாகவே சிரித்துவிட்டாள்.
“நான் ரிசைன் பண்ண போன நேரம், பார்த்தி நிரஞ்சன் ரூமுக்குப் போய் ஏதோ சொல்லவும், குதறிதான் அனுப்பினாராம், அஞ்சலி சொன்னா”, என்று சொல்லவும், “இருக்கட்டும். என் பங்குக்கு நானும் எதாவது செய்யணும். செய்யறேன்.”, என்று கறுவினார்.
“சார்… இது என்ன வில்லனாட்டம்? விடுங்க”, என்று சமாதானம் செய்தாள்.
“ம்ப்ச்… நான் நேரமே உங்க ஆஃபீஸ் வந்திருப்பேன். இந்த தமையாதான் பிடிச்சிகிட்டா”, என்று குறைபட்டுக்கொண்டார்.
அதில் இன்னும் புன்னகை மிளிர, “என்ன சொல்றாங்க உங்க கேர்ள் ஃப்ரெண்டு?”
“ஹ்ம்ம்… என்னத்தை சொல்லுவா? புள்ளை கல்யாணம் பத்திதான் புலம்பல். அவனை அதட்டி கல்யாணம் பண்ண சொல்லக்கூட யாருக்கும் அக்கறை இல்லைன்னு பிழியப்பிழிய அழுகை.”
“அடடா…நான் கூட நீங்க கடலை போட்டதாலதான் வரலையோன்னு நினைச்சிட்டேன்”, கிண்டலாகப் பேசவும், சற்றே சிரித்தவர்,
“உன் வயசுக்கு நீயே யார்கூடவும் கடலை போடலை , இதுல 60 வயசுல நான் எங்க போட?” என்று அவளை வாரினார்.
“பேசுங்க சார். ஆவியா இருக்கற 60ஸ் கிட்டுக்குக் கூட கேர்ள் ஃப்ரெண்டு இருக்காங்க, எனக்கு அதுக்குக் கூட லக் இல்லை. பிடிக்குதோன்னு நினைச்சவன் கூட யூஸ் அண்ட் த்ரோவாதான் நினைச்சான்”, பெருமூச்சு விட்டாள்.
“அட ஜெயந்திமா…அவன் கிடக்கறான். விட்டுத் தள்ளு. அடுத்தவங்க மேல சவாரி செஞ்சு முன்னேற நினைக்கற எவனும் நல்லா வரமாட்டான். நாளைக்கு நீ கெத்தா ஆஃபீஸ் போ.”
குருபரன் அப்படி சொன்னபோது ஒரு முடிவுடன்தான் சொன்னார் என்று தெரியவில்லை. மறு நாள் அலுவலக கிச்சன் ஏரியாவில் இவள் நுழையும் நேரம் பார்த்தி காஃபி மெஷினிலிருந்து காப்பியை எடுத்துக்கொண்டு திரும்ப, குருபரன் சேட்டையில், சட்டென்று அவன் கை ஆட, சூடான காஃபி அவன் மேலேயே கொட்டியது.
“ஆ..”, என்ற அலறலில் இவளும் அருகில் வந்து கொண்டிருந்த இருவரும் பார்க்க,
சூடு தாங்காமல், வேகமாக சிங்கின் புறம் திரும்பி குழாயைத் திறந்தான். தண்ணீர் சட்டென்று பீய்ச்சி அவன் இடுப்பில் அடிக்க ஒரு அடி நகர்ந்தாலும், சுதாரித்து குழாயை மூடுவதற்குள்அவன் பான்ட்டின் முன் புறம் முழுதுமாக நினைத்துவிட்டது
“வாட் ரப்பிஷ்? இது என்ன உங்க வீடுன்னு நினைச்சீங்களா பார்த்திபன்? பக்கத்துல லேடி ஸ்டாஃப்ஸ் இருக்க, இப்படித்தான் அசிங்கமா பேசுவீங்கா?”, என்று ஒரு காட்டு காட்ட,
சூடான காஃபி பட்ட எரிச்சல் குறையாதிருக்க, அவர் புறம் திரும்பியவனைப் பார்த்தவர், நினைந்த பாண்ட்டும் அவன் காலடியில் இருந்த நீரையும் பார்த்து, “ஓ காட், அவசரம்னா பாத்ரூம் போகாம, பான்ட்ரில நின்னுகிட்டு என்ன செஞ்சு வெச்சிருக்கீங்க? மெடிகல் பிரச்சனைன்னா டயாப்பர் போட வேண்டியதுதான?”, என்று கத்தவும், புதிதாக வேலை பழக இன்டெர்னாக சேர்ந்திருந்த இரண்டு காலேஜ்வேறு பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வேறு வாயை மூடிக்கொண்டு சிரிக்கவும், பார்த்தியின் முக பாவனையும், சிவகாமி மேடத்தின் பேச்சையும் கோவத்தையும் பார்த்தவளுக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“இ…ல்.. இல்ல மேம் இது அது இல்லை”, பார்த்தி திணற,” தலையை குனிந்தவள் வேகமாக அவ்விடத்தைவிட்டு நகர அஞ்சலி அப்போதுதான் உள்ளே நுழைந்தாள். அவளையும் வேகமாக அழைத்துக்கொண்டு மீட்டிங் ரூம் சென்றவள் கடகடவென்று சிரிக்கவும், அவளை வினோதமாக பார்த்த அஞ்சலி , “என்னடி சிரிப்பாணி பொத்துகிட்டு வருது”, என்று கேட்க, கண்ணில் பெருகியிருந்த கண்ணீரை சுண்டிவிட்டு, திக்கித் திணறி நடந்ததை சொல்லவும், “பாவி மகளே, அந்த கண்கொள்ளா காட்சியை நான் பார்க்கவிடாம இழுத்துட்டு வந்திட்டியே..”, என்று அஞ்சலி வேகமாக வெளியேறினாள்.
கிச்சன் தரையை மாப் போட்டுக்கொண்டிருந்தார் ஹவுஸ்கீப்பிங் ஆள். சோகமாக வந்து அமர, எல்லார் பேச்சும் பார்த்தியைப் பற்றிதான் இருந்தது. கால் மணி நேரம் கழித்து முகம் செத்துப்போய் அவன் இருக்கைக்கு வந்தான் பார்த்தி. சட்டை லேசான காஃபி கரையுடன் இருந்தது. தண்ணீர் விட்டு கழுவியிருப்பான் போல. பிழிந்ததில் சுருக்கம் இருந்தது. பாண்ட் ஈரம் போக்கவும் முயன்றிருப்பான் போல, ஆனாலும் முன் பக்கம் முக்கிய இடத்தில் ஈரம் இருக்க, டக் செய்திருந்த ஷர்ட் இப்போது வெளியே விட்டு மறைத்திருந்தான். ஆனாலும் தொடைப்பக்கமிருந்த ஈரம் காட்டிக்கொடுத்தது. அன்று பார்த்து டார்க் கலர் பாண்ட் போடாது, லைட் காக்கி நிற கார்கோ பாண்ட் போட தண்ணீர் கறை அப்பட்டமாக தெரிந்தது அவன் துரதிர்ஷ்டமே.
“என்ன பார்த்தி? எந்த பொண்ணுகிட்டயாவது ப்ரபோஸ் பண்ணி, கோவத்துல காஃபியை ஊத்திட்டாளா? இப்படி ஈரமா வந்திருக்க?”, என்று அஞ்சலி துக்கம் விசாரிப்பது போல கலாய்க்க, முகம் சிவந்து, ஒற்றை விரலை அவள் புறம் நீட்டியவன், “ஏய்…”, என்று மிரட்ட, அங்கே வந்த காலேஜ் பெண்களிடம், “ஹேய் உங்களுக்கு எதுவும் தெரியுமா பொண்ணுங்களா?”, என்று அவர்கள் பக்கம் போனாள் அஞ்சலி. பல்லைக் கடித்தவன், நேராக நிரஞ்சன் இருந்த காபினுக்குள் சென்றான்.
இருவரும் பேச, நிரஞ்சன் கடுப்பாகி எதோ பேசுவது தெரிந்தது. ஜெயந்தி அவள் இருக்கையில் அமர, காதோரம், “நாந்தான் ஜெயந்திமா. இவனுங்களுக்கு இன்னும் இருக்கு பாரு”, என்று குரல் கேட்டது. “அச்சோ”, என்று முனகினாலும் குருபரனின் இந்தச் செயலில் சற்று நெகிழ்ந்திருந்தாள்.
வெளியே சென்றவன் அரை மணி நேரம் கழித்து வேறு ஒரு புது பாண்ட் சர்ட் போட்டு வந்தான். அருகிலிருந்த மாலுக்கு சென்று வாங்கியிருப்பான் போல.
“சே…கமல் மாதிரி நிமிட்டுக்கு நிமிட் காஸ்ட்யூம் மாத்தறீங்க பார்த்தி…யாரை கரெக்ட் பண்ண இது?”, அஞ்சலி அவன் வந்ததும் ஆரம்பிக்க, நெற்றிப் பொட்டை அழுத்தியவன், பதிலே பேசாமல் அவன் இருக்கைக்கு சென்றான்.
நிரஞ்சன் கேபின் கதவைத் திறந்தது, “ஜெயந்தி ஒரு நிமிஷம்”, என்று உள்ளே அழைத்தான். அதில் விறைத்து நின்றவள் நிரஞ்சன் அறை நோக்கிச் சென்றாள்.
“உட்கார் ஜெயந்தி. ரிசைன் பண்ணிட்டன்னு எச்.ஆர்ல சொன்னாங்க. இது அவசர முடிவு. நீ திரும்ப ரீ-கன்சிடர் பண்ணு. அது நான் எதுவும் தப்பா பேசியிருந்தா, அது… வேணும்னு இல்லை. ஒரு மானேஜரா என் ஸ்டாஃபோட ப்ளஸ் மைனஸ் எதுன்னு தெரிஞ்சு அதுக்கேத்த மாதிரி வேலை பிரிச்சு குடுத்தேன். உனக்கு அது நியாயமா படலைன்னா எங்கிட்ட வந்து பேசியிருக்கலாம். இங்க உனக்கு ஒரு நல்ல கரியர் இருக்கு”, வழக்கமான கார்ப்பரேட் புராணம். அவன் இறுதியாக பேசியிருந்த வேவ்லெங்க்த் பற்றி தொடாமல் மற்றதை பேசினான்.
அசுவாரசியமாக பார்த்திருந்தாள். “எனக்கு அப்படி தோணலை நிரஞ்சன். இங்க இந்த இடத்துலேயே தேங்கி இருக்கற மாதிரிதான் இருந்துச்சு. என்னோட உழைப்பை எடுத்துகிட்டு அதுக்கான அங்கீகாரம் இல்லாதப்போ முன்னேற வழியில்லைன்னு புரிஞ்சுது. வேற வேலைக்கான ஆஃபர் இருக்கு அதை அக்செப்ட் பண்ணிட்டேன்.”
“அதுக்குள்ள வேற வேலை கிடைச்சுதா? அப்போ முன்னாடியே தேடிகிட்டு இருந்தியா? நான் என்னவோ என்னாலதான் இந்த முடிவுன்னு நினைச்சிட்டேன்”, கொஞ்சம் அதிர்வுடன் கூறினான்.
“அஃப்கோர்ஸ் உங்களாலேயும் பார்த்தியாலேயும்தான் இங்க எனக்கு சரிப்படாதுன்னு தோணுச்சு. ஆனா நேத்து நடந்தது, நான் ஏற்கனவே நினைச்சதை ஜஸ்ட் சீக்கிரம் நடத்த வெச்சுது அவ்வளவுதான்”, என்று எழுந்து வந்தாள்.
வெளியே வரும் வழியில் காதருகே, “இவனை… வெளிய வரட்டும் என்ன செய்யறேன்னு பார்”, என்று குருபரனின் குரல் கேட்டது.
நிரஞ்சன் அமைதியாக மெயில் பார்க்க, காதருகே ஒரு ஆணின் குரல், “நீயெல்லாம் நாயைவிட கேவலம்டா. அந்த பொண்ணு உழப்பை வெக்கமே இல்லாம சுரண்டுனது நீ” என்று ஒலிக்க சட்டென்று எழுந்து நின்று சுற்றிமுற்றிப் பார்த்தான்.
“சே…”, என்று தலையை உலுக்கி, ‘என்ன நம்ம மனசாட்சி பேசுதா? அதெல்லாம் பேசாதே ‘, என்று யோசித்தான்.
“செய்யற பிக்காலித்தனமெல்லாம் செஞ்சுட்டு எப்படிடா தூங்க முடியுது உன்னால? ஒரு அப்பாவி பொண்ணு மனசை கலைச்சு, அவகிட்ட சக்கையா வேலையை வாங்கிட்டு நீ பாட்டு வெக்கமேயில்லாம சுத்தி வந்த. இந்த பொழைப்பு பொழைக்கறதுக்கு ரோட்டுல பிச்சை எடுக்கலாம்”, மீண்டும் குரல் காதோரம் வசைபாட,
“டாமிட்”, என்று இரு காதுகளையும் பொத்திக்கொண்டு நிரஞ்சன் எழுந்து நின்றது கண்ணாடி தடுப்பு வழியாக பார்க்கவும் லேசாக கேட்கவும் முடிய ஜெயந்தி, அஞ்சலி உட்பட அருகிலிருந்தவர்கள் வினோதமாகப் பார்த்தனர். தலையை இல்லை என்பதாக ஆட்டிக்கொண்டிருந்தான்.
“நம்ம மம்முதனுக்கு என்னடி ஆச்சு? மறை கழண்டு போச்சா?”, அஞ்சலி கிசுகிசுக்க தோளை குலுக்கினாள் ஜெயந்தி. நிரஞ்சனுக்கு அவள் வைத்த பெயரைக் கேட்டு ஒரு குறு நகை அரும்பியது.
அங்கே நிரஞ்சனுக்கு வியர்த்துக் கொட்டியது. “இதென்ன சிவகார்த்திகேயன் படம் மாதிரி எனக்கும் எதோ குரல் கேட்குது”, என்று நினைத்தவன், பார்த்தியை கையாட்டி உள்ளே அழைத்தான்.
பார்த்தி உள்ளே வந்ததும், “உட்கார் பார்த்தி. கொஞ்சம் நேரம் சைலன்ட்டா இரு. எதாவது சத்தம் கேட்குதான்னு பாரு”, எனவும் நிரஞ்சனை ஒரு நொடி பார்த்தவன் உன்னிப்பாக கவனித்தான். அமைதியாக இருந்தது. அந்தே நேரம் பார்த்தி போன் அடிக்க, அதை அவசரமாக எடுத்து அணைக்கும் நொடிப் பொழுதில்,
நிரஞ்சன் காதருகே அந்தக் குரல், “ஏய்…நீ ரொம்ப அழகா இருக்க..ஆங்”, என்று இழுக்க, “ஏய்…”, என்று கேவலமான கெட்ட வார்த்தைகளை உதிர்த்து கோபமாக எழுந்து கொள்ள, “சா…ச்சர்”, என்று அதிர்ச்சியில் தடுமாறி எழுந்து நின்றான் பார்த்தி. என்ன கோவம் வந்த போதும் இப்படியான வார்த்தைகளில் நிரஞ்சன் திட்டியதில்லை. இப்போது ஒரு போன் வந்ததற்கா என்று அதிர்வில் இரண்டடி பின்னால் செல்ல,
கை நீட்டி அவனை நிறுத்திய நிரஞ்சன், மீண்டும் தலையை பிடித்தபடி, “உன்னை இல்ல பார்த்தி… அது..அது..”, என்றவன் எனக்கு அசரீரியாக குரல் கேட்கிறது என்று சொல்ல முடியாமல், “ நத்திங். இது வேற டென்ஷன். நீ போ” என்றவன், அடுத்த நொடியே, “இல்ல, வா கான்டீன் போய் காஃபி சாப்பிடலாம்”, என்று அழைத்துக்கொண்டு சென்றான். சற்று மிரட்சியாகவே நிரஞ்சன் பின்னால் நடந்தான் பார்த்தி.
குருபரன் “உடனே பிரின்டிங் ரூம் போ ஜெயந்தி”, என்று சொல்லவும் தட்ட முடியாது எழுந்தவள் முன்னே வர, நிரஞ்சனும் பார்த்தியும் எதிரில் வந்துகொண்டிருந்தார்கள்.
காஃபி சாப்பிட போனதிலிருந்து குரல் கேட்காததில் சற்று நிம்மதியான நிரஞ்சன் பார்த்தியிடன் ஏதோ பேசியபடியே வர, அடுத்த நொடி என்ன ஆனது என்று தெரியவில்லை, தடுக்கியவன் காற்றில் கைகள் அளைய பொத்தென்று முன்புறமாக ஜெயந்தியின் கால் அருகே விழுந்தான்.
“ஐயோ” என்று ஓரடி பின்னே வந்தாள் ஜெயந்தி. “அச்சோ!”, என்று பார்த்தி வரவும், நிரஞ்சனே மெல்ல எழுந்து அமர்ந்தான். அங்கிருந்த மற்றவர்களும் சூழ்ந்து கொண்டு ஆளாளுக்கு விசாரிக்க, மெல்ல விலகி வந்தாள் ஜெயந்தி.
“குரு சர். போதும் நீங்க கிளம்புங்க. ப்ளீஸ்”, என்று கட்டளையாகவே கூறினாள்.
“எல்லாரும் பார்க்க உன் கால்ல விழுந்திருக்கான். இப்போதைக்கு போறும்”, என்று திருப்தியான குரலில் அவர் பதில் வந்தது.
ஒரு பெருமூச்சுடன் சுற்றிக்கொண்டு தன் இருக்கைக்கு வர, அஞ்சலி, “என்னடி உன் கால்ல இப்படி பொத்துன்னு விழுந்து வெச்சிருக்கான்”, என்று நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
“ஏய்…நீயா புதுசா எதையாவது கிளப்பி விடாத அஞ்சலி”, என்று அதட்டினாள் ஜெயந்தி. முகம் கன்றிப்போய் அவன் இருக்கைக்கு சென்றிருந்தான் நிரஞ்சன்.