அத்தியாயம் – 5

அலுவலகம் அமைதியாக இருந்தது.   நிரஞ்சனும் பார்த்தியும் இல்லாததில் மூன்று வாரங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த வேலைகளை முடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டிருந்தாள் ஜெயந்தி.

இருவரும் அவளிடம் நேற்றிலிருந்து பேசவில்லை. விட்டதடா தொல்லை என்று இவளும் கண்டுகொள்ளவில்லை. நிரஞ்சன் ஏதோ விவரம் ஈமெயில் வழியாக கேட்டிருக்க, அவளும் அதன் வழியே அனுப்பியிருந்தாள்.

பின் மதியம் போல் மீட்டிங் என்று நிரஞ்சன் அழைத்திருந்தான். அவன் காபின் இல்லாது, சிறிய மீட்டிங் ரூம் ஒன்றில் நடக்கவிருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே உள்ளே செல்ல அங்கே நிரஞ்சன், பார்த்தி இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

“வா ஜெயந்தி…டேக் அ சீட்”, என்று அழைத்தான் நிரஞ்சன். “நான் நேர விஷயத்துக்கே வரேன். என்ன உங்க இரண்டு பேருக்கும் உள்ள பிரச்சனை? ஏன் ஈகோ ஜெயந்தி?”

அவனோடு தனியே பேசியவன், தனக்கும் அந்த மரியாதையை தராமல்,  நேரடியாக விசாரணையில் இறங்கியதே அவளுக்கு கடுப்பை கிளப்பியது.

“அதுதான் இவ்வளவு நேரம் பார்த்திகிட்ட பேசியிருக்கீங்களே சர். சொல்லியிருப்பாரே?”, முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் பதிலளித்தாள்.

“அவர் சொன்னது இருக்கட்டும். நான் உங்ககிட்ட கேட்கறேன்”, என்றான் நிரஞ்சன்.

“நீங்களே எனக்கு ஈகோ, பார்த்தியோட கசப்புன்னு முடிவு செஞ்சிட்டு கேட்கறீங்க. அப்ப ரீசனும்  நீங்களே முடிவு செய்திருப்பீங்களே”

“ம்ப்ச்… இது…இதுதான் ஜெயந்தி இஷ்யூ. உங்ககிட்ட திறமை இருக்கற அளவு ஈகோவும் இருக்கு. அடுத்தவங்களுக்கு உதவணும்ங்கற எண்ணமும் அதுதான் தடுக்குது. நீங்க உங்க கரியர்ல இன்னும் ஷைன் ஆக அந்த ஈகோதான் தடையா இருக்கு”, நிரஞ்சம் தீவிரமாக பேச, ‘ஓ… அப்படியா?’ என்ற பாவனையில் பார்த்திருந்தாள். பார்த்தி களிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

“போனது போகட்டும். இது மறந்துடலாம். ஒரு டீமா வேலை பார்க்கலாம். என்ன பார்த்தி?”

“கண்டிப்பா சர். நான் ரெடியாதான் இருக்கேன்.”

“நான் ரெடி இல்லையே”, தோளை குலுக்கினாள் ஜெயந்தி.

ஒரு சின்ன அதிர்வுடன் அவளைப் பார்த்த நிரஞ்சன்,  “கம் அகேன்?”

“நீங்க இரண்டு பேரும் கிளையன்ட் மீடிங்குன்னு ஹோட்டல் ஹோட்டலா தின்னு கூத்தடிக்க, எல்லா வேலையும் நான் மாங்கு மாங்குன்னு பார்க்க நான் இனி ரெடி இல்லைன்னு சொல்றேன். என்னோட அதே லெவெல்தான பார்த்திபன்? பாதி ப்ரபோசல் , கிளையன்ட் ரிப்போர்ட்ஸ் அவரை பண்ண சொல்லுங்க.”

“இங்க நாந்தான் உங்க இரண்டு பேருக்கும் பாஸ். எனக்குத் தெரியும் யாருக்கு என்ன வேலை தரணும்னு. சொல்ற வேலை செய்ய மாட்டேங்கறீங்கன்னு ரிப்போர்ட் பண்ண வெக்காதீங்க”, நிரஞ்சன் சற்று காட்டமாகக் கூறினான்.

“நீங்க பாரபட்சமா நடந்துக்கறீங்கன்னு என்னை ரிப்போர்ட் பண்ண வெக்காதீங்க நிரஞ்சன். எனக்கு வர வேண்டிய ரிகக்னிஷன் வேற யாரோ எடுத்துக்கறாங்க. அப்பறம் நான் ஏன் அதிகமா வேலை பார்க்கணும்?”

அவள் சொன்னதில் சற்றே முகம் மாறியவன், “என்ன உங்களை ரிகக்னைஸ் பண்ணலை? சேல்ஸ் ஹெட் கூட மெயில் அனுப்பினாரே?”

“ம்ம்.. அவர் அனுப்பினார். ஆனா நீங்க? என் ட்ரென்ட் சார்ட் எல்லா ரீஜனுக்கும் டெம்ப்ளேட் அனுப்பணும் பாராட்டினதா சொன்னீங்க. ஆனா ரீஜன் ஹெட்கிட்டருந்து ஒரு ஈமெயிலும் வரலையே?”

“அவர் பிசியில மறந்திருக்கலாம். சோ வாட்?”

“ஹ்ம்ம்… ஏன் அவருக்கும், எஹ்.ஆர்க்கும் காப்பி போட்டு நீங்க ஒரு பாராட்டு ஈமெயில் அனுப்பியிருக்கலாமே? உங்க டீம் மெம்பர் பத்தி உங்களுக்கே அக்கறை இல்லை எனக்கு மட்டும் எதுக்கு டீம் மேல இருக்கணும்? “

“ம்ப்ச்… அவ்வளவுதானா? நான் இன்னிக்கே அனுப்பறேன். இதுக்கா இவ்வளவு பிராப்ளம் க்ரியேட் பண்ணீங்க?”, என்ன குழந்தைத்தனம் என்பது போல ஒரு பாவனையோடு கேட்கவும் பற்றிக்கொண்டு வந்தது ஜெயந்திக்கு.

“தேவை இல்லை நிரஞ்சன். என் முதுகுல ஏறி என் டீம் மெம்பர்ஸ் சவாரி செஞ்ச வரைக்கும் போதும்.  ஈகோவே இல்லாத திறமையான உங்க அசிஸ்டென்ட் வெச்சு வேலையை முடிச்சிக்கோங்க. நான் ரிசைன் பண்றேன்”, எழுந்துகொண்டாள்.

அதிர்ச்சியுடன் அவளை நோக்கிய நிரஞ்சன், “ஹே…அவசரப்பட்டு இமோஷனலா எந்த முடிவும் எடுக்க வேணாம் ஜெய். லெட்ஸ் டாக். பார்த்தி, நீங்க போங்க”, என்றான்.

‘அப்பாடி வேலை தப்பிச்சுது. ஒரே நேரத்துல இரண்டு பேரையும் அனுப்பமாட்டான்’, அவள் கூறியதில் பார்த்தி உள்ளுக்குள் மகிழ்ந்தான். முகத்தை கடினப்பட்டு சோகமாக வைத்து, வெளியேறினான்.

“ஜெய்…ரிலாக்ஸ். என்ன இவ்வளவு கோவம் வருது? ஸ்வீட்டா ஸ்மைல் பண்ற டால் எங்க போனா?”, அணுகுமுறையை மாற்றினான்.

‘முழிச்சிகிட்டா’ என்று சொல்லவந்ததை அடக்கி ஒரு பெருமூச்சு விட்டு, “என்ன சொல்லணுமோ சொல்லுங்க நிரஞ்சன். எனக்கு வேலை இருக்கு”, என்றாள்.

“ஜெய்… அது… நாம இரண்டு பேரும் ஒரே வேவ்லெங்க்த்ல செட் ஆகற மாதிரி  நான் ஃபீல் பண்ணேன்.  இட் நீட்ஸ் டைம் இல்லையா? நீயும் … ஐ மீன் உனக்கும் அப்படி இருந்தது தெரியும்”, தோளை குலுக்கி அவனது ட்ரேட் மார்க் புன்னகையை படறவிட்டான்.

‘இப்படியா தத்தி வழிஞ்சிருக்க? அதான் உன்னை நல்லா யூஸ் பண்ணிருக்கானுங்க’, தன்னையே நினைத்து அருவருத்தாள்.

அவன் புன்னகையில் மெல்ல மயங்கும் ஜெயந்தியின் பார்வை இன்று தெளிவாக இருந்தது. சற்றே வெறுப்பாகக் கூட இருந்தது.

“டால், பார்த்திதான் இஷ்யூன்னா, நான் அவனை இன்டெர்னல் ட்ரன்ஸ்ஃபர் பண்றேன். கொஞ்சம் பொறுத்துக்கோ. அதுக்காக ரிசைன் எல்லாம் வேணாம். ஐ வில் மிஸ் யூ பாட்லி”, என்று இன்னும் ஒரு டன் ஐசை ஏற்றி வைக்க,

“நிரஞ்சன். இதுக்கு மேல எதாவது இதே ட்ராக்ல பேசினா, நான் மிஸ் காண்டக்ட்னு ரிப்போர்ட் பண்ண வேண்டி வரும். நான் ரிசைன் பண்றது எல்லாருக்குமே நல்லது. உங்ககிட்ட வேலை பார்க்க எனக்கு இஷ்டம் இல்லை”, என்றதோடு வெளியேறினாள்.

வெளியில் வந்த கையோடு ஃபோகஸ் ரூமிற்குள் சென்றவள், அடுத்த பத்தாவது நிமிடம் ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தாள்.  ஒரு மாதம் நோட்டீஸ் என்பதால் அடுத்த முப்பது நாட்கள் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இருக்கும் லீவ் கணக்கை எடுத்துப் பார்த்தாள். எட்டு நாட்கள் வரை இருந்தது. கடைசி ஒன்னரை வாரத்துக்கான விடுமுறையையும் சேர்த்து விண்ணப்பித்துவிட்டு வந்தாள்.

வெளியே வரும்போதே அஞ்சலி எதிர்கொண்டாள். “ஜெய்…என்னாச்சு? மீட்டிங்னு போன, நீ வெளிய வந்ததும் நிரஞ்சன் முகம் ஜிவுஜிவுன்னு கோவமா வெளிய வந்தாரு. அந்த ஜால்ரா உள்ள போய் எதோ பேசப் போனான், போன வேகத்துலேயே அடிபட்ட நாய் மாதிரி முகத்தை  தொங்க போட்டுட்டு வந்தான். என்ன நடக்குது?”

“ஷ்… பேப்பர் போட்டுட்டேன் அஞ்சலி”, நெற்றியை தேய்த்தபடியே அவள் இருக்கைக்கு லேப்டாப்பை தூக்கிக்கொண்டு செல்ல, அவள் பின்னோடே சென்ற அஞ்சலி, “என்ன சொல்ற? என்ன நடந்துச்சு உள்ள? என்னோட கான்டீன் வா”, என்று கையை பிடித்து இழுக்க, தலை விண்ணென்று தெறிக்க காபி ஐடியா பிடிக்கவும், அவளோடு சென்றாள்.

அஞ்சலி கான்டீனுக்கு செல்லாமல், அலுவலகக் கட்டிடம் விட்டு வெளியே  அடுத்த தெருவில் இருக்கும் ஒரு காஃபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்றாள்.

“சரி… இப்ப சொல்லு. ஒட்டு கேட்க எந்த காதும் இல்லை. ஏன் திடீர்னு? என்ன சொன்னான் அந்த வெள்ளை பன்னி?” அஞ்சலியின்் நிபந்தனை இல்லாத இந்த நம்பிக்கை மனதிற்கு இதமாக இருந்தது. காஃபியை ஒரு வாய் பருகியவள், நிரஞ்சன் கடைசியாக செய்த முயற்சியை கூறவும் எழுந்து நின்றுவிட்டாள். “எச்.ஆர்க்கு ரிப்போர்ட் பண்றதை விட்டுட்டு அந்த நாய்க்கு பயந்து வேலையை விடப்போறியா?”

“உட்காருடி… என் மடத்தனம்தான் இதுல பெருசு. இதை இன்னும் வெளிச்சம் போட்டு காட்டணுமா?”, அவள் கையைப் பிடித்து அமர வைத்து, வேறு வேலைக்கான ஆஃபர் கையில் இருப்பதாகவும், அதை ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் கூறிய பின்னரே சற்று அடங்கினாள் அஞ்சலி.

“வேலை செய்யற என்னைவிட அந்த ஜால்ராவுக்கு போய் சப்போர்ட் பண்றதுதான் புரியவேயில்லைடி”, ஜெயந்தி புலம்ப,

“சிம்பிள் பெண்ணே. அவனை விட கொஞ்சம் முட்டாளா இருக்கறவனை பக்கத்துல வெச்சிகிட்டா இவன் பளிச்சுன்னு தெரிவான். பார்த்தியும் இவனுக்கு அடிக்கற ஜால்ரா, குடுக்கற பில்டப் பார்த்து,  நிரஞ்சன்  ஏதோ பெரிய புலின்னு மத்தவங்க நினைப்பாங்க. இதே நீ கூட இருந்தா, அவன் டம்மியா தெரியவான். நீ அவனுக்கு பில்-டப் தரமாட்ட, கேள்விக்கு நீயே பதில் சொல்லிடுவ. அப்பறம் அவன் எதுக்கு?  நீ இப்படி அவனுக்கு பதிலை வாட்சப்ல சொல்ல, அதை அவனே யோசிச்ச மாதிரி கொஞ்சம் வெள்ளைகாரனாட்டம் இங்கலீஷ்ல பேசினாத்தானே இவனை பெரியாளா காட்டிக்க முடியும்?”, விம் போட்டு விளக்கினாள் அஞ்சலி.

படிப்பறிவு இருக்கும் அளவிற்கு அஞ்சலி மாதிரி தனக்கு மக்களைப் பற்றிய பட்டறிவு இல்லை என்பது ஜெயந்திக்குப் புரிந்தது.

“சரி வா போகலாம்”, என்று புறப்பட, அஞ்சலி, “இங்க பாரு, எப்படியும் கிளம்பறதுக்குள்ள உன்னை கே.டி. (knowledge transfer) குடுத்துட்டு போக சொல்லுவாங்க. எல்லாத்தையும் டாக்குமென்ட்டா எழுதறதா சொல்லு. அந்த பார்த்தி புண்ணாக்குக்கு வாய் வார்த்தையா சொன்னா, எதுவும் நீ சொல்லித் தரலைன்னு எஸ்கேப் ஆகத்தான் பார்ப்பான்”, அடுத்தடுத்து திட்டம் சொல்லிக்கொடுத்தாள் அஞ்சலி.

அன்று மாலை நேரத்துடன் கிளம்பி வீடு வந்தாள் ஜெயந்தி. இரவு இட்லியும் சட்னியும் செய்தவள், டீ.வியை உயிர்பித்துவிட்டு அமர, உண்டு முடிக்கும் தருவாயில் , “அம்மா ஜெயந்தி…”, என்று குருபரன் குரல் கேட்டது.

ரிமோட் கொண்டு டீ.வியை அணைத்தவள், “வாங்க சார் சாப்படறீங்களா?”, என்று உபசரித்துவிட்டு, நாக்கை கடித்திக்கொண்டாள்.

“ஹாஹா…நீ சாப்பிட்டு முடிமா”, எதிரிலிருந்து குரல் வந்தது. அவரது ஆஸ்தான ஒற்றை சோஃபாவில் இருப்பார் போலும்.

“இன்னிக்கு வருவீங்கன்னு நினைச்சேன்”, என்றாள்.