மூன்று வாரங்கள் கழித்து ஒரு வழியாக அலுவலகம் வந்தாள் ஜெயந்தி. அவளது அருமை திறமையை முற்று முதலாக உணர்ந்திருந்தார்கள் நிரஞ்சனும், பார்த்தியும். காலாண்டிற்கான ரிப்போர்ட்கள் தாமதமாக அனுப்பி, அதிலும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு என்று நொந்து போயிருந்தார்கள். இதில் இன்னும் இரண்டு சேல்ஸ் ப்ரபோசல்கள் வேறு வந்துவிட ஒரு நாளைப்போல பத்து மணியாகிற்று கிளம்ப. இதில் சனிக்கிழமையும் அலுவலகம் வரவழைத்துப் பிழிந்தெடுத்தான் நிரஞ்சன்.
அவளால் அவன் வாங்கிய திட்டுக்களை நினைத்து முறைப்புடனே வரவேற்றான் பார்த்தி. அவள் வந்ததுமே அக்கறையாக வந்து விசாரித்தான் நிரஞ்சன்.
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணோம் ஜெய்”, என்று அவன் ட்ரேட்மார்க் புன்னகையை சிந்தினான் நிரஞ்சன்.
“சென்ட்ரல் செர்வர்லர்ந்து ரிப்போர்ட் எடுத்து ஃபார்மேட் பண்றது பெரிய வேலையெல்லாம் இல்லைன்னு சொல்வாரே பார்த்தி? ஈசியா உங்களுக்கு ரிப்போர்ட் வந்திருக்குமே சர்?”, பதில் புன்னகை சிந்தினாள் ஜெயந்தி.
“ஹாஹா… எங்களை ப்ளேம் பண்ணக்கூடாது ஜெய். நீ எல்லாமே அவ்ளோ ஈசியா முடிக்கவும் அப்படி நினைச்சிட்டோம். அதுல எவ்வளவு வேலை இருக்குன்னு நீ சொல்லவேயில்லை. எனிவே, சேல்ஸருந்து அர்ஜென்ட்டா இன்னொரு ப்ரபோசல் கேட்டிருக்காங்க ஜெய். அது முடிச்சு இன்னிக்கு சாயந்திரம் தரணும். பீ அ டால் அன்ட் மேக் இட் ஹாப்பன் ப்ளீஸ் ஜெய்.”, என்று கொஞ்சவும்,’ இளிச்சவாய்ன்னு முடிவே கட்டிட்டீங்கல்ல?’ என்று நினைத்தவள்,
“ஓஹ்…நோ நிரஞ்சன். முதல் நாளே டென்ஷன் எடுத்துக்க முடியாது. எப்படியும் பார்த்தி, என் வேலை எதுவும் செஞ்சிருக்கமாட்டார். மெயில்ஸ் பார்க்கணும். பென்டிங் என்ன ஏதுன்னு பார்த்து ஆர்கனைஸ் செய்யணும். பிரப்போசல் பார்த்தியை பார்த்துக்க சொல்லுங்க. ஒரு வாரம் பத்து நாள் ஆகும் எனக்கு செட் ஆக.”, டென்ஷன் ஏறி திரும்ப தலைவலி, உடம்பு வலின்னு வந்துட்டா பிரச்சனையாகிடும்”, தலை சாய்த்து பெரிய புன்னகையை பதிலுக்குத் தந்தாள்.
“சார், நம்ம க்ளையன்ட் மீட்டிங் போகணும். நான் எப்படி செய்ய முடியும்? “, வேகமாய் இடை புகுந்தான் பார்த்தி. துரைப்பாக்கத்தில் கிளையன்ட்டோடு பேசி முடித்து, ஐந்து மணியோடு கிளம்பிவிட திட்டம் தீட்டியிருந்தான்.
“சர் போகட்டும். நீங்க போய் என்ன செய்யப் போறீங்க? வேணுங்கற தகவல் எல்லாம் முன்னாடியே சொல்லிடுங்க. வாட்சப்ல தேவைபட்டா விவரம் தாங்க. எத்தனை மீட்டிங், நான் இங்கருந்தே சப்போர்ட் பண்ணியிருக்கேன் பார்த்தி.” ஜெயந்தியின் எதிர்பாராத தாக்குதலில் பார்த்தி முழிக்க, அவளை ஒரு ஆராயும் பார்வை பார்த்திருந்தான் நிரஞ்சன்.
“வை நாட்? ப்ரபோசல் நீ பாரு பார்த்தி. மீட்டிங் நான் பார்த்துக்கறேன்”, அவள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, “டேக் கேர் ஜெய். உன் ஹெல்த் முக்கியம்”, என்று டாட்டா காட்டிவிட்டு சென்றான்.
வேலை செய்பவர்கள் சிலர் வந்து குசலம் விசாரிக்க, சற்றே சங்கடப்பட்டு இப்போது நன்றாகிவிட்டதாக பொய்யுரைத்தாள்.
“டெங்கு வந்த மாதிரியே இல்லை. ஜம்முன்னு ரெஸ்ட் எடுத்துட்டு வந்த மாதிரி நல்லா இருக்காங்க பார்க்கறதுக்கு. இல்லை நந்தினி?”, தன் கடுப்பை இலைமறையாய் காட்டினான் பார்த்தி.
“அப்படியா? நல்லி எலும்பு சூப், சிக்கன் சூப்னு என் சித்தி செம்மையா கவனிச்சிகிட்டாங்க. அவங்ககிட்ட சொல்றேன் பார்த்தி. சந்தோஷப்படுவாங்க.”, அசராது திருப்பிக்கொடுத்தாள் ஜெயந்தி.
இடையில் மாட்டிய நந்தினி பொதுவாய் சிரித்து, “உடம்பு வலிபோக நாளாகும் ஜெய். பார்த்துக்கோ”
“ஆமாம் நந்தினி, கால் மூட்டு வீக்கம் இன்னும் கொஞ்சம் இருக்கு. அதெல்லாம் காட்டிட்டா இருக்க முடியும். பேசறவங்க எப்படியும் பேசத்தான் செய்வாங்க.”, நந்தினினை விடைகொடுத்தனுப்பிவிட்டு கணினியின் புறம் திரும்பிக்கொண்டாள்.
முறுக்கிக்கொண்டு போன பார்த்தி ஒரு மணி நேரம் மல்லுகட்டி பார்த்துவிட்டு, ஈகோவை விட நிரஞ்சனிடம் மேலும் திட்டு வாங்காமல் இருக்க வேண்டும் என்ற பயத்தில் அவளிடமே தஞ்சம் அடைந்தான்.
“ஜெயந்தி, சேல்ஸ் இப்படி கேட்கறாங்களே, இதுக்கு எப்படி பட்ஜெட் பண்றது?”, என்று வந்து நின்றான்.
அதை மேலோட்டமாகப் பார்த்தவளுக்கு உடனே புரிந்தாலும், அவனிடம் ஒரு பரிதாபப் புன்னகையை சிந்தி, “அவங்க எப்பவும் இப்படி அரைகுறையாத்தான் குடுப்பாங்க பார்த்தி. அவங்க கிளைய்ன்ட் மீட்டிங் நோட்ஸ் வாங்கி படிச்சிடுவேன். அப்பதான் புரியும். இல்லைன்னா விஷ்ணு சார்கிட்ட உங்கச் டவுட்ஸ் கேளுங்க”, என்று தாளை திருப்பிக்கொடுத்தாள்.
அவனுங்க மீட்டிங் நோட்ஸ் எந்த காலத்துல படிச்சி எப்ப புரிஞ்சு நான் எப்ப ப்ரபோசல் ரெடி பண்றது என்று நினைத்தவன், “சரி நான் விஷ்ணு சாரை கேட்கறேன்”, என்று திரும்பினான்.
“ம்ம்…பார்த்தி அவருக்கு ஒரு ஒரு கேள்வியா கேட்டா பிடிக்காது. எல்லா டவுட்டையும் ஒரே டைம்ல கேட்டுக்கோங்க. எதுவும் நீங்களா அஸ்யூம் பண்ணிக்காதீங்க”, எனவும் அவளை முறைத்தவன், “எனக்கும் தெரியும். பார்த்துக்கறேன்”, என்று மீண்டும் முறுக்கிக்கொண்டு சென்றான்.
“போடா போ… முதல்ல விஷ்ணு சார் ஃப்ரீயா இருப்பாரா உனக்கு பாடம் எடுக்க?”, என்று கறுவியவள் தன் வேலைக்குத் திரும்பினாள்.
நிரஞ்சன் திரும்பி வந்து பார்த்தியை கத்திக்கொண்டிருந்தான். “முட்டாள், விஷ்ணு இருக்கற பிசியில உங்கிட்டவா பேசிட்டு இருப்பார். டில்லிலர்ந்து அவர் பாசோட பாஸ் வந்திருக்கிறார். அவருக்கு நீ வெயிட் பண்ணிட்டு இருக்கியா?”
“சர், ஜெயந்திதான் அவர்கிட்ட கேட்டு செய்யச் சொன்னாங்க”, என்று போட்டுக்கொடுக்கவும், அதே எரிச்சலில் ஜெயந்தியிடம் வந்தான்.
“ஜெயந்தி, ப்ரபோசல் பண்ண முடியாதுன்னு சொன்னீங்க, சரி. பார்த்திக்கு கைட் பண்ணக்கூட முடியாதா? விஷ்ணு சார்கிட்டதான் ஒவ்வொரு வாட்டியும் நீங்களும் டவுட் கேட்பீங்களா? நம்பறா மாதிரியே இல்லையே?” எனவும் அவனது சத்தத்தில் அருகிலிருப்பவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.
அசராமல் எழுந்து தோளை குலுக்கியவள், “பார்த்திகிட்ட கிளையன்ட் மீட்டிங் நோட்ஸ் வாங்கி படிங்க, நான் அப்படி படிச்சுதான் புரிஞ்சுக்குவேன்னு முதல்ல சொன்னேன். அதுக்கு அவர் யோசிக்கவும்தான் விஷ்ணு சார் இரண்டாவது ஆப்ஷனா சொன்னேன். இன்னும் என்ன கைடன்ஸ் எதிர்பாக்கறீங்கன்னு புரியலை. இதுக்கு முன்ன நான் பண்ண ப்ரபோசல்ஸ் எல்லாமே சர்வர்ல இருக்கு. அதுல கிட்டதட்ட பொருந்திவர மாதிரி இருக்கறதை உதாரணமா எடுத்துகிட்டு செய்ய அவரால முடியலைன்னா என் பிரச்சனை கிடையாது. டைனிங் ஏரியா எங்கன்னு கைகாட்டத்தான் முடியும் ஊட்டி விட முடியாது.”
தெளிவான குரலில் ஜெயந்தி சொல்லவும், உணவு பிரியனான பார்த்திக்கு ஏற்ற உவமையைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.
“எப்ப மீட்டிங் ரெக்கார்ட்ஸ் எல்லாம் படிச்சு, எப்ப ப்ரபோசல் ரெடி பண்றது? இது போகாத ஊருக்கு வழி சார்”, என்று கூறும் பார்த்தியை எரித்துவிடுவதுபோலப் பார்த்தான் நிரஞ்சன். பார்த்தி ஒன்றும் பாதியுமாகக் கூறியதை கேட்டுக்கொண்டு ஜெயந்தியிடம் எகிறியது எவ்வளவு தவறு என்று புரிந்தது.
“நான் செய்தேனே. ஆமாம் பத்து, பதினோரு மணி வரைக்கும் ஆகும்தான். ஒரு ப்ரபோஸ்ல் பண்றதுக்கு இவ்வளவு நேரமான்னு பின்னாடி பேசுவீங்களே பார்த்தி, இப்ப புரியுதா?”, புருவம் ஏற்றி நக்கலாகக் கேட்பவளை கொலைவெறியோடு பார்த்தான் பார்த்தி.
“ஜெயந்தி… சாரி… நீ கண்டிப்பா ஹெல்ப் பண்ணியிருப்பன்னு நினைக்காம விட்டது என் தப்புதான். பட் பார்த்திக்கும் உங்களுக்கும் இருக்கற கசப்பு நம்ம டிபார்ட்மென்ட் மேல ரெஃப்லெக்ட் ஆகும். நான் பார்த்தியை விசாரிக்கறேன். இந்த ப்ரபோசல்..”, என்று ஆரம்பிக்கும்போதே,
“நிரஞ்சன்.. ஆல்ரெடி தலைவலியோடத்தான் வேலை பார்த்துட்டு இருக்கேன். நானே அஞ்சு மணியாச்சேன்னு கிளம்பற மூட்லதான் இருக்கேன். ப்ரபோசல் பண்றதுக்கு ரொம்ப கவனம் வேணும். அதுக்கான எஃபர்ட் என்னால போட முடியாது சாரி. மூணு மணி நேரமா டவுட் போர்ஷன்ஸ் மட்டும் விட்டுட்டு அவர் கொஞ்சமாவது செஞ்சிருக்கலாம். எதுவும் செய்யாம இப்ப எங்கிட்ட வந்து பண்ண சொல்றது சரி கிடையாது.”
போட்டுக் கொடுக்கற இந்த அசிங்கமான வேலையை என்னையும் செய்ய வெக்கறீங்களேடா என்று ஜெயந்திக்கு உள்ளுக்குள் சினம் ஏறியது.
அவள் கேட்பது முற்றும் சரி என்று உணர்ந்த நிரஞ்சன் வேறு வழியின்றி, “ஜெயந்தி…எனக்கும் கஷ்டமாதான் இருக்கு, பட் இது டைம் சென்சிடிவ், நான் தள்ளிப்போட சொல்லி கேட்க முடியாது. பீ அ டால் அண்ட் எனக்காகவாவது செய்து குடேன். நானும் பார்த்தியும் கூட இருந்து உனக்கு அசிஸ்ட் பண்றோம். ப்ளீஸ்”, என்று தலை சாய்த்து அவள் மயங்கும் புன்னகையை சிந்திக் கெஞ்சினான்.
ஆனால் இம்முறை ஜெயந்திக்கு அவன் பச்சோந்தித்தனம் நன்றாகவே தெரிந்தது.
“உங்களுக்கு நோ சொல்ல எனக்கும் கஷ்டமாதான் இருக்கு நிரஞ்சன், பட் நிஜமா என்னால முடியலை”, என்று பரிதாபப்படுவது போல நடித்தாள்.
“ஜெயந்தி, இவ்வளவு கேட்டும் மறுக்கறீங்கன்றது உங்க பெர்ஃபார்மென்ஸ்ல ரெக்கார்ட் ஆகும். ஐ வில் பீ ஹெல்ப்லெஸ்”, என்று மறைமுகமாக மிரட்டினான். அதற்குள் அவன் அறைக்குள் வந்திருந்தார்கள். பின் கெஞ்சல் மிரட்டலெல்லாம் மற்றவர் முன்னால் செய்ய முடியாதே.
“நான் செய்யறதெல்லாம் ரெக்கார்ட் ஆச்சுன்னா, இந்த ஒரு இன்சிடென்ட் பெருசா பாதிக்காது. அப்படி இருந்தா, சோ பீ இட். நீங்க மதியம் சொல்லிட்டுப்போன மாதிரி என் ஹெல்த்தான் சர் எனக்கு முக்கியம். மத்ததெல்லாம் அப்பறம்தான். கிளம்பறேன்”, என்று வந்தவள், கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்து அடுத்த ஐந்து நிமிடங்களில் கிளம்பிவிட்டாள்.
என்ன ஒரு சுய நலம்? செஞ்சதெல்லாம் மறந்துடும், செய்யாத இது ரெக்கார்டாகுமா? ஹ்ம்ம் கார்ப்ரேட் உலகில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்று மனதுக்குள் பொறுமிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.
மொபைல் நோட்டிஃபிகேஷன் காட்ட, திறந்து பார்த்தால் வால்ட் அலுவலகத்திலிருந்து ஈமெயில். வேலைக்கான ஆஃபர் லெட்டர். சம்பளம் இப்போது பெறுவதைக்காட்டிலும் சற்று குறைவுதான் ஆனால், பெர்ஃபார்மென்ஸ் போனஸ் நன்றாக வந்தால் ஈடு செய்ய முடியும் அளவு இருந்தது.
நிரஞ்சன் இன்று நடந்ததை மறக்க மாட்டான். பார்த்தி அதற்கும் மேல். திரும்பவும் இருவரையும்பார்க்கவே பிடிக்கவில்லை. பேசாமல் இந்த வேலையை ஏற்றுக்கொள்வோமா என்று யோசித்தாள். ஒரு வருடம் போல ஃபைனாஸ் ஹெட்டாக இருந்த அனுபவத்தை வைத்து அடுத்து வேறு பெரிய கம்பனிக்கு அதே பதவிக்கு மாறிக்கொள்ளலாம்.
யோசனையோடே கிச்சிடியைக் கிளறி முடித்து தட்டோடு டி.வியின் முன் அமர்ந்தாள்.
“அம்மா ஜெயந்தி “, குரல் கேட்கவும் தூக்கிவாரிப்போட்டது.
“ஐயோ சார்… இங்கதான் இருக்கீங்களா? ஏன்?”, என்றாள் வலது புறம் குரல் வந்த திசையைப் பார்த்து.
“இப்பதான்மா வரேன். அதுதான் வந்ததும் குரல் கொடுத்தேன். உன் எதிர்க்க சோஃபால இருக்கேன்மா”, என்றார் கூடுதல் தகவலாக.
“ஓஹ்…சாப்பிடறீங்களா?”, என்று கேட்டவள், கண்கள் சுருக்கி, “சாரி…” எனவும் சிரித்துக்கொண்டே, “நீதான் பசியா இருக்க. நீ சாப்பிடுமா”, கனிவாக வந்தது குருபரனின் குரல்.
“ஹ்ம்…. வால்ட்லர்ந்து ஆஃபர் லெட்டர் வரவும் வந்தீங்களா சர்?”, ஒரு வாய் உண்டாள்.
“ம்ம்..அது அனுப்பப்போறாங்கன்னு நேத்தே தெரியும். ஒரு வாரம் முன்னவே வந்திருக்க வேண்டியது. அவங்களுக்கு வேற வேலை பிசி அதான் கொஞ்சம் லேட். ஆனா நான் வந்தது உன் ஆஃபீஸ்ல நீ போனதுக்கப்பறம் நடந்ததைச் சொல்ல”, என்று குதூகலமாக ஆரம்பித்தார்.
“வேணாம் சர். அதைப் பத்தின பேச்சே வேணாம். அவங்க இரண்டு பேரையும் நினைச்சாலே காண்டாகுது. பேசாம நாளைக்கு லீவ் போடலாமான்னு நினைக்கறேன்”, ஜெயந்தியின் முகத்திலும் குரலிலும் அத்தனை எரிச்சல், அயர்வு.
ஒரு நொடி அமைதிக்குப் பின், “என்ன முடிவெடுத்திருக்கம்மா ? உன்னை வற்புறுத்தற மாதிரி எதுவும் சொல்லக்கூடாதுன்னுதான் நான் கேட்கலை. நீ யோசிக்கணும்னு நினைச்சாலும் சரிதான் மா”, என்றார் தன் ஆசிரியர் குரலில்.
“வேலையை ஏத்துக்கலாம்னுதான் நினைக்கறேன் சர். இரண்டு நாள்ல சொல்லிடறேன்.”
“நல்ல முடிவுதான் மா. இந்த மாதிரி குள்ள நரித்தனமெல்லாம் அவங்ககிட்ட இருக்காது. அப்படி இருக்க சஞ்சயும் மோகனும் விடவும் மாட்டாங்க. நிரஞ்சனெல்லாம் ஒரே மாசத்துல துரத்தியிருப்பாங்க. பார்த்தி இன்டெர்வியூ தாண்டியிருக்கமாட்டான்”, அவளுக்காக அவர் படும் கோவம் ஜெயந்தியின் முகத்தில் சிறு புன்னகையை தோற்றுவித்தது.
“வர வர ஆவிங்கறது போய் என்னவோ பிக் பாஸ் குரல் மாதிரி ஆகிட்டீங்க சர் எனக்கு”, கிண்டல் செய்ய குருபரனும் வாய்விட்டு சிரித்தார்.
“அப்படியே நினைச்சிக்கோ, அதனால என்ன? இவனுங்களைப் பத்தி யோசிக்காம நல்ல காமெடியா பார்த்து சிரிச்சிட்டு நிம்மதியா தூங்கு ஜெயந்திமா. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும். நான் கிளம்பறேன்”, ஆசீர்வதித்தார்.
“குறும்பு? ஹ்ம்ம் ஆமாம் காத்துகிட்டு இருப்பா. எங்களுக்கு இன்னும் எவ்வளவு நாள் விதிசிருக்கோ தெரியாது. இப்பவாவது கூட இருக்கணும்னு ஆசைப்படறா. “
அவரது குரலில் இருந்த ஏக்கம் ஜெயந்தியை நெகிழ வைத்தது. “அவங்க மகனுக்கு வேற பொண்ணு எதுவும் பார்த்தீங்களா சர்? நீங்க பார்த்து சொல்லுங்க. நான் வேணா போய் பேசறேன்.”
“பார்த்துகிட்டுதான் இருக்கோம்மா. அவகிட்ட சொல்றதுதான். எல்லாத்துக்கும் நேரம் வரும். பொறுமை வேணும். வரேன்மா”, என்றதோடு வீடு அமைதியாகிவிட்டது.
அதை நிரப்ப மீண்டும் தொலைக்காட்சியை ஓடவிட்டாள் ஜெயந்தி.