அத்தியாயம் – 4

தி வால்ட் என்ற அந்த நிறுவனம் பிரம்மாண்டமான அந்த கட்டிடத்தின் ஒரு மாடியில் பெரிதான அரவமோ ஆடம்பரமோ இல்லாதிருந்தது.

குறித்த நேரத்திற்கு சற்று முன்னரே வந்தவளை ரிசெப்ஷனில் அமர வைத்திருந்தாள் ரிசெப்ஷனிஸ்ட். பத்து நிமிடம் சென்று ஒரு மீட்டிங் அறைக்கு அழைத்துச் சென்று அமரச் சொல்லி விடைபெற்றாள்.

அடுத்து சில நொடிகள் அமைதியில், “நான் இங்கதான்மா இருக்கேன். தைரியமா இரு. வரப்போறது கங்காதரன். மாயவரம் இரங்கசாமி எப்படி தெரியும்னு கேட்டா, அப்பாவோட ஃப்ரெண்டு. வேலை தேடிட்டு இருக்கேன்னு சொன்னபோது, இங்க அப்ளை பண்ணச் சொன்னாருன்னு சொல்லு”, குருபரன் குரல் மட்டும் மெலிதாக ஒலித்தது.

“இங்கயுமா இருக்கீங்க. அதுதான் வீட்லையே எல்லாம் சொல்லிட்டீங்களே சார்”, என்று முனகினாள்.  நேர் காணலுக்கான அழைப்பு வந்த அன்று  மாலை வீட்டில் இருந்தார்.

“உனக்கு மெயில் அனுப்பிட்டாங்க. திறந்து பார்” என்று ஆரம்பித்ததிலிருந்து காலையில் கிளம்பும் நேரம் வரை பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். இந்த கங்காதரன் ரிட்டையராக விரும்புவதால், ஒரு மாதம் வரை இருந்து அடுத்து வருபவருக்கு கற்றுக்கொடுத்துவிட்டு செல்லுவதாக திட்டம். அலுவலகத்தில் இருப்பதிலேயே இவர்தான் மூத்தவர். நிறுவனத்தின் மூளையும் முதலாளியுமானவரின் உறவினர். கணக்கு வழக்குகள் பார்ப்பதற்கு இவருடன் சேர்த்தே மூவர்தான். மற்ற இருவரும் சொன்னதை செய்யும் இளைஞர்கள். மற்றவர்கள் எல்லோருமே கணினித்துறை வல்லுனர்கள்தாம்.

கங்காதரன் தொண்டையை செருமிக்கொண்டே உள்ளே நுழைந்தார். அறுபது வயது மதிக்கத்தக்க தோற்றம். முன் மண்டைதாண்டி, நடு மண்டை எல்லாம் வழுக்கையாகி, பின் மண்டையை மட்டும் வேலி போட்டது போல கொஞ்சம் முடி நிலா வட்டமாக வளர்திருந்தது. மீசையெல்லாம் மழுங்க சவரம் செய்து, சற்றே தடித்த கண்ணாடி, அவர் கறார் பேர்வழி என்று மேலும் கட்டியம் கூறுவது போல சற்றே பெருத்த மூக்கின் மேல் அமர்ந்திருந்தது.

சாவாகாசமாய் வந்து அமர்ந்தவர், ஜெயந்தியை ஒரு அளவெடுக்கும் பார்வை பார்த்துவிட்டு, “சர்டிஃபிகேட் எல்லாம் கொண்டுவந்திருக்கியாமா?” என கேட்டார்.

தன் கையில் இருந்த ஃபைலை அவரிடம் நீட்டினார்.  அதை வாங்கி புரட்டியபடியே, “மாயவரம் இரங்கசாமியை உனக்கு எப்படிம்மா தெரியும்?” என்று நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.

“என் அப்பாவோட பால்யகாலத்து ஃப்ரெண்டு சர்.”

“அப்போ உன்னை நேரடியா தெரியாதா அவனுக்கு?”, என்ற கேள்விக்கு குருபரன் தந்த கோச்சிங்கில் “சின்ன வயசுல பார்த்திருக்கேன் சர். அப்பா இறந்த அப்பறம் டச் விட்டுப்போச்சு.“

அதற்குள் அவளது பள்ளிச் சான்றிதழை பார்த்திருப்பார் போல. “நீ படிச்சதெல்லாம் சென்னையாச்சே?“

“அட நொண்னை”, என மனதுக்குள் திட்டியவள், “லீவுக்கு மாயவரம் போவோம் சர்” என்றாள்.

“அடுத்து குடும்ப விவரம்மெல்லாம் கேட்டறிந்தார். எதுக்கு தனியா இருக்க? உன் சித்தி கூட இருக்கலாமே?” என்று குடைய, ‘அதுக்கும் வேலைக்கும் என்னய்யா சம்மந்தம்’ என்று எரிச்சலான போதும், “இப்ப இருக்கற வேலைக்கு இது பக்கம் சர். கூட அவங்களுக்கு எதுக்கு வீணா தொந்தரவு”, என்று பொறுமையாகக் கூறினாள்.

அடுத்து அவள் கணக்கியல் அறிவை சோதிக்கிறேன் என்று சில கேள்விகள் வந்து விழுந்தது. ‘எந்த காலத்துலையா இருக்க? தெரியலைன்னு கேட்டா சாட் ஜிபிடி சொல்லிட்டு போகும்’, என்று நினைத்துக்கொண்டே சரியான பதில்களை சொன்னாள்.

“இங்க எல்லாம் நானே முறை பண்ணி வெச்சிருக்கேன். ஒரு மாசம் கூட இருந்து சொல்லித்தருவேன். அதே மாதிரி தொடர்ந்து செய்தா போறும். டவுட்டுன்னா போனைப் போட்டு கேட்டுக்கணும்.  கம்பனி முதலாளி என் மகனைப் போல. இந்த ஹார்ட் அட்டாக் வரலைன்னா நானே பார்த்துக்குவேன். ஆனாலும் ரெஸ்ட் எடுக்கணும்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டான். அதுதான் வேற ஆள் தேடறோம்“, பேசிக்கொண்டே போனவர்,

“அமாம். இப்ப கல்யாணம் பண்ற மாதிரி  எதுவும் ப்ளான் இருக்கா மா?” திடீரென்று கேட்கவும், புருவம் சுருக்கியவள், “அப்படியெல்லாம் எதுவும் இல்லை சர்” என்று பதிலுரைத்தாள்.

“வேலைக்கு சேர்ந்துட்டு அடுத்து மூணு மாசத்துல கல்யாணம்னு பத்திரிக்கை வெச்சிட்டு நீ பாட்டு உன் புருஷன் வேற ஊர்ல வேலை பார்க்கறார்னு ரிசைன் பண்ணிட்டு போயிட்டா? அதுதான் கேட்டுக்கறேன். கல்யாணம் பண்ணாலும் சென்னையிலேயேன்னா ஒன்னும் பிரச்சனையில்லை. இந்த காலத்து பொண்ணுங்க வேலையை விடமாட்டீங்களே”, என்று சிரித்து வைத்தார்.

பதிலே பேசாது அமைதியாக இருந்தாள். ஒரு சில நொடி அமைதிக்குப்பின் “என்னமா?” என்றார்.

“நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டேனே சர். அதுக்கப்பறம் உங்க கருத்தை சொல்லிட்டு இருந்தீங்க. அதுல சொல்றதுக்கு எனக்கு எதுவும் இல்லைன்னவே அமைதியா இருந்தேன்”, ‘வேற என்ன கேட்கணுமோ கேட்டு முடிச்சு விடுய்யா இந்தக் கொடுமையை’ என்று பார்க்கவும், கங்காதரன் சற்று திணறினார்.

“சரி இரு” , என்று கிளம்பிவிட்டார்.

அடுத்த அறையில் இருந்த இரு நண்பர்களின் முகமும் புன்னகையை பூசிக்கொண்டிருந்தது. “மச்சி உங்க மாமாக்கு மேல டெரரா இருப்பா போலருக்கேடா?” இன்டெர்வ்யூவை காமெரா மூலமாக பார்த்துக்கொண்டிருந்த மோகன் சொல்ல,”ஹ்ம்ம்… சின்ன பொண்ணா இருக்காளேன்னுதான் பார்க்கறேன்” என்று மறுதலித்தான் சஞ்சய்.

தி வால்ட்டின் மூளை என்றால் அது சஞ்சய். இதயம் அவன் நண்பன் இராம்மோகன். சஞ்சையின் டெக்னிகல் மூளையுடன், மோகனின் மார்கெட்டிங் திறமையும் இணைந்து வால்ட் குறுகிய காலத்தில் சென்னை கணினி உலகத்தில் மட்டுமல்லாது, அவர்கள் படித்து, வேலை பார்த்திருந்த அமெரிக்க மண்ணிலும் கூட நன்மதிப்பை பெற்று வளர்கிறது.

“டேய், கார்ப்பரேட் கம்பனில இரண்டு வருஷம் இருந்திருக்கா. சி.ஏ முடிச்சதுமில்லாம, டாப்ளூ, சாப்னு செர்டிஃபிகேஷன் வெச்சிருக்கா. மாமா எக்செல், டாலியை விட்டொழிச்சிட்டு மாறிக்கலாம் மச்சி. முக்கியமா அலட்டிக்கவே இல்லை பாரு.”, மோகன் வாதாட, தாடையை நீவிக்கொண்டிருந்தான் சஞ்சய்.

இளம் ப்ரவுன் நிறக் கண்கள் அவன் முகத்திற்கு தனி வசீகரத்தை கொடுத்தது. அடர்த்தியான கேசம், துளைக்கும் பார்வை, நான் சொன்னது சொன்னதுதான் என்று கூறும் மோவாய் எல்லாம் தாண்டி, அவன் புன்னகைக்கும்போது எட்டிப்பார்க்கும் குழி விழும் கன்னத்திற்கே பல இரசிகைகள் உண்டு. ஆனாலும் அந்த சஞ்சயனின் பெயரைக் கொண்ட காரணமோ என்னமோ, பெண்களிடம் ஈர்ப்பே இல்லாதிருந்தான். கணினியும் சைபர் துறையின் மீதும் அவனிக்கிருந்த காதல் பெண்களிடம் வராதது, அவனோடே சுற்றித் திரிந்த மோகனுக்கு வரமாக அமைந்தது. நண்பனைப் பார்த்த மங்கைகளின் மனம் தேற்றி ஆறுதல் பரிசாக இவனும் குளிர்காய்ந்தான்.

கதவைத் திறந்து உள்ளே வந்தார் கங்காதரன். “என்ன சஞ்சய், நீ என்ன நினைக்கற? கொஞ்சம் சின்ன வயசுதான். ஆனாலும் பொறுமையா இருக்கறா. விஷய ஞானம் இருக்கு. முக்கியமா பேச்சு அளவா இருக்கு. தேவைப்பட்டா நான் பார்த்துக்கறேன்.”

“ஹ்ம்ம்..  மோகன் நீ போய் பேசுடா. ஓகேன்னா பாக்ரவுண்ட் செக் பண்ணிட்டு செலக்ட் பண்ணுவோம்னு சொல்லு. டெர்ம்ஸ் பேசிக்கோ”, அனுப்பியவன் காங்காதரன் புறம் திரும்பி, “இரங்கசாமி அங்கிள்கிட்ட பேசிடுங்க மாமா. ஒரு வாட்டி க்ராஸ் செக் பண்ணிடுங்க” என்பதோடு  அறையின் பக்கம் கவனம் திருப்பினான்.

மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்து உள்ளே நுழைந்தான் மோகன்.

பரஸ்பர அறிமுகம் முடித்தபின், “கார்பரேட்ல இருந்துட்டு சின்ன கம்பனிக்கு ஏன் மாற நினைக்கறீங்க மிஸ். ஜெயந்தி?”

“கார்ப்பரேட் கல்சர் இந்த இரண்டு வருஷத்துல போர் அடிச்சிடுச்சு சர். பட் எனக்கு இங்கே சரி வரும்னு தோணலை. மன்னிக்கணும்.”

அவள்  நேரடியாகக் கூறியதில் சற்று ஆர்வம் கூட, “எப்படி அந்த முடிவுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“நீங்க சைபர் செக்யூரிட்டி கம்பனிங்கறதுக்காக, மீட்டிங் ரூமெல்லாம் காமெரா மாட்டியிருக்கீங்க, ஆஃபீஸ் முழுக்கவும் இருக்குமாக்கும். வேலை பார்க்க வரோம், பிக் பாஸ் வீட்டுக்கு இல்லை. கூட கங்காதரன் சர் சொன்ன மாதிரி மெயின்டெய்ன் பண்ணனும்னா அதுல எனக்கு சம்மதம் இல்லை”, நேரடியாகவே சொல்லிவிட்டாள்.

அவள் பதிலில் மோகன் புன்னகைத்தான். “ஆஃபீஸ்ல காமெரா இருக்காது. ஓப்பன் ஸ்பேஸ்தான். ரொம்ப ஃப்ரெண்ட்லியாத்தான் இருப்போம். இன்டெர்வ்யூங்கறதால வெச்சிருக்கோம். எப்பவும் இருக்காது. காங்காதரன் சர் மாதிரி இல்லைன்னா, வேற எப்படி என்ன செய்வீங்கன்னு சொல்ல முடியுமா?”

அடுத்த சில நிமிடங்களில் மாற்றத்தினை கோடி காட்டினாள். அனைத்தும் மோகனுக்குப் பிடித்தது.