அடுத்த மூன்று நாட்கள் அமைதியாகக் கழிந்தது. வீடு , ஆஃபீஸ், இடையில் ஒரு முறை ரமா சித்தி வீடு என்று சென்றது தவிர்த்து ஒன்றும் நடக்கவில்லை.
அலுவலகத்திலும் அன்று நடந்ததைப்பற்றி எதுவும் பேசவில்லை. மதிய உணவின்போது அஞ்சலி அனத்தத் தொடங்கியிருந்தாள்.
“சொன்னேன்ல மாசக் கடைசில நீ ரிப்போர்ட் அனுப்பக்கூடாது, சிக் லீவ் எடுக்கணும்னு. செய்யப் போறியா இல்லையா?”
“அட ஏன் அஞ்சலி…”, ஜெயந்தி சலித்தாள்.
“அதேதான் கேட்கறேன். ஏன்? ஒரு வார்தை அன்னிக்கு நீ உதவி பண்ணதை பத்தி, அந்த சேல்ஸ் ஹெட் பாராட்டி ஈமெயில் அனுப்பினாரே அதுக்காவது ஒரு தாங்க்ஸ், ஒரு குட் ஜாப்னு எதாவது சொன்னானா? அப்பறம் எதுக்கு நீ செய்யணும்? நாளைக்கு நீ சிக் லீவ் போடற. நான் ஏற்கனவே லீவ் சொல்லியிருக்கேன். நான் உன் வீட்டுக்கு வரேன். நாம நெட்ஃப்ளிக்ஸ்ல கொரியன் ட்ராமா பார்க்கறோம்.”, திட்டம் தீட்டினாள் அஞ்சலி.
அதில் முறுவலித்த ஜெயந்தி, “லீவ் எடுத்த ஒரு நாள் வேலையும் சேர்த்து நாந்தான் செய்யணும் அஞ்சலி” பதிலளித்தாள்.
“கரெக்ட், அதனால க்வார்டர்லி ரிப்போர்ட் ரெடி பண்ண லேட் ஆகுது. இரண்டு நாள் திரும்ப லீவ் எடுக்கற. கொஞ்சம் டென்ஷனாவான். ஒரு நாள் ஆஃபீஸ் வர, அப்பறம் ஒரு வாரம் மொத்தமா லீவ். செர்ட்ஃபிக்கேட் எல்லாம் என் டாக்டர் மாமா தருவார். நான் சொல்லி வெச்சிருக்கேன்.”
“விளையாடாதே அஞ்சலி”
“யார் விளையாடறா? நான் நிஜமாதான் சொல்றேன். நீ அந்த கேப்ல வேற வேலை தேடு, ஆனா போறதுக்கு முந்தி இவனுங்களை கதற விட்டுட்டு போகணும். அந்த நிரஞ்சனுக்குப் புரியணும், மூஞ்சி அழகா இருந்தா போறாது. மனசும் அழகா இருக்கணும்.”, அஞ்சலி சிடுசிடுத்தாள்.
தனக்காக வாதாடுபவளைப் பார்த்துப் புன்னகைத்த ஜெயந்தி, மறுனாள் மருத்துவ விடுப்பு கூறிவிட்டு, அஞ்சலியோடு பொழுதைக் கழித்தாள். மாலை சிற்றுண்டி முடித்து அஞ்சலி கிளம்பவும், வீடு மீண்டும் அமைதியை தத்தெடுத்துக்கொண்டது.
நீண்ட நாட்கள் கழித்து, தன் வயதொத்த பெண்ணுடன் பேசி சிரித்து என்று இலகுவான பொழுதாக சென்றது. ‘ஒரு வேளை அம்மா இழப்புல ரொம்ப இறுகிட்டேனா?’. அவள் அன்னை இறந்த அதிர்ச்சி, இறக்கும் தருவாயில் அருகே கூட இருக்க விடவில்லை. அதன் பின்னரும், இறுதிச் சடங்கை செய்ய அத்தனை கெடுபிடி என்று அவள் மீளவே ஒரு வருடம் ஓடிவிட்டது. ரமா சித்தி வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தவள், அடுத்தும் ஒரு கோவிட் அலை வர, அன்னையோடு குடியிருந்த அவள் வீட்டிற்கு வந்துவிட்டாள். ஆனாலும் அங்கேயும் நினைவுகள் சுழன்றடிக்க, இந்த கார் கம்பனியின் வேலையும் அடுத்து இந்த வீட்டை வாங்கி குடியேற என்று அடுத்த ஒரு வருடம் ஓடியது. கல்யாணத்தை செய்யாமல் தனியாக வீடு வாங்குவதற்குக் கூட உறவுகள் மத்தியில் பேச்சு எழுந்தது.
ரமா சித்தியும், சுப்பு சித்தப்பாவும்தான் பக்கபலமாய் நின்று உதவினார்கள். இதோ ஒரு வருடமாய் அவர்களும் திருமணப் பேச்சை அடிக்கடி எடுக்கவும் தள்ளி நிற்கிறாள். ஒரு வேளை இவர்களின் பேச்சில்தான் நிரஞ்சனை வேறு கண்ணொட்டத்தில் பார்த்தோமோ? தன் உழைப்பு சுரண்டப்படுவது கூடத் தெரியாமல் அப்படி வெள்ளந்தியாக இருந்திருக்கிறோமே என்று அவள் மேலேயே கோவம் வந்தது.
‘தத்தியா இருந்துட்டு, உனக்கு மெச்சூரிட்டி ஜாஸ்தி, எல்லாரையும் கரெக்டா எடை போட்டுருவன்னு உனக்கு நீயே நினைச்சிட்டு இருக்க. சோ ஸ்டுப்பிட்!’ என்று முணுமுணுத்துவிட்டு சீக்கிரமே உண்டு உறங்கிகிட்டாள்.
மறு நாள் வந்தவளின் நலனை அக்கறையாக விசாரித்த நிரஞ்சன், “உனக்கு ஞாபகப் படுத்த அவசியமில்லைதான் ஸ்டில், அந்த க்வார்ட்டர்லி ரிப்போர்ட் ரெடி பண்ணி ஹெட் ஆஃபீஸ் அனுப்பணும் ஜெய். அடுத்த வாரம் இங்க இன்டெர்னலா ரெவ்யூ பண்ணிட்டு அனுப்பணும். நீ பார்த்துக்கோ. நான் இந்த வெள்ளி, அடுத்த மண்டே லீவ் . செவ்வாய்கிழமை ரெடியா இருக்கறமாதிரி பார்த்துக்கோ என்ன?”
“ஓஹ்.. என்ன விசேஷம் நிரஞ்சன்?”
“ஃப்ரெண்ட்ஸ் கூட, கேரளா வரைக்கும் சும்மா கொஞ்சம் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் ட்ரிப்”, அழகாய் முறுவலித்தான்.
புன்னகை முகம் மாறாமல் தலையசைத்துவிட்டு வந்து அமர்ந்தவளுக்குள் கனன்றது. ‘இவன் வேலையும் நான் இங்க மாங்கு மாங்குன்னு இழுத்து போட்டு செய்ய, இவன் ஊரை சுத்துவானா? நியாயமா, நான் ரிப்போர்ட் எடுத்து குடுத்தா, இவந்தான் சரி பார்த்து, ஃபைனல் பண்ணணும். எல்லாம் நானே சரி பார்த்து, ரெடி பண்ணி வெச்சா ஹாலிடே போகத்தான் சொல்லும். அஞ்சலி சொல்றதுதான் சரி. லீவ் கான்சல் பண்ண வெக்கறேன்’ , என்று கறுவியவள் அவளது அன்றாட வேலைகளை மட்டும் செய்தாள்.
புதன் காலை, அலர்ஜி, சேராது என்று தெரிந்தும் சாம்பிராணியை கொளுத்தி ஸ்வாமி படுத்திற்கெல்லாம் காட்டினாள். அடுத்த பத்து நிமிடங்களிலேயே அது வேலையைக் காட்டியது. தொடர் தும்மலுடன் அலுவலகம் சென்றாள்.
கண்கள் சிவந்து, நீர் வடிய, மாஸ்க்கும் போட்டுக்கொண்டு மூச்சுக்கும் சிரமமாக இருக்க, நிரஞ்சனே “நீ வேணா வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு ஜெய். சனிக்கிழமை கொஞ்சம் வேலை பார்த்து ரிப்போர்ட் ரெடி செய்திடு”, என்று சொல்லவும் தலையாட்டிவிட்டு அரை நாள் விடுப்பெடுத்தாள்.
மறு நாள் காலை தூங்கி எழுந்த கரகரப்புடனேயே, “நிரஞ்சன், ஃபீவரும் சேர்ந்திருக்கு. உடம்பு வலியும் இருக்கு. டாக்டர் பார்க்க போறேன். இன்னிக்கும் வரது டவுட்தான். பார்த்துட்டு சொல்றேன்.” வாட்ஸப்பில் குரல் பதிவு அனுப்பினாள்.
இரண்டு மணி நேரம் கழித்து, “டெங்குவாக இருக்கலாம் என்று இரத்தப் பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறார் டாக்டர். இன்று ஓய்வில் இருக்கச் சொல்லியிருக்கிறார். நாளை ரிசல்ட் பார்த்துவிட்டு அடுத்தது தெரிய வரும். அப்படி டெங்குவாக இருந்தால் மெடிகல் செர்டிஃபிகேட் வாங்கி அனுப்புகிறேன்.”, என்று குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிட்டு போனை சைலன்ட்டில் போட்டு வைத்தாள்.
அஞ்சலி மதியம் போல் அழைத்தாள். “இப்பத்தான் ஜால்ரா நிரஞ்சன் கிட்ட திட்டு வாங்கிட்டு வரான். கிலி பிடிக்க ஆரம்பிச்சிருக்கு”, கிசுகிசுப்பாகப் பேசினாலும், குரலில் குதூகலம் வழிந்தது.
“விஷயம் தெரிஞ்சா பிரச்சனையாகிடும் அஞ்சலி”, சற்றே கவலை கொண்டாள்.
“நைட் வீட்டுக்குப் போனதும், உன் டெங்கு ரிசல்ட் பாசிடிவ்னு வரும். எங்க அம்மாக்கு இரண்டு மாசம் முன்ன வந்தப்போ எடுத்த ரிப்போர்ட் இருக்கு, அழகா போட்டோ ஷாப் பண்ணி உன் பேரு, தேதி மாத்தி அனுப்பறேன். மாமாகிட்ட பேசிட்டேன். எம்.சி நைட் வந்துடும். நீ ப்ளான் ஃபாலோ பண்ணு போதும்”, தைரியமளித்தாள்.
அடுத்து ஒரு வாரம் ரமா சித்தியின் வீட்டிற்கு சென்றுவிட்டாள். போன் அவ்வப்போது அலறினாலும் எடுக்கவில்லை. குறுஞ்செய்திகள் நிரஞ்சன், பார்த்தியிடமிருந்தும் விவரம் கேட்டு வந்து குவிய மேலோட்டமாக மட்டும் சற்று காலம் தாழ்த்தி பதிலளித்தாள்.
தொண்டை வலி, பேச முடியவில்லை. உடம்பு வலியும் ஜுரமும் சேர்ந்து அதிக அசதி, தூக்கம். சித்தி வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லவும், அவ்வப்போது அவளிடமிருந்து வரும் பதில்களைத் தாண்டி எதுவும் செய்ய முடியவில்லை.
ஞாயிறு ரமா சித்தியின் வீட்டிற்கு தேடிக் கண்டுபிடித்து வந்துவிட்டாள் அஞ்சலி. அலுவலகத்தில் நடக்கும் விவரங்களைக் கூறி பொங்கிப் பொங்கி சிரித்தாள்.
“அட, என்ன செய்யலைன்னு கேளு. உங்கிட்ட வேலை கத்துக்கலையாம். ஹோட்டல்ல வந்து பாத்திகட்டி சாப்பிட தெரிஞ்சா மட்டும் போதுமா? ஜெயந்தி என்ன ரிப்போர்ட் எல்லாம் எடுத்து, எப்படி செக் பண்றா என்ன ஏதுன்னு தெரிஞ்சு வெச்சிக்கமாட்டியான்னு என் காதுபட குதறிக்கிட்டு இருந்தார்.”
ஜெயந்தி நினைத்தது போல், இதைக் கேட்டு பெரிதாக ஒரு திருப்தி வரவில்லை. அன்று லன்ச் மீட்டிங்கில் கிளையன்ட்டிடம் பேசி, தன் திறமையைக் காட்டியதில் இருந்த மகிழ்ச்சி, இவர்கள் இருவரும் அல்லாடுவதைக் கேட்பதில் வரவில்லை.
அதை அஞ்சலியிடம் சொல்லவும், அவள் முறைத்தாள். “ஆமா நீ அப்படியே அன்னை தெரசா! அவங்க கஷ்டத்தைக் கேட்டு பாவமா இருக்கா உனக்கு? ஒரே ஆளா நீ சனிக்கிழமை வேலை பார்த்து கஷ்ட்டப்பட்டப்போ அவனுங்க சந்தோஷமாதான சுத்திகிட்டு இருந்தாங்க?”
“ம்ப்ச்… பழிக்குப் பழின்னு போறதுல எனக்கு உடன்பாடு இல்லைன்னு சொல்றேன். ஆனா இது ஆரம்பிச்சாச்சு. முடிப்போம். அவங்களுக்கும் புரியட்டும் இதுல எவ்வளவு வேலை இருக்குன்னு. என்னவோ சென்ட்ரல் செர்வர்லர்ந்து ரிப்போர்ட் வந்துட்டா அப்படியே எடுத்து ஃபார்மேட் மாத்தி போடவேண்டியதுதான்ன்னு நினைக்கற நினைப்பு உடையட்டும்.”
சித்தி கொண்டு வந்து வைத்த காஃபியும் காரப்பொறியும் பேச்சினூடே காலியாகியிருந்தது.