உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தாள் ஜெயந்தி. கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டதில் வந்த மகிழ்ச்சி. சேல்ஸ் ஹெட் மட்டுமல்ல, கிளையன்ட் கூட திடீரென்று வந்தாலும், எல்லா கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உடனுக்குடன் விளக்கம் கூறியதை பாராட்டியிருந்தனர்.
சூட்டோடு சூடாக அவளைப் பற்றி நல்லவிதமாக ஒரு மின்னஞ்சலும் நிரஞ்சனுக்கும், அவன் உயர் அதிகாரிக்கும், ஹெச்.ஆர்க்கும் கூட எழுதியிருந்தார் ஜார்ஜ். சிறு விபத்து காரணமாக நிரஞ்சனால் மீட்டிங்கில் தொடர முடியவில்லை எனினும் அதை அழகாக ஈடு செய்து கிளையின்டின் நம்பிக்கையை பெற்றாள் என்றும் எழுதியிருந்தார்.
அக்கடாவென்று சோஃபாவில் அமர்ந்து நடந்தவற்றை மீண்டும் அசைபோட்டவள், அந்தப் பெரியவர் அடுத்து கண்ணில் தட்டுப்படவில்லை என்பதை நினைவு கூர்ந்தாள். அவள் காதோரம் “நாந்தான் தள்ளிவிட்டேன். நீ போய் அவனுக்கு பதிலாக பேசு” என்று உந்தியதோடு வேறு பேசவில்லை.
“நீங்க செஞ்சது கொஞ்சம் அதிகப்படின்னாலும், எங்க இருந்தாலும் தாங்க்ஸ் சர்”, என்று கூறவும்,
“இருக்கட்டும்மா. அதனால உனக்கு ஒரு நல்லது நடந்திருக்குன்னவும் எனக்கும் சந்தோஷம்”, என்று அவர் குரல் எதிரில் ஒலித்தது.
திகைப்பில் வாயை திறந்து மூடி என்று பேச முயற்சித்தவள், “இங்கதான் இருக்கீங்களா?” என்றாள் ஒரு வழியாக.
“ம்ம்… அங்க உன் ஆஃபீஸ்ல இருந்து எல்லாம் பார்த்துட்டு, இப்ப உன் கூடவேதான் வீட்டுக்கும் வந்தேன் ஜெயந்திமா”, என்றதில் பேய் முழி முழித்தாள்.
சற்றே அழமாட்டாத குறையாக, “சார்… அதுதான் நேத்தே சொல்லிட்டேனே இஷ்டமில்லைன்னு. அப்பறம் ஏன் சார் ஃபாலோ பண்றீங்க? தனியா இருக்கேன்னு நான் பாட்டு ட்ரெஸ் மாத்தப் போயிருந்தா என்னாவறது?”
“அட… நான் ஹால், கிச்சன் தாண்டி வரமாட்டேன் மா. நம்பு. என் பொண்ணு மாதிரி நீ. நேத்து ஆஃபீஸ்ல நீ வருத்தப்பட்டது பார்த்து எனக்கு எவ்வளவு கஷ்டமா போச்சு தெரியுமா? என்னடா செய்யறதுன்னு தவிச்சிட்டு இருந்தேனா, சான்ஸ் கிடைச்சுது, அவனுங்களை சிக்க வெச்சிட்டேன். ஆனா கிடைச்ச வாய்ப்பை அற்புதமா உபயோகிச்ச உன் திறமை சூப்பர் ஜெயந்திமா”, அவர் மனமார்ந்த பாராட்டில் கண்கள் லேசாய் வேர்த்தது.
“இனி வேணா, நீ வீட்டுக்குள்ள வந்ததும் நான் குரல் குடுத்துடவா?”, குருபரன் கேட்கவும், நிமிர்ந்து அமர்ந்தவள், “சார், இது என்னவோ தொடரப் போறா மாதிரி பேசறீங்க? நீங்க செஞ்சதுக்கு நன்றி சார். ஆனா கல்யாணம் பண்ணல்லாம் இஷ்டமில்லை. நீங்க திரும்ப எல்லாம் வர வேணாம். ப்ளீஸ்”, கை கூப்பினாள்.
“சரி… கல்யாணம் வேணாம். வேற வேலைக்காவது மாத்திக்கலாமில்லையா? எனக்கு ஒரு இடத்துல வேலை இருக்கு தெரியும். சொல்லவா?”
“ஒரு சிரமமும் இல்லை. இந்த வேலை பெருசா வெளிய தெரியாது. தெரிஞ்சவங்க மூலமா வரவங்களைத்தான் பரிசீலிக்கவே எடுத்துக்குவாங்க”, குருபரனும் விடாது பேசினார்.
“ஆவி ரெக்கமெண்டேஷன்ல அப்ளிகேஷன் போட்டேன்னு சொல்ல முடியாது சார்”, சிரித்துக்கொண்டே கூறினாள்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ உன் சீ.வி ரெடி பண்ணு”, என்றார் குருபரன் உரிமையாக.
“சரி சார். நான் பண்றேன்”, என்று ஒப்புக்கு சொல்லி வைத்தாள்.
இரண்டு நாட்கள் அமைதியாக செல்ல, அந்த ஞாயிறு காலை சோம்பலாய் சோஃபாவில் படுத்துக்கொண்டே டீ.வியில் சானல்கள் மாற்றிக்கொண்டிருந்தாள் ஜெயந்தி.
“குட் மார்னிங் ஜெயந்திமா. சி.வி ரெடி பண்ணிட்டியா?”, உற்சாகக் குரல் கேட்டு தட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
“ச…சார்… நீங்க என்ன பிக் பாஸ் மாதிரி திடீர்னு குரல் கொடுக்கறீங்க? இங்க தான் இருந்தீங்களா?”, திகைப்பாய் கேட்டாள்.
“ஹஹஹா! இல்லம்மா இப்பதான் வந்தேன். ரெடி பண்ணிட்டியா?”, வாசல் கதவு தாளிட்டிருந்தது. ஹ்ம்ம், பேய்க்கு கதவெல்லாம் ஒரு விஷயமா என்று நினைத்தவள், “ம்ம்…இன்னும் இல்லை…” இழுத்தாள்.
“என்ன ஜெயந்திமா. நாந்தான் சொல்லிட்டுப் போனேனே. இரண்டு நாளா என்ன செய்துட்டு இருந்த?” உரிமையாய் கண்டிக்கவும்,
“நீங்க என்ன வேலை..என்ன கம்பனி, என்ன சம்பளம்ன்னு விவரம் எதுவுமே சொல்லலை. எனக்கு சரின்னு பட்டாதான அப்ளிகேஷன் போடமுடியும்?” என்று திருப்பிக்கொடுத்தாள்.
சில நொடி அமைதிக்குப் பின், “அதுவும் சரிதான். இந்த காலத்துப் பொண்ணு. யாரோ சொன்னாங்கன்றதுக்காக செய்யணும்னு அவசியமில்லைதான்”, என்றவர்,
“கூகிள்ல தி வால்ட், சென்னைன்னு தேடு. கம்ப்யூட்டர் செக்யூரிட்டி கம்பனி வரும். அதுல போய் பாரு”, என்றது குருபரனின் குரல்.
‘சரி… ஒப்புக்கு பார்த்துட்டு எதாவது நொட்டை சொல்லி முடிச்சு விட்டுருவோம்’, என்று நினைத்தவள் தன் அலைபேசியிலேயே தேடினாள்.
சிறிய நிறுவனம், தொடங்கி மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. கம்பனிகளுக்கு சைபர் செக்யூரிட்டி செய்து தருவதுதான் பிரதான சேவையாக இருந்தது.
“இது ரொம்ப சின்ன கம்பனி சார். நான் இப்ப வாங்கற அளவுக்கு சம்பளம் தர மாட்டாங்க”, என்று நிராகரித்தாள்.
“அப்படி அவசரபட்டு முடிவுக்கு வரக்கூடாதுமா. பெரிய கம்பனிகள் சிலதுக்கு இவங்கதான் சைபர் பாதுகாப்புக்கு கன்சல்டன்சியா இருக்காங்க. இங்க நீ யாருக்கும் அசிஸ்டென்டா இருக்கவேணாம். நீதான் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்ப. பெரிய நிறுவனத்துல சின்ன போஸ்ட்ல இருக்கறதைவிட சின்ன நிறுவனத்துல பெரிய போஸ்ட்ல இருந்தா உனக்கும் எக்ஸ்பீரியன்ஸ் வருமே ஜெயந்திமா.”
அவர் நியாயமாகப் பேச, உதட்டைக் கடித்தவள், “நான் கார் கம்பனில வேலை பார்க்கறேன். சைபர் செக்யூரிட்டி பத்தி எதுவுமே தெரியாதே சார். எப்படி என்னை எடுப்பாங்க?”, அடுத்த பந்தை வீசினாள்.
“வரவு செலவு, லாப நஷ்டம் கணக்கு பண்றது எல்லா கம்பனிலையும் ஒரே மாதிரிதான ஜெயந்திமா. மிச்சதெல்லாம் கத்துக்கலாம். எடுத்ததும் கார் பத்தி எல்லாம் தெரிஞ்சிகிட்டா இந்த வேலைக்கு சேர்ந்த?”
‘இது என்னடா சோதனை! என்ன சொன்னாலும் மனுஷன் ..ச்சே பேய் மடக்குதே’, என்று யோசித்தவள், “இங்க வேக்கன்சி இருக்குன்னு எதுவும் சொல்லலையே சார். என்னன்னு நான் அப்ளிகேஷன் போடறது?”
“அதான் சொன்னேனே. தெரிஞ்சவங்க மூலமா மட்டும்தான் ஆள் எடுக்கறாங்க. நீ மாயவரம் இரங்கசாமி அப்ளிகேஷன் போட சொன்னார். உங்க அப்பாவோட நண்பர்னு எழுதி உன் அப்ளிகேஷன் போடு.”
“மாயவரம் இரங்கசாமி யார் சார்?”
“அதான் சொன்னேனே, உங்க அப்பாவோட ஃப்ரெண்டு”
பதில் பேசாது அந்த ஒற்றை நாற்காலியின் பக்கம் முறைத்தாள்.
“அவங்க கூப்பிட்டாதான் நீங்க இங்க வரலாம். இல்லைன்னா சும்மா சும்மா வரக்கூடாது. டீலா?”, அவள் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருப்பதால், இவர்கள் அழைக்க மாட்டார்கள் என்று நினைத்து பேரம் பேசினாள்.
“ஆகட்டும். நீ போடு”, உடனே சம்மதம் வந்தது.
தன் பழைய ரெசுமை எடுத்து, அதில் தற்போதைய வேலை பற்றி எழுதிக்கொண்டே, “சார், ஒரு விஷயம் எனக்கு புரியலை. தமையா மேடம் என் ஜாதகத்தை ஏஜென்சில வாங்கிட்டு போனாங்க. ஆனா பாவம் இறந்துட்டாங்க. நீங்க தமையா மேடத்துக்கு யார்? அவங்க பிள்ளைக்கு பொண்ணு தேட அவங்க வராம நீங்க ஏன் வந்தீங்க?”, சந்தேகத்தை கேட்டாள்.
“அது…தமையா..தமையந்தி ரொம்ப நல்ல பொண்ணு, அமைதியான பொண்ணு. நல்ல வாழ்க்கை அமையலைன்னாலும், தங்கமான பிள்ளை. அவனுக்கு ஒரு நல்லது நடக்கறதுக்கு முன்னாடியே இறந்துட்டமேன்னு ஒரே கவலை அவளுக்கு”, கனிவாய் சொல்ல,
“நீங்க அவங்க அண்ணனா?”
“சேச்சே…”, வேகமாக வந்தது மறுப்பு”
“வேற?”
“ம்ப்ச்… வாழ்க்கை முழுசும் கூட வருவான்னு எதிர்பார்த்தேன். குடுப்பினை இல்லை”, பெருமூச்சு ஒன்று வந்தது.
கணினியில் தட்டச்சு செய்வதை நிறுத்தியவள், “ஓஹ்… லவ்வா?”
“ம்ம்.. “, மெலிந்து வந்தது குருபரனின் குரல்.
“ஏன் பிரிஞ்சிட்டீங்க சார்?”
“ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்தம்னு புரிஞ்சு, அவளுக்கு தைரியம் வந்து பேசற வேளைக்கு, அவ அப்பன் அவளுக்கு மாப்பிள்ளயை கூட்டிட்டு வந்துட்டான். ஓடிப்போற அளவுக்கு எனக்கு திடமும் இல்லை அவளுக்கு தைரியமும் இல்லை. அப்பாம்மா பார்த்த வரனை கட்டிகிட்டு வாழ்ந்துட்டோம். நான் இளைபாறும் இடமா அவ நினைவு மட்டுமே இருந்தது”, இளகி சற்றே நெகிழ்ந்து வந்தது குருபரனின் குரல்.
ஒரு நொடி அமைதிக்குப் பின், “ஹ்ம்ம்… உங்களுக்காவது ஒரு லவ், அதோட மெமரின்னு இருக்கு. இருவத்தியெட்டு முடிஞ்சுது ஒன்னும் தோணலை. லைட்டா கொஞ்சம் தடுமாறினதுக்கே ஆதாயம் தேடறாங்க. இதுல யாரை நம்பி…எங்க… ஹூம்ம்ம்”, பெருமூச்சு இப்போது ஜெயந்தியிடமிருந்து வந்தது.
“இன்னும் வயசு இருக்கே ஜெயந்திமா. நல்ல வரனா அமையும் உனக்கு”, மனதார வாழ்த்தினார்.
“சரி… இன்னும் என் மிச்ச கேள்விக்கு பதில் வரலையே. அவங்க வராம நீங்க மட்டும் வந்திருக்கீங்களே ஏன்?”
“ஏன், அவ வந்திருந்தா நீ சம்மதம் சொல்லியிருப்பியா?”
“ஹான்… நீங்க எங்கம்மாவை தேடி பிடிச்சு கூட்டிட்டு வந்திருந்தாலும் நோதான் சொல்லுவேன்”
“ம்ம்… உன் அம்மா, அப்பா பத்தி நீ எதுவும் கேட்கலையேன்னு நினைச்சேன். அவங்க பத்தி தெரியணுமா?”
சில நொடிகள் மௌனமாக இருந்தவள், “உங்க ஃப்ரெண்ட் தமையந்தி மாதிரி எங்கம்மா அழுதிட்டு இருக்காங்களா? அழ வேணாம்னு சொல்லுங்க. அவ்வளவுதான்.”
“அவங்களை கூட்டிட்டு வந்தா ஒரு வேளை நீ சம்மதிக்கலாம்னு தேடினேன். அவங்க இல்லை”
“ஏன்? எங்க போயிட்டாங்க?”
“ம்ம்.. அது எப்படி சொல்றது. ஆயுள் காலம் முடிஞ்சு இறக்கறவங்க இப்படி ஆவியா சுத்த மாட்டாங்க. அதுக்கு முன்னாடியே இறந்துட்டா, விதிக்கப்பட்ட ஆயுள் முடியற வரை இப்படிக் காத்திருக்கணும்.”
அவர் சொன்னதை அசைபோட்டவள், “ஆயுள் முடிஞ்சதும் எங்க போவாங்க சார்?” கேட்க,
“முடிஞ்ச அப்பறம்தான் தெரியும். ஆன்மாவுக்கு அழிவில்லையே, அடுத்த பிறப்பை நோக்கி போகுமா இருக்கும்.”
“அப்போ நீங்க உங்க காலம் முடியறதுக்குள்ளையே எப்படி சார் இறந்துட்டீங்க?”
“அடடா. நீ செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு என்னை பேட்டி எடுக்காதே. முதல்ல ரெடி செய்து ஈமெயிலை அனுப்பு. அங்க சைட்ல இருக்க அதே மெயில் ஐடிதான்.” பேச்சை திசை திருப்பிவிட்டார்.