மற்றவர்கள் முழிக்க, அஞ்சலியும் ஜெயந்தியும் சிரிக்க, “டேய்… “, என்று மோகனைப் பார்த்து பல்லைக் கடித்தான் சஞ்சய். அவசரமாக “அலெக்சா ப்ளே நாதஸ்வரம்”, என்று உத்தரவிட, சமத்தாக பாட்டை மாற்றியது.
சஞ்சயின் முறைப்பில், “ஹி ஹி… இராத்திரி பன்னெண்டு மணிக்கு பாட செட் பண்ணிருந்தேன் நினைச்சேன் மச்சி…அது மதியம் பாடித் தொலைச்சிருச்சு”
“சொதப்பிட்டியே செவ்வாழை…”, என்று அஞ்சலி வேறு துக்கம் கொண்டாட, “எதோ மிஸ்சாயிடுச்சு. இப்ப என்ன? வேற சர்ப்ரைஸ் பண்ணலாம்”, என்று தட்டிவிட்டான்.
”டேய்… ஆணியே புடுங்கவேணாம். அமைதியா இரு.”, என்ற சஞ்சய் பால் பழம் வர அதில் கவனம் திருப்பினான்.
வீட்டை சுத்திக்காட்டுகிறேன் என்று மாடிக்கு ஜெயந்தியை அழைத்துச் செல்ல, அவன் அறையைப் பார்க்கும் படபடப்புடன் நடந்து வந்தாள்.
“உரிமையோடு பார்க்கற ஃபீல் நல்லாருக்கா ஜதி? “, ஞாபகம் வைத்துக் கேட்பவனைப் பார்த்து புன்னகையையே பதிலாகத் தந்தாள்.
“என்ன ஜதிமா, காலையிலருந்தே பேச்சே ரொம்ப கம்மியா இருக்கு. என்னாச்சு?”, கைபிடித்து வந்தவன் ஒரு கதவை திறந்து, “இது அம்மா ரூம். நான் பெருசா மாத்தலை. பட், கெஸ்ட் ரூமா மாத்திக்கலாம். நீ பார்த்துட்டு சொல்லு.”, என்றான்.
சரி என்பதாக தலையசைக்க, “ஏன் ஜெயந்தி பேச மாட்டேங்கற?” என்றான் சற்று கவலையாக.
“அச்சோ அதெல்லாம் ஒன்னுமில்லை. ஜஸ்ட் ப்யூர் சந்தோஷம். அதை அனுபவிச்சிட்டு இருக்கேன். இந்த சில வருஷம் தனியா நிறைய நேரம் ஃபீல் பண்ணியிருக்கேன். இப்ப திரும்பவும் நான் தனியில்லை, எனக்கே எனக்குன்னு ஒரு பந்தம்னு …” அதற்கு மேல் சொல்லத் தெரியாமல் லேசாக உதடு துடிக்க, அதை கடித்து தோள் குலுக்கினாள் ஜெயந்தி.
அவளை தோளணைத்தவன், “ஹ்ம்ம்.. இனி எப்பவும் தனியில்லை”, என்று நெற்றியில் முத்தமிட்டவன், “வா நம்மோட ரூம் பார்க்கலாம்” என்று எதிர்புறம் இருந்த அறையை திறந்தான்.
பளிச்சென்று வெளிச்சமாக இருந்தது மட்டும்தான் உணர்ந்தாள். அடுத்த நொடி கையில் தூக்கியிருந்தான்.
உள்ளே நுழைய, “அச்சோ…சஞ்சய்”, என்று அவன் தோளைப் பற்ற, “ம்ம்.. இந்த அச்சோ சஞ்சய்யை பல மாடுலேஷன்ல கேட்க ஆசையா இருக்கே… என்ன பண்ணலாம்?”, என்று புருவம் நெளித்து குறும்புப் பார்வை பார்க்க, அவன் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டாள் ஜெயந்தி.
“கண்ணா… ராசா…குடும்பமே கீழ காத்துகிட்டு இருக்குடா…. “, என்று மோகனின் குரல் இராகமாகக் கேட்டது. அவசரமாக இறங்கி தள்ளி நின்றாள் ஜெயந்தி.
“வாடா… கூட்டிட்டு வந்து இரண்டு நிமிஷம் கூட ஆகலை அதுக்குள்ள என்னடா?”, என்று சஞ்சய் குரல் தர, “என்னை கேட்காதே… போய் லக்ஷ்மி மாமியைக் கேளு”, என்று மோகன் மீண்டும் அங்கிருந்தே குரல் மட்டும் தர,
“இவனோட…”, என்று சஞ்சய் வெளியில் சென்றான் பின்னோடே ஜெயந்தியும் வந்துவிட்டாள்.
“நீ பார்த்துட்டு வா ஜெயந்தி”, என்று சஞ்சய் சொல்ல, “அதுதான் நீ ஆஃபீசே கதின்னு இருக்கும்போது, விட்டத்தைப் பார்த்துகிட்டு ஜெயந்தி அங்கதான இருக்கப் போறா? அப்ப பார்த்துக்கலாம். உன் பெரியம்மா எதாவது கமென்ட் அடிக்கப் போகுது. இப்ப வாங்க.”, என்று படியிறங்கினான்.
“அவன் கிடக்கறான் ஜதிமா… நீ அதெல்லாம் வொர்ரி பண்ணாத..”, எனவும், வேண்டுமென்றே, “அச்சோ சஞ்சய்..”, என்றாள் பாவமாக.
அவள் காதைப் பிடித்துத் திருகியவன், “குறும்பு? நைட் எனக்கு வேணுங்கற மாடுலேஷன்லல்லாம் வரவெக்கறேன் ஜதிகுட்டி… ஜஸ்ட் யூ வெயிட்!”, என்று செல்லமாக மிரட்டிவிட்டு இறங்கினான்.
மோகன் இவர்களோடு இருக்க, அஞ்சலி ரமா சித்தியோடு வந்திறங்கிய மதிய உணவிற்கான ஆர்டர் சரிபார்க்க, அஞ்சலியின் தாய் மஞ்சுளாவும், மோகனின் அன்னை புனிதாவும் நெருங்கிய தோழிகளாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“ம்ம்.. எங்களுக்கு சம்மதம்தான் புனிதா. இதுங்க இரண்டும் எப்படி சமாளிக்கறது? அஞ்சலி கிட்ட லேசு பாசா மோகன் பத்தி கேட்டதுக்கே, அதெல்லாம் அம்…வந்து …முடியாதுன்னிட்டா”, அவள் ‘அவன் வெத்து பீஸ்மா, டம்மி பட்டாசு” என்றெல்லாம் மகள் அடைமொழி வைத்து அழைத்ததை கூற முடியாது மழுப்பினார்.
தங்களைப் பற்றிய சதி வேலை நடப்பது தெரியாமல் இருவரும் அடுத்து ரிசெப்ஷன் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். மாலையில் நெருங்கிய சொந்தங்களுக்கும், அலுவலக ஊழியர்கள், தொழில் முறை நட்புகள் என்று ஹோட்டலில் வரவேற்பு.
பளிச்சென்ற மஞ்சள் சாண்டிலியர் வெளிச்சத்தில் அரங்கமே ஜொலித்துக்கொண்டிருந்தது. முத்தாய்ப்பாய் மேடையில் பூரிப்புடன் நின்ற ஜோடியின் முகமே அவர்களின் அக மகிழ்ச்சியைக் காட்டிக்கொண்டிருந்தன. மோகன் தொழில்முறை நண்பர்களை கவனித்து மேடைக்கு அழைத்து வர சன்ஜய் மனைவிக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தான்.
மஞ்சு வந்தவள், “அக்கா…செம்ம அழகா இருக்கீங்க!”, என்று சந்தோஷித்தவள், “அக்கா இதனாலதான் வேலையை ரிசைன் பண்ணீங்களா? அப்போ ஹஸ்பண்ட் வைஃபா சேர்ந்து வேலை பார்க்கக் கூடாதாக்கா?” என்று கேட்க, ஜெயந்தி முழித்தாள்.
“அது. வந்து இந்த நவீன் இல்ல?அவன் ப்ரபோஸ் பண்ணாங்க்கா…”, என்று அசடு வழியக் கூற, புன் சிரிப்போடு, “கம்பனி ரூல்ஸ் ராகினிகிட்டதான் கேட்கணும். நான் முடிவெடுத்தது இதுனால இல்லை மஞ்சு. கங்க்ராட்ஸ், நவீன் நல்ல சாய்ஸ்”, என்று வாழ்த்தியனுப்பினாள்.
“என்ன, வால்ட்ல கன்சல்டன்சி வேலை பார்க்கறியா?”, என்று அருகில் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலி கேலி பேசினாள்.
அஞ்சலி மேடையிலிருந்து பார்த்துக்கொள்ள, மோகன் முக்கியமானவர்களுடன் வரும்பொழுது மணமக்கள் அவர்களிடம் பேச ஏதுவாக மற்றவர்களை கிளப்பிவிடுவாள். இது அனேகமாக சைகை மூலமாகவே பார்த்து செய்து கொண்டிருந்தனர்.
“பார்த்தீங்களா புனிதா, இரண்டு பேரும் என்னமா சைகையிலேயே பேசிக்கறாங்க? நிறைய புரிதல் இருக்கும்னு தோணுது. என்னவோ வீம்பு இரண்டும் கல்யாணப் பேச்செடுத்தா முறுக்கறாங்க. எதாவது கோல்மால் பண்ணித்தான் சிக்க வைக்கணும்.”, அஞ்சலிக்கு அம்மாடா நான் என்று மஞ்சுளா நிரூபித்துக்கொண்டிருந்தார்.
“அதேதான் நானும் நினைச்சேன் மஞ்சுளா! என்ன பண்ணனும் சொல்லுங்க. செஞ்சிடுவோம். அடுத்த மூணு மாசத்துக்குள்ள என் புள்ளைக்கு லாடம் கட்டறதே சரி!”, சபதமே எடுத்தார் புனிதா.
மேடையில் நால்வருமாக சிரித்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
இரவு சஞ்சய் வீட்டில் ஒரு வழியாக வந்தடையவே நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அஞ்சலி உதவியுடன் ஹோட்டல் அறையிலேயே அலங்காரங்களைக் களைந்து சேலைக்கு மாறியிருந்தாள் ஜெயந்தி.
“மச்சி, காலையில ஒன்பது மணிக்கு டாண்னு ஆஃபீஸ்ல இருக்கணும். வேலைதான் உனக்கு குலதெய்வம்ன்ற பேரைக் காப்பாத்தணும்”, மோகன் மிரட்ட, “போடா… ஒரு வாரம் கழிச்சுத்தான் எதுவுமே. அதுவரை ஆஃபீஸ் நடுத்தெருவுக்கு வந்துடாம காப்பாத்து. அது போறும்.”, ஜெயந்தி முன்னிலையில் முறுக்கினான் சஞ்சய்.
“அப்ப எதுவும் டிசைட் பண்ணனும்னா நானே பண்ணிடவா? உன்னை போன் செய்து டிஸ்டர்ப் செய்யக்கூடாதா? அப்ப ஓகே!”, மோகன் தோளைக் குலுக்க, அவனை கடுப்போடு பார்த்தான் சஞ்சய்.
நமுட்டுச் சிரிப்போடு, “நம்பணும் மச்சான். நம்பிக்கைதான் வாழ்க்கை”, என்று கண்ணடித்தவன், “சொல்லிக்குடுமா தங்கச்சி!”, என்று அறிவுரைத்துவிட்டுக் கிளம்பினான்.
உடன் வந்த சித்தி, சித்தப்பாவும் கிளம்பிவிட, அமைதியாய் கைப்பிடித்து அவர்கள் அறைக்கு அழைத்துவந்தான் சஞ்சய். அந்த இரவுக்கான அலங்காரங்கள் இல்லாமல் அமைதியான அழகுடன் இருந்தது.
“நீ பெருசா அலங்காரம் எதிர்பார்க்கமாட்டன்னு நினைச்சுத்தான் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.”, சரிதானே என்று அவளைப் பார்க்க, சரி என்று தலையசைத்தாள்.
“என்னம்மா… டயர்டா இருக்கா? ரிலாக்ஸ். தூங்கணும்னா ஒன்னும் ப்ராப்ளம் இல்லை”, என்று அவள் முகம் நோக்க, “அச்சோ சஞ்சய்…”, வெட்கப்பட்டு அழைத்தாள் ஜெயந்தி.
“ஓஹ்…”, ஆசைப்பட்ட ஜாக்பாட் அடித்தது போல மலர்ந்தான் சஞ்சய்.
மெல்லிதாக இளையராஜாவின் இன்னிசை மழை ஒலிக்க, ஒவ்வொருவராக குளித்து இலகுவான உடைக்கு மாறி வர, அமைதியாக சோஃபாவில் இசையை அனுபவித்துக்கொண்டிருந்தான்.
“இதுதான் உங்க நைட் ரொடீன் இல்ல சஞ்சய்? ஆஃபீஸ்லர்ந்து வந்து குளிச்சு, சாப்பிட்டு பாட்டை ரசிச்சிட்டு இருப்பீங்க இல்ல? இந்த நேரம்தான் எனக்கு போன் செய்வீங்க?”
ஜெயந்தியின் கைபிடித்து, மடியில் அமர வைத்து, அவள் சோப்பின் வாசனை நுகர்ந்தவன், “ஹ்ம்ம்.. அப்ப போனுக்கு பதிலா, இப்படி என் மடியில எப்ப உட்கார வெச்சிக்கலாம்னு நினைச்சேன். இடையில நீ இல்லைன்னா என்னாவேன்னு இந்த சோஃபாலயே யோசிச்சு, பயந்து, அரைகுறையா தூங்கி…இதோ ஃபைனலி”, என்று அவளோடே சேர்ந்து சாய்ந்துகொண்டான்.
“சஞ்சய்…”, என்று அவன் கன்னம் தடவினாள். அவள் கைகளுக்கு முத்தம் பதித்தான். “ம்ம்… எப்ப அச்சோ சஞ்சய்க்கான நேரம் ஜதிமா?”, கிறக்கமாக கேட்க, “அச்சோ சஞ்சய்”, என்று ஹஸ்கி வாய்சில் காதருகில் காதல் சொன்னாள் மனையாள்.
சஞ்சயின் ஆசையை வித விதமாக அழைத்து பூர்த்தி செய்தவள், முடிவில் அவனுடைய “ஓஹ்…அச்சோ ஜெயந்தி.. இங்க்ரெடிபிள்”, என்று அவனிடமிருந்தும் பூரிப்புடன் பட்டம் வாங்கிக்கொண்டாள்.
பேச்சுகள் மறந்து, மனம் பூரித்து உடல் களைத்து தூக்கம் மெல்ல நெருங்கும் நேரம் லேசாக இன்னிசை ஒலித்தது. அதுவரை அமைதியாக இருந்த அலெக்ஸா அந்த மெலடிப் பாடலை ஒலிக்க விட,
“அட… எப்படி திடீர்னு பாடுது?”
“ம்ம்… மோகன் என்னோட அலெக்ஸா ஆப் வெச்சிருக்கான். அவந்தான் போடறான் போல…”, என்றவன் பாடலுடன் சேர்த்து ஹம் செய்ய,
“யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே” என்ற பாடல் அவர்களைத் தழுவியது.
“ரஹ்மானும் மெலடில கலக்கியிருக்காருடான்னு அப்பப்ப போட்டு விடுவான். இன்னிக்கு ஸ்பெஷல்…பரவாயில்லை, கில்மா பாட்டு ஜில்மா பாட்டுன்னு போடாம…”, என்றவன் ஜெயந்தியை இழுத்து தன் அணைப்பில் கொண்டு வந்து,
“இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது… காதல் காதல் காதல் என்று அலெக்ஸாவுடனே பாடியவன் “குட் நைட் ஜதிமா”, என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
ஒருவர் வசம் மற்றவர் பாதுகாப்பாய் இருக்க, அவர்கள் நேசம் நிறைந்து, வளர்ந்து, பக்குவப்பட்டு மேலும் மேலும் பூத்துக்குலுங்கும்.