அத்தியாயம் – 27

நிச்சயம் முடிந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தார்கள் இராம்மோகன் குடும்பத்தினர்.

பின் சீட்டிலிருந்த மோகனின் தாயார் புனிதா, “ஏங்க, அந்த அஞ்சலி பொண்ணு அழகா இருந்தா இல்ல? பொறுப்பா எல்லா வேலையும் பார்த்துகிட்டா. ஏன் மோகன் அவங்க வீட்டுல கல்யாணத்துக்கு பார்க்கறாங்களா?”

மாலை ஒரு பார்ட்டிக்குச் செல்ல யோசித்துக்கொண்டிருந்தவன், விட்டேத்தியாக, “தெரியலைமா, பார்ப்பாங்களா இருக்கும்”, என்று காரை ஓட்டுவதில் கவனம் வைத்தான்.

“ஏங்க, நம்ம மோகனுக்கு கேட்டுப் பார்க்கலாமா? சாதி எதுவும்..”, என்று கூறிக்கொண்டிருக்கையிலேயே,

“என்னது? அந்த இராட்சசியையா… சும்மா இரும்மா!”, அலறினான் மோகன்.

“மோகன்! என்னதிது? ஒரு பொண்ணை இப்படில்லாம் பேசக்கூடாது”, என்று அவன் தந்தை ஜெயமோகன் அதட்ட,

“அப்பா… அவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. அம்மா இதெல்லாம் செட் ஆகாது, அந்த நினைப்பையே அழிச்சிரு”, என்று எச்சரித்தான்.

அதுவே புனிதாவின் ஆர்வத்தைக் கிளறியது.

“ஓ… உனக்கு அஞ்சலியை முன்னாடியே தெரியுமா?”

“ம்ம்.. ஜெயந்தி ஒரு நாள் என்னையும் சஞ்சயும் அவ வீட்டுக்கு லன்சுக்கு கூப்பிடிருந்தா. அப்ப அஞ்சலியும் வந்திருந்தா. “

“அப்பறம்?”

“அப்பறம் என்ன? அவ்வளவுதான்”, வள்ளென்று விழுந்தான்.

“சரியில்லையே. அப்படி என்ன நடந்துச்சு, அவளுக்கு இராட்சசின்னு பேரு வெச்சிருக்க?”

“ம்ம்.. அவகூடத்தான் எனக்கு செவ்வாழைன்னு பேரு வெச்சிருக்கா. இதெல்லாம் ஒரு மேட்டரா?”

“பொண்ணு அழகா இருக்கவும், உன் மகன் கடலை போட ட்ரை பண்ணிருப்பான், பருப்பு வெந்திருக்காது, அதுதான் பம்மறான். “, ஜெயமோகன் மகனை சரியாக கணித்தார்.

அதில் இன்னும் எரிச்சலாகி பல்லைக் கடித்தவன், “ப்பா…அதெல்லாம் ஒன்னுமில்லை. அவளுக்கு ரொம்ப திமிர். ஜெயந்தியை சந்தேகப்பட்டான்னு சஞ்சய் வீட்டுக்கே அன்னிக்கு நைட் போய் அவனை டார் டாரா கிழிச்சா, பத்தாததுக்கு கங்கா மாமாகிட்ட வேற போட்டு குடுத்துட்டு வந்திருக்கா. அவல்லாம் ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கறதே பெட்டர்!”

“அவ ஃப்ரெண்டுக்காக  சண்டை போட்டது எப்படிடா திமிராகும்?  நீ என்னவோ களவாணித்தனம் பண்ணியிருப்ப”, புனிதா அஞ்சலி பக்கமே பேச, ஒரு உஷ்ணப் பெருமூச்சு விட்டவன்,

“இந்தாம்மா… அவளே சொன்னா எனக்கு காலேஜ் முடிச்சு வந்த சாந்தமான பொண்ணுதான் செட் ஆவான்னு. நீ அந்த மாதிரியே பாரு. “

கடகடவென்று சிரித்தார் ஜெயமோகன்.

“என்ன சிரிப்பு?”, என்று அவரிடம் பாய்ந்தான்.

“புனிதா… எனக்கு புரிஞ்சிடுச்சு. உன் புள்ளை அந்த பொண்ணுகிட்ட வாலாட்டியிருக்கான். அது, ‘ஒட்ட வெட்டிருவேன். பால்வாடி பொண்ணு எதாவது கட்டிக்கோ, நீ காட்டுற பிலிமெல்லாம் அவள்ட்டதான் செல்லும்’’னு சொல்லியிருக்கு! விவரமான புள்ளையாத்தான் தெரியுது. ஐ லைக் ஹெர்”, என்று சர்டிஃபிக்கேட் வேறு தர, மோகன் மேலும் புகைந்தான்.

“உங்க பிள்ளையை ஒருத்தி டாமேஜ் பண்ணா, அவளுக்கு போய் சப்போர்ட் பண்றீங்களே, நீங்கல்லாம் ஒரு பேரண்ட்சா…சே அவமானமா இருக்கு!”, வீட்டு வாசலில் காரை நிறுத்தினான்.

“ம்ம்.. பால்வாடி பொண்ணை உனக்கு கட்டி வெச்சிட்டு, நீ பண்ற தில்லாலங்கிடி வேலையை அவங்க அப்பா அம்மா பார்த்துட்டு வந்து பஞ்சாயத்தை கூட்டினா எங்க பாடு இல்ல திண்டாட்டமா போகும். உனக்கு அஞ்சலி மாதிரி ஒருத்தி வந்தாதான் உன் ஆட்டதையெல்லாம் மூட்டைகட்டிட்டு ஒழுக்கமா இருப்ப!”, சிம்மிவிட்டு சென்றார் புனிதா.

இரண்டு வாரம் கழித்து, அந்த ஞாயிறு காலை ஏழரை மணிக்கெல்லாம் சொந்தம் சூழ ஜெயந்தி மங்களகரமான மாம்பழ மஞ்சளும், அடர் பச்சை பார்டரில் பொன் சரிகை மின்ன, ஆரி வொர்க் ரவிக்கை சேலை அழகை இன்னும் கூட்ட, பொன்னாபரணம் காலைக்கதிரில் மின்ன, மணப்பெண்ணாக ஜொலித்தபடி நடந்து வந்தாள்.

“மச்சி… வாயை மூடுறா, ஈ உள்ள போயிடப்போது”, என்று மோகன் விலாவில் குத்த, கை நீட்டி, ஜெயந்தியை அருகில்  நிற்க வைத்த சஞ்சய், “வாவ்… அடையாளமே தெரியலை ஜதிமா. கார்ஜியஸ்”, என்று சொல்ல, அவன் செல்லப் பெயர் வைத்துக் கூப்பிடுவதைக் கேட்ட அஞ்சலியும் மோகனும் புருவம் உயர்த்தி, ‘பாருடா…’, என்று ஒரே நேரம் சொல்லி சிரித்துக் கொண்டனர்.

 நெருங்கிய சுற்றம் சூழ முருகன் முன்னிலையில் மங்கல நாணை ஜெயந்தியின் கழுத்தில் பூட்டினான் சஞ்சய்.

அஞ்சலி நாத்தனார் முடிச்சு போட, ரமா சித்தி கண்கள் கலங்கிவிட்டார். ‘அக்கா, மாமா நல்லபடியா பொண்ணை கட்டிக்குடுத்துட்டேன். கூட இருந்து நீங்கதான் பார்த்துக்கணும்’, என்று வேண்டிக்கொண்டார்.

ஜெயந்தியோ, ‘குரு சார். நீங்க இருந்து பார்க்க குடுத்து வைக்கலைன்னாலும், உங்க ஆசை நிறைவேறிடுச்சு. அவங்க பொண்ணைப் பார்த்துக்க சிறப்பான மாப்பிள்ளையை கைகாட்டினீங்கன்னு என் அப்பாம்மாகிட்ட சொல்லிடுங்க’, என்று நினைத்துக்கொண்டாள்.

சஞ்சயோ, ’அம்மா  நீ பார்த்து வெச்சிட்டு போன பொண்ணுதான் எனக்கு மனைவியா அமைஞ்சிருக்கா. நீதான்  தெய்வமா இருந்து சேர்த்து வெச்சியா? உன்னைப் போலவே என் மேல அத்தனை அன்பு வெச்சிருக்கா. அவளை நல்லா பார்த்துக்குவேன்மா. ‘, என்று வாக்குறுதி கொடுத்தான்.

அனைவரும் கோவில் பிராகரம் வர, தமையந்தியின் அக்கா முறையில் இருந்த ஒரு அம்மா, “எப்பா…சஞ்சய்.  தமையா போனதும் எங்களையெல்லாம் மறந்துட்டியோன்னு நினைச்சோம். ஞாபகமா வந்து உன் கல்யாணத்துக்கு கூப்பிட்டியே ரொம்ப சந்தோஷம்.” என்றவர், ஜெயந்தியின் புறம் திரும்பி,

“எல்லாரையும் கூப்பிடணும்னு, நீதான் கண்ணு சொன்னியாம்? அதையும் அவனே சொன்னான். சந்தோஷம்டா. உறவை வெறுத்து தனிச்சு நின்ன புள்ளை. எல்லாரும் கெட்டவங்க இல்லைன்னு பொறுமையா புரிய வை”, என்று சஞ்சய்க்கும் ஒரு கொட்டு வைத்து ஜெயந்தியின் கன்னம் வழித்தார்.

“பாராட்டும்போதே குறையும் சொல்ற டெக்னிக்கெல்லாம் இந்த உறவுக்காரங்ககிட்டதான் பார்க்கமுடியும்டா சாமி”, அஞ்சலி முணுமுணுக்க, ‘இதெல்லாம் விட டெரர் பீஸ் இருக்கு எங்க உறவுல, பார்த்தாலே ஓடிருவேன், நமக்கே தெரியாம வாயப் புடுங்கி பல்பு குடுப்பாங்க!”, என்று மோகன் முணுமுணுக்க, ஒரு விரிந்த புன்னகையுடன், “செவ்வாழை பலமா அடிவாங்கியிருக்கும் போலயே”, என்று கிண்டலடித்தாள்.

இவர்கள் குசுகுசுவென்று சிரித்துப் பேசுவதை நான்கு கண்கள் நோட்டமிட்டதை அறியவில்லை பாவம்.

காலை உணவை ஹோட்டலில் முடித்தவர்கள் ,மணமகன் வீட்டிற்கு வர, வாசலில் அழகிய ரங்கோலி வரவேற்றது.

இருவருமாக வலது கால் வைத்து உள்ளே வர, லக்ஷ்மி, புனிதா மற்றும் சஞ்சய் பெரியம்மா இணைந்து ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.

அன்று முதல் முறை அவள் உள்ளே வரும்போது  சஞ்சய் ஆரத்தி எடுக்கட்டுமா என்று கேட்டது இருவருக்குமே ஞாபகம் வர, அவள் கைபிடித்தவன், “நேரம் ஒரு வழியா வந்திருச்சு. வா.”, என்று  உள்ளே அழைத்து வந்தான்.

பூஜை அறையில் இருவருமாக விளக்கேற்றிவிட்டு வர, கோழிக் கறி குழம்பு என்று பாடல் பாடியது அலெக்சா…