“சித்தி… அவர் வேணும்னு செய்யலை. இந்த அளவுக்கு யோசிக்கவும் இல்லை. சும்மா அவரையே சொல்லாதீங்க”, குற்ற உணர்வில் சஞ்சய் நெளிவது பொறுக்காமல் அவனுக்காக பரிந்து பேசினாள்.

“அப்ப சட்டுனு பேசி ஒரு முடிவுக்கு வா! அவங்க வீட்டுலர்ந்து வந்து முறையா பொண்ணு கேட்டு ஆக வேண்டியதை பாருங்க!”, நெருக்கினார்.

அஞ்சலிதான் போன் செய்து விஷயத்தைக் கூறியிருந்தாள். இப்போது  நேராகச் சென்று பிரச்சனையைக் கிளப்பினால்தான் வழிக்குக் கொண்டு வர முடியும் என்று கோடு போடவும் இதோ கடுகடு முகத்துடன் ஹைவேய்ஸ் ரோடே போட்டுக்கொண்டிருக்கிறார் ரமாதேவி !

ஜெயந்தி கண்கள் கலங்க நிற்க, சஞ்சய் எழுந்துவிட்டான். “நான் வந்திருக்கக் கூடாது. தப்புதான். இனி வரமாட்டேன், அடுத்தவங்க பேசறதுக்கு இடம் தர மாட்டேன். அவளை பார்க்கவே மாட்டேன். போதுமா? ஜெயந்திக்கு நம்பிக்கை வரட்டும். உடனே  கல்யாணம் செய்துக்கறேன்.”, வாக்குறுதியை அள்ளி வீசினான்.

ரமாதேவி அசரவே இல்லை. “இல்ல எனக்கு புரியலை. அவளுக்கு நம்பிக்கை தர என்ன செய்யன்னு உங்களுக்குத் தெரியலை. அவளுக்கும் என்ன வேணும்னு தெளிவில்லை. இதுல பார்த்தும் பேசிக்க மாட்டீங்க. அப்பறம் எப்படிதான் ஒரு முடிவுக்கு வருவீங்க? ஒரு வாரமா தெளிவில்லைன்னா இன்னும் நாலு மாசம் போனாலும் இதே தான நிலைமை? இல்ல இந்த சினிமால வர மாதிரி யாருக்காவது உடம்பு முடியாம ஹாஸ்பிட்டல்ல இருந்தாதான் எல்லாத்தையும் தள்ளிட்டு காதல் பொத்துகிட்டு வருமா?”, நக்கல் பொங்கி வழிந்தது அவர் குரலிலும் முகத்திலும்.

அதில் இருவர் முகமுமே சுருங்கியது. ”சித்தி… நல்லாயில்லை, காயப்படுத்தற மாதிரி பேசாதீங்க! எங்க அன்பு என்னன்னு யாருக்கும் விளக்கத் தேவையில்லை”, உஷ்ணமாகப் பேசினாள்.

“விளக்கவே வேணாம்டி. எனக்கும் விளங்கவே வேணாம்! இதுக்கு எப்ப எண்ட் கார்டுன்னு கேட்கறேன். அதை சொல்லு. நீங்க யாரும் ஹாஸ்பிட்டல்ல போய் படுக்க வேணாம். நான் போய் படுத்துக்கிட்டு உங்க கல்யாணத்தைப் பார்த்தாதான் என் கட்டை வேகும்னு சீனை போடறேன்”, மார்பில் தட்டிக்கொண்டார், “அப்பவாச்சம் யார் மீசையிலேயும் மண் ஒட்டலைன்னு உங்க ஈகோ…மீகோன்னு எல்லாக் குப்பையும் விட்டுட்டு கல்யாணத்தை முடிங்க!”, அதற்கு மேல் முடியாமல் சோஃபாவில் சரிந்து தொண்டையை நீவ, அவர் பேச்சிலும் பாவனையிலும் சிரிப்பு வர சஞ்சய், தண்ணீர் கோப்பையை புன்னகையுடன் நீட்டினான்.

“ஜெயந்தி… உங்க சித்தி சாட்சியா இருக்கட்டும். என் கிட்ட என்ன உத்திரவாதம் வேணும்னு சொல்லு. எழுதி கையெழுத்து வேணாலும் போட்டுத் தரேன். இனி உன்னை எதுக்காகவும் சந்தேகப்பட மாட்டேன். எதுவானாலும் உங்கிட்ட நேரா கேட்டுப்பேன். நானா போய் கண்டுபிடிக்க ட்ரை பண்ணமாட்டேன். உன்னை, உன் ஃபீலீங்க்சை புறக்கணிக்கவே மாட்டேன். எந்த பிரச்சனைன்னாலும் உன்னை கன்சல்ட் பண்ணுவேன். நிஜமா உன் எண்ணங்கள் யோசனைகளை மதிக்கறேன். இட்ஸ் அ ப்ராமிஸ். ப்ளீஸ் என்னை மன்னிச்சு கல்யாணம் பண்ணிக்கோ!”, என்று பட்டென்று சஞ்சய் அவள் முன் மண்டியிட, “அச்சோ சஞ்சய்… என்னதிது!”, என்றவள் அவன் முன் அமர்ந்துவிட்டாள்.

ரமா சித்தியின் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. “அம்மா துர்கா… என் பொண்ணுக்கு சிறப்பான ஒரு பிள்ளையை காட்டியிருக்க. நான் தான் புரிஞ்சிக்காம உன்னை ரொம்ப திட்டிட்டேன். அப்படியே இந்த மக்குப் பொண்ணு மனச தெளிவாக்கி சரி சொல்ல வெச்சிரும்மா!”, என்று வேண்டி முடிக்கையில், அழுகையும் சிரிப்புமாக ஜெயந்தி சம்மதம் என்று தலையாட்டுவது கண்ணீருக்கு இடையில் மங்கலாகத் தெரிந்தது.

கண்களைத் துடைத்தவர், “ஜெய்… இதுக்கு மேல யாரும் சொல்லமுடியாது. ஒழுங்கா சம்மதம் சொல்லு.  தம்பி, வீட்டு பெரியவங்களை சீக்கிரமே வரச் சொல்லுங்க. நான் கிளம்பறேன். நீங்களும் ரொம்ப நேரம் இருக்காம கிளம்பிடுங்க.”, என்றவர் அடுத்த நிமிடம் அவர்களுக்குத் தனிமை கொடுத்துச் சென்றுவிட்டார்.

கதவு சாற்றும் சத்தம் கேட்ட மாத்திரம், தரையில் அமர்ந்த சஞ்சய், ஜெயந்தியை இழுத்து மடியில் அமர வைத்து, அவள் கழுத்தில் முகம் பதித்திருந்தான். சஞ்சயின் இரு கைகளும் அவள் இடுப்பை சுற்றி இறுக்கிப் பிடித்திருக்க, “சஞ்சய்….”, என்றாள் மென்மையாக.

“ம்ம்… என்னோட பாதியா , என்னோட வெற்றியா, என் கூடவே வரணும் ஜதிம்மா”, காதருகில் மெல்ல கிசுகிசுத்து முத்தம் ஒன்றை பதித்தான். அதில் சிலிர்த்தவள், “ஜதிம்மாவா?” … “ம்ம்… எல்லாரும் ஜெய்னு கூப்பிடறாங்க. எனக்கே எனக்குன்னு கூப்பிட ஒரு பேரு வேணும்னு ஒரு நாள் நைட் யோசிச்சு கண்டுபிடிச்சேன். உன் பேரு சுருக்கம் ஒன்னு, என் லைஃப்ஃபோட ரிதம் நீன்னு புரிஞ்ச  நேரம் தோணுச்சு. பிடிச்சிருக்கா?”, என்று அவள் தலையில் லேசாய் முட்டிக் கேட்க, பூரிப்பாய் மலர்ந்தது அவள் முகம்.

“ம்ம்…”, அதைத் தாண்டி வார்த்தை வரவில்லை. சஞ்சய்க்கு மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிவிட வேண்டுமென்ற துடிப்பு.

“நான் திட்டினதுக்கு நீ இவ்வளவு ஃபீல் பண்ணுவன்னு எனக்கு அப்ப தோணவே இல்லை ஜதிமா.  அதுதான் பிரச்சனையை முடிக்கறதுல இருந்தேன். நீ கார்ல வெச்சு என்னை அத்தனை கேள்வி கேட்டு, நான் வேணுமான்னு தெரியலைன்னு சொல்லி அனுப்பனப்பறம்தான் அந்த வலியோட ஆழமே புரிஞ்சுது. இந்த கொஞ்ச நாள் ரொம்ப தவிச்சேன். பிரச்சனைங்க எனக்கு புதுசில்லை. எல்லாமே  நான் நினைக்கறதுக்கு எதிரா போகும்போதும் என்னால தெளிவா எமோஷன்ஸ் ஒதுக்கி வெச்சு யோசிக்க முடியும். ஆனா உன் விஷயத்துல என்னால அதை செய்யவே முடியலை. எந்த வேலையும் ஓடலை. மனசு தவிச்சிட்டே இருந்தது. அப்பதான் எவ்வளவு ஆழமா நீ எனக்குள்ள இருக்கன்னு புரிஞ்சுது.  உன்னை தப்பா பேசி எத்தனை பெரிய ரணத்தை குடுத்திருக்கேன்னு தெரிிஞ்சுது. செத்துப்போனாவாச்சம் எனக்குப் புரியுமான்னு நீ யோசிச்சது ஏன்னு புரிஞ்சுது. எவ்வளவு ஈசியா நினைச்சிட்டடா? அவ வேணாம்னு சொல்ற அளவுக்கு எத்தனை வலி குடுத்திருக்கன்னு என்னையே வெறுத்துட்டேன். நான் தவிச்சு தேடி வந்தப்போ மறுக்காம அம்மா மாதிரி அரவணைச்சிகிட்டயே. நான் உனக்கு செய்ய தவறினது. இனி எப்பவும் மிஸ் பண்ண மாட்டேன் ஜதிம்மா. தனியா அன்னிக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப, ஃபூல் மாதிரி நிரஞ்சனை அடிச்சு உனக்கு நியாயம் செஞ்சுட்டதா சந்தோஷப்பட்டேன்.”

புலம்பலாகப் பேசிக்கொண்டே முன்னும் பின்னுமாக அவளை ஆட்டிக்கொண்டிருந்தான் சஞ்சய்.  அவனை நிறுத்தி, பக்கவாட்டில் திரும்பி அவன் மோவாயைப் பிடித்தவள், “சஞ்சய்… உங்களுக்குப் புரிஞ்சா போதும். போனது விடுங்க. அதை நினைச்சு கஷ்ட்டப்படுத்திக்காதீங்க.“

அடுத்த நொடி, ஆறுதல் சொன்னவளின் அதரங்களில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டிருந்தான். ஒரு நொடி அதிர்ந்த ஜதி அவனுடன் இணைந்து அவளின் சத்தியத்தையும் எழுதிக்கொடுத்தாள்.

ஞாயிறு காலை ரமா சித்தி பரபரப்பாக இருந்தார். பட்டுப்புடவை நகை, பூ என்று ஜெயந்தியை படுத்திக்கொண்டிருந்தார்.

“சித்தி… அவங்க எல்லாரும் என்னை ஏற்கனவே பார்த்திருக்காங்க சித்தி.” என்று சிரித்துக்கொண்டே அவர் கொடுத்த முல்லை சரத்தை வைத்துக்கொண்டாள்.

“அது ஆஃபீஸ்ல! கல்யாணப் பொண்ணா இப்பதானே பார்க்கப்போறாங்க. ஏன் சஞ்சய் கூட நீ இப்படி அலங்காரம் பண்ணி  பார்த்திருக்க மாட்டார்தானே? இது ஸ்பெஷல்டி பொண்ணே”, ரமா சித்தி சொன்னது எவ்வளவு உண்மை  என்று சஞ்சயின் சந்தோஷத் திகைப்பில் தெரிந்தது.

அஞ்சலி, மோகன், அவன் பெற்றோர் என்று ஹால்  நிறைந்து போனது.  சித்தி அவளுக்குத் தெரியாமலேயே அவள் தந்தை வழி சித்தப்பா, மற்றும் ஒரு அத்தை குடும்பத்தையும் வரவழைத்திருந்தார்.

பேச வருகிறார்கள் என்று நினைத்திருந்தவளுக்கு, இன்று நிச்சயதார்த்தம் என்று கங்காதரன் மனைவியும், மோகனின் தாயும் எடுத்து வந்த சீர் தட்டுகளைப் பார்த்தபின்புதான் உரைத்தது.

அவள் சித்தப்பா, மாமா என்று புதிய உறவுகளிடம் கங்கா மாமா சஞ்சய் பெருமைகளைப் பேச, அஞ்சலி தோழியாக இவள் அருகில் நின்றாள்.

“ஒரு வழியா சமாதானம் ஆகியாச்சா? கால்ல விழுந்துட்டாராம்? வெரி குட்”, என்று கலாய்க்க,

“ஏய்…. அதெல்லாம் ஒன்னுமில்லை. யார் சொன்னது?”, என்று மழுப்பினாள்.

“ம்ம்… சஞ்சய் சொன்னதா மோகன் சொன்னார். நீ ஏன் ராசாத்தி மூடி மறைக்கற? பொண்டாட்டி கால்ல விழுந்து காரியம் சாதிக்கற அரிச்சுவடி பாடத்துல பாசானதுக்கு நான் வாழ்த்து சொன்னதை பெருமையா ஏத்துக்கிட்டாரே”, என்று தாக்க ஜெயந்தி அசடு வழிந்தாள்.

“இதெல்லாம் இரகசியம், வெளிய சொல்லக்கூடாதுன்னு அடுத்த பாடம் கத்துகுடு. ப்ரோ கொஞ்சம் ஸ்லோதான், ஆனால் கத்துகிட்ட பாடம் மறக்க மாட்டாராம்.”, அஞ்சலி கிண்டலில் புன்னகைத்தாள் ஜெயந்தி.

“டேய்…”, விலாவில் மோகன் குத்தவும்தான் ஜெயந்தியைப் பார்ப்பதை விடுத்து, தன்னிடம் கேள்வி கேட்கப்படுகிறது என்பதே விளங்கியது சஞ்சய்க்கு.

“ம்ம்… ஆரம்பிக்கலாம்”, என்று தலையசைக்கவும், நிச்சயதார்த்த முறைகள் நடந்தேறின.

மணப்பெண் பரிசாக, அடர் சிகப்பு சேலையும், வைர நெக்லஸ், கம்மல், வளையல் என்று தர, அவள் பக்க சொந்தங்கள் வாய் பிளந்தன.

சித்தி இவர்கள் முறைக்காக பட்டு வேட்டி சட்டை பழம் இனிப்பு என்று தர,  பாண்ட் சட்டையில் இருந்தவன், “நானுமே மாத்திக்கறேன்”, என்று வேட்டியில் மாப்பிள்ளையாக வந்து அமர்ந்தான்.

 புடவைக்கு தோதாக ரெடி மேட் ப்ளவுஸ் இருக்க, ஆச்சரியமாக எடுத்தவளிடம், “மேடம் கற்பனையில நேத்து டூயட் பாடிட்டு இருந்தப்போ, நாங்கல்லாம் தீயா வேலை பார்த்தோம். சேலை எடுக்க நானும் போயிருந்தேன். சஞ்சய் சேலை செலக்ட் பண்ணவும், நானே ப்ளவுஸ் சூஸ் பண்ணிட்டேன். உன் சைஸ்தான் போய் போட்டுட்டு வா”, என்று அனுப்பி வைத்தாள் அஞ்சலி.

அவள் உதவியுடன் வேகமாக தயாராகி, சஞ்சய் அளித்த புடவை, நகை என்று அணிந்து வந்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக மாப்பிள்ளை கோலத்தில் சஞ்சய்!

“ உன் சித்தப்பாவும், சித்தியும் கூட கடைக்கு வந்திருந்தாங்க. அப்பவே எடுத்துட்டோம்.”, என்று அஞ்சலி காதைக் கடித்தாள். இப்படி அனைவரும் தனக்காக செய்ததில் நெகிழ்ந்து நின்றவளை சித்தி சஞ்சய்க்கு அருகிலிருந்த இருக்கையில் அமர வைக்க, இருவருக்கும் மாலையிட்டு நலங்கு வைபவம் நடந்தேறியது.

கங்கா மாமா திருமணப் பத்திரிக்கை எழுத ஆரம்பித்தார். ரமா சித்தி, சித்தப்பா பெண்ணின் தாத்தா பாட்டி, பெற்றவர்கள் பெயர்கள், பூர்வீக ஊர் என்று சொல்லச் சொல்ல எழுத, அடுத்து சஞ்சய் பற்றி எழுதினார்.

சஞ்சய் தன் தாத்தா பாட்டிகள், தந்தை பெயர் சொல்லி, தாய் தமயந்தி என்று கூற விலுக்கென்று நிமிர்ந்தார் ரமா சித்தி.

“தமையந்தியா…”, முணுமுணுத்தவர், “ம்ம்..மாப்பிள்ளை பிசினஸ், அப்பா இல்லை”, என்று எழுந்து அருகிலிருந்த ட்ராயரை திறந்து எதோ தேடி எடுக்க ஜெயந்தி முழித்துக்கொண்டிருந்தாள்.

 அவர் எடுத்த தாளில் எதையோ சரி பார்த்தவர், “மப்பிள்ளை உங்க அம்மா போன் நம்பர்”, என்று சொல்ல, சஞ்சய் புருவம் சுருக்கினான்.

“ஆமா அத்தை. உங்களுக்கு எப்படி தெரியும்?”

“மணமாலை ஏஜென்சில உங்க ப்ரோஃபைல் பதிவு பண்ணியிருந்தீங்களா தம்பி?”

குழப்பமாக பார்த்தவன், ”இல்லையே… “, என, ஒரு பெரிய புன்னகையோடு, “உங்களுக்குத் தெரியாமயே உங்கம்மா பதிவு பண்ணியிருக்கணும். ஜெயந்தி ஜாதகம் ஏஜென்சில உங்கம்மாக்கு தந்திருக்காங்க. அவங்களும் ஜெயந்தியை பார்த்து கேட்டிருக்காங்க, இவதான் வேணாம்னு சொல்லிட்டா”, என்று அடுக்க, அவரிடமிருந்து தாளை வாங்கிய மோகன் பார்த்துவிட்டு, “ஏய்… உன்னோடதுதாண்டா”, என்று அச்சரியப்பட்டான்.

“தமையாவா உன்னை வந்து பார்த்தது ஜெயந்தி? எப்போ?”, கங்காதரன் மனைவி லக்ஷ்மி கேட்க ஜெயந்தி உள்ளம் படபடத்தது.

“அது…இல்லை ஆன்ட்டி. என் பழைய வேலையை விடற நேரம். யாரோ ஒரு பெரியவர் வந்தார். ஏஜென்சிலர்ந்து போல. நானே வேலை டென்ஷன்ல இருக்கேன், கல்யாணமெல்லாம் இஷ்டமில்லைன்னு அனுப்பிட்டேன். விவரம் எதுவும் கேட்டுக்கலை. சித்தி என் பேரை பதிவு பண்ணதே எனக்கு அப்பறமாதான் தெரியும்.”, ஒரு மாதிரி கோர்வையாக சொல்லிவிட்டாள்.

சித்தி விவரம் சேகரித்து தமையாவின் எண்ணுக்கு அழைத்ததெல்லாம் விலாவரியாக விவரிக்க, சஞ்சய் அவள் புறம் திரும்பியவன், “அம்மா உன் ப்ரோஃபைல் வாங்கிட்டு வந்தப்பறமாதான் இறந்து போனாங்க. எங்கிட்ட சொல்லவே இல்லை. ஆனா அவங்களும் உன்னைத்தான் சூஸ் பண்ணாங்கன்னு நினைச்சா ரொம்ப ஹாப்பியா இருக்கு ஜெய். அம்மா இருந்திருந்தா உனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா இருந்திருப்பாங்க”, என்று சஞ்சய் லயித்துப் போய் சொல்ல, ஜெயந்திக்கு முகத்தை ஆர்வம் போல வைத்துக்கொள்வதே பெரும்பாடாக இருந்தது.

ஜெயந்தியின் மைண்ட் வாய்ஸோ புலம்பித் தள்ளியது. ‘உங்கம்மா சூஸ் பண்ணலை சஞ்சய், அவங்க க்ரஷ் மூலமா என்னை சேஸ் பண்ணாங்க! எனக்கு ஃப்ரெண்டாவா இருப்பாங்கன்றீங்க… ம்க்கும் மூணு மாசத்துக்குள்ள முடியை பிச்சிட்டு இருப்பேன். உங்க அம்மாவை மாமியாரா அனுப்விச்சவ நானு. என்ன, நான் இதை சொன்னா எல்லாரும் எனக்கு பைத்தியக்கார பட்டம் கட்டிருவீங்க.’

“தமையந்தியுமே ஜெயந்தியை வரனா பார்த்திருக்கான்னா ரொம்ப சந்தோஷம். அவ ஆசீர்வாதமும் கிடைச்ச மாதிரிதான். என்னடா சஞ்சய்?”, என்று கங்காதரன் சஞ்சய் கவனம் திருப்ப, ஒரு பெருமூச்சு விட்டாள் ஜெயந்தி.