அத்தியாயம் – 26

குஷனை தலைகாணியாக்கி சோஃபாவில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் சஞ்சயை இடுப்பில் கைவைத்து பார்த்தபடி நின்றிருந்தாள் ஜெயந்தி. ஐயோ பாவமே என்று உருகும் மனதை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

ஒரு மணி நேரம் முன்பு சோர்வாய் உள்ளே வந்தவன் அலுவலகத்திலிருந்து நேரே வருகிறான் என்று உடையும், லாப்டாப் பையும் காட்டியது.

“வாங்க சஞ்சய். ரெடி பண்ணிட்டேன். சாப்பிடறீங்களா இல்லை கொஞ்ச நேரம் ஆகட்டுமா?”

சாப்பிடுகிறேன் என்று அமர்ந்தவனுக்கு, சூடாக சாதமும் ரசமும் வைத்து. தொட்டுக்கொள்ள முட்டை பொரியலும், அப்பளமும் வைத்தாள். நின்றியோடு பார்த்தவன், ஒன்றும் பேசாது உண்ண ஆரம்பித்தான். முதல் கவளம் கண்மூடி ரசித்தவன், அடுத்து பேசாது பொறுமையாக உண்டான். 

அடுத்து தயிர் சாதம் அவனுக்குப் பிடித்த மாதிரி தாளித்து கறிவேப்பிலை கொத்தமல்லி எல்லாம் போட்டு பரிமாற, “எக்சலண்ட்”, என்று முனகியவன் மிச்சம் வைக்காது வழித்து உண்டான்.

“இப்பவாச்சம்  நீ சாப்பிடு. நான் சர்வ் பண்றேன்”, என்று எழுந்து கைகழுவிக்கொண்டு வந்து நின்றான். அதற்குள் ஜெயந்தி சாதம் வைத்திருக்க, “நான் வரேன்னு சொன்னேனே”, என்று அவளிடமிருந்து ரசம் கரண்டியை பறித்துக்கொண்டு தானே ஊற்றினான். பொரியல் அப்பளம், தண்ணி என்று வைத்துவிட்டு எதிரில் அமர்ந்தான்.

“சரி.என்னாச்சு. இப்ப சொல்லுங்க”, என்று ஜெயந்தி அதற்கு மேலும் அமைதி காக்க முடியாது கேட்டுவிட்டாள்.

“இன்னிக்கு காலையில ஃப்ளெமிங்க்ஸ் ப்ராஜெக்ட் ரிவ்யூ. எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. அதுல ஒரு முக்கியமான செட்டப்ல கோட்டைவிட்டுருந்தான் நவீன். ரிப்போர்ட் அப்படியே க்ளையன்ட்டுக்கு போயிருந்தா அசிங்கமா போயிருக்கும். இதெல்லாம் அரிச்சுவடி. டீம்ல நாலு பேரு இதை படிச்சி பீயர் ரிவ்யூ வேற பண்ணிருக்காங்க. எவனும் சொல்லலை. பிடிச்சு லெஃப்ட் ரைட் வாங்கிட்டேன். நான் கத்தறது பார்த்து யாரோ மோகன்கிட்ட சொல்லவும் அவன் மீட்டிங் ரூமுக்குள்ள வரும்போதுதான்,” என்றவன் தலை குனிந்து”தீக்ஷனா போன் பண்ணா ஜெயந்தி பத்தி சொல்றதுக்கு தெரியுது, இது பண்ணத் தெரியாதான்னு வேற கத்திட்டேன்.”

சஞ்சய் அவள் இருந்த இந்த சில மாதங்களில் அதிகபட்சம் , சலித்திருப்பானே ஒழிய டெக் டெமை இப்படி திட்டி, கத்தி பார்த்ததில்லை.

அவள் ஆச்சரியப் பார்வையைப் பார்த்தவன், தலையை ஆட்டி, “மோகன் அவங்களை போய் சரி பண்ணிட்டு சொல்லுங்கன்னு அனுப்பிட்டு என்னை புடிபுடின்னு புடிச்சிட்டான். இப்படி கத்திதான் ஜெயந்தியை அனுப்பிட்ட, இப்ப அடுத்து நவீனா? ஒவ்வொருத்தரா அனுப்பிட்டு என்ன பண்றதா உத்தேசம்? இதை விட சொதப்பினப்போவெல்லாம் பொறுமையா ஹாண்டில் பண்ணவனாடா நீ? இதுல தீக்ஷனாகிட்ட பேச டைம் இருந்துச்சான்னு பெர்சனலா அட்டாக் பண்றன்னு என்னென்னவோ சொல்லி திட்டி, நீ கிளம்பு. உன்னை பாலன்ஸ் பண்ணிகிட்டு வான்னு துரத்திட்டான்.”, உதடு பிதுங்க மோகனைக் குறை கூற, அணைத்து தேறுதல் சொல்ல எழுந்த ஆசையை மிகவும் பிரயத்தனப்பட்டே அடக்கினாள்.

“என்னாச்சு உங்களுக்கு ? நான் இருந்த வரைக்கும் நீங்க ஆஃபீஸ்ல யாரையும் திட்டி பார்த்ததே இல்லையே?”

“அப்பல்லாம் இந்த அளவு டென்ஷன்ல இல்லையே….”

“என்ன டென்ஷனாம்?”

“நீ எதுவும் பதில் சொல்லலையே? என்னை பேசக்கூட விடமாட்டேங்கற! எதாவது கேட்டா ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்னு சொன்னீங்கன்னு மிரட்டற! உன்னை சந்தேகப்பட்டது தப்புதான். நீ இல்லைன்னு புரிஞ்சதும் உங்கிட்ட வந்து சொல்லாம இருந்தது அதைவிட மடத்தனம். தெரியுது. ஆனா இப்ப என்ன செஞ்சா உன் கோவம் வருத்தம் எல்லாம் சரியாகும்னு புரியாம தவிக்கறேன். மோகன் சொன்ன மாதிரி பாலன்ஸ் இல்லாம தள்ளாடுறேன். அந்த கடுப்பு எப்ப யார் மேல பாயறேன்னு தெரியாம கத்தறேன். நேத்து சமையல் செய்யற அக்காவை திட்டிட்டேன், இன்னிக்கு அவங்க வரலை. காலையில குடிச்ச ஒரு காஃபியோட இருந்தேன். சாப்பிட்டியான்னு நீ கூட ஒரு வார்த்தை கேட்கறதில்லை”, புலம்பலாகப் பேசுபவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள் ஜெயந்தி.

“எதுவும் யோசிக்காம போய் ஹால்ல கொஞ்ச நேரம் உட்காருங்க. இதையெல்லாம் ஒதுங்க வெச்சிட்டு வரேன்”, என்று அனுப்பி வைத்தவள் பத்து நிமிடம் கழித்து வந்தால், இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறான்.

ஏ.சியை போட்டுவிட்டு தன் படுக்கையறைக்கு வந்தாள் ஜெயந்தி. அங்கிருந்த பீஸ் லில்லி செடியைப் பார்த்து, “இப்படி கலாட்டா பண்றாரே உங்கப்பா…என்னன்னு நான் சமாதானம் பண்றது லில்லி?”, என்று அதன் இலைகளை வருடிக்கொடுத்தாள்.

மோகன் கடுப்பாகப் பேசியதில் மீண்டும் அவனை அழைக்க அச்சமாக இருக்க, அஞ்சலியை அழைத்தாள்.

“என்ன ஜெய், இந்த் நேரத்துல ?”

“வேலையா இருக்கறியா?”

“சொல்லுமா. பத்து நிமிஷம் இருக்கு மீட்டிங் போக. என்ன விஷயம்? எதுவும் இன்டர்வ்யூ வந்துச்சா?”

“ப்ச்…இல்லைடி. சஞ்சய் வந்திருக்கார்.”

“எதுக்கு?”

மேலோட்டமாக நடந்ததைக் கூற, “ம்ம்…அவர் மனசு வருத்தப்படறார்னு உடனே உருகிப் போய் சமைச்சு போட்டு பார்த்துக்கிட்டியாக்கும். அந்த புத்தி அவருக்கு அன்னிக்கு இல்லையே…”, நக்கலடித்தாள் அஞ்சலி.

“அஞ்சலி….”, என்று கடிந்தவள். “ இப்ப என்ன பண்றது?”

“என்ன பண்றதுன்னா? எழுப்பி அனுப்பு!”

“ச்சே… பாவமா இருக்கு அஞ்சலி. அசந்து தூங்கறார். இந்த மோகனும் கோவமா இருக்கார், இல்லைன்னா அவரை வந்து அழைச்சிட்டு போக சொல்லுவேன்.”

“இரசம் சாதம் தானே ஜெய் சாப்பிட்டார்? என்னவோ சரக்கடிச்சு மட்டையான மாதிரி, அழைச்சிட்டு போக ஆள் தேடற? “, என்று கிண்டலடிக்க,

“உங்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு !”, என்று பல்லைக் கடித்தாள் ஜெயந்தி.

“கூல் பேபி. ஒன்னு எழுப்பி அனுப்பு. இல்லை வெச்சுட்டு கொஞ்சு. உனக்கென்ன தோணுதோ செய். மத்தவங்க உனக்காக முடிவு செய்ய முடியாது ஜெய். டைமாச்சு. நான் அப்பறமா பேசவா?”

சரியென்று விடை கொடுத்தவள், ஹாலுக்குச் சென்று அவனைப் பார்க்கச் சொல்லும் மனதை அடக்கி விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள்.

காலிங் பெல் சத்தம் கேட்டு சட்டென்று முழித்தவள், “அச்சோ…. கண் அசந்துட்டேனா?” , என்று எழ மீண்டும் அழைப்பு மணியின் ஓசை. வேகமாக வெளியே வர, சஞ்சய் ஒற்றை சோஃபாவில் குறுக்கிப் படுத்திருந்தான். எழவில்லை. வேகமாக கதவைத் திறந்தவள் அங்கே ரமா சித்தி நின்றிருக்க, செய்வதறியாது முழித்தாள்.

“சி…சித்தி… என்ன திடீர்னு?”

“வாசல்ல வெச்சே சொல்லணுமா? தள்ளு”, என்று உள்ளே வந்தவர், ஹாலில் படுத்திருப்பவனைப் பார்த்து அதிர்ந்து நின்றார்.

முகத்தை  உற்றுப்பார்த்தவர், “சஞ்சயா? இங்க எதுக்கு வந்தார்? ஏன் தூங்கிட்டு இருக்கார்? “, என்று ஜெயந்தியைப் பார்த்துக் கேட்க, “அது… பசின்னு வந்தார் சித்தி. சாப்பிட்ட அசதியில தூங்கிட்டார்”, அவனை எழுப்பாமல் இருக்க கிசுகிசுத்தாள்.

“அவ்வளவுதானே”, என்ற சித்தி, “சஞ்சய் தம்பி?”, என்று தோளில் தட்ட கண் முழித்தவன் எதிரில் ரமாவைப் பார்க்க, முழித்து, அடுத்து ஜெயந்தியைக் காண, சுற்றம் உணர்ந்து, எழுந்து அமர்ந்தான்.

“ஒஹ்… தூங்கிட்டேனா. சாரி. சாரி ஆன்ட்டி”, என்று எழ, “போய் முகத்தை அலம்பிட்டு வாங்க சஞ்சய்”, என்றார் ரமா.

அவன் பின்னோடே சென்ற ஜெயந்தி, “திடீர்னு சித்தி ஏன் வந்தாங்கன்னு தெரியலை.  நீங்க தூங்கறது பார்த்து கொஞ்சம் கோவமா இருக்காங்க. எதாவது பேசினா தப்பா எடுத்துக்காதீங்க சஞ்சய்”, என்று மன்னிப்பு கேட்டபடி புது டவல் ஒன்றை எடுத்து வந்தாள்.

அவள் படுக்கை அறை வாசலில் நின்றிருந்தவன் கண்கள் அறையை ஒரு சுற்று சுற்றிவிட்டு பீஸ் லில்லி செடியிடம் நிலை கொண்டது.

“குடுத்து வெச்ச செடி”, என்று முனகியவன், அவள் பேசியதற்கு “நான் பார்த்துக்கறேன்,  நீ டென்ஷனாகாதே”, என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்துகொண்டான்.

“என்ன சித்தி திடீர்னு?”, தண்ணீர் உபசரித்தபடியே மீண்டும் கேட்க,

“அப்படி வரவேதான உன் வண்டவாளம் தெரியுது?”, கடுகடுத்தார்.

“சித்தி…”, பாவமாகப் பார்த்தாள் ஜெயந்தி.

“வேணாம்னுதான சொன்ன, இப்ப என்ன சாப்பாடு போட்டு உபசரிப்பு?”

முறைப்பவரை என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல் முழித்தாள். சஞ்சய் வரும் அரவம் கேட்க, அவனுக்கும் தண்ணீர் தந்தாள்.

குரு சாரின் ஒற்றை சோஃபாவில் அமர்ந்தவன் சித்தியைப் பார்க்க, “நீங்க இரண்டு பேரும் என்ன முடிவெடுத்திருக்கீங்க தம்பி? நான் தப்பா நினைக்கலைன்னாலும், இப்படி பகல்ல வந்து மணிக் கணக்கா வீட்டுல இருந்துட்டு போனா அக்கம் பக்கம் கண்டிப்பா தப்பா பேசுவாங்க. தேவையில்லாத பிரச்சனையாகும். நான் சொல்லித்தான் இதெல்லாம் உங்களுக்குப் புரியணும்னு இல்லை. “

ஆமோதிப்பாய் தலையை ஆட்டியவன், “தப்புதான். இன்னிக்கு ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தேன்.”, என்று ஜெயந்தியைப் பார்க்க,

“உங்க நிலைமை புரிஞ்சு என் பொண்ணு அனுசரணையா பார்த்துக்கிட்டா. “, கிடைத்த இடைவெளியில் ஒரு ஊமைக் குத்து விட்டார்.

அதற்கும் தலையாட்டியவன், “ஜெயந்தியைத் தவிர எனக்கு வாழ்க்கையில வேற பொண்ணு கிடையாது ஆன்ட்டி. அவ சம்மதம்னு சொன்னா உடனே கல்யாணம் பண்ணிக்கறேன். ஆனா அவ முழு மனசா சொல்லணும். ஒரு தரம் செஞ்ச தப்பை நான் திரும்ப செய்ய மாட்டேன்னு அவளுக்கு நான் எப்படி உறுதி குடுக்கன்னு தெரியலை.”, என்று சஞ்சய் சொல்ல,

“நீ என்ன சொல்ற ஜெயந்தி? சும்மா ஒரு முடிவுக்கு வராம இழுத்தடிச்சிட்டே போனா எப்படி? அந்த திலீப்பை போய் பாருன்னாலும் மாட்டேங்கற. சஞ்சய் தாண்டி யோசிக்கமாட்டன்னா அப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் பிடிவாதத்தை கன்டின்யூ பண்ணு. ஊர்ல தப்பா பேச்சு கிளம்பற வரை நான் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க மாட்டேன்.”, கறாராகப் பேசினார்.

“கொஞ்சம் டைம் கேட்கறா ஆன்ட்டி…”, சஞ்சய் பேச

“அப்ப அதுக்கான வரைமுறை இருக்கணும் சஞ்சய் ! சேதாரம் உங்களுக்கு இல்லை, அவளுக்குத்தான். இதுதான் முதல் தரம் இப்படியா இல்லை..?”, ரமா இழுக்க,

“ஆன்ட்டி!”

“சித்தி!”

“நான் கேட்கறதுக்கு கோவப்படறீங்க, அடுத்தவங்க எங்கிட்ட கேட்டா?, புறணி பேசினா? எல்லாரோடையும் சண்டைக்கு போவீங்களா? அவ இங்கதான் சஞ்சய் தனியா இருக்கணும். ஏன் அவன் மட்டும்தான் வருவானா, நான் வரக்கூடாதான்னு வேற ஆள் கதவை தட்ட எத்தனை  நேரமாகும்? எப்படி ஒரு இக்கட்டுல கொண்டு வந்து அவளை நிறுத்தியிருக்கீங்க?”, கோவத்தில் படபடத்தார் ரமா.