“நீ வேணா போய் பாஸ் கிட்ட பேசிட்டு வா ராகினி. நோட்டீஸ் பீரியட் பதிலா சம்பளம் பிடிச்சிருங்க. மிச்சம் நான் என்ன தரணும்னு சொன்னா அது பே பண்ணிடறேன். இன்னிக்கே கிளம்பறேன்.”

“ஏன் ஜெய். இப்ப நடந்த விஷயத்தாலேயா?”

“ம்ம்..இதுவும் ஒரு காரணம். பட் ரிலீவ் ஆகறதுன்னு முடிவு செஞ்சுட்டேன். ப்ளீஸ் அடுத்தது பார்க்கலாம்.”

ஜெயந்தி ராஜினாமா செய்தி தீயாக பரவியது. எதைப் பற்றியும் காதில் வாங்காது, தன் டீமுடன் அமர்ந்தவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வதிலும், எது எங்கே இருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொடுப்பதிலும் பிசியாக இருந்தாள்.

“என்னடா, லேடி ஆன் அ மிஷன் மாதிரி தீயா வேலை பார்த்துட்டு இருக்கா ஜெயந்தி. ராஜினாமா ஏத்துக்கப் போறியா?”, மோகன் கேட்க, சோகமாய் அமர்ந்திருந்த சஞ்சய், “என்ன பண்ண சொல்ற? நீங்கல்லாம் சொன்ன போது உரைக்கலை. அவ என்னை மொத்தமா வேணாம்னு சொல்லிடுவாளோன்னு பயமா இருக்குடா.”

அப்படி எதாவதுன்னா, நேரா அவங்க சித்திகிட்ட உன் ஜாதகத்தை கங்கா சார் மூலமா குடுத்து அனுப்புவோம். “, என்ற மோகனின் பேச்சில் அவனை முறைத்தான்.

“அவங்கதான் எவனோ திலீப்ங்கறவனை பார்த்துட்டு ஊர்ல இல்லாத மாபிள்ளை இவந்தான்ன்னு சொல்லிட்டு திரியறாங்க. இதுல நான் குடுத்து, அவங்க என்னை கன்சிடர் பண்ணிட்டாலும் !” நொடித்தான்.

“கரெக்ட்தான் ஆனாலும் நம்ம கம்பனியை சோப்பு டப்பா கம்பனின்னு சொன்னது வலிக்குதுடா…”, வேண்டுமென்றே மோகன் ஞாபகப்படுத்த, “ம்ம்..ஜெயந்தி கூட அப்படி சொல்லாதீங்கன்னு ஒரு வார்த்தை சொல்லலைடா”

ஆதங்கப்படுபவனை, “அவளுக்கு இருக்கற கோவம் தெரியாம பேசாத மச்சி,நீ குடுத்த பொக்கே நம்ம ரிசெப்ஷ்ன் டேபிள்ல உட்கார்ந்திருக்கு தெரியுமா?”, என்று அதற்கான காரணத்தையும் கூறி அடுத்து சஞ்சயின் கடுப்பைக் கிளப்பினான்.

பல்லைக் கடித்த சஞ்சய், “காலையில உனக்கு வேற வேலை இல்லையா? போய் எதாவது உருப்படியா செய்”, என்று கடித்து வைத்தான். மோகன் பதில் சொல்வதற்கு முன் சஞ்சய் கைப்பேசி ஒலிக்க, அழைத்தது அஞ்சலி.

“என்ன ப்ரோ? மீட்டிங்க் எப்படி போச்சு? என்ன சொல்றா என் ஃப்ரெண்டு?”

ஸ்பீக்கரில் போட்டவன், “ம்ப்ச்… அதெல்லாம் நல்லாதான் போச்சு. ஆனா வேலையை ரிசைன் பண்ணுவேன். நோட்டீஸ் பீரியட் கூட இருக்கமாட்டேன், சம்பளம் பிடிச்சிக்கோங்கன்னு அடமா பண்றா அஞ்சலி. முடியாதுன்னு நான் மறுத்தா எங்க மொத்தமா வெறுத்துடுவாளோன்னு பயமா இருக்கு.”

“உங்க கூடவே சுத்தற செவ்வாழை கிட்ட எதுவும் ஐடியா கேட்கலையா?”, அஞ்சலி கலாய்க்க, “ஏய் ராட்சசி…. நானும் இங்கதான் இருக்கேன். நீ போன் பண்றதுக்கு முன்ன வரை எங்கிட்டதான் ஐடியா கேட்டான். இப்ப அதான் உன் தொங்கச்சி வந்தாச்சே. அவங்களே இப்ப சூப்பர் ஐடியா குடுப்பாங்க பாரு!”, என்று மோகன் அவன் பங்குக்கு திருப்பிக் கொடுத்தான்.

“சஞ்சய்…அவளோட பெரிய வருத்தம் என்ன?  நீங்க சந்தேகப்பட்டது, அடுத்தது அவ ஃபீலிங்க்ஸ்க்கு முக்கியத்துவம் தராதது. இப்ப நீங்க அவ ராஜினாமா ஏத்துக்கலை இல்லை காசு வேணாம், நோட்டீச் பீரியட் கண்டிப்பா வேலைக்கு வரணும்னு  ஃபோர்ஸ் பண்ணா அவ எப்படி அர்த்தம் பண்ணிக்குவா?”, சிறுபிள்ளைக்கு எடுத்து சொல்வது போல விளக்கினாள்.

“எனக்குப் புரியுது அஞ்சலி, பட் அவளை நான் தினமும் பார்க்க பேச முடியாதபடி இருந்தா, எங்க என் கைவிட்டு போயிடுவாளோன்னு இருக்கற என் ஃபீலிங்க்ஸ் அவளுக்கு புரிய மாட்டேங்குதே…உங்க யாருக்குமே புரிய மாட்டேங்குது”, தலையை கைகளில் தாங்கிப் பிடித்தவன் குரலே வருத்தமாக இருந்தது.

“அவ மறக்க முடியாத படி எதாவது செஞ்சுட்டே இருங்க. அவளை நீங்க நினைச்சிட்டே இருக்கீங்கன்னு உணர்த்துங்க சஞ்சய்.”

“ம்க்கும். மச்சான் கொண்டு வந்து இன்னிக்கு மீட்டிங்ல குடுத்த பொக்கே ரிசப்ஷன் டேளில்ல உட்கார்ந்திருக்கு. ஏன்னா…”, என்று முடக்கி வைத்திருந்த ஜெயந்தியின் ஆக்சஸ் உரிமங்கள் பற்றி மோகன் கூற, உஷ் என்று பெருமூச்சு வந்தது எதிர்புறத்திருலிருந்து.

“இது என்ன காமிக்குது சஞ்சய்?”

“ம்ம்… என் டென்ஷனைக் காமிக்கணும். மீட்டிங்ல என்ன பேசணும், கேள்விங்க வந்தா என்ன பதில் குடுக்கணும்னு ஆரம்பிச்சு, அவளை எப்படி ரிசைன் பண்ணாம இருக்க சொல்றதுன்ற வரைக்கும் யோசிச்சதுல, இதை மறந்துட்டேன். உடனே அவளை நினைக்கலை, அவ ஃபீலிங்க்ஸ் நினைக்கலைன்னு எல்லாரும் அர்த்தம் பண்ணா எப்படி?”, பொரிந்தான்.

சில நொடிகள் அமைதி. “டேய்… அதுக்குன்னு சொல்ல வரலைடா”, மோகன் சமாதானப்படுத்த,

“சஞ்சய்… நீங்க எப்பவும் போல இருங்க. அதுதான் ஜெயந்திக்கு பிடிச்சது. சும்மா சினிமாட்டிக்கா பொக்கேவா தூக்கிட்டு வராதீங்க. சனிக்கிழமை நீங்க எடுத்துட்டு வந்த பூக்கூடை சித்திகிட்ட குடுத்தனுப்பிட்டா. ஆனா நீங்க முதல் முதல்ல வாங்கிட்டு வந்த பீஸ் லில்லி செடி அவ பெட் பக்கத்துலேயே இருக்கு. உங்க மேல எவ்வளவு வருத்தம் கோவம் இருந்த போதும், செடி அதே இடத்துலதான் இருந்துச்சு. உங்க அதீத அறிவை கொஞ்சம் யூஸ் பண்ணுங்க. நாங்க யாரும் எதுவும் சொல்லாமலேயே உங்களுக்கு புரியும். ஜஸ்ட் ஷோ ஹர் யூ ட்ரூலி கேர்.”, என்ற அஞ்சலி விடைபெற்றுக்கொண்டாள்.

“இராட்சசி சரியாதான் மச்சி சொல்லியிருக்கா. ஜெயந்திக்கு ஆடம்பரம் பிடிக்காது. அஞ்சலி சொன்னது பத்தி யோசிச்சு, மஞ்சுவுக்காக நீ பேசினதுதான் போன முறை வொர்க் ஆச்சு. யோசி. சரி நான் வேலையைப் பார்க்கறேன். “

மோகனும் விடை பெற எதுவோ பிடிபடுவது போன்று சஞ்சய்க்குத் தெரிந்தது. உணவு  நேரம் நெருங்க, ஜெயந்தி, “சஞ்சை எல்லாம் சொல்லிக்குடுத்துட்டேன். நான் கிளம்பறேன்.”, என்று வந்து நின்றாள்.

“என்னோட லன்ச் சாப்பிட்டு போலாம் வா  ஜெயந்தி”, மனதில் தோன்ற அழைத்துவிட்டான்.

அவள் தயங்க, ஒரு வருத்தப் புன்னகையுடன், “ஃபேர்வெல் லன்ச்சுன்னு நினைச்சிக்கோ ஜெயந்தி. மோகனை வேணா கூட்டிக்கலாமா?  அப்ப வருவியா?”

அதில் சற்றே முக மாற்றம் அடைய, “அப்படியெல்லாம் இல்லை சஞ்சய். போலாம். ஆனா பொதுவாத்தான் பேசணும்”, ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள்.

சம்மதமாய் தலையாட்டிவன், அன்று இறுதியாய் அவர்கள் உண்ட கேரளா மெஸ்சிற்கே அழைத்துச் சென்றான்.

“இங்க விட்டதை இங்கயே தொடரலாம்”, என்றவன் அதற்குப் பின் அவர்களைப் பற்றி பேசாது பொதுவாகப் பேசினான். அஞ்சலி மாமியிடம் தன்னைக் கோர்த்துவிட்டது, மாமி சாபமிட்டது, மாமா பொண்ணுங்க வெச்சு செய்வாங்கடா என்றது எல்லாமாக நகைச்சுவையாகப் பேச, தன்னையும் மீறி சிரித்துக்கொண்டே உண்டாள். பல நாட்களுக்குப்பின் வயிராற உண்கிறாள்.

“நிறைய சாப்பிட்டேன் சஞ்சய்… போதும்”, என்றவளை, “ ஒரு வாரத்துல முகமே வத்திப் போச்சு. சாப்பிடு”, என்றான். அக்கறையாக அவன் சொன்னது மனதில் சிறு சந்தோஷத்தைத் தர, இறுக்கிப் பிடித்தாள்.

“சரி சரி… அதுக்கும் முகத்தை தூக்காதே.  ஓலால போறியா?”, என்று அடுத்து கேட்க, ஜெயந்தி கவனம் மாறியது.

வேலையை விட்டு வந்து இரண்டு நாட்களாகியிருந்தது. வேறு வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். நேற்று சித்தி வீட்டுக்குச் செல்ல, மறுபடி திலீப் புராணம் ஆரம்பித்தார்.

“சித்தி… வேணாம்னு சொல்லிடுங்க சித்தி..”

“ஏன்…சந்தேகக்கார சஞ்சயத்தான் கட்டிக்கப்போறியா?”, நக்கலாக வந்தது ரமாவின் குரல்.

“சித்தி… அவர் அப்படியெல்லாம் இல்லை சித்தி. எல்லாம் அந்த தீக்ஷனாவால வந்தது. ம்ப்ச்…”, ‘ நிரஞ்சனைப் பத்தி சொல்லியிருக்கணும்’, என்று நினைத்தவள், அதை சித்தியிடம் சொல்ல முடியாது, “என் நேரம் சரியில்லை சித்தி. யாரையும் குறை சொல்ல முடியாது”, என்று நொந்துகொண்டாள்.

“அட… அதெல்லாம் ஒன்னுமில்லை ஜெய். நீ மனசை போட்டு உழப்பிக்காதடா. உன்னால இந்த சஞ்சயோட வாழ்க்கைபூரா குப்பை கொட்ட முடியுமா? அதுவும் அம்மா அப்பா இல்லாத பிள்ளை. ஒரு பிரச்சனைன்னு வந்தா தட்டி கேட்டு, புத்தி சொல்ல பெரியவங்கன்னு யாரு இருக்கான்னும் தெரியலை. உங்க சித்தப்பா அவன் வருமானத்துக்கு குறையில்லைங்கறார், எல்லாம் உனக்கே அத்துப்படியாமே?”

“ம்ம்…அதெல்லாம் பெரிய இடம்தான் சித்தி. அவர் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் கங்கா சர் வீடு “, என்று அவரைப் பற்றியும் சஞ்சய்க்கான உறவையும் சொல்ல,

“ஓ…நீ எப்ப சஞ்சய் வீட்டுக்குப் போன? ஒரு வார்த்தை சொல்லலை?”, என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

“அச்சோ..ஒரு வாட்டிதான் போனேன் சித்தி. லன்ச் சமைச்சு குடுத்தார். சாயந்திரம் காஃபி சாப்பிட்டு வந்துட்டேன்.”, என்று வாக்குமூலம் கொடுத்தாள்.

“ஓ… சமைக்கத் தெரியுமா?” என்று ஆரம்பித்து அடுத்து அரை மணி நேரத்தில் சஞ்சய் பற்றி, அவன் படிப்பு, அமெரிக்கா சென்றது, தொழில் ஆரம்பித்தது என்று ஜெயந்திக்குத் தெரிந்த கதையெல்லாம் கறந்துவிட்டார். கூடவே, என்னதான் வருத்தமிருந்தாலும், சஞ்சய் மேல் அபரிதமான பிரியம் இருப்பதையும் அவள் பேச்சும் பாவனையுமே தெளிவாகக் காட்டிக்கொடுத்தது.

ஜெயந்தி இதில் கவனமாகத் தவிர்த்தது சஞ்சய் தந்தை இறந்த காரணமும், அவன் அன்னை பெயர் தமயந்தி என்பதும்தான். ரமா சித்திக்கு அவர் வாங்கிய பல்பில் தமயந்தி பெயர்  நன்றாக நினைவில் இருந்தது. வரன் பெயர் விவரங்கள் மற்ற வரன்களோடு பலதில் ஒன்றாக மறந்துவிட்டிருந்தது.

நினைவுகளை அசை போட்டு அமர்ந்திருந்தவளை கைப்பேசி அழைப்பு கலைத்தது. சஞ்சய் பெயர் பார்க்க, எடுத்தாள். மனதில் சிறு பரபரப்பு ஏற்பட்டதை ஒதுக்கினாள். திங்கள் இவளை மெட்ரோவில் விட்டுச் சென்ற பின் இப்போதுதான் தொடர்பு கொள்கிறான். இடையில் சாப்பிட்டாயா, வீடு வந்துவிட்டேன் போன்ற சில குறுஞ்செய்திகள் மட்டுமே.

“ஜெயந்தி… நான் வீட்டுக்கு வரட்டுமா? எனக்கு கொஞ்சம் மிளகு ரசம் சாதம் வெச்சு தரியா?”, குரலே ஓய்ந்து போய் கேட்டது.

“வாங்க. என்னாச்சு சஞ்சய்?”

“மோகன் என்னை திட்டி அனுப்பிட்டான். நான் வீட்டுக்கு வந்து சொல்றேன்.”, இணைப்பை துண்டிக்க, ஒரு நொடி செய்வதறியாது நின்றாள்.

கை தானாய் மோகன் நம்பரை அழைத்தது.

“சொல்லுமா?”

“என்னாச்சு மோகன்? சஞ்சயை திட்டி அனுப்பிட்டீங்க?”

“அட..இங்க எதாவது ஸ்பை காமெரா வெச்சிருக்கியா ? எப்படித் தெரியும்?”

“ம்ப்ச், எனக்கு போன் பண்ணி ரசம் சாதம் பண்ணித் தர சொல்றார். குரலே ஒரு மாதிரி இருந்தது. கேட்டதுக்கு நீங்க திட்டினீங்கன்னார்.”

“ஓ… அதனால அவனுக்கு நீ லாயரா வரியாக்கும்?”, கிண்டலாய் வந்தது மோகன் குரல்.

“ம்ப்ச்… என்ன மோகன்?”

“ம்ம்…இராம்மோகன். அவன் வந்தா ரசம் சாதம் வெச்சி குடுத்து சமாதானப்படுத்து…இல்லையா பேசற பேச்சும் பேசிட்டு இங்க எந்த முகத்தை வெச்சிட்டு வந்தடான்னு உன் பங்குக்கு நீயும் திட்டி அனுப்பு. இப்ப என்னை வேலை பார்க்க விடு”, மோகனும் வைத்துவிட, ஒன்றும் புரியாமல் நின்றாள் ஜெயந்தி.