திங்கள் காலை வால்ட் வாசலில் நிற்பாள் என்று ஜெயந்தி நினைக்கவில்லை. ஆனால் நின்றிருந்தாள். முகம் சற்றே கனன்றது. அலுவலகம் உள்ளே செல்ல, அவள் ஐடி கார்ட்டை வாசலில் தட்ட, பீப் என்று ஒலித்து சிகப்பு லைட் எரிந்தது. அவளுக்கு அனுமதி இல்லை.
“ஹலோ ஜெய ந்தி..”, என்று உடன் வந்த டெக் லீட், அவன் கார்டை வைத்து, கதவு திறந்ததும், சற்று தயங்கி, “உள்ள வர்றீங்களா? சர் பார்க்கணுமா?”, என்று கேட்க,
“பரவாயில்லை. நான் கீழ லாபில இருக்கேன். அவர்கிட்ட சொல்லுங்க”, என்று திரும்பி லிஃப்ட்டின் புறம் வந்து நின்றாள். சரியாக கதவு திறக்க, சஞ்சய் இன்னும் இருவரோடு வெளியில் வந்தான்.
“ஜெயந்தி… சாரி லேட் ஆகிடுச்சு, உள்ளே போயிருக்க வேண்டியதுதானே?”, என்று வர,
“அக்சஸ் கார்ட்டை முடக்கிட்டு உள்ளே போன்னா? டெக் லீட் ரகு கதவை திறந்துட்டு அவ்வளவு தயக்கமா உள்ள வர்றீங்களா? சாரை பார்க்கணுமான்னு கேட்டார்”, தேவையா எனக்கு என்று பார்த்திருக்க,
கண்களை ஒரு நொடி மூடியவன், ‘இதை எப்படிடா மறந்த இடியட்?’ என்று தன்னையே நிந்தித்துக்கொண்டு,
“சாரி மா… இப்ப முதல் வேலையா எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்.. வா”, என்று தன் பாஸ் வைத்து திறந்து உள்ளே அழைத்து வந்தான்.
நிஜத்திற்கும் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க ஜெயந்திக்குத் தோன்றவில்லை. ஆனால் அனைவர் கண்களும் அவள் மேல் இருந்தது தெரிந்தது. அதற்குள் ரகு மோகனிடம் சொல்லியிருப்பான் போல, மோகன் எதிரே வந்துகொண்டிருந்தான்.
“வெல்கம் பாக் ஜெயந்தி!”, என்று சத்தமான வரவேற்பில், வேறு வழியில்லாது, அவனைப் பார்த்து லேசான ஒரு புன்னகையை சிந்தினாள்.
“நீ உன் சீட்ல போய் உட்காரு ஜெயந்தி. ஃப்ரீயா இரு. எல்லாரும் ஒன்பதரைக்கு மீட்டிங் சொல்லி வரசொல்லியிருக்கு.“, மோகன் சொல்ல, ஒரு வறண்ட புன்னகையை சிந்தியவள், சிஸ்டம் ஆக்சஸும் லாக் ஆகியிருக்கும் மோகன். எதுக்கு தேவையில்லாத சங்கடம். நான் மீட்டிங் ரூம்ல வெயிட் பண்றேன்.”, என்று வலது புறம் திரும்ப,
“ஜெயந்தி…. என்னோட ரூம்ல வந்து உட்கார். அஞ்சு நிமிஷத்துல உன் சீட்டுக்கு போய் லாகின் பண்ணிக்கலாம்.”, மறுத்துப் பேச முடியாத தொனியில் கூறிய சஞ்சய் முன்னால் நடக்க, ஜெயந்தியால் முறைக்க மட்டுமே முடிந்தது.
“பாவம் பார்த்து மன்னிச்சுடு ஜெயந்தி. அவன் தெளிவா இருந்திருந்தா, நேத்து நைட்டே முடக்கியிருந்த உன் எல்லா ஆக்சஸும் ரிலீஸ் பண்ணியிருப்பான். உனக்கு மேல அவன் டென்ஷனா இருக்கான்.”
“உங்க நண்பருக்குத்தான நீங்க பேசுவீங்க? வாசல்ல ரகுக்கு என்னை உள்ள கூப்பிடலாமா வேணாமான்னு அவ்வளவு தயக்கம். தேவையா எனக்கு? இதுக்குத்தான் வேணாம்னா யார் கேட்டா? சித்தப்பா, சித்தி, அஞ்சலின்னு எல்லாரும், நீ போய் உன் பேரை கிளியர் பண்ணிட்டு அப்பறம் ராஜினாமா பண்ணுன்னு அடம்”, பொரிந்தாள்.
“கூல்…கூல். ரகு மாதிரி எல்லாரோட டவுட்டையும் இன்னிக்கு சரி பண்ணிடலாம். ஆனா நிஜமா ரிசைன் பண்ணனுமா ஜெயந்தி? இனி இந்த மாதிரி ஆகாது. ஒரு வாட்டி பாடம் படிச்சான்னா மச்சான் கெட்டியா பிடிச்சுக்குவான்.”, மோகன் சஞ்சய்க்கு பரிந்து பேச,
“என்னை எந்த வித்ததிலேயும் நிர்பந்தம் பண்ண மாட்டேன்னு சொல்லவும்தான் வர சம்மதிச்சேன். இப்படி உங்க மூலமா பண்ணாலும் என் ரியாக்ஷன் அதேதான் இருக்கும் மோகன்.”, அவள் எச்சரிக்கவும், “ஐயோ… அவன் எதுவும் சொல்லலை. இனி நானும் ஒன்னும் சொல்ல மாட்டேன். நீ போ. அவன் உள்ளருந்து முறைக்கறான்.”, அனுப்பி வைத்துவிட்டு மோகன் அவன் அறைக்கு திரும்பினான்.
உள்ளே வந்தவளை அமரச் சொல்லிய சஞ்சய், “ரியலி சாரி ஜெயந்தி. எல்லா ஆக்சசும் தந்துட்டேன்.”, என்று சொல்ல,
“அப்போ யார்கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணுவ ஜெயந்தி? ஒரு மாசம் நோட்டீஸ் பீரியட் இருக்கு”, என்று சஞ்சய் சொல்ல,
“அதுக்கு பதிலா என் சம்பளம் ஒரு மாசம் குடுத்துடறேன். இந்த ஒரு வாரம் என்ன வேலை நடந்துச்சுன்னு ராகினிகிட்டவும், என் டீம்கிட்டவும் பார்த்து அடுத்து சொல்லிட்டு போறேன். எதுவும் டவுட்னா அவங்க போன் பண்ணட்டும். அனேகமா அதுக்கு தேவையிருக்காது. டீம்ல இருக்க இரண்டு பேருக்கும் ப்ரொசீசர் நல்லாவே தெரியும்.”, ஜெயந்தி சொல்லவும் அவளை ஆதங்கமாகப் பார்த்தான் சஞ்சய்.
“நான் என்ன பண்ணா…”
“சஞ்சய்…. என்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க.”
நெற்றிப்பொட்டை நீவிக்கொண்டவன், “யெஸ், இங்க கம்பனில நீ இருக்கறதைவிட என் லைஃப்ல இருக்கறதுதான் முக்கியம். நீ டைம் எடுத்துக்கோ ஜெயந்தி.”
“நான் மீட்டிங் ரூம்ல இருக்கேன் சஞ்சய். திங்கள் காலையில நிறைய மெயில் இருக்கும். நீங்க பாருங்க”, என்று எழுந்து கொண்டாள்.
இவள் வெளியே வரவும் எதிரே ராகினி அப்போதுதான் அவசரமாக உள்ளே நுழைந்தாள். “ஜெய்… இங்க எங்க? எப்ப வந்த?”, என்று கேட்க,
“ஏன் வந்தன்னு கேட்கறியா? பாஸ் வரச் சொன்னார். இப்ப கிளம்பிடுவேன்.”, என்று கூற ராகினி முகம் சற்றே வாடியது.
“என்னாச்சு ஜெய்?”
“ஒன்னும் இல்லை ராகினி. இப்பதான் வந்திருக்க. நீ போய் லாகின் பண்ணு”, என்று மேலும் பேசுவதை தவிர்த்துவிட்டு மீட்டிங் அறைக்குச் சென்றவள் உள்ளிருந்து பூட்டிவிட்டு அமர்ந்தாள். ஒன்பதரைக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது.
சனிக்கிழமை சஞ்சய் அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தவன், அவள் சித்தப்பா சித்தியிடம், “கண்டிப்பா ஜெயந்திதான் எனக்கு மனைவியா வரணும்னு விரும்பறேன். என் பக்கம் நான் சொல்லிட்டேன். என் தப்பும் புரிஞ்சுது. ஜெயந்திகிட்ட உடனே நான் பேசியிருக்கணும். மன்னிப்பு கேட்டிருக்கேன்.” என்றவன், “ஜெயந்தியை ஆஃபீஸ் வரச்சொல்லி, அவ டிஸ்மிஸ் ஆகலை. நடந்த சதியை கண்டுபிடிக்க இது ஜஸ்ட் ஒரு நாடகம்னு விளக்கி அவ பேரை கிளியர் பண்ணனும் நினைக்கறேன். ஜெயந்திக்கு விருப்பமில்லை. நீங்க அவளுக்கு எடுத்துச் சொல்லுங்க ப்ளீஸ்”, எனவும், சித்தப்பா, சித்தி இருவருமே “இது உனக்கான நியாயம். அங்கேயே தொடர்ந்து வேலை செய்யணுமா வேணாமான்னு அப்பறம் யோசி ஜெய், ஆனா உன்னைப் பத்தி ஏன் அவங்க தப்பா நினைக்கணும்? இதை கண்டிப்பா சரி செய்யணும்”, என்று பேசிப் பேசிக் கரைத்தனர்.
கதவு தட்டப்படும் சத்ததில் கவனம் பெற்றவள், சென்று திறக்க, ராகினி முதலாக ஒவ்வொருவராய் வந்தனர். மஞ்சு, “ஜெய்க்கா…”, என்று வர, “ஷ்… மஞ்சு. அப்பறம்”, என்று விலகிச் சென்று ஒரு புறமாக அமர்ந்தாள். நவீன் கையசைக்க், அவனுக்கும் ஒரு சிறு புன்னகை. மோகன் உள்ளே வர, பின்னோடு சஞ்சய் உள்ளே நுழைந்தான். கையில் ஒரு பூங்கொத்து.
அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், “மார்னிங் கைஸ். நேரா விஷயத்திற்கு வரேன். இங்க ஜெயந்தி போன வாரம் ஆஃபீஸ்ல இல்லை. அவங்க மெயில் பாக்ஸ் ப்ளாக்ஆகியிருந்தது. நீங்க அவங்களை கான்டாக்ட் பண்ண வேணாம்னு ஹெச். ஆர் ராகினி சொல்லியிருப்பாங்க. அதனால நிறைய பேருக்கு என்னாச்சுன்னு நிறைய டவுட்ஸ். “, என்றவன் ஒரு நொடி அமைதிக்குப் பின் மேலோட்டமாக நடந்த சதியை கூறி அதன் காரணகர்த்தா தீக்ஷனா என்பதையும் சொல்ல, அறையில் ஒரு அதிர்வு, அடுத்து பேரமைதி.
“ நம்மோட இருந்தவங்க இப்படி துரோகம் பண்றது வருத்தமாதான் இருக்கு, பட் இனி யாரும் தீக்ஷனாவோட எந்த காரணத்துக்காகவும் கான்டாக்ட்ல இருக்ககூடாது.”, சொல்லி முடிக்கும் போதே நவீனின் கை மேலே ஏற
“சொல்லு நவீன்”
“சார்… தீக்ஷனா என்னோட போன்ல டச்ல இருந்தாங்க. போன வாரம் ஜெயந்திக்கா மெயில் ப்ளாக் ஆனது, அவங்க வராதது பத்தி கேட்டாங்க. ரீசன் தெரியலை. திடீர்னு கிளம்பினாங்க. அப்பறம் வரலை, கான்டாக்ட் பண்ணக்கூடாதுன்னு ஆர்டர்ங்கற வரைக்கும் சொன்னேன்.”
“ம்ம்… உன் மூலம்தான் விஷயம் போச்சா? சரி… இது எல்லாருக்குமே வார்னிங். எந்த விதத்துலையும் தீக்ஷனா உங்களை அணுகினா, எங்கிட்ட இல்லை மோகன்கிட்ட உடனே சொல்லணும். அவங்களுக்கு எந்த தகவலும் போகக்கூடாது. இல்லைன்னா, ஜெயந்திக்கு பொய்யா நடந்தது, உங்களுக்கு நிஜமா நடக்க வாய்ப்பிருக்கு. சோ பீ வெரி கேர்ஃபுல்”, என்று எச்சரிக்க, சற்றே முணுமுணுப்பு எழுந்து அடங்கியது.
“கம்பனிக்காக நீங்க கெட்ட பேர் வாங்கிக்கிட்டீங்க. சாரி அண்ட் தாங்க் யூ சோ மச் ஜெயந்தி,”, என்று கையிலிருந்த பூங்கொத்தை அவளிடம் தர, மறுக்க முடியாத சூழலில் ஒரு சிறு புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள்.
மீட்டிங் முடிந்ததாகக் கூறவும் சலசலத்துக்கொண்டே கூட்டம் கலைந்தது. பூங்கொத்துடன் ரிசெப்ஷன் சென்றவள், “லீலா, நான் நாளைக்கு ஊருக்குப் போறேன். வீட்டுக்கு எடுத்துட்டு போனா வேஸ்ட் ஆகிரும். இங்க உங்க டேபிள்ல இருக்கட்டும். எல்லாரும் பார்த்து எஞ்சாய் பண்ணட்டும்.”, என்று வைத்துவிட்டு அவள் மறு கேள்வி கேட்கும் முன்னர் ராகினியிடம் சென்றாள்.
“என்னல்லாம் நடந்துடுச்சு ஜெய். ஒரு வார்த்தை சொல்லலை நீ”, என்ற ராகினியை சலனமில்லாமல் பார்த்த ஜெயந்தி, “நீ போன் செஞ்சு விசாரிச்சிருந்தா சொல்லியிருப்பேன் ராகினி. பாஸ் சொன்னதால நீதான் பேசவே இல்லையே. இதுல நான் போன் செய்திருந்தா எடுத்திருப்பியா நீ?”
பதில் சொல்ல முடியாது முழித்த ராகினி, “சாரி ஜெய். யாருக்கும் என்ன நினைக்கறதுன்னே புரியலை”, என்று இரங்கிய குரலில் கூறினாள்.
“விடு. நான் இப்ப வந்தது, வேலையை ரிசைன் பண்ணத்தான். சஞ்சய்க்கும் தெரியும். ஃபார்மாலிட்டீஸ் ஆரம்பிக்கலாம்”, என்று சொல்ல ராகினியின் அதிர்ந்த பார்வையே பதிலாக இருந்தது.