“எல்லாத்துக்கும் மேல அந்த போட்டோ, அதுக்கு நீங்க தந்த விளக்கம்? எப்படி சஞ்சய்? அதுவும் நீங்களா தேடி எடுத்தீங்க, அதைப் பார்த்த உடனே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு. அதென்ன சொன்னீங்க? ஆங்…. மோட்டீவ் கிடைச்சிடுச்சு? ஜட்ஜ்…ஜூரி…லாயர் எல்லாம் நீங்களே?”, கோவத்தில் ஜெயந்தி குரல் உயர்ந்தது, கைகளை இறுக்கமாக பிணைத்திருந்தாள்..
“ஜெயந்தி… “
ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தவள், “ஒரு போட்டோ வெச்சு எப்படி முடிவுக்கு வந்தீங்க? அது வரைக்கும் நான் செய்திருக்க மாட்டேன்னு சர்வர் ஹாக், ஈமேயில் ஹாக்னு தேடினவர், நிரன்ஜன் என்னை பிளாக்மெயில் பண்றானோன்ற அளவுக்கு எனக்காக யோசிச்சவர், எப்படி திடீர்னு நாந்தான் டெண்டர் அமெளண்ட்டை சொல்லியிருப்பேன்னு முடிவு கட்டினீங்க?””
இந்த அளவிற்கான குறுக்குக் கேள்விகளை ஜெயந்தி கேட்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை சஞ்சய். தேர்ந்த வக்கீலின் குறுக்கு விசாரணைக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது அவளது கேள்விகள்.
முகத்தை அழுந்தத் துடைத்த சஞ்சய் ஜெயந்தியைப் ஏறிட்டு பார்த்துவிட்டு, பின் எதிரில் இருந்த ஸ்டீரிங் வீலில் பார்வையை பதித்தான், “உண்மையா சொல்லணும்னா பொறாமை. அந்த போட்டோ பார்த்த உடனே நிஜமா பத்திகிட்டு வந்துச்சு. இத்தனை நாள்ல ஒரு முறைகூட நீ என்னை அந்த மாதிரி – ஒரு ஹீரோ வொர்ஷிப் பண்ற மாதிரி, என்ன சொல்லுவாங்க…? நீதான் உலகம்னு பார்த்ததே இல்லை. அந்தப் பொறாமை எனக்கே புதுசு. என்ன யோசிக்கறேன்னு தெரியாத அளவு கோவம்.. எரிச்சல். அப்ப அவனைத்தான் விரும்பறியா, அதனாலதான் அவனை அப்படி பார்க்க வருதா? அப்படி என்ன அவனைவிட நான் கம்மியாகிட்டேன்னு ஏதேதோ யோசனை. இப்ப நினைச்சா பைத்தியக்காரத்தனமா இருக்கு, எனக்கே அசிங்கமா இருக்கு, பட்…”, என்று ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் முகத்தை பார்க்க, அவளோ அவனை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன?”
லேசாக தலையை இல்லை என்பதாக ஆட்டியவள், “நீங்களா இப்படி?”
உதட்டை சில நொடிகள் மென்றவன், “எத்தனை படிச்சாலும், கோட் சூட்டெல்லாம் போட்டு டெக்னாலஜி பேசினாலும், எனக்குள்ளவும் ‘என் பொண்ணு, என் மண்ணுன்னு’ மார் தட்டி சண்டைக்கு நிக்கற ஒரு குகை மனுஷன் இருக்கான்னு எனக்குமே அதிர்ச்சிதான் ஜெயந்தி. நிரஞ்சன் உன்னைப் பத்தி பேசினதும் உடம்பெல்லாம் சூடாகிப்போய் முதல் இரண்டு அடி அடிச்சப்பறம்தான் சுய நினைவே வந்துச்சு. ஜெயந்தி பார்த்து ரசிச்சது இந்த முகம்தானேன்னு இன்னும் நாலு அடி முகத்துலயே அடிச்சது, தெரிஞ்சு செஞ்சது.”, அவளைப் பார்க்க,
முறைத்தவள், “அதனால? அஞ்சலி வேணா இதை கேட்டதும் உங்க பக்கம் சாயலாம். எனக்கு அடிதடியெல்லாம் அலர்ஜி.”
வருத்தமாய் சிரித்தவன், “நானெல்லாம் அடிதடில இறங்கினதா வரலாறே இல்லை. நான் சொன்னப்போ மோகன் நம்பவே இல்லை. வழக்கமா அவன்தான் சண்டைன்னு இறங்குவான், நான்தான் பிரிச்சு கூட்டிட்டு வருவேன். உன் விஷயத்துல என் வழக்கத்துக்கு மாறா நிறைய செய்யறேன் ஜெயந்தி. எனக்கே புதுசா இருக்கு.”
முகத்தை திருப்பியவள், “வேணாம், என்னால உங்க குணம் எதுவும் மாற வேணாம். நீங்க சொல்றது பார்த்தா எல்லா கெட்ட குணமும் என்னாலதான் வருதுங்கறீங்க. சந்தேகம், பொறாமை, சண்டை எதுவும் நல்லதுக்கில்லை. நான் வேணாம் உங்களுக்கு. வீட்டுக்கு் போலாம்”, சொல்லி முடிக்க சஞ்சய் காதுக்குள்ளேயே அலறியது அபாயச் சங்கு. ‘டேய்….உண்மையை சொல்றேன்னு என்னடா செஞ்சு வெச்சிருக்க?’, மனம் படபடக்க, லேசாய் நெஞ்சை நீவிக்கொண்டவன்,
“ஜெயந்தி… நான் அப்படி சொல்ல வரலை. மோகன் மாதிரி நான் பெருசா பெண்கள் கூட பழகினதில்லை. எனக்கு…உன் மேல… நான் இவ்வளவு பொசசிவ் ஆவேன்னு நினைக்கலை. கூடவே கொஞ்சம் இன்செக்யூரிட்டி. அதுதான் இப்படி நடந்துக்கறேனா தெரியலை“, தலையைக் கோதிக்கொண்டான். அவன் இலகுவாக இல்லை என்பதை அவன் உடல்மொழியிலேயே ஜெயந்தி புரிந்துகொண்டாள்.
“உங்களுக்கு என்ன பயம்? நிரஞ்சனா? அவனைப் பத்தி தெரிஞ்சதுக்கு அப்பறமும் நான் அவனை…”, எனும்போதே அவள் முகத்தில் அருவருப்பு.
“இல்லை… அதெல்லாம் இல்லை. இனி எந்த சந்தேகமும் வராது. ஸ்ரீதர் சர் ஷேர்ல, நான் வாங்கப்போற பங்கு உன் பேர்ல வாங்கலாம்னு மோகன்கிட்ட பேசியிருக்கேன். அவனுக்கு ஓகே தான். “
“வாட்? அது எப்படி சரி வரும் சஞ்சய்? உங்க கம்பனி அது. நான் எப்படி பார்ட்னராக முடியும்? நாளைக்கு மோகனுக்கு கல்யாணம் ஆச்சுன்னா, அவர் மனைவிக்கும் ஷேர் தந்தா, தேவையில்லாத சிக்கல் வர வாய்ப்பிருக்கு. வால்ட் நீங்களும் மோகனும் வளர்த்த கம்பனி. இதுல மூணாவது நபர் வரது நல்லதில்லை.”, வேகமாக வந்தது ஜெயந்தியின் மறுப்பு.
ஒரு சின்னப் புன்னகையுடன் பார்த்திருந்தவன், ”சீ… மோகன் மனைவி, அவங்க ஷேர்னால வரக்கூடிய இஷ்யூஸ், இப்படி நான் யோசிக்கலை. எனக்கு நீ திரும்ப வால்ட் வரும்போது முதலாளியா வரனும். அது மட்டும்தான் யோசிச்சேன். ஆங்… ஷேர் உன் பேர்ல இருந்தாலும், அதுக்கான முடிவுகள் என்னோடதாதான் இருக்கும்னு மோகன்கிட்ட சொல்லியிருந்தேன்.”
மறுப்பாக தலையாட்டியவள், “இதெல்லாம் தேவையில்லாதது. நான் திரும்ப வால்ட் வரப்போறதில்லை சஞ்சய், எப்படி வரமுடியும்? அடுத்து எப்ப என்ன நடக்கும்னு திக் திக்குனு இருக்க முடியாது.”
அதிர்ந்து அவளை நோக்கினான் சஞ்சய். “ஜெயந்தி…. நோ… நீ திரும்ப வரணும், நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அப்ப எந்த பயமும் உனக்கு இருக்காது.”
“ஏன் புருஷன் பொண்டாட்டிக்குள்ள சந்தேகம் வராதா இல்லை துரோகம் நடக்காதா?”
அவள் கேள்வியில் முறைத்தவன், “மனைவிங்கற உரிமையில என்ன நடந்தாலும் என் சட்டையை பிடிச்சு நீ சண்டை போடலாம். இன்ஃபாக்ட், நான் கத்தினபோதே நீ சண்டை போட்டிருந்தா ஒரு வேளை என் அறிவு வேலை செய்திருக்கும்.”
“ஆஹா…. இது என் தப்பில்லை. நான் சண்டை போடவும் மாட்டேன். புரிஞ்சுக்கோங்க சஞ்சய். அங்க எல்லாரும் நீங்க என்னை டிஸ்மிஸ் பண்ணிருக்கீங்கன்னு நினைச்சிருக்காங்க. அனேகமா, உங்க கம்பனில இப்படி டிஸ்மிஸ் ஆனது நான் மட்டுமாதான் இருப்பேன். நீங்களே திரும்ப கூட்டிட்டு வந்தாலும், என்ன நடந்துச்சோன்னுதான் பார்ப்பாங்க. ”
“இல்லை. நீ வா. நான் எல்லாரையும் கூப்பிட்டு நடந்ததை மேலோட்டமா சொல்லி, டிஸ்மிஸ் பண்ணதே ஒரு நாடகம், அதுக்கு நீ ஹெல்ப் பண்ணங்கற மாதிரி நான் விளக்கம் சொல்லிடறேன். ப்ளஸ் நம்ம கல்யாணம் பத்தியும் சொல்லிட்டு, நீ பார்ட்னர்னும் சொன்னா யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க.”
கையெடுத்துக் கும்பிட்டவள், ”வேற வினையே வேணாம்.பொண்ணுங்க ஒரு ப்ரமோஷன் வாங்கினாலே, மானேஜரை கரெக்ட் பண்ணித்தான் வாங்கினாங்கற மாதிரி பேசுவாங்க. இப்படின்னு தெரிஞ்சா தீக்ஷனா நான் உங்ககூட படுத்துதான் திரும்ப இந்த வேலையை வாங்கினேன்னு கதை கட்டுவா. நீங்க இப்படி திடீர்னு சொன்னா, அவ சொன்னதை நம்பற மாதிரிதான் இருக்கும். எனக்கிருக்க கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடும். எதுவும் சொல்ல வேணாம். அப்படியே விட்டுருங்க.”
“ஜெயந்தி…. வேலை மட்டும் வேணாமா, இல்லை நானுமே வேணாம்னு முடிவு பண்ணிட்டியா?”, இறுக்கமாக வந்தது சஞ்சயின் கேள்வி.
அவனை பாவமாகப் பார்த்தவள், “எனக்கு சத்தியமா தெரியலை சஞ்சய். உங்க மேல இருந்த நம்பிக்கையை மொத்தமா உடைச்சிட்டீங்க. திரும்ப நம்பிக்கை வைக்க பயமா இருக்கு. மறுபடியும் நீங்க சந்தேகப்பட்டா நான் விபரீதமா எதாவது முடிவு பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு. என்னால் உங்க குணமே மாறுதுன்னு சொல்றீங்க, ஆனா, நீங்க எனக்கு ஏற்படுத்தின வலி தெரிஞ்சும், நிதானமா புரிய வெச்சுக்கலாம்னு என் ஃபீலீங்சுக்கு மதிப்பே தராம ஓரம் வெக்கறீங்க. இதை நான் அலட்சியம்னுதானே எடுத்துக்க முடியும்?”
“சத்தியமா அப்படி நான் நினைக்கலை.”, ஒரு பெருமூச்சை விட்டவன், “நான் என்ன செய்திருக்கணும்னு நினைக்கற? “
“உங்க கம்பனி முக்கியம் சஞ்சய். நானா இருக்கமுடியாதுன்னு நினைச்சப்போ ஒரு போன், சாரிமா கோபத்துல பேசிட்டேன். என்னமோ சதி நடக்குது. என்னன்னு புரியற வரை எனக்காக வெயிட் பண்ணுன்னு சொல்லியிருக்கலாம். இல்லை, நிரஞ்சன் வீட்டுக்கு போற வழியில கூட பத்து நிமிஷம் இங்க என்னை பார்த்து சொல்லிட்டு, சாரி கேட்டுட்டு போயிருக்கலாம். அவன் வீட்டுக்கு போறதுக்கு இந்த பக்கமாதானே போனீங்க? சரி, அஞ்சலி வந்து பேசினதுக்கு அப்பறமாவது, அவளை கொண்டு வந்து விட்டுட்டு ஒரு பத்து நிமிஷம் எங்கிட்ட சொல்லி, நான் கண்டுபிடிக்கற வரை தைரியமா இருன்னு நம்பிக்கை குடுத்திருக்கலாம்.”, எதுவுமே இல்லையே என்று கைகளை விரித்தவளது கண்கள் தளும்பியது.
அவன் கைகளை பிடித்துக்கொண்டான் சஞ்சய். கங்கா மாமா, அஞ்சலி, மோகன் என்று எல்லாரும் சொல்லியும் தன் புத்தியில் உரைக்காமல் போனது எப்படி என்று நொந்துகொண்டான்.
“நீ எடுத்து சொன்னா புரிஞ்சுப்பேன்னு முழுசா நம்பினேன் ஜெயந்தி. ஆனா இதுக்கு இப்படி ஒரு கோணம் இருக்கறது எனக்கு தோணலை. அதுவும் என்னோட தப்புதான். முன்னாடி ஒரு தரம் மோகனை இப்படித்தான் சந்தேகப்பட்டேன். அவன் செய்யலைன்னு நிரூபிச்சிட்டு, இதுதான் உனக்கு முதலும் கடைசியுமா நான் தர மன்னிப்பு. இன்னொரு முறை என்னை சந்தேகப்பட்டா அதோட நம்ம நட்பு முறிஞ்சுடும்னு சொன்னான். அதுக்கப்பறம் இத்தனை வருஷத்துல எதுக்குமே நான் அவனை சந்தேகப்பட்டதில்லை. மோகன் உன் விஷயம் கேள்விப்பட்டு என்னை திட்டும்போது கூட இதை சொல்லி, முன்ன நான், இப்ப ஜெயந்தியா? உன்னை மீறி உங்கிட்ட நெருங்கறவங்களை சந்தேகப்படறது உங்கப்பாக்கு நடந்த விஷயத்தாலான்னு கேட்டான். அப்பறமா யோசிச்சப்போ அதுவும் ஒரு வகையில் உண்மையோன்னு தோணுது. எல்லாரையும் தள்ளி வெக்கற என் கட்டுப்பாடு மீறி, சட்டுனு உள்ள வந்தவ நீ. எப்பவும் கூடவே இருந்தாலும், அப்பா போனப்பறம் மோகனையும் தள்ளி வைக்க நினைச்சு, முடியாம போச்சு, அவன் அப்படி செய்ய விடலை. அதுதான் உங்க இரண்டு பேரையும் காயப்படுத்தி சோதிச்சேனா?தெரியலை. மே பீ நான் எதாவது சைக்காலஜிஸ்ட்டை பார்க்கணும் போல. அதுவும் செய்யறேன் ஜெயந்தி. நீ… எனக்கு இன்னொரு சான்ஸ் தரணும். ஐ ப்ராமிஸ் இந்த மாதிரி திரும்ப நடக்காம பார்த்துக்கறேன்.”
அவன் இப்படிக் கூறவும் கொஞ்சம் நெக்குருகித்தான் போனது. மெல்ல தன் கைகளை உருவிக்கொண்டவள், “சஞ்சய்…மனசை போட்டு உழப்பிக்காதீங்க. எதுவும் உடனே சரியாகிடாது. நான் நம்மைப் பத்தி யோசிச்சாலும், உங்க கம்பனில திரும்ப வேலைக்கு வரது கஷ்டம். நிறைய பேசிட்டோம். வீட்டுக்குப் போலாம் சஞ்சய். “