அத்தியாயம் – 24

காரை செலுத்தவும்தான் சஞ்சையால் சற்று எளிதாக சுவாசிக்க முடிந்தது. அருகில் பொம்மை மாதிரி அமர்ந்திருந்தாள் ஜெயந்தி. இவளை தனியாக அழைத்து வருவதற்கே அத்தனை பாடு.

என்ன ஏது என்று ஆளாளுக்கு கேட்க, எழுந்து நின்றவன், “ஜெயந்திக்கு அப்பா அம்மா ஸ்தானத்துல இருக்கீங்க. நீங்க கேட்கற கேள்வியும் நியாயம்தான். பதில் சொல்ல கடமைபட்டிருக்கேன். ஆனா முதல்ல நான் ஜெயந்திகிட்டதான் என்ன நடந்துச்சுன்னு விளக்கணும். நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கணும்.  அதனால எனக்கு ஜெயந்திகிட்ட தனியா பேசணும். ப்ளீஸ் ஜெயந்தி”, என்று கேட்டு நிற்க,

“நாம வேணா பெட் ரூம்ல இருக்கலாம்”, என்று எழுந்தார் சுப்பு. இத்தனை சிறிய வீட்டில் எங்கு பேசினாலும் கேட்கக்கூடிய வாய்ப்பிருக்க, “இல்லை நான் ஜெயந்தியை ஒரு ட்ரைவ் கூட்டிட்டு போய் பேசிட்டு திரும்ப அழைச்சிட்டு வரேன். நீங்க ரிலாக்ஸா இருங்க”, என்று சொன்னவன் மீண்டும் ஜெயந்தியைப் பார்த்து, “என்னோட கொஞ்ச நேரம் வா ஜெயந்தி”, என்று கேட்டு நிற்க, அஞ்சலியைப் பார்த்தபடியே எழுந்தாள்.

“ட்ரெஸ் மாத்திட்டு போலாம் ஜெய். வா”, என்று அழைத்துக்கொண்டு அவள் அறைக்குச் செல்ல, “என்ன பயம் ஜெய். சஞ்சய் அப்படில்லாம் ஒன்னும் செஞ்சுடமாட்டார்.”, அஞ்சலி சொல்ல, “இவர் எதாவது சொல்ல நானும் மூளை மழுங்கிப் போய் மன்னிச்சுடுவேனோன்னு பயமா இருக்கு அஞ்சலி.”

தோழி சொன்னதில் புன்னகைத்த அஞ்சலி, “அவர் சொல்றதை கேட்டுக்கோ. அவர் உனக்களிக்காத வாய்ப்பை அவருக்கு நீ தந்திருக்க. நல்ல உரைக்கற மாதிரி அதைச் சொல்லு. உணர்ச்சிவசப்பட்டு எதுவும் கமிட் பண்ணாம, யோசிக்கறேன்னு சொல்லிட்டு வா. அப்பறமா நிதானமா யோசிச்சு முடிவு செய்யலாம். ஓகேவா?”, தைரியம் சொல்லி, பளிச்சென்று ஒரு சல்வாரை எடுத்துக் கொடுத்து பாத்ரூமிற்கு அனுப்பி வைத்தாள்.

“ஜெயந்தி…”, அவள் கவனத்தை தன்புறம் திருப்பியவன், ஒரு பூங்கா அருகில் காரை நிறுத்தியிருந்தான். காலை வெயில் சுள்ளென்று அடிக்க, பூங்காவில் யாரும் இருக்கவில்லை. இவர்களுமே காரில்தான் அமர்ந்திருந்தார்கள். இந்த ஒரு வார காலத்திலேயே இளைத்து, கண்கள் கருவளையம்  பூசியிருக்கக் கண்டவளைப் பார்க்க சஞ்சய் மனம் மிகவும் வருந்தியது.

“சொல்லுங்க சஞ்சய்”

“உன்னை சந்தேகப்பட்டதுக்கு, பேசின பேச்சு எதுக்கும் சாரிங்கற ஒரு வார்த்தை சரி பண்ணிடாது. எனக்குத் தெரியும். ப்ளீஸ் லெட் மீ எக்ஸ்ப்ளேயின்”, என்று அவள் புறம் திரும்பி அமர்ந்தான் சஞ்சய்.

லேசாய் உதட்டைக் கடித்தவள், “ம்ம்… நீங்கதான் நான் சொல்ல வந்த விளக்கத்தை கேட்டுக்கலை.  ஆனா நான் உங்களுக்கு அந்த வாய்ப்பை தரேன். சொல்லுங்க சஞ்சய்”, என்று நிதானமாக கூறினாள்.

அபாய மணி தூரத்தில் ஒலிப்பதுபோல சஞ்சய்க்கு கேட்டது. துணிந்து, நிரஞ்சனைப் பார்த்து பேசியது, அடித்தது, பின்பு சிங்கப்பூர் கனெக்ஷன், அடுத்து மும்பை என்று கூறி இறுதியாக தீக்ஷனாவின் தந்தையிடம் பேசி அவர் பங்குகளை தாங்கள் வாங்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளதைக் கூறினான்.

“ நீ போட்டிருந்த மூணு வருஷ ப்ளான் படியே செய்யலாம்னு மோகன்கிட்ட பேசினேன் ஜெய்.”, எல்லாம் கூறிவிட்டு அவளையே பார்க்க, “என்ன சஞ்சய், இதுல நான் என்ன சொல்ல?” என்று தலைசாய்த்து கேட்டாள்.

“ஒன்னுமே சொல்லத் தோணலையா ஜெயந்தி? உன்னை ஹர்ட் பண்ணணும்ன்ற எண்ணத்துல எதுவும் பேசலை ஜெயந்தி, அந்த நேர ஹீட் ஒஃப் த மொமென்ட், மோகன் சொன்ன மாதிரி நாக்குல சனி. ரொம்ப அதிகமா பேசிட்டேன். ட்ரூலி சாரி ஜெயந்தி. வீட்டுக்கு வந்து ரொம்ப அழுதியா?”, கவலையாகக் கேட்டான்.

வெளியே சில வினாடிகள் பார்த்தவள், “ஹ்ம்ம்…அழுது முகமெல்லாம் வீங்கி, அப்படியே தூங்கிட்டேன். எழுந்து பார்த்தா கண்ணை திறக்க முடியாத படி வீங்கி ஒட்டியிருந்தது. நீங்களா இப்படி என்னை பேசினது? நான் உங்களுக்குப் போய் துரோகம் செய்திருப்பேன்னு நம்பறீங்களான்னு அதிர்ச்சிதான் ரொம்ப நேரம். யோசனை கொஞ்சம் விபரீதமா போச்சு, நான் செத்துப்போனாலாச்சம் நான் பண்ணலைன்னு உங்களுக்குப் புரியுமான்னு…””

“ஜதிம்மா..”, முதல் முறையாக அவன் செல்லப்பெயர் வைத்து அழைக்கிறான், அது கூட உரைக்கவில்லை ஜெயந்திக்கு. அன்றைய நாளிற்கே சென்றுவிட்டிருந்தாள். சொல்லி அழ, இல்ல என்னன்னு கேட்க வீட்டுல அப்பா அம்மான்னு யாரும் இல்லையே சஞ்சய். அழுது தேறி, எண்ணம் தப்பா போகுதுன்னு தெரியவும் யாரை கூப்பிடன்னு தெரியலை. சித்தி சித்தப்பாக்கு உங்களை தெரியாது. அஞ்சலிக்கு மட்டும்தான் உங்களையும், நம்ம விருப்பமும் தெரியும். அதுதான் தனியா இருக்க பயந்துட்டு அவளை வரச்சொன்னேன். அவ என் நம்பிக்கையை ஏமாத்தலை.“, அதற்கு மேல்தான் உனக்கே தெரியுமே என்பதைப்போல தோளைக் குலுக்கினாள்.

இறந்து போகும் எண்ணம் வந்தது என்று சொல்லவும்தான் ஜெயந்தியின் மனக்காயத்தின் ஆழம் உணரத் தொடங்கினான் சஞ்சய். அபாய மணி கொஞ்சம் கிட்டத்திலேயே அடிப்பது போல ஓங்கிக் கேட்டது.

“சத்தியமா இந்த அளவு கஷ்டப்படுவன்னு நான் எதிர்பார்க்கலை ஜெயந்தி. அஞ்சலிகிட்ட எனக்காக சாரி சொல்லு. இதை முடிச்சிட்டு வந்து பார்க்கறேன்னு சொல்லுன்னு சொல்லியிருந்தேனேமா.”

அவனை ஒரு பார்வை பார்த்தவள், “ம்ம்… நாத்தனார் முடிச்சு அவளை போடச் சொன்னது வரைக்கும் சொன்னா. ஆனா என் பலமணி நேர அழுகையை போக்கியிருக்க முடிஞ்சும் நீங்க செய்யலை. என்னை சந்தேகப்பட எப்படி மனசு வந்துச்சு சஞ்சய்? அஞ்சலி மாதிரி இது விசியர் லீக்கா இருக்கலாம்னு நீங்க ஏன் யோசிக்கலை சஞ்சய்?”

அவள் கோவமாக பேசவில்லை எனவும், “அது, உன்னை மாதிரி அன்னிக்கு நானும் உணர்ச்சிப் பிடியில இருந்தேன் ஜெயந்தி. நிரஞ்சன் கூப்பிட்டதும் அவனைப் பார்க்கப் போயிட்டு அடிச்சு கொஞ்சம் களேபரமாகிடுச்சு…”

“அப்ப நிரஞ்சன் போன் செஞ்சு பேசவும்தான் என்னை மாட்டிவிட யாரோ ப்ளான் பண்றாங்கன்னு உங்களுக்குப் புரிஞ்சுது. அவன் போன் செய்யலைன்னா உங்க சந்தேகம் அப்படியே இருந்திருக்குமா?”

“இல்லை ஜெயந்தி… நீ போனதும் நானும் வீட்டுக்கு கிளம்பிட்டேன். வழி முழுசும் அதிர்ந்த உன் முகமும், நான் செய்யலைங்கற உன்னோட அந்த பேச்சு, முக்கியமா, நீயாடா என்னை சந்தேகப்படறன்ற அந்த பார்வை எல்லாமே புரிய வெச்சிடுச்சு ஜெயந்தி. நினைக்கறதை காட்ற முகம் உன்னோடது. இந்த அளவுக்கு நடிக்கறதெல்லாம் சான்சே இல்லைன்னு புரியவுமே, என்னவோ நம்மை சுத்தி நடக்குதுன்னு புரிஞ்சுது.”

“ம்ம்… அதை கண்டுபிடிக்கறது தான் முக்கியம். எங்கிட்ட ஒரு வார்த்தை…ஒரு போன்லயாச்சம், இப்ப சொன்னதை அப்ப சொல்ல முடியலை. அது உங்களுக்கு முக்கியமா படலை. அஞ்சலிகிட்ட போற போக்குல சொல்லிவிட்டா போதும்.அப்படித்தானே?” சற்று அயர்ந்துதான் போனான் சஞ்சய்.

“உன்னை காயப்படுத்திட்டேன். நேர்ல வந்து மன்னுப்பு கேட்கணும்னு நினைச்சது உண்மை ஜெயந்தி. அதை உடனே செய்யணும்னு தோணலை. அப்பறமா உங்கிட்ட பேசி புரியவெச்சுக்கலாம்னு…”, அவள் முக இறுக சஞ்சய் குரல் தேய்ந்தது.

“மத்தவங்க மாதிரி அழகைப் பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டு அப்பறம், யோசனை சொல்லாதே, வாயை திறக்காதேன்னு அடக்கிட்டு, தன் தேவைக்கு மட்டும்  யூஸ் பண்ணிக்கற ஒரு பொம்மையா மனைவி இருக்கணும்னு நினைக்கற சராசரி ஆண்களை மாதிரி இல்லாம என் கருத்துகளை மதிச்சு, என் ஐடியாஸ் கேட்டு விவாதிக்கற ஒருத்தரை விரும்பியிருக்கேன்னு நினைச்சு பெருமைபட்டிருந்தேன். ஆனா நீங்களும் நான் சராசரி ஆளுதான். இந்த பிரச்சனை உன்னை சுத்தி இருந்தாலும், உன் யோசனை எதுவும் வேணாம். மூடிகிட்டு வீட்டுல இரு. நான் எல்லாத்தையும் முடிச்சுட்டு எனக்கு டைம் இருக்கும்போது சாவகாசமா வந்து பேசிக்கறேன்னு காட்டிட்டீங்க. இந்த பிரச்சனையை மோகனோட பேசினீங்களா?”

அவள் கூறும் வரையிலும் இப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லை என்று சஞ்சய்க்கு விளங்கியது.

“உன்னை இன்வால்வ் பண்ணக்கூடாதுன்னு இல்லை ஜெயந்தி. இந்த பொறி வெச்சவங்க நம்மை வாட்ச் பண்றாங்களான்னு தெரியாது. அவங்க எதிர்பார்த்த மாதிரியே நடந்தா அவங்களை கொஞ்சம் ட்ரேஸ் பண்ண ஈசியா இருக்கும்னுதான்…”

“என்னை ஒதுக்கிட்டு மோகன், கங்கா மாமா ஹெல்ப்போட கண்டுபிடிச்சீங்க.”, அவளே முடித்து வைத்தாள். அவன் கூற்றை ஏற்றுக்கொண்டாளா இல்லையா என்று சஞ்சையால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

கங்கா மாமா ‘லேட் பண்ணா இந்த பொம்பளைங்க நம்மை வெச்சு செய்வாங்கடா’ என்றதன் அர்த்தம் இப்போது விளங்கியது. ‘அனுபவஸ்தர் பேச்சைக் கேட்டு மாறு வேஷத்துலையாவது வந்து அன்னிக்கு இராத்திரியே கால்ல விழுந்திருக்கணும்.’, லேட் ஞானோதயம் உதித்து சருகாய் உதிர்ந்து பறந்து சென்றது.

“ஜெயந்தி. நீ ஏன் நிரஞ்சனை  தெரியாதுன்னு சொன்ன? அன்னிக்கே அவனைப் பத்தி சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் இது வந்திருக்காது.”, அவனுள் குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ம்ம்..அஞ்சலி கூட இதை சொன்னா. எதிர்பார்க்காத இடத்தில அவனை திடீர்னு பார்க்கறேன். வழக்கப்படி டால்னு வழியறான். தெரியும்னு உங்களை அறிமுகப் படுத்தினா, கண்டிப்பா ஏடாகூடமா எதாவது பேசி வைப்பான். அவனைப் பார்த்ததே எரிச்சல். இதுல கரெக்டா  நீங்களும் நோட் பண்ணிட்டு அவன் போட்டிருந்த ட்ரெஸ் வரைக்கும் அடையாளம் சொல்லி கேட்கறீங்க. எனக்கு அவனைப் பத்தி எதுவுமே பேசப் பிடிக்கலை. அதைச் சொன்னா, இன்னமும் கேள்வி கேட்பீங்க. அதுதான் தெரியாதுன்னு சொன்னேன்.  ஆமா பொய்தான். ஏன் சொல்லக்கூடாதா? எப்பவும் எல்லாத்துலேயும் அலர்ட் மோட்லேயே உண்மை சொல்லி இருக்கணுமா?”, இப்படிக் கேட்பவளிடம் எந்த பதிலையும் கூற முடியாது நெளிந்தான்.

“சரி… நான் தெரியாதுன்னு சொன்னேன். நீங்க அதை நம்பலை. மறுனாள் எங்கிட்டயே கேட்டிருக்கலாமே? அதை விட்டுட்டு நீங்களா விசாரிச்சீங்க. சரி அவன் எனக்கு பாஸா இருந்திருக்க வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சுது. அப்பவாவது, அவனை மறு நாள் கான்ஃப்ரென்ஸ்ல பார்த்து பேசினேன் ஜெயந்தி. உன் பாஸா, ஏன் தெரியலைன்னு சொல்லிட்ட எதாவது பிரச்சனையான்னு திரும்ப நீங்க ஆஃபீஸ் வந்தப்போ கேட்டிருக்கலாமே? அப்பவும் நான் உண்மையை சொல்லலைன்னா  நீங்க சந்தேகப்படறது நியாயம். ஆனா நீங்க எனக்கு அந்த வாய்ப்பை தரவே இல்லை. சோ, அப்பவே என் மேல சந்தேகம் ஆரம்பிச்சிடுச்சு. அடுத்து மாயவரம் இரங்கசாமி இஷ்யூ. அதனாலதான் நான் கங்கா மாமா வீட்டுக்கு வரலைன்ற அளவுக்கு புரிஞ்சவர், அவரை தெரியாதா, பொய்யா பேரை யூஸ் பண்ணியான்னு நேரடியா கேட்டிருக்க வேண்டியதுதானே? நீங்க கேட்கறதுக்கு முன்னாடி நானே சொல்ல ட்ரை பண்ணிட்டு இருந்தேன், அதுக்கான தைரியத்தை தேடிகிட்டு இருந்தேன். பட்..” நேரம் கடந்துவிட்டது என தோளைக் குலுக்கினாள்.

சஞ்சய்க்கு அபாயச் சங்கு வெகு அருகில் கேட்டது.