மறு நாள் காலை ஜெயந்தியை அழைக்க, அவள் எண்ணிற்கு அழைப்பு செல்லவில்லை. வாட்சப்பும் செல்லவில்லை. நம்பரை பிளாக் செய்திருந்தாள் என்று புரிந்தது.
உள்ளுக்குள் லேசாக உதைத்தாலும், கோவத்தில் செய்துவிட்டு மறந்திருப்பாள். நேராக சென்றுவிடுவோம் என்று நினைத்து பத்து மணி போல காரை எடுத்தான்.
இன்று அனேகமாக சஞ்சய் வரக்கூடும் என்று அனுமானித்திருந்த அஞ்சலி வெள்ளி இரவு அலுவலகம் முடிந்த கையோடு ஜெயந்தியின் வீட்டிற்கு வந்திருந்தாள்.
காலையில் பொங்கல், கொஸ்த்து , வடை என்று செய்து உண்டு முடித்திருந்தார்கள். ஏதேதோ கதைகள் பேசி சோர்ந்து போயிருந்த தோழியை சற்று கலகலப்பாக்கியிருந்தாள் அஞ்சலி. வாசலில் அழைப்பு மணி கேட்க, “காலையில யாரு?”, புருவம் சுருக்கினாள் ஜெயந்தி.
“நீ போய் கை கழுவிட்டு வா ஜெய். நான் யாருன்னு பார்க்கறேன்.”, சஞ்சயாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் ஜெயந்தியை தவிர்த்து அஞ்சலி கதவை திறக்கச் சென்றாள்.
வாசலில் ரமா சித்தி கணவரோடு நின்றிருந்தார்.
“அஞ்சலி பொண்ணே? நல்லாருக்கியா? உன் ஃப்ரெண்டுக்கு புத்தி சொல்ல வந்தியா?”, என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவர், ஜெயந்தியைப் பார்த்த மாத்திரத்தில்,
“என்னல்லாம் பேசிட்டடி? உங்கம்மாக்கு அடுத்ததா உனக்கு நான் தான். எல்லாரும் என்னைத்தான் ஜெயந்திக்கு கல்யாணத்துக்கு பார்க்கலியான்னு கேட்கறாங்க. ஏதோ வேலையில ஸ்திரமா உட்காரட்டுமேன்னு டைம் குடுத்தா, எதுக்கும் பிடி குடுக்காம இருக்க? வரன் வந்திருக்கு. நல்ல பையன்னு சொன்னா, நான் கட்டிகிடவா? கொழுப்புடி உனக்கு! உங்கம்மா கிட்ட இப்படித்தான் பேசுவியா? உங்கப்பா கனவுல வந்து என் பொண்ண அப்படி விட்டு்டாதம்மான்னு கேட்கறார். யாருக்குன்னு பதில் சொல்லுவேன? உன் தம்பி வேற எப்ப என்ன பார்க்க அமெரிக்கா வரன்னு கேட்டுட்டே இருக்கான். உனக்கொரு கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்டா அவனோட ஒரு ஆறு மாசம் இருந்து மருமக பேரப்புள்ளைய பார்த்துட்டு வருவேன். உனக்குன்னு நான் பார்த்தா, நீ நானா இருக்கச் சொன்னேன். உங்க பிள்ளையை பார்க்க தாராளமா போங்களேன்னு திட்டற? எப்படி இந்த அளவுக்கு சுயனலமான?”, வந்ததுமே தன் ஆதங்கத்தை கொட்டியவரை, கைப் பிடித்து சோஃபாவில் அமர வைத்தது அஞ்சலிதான்.
“ஆன்ட்டி. நிதானமா அவளை திட்டுங்க. தண்ணி குடிங்க முதல்ல. அவ கொஞ்சம் அப்செட்ல இருக்கா.” கோப்பைகளில் தண்ணீர் ஊற்றி அது வரையிலும் அமைதியாக இருந்த சுப்பு சித்தப்பாவிடமும், பொரிந்து தள்ளியிருந்த சித்தியிடமும் நீட்டினாள்.
தப்பு செய்த குழந்தை போல கண்ணில் நீர் கோர்த்து அமைதியாக அவர் திட்டுவதை வாங்கிக்கொண்டிருந்தாள் ஜெயந்தி.
“வாடாமா இங்க”, என்று அவளை தன் அருகில் அழைத்து அமர வைத்துக்கொண்டார் சுப்பு.
“என்ன ஆச்சு? அன்னிக்கே வரணும்னு உன் சித்தி குதிச்சா. கொஞ்சம் ஆறப்போடுன்னு நான் தான் இரண்டு நாள் கழிச்சு கூட்டிட்டு வந்தேன். என்ன பிரச்சனை? ஏன் கல்யாணம் வேணாம்?”, நிதானமாகக் கேட்டார்.
“என்னை வேலையிலர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க சித்தப்பா”, ஜெயந்தியின் குரல் கமறி வந்தது.
“என்னது? எந்த முட்டாள் உன்னை டிஸ்மிஸ் பண்ணது?”, ஜெயந்தி சார்பாக உடனே சித்தி கொடி பிடிக்க,
“கம்பனி ரகசியத்தை நான் போட்டி கம்பனிக்கு சொன்னதாக சந்தேகப்பட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டார் பாஸ். அஞ்சலி செஞ்சது நானில்லைன்னு அங்க போய் பேசிட்டு வந்துட்டா. ஆனாலும் அங்க இனிமே வேலைக்கு போக முடியாது.”, என்றவள் மூக்கை உறிந்துகொண்டே, “சாரி சித்தி. இந்த கலாட்டா நடந்துகிட்டு இருக்கும்போது வரன் வந்திருக்கு போய் பேசுன்னு நீங்க ஃபோர்ஸ் பண்ணவும் என்னையும் மீறி கத்திட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க சித்தி. மன்னிச்சிடுங்க.”, என்று வருத்தம் தெரிவித்தாள்.
“அதை சொல்ல வேண்டியதுதானடி கழுதை? எந்த புறம்போக்காவது எதையாவது சொன்னா, இப்படித்தான் மனசுல ஏத்திப்பியா? இந்த சோப்பு டப்பா கம்பனி இல்லைன்னா ஊர்ல வேற கம்பனியா இல்லை? உன் திறமைக்கு உனக்கு எங்க போனாலும் வேலை கிடைக்கும் கண்ணு”, ஜெயந்தியின் கண்ணை துடைக்கும் நேரம் மீண்டும் வாசலில் மணி ஓசை.
“இப்ப யாரு?”, என்று ஜெயந்தி பார்க்க, இந்த முறை அஞ்சலி, “சித்தி, நீங்க போய் கதவை திறங்க. நான் காஃபி போடறேன்.”, என்று ஜெயந்தியை உள்ளே இழுத்தாள்.
“எனக்கு யாருன்னு தெரியும்?”, என்று முணுமுணுத்தபடியே சென்று கதவை திறக்க, அவர் கண்டதோ ஜீன்ஸ் டீ-ஷர்ட் போட்டிருந்த ஒரு இளைஞனை. ஒரு சிறு அலங்காரப் பூக்கூடை பொக்கேவுடன் நின்றிருந்தி சஞ்சயின் புன்னகை, ஜெயந்தி அல்லாது அங்கு நின்றிருந்த மத்திய வயதுப் பெண்மணியைப் பார்த்து உறைந்தது.
“பூ சேல்ஸா? அதெல்லாம் வேணாம்பா”, என்று கதவை மூடப்போனவரை, “ஜெயந்தி?”, என்று அவசரமாகக் கேட்க,
“ஓ கொரியரா?”, என்று அடுத்து அனுமானம் செய்தவர், “நானே வாங்கிக்கறேன். சைன் போடணுமா?”, என்று கூடையை நோக்கி கையை நீட்ட,
“மேடம்..”, என்று ஓரடி தள்ளி நின்றவன், “நான் கொரியர் பாய் இல்லை. ஜெயந்தியை பார்க்கணும்”, விரைப்பாகக் கூறியவன், அவரைத் தாண்டி எட்டி பார்க்க, அங்கே சிரிப்பை அடக்கியபடி அஞ்சலி தெரிந்தாள்.
“அஞ்சலி…”, என்று சஞ்சய் குரல் தர, பின்னால் திரும்பியவர், “உனக்குத் தெரியுமா அஞ்சலி?”, என்று வினவ,
ஆமாமென்று தலையாட்டிவள், “இவர்தான் அந்த சோப்பு டப்பா கம்பனியில்லிருக்க அந்த முட்டாள் புறம்போக்கு ஆன்ட்டி”, என்று குரலில் அத்தனை குதூகலத்துடன் கூறினாள். அதைக் கேட்டு சஞ்சய் கண்கள் விரித்து “வாட்?” என்று கேட்டு முழிக்க, தலையில் தட்டிக்கொண்ட ரமாசித்தி, அஞ்சலியைப் பார்த்து கண்களை உருட்டியவர்,
“அவளைத்தான் சந்தேகப்பட்டு உங்க கம்பனியிலர்ந்து அனுப்பிட்டாங்களே. இப்ப என்னப்பா பூக்கூடையோட அனுப்பியிருக்காங்க? என் பொண்ணு உங்க கம்பனிக்கெல்லாம் வேலைக்கு வரமாட்டான்னு உன் முதலாளிகிட்ட சொல்லிடுப்பா”, என்று அடுத்து அவனை கிலியேற்றினார்.
“இல்லை.. அது … நான்…”, என்று சஞ்சய் தடுமாற, “ஆன்ட்டி… அவர்தான் முதலாளி. மன்னிப்பு கேட்ட வந்திருக்கார் போல. வந்து கேட்டுக்கட்டும் ஆன்ட்டி, வழி விடுங்க”, என்று ஒரு வழியாக அவன் மேல் பரிதாபப்பட்டு அனுமதி வாங்கிக்கொடுத்தாள்.
வாசலில் நடக்கும் கூத்து எதுவும் தெரியாது, காபியைப் போட்டு கோப்பைகளில் ஊற்றிய ஜெயந்தி டரேவில் வைத்து நால்வருக்குமாக எடுத்து வர, சஞ்சயை அங்கே கண்டு திகைத்து நின்றாள். அஞ்சலி உஷாராக ட்ரேவை தான் வாங்கிக்கொண்டு,, “நீ உட்கார் ஜெய், காஃபி எடு”, என்று கூற அவள் குரலுக்கு கட்டுண்டவள் போல சொன்னதை செய்தாள் ஜெயந்தி.
அஞ்சலியே, “இவங்க ஜெய்யோட சித்தப்பா சித்தி, அவ கார்டியன்ஸ்”, என்று பெயரைச் சொல்ல, “வணக்கம். நான் சஞ்சய். ஜெயந்தி வேலை பார்க்கற வால்ட் ல நானும் ஒரு பார்ட்னர்”, என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். பேச்சு இங்கிருந்தாலும் நொடிக்கொருமுறை பார்வை ஜெயந்தியை தொட்டு மீண்டதை கவனித்த சுப்பு சித்தப்பா,
“ஜெயந்தி உங்க கம்பனி பத்தி சொல்லியிருக்காங்க. அமெரிக்கால கூட ப்ரான்ச் இருக்குன்னா. அவ்வளவு பெரிய முதலாளி வீடு தேடி வந்திருக்கீங்க?” ‘என்னடா உன் எண்ணம் ?’ என்ற மறை பொருள் தொக்கி நின்றதை சஞ்சையும் உணர்ந்துகொண்டான்.
ஜெயந்தி அவனைப் பார்க்கக் கூட நிமிரவில்லை. காஃபியை குடித்து முடிப்பதுதான் முதல் கடமை என்பது போல கோப்பைக்குள் கவனம் வைத்திருந்தாள்.
தனக்கான காப்பியை சஞ்சய்க்கு தந்திருந்தாள் அஞ்சலி. ரமாசித்தி கண்ணைக்காட்டி என்னடி என்று அஞ்சலியைக் கேட்டது புரியாதது போல ஒரு சன்னச் சிரிப்போடு சஞ்சையைப் பார்த்திருந்தாள்.
தனிமையில் ஜெயந்தியுடன் பேசுவதற்காக ஒத்திகை செய்துகொண்டு வந்தவன், இப்படி அவள் சித்தி சித்தப்பாவிடம் பேச வேண்டியிருக்கும் என்று சற்றும் நினைக்கவில்லை. ‘பேசாம மோகனை கூட்டிட்டு வந்திருக்கணும். நாமே சமாளிச்சுக்கலாம்னு வந்தது முட்டாள்தனம்டா சஞ்சய்’, என்று மைண்ட் வாய்ஸ் ஓடினாலும், குரலை சற்றே செருமிக்கொண்டு,
“ஜெயந்தி என்ன நடந்துச்சுன்னு எவ்வளவு உங்ககிட்ட சொன்னான்னு தெரியாது”, என்று ஆரம்பிக்க, “கம்பனி விஷயமெல்லாம் எங்ககிட்ட பேசமாட்டா எங்க பொண்ணு. என் அக்கா அவளை ரொம்ப நேர்மையா வளர்ந்திருக்காங்க. அப்படியே தப்பு செஞ்சாலும், ஒத்துக்கற தைரியத்தையும் கத்துகுடுத்திருக்கோம்ங்க.”, காரமாய் உள்புகுந்தது சித்தியின் குரல்.
சங்கடமாகப் பார்த்தவன், பதில் பேசமுடியாது ஒரு வாய் காப்பியை உறிஞ்ச, சர்க்கரை தூக்கலாக தித்தித்தது. முகத்தை சுருக்காமல் இருக்க பிரயத்தனப்பட,
“ரமா.. உனக்கு உன் பொண்ணு உசத்தி. அவருக்கு ஜெயந்தி அவர் கீழ வேலை பார்க்கற பல பேர்ல ஒருத்தி. அவர் பேசி முடிக்கட்டும்”, யோசித்துத்தான் வார்த்தைகளை உபயோகித்தார் சுப்பு. அஞ்சலிக்கு விசிலடிக்கத் தோன்றியது.
‘சிக்கினடா என் பம்பரக்கட்ட மண்டையா! இப்ப சொல்லு பல பேர்ல ஒருத்தியா இல்லை உனக்குன்னு ஒருத்தியா!’, என்று அஞ்சலி மனதுக்குள் ஒரு குத்தாட்டமே போட்டுக்கொண்டிருந்தாள்.
“அது… சர்”, என்று திணறியவன், “ ஜெயந்தியும் நானும் விரும்பறோம்”, என்று சட்டென்று போட்டுடைத்தான். ஆ என்று வாய் பிளந்த சித்தியும், எதிர்பார்த்தேன் என்ற பாவனையோடு இருந்த சித்தப்பாவும் சஞ்சயைப் பார்த்திருக்க, அவனோ ஜெயந்தியைத்தான் பார்த்திருந்தான்.
அவன் கூறிபோது வேகமாக அவள் சித்தியைப் பார்த்த ஜெயந்தி தலையை குனிந்துகொள்ள,
“அதனாலதான் அந்த திலீப்ப்பை போய் பார்த்து பேசுடின்னதுக்கு மாட்டேன்னியா ஜெயந்தி?”, சித்தி கேட்ட, ‘இது எப்போ’ என்று அதிர்ந்து ஜெயந்தியை பார்த்தான் சஞ்சய்.
“அங்கிள்… இது டிஸ்மிஸ் பண்றதுக்கு முன்னாடி. இப்பவும் அப்படித்தான்ன்னு உறுதியா சொல்ல முடியாது”, அஞ்சலி எடுத்துக்கொடுக்க, சஞ்சய் அவளை முறைத்தான்.
“அதான? விரும்பற பொண்ணு மேல எப்படி வீண்பழி போட்டு டிஸ்மிஸ் பண்ணுவீங்க? உங்களை நம்பி நாங்க எப்படி பொண்ணு தர முடியும்?”, சித்தி வழமைபோல் பொரிய, சஞ்சய் நெற்றியில் வியர்வை பூத்தது.
“ப்ளீஸ்… நான் பேசிடறேனே… டிஸ்மிஸ் பண்ணது தப்புதான். அவ கிளம்பின கொஞ்ச நேரத்துலேயே புரிஞ்சிடுச்சு. ஆனா என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம ஜெயந்திகிட்ட பேச முடியாதுன்னு முதல்ல அதை கண்டுபிடிக்கப் பார்த்தேன்.”
“ஓ… இங்க என் பொண்ணு தவிச்சு போய் தனியா அழுது அரட்டியிருக்கும். அவ பண்ணலைன்னு தெரிஞ்சும் அவளை சமாதானப்படுத்தாம, உங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு சாவகாசமா பூக்கூடையை தூக்கிட்டு வந்துட்டீங்களாக்கும்? இதுல விரும்பறாராம்…. ம்க்கும். எல்லாம் நாங்களே எங்க பொண்ணை சமாதானப்படுத்திக்கறோம். நீங்க நடையை கட்டுங்க முதலாளி”, ரமாதேவி நக்கலடித்தார்.
ஜெயந்திக்குமே அவர் பேசியதில் லேசாய் புன்முறுவல் தொற்றியது. அஞ்சலியோ மூடிய கைகளுக்குப் பின்னே சிரித்துக்கொண்டிருந்தாள்.
பாவமாய் இராம சுப்புவைப் பார்த்தான் சஞ்சய். பேசு என்பதாக அவர் தலையசைக்க,
“எங்களைப் பிரிக்க வேணும்னே சதி பண்ணியிருக்காங்க. அது யாரு என்னன்னு விவரம் தெரிஞ்சுக்க கொஞ்சம் டைம் எடுத்துச்சு. கண்டுபிடிச்சு தேவையான ஆக்ஷன் எடுத்துட்டேன்”, சஞ்சய் சொல்லவும், “யாரு, எதுக்கு?” என்று கேட்டது அஞ்சலி என்றாலும், முதல் முறையாக ஜெயந்தியும் நிமிர்ந்து பார்த்தாள்.
“தீக்ஷனா…”, என்று ஒரு வார்த்தையில் ஜெயந்தியிக்கு விடையளித்தான்.
“நினைச்சேன்… உங்க அமெரிக்க அப்சரஸ் பண்ணக்கூடிய வேலைன்னுதான் நினைச்சேன். ஆனா நிரஞ்சனோட எப்படி லிங்க்?”, அஞ்சலி கேட்க, இதை பொது வெளியில் விவாதிக்க விரும்பாதவனாக நெளிந்தான் சஞ்சய்.
“அது சரி… இராமன் யார் பேச்சையோ கேட்டு பொண்டாட்டிய காட்டுக்கு அனுப்பிட்ட மாதிரிதான் இவரு என் பொண்ணையும் சந்தேகப்பட்டு அனுப்பிட்டாராக்கும். வேணாம்டி ஜெயந்தி. இதுக்கு நான் பார்த்து பேசி வெச்சிருக்க திலீப்பே தேவலாம். சிரிக்க சிரிக்க பேசறாப்பல.”, என்று சஞ்சய் வயிற்றில் இன்னும் கொஞ்சம் வினிகரை கலந்துவிட்டார்.
எத்தனையோ கான்ஃப்ரென்ஸ், மீட்டிங், கிளையன்ட்டோடு விவாதம் என்று பல இக்கட்டான பேச்சு வார்த்தகளைக் கூட எளிதாக சமாளித்தவன்தான் இன்று விரும்பியவளின் குடும்பத்தினரிடம் பேச தவித்துத் திணறிக்கொண்டிருந்தான்.