அத்தியாயம் – 23

விஷ்வா என்ற விஸ்வனாதன் விசியரின் கணினித் துறையின் ஒரு சாதாரண ஊழியன். இரத்தமின்றி, சத்தமின்றி, லேசான மிரட்டலிலும், அவன் தோழி தீபாவின் பேரைச் சொல்லவுமே அவன் பக்கத்தைக் கூறிவிட்டான்.

அவன் துறையின் உயர் மேலாளர் மனோஜ் ஆணையின் படி விவரத்தை விசியர் சம்பந்தமில்லாத ஒரு எண்ணின் மூலமாக அவர் தரும் இந்திய போன் நம்பருக்கு அழைத்துச் சொல்ல வேண்டும் என்றார் செய்தேன் என்று முடித்துவிட்டான்.

உயர் மேலாளர் யார் என்று விவரம் திரட்ட முதல் துப்பு கிடைத்தது. அவன் முக நூல் பதிவு ஒன்றில் தீக்ஷனாவுடன் பப்பில் இருப்பதுபோல போட்டோ இருந்தது. இன்னும் அலசியதில் போன வாரம்தான் சிங்கபூரின் புதிய பப்பில் எடுத்த ஃபோட்டோ என்று உறுதியானது.

“மச்சி…. தீக்ஷனா இங்க சிங்கப்பூர்ல போன வாரம் இருந்திருக்கா. அதுதான் என் கண்ணில் படவே இல்லைடா. இந்த மனோஜை பார்த்து இரண்டு தட்டு தட்டவா?”

“இல்லடா…தீக்ஷனா ஃப்ரெண்டு, சிங்கப்பூர் வரவும் உங்களைப் பத்தி சொல்லி டைம் இருந்தா பார்க்க சொன்னான்னு பேசு. அனேகமா இவனை ஜஸ்ட் யூஸ் பண்ணிருப்பா. வேலைக்காகலைன்னா அவன் செஞ்சதை விசியர்ல ரிப்போர்ட் பண்ணுவோம்னு மிரட்டு.”

“ஆனா நிரஞ்சனோட எப்படிடா இவளுக்கு லிங்க்?”

“அந்த ஒரு காரணத்துக்குத்தான் முதல்ல ஃப்ரெண்ட்லியா பேசுன்னு சொன்னேன். தீக்ஷனா சும்மா ப்ரெண்டாவே கூட இருக்கலாம்.”

“ஆமாமா…ஜெயந்தியை உடனே சந்தேகப்படுவ, ஆனா தீஷா மட்டும் சும்மா ஃப்ரெண்டா இருக்கலாம். நல்ல நியாயம்டா உன்னுது”, இடித்துரைத்தான் உற்ற தோழன்.

நெற்றியை தேய்த்துக்கொண்ட சஞ்சய், “டேய்… அவ விஷயத்துல செஞ்ச தப்பு திரும்பவும் பண்ண வேண்டாம்னுதான். விஷயத்தை கலெக்ட் பண்ணுடா”, என்றதோடு இணைப்பை துண்டித்தான்.

அன்று இரவே தீக்ஷனாதான் மனோஜை பார்ட்டியில் பார்த்து பிடித்துப் போய், அடுத்த இரண்டு நாளும் அவனோடு சுற்றி, முற்றிலுமாக அவள் வலையில் விழுந்ததும், இந்த உதவியை செய், என் அண்ணன் கம்பனிக்கு உதவியாக இருக்கும். அதை முன்னிட்டு இன்னும் அடிக்கடி என்னால் இங்கே வர முடியும். இதையே பின்னாளில் காரணமாக சொல்லி அண்ணனிடம் உன்னை அறிமுகப்படுத்துகிறேன், என்று உருகியிருக்கிறாள்.

“இந்த ஆடும் அவளை நம்பி தலையை குடுத்திருக்கு. ஆனா நிரஞ்சன் யாருன்னு மனோஜ்க்கு தெரியலை. குடுத்த நம்பருக்கு தகவல் அனுப்பு அதிகம் தெரியாம இருக்கறதே நல்லதுன்னு சொல்லி வெச்சிருக்கா. சோ…இனி நீதான் உபேன் கிட்ட பேசி வாங்கணும். நான் நாளைக்கே சென்னை வரேண்டா”, என்றான் மோகன்.

மறுனாள் காலையில் சஞ்சய் மும்பையில் இருந்தான். உபேந்திராவை நேரில் சந்தித்து மனோஜ் தீக்ஷனா பற்றி சொன்னவன், தான் அவளை வேண்டாமென்றதில் பழி வாங்க செய்வது போலிருக்கிறது. இதில் நிரஞ்சன் எப்படி வந்தான் என்பது தெரிந்தால் நேரடியாக அவளை ஆதாரத்துடன் எதிர்கொள்ள முடியும் என்று விளக்கினான்.

உபேன் நிரஞ்சனை தன் நண்பன் மூலம் அறிமுகமான ப்ரீத்தம் சொன்னதன் பேரில் எடுத்ததாகக் கூற, ப்ரீத்தம் தீக்ஷனாவோடு கேரளா சென்ற குழுவில் இருந்தவன் என்று உறுதி செய்ய அதிக  நேரமாகவில்லை. மும்பையில் இருந்த ப்ரீத்தமின் வீட்டிற்கே சென்றவன், தீக்ஷனா அனுப்பி வைத்தாள். நிரஞ்சன் பற்றி எப்படி தெரியும் என்று வினவ மழுப்பப் பார்த்தான்.

பொறுமையை முற்றிலுமாக தொலைத்திருந்த சஞ்சய் கொத்தாக அவன் சட்டையை பிடித்து முஷ்டியை மடக்க, அவன் கண்ணில் கனன்ற வெம்மையில் பயந்த ப்ரீத்தம், உண்மையை சொல்லிவிட்டான்.

ஜெயந்தி பற்றி விவரம் சேகரிக்க அவனை பணித்ததாகவும், அவள் பழைய பாஸ் என்பதால் நிரஞ்சனை ஒரு பப்பில் ஃப்ரெண்டு பிடித்ததாகக் கூறினான். சரக்கு உள்ளே செல்ல, லேசான விசாரணையிலேயே ஜெயந்தி அவனை ஒரு தலையாய்க் காதலித்ததாகவும், இவன் வேண்டாமெனவும் சிக்கலில் மாட்டிவிட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக புலம்பித் தள்ளிவிட்டான்.  தேடி வந்த வேலை எளிதாகவே முடிந்துவிட்டது. இதுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டதற்கு அந்தப் புகைப்படத்தை நிரஞ்சன் காட்ட, அதை தீக்ஷனாவிற்கு அனுப்பி விவரமும் கூறியிருக்கிறான்.

அவள் சொல்படியே நிரஞ்சனுக்கு விசியரில் வேலை ஏற்பாடு செய்வதிலிருந்து கொடேஷன் தொகை கிடைத்ததும் என்ன செய்யவேண்டும் என்று எல்லாம் பார்த்துக்கொண்டான். தீக்ஷனா ஒரு லட்சம் பரிசாக தந்ததாக வேறு கூறினான் ப்ரீத்தம். “தீக்ஷனா சொல்லித்தான் சார், நிரஞ்சன் உங்ககிட்ட பேச நான் ஏற்பாடு செஞ்சேன். ஆனா நிரஞ்சனுக்கு தீக்ஷனாவை தெரியவே தெரியாதே,  நீங்க எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?”

ஒரு  முறைப்பை மட்டுமே பதிலாகத் தந்த சஞ்சய், அவனது வாக்குமூலத்தையும் பதிவு செய்து கொண்டான். தீக்ஷனாவிற்கு எந்த வகையிலாவது தகவல் எட்டினால், நாளை காலை மும்பை போலீசின் முகத்தில்தான் முழிப்பாய் என்று மிரட்டிவிட்டு சஞ்சய் சென்னை திரும்ப, சிங்கப்பூரிலிருந்து மோகனும் வந்து இறங்கினான். ஏர்போர்ட்டில் மோகனுக்காக காத்திருந்து, ஒன்றாகக் கிளம்பினார்கள்.

தி வால்ட் மீட்டிங் அறையில் சஞ்சய் மோகன் இருவர் மட்டுமே.

“என்ன செய்யப் போற சஞ்சய்?  ஸ்ரீதர் சார்கிட்ட அவ செஞ்ச வேலையை சொல்லி தீக்ஷனாவையும் நல்லா நாக்கை புடுங்கற மாதிரி கேட்போமா?”

“அவ என்ன ஜெயந்தி மாதிரி மான ரோஷமுள்ளவளா என்ன? துடைச்சிபோட்டுட்டு சிரிப்பா.  நம்ம பார்ட்னர்ஷிப் அக்ரீமென்ட்ல ஒரு பாயிண்ட் இருக்கு தெரியுமா? நம்ம பிசினஸ்க்கு பாதகம் வர மாதிரி பார்ட்னர்ஸ் யார் செஞ்சாலும், மத்தவங்க அவங்க ஷேரை வாங்கிக்கலாம். தப்பு செஞ்ச பார்ட்னர் எதிர்ப்பு சொல்லாம மார்கெட் விலைக்கு குடுத்துட்டு போகணும்.”

யோசனையாக பார்த்தான் மோகன். “சரி இதுல ஸ்ரீதர் சார் ஒன்னும் செய்யலையே?”

“அவரை வெச்சுதானே அவர் பொண்ணு நம்ம கம்பனில இருக்கா? ஒன்னு அவர் பங்கை நமக்கு அவர் தரணும். இல்லை தீக்ஷனா மேல வால்ட் கேஸ் போடும். அவர் சாய்ஸ். ஐம்பது கோடி ஒன்னும் சும்மா பணம் இல்லை!”

மோவாயைத் தேய்த்தபடியே சஞ்சயை பார்த்தவன், “சரி, அவர் ஷேர் நம்மால உடனே மொத்தமும் வாங்க முடியாதே?”

“ம்ம்.. அவர் சைலன்ட் பார்ட்னராக்கணும். அடுத்த மூணு வருஷத்துக்குள்ள அவர் பங்கு கொஞ்ச கொஞ்சமாக நாம வாங்கறோம். ஜெயந்தி அப்பவே டெர்ம்ஸ் பார்த்து ப்ளான் போட்டிருந்ததுதான்.”

“ஜெயந்தியை மாட்டி விட்டதுக்கு தீக்ஷனாவை எதுவுமே செய்யப் போறதில்லையாடா?”

“அவ ப்ளான் பண்ணா? அதை முட்டாள் மாதிரி நம்பி நாந்தானே சொதப்பினேன்.  நான் ஸ்ட்ராங்கா இருந்திருந்தா, ஜெயந்தியை சந்தேகப்பட்டிருக்கமாட்டேன். எப்பவும் கடைசி நேரம் டெண்டர் அனுப்புவோம். சீக்கிரம் அனுப்பினதும் என் தப்புதானே?”

“ஆமா ஆமா… தீக்ஷனான்னு வரும்போது எல்லா நியாய தர்மமும் பேசு…. அப்பாவி பொண்ணு ஜெயந்திகிட்ட மட்டும் எகிறு!”

“எனக்கு தீக்ஷனாகிட்ட பேசவே பிடிக்கலைடா…எரியுது. அவளை விட்டு ஒதுங்கிப் போறதே பெட்டர். “

“சரி… ஜெயந்திகிட்ட எப்ப பேசப் போற?”

“இன்னிக்கு ஸ்ரீதர் சர்கிட்ட பேசி முடிச்சிட்டு, நாளைக்கு சனிக்கிழமைதானே, அவ வீட்டுக்கே போய் மன்னிப்பு கேட்கலாம்னு இருக்கேன் மச்சி. ஆனா அதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒன்னு கேட்கணும்.”

“என்னடா?”

“என் பங்கு நான் ஸ்ரீதர் சர் கிட்ட வாங்கறது ஜெயந்தி பேர்ல வாங்கட்டுமாடா? அவளுக்கு 16% தான் வரும். ஆனாலும் அவளை பார்ட்னரா ஏத்துக்க உனக்கு ஓகேவா?”

அதிர்ந்து பார்த்தான் மோகன். “டேய் என்ன பேசற?”

“நீ ஓப்பனா சொல்லு. அவளோட பங்குக்கும் நாந்தான் முடிவு செய்வேன். அந்த மாதிரி டெர்ம்ஸ் போட்டுக்கலாம். ஆனா அவ பார்ட்னராக்க ஆசைப்படறேன் மோகன்.”

“செஞ்ச தப்புக்கு பிராயசித்தமா?”, புருவம் உயர்த்தினான் மோகன்.

உதட்டைக் குவித்த சஞ்சய் “ஒரு வகையில். கூடவே அவளை சந்தேகப்பட முடியாத இடத்துல வைக்கணும்னு நினைக்கறேன். இந்த ஆஃபீஸ்க்கு அவ திரும்ப ஒரு சாதாரண எம்ப்ளாயீயா திரும்ப வரக்கூடாது. பார்ட்னராத்தான் வரணும்.”, தீவிரமாகப் பேசுபவனை நோக்கிய மோகன்,

“சரி ராசா…இதெல்லாம் ஜெயந்திக்கு ஓகேவா?”

“இனிமேதான் சொல்லணும். புரிய வெச்சா சம்மதிப்பா.”

“ஓ… நீ எல்லாம் விளக்கினதும், ஜெயந்தி ஏத்துக்கிட்டு திங்கக்கிழமை ஆஃபீஸ் வந்துடுவா?”, அட அப்புராணிப் பயலே என்பதான ஒரு பாவனையில் கேட்டான் மோகன்.

“நம்பறேன்”, தோளைக் குலுக்கினான் சஞ்சய். “கொஞ்சம் முரண்டுவா.. நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். ஆனா நிலைமையை சொல்லி மன்னிப்பு கேட்டா புரிஞ்சுப்பாடா.”

 நம்பிக்கையாக பேசும் தோழனை தட்டிக்கொடுத்தவன், “சரி…  நான் வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்திரம் உன் வீட்டுக்கு வரேன். அங்கருந்து ஒன்னாவே ஸ்ரீதர் சார்கிட்ட பேசுவோம்.”

இரவு, ஸ்ரீதரை தொடர்பு கொண்டு தீக்ஷனா செய்த செயலை ஆதாரத்துடன் சொல்லி முடிக்க மனிதர் அரண்டுவிட்டார். தீக்ஷனாவை அழைத்துக் கேட்க அலட்டலே இல்லாமல், “இம்ப்ரெசிவ். இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட? ஆனாலும் ஜஸ்ட் லைக் தட் உன்னோட காதலியை தூக்கிப்போட வெச்சிட்டேன் இல்லையா? அதுவும் நீ அவளோட ஃபர்ஸ்ட் லவ் கூட இல்லை… சோ… இப்பவும் நாந்தான் ஜெயிச்சேன்”, என்று கொஞ்சமும் அவமானமின்றி பேச,

“உங்ககிட்ட மட்டும்தான் பேசணும் சர் எனக்கு. உங்களுக்கு வேண்டிய விவரம் கிடைச்சாச்சுன்னா மேற்கொண்டு பேசலாமா?”, சஞ்சய் அவளை ஒரு பொருட்டாகவே கருதாமல் ஸ்ரீதரிடம் கேட்டான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவரிடம் மகளின் செயலுக்கு நீங்களாக பொறுப்பேற்றுக்கொண்டு விலகுகிறீர்களா இல்லை நாங்கள் சட்டப்படி செல்ல வேண்டுமா என்று கேட்க, மறு பேச்சின்றி ஒப்புதல் தெரிவித்தார். மகளின் செயலில் மனிதர் நொறுங்கிப் போயிருந்தார்.