“மாமா இல்லை இப்ப வந்தது மாமி. கட்டிக்கப் போற பொண்ணை இப்படி சந்தேகப்பட்டு பேசுவியாடா? மாமாக்கு ஏத்துக்கவே முடியலை. ஜெயந்தி பத்தி அத்தனை நல்லவிதமா பேசினார். உங்கப்பா மாதிரி திடீர்னு குதர்க்க புத்தி வந்துடுத்துன்னு திட்டினார்னு சொல்லிட்டு பொண்ணை அழ வெச்ச பாவம் சும்மா விடாது. மன்னிப்பு கேளு அது இதுன்னு அவங்க பங்குக்கும் திட்டினாங்க.”
“டேய் …ஃப்ரீயா விடு. என்னை திட்டாத திட்டா? அதெல்லாம் மாமா மன்னிச்சு விட்டுருவார். நீ போய் பாட்டு கேட்டுட்டே தூங்குடா செல்லம். நான் எல்லாம் பார்த்துக்கறேன். சரியா?”, ஆற்றுப்படுத்தி அனுப்பி வைத்தான்.
காலையில் அஞ்சலிக்கு மதிய உணவு கட்டித் தந்த ஜெயந்தி, “ஆஃபீஸ்ல இன்னிக்கு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இல்ல அஞ்சலி. டிஸ்மிஸ் ஆனாதான் இப்படி சொல்லாம கொள்ளாம மெயில் பாக்ஸ் லாக் ஆகும். ஏன்னு ஆளாளுக்கு பேசிப்பாங்க. ராகினிக்காவது சஞ்சய் சொல்லியிருக்கணும் இல்லையா? அவளோ மஞ்சுவோ போன் பண்ணா என்ன சொல்றது அஞ்சலி. சஞ்சய்க்கு தெரிஞ்சாலும், அவர் சொல்லாம நான் எதுவும் சொல்லக்கூடாது இல்ல?”
தன்னை டிஸ்மிஸ் செய்துவிட்டாலும், இதை சொல்லலாம், கூடாது என்று யோசிப்பவளின் நேர்மையையா சந்தேகப்பட்டான் என்று சஞ்சய் மீது கோபம் வந்தது.
“போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணு ஜெயந்தி. சாயந்திரமா பார்த்துக்கலாம். எனக்கு எதாவது பேசணும்னா மெயில் போடறேன். லாப்டாப்ல பார்த்துக்கோ. எதுவும் யோசிக்காதே. அதுதான் இரண்டு நாள் டைம் கேட்டிருக்காரே நம்ம சாம்பு. துப்பி துலக்கி காரணத்தை பொறுக்கி எடுத்துகிட்டு வரட்டும். அப்பறம் வெச்சுப்போம் நம்ம கச்சேரியை. சரியா? ஹாப்பியா இரு”, என்றதோடு விடை பெற்றாள்.
மனமும் உடலும் சோர்ந்திருக்க அவனையும் மீறி சில மணி நேரங்கள் உறங்கியிருந்த சஞ்சய் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான்.
மோகனிடம் எதுவும் தகவல் வந்ததா என்றுதான் முதலில் பார்த்தான். அது சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணின் எண் என்பது வரை கண்டுபிடித்திருந்தான் மோகன்.
“டேய்..என்னடா ? பொண்ணு பேரு வெச்சு ஸோஷியல் மீடியால பார்த்தியா? சிங்கப்பூர் கான்டாக்ட் விட்டு அங்க கவர்ண்மென்ட் ஏஜென்சில குடுத்து டீடெயில் எடுக்க வேண்டியதுதானே?” படபடவென பேச,
“ம்ம்… பழைய ஃபார்முக்கு வந்துட்ட போல. சரி, கேட்டுக்கோ..”, என்று இன்னும் சில விவரங்கள் சொன்னவன், “இன்னிக்கு அவன் ஆஃபீஸ் போனப்பறம்தான் மத்த டீடெயில்ஸ் எடுக்க முடியும். வெயிட் பண்ணு.”, என்று வைத்துவிட்டான்.
காத்திருக்க முடியாமல், ஜாகிங் சென்றான் சஞ்சய். மனம் கொஞ்சம் சமன்பட வீடு திரும்பிக்கொண்டிருந்தவனை பால்கனியிலிருந்த லக்ஷ்மி மாமி அழைத்தார்.
“அதை உரியவகிட்ட சொல்லுடா. எங்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்?”
“கண்டிப்பா சொல்லுவேன் மாமா. இப்ப இந்த சிக்கலோட மூலம் என்னன்னு கண்டுபிடிக்கணும்”, என்று சிங்கப்பூர் பெண் வரை சொல்லி முடிக்க,
“லக்ஷ்மி, நம்ம சரோஜா பொண்ணு அங்கதான பல வருஷமா இருக்கா? போனைப்போடு. அவளை விட்டு நேரா இந்த பொண்ணுக்கு பேச சொல்லுவோம்.”
“மாமா…”, என்றவனை கையாட்டி தடுத்துவிட்டு, “ஆங்… சித்ரா…கங்கா மாமா பேசறேன்மா. காலையில கூப்பிட்டு தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்”, என்றவர் அவர் தேவையை சுருக்கமாகக் கூற,
“அனுப்பி விடுங்கோ மாமா. நானே சும்மா பேசற மாதிரி பேசறேன். இங்க நிறைய வீணாப்போன வாட்சப் க்ரூப்புங்க இருக்கு. அதுல ஒன்னைச் சொல்லி எதாவது பேச்சை வளர்க்கறேன். திரும்ப கூப்பிடறேன். இருங்கோ”, என்று வைத்துவிட்டாள்.
சஞ்சய் சொல்ல, “இவ கெட்டிக்காரிடா. அனேகமா இந்த பொண்ணுக்கும் எதுவும் தெரிஞ்சிருக்காது. இவ போனை மட்டுமே யூஸ் பண்ணிருப்பாங்க. வேணா பாரு. நீ உபேந்திராவுக்கு போனைப் போட்டு யார் அவனுக்கு நிரஞ்சனை ரெக்கமெண்ட் பண்ணான்னு கேளு. இல்லை நான் கேட்கட்டுமா?”
“என்ன இவ்வளவு அவசரம் மாமா? “
“உனக்காகத்தாண்டா…. தட்டி தேறி நீயா ஒரு பொண்ணை விரும்பறேன்னு ஜெயந்தி பேரை சொன்னதும் அவ்வளவு சந்தோஷமா இருந்ததுடா. எங்க தீக்ஷனாவை கட்டிகிட்டு நீ யூ.எஸ் போயிடுவியோன்னே பயந்துகிட்டு இருந்தோம். இப்ப நீயே ஜெயந்திகிட்ட சண்டை கட்டிட்டு வந்திருக்க. எவ்வளவு சீக்கிரம் மன்னிப்பு கேட்க முடியுமோ கேட்டுடணும். நாளாக ஆக பொம்பளைங்க கோவம் ஏறும், அப்பறம் நம்ம வெச்சு செய்வாங்க. அதுக்குத்தான் சொல்றேன். எதாயிருந்தாலும், அவகிட்ட முதல்ல போய் சாரி சொல்லு!”
காபி எடுத்து வந்து கொடுத்த மாமிக்கே கங்காதரன் சொன்னதில் சிரிப்பு வந்தது.
பாவமாகப் பார்த்தான் சஞ்சய், “ஆளாளுக்கு பயமுறுத்தாதீங்க மாமா. எடுத்து சொன்னா ஜெயந்தி புரிஞ்சுக்குவா. இப்ப இதை முடிக்காம நான் எதுவும் செய்ய முடியாது.”
“ஹ்ம்ம்…. பட்டுத்தான் தெரியணும்னு இருக்கு உனக்கு. சரி சித்ரா எனக்கு போன் பண்ணதும் விவரம் கேட்டுட்டு சொல்றேன். நீ உபேந்திராவை பிடி.”, என்று அனுப்பி வைத்தார்.
எட்டு மணி வரை காத்திருந்தவன், உபேந்திராவை அழைத்துவிட்டான். அவ்வளவு எளிதாக உபேந்திரா பிடிகொடுக்கவில்லை. நிரஞ்சன் தன்னுடன் டீல் பேச ரெடியாக இருந்தது. அவன் வீட்டுக்கே சென்று சஞ்சய் பேசியது, சிங்கப்பூரிலிருந்து செய்தி வந்தது, அவனை வேலைக்கு வைத்தவன் சொன்னது என்று எல்லாமாக விளக்கவும்,
“இது கொஞ்சம் விவகாரமான விஷயமாகும் போலவே? நீ இதை விசியர்கிட்டருந்துதான் அமௌண்ட் லீக் ஆச்சுன்னு என்னை இழுத்துவிட்டா என் கம்பனி பேரும் டாமேஜ் ஆகும் சஞ்சய். அவங்க ரீ-டெண்டர் கூட போடலாம்.”, அதிருப்தியாகப் பேசினான்.
“இல்லை உபேன். விசியருக்கு தெரிஞ்சாலும் இது வெளியே பரவினா அவங்களுக்கும் அசிங்கம்தான். நான் இதை அன்-அஃபிஷியலாதான் கொண்டு போகப்போறேன். இந்த டெண்டர் எதிர்க்க மாட்டேன்ற கியாரண்ட்டி உனக்கும் அவங்களுக்கும் தரேன்.”
சஞ்சய் சொலவதை ஒரளவு ஏற்றுக்கொண்டவன், முடிவாக, “அங்க விசியர் கிட்ட சொல்லி முடிச்சிட்டு அப்பறமா கேளு சஞ்சய். சொல்றேன். இப்ப அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு உறுதியா தெரியாம நான் எதுவும் சொல்லி மாட்டிக்கமுடியாது.”, என்று கைவிரித்தான்.
சஞ்சயால் பல்லைத்தான் கடிக்கமுடிந்தது. முட்டுச் சந்தில் சிக்கிக்கொண்டவனைப் பார்க்க வந்தார் கங்காதரன்.
“டேய்… அந்த பொண்ணு தீபா நம்பியார். மலையாளி. விசியர்லல்லாம் வேலை பார்க்கலை. வீடு பார்த்து குடுக்கற ஏஜென்சில வேலை பார்க்குது. சித்ரா வீடு வாடகைக்கு வேணும், பார்க்க வரேன்னு சொல்லி வெச்சிருக்கா. போய் பார்த்து பேச சொல்லட்டுமா?”
“ம்ம்…சரி மாமா. அவளுக்குத் தெரிஞ்ச யாராவதுதான் விசியர்ல வேலை பார்க்கணும். சந்தேகம் வராம கண்டுபிடிக்க முடியுமா? அவ கம்பனி கார்ட், ஃபேஸ்புக் ஐடி எதாவது கிடைச்சா ஒரு ரவுண்ட் நாங்க பார்த்துடுவோம்.”
கங்காதரன் அவள் வேலை பார்க்கும் ஏஜென்சி பேரைக் கூறினார். அதற்குள் மோகனும் தொடர்பில் வர, அவனுக்கும் தெரியப்படுத்தினார்கள்.
கங்காதரன்,” மோகன் அந்த தீக்ஷா பொண்ணு அங்கதான் இருக்காளாடா?” திடீரென்று கேட்டார்.
“இங்கதான் மாமா பார்ட்டி பப்ன்னு சுத்தறா. ஆனா சஞ்சய் கூட சேர்ந்து என்னையும் அவாய்ட் பண்றா. போடின்னு நானும் கண்டுக்கறதில்லை”, என்று கூறவும், சரி என்று தலையாட்டி கேட்டுக்கொண்டார்.
துப்பறியும் சாம்புகளுக்கு அன்றைய நாள் முழுதும் தேவைப்பட்டது. அப்போதும் அவள் வேலை , குடும்ப உறுப்பினர்கள் என்று எல்லாம் ஆராய்ந்தும் விசியருடன் தொடர்பு படுத்த முடியவில்லை. சித்ராதான் நேராக சென்று வீடு பார்க்கும் சாக்கில் பேச்சை வளர்த்து கண்டுபிடித்தார்.
கங்காதரன் பெருமையாக, “பார்த்தியாடா? என்னதான் டெக்னாலஜி இருந்தாலும், மனுஷனுக்கு மனுஷன் பேசினா எல்லா விஷயமும் கண்டுபிடிக்கலாம். அவ ஃப்ரெண்டு ஒருத்தன் விசியர்ல வேலை செய்யறானாம். சித்ரா அவ வீட்டுக்காரன் விசியர்ல இருக்கறதா ஒரு பொய்யைச் சொல்ல, அவளே விஷ்வான்னு என் பிரெண்டும் அதுலதான் வேலை பார்க்கறான்னு விவரம் சொல்லியிருக்கா. அவன் வேலை செய்யும் பதவி, டிப்பார்ட்மென்ட் வரை தகவல் வந்துவிட்டது.
அவனைப் பற்றி தேடி புகைப்படத்தைப் பார்க்க, யாருக்கும் அவனைத் தெரியவில்லை. “சஞ்சய், நீ சிங்கப்பூர் போ. நேரா இவனைப் பார்த்து பேசு”, என்று மோகன் சொல்ல,
“டேய்…எனக்கு விசா வாங்கறதுக்கே குறைஞ்சது மூணு நாள் ஆகும். நீ இன்னிக்கு கிளம்பப் பார். சிங்கப்பூர் வழியா வந்து, அங்க மூணு நாள் தங்கிட்டு அப்பறம் சென்னை வரமாதிரி ரூட்டிங் போடு. உனக்கு ட்ரான்சிட் விசா தருவான். நீதான் அவனை விசாரிக்கணும்”, வேகமாக திட்டங்கள் வகுக்கப்பட்டது.
இது எதுவும் தெரியாமல் இருந்த ஜெயந்திக்கு வருத்தமும் கோவமும் மாறி மாறி வந்தது. ராகினி, மஞ்சு என்று அலுவலகத்திலிருந்து கூட அழைப்பு இல்லை. சஞ்சய் யாரையும் அவளை அழைக்க வேண்டாம் என்று சொன்னது தெரியாததால், அவர்கள் கூட தன்னை டிஸ்மிஸ் செய்த காரணத்தால்தான் தொடர்பு கொள்ளவில்லை என்று நினைத்துக்கொண்டு அதற்கும் சேர்த்து மருகினாள்.
இதில் ரமா சித்தி போனில் அழைத்து, “ஒரு வரன் வந்திருக்கு ஜெயந்தி. நானே முதல்ல பேசிட்டேன். பையன் நல்ல கலகலப்பா பேசறான். போட்டோ…” என்று ஆரம்பிக்க, வெடித்துவிட்டாள். எல்லா கோவமும் பாவம் அப்பாவி ரமாதேவியின் மேல் விழுந்தது.