எடுப்பதா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தவள், “ஹலோ..”, என்றாள்.
“ஜெயந்தி…. எப்படிம்மா இருக்க? உன் மெயிலுக்கு என்னாச்சு?”, என்றான்.
“ஓகேதான் மோகன். மெயிலுக்கு என்ன? புரியலை?”, என்றாள். அவன் பேசுவதிலிருந்து இன்னும் அவனுக்கு விஷயம் தெரியவில்லை என்ற அளவிற்கு புரிந்தது. ஆனால் தான் சொல்லலாமா கூடாதா என்று தெரியவில்லை.
“உனக்கு இப்ப ஒரு மெயில் அனுப்பினா, மெயில் பாக்ஸ் டிசெபிள்டுனு (முடக்கப்பட்டது) வருது. என்னாச்சு?”, என்று மோகன் கேட்க, ‘ஓ அவ்வளவு வேகமா என்னை தூக்கிட்டாரா?’ என்று தோன்ற,
“சஞ்சய் என்னை காலையில டிஸ்மிஸ் பண்ணிட்டார் மோகன். ஆக்சஸ் எல்லாத்தையும் முடக்கியிருப்பாராக்கும்.” என்றாள் வறண்ட குரலில்.
“இது விளையாடற விஷயமா மோகன்? விசியர் டெண்டர்..”, என்று ஆரம்பித்தவள் இரத்தினச் சுருக்கமாக தன் மேல் விழுந்த பழியை கூற, சஞ்சயை திட்டி நாலைந்து வார்த்தைகள் எதிர்புறத்திலிருந்து வந்து விழுந்தது.
“இது ரப்பிஷ். நீ எனக்கு ரிப்போர்ட் பண்ற, என் அனுமதி இல்லாம அவனா டிஸ்மிஸ் செய்ய முடியாது. அந்த முட்டாள் என்ன நினைச்சு இதை செஞ்சான்னு தெரியாது. நீ எதுவும் மனசுல ஏத்திக்காதே ஜெயந்தி. நான் அவங்கிட்ட பேசறேன்.”, தனக்காக உடனே பேசும் மோகனை நினைத்து மனம் கொஞ்சம் சமன்பட்டது.
“நான் யாருக்கும் கம்பனி விஷயம் சொல்லமாட்டேன்னு நீங்க என்னை நம்பறீங்க இல்லையா மோகன்?” ஜெயந்தி, குரல் சற்றே நடுங்கியது.
“ஜெயந்தி…. ரிலாக்ஸ். உன் நேர்மை ஆஃபீஸ்ல யார் கேட்டாலும் சொல்லுவாங்க. எங்கேயோ தப்பு நடந்திருக்கு. நான் பேசறேன் மா.”
“அவளா…. அப்படி போடு! சூப்பர் மூவ் ஜெயந்தி. அவகிட்ட சிக்கி சேதாரமாகட்டும் பய. அடுத்த ரவுண்டு நான் வெச்சிக்கறேன்”, கொஞ்சம் குதூகலமாகவே வந்தது மோகனின் குரல்.
கால் வெயிட்டிங்கில் அஞ்சலி வர, மோகனிடம் சொல்லிவிட்டு அஞ்சலியிடம் தாவினாள்.
“எல்லாம் பேசியாச்சு ஜெய். லீக் ஆனது உன்னால இல்லை. சஞ்சய்க்கும் அது புரியுது. இரண்டு நாள்ல கண்டுபிடிக்கறேன்னு சொன்னார். நான் வீட்டுக்குத்தான் வந்திட்டு இருக்கேன். நீ வொர்ரி பண்ணாத. நாம நேரா பேசலாம். சரியா?”, என்று பதிலுக்குக் கூட காத்திராமல் வைத்துவிட்டாள்.
அஞ்சலி நடந்தது அனைத்தும் விவரிக்கக் கேட்டவள், “நிரஞ்சனை எதுக்கு பார்க்கப் போனார் அஞ்சலி?”
“வேற எதுக்கு? சொன்னது நீயில்லைன்னவும் அவனை விசாரிக்கத்தான்.”. நிரஞ்சன் சஞ்சயை அழைத்துப் பேசியதை அஞ்சலியிடம் அவன் சொல்லவில்லை.
“ம்ப்ச்… அடிக்கற அளவுக்கு என்ன சொல்லி வெச்சானோ?”
“உன்னைப் பத்தி தப்பா பேசியிருப்பான். இல்லை அவனுக்கு யார் சொன்னாங்கன்னு சொல்லாம மழுப்பியிருப்பான். இந்த இரண்டு விஷயம்தான் இருக்க முடியும். எனக்கென்னவோ, உன்னை பத்திப் பேசவும்தான் சஞ்சய் அடிச்சிருக்கணும்னு நினைக்கறேன். நான் நிரஞ்சன் பத்தி அத்தனை கதை சொன்ன போதும், உங்கிட்ட வேற விதமா என்ன பேசினான்னு அதைத்தான் கேட்டார்.”
“ம்ம்…சஞ்சயை மரியாதையா பேசற. நிரஞ்சன் அடிச்சது தெரிஞ்சதும் ஒரே பாசமாகிட்டியோ?”
ஈ என்று பல்லைக்காட்டிய அஞ்சலி, “அது… ஆமாம். உங்க கல்யாணத்துக்கு நாந்தான் நாத்தனார் முடிச்சு வேற போடணுமாம்.”
“அஞ்சலி…”, என்று எழுந்துவிட்டாள் ஜெயந்தி. “நீ… நீயும் அவர் பக்கம் போயிடாதடீ…”, என்று கலங்க,
“ஏய்… ஜெய்..அதெல்லாம் ஒன்னுமில்லை. நான் எப்பவும் உன் பக்கம்தான். ஜெய் என்ன அவ்வளவு ஈசியா போயிட்டாளான்னு மிரட்டிட்டுதான் வந்திருக்கேன். அப்படியெல்லாம் மன்னிச்சிட வேணாம் தங்கம். அவரை எப்படி சுத்தல்ல விடறதுன்னு நான் ஐடியா தரேன். முதல்ல இந்த பிரச்சனை முடிவுக்கு வரட்டும். சரியா?”, தோளணைத்து ஆறுதல் கூறியதும் சமாதானமாகிய ஜெய், “என்னால மறுபடியும் அங்க வேலைக்குப் போக முடியாது அஞ்சலி. “ என்றாள் அடுத்து.
முகத்தில் புன்னகை அரும்ப, “கண்டிப்பா ஜெய். இப்ப நோட்டீஸ் பீரியட் இருக்கே. முடிஞ்சதும் வேற வேலைக்கு போகலாம். அவசரப்பட்டு உடனே தேட ஆரம்பிக்காத. கொஞ்சம் டைம் எடுத்து நல்ல கம்பனியா பார்த்து சேரலாம். ஓகே. நானும் பார்க்கறேன்”, என்று வாக்களிக்க இன்னும் சற்று இலகுவானாள் ஜெயந்தி.
“சரி வா. படுக்கலாம். நாளைக்கு ஆஃபீஸ் போகட்டுமா ஜெய்? நீ இருந்துப்பியா இல்லை சித்தி வீட்டுக்கு போறியா?”
“என் பேர் கிளியர் செய்துட்டியே, அதுவே போதும் அஞ்சலி. நான் இருந்துப்பேன். தாங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன். நீ அடிப்ப, ஆனாலும் உன்னை மாதிரி வராதுடி”, என்று கட்டிக்கொண்டவள் மீண்டும் சற்று கண்கலங்க,
“அடடா… ஒரு வருஷத்துக்கான கண்ணீரை மொத்தமா இன்னிக்கே ரிலீஸ் பண்ணா எப்படிம்மா? போய் முகத்தை கழுவு. மறுபடியும் கண்ணு வீங்கிடப்போகுது. பால் காய்ச்சறேன். குடிச்சிட்டு தூங்கலாம்.”, அன்னையாய் அரவணைத்துக்கொண்டாள்.
இங்கே தோழிகள் பாச மழை பொழிய அங்கே தோழர்கள் இருவரும் போனில் காரசாரமாக சண்டையடித்துக்கொண்டிருந்தார்கள்.
“அவளே சொல்லியிருந்தாலும் என்னை கேட்காம எப்படிடா நீ டிஸ்மிஸ் பண்ணுவ? மூளையை அடகு வெச்சிட்டியா? அவளைப் போய் சந்தேகப்படற? இது உனக்கு ஒரு வியாதியாடா? நம்ம ஆரம்ப காலத்துலேயும் என்னை இப்படித்தான் சந்தேகப்பட்ட. என்ன நான் ஈசியா நிரூபிச்சிட்டேன். இப்ப அடுத்து ஜெயந்தி உனக்கு நெருக்கமாகவும் அவளையும் அதே டார்ச்சர் பண்ற ராஸ்கல்”, என்று கத்திக்கொண்டே போக அவனையே கணினித் திரையில் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சய் அப்படியும் இருக்குமோ என்று யோசித்தான்.
“என்ன யோசிக்கற? அவளைப் பத்தி நீ வெச்சிருக்கறதெல்லாம் உப்பு பெறாத ரீசன்ஸ் டா பரதேசி. உன்னை கோர்ட்டுக்கு இழுத்து நாறடிக்கலாம் அவ. ஜெய் பண்ணலைன்னாலும், அந்த இராட்சசி அஞ்சலி சொல்லித் தருவா!”, பேசிக்கொண்டே போன மோகனை இடை மறித்த சஞ்சய்,
“இரு, உனக்கு எப்படி விஷயம் தெரியும்? ஜெயந்தி சொன்னாளா?”
அவன் எங்கே வருகிறான் என்று யூகித்த மோகன், சற்றே நக்கலாக, “ம்ம்…அவளுக்கு அனுப்பின மெயில் பௌன்ஸ் ஆகவும் என்னாச்சு உன் மெயில்பாக்ஸ்க்குன்னு நாந்தான் போன் பண்ணிக் கேட்டேன். அப்பதான் நடந்ததை சொல்லிட்டு, என்னை டிஸ்மிஸ் செய்யவும், என் ஆக்சஸ் எல்லாம் லாக் பண்ணிருப்பார் பாஸ்ன்னு சொன்னா.”
தலையில் அடித்துக்கொண்டான் சஞ்சய். “டேய்…என்னைக் கேட்காம எதுக்கு அவளை கூப்பிட்ட? ம்ப்ச்.. இப்படின்னு தெரிஞ்சு இன்னும் வருத்தப்படுவா”
“இன்னிக்கு நைட்டுக்குள்ள எல்லாத்தையும் திரும்ப குடு”, என்ற மோகனைப் பார்த்து, “இல்லைடா… யார் எதுக்கு நம்ம கூட கேம் ஆடறாங்கன்னு தெரியலை. இப்போதைக்கு அவளை டிஸ்மிஸ் பண்ணது பண்ணதாவே இருக்கட்டும். அப்பறமா ஜெயந்திகிட்ட மொத்தமா மன்னிப்பு கேட்டுக்கறேன்”
கருவிழிகளை மட்டும் உருட்டிய மோகன் பதில் பேசவில்லை. “அந்த நிரஞ்சன் என்ன சொன்னான்னு சொல்லு”
அவனாக அழைத்தது, சஞ்சய் வலையில் விழுந்தது என்று சொல்லி முடித்து, “வீட்டுக்குப் போனா, பெரிய சாதனை செஞ்ச மாதிரி பில்-டப் குடுத்தான். ஜெயந்திக்கு இவன் மேல ஒன் சைட் லவ்வாம். அதுதான் இவன் கம்பனில நல்ல பேர் வாங்கவும், அவளைப் பத்தி நிரஞ்சனுக்கு நல்லவிதமா தோணவும் இப்படி செஞ்சுட்டாளாம். அப்பக்கூட பொறுமையை இழுத்துப்பிடிச்சுகிட்டு இருந்தேன் மோகன். அவளோட பாஸ் பொசிஷன்ல யார் இருந்தாலும் வழிவா, அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துப்பான்னு இன்னும் கொஞ்சம் மட்டமா பேசவும், பேசின மூஞ்சை பேத்துட்டேன்.”
“நீயாடா? நிஜமா அடிச்சியா?”, திகைப்பாய் கேட்டான் மோகன். சஞ்சயின் பொறுமையின் அளவு அசாத்தியமானது என்பதை கண்கூடாக அறிந்தவன், ஜெயந்தி விஷயத்தில் அவன் அவசரமாக நடந்து கொண்டதும், இதோ இப்போது நிரஞ்சனிடம் அடிதடியில் இறங்கியதும் என்று புது கோணத்தில் நண்பனைப் பார்க்கிறான்.
ஒரு பெருமூச்சுடன், “ஹ்ம்ம்… ஜெயந்தி மலங்க மலங்க முழிச்சிட்டு நான் சொல்லலைன்னு சொன்னது என்னை அரிச்சிட்டே இருந்ததுடா. என் மேல எனக்கிருந்த கோவம், அவன் பேசின பேச்சு எல்லாமா சேர்ந்து கொஞ்ச நேரத்துக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. போட்டு துவைச்சிட்டேன்.”, நெற்றியை நீவிக்கொண்டே நண்பனிடம் விவரித்தான்.
“ம்ம்… சிங்கப்பூர் நம்பர்லர்ந்து ஒரு போன் வந்துதாம். அதுலதான் தொகை சொல்லியிருக்காங்க.”
“அது சரி, தப்புன்னு தெரியாம யாரோ சொன்னாங்கன்னு எப்படிடா இவன் நம்புவான்?”
“ம்ம்…இவன் வேலையில சேர்த்து வெச்சவன், வேலை உறுதியாகறதுக்கு இது ஒரு வழி. விவரம் வரும், அதை நீ யூஸ் பண்ணிக்கோன்னு சொன்னானாம்.”
“இவனை யார் வேலையில வெச்சாங்களாம்?”
“அதை சொல்ல மாட்டேனுட்டான். அதுதான் எனக்கு வந்த போன் நம்பர் சொல்லிட்டேனே. அது வெச்சு பார்த்துக்கோங்க. என் வேலை எனக்கு வேணும், இதை நான் சொல்ல மாட்டேன்னு கால்ல விழுந்தான்”
“உடனே நீ பாவம்னு விட்டுட்டியா?”
“அடங்குடா. எனக்கு முதல்ல விஷயத்தை சொன்னேதே அவன் பாஸ் உபேந்திராதான். அவங்கிட்டயே நேரா கேட்டுக்கலாம். அது பெரிய விஷயம் இல்லை. இந்த சிங்கப்பூர் நம்பர் ட்ராக் பண்ணி யாருன்னு பார்க்கணும். ஏன் நம்ம விஷயத்தை லீக் பண்ணி டெண்டர் கிடைக்கவிடாம செய்யணும்? நிரஞ்சன் ஜெயந்தி எங்கிட்ட வேலை பார்க்கவும், அவளை கட்டம் கட்ட அவ பேரை இழுத்துவிட்டிருக்கான். பட் மூலம் எங்கன்னு கண்டுபிடிக்கணும் மோகன்.”
“அதை எங்கிட்ட விடு. நீ நிதானமா இல்லை. நேத்து நைட்டும் தூங்கலை. எதைப்பத்தியும் யோசிக்காதே. போய் ரெஸ்ட் எடு. காலையில உனக்கு அப்டேட் பண்றேன்.”, கட்டளையிட்டான்.