“வீட்டு வாசல்ல குத்த வெச்சா உட்கார முடியும்? அவர் வீட்டு பக்கத்துலதான அந்த பெருசு இருக்குன்ன?”
“ச்சு… வயசுக்காவது மரியாதை குடு அஞ்சலி. கங்கா சார், பக்கத்து வீடு. மே பீ அவர் வீட்டுலேயே இருந்தா, நேராவே போய் பெல் அடி. நீ அங்க கங்கா சார் வீட்டுல வெயிட் பண்றியா? ஆன்ட்டி நல்ல மாதிரிதான். அவங்க வீட்டு பால்கனியிலர்ந்து பார்த்தா சஞ்சய் வரது தெரியும். ஆனா என்னன்னு சொல்லி அவங்க வீட்டுல இருக்கமுடியும்?”
“நீ லொகேஷன் அனுப்பு. மிச்சம் நான் பார்த்துக்கறேன்.”, என்ற அஞ்சலி அடுத்த கால் மணி நேரத்தில் சஞ்சய் வீட்டுக்கு ஓலாவில் பயணித்துக்கொண்டிருந்தாள்.
“அஞ்சலி… வேலையில் என் மேல அவர் போட்ட பழியைப் பத்தி, நிரஞ்சன் கேடுகெட்ட புத்தி, இதைப்பத்தி மட்டும் பேசி புரியவை. மத்த பர்சனல் எதுவும் பேசாதே புரியுதா?”, கிளம்பும்போது ஜெயந்தி கேட்டதும், அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் வைத்தவள், “குட்… உங்க இரண்டு பேர் பெர்சனல் நீங்கதான் பேசிக்கணும். நான் அதை பேச மாட்டேன் ஜெய். ப்ராமிஸ்”, என்று வாக்குறுதி குடுத்துவிட்டே கிளம்பியிருந்தாள்.
சஞ்சய் வீடு இருட்டில் இருந்தது. அவனது கார் வாசலில் இல்லை. ஜெயந்தி சொல்லியிருந்த படி கங்காதரன் வீட்டு காலிங் பெல் அழுத்தினாள்.
உள்ளே சீரியல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. பனியன் லுங்கியில் வந்த ஒரு அறுபதுகளில் இருந்த முதியவர், அவளைப் பார்த்து, “யாரும்மா? யார் வேணும்?” என்று கதவைத் திறக்காமல், இரும்பு கேட் வழியாக விசாரித்தார்.
“ஹலோ சார். நான் அஞ்சலி. வால்ட்ல உங்க பொசிஷனுக்கு நீங்க எடுத்த ஜெயந்தியோட ஃப்ரெண்டு. பக்கத்துல சஞ்சய் பார்க்க வந்தேன், ஆனா அவர் வீட்டுல இல்லை. ஜெயந்தி, உங்க வீட்டுல நான் வெயிட் பண்ண முடியுமான்னு கேட்கச் சொன்னா?”, பாவம் போல் முகத்தை வைத்து கேட்கவும், “ஓ… வாம்மா. இந்த நேரத்துல தனியாவா வந்த?”, என்று விசாரித்து உள்ளே அழைத்தார்.
உள்ளே வந்த பத்து நிமி்டங்களில் ஜெயந்தி மீது அபாண்டமாக சஞ்சய் பழி சுமத்தியதை விவரித்துவிட்டாள்.
“என்னம்மா ஜெயந்தியை விரும்பறதா சொன்னான் சஞ்சய். நீ இப்படி சொல்ற?”, கங்காதரன் நம்பமுடியாமல் கேட்டார்.
“ஹ்ம்ம்… இவர் பாட்டு காலையில கத்தி, வேலையை விட்டு டிஸ்மிஸ் பண்றேன்னு சொன்னதுல ஜெயந்தி அழுது கரைஞ்சிட்டு இருக்கா. இவர் ஜெயந்திகிட்ட அவ சொல்லலைன்னு நிரூபிக்க சொல்றார். எனக்கு அவர்கிட்ட இவதான் சொன்னான்னு ப்ரூஃப் வேணும். கேட்கறதுக்கு ஆளில்லைன்னு நினைக்கறாரா? ஜெயந்தி வேலையில எவ்வளவு கறாரா, கரெக்ட்டா இருப்பான்னு எனக்குத் தெரியும். அவளோட அவருக்கு பர்சனலா பிரச்சனைன்னா நான் வந்திருக்க மாட்டேன். அவர் எப்படி டிஸ்மிஸ் பண்ணலாம் சார்? நீங்களே சொல்லுங்க?” நியாயம் கேட்பவளிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
“ஜெயந்திகிட்ட நான் பேசவாமா?”
“வேணாம் சர். அழுது அழுது தொண்டை கட்டிபோயிருக்கு. அவளுக்கு பேச முடியலை.”
“சரி. அவன் வரட்டும் அஞ்சலி. என்ன ஏதுன்னு விசாரிப்போம்”, என்று கங்காதரன் மனைவி லக்ஷ்மி சொல்ல,
“இரு அவனுக்கு போன் பண்றேன்”, என்று கங்காதரன் கைப்பேசியை எடுத்தார். “இல்லை சார். நான் இருக்கறது தெரிஞ்சு கோவத்துல என்னை போக சொல்லலாம், இல்லை வீட்டுக்கு வராமலேயே இருக்கலாம். வேணாம். அவர் வரட்டும். நைட் எவ்வளவு நேரமானாலும் அவரைப் பார்த்து பேசி ஜெயந்திக்கு ஒரு நியாயம் கிடைக்காம போக மாட்டேன்.”, சட்டமாக அவள் அமர்ந்திட இதேதடா வம்பா போச்சு என்று பார்த்தார் கங்காதரன்.
“வீட்டுல தேடமாட்டாங்களா அஞ்சலி?”
“ஜெயந்தி வீட்டுல தங்கறதா சொல்லியிருக்கேன் ஆன்ட்டி. பேசிட்டு உடனே கிளம்பிடுவேன்”, என்று சொல்ல அதற்கு மேல் மறுக்க முடியாது, “சரி வா. நாம பால்கனில இருக்கலாம். அவன் கார் வரும்போது பார்த்துட்டு கீழ வந்துக்கலாம்”, என்று அவளை கூட்டிக்கொண்டு போனார்.
“சார்?”, என்று கங்காதரனைப் பார்க்க, “போன் பண்ண மாட்டேன் மா. சரி வா. நானும் வரேன்”, என்று மூவருமே காத்திருக்க ஆரம்பித்தனர்.
ஒரு மணி நேரத்தில் சஞ்சய் கார் வீட்டருகே வர, “நான் தனியா போய் பேசறேன் ஆன்ட்டி. கிளம்பறதுக்கு முன்ன வந்து சொல்லிட்டு கிளம்பறேன்”, என்றவள் கீழே வந்தாள்.
சஞ்சய் வீட்டிற்குள் காரை செலுத்த, ரிமோட் வைத்து கேட்டை மூடும்முன் வேகமாக உள்ளே நுழைந்தாள்.
“யாரது?”, என்று யோசித்து சஞ்சய் காரை விட்டு இறங்க, “சஞ்சய்? நான் அஞ்சலி. ஜெயந்தி ஃப்ரெண்ட். உங்ககிட்ட பேசணும்”, என்று அருகில் வந்து நின்றாள்.
அவளைப் பார்த்தவன், “ஜெயந்தி?” , என்று தேட, “அவ சார்பா நான் பேச வந்திருக்கேன். அவ மேல நீங்க சுமத்தின அபாண்டமான பழியை கிளியர் பண்ண வந்திருக்கேன். உள்ளே போய் பேசலாமா, இல்லை இங்கேயே பேசணுமா?”, அழுத்தமாக பேசியவளை ஒரு பார்வை பார்த்தவன், வீட்டிற்குள் சென்றான்.
ஹாலில் சென்று அமர்ந்தார்கள் இருவரும். “ம்ம்… ஜெயந்தி எப்படி இருக்கா?”
“வார்த்தையாலே குத்தி கிழிச்சி அனுப்பிட்டு, எப்படி இருப்பா?”, விறைப்பாக பதில் வந்தது.
இப்படித்தான் பதில் வரும் என்று தெரிந்து கேட்டது தன் தப்பு என்று புரிந்தவன், “என்ன பேசணும்?”, என்று மட்டும் கேட்டான்.
சஞ்சயை நக்கலாகப் பார்த்த அஞ்சலி, “உங்க இரண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்ச டெண்டர் அமௌண்ட் அந்த நாதாரிக்கு தெரிஞ்சது எப்படின்றதுதான உங்க கேள்வி? நீங்க சொல்லலை. அவளும் சொல்லலை. உங்க சிஸ்டமும் யாரும் ஹாக் செய்யலை. அப்ப வேற ஆப்ஷனே இல்லையா?
நீயே சொல்லு என்பது போல பார்த்தான். “விசியர்ல யாரோ நீங்க சப்மிட் பண்ணதும் நிரஞ்சனுக்கு சொல்லியிருக்கான். அது ஏன் உங்களுக்குத் தோணலை? முதல்ல உங்களை யாரு நாலு மணி நேரத்துக்கு முன்ன சப்மிட் பண்ண சொன்னது? அவ சொன்னாளா? நீங்களாதான முடிவு பண்ணது?”
ஆமாம் என்று சஞ்சய் தலையாட்டினான்.
“அப்போ முதல் தப்பு நீங்க பண்ணது. அவதான் சொன்னாள்னு நீங்க என்ன ப்ரூஃப் வெச்சிருக்கீங்க? உங்க கூட சாப்பிட வந்தவ, சீக்கிரம் கிளம்பிட்டா.. அவதான் சொல்லியிருப்பாளா? ஏழெட்டு மாசம் முன்னாடி எடுத்த ஒரு போட்டோ வெச்சு நீங்களே ஒரு லவ் ஸ்டோரி எழுதிடுவீங்களா? எதை வெச்சு அவளை டிஸ்மிஸ் செஞ்சீங்க? என்ன தெரியும் உங்களுக்கு அந்த நிரஞ்சன் பத்தி?“, தோழிக்காக இந்த இராத்திரியில் தேடி வந்து, மூச்சு விடாமல் பேசும் அஞ்சலியை பார்த்தவன் முகத்தில் எதுவும் தெரியவில்லை, ஆனால் அவள் விஸ்வாசம் கண்டு உள்ளே மிகவுமே மெச்சினான்.
“பசங்களைப் பார்த்து பழகி டீன்-ஏஜ்லயும் காலேஜ்லேயும் வரவேண்டிய உணர்வெல்லாம் ஜெயந்திக்கு வர வாய்ப்பில்லாம முதல்ல அவ அப்பா இறந்தார். அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட், இவ படிப்ஸ், லாடம் கட்டின குதிரை மாதிரி காலேஜ், வீடுன்னு இருந்தா. அம்மாவும் போய், ஒரு வழியா அந்த ஷாக்லர்ந்து மீண்டு வந்தப்போ நிரஞ்சன் டீம்ல வேலைக்கு வந்தா. நீங்களே பார்த்திருப்பீங்களே, அழகா இருப்பான், இனிப்பா பேசுவான், அமெரிக்கா அலட்டல் வேற. சோ அவன் மேல ஒரு ஈர்ப்பு. அதுக்குன்னு உங்க அமெரிக்க அழகி மாதிரி அவன் மேல விழுந்து புரளல.”, சஞ்சயை கிடைத்த வாய்ப்பில் ஒரு குத்து குத்திவிட்டு, “அவன் மேல இவளுக்கு இருந்த க்ரஷ் தெரிஞ்சதே நிரஞ்சன் அல்லக்கை பார்த்தி எடுத்த அந்த போட்டோ வெச்சுதான்னு நினைக்கறேன். இவ திறமையை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டான். இவ வேலை எல்லாம் அவனோடதுன்னு மானேஜ்மென்ட்ல வெக்கமேயில்லாம சொல்லி பேர் வாங்கிக்கிட்டான். ஒரு வழியா இவளுக்கு ஆதாரத்தோட புரிய வெச்சதும் தெளிஞ்சிட்டா. நான் தான் டெங்கு வந்ததா பொய் சொல்லி ஹெட் ஆஃபீசுக்கு ரிப்போர்ட்ஸ் ரெடி பண்ற நேரம் லீவ்ல போகச் சொல்லி ஐடியா குடுத்து அவனுங்களை சாவடிச்சேன். அதுக்கும் அவ ஹெல்ப் பண்ணலைன்னு ரிப்போர்ட் பண்ணுவேன்னு மிரட்டினான், கொஞ்சம் வேற மாதிரியும் பேசியிருக்கான். வேலையை ரிசைன் பண்ணிட்டா. இவ கிளம்பினதும் அவனுங்களால மூணு மாசம் தாக்கு பிடிக்க முடியலை. இதெல்லாமே என்னால நிரூபிக்கமுடியும். சோ உங்க காதல் கதை தியரியெல்லாம் செல்லாது. வேற என்ன ப்ரூஃப் வெச்சிருக்கீங்க மிஸ்டர் சாம்பு?”
அஞ்சலி பேசப் பேச முகம் இறுகியவன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, “வேற மாதிரி என்ன பேசினான் ஜெயந்திகிட்ட?”
“ஏன்? தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க? அவன் முகரையை பேத்துடுவீங்களோ?”, கடுப்பாகிக் கேட்டாள் அஞ்சலி.
“ம்ம்.. ஏற்கனவே பேத்துட்டுத்தான் வந்திருக்கேன். இன்னும் அடிச்சா தாங்குவானா தெரியலை”, என்றவன், அதுவரையிலும், வலது கையை தாங்கியிருந்த இடது கையை விலக்கவும். சிவந்து, லேசாய் வீங்கியிருந்த அவனது வலது கை முஷ்டி தெரிந்தது.
ஒரு வினாடி பார்த்தவள் கண்கள் மின்ன, “ப்ரோ… நிஜமாவா? அடிச்சீங்களா?” அதுவரை சண்டைக்கோழியாய் சடைத்துக்கொண்டிருந்தவள் ஆர்வத்தோடு சஞ்சய் முகம் பார்க்க, சஞ்சய் சிரித்துவிட்டான்.
“ம்ம்.. மூக்கு எலும்பை உடைச்சு விட்டேன். தாடையில விட்ட குத்துல கழுத்து சுளுக்கியிருக்கணும்.” சஞ்சய் பட்டியலிட அஞ்சலி முகம் புன்னகை பூசியது.
“நிறைய இரத்தம் கொட்டுச்சா?”
“ம்ம்… மூக்குலர்ந்து நிறைய வந்துச்சு. நாக்கையும் நல்லா கடிச்சிருப்பான் போல, பேச்சு குழறி வந்துச்சு.”
“சூப்பர் ப்ரோ. நாய்க்கு தான் பெரிய அழகன்னு நினைப்பு.”, என்றவள் எழுந்து சமையலறை வாசலில் இருந்த ஃப்ரிட்ஜில் இருந்து, ஐஸ் கட்டிகளை எடுத்து வந்தாள்.
சஞ்சய் அவன் கைக்குட்டையை நீட்ட, அதில் சில துண்டுகளை வைத்து முடிச்சிட்டு வீக்கத்தின் மேல் வைக்க ஏதுவாகக் கொடுத்தாள்.
கூடவே எடுத்து வந்திருந்த தண்ணீர் பாட்டிலையும் திறந்து அவனுக்குக் கொடுக்க, “தாங்க்ஸ் அஞ்சலி”, என்று பாதியை காலி செய்து வைத்தான்.
“சரி…என்ன சொன்னான்? அதை சொல்லுங்க? யார் விஷயத்தை லீக் பண்ணது?”
“ஜெயந்தி இல்லை. அது முன்னாடியே தெரியும். இப்ப அவங்கிட்ட பேசினதும் உறுதியா தெரியும். ஆனா நிரஞ்சனை ஏவினது யாருன்னு கண்டுபிடிக்கணும்.”, சஞ்சய் பூடகமாகவே பேசியது அஞ்சலியை கடுப்பாக்கியது.
“கடுப்பாகாதே அஞ்சலி. ஒரு இரண்டு நாள் டைம் வேணும். இதை கண்டுபிடிச்சிட்டு வரேன். ஜெயந்திகிட்ட சொல்லு. அவளை நான் ரொம்ப ஹர்ட்…”, அவள் நிறுத்து என்பதாக கைக்காட்ட நிறுத்தினான்.
“நான் கிளம்பும்போது ஜெய் எங்கிட்ட என் மேல அபாண்டமா போட்ட பழியைப் பத்தி பேசு, அந்த நாதாரி நிரஞ்சன் பத்தி பேசு, ஆனா சஞ்சய் கூட என் பர்சனல் பத்தி பேசாதேன்னா. சோ, அவ மேல தப்பில்லைன்னு உங்களுக்கு தெரிஞ்சதோட என் வேலை முடிஞ்சுது.”, என்று கிளம்பினாள்.
“அப்படி சொன்னா எப்படி அஞ்சலி? என் கல்யாணத்துக்கு நீதான ஜெயந்திக்கு நாத்தனார் முடிச்சு போடணும்?”, அமர்ந்தபடியே குரல் கொடுத்தான் சஞ்சய்.
வாசலருகே சென்றவள் திரும்பி நின்று, “அவ வேலை ஒழுக்கம், அவ சுய ஒழுக்கம்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டிருக்கீங்க ப்ரோ. ஜெய்யை சமாதானம் பண்றது அவ்வளவு ஈசின்னு நினைச்சிட்டீங்களா? அவ பிடிவாதம் பத்தி தெரியாதில்ல? தெரிஞ்சிப்பீங்க…”, மிதப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை திறந்தாள்.
“இந்த நேரத்துல எப்படி போவ அஞ்சலி?”, எழுந்து வந்தான்.
“ம்ம்… வந்த மாதிரிதான். ஓலா ல. முதல்ல பக்கத்துல கங்கா சார் வீட்டுக்கு போய் சொல்லிட்டு போகணும்.” என்றாள்.
“சாப்பிட்டியா சஞ்சய்? சோர்ந்து போய் தெரியற?”லக்ஷ்மி அவனிடம் விசாரிக்க, அவர் வீட்டு வாசலில் இருந்த கங்காதரனிடமும் சொல்லிக்கொண்டு அஞ்சலி கிளம்பிவிட்டாள்.