அத்தியாயம் – 21

தோள்பட்டை சுரீரென்று வலிக்க ஜெயந்திக்கு விழிப்பு வந்தது. முனகியவள் மெல்ல திரும்ப, சோஃபாவில் இருப்பது புரிந்தது. உடலை குறுக்கி ஒரு பக்கமாக படுத்ததன் விளைவு. தலை விண்ணென்று தெரித்தது. உடலில் பாரம் அசதி, ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.

மெல்ல எழுந்து அமர்ந்த வாக்கில் வலது தோளை தேய்த்து வலியைப் போக்கும் போதே காலையில்  நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. கண்கள் வீங்கியிருக்க கடினப்பட்டே திறந்தாள். கழிவிரக்கம் சூழ்ந்து கொண்டது. சஞ்சயா இப்படிப் பேசியது? தன்னையா சந்தேகப்படுகிறான்? என்று எண்ணம் ஓட, அடுத்து குருபரனிடம் தாவியது. மெல்ல அவரது ஒற்றை சோஃபாவின் அருகே தரையில் அமர்ந்தவள், “சார்… இருக்கீங்களா?”, அவளது குரலே வறண்டு கட்டிப்போயிருந்தது.

உன்னிப்பாய்க் கேட்டும் பதிலில்லை. மெல்ல இருக்கையை தடவினாள். “போயிட்டீங்களா சார்?”, என்று முணுமுணுத்தவள், அந்த இருக்கையில் தலையை வைத்துக்கொண்டாள். ஓரிரு நிமிடத்திலேயே கழுத்து வலித்தது. ‘எப்பவும் போல உனக்கு  நீ… நீ மட்டும்தான் ஜெயந்தி’, என்று புத்தி எடுத்துரைத்தது.

குருபரனின் மறைவுக்கு தலைகுளிக்கணுமே என்று தோன்ற பாத்ரூம் சென்றாள். அங்கே கண்ணாடியில் முகத்தைப் பார்க்க அதிர்ந்துவிட்டாள். முகமே மொத்தமாக வீங்கியிருந்தது. சிவந்திருந்தது. அவளது சுருட்டை முடி நாலாபக்கமும் அடங்காமல் விரிந்திருக்க, அதற்கு மேல் சகிக்கமுடியாமல் ஷவரை திருப்பியிருந்தாள்.

மனது பாரமாக இருக்க, தொண்டைக்கு சூடாக ரசம் குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும் கூடவே சஞ்சய் நினைப்பும் சேர்ந்து வர, பசியை தணிக்க ஒரு டீயை போட்டுக்கொண்டு வந்து அமர்ந்தாள்.

மீண்டும் ஒரு மணி நேரத்தில் வாழ்க்கை புரட்டிப்போட்டுவிட்டது. இம்முறை எப்போதும்போல் ஒன்றல்ல இரண்டு இழப்புகளை சமாளி என்று தந்துவிட்டு சென்றுவிட்டது.

சஞ்சய் பற்றி நினைத்தால் பலவீனமாகிறாள் என்று உணர்ந்து குருபரனைப் பற்றி நினைத்தாள். சிறு வயதில் இழந்துவிட்ட அவள் தந்தை இருந்திருந்தால் இப்படியான ஒரு உறவு அமைந்திருக்கும். அவள் தந்தையோடு வாலிபால் ஆடிய தருணங்கள்தான் அவளுக்குப் பொக்கிஷம். அவள் படிக்கும்போதும் அமைதியாக உடனிருப்பார். அவள் அம்மாவிற்கு பேசாமல் இருக்க முடியாது. எதாவது கேட்டு அல்லது பேசி கவனத்தை கலைப்பார். ஆனால் அவளை இரவில் தனியாக படிக்க விட இருவருக்குமே மனமிருக்காது. அனேக நாட்கள் அவள் தந்தை தான் இருப்பார். அப்படி பார்த்துப் பார்த்து வளர்த்த ஒற்றை மகளைத்தான் இருவரும் மொத்தமாக தனியே விட்டுச் சென்றுவிட்டனர். அவளே மறந்து போயிருந்த அப்பா மகள் உறவினை ஞாபகப்படுத்திவிட்டு இதோ இவரும் தனியே விட்டுச் சென்றுவிட்டார். நீ மட்டும் இருந்து என்ன சாதிக்கப்போற? என்ற எண்ணம் தோன்றியது.நான் இறந்த பின்னாவது சஞ்சய் நம்புவாரா? என்ற நினைப்பு வர, எழுந்துவிட்டாள் ஜெயந்தி.

தன் சிந்தனை தவரான பாதையில் செல்கிறது, நல்லதிற்கில்லை என்று புரிய, குருபரன் சொன்னது போல அஞ்சலியை அழைத்துவிட்டாள்.

“ஏய் மேடம்… என்ன திடீர்னு? எங்க நினைப்பெல்லாம் கூட இருக்குதா?”, அஞ்சலி உற்சாகமாக பேச, உதட்டைக் கடித்து தன்னை சமன் செய்துகொண்ட ஜெயந்தி,

“அஞ்சலி. கொஞ்சம் வீட்டுக்கு வா. ப்ளீஸ். ஆஃபீஸ்ல கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு. அந்த நிரஞ்சன் என்னவோ செஞ்சு என்னை மாட்டி விட்டுருக்காண்டி”, எனும்போதே ஜெயந்தி குரல் நடுங்கியது.

“ஜெய்… ஜெய்… எதுவாயிருந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம். சஞ்சய்க்கு தெரியுமா? அவர் உன்னை நம்பலையா?”, உடனே காரணத்தை நாடி பிடித்துவிட்டாள்.

“ம்ம்…”,என்ற ஜெயந்தியின் விசும்பலே பதிலாக வந்தது.

“நான் ஆஃபீஸ்லர்ந்து கிளம்பிட்டேன்.  நேரா அங்கதான் வரேன். நீ எதுபத்தியும் யோசிக்காதே. போய் எனக்கு சாம்பார் சாதம் பண்ணு. அப்பளம் பொரிச்சு வை. கவனம் அதுல மட்டும்தான் இருக்கணும். நான் வந்ததும் பேசிக்கலாம், ஓகேவா. நீ தனியா இல்லை. தைரியமா இரு. நான் வந்துட்டே இருக்கேன்.” , அஞ்சலி பேசப் பேச ஜெயந்தி கண்கள் கலங்கியது.

அவள் கழிவிரக்கத்தையெல்லாம் துடைக்கும் வார்த்தைகள். நீ தனி இல்லை. நான் இருக்கிறேன். அஞ்சலி சொல்வதை அப்படியே செய்வது என்று முடிவெடுத்துக் கண்களை துடைத்தவள், பிசிபேளாபாத் செய்வதில் மட்டும் கவனம் வைத்தாள்.

முக்கால் மணி நேரத்தில் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க, விசில் அடித்து முடித்திருந்த குக்கரை நிறுத்திவிட்டு, பொரித்திருந்த அப்பளங்களிருந்த கூடையை உணவு மேசையில் தட்டு கரண்டிகளுக்கு அருகில் வைத்துவிட்டு கதவைச் சென்று திறந்தாள்.

“ஜெய்…”, கட்டிப்பிடித்து, அடுத்த நொடி தள்ளிவைத்துப் பார்த்த அஞ்சலி, “என்ன ஜெய் …. என்னாச்சு உனக்கு. உடம்புக்கென்ன?”, என்று கழுத்தில் கை வைத்துப் பார்க்க,

“ஏய்… ஒன்னுமில்லை. அது…அழுதுட்டே தூங்கிட்டேன். அதுல முகம், கண்ணெல்லாம் வீங்கிருச்சு. இப்ப குளிச்சதுக்கு அப்பறம் பரவாயில்லை அஞ்சலி.”

கரகரத்து வந்த அவளது குரலில் அஞ்சலிக்கு வருத்தமும் கோபமும் ஒன்றாய் எகிறியது.

“குரலே மாறிடுச்சு.  எதுக்குமா இப்படி உன்னை வருத்திக்கற? எந்த ஆம்பளையும் இதுக்கு வொர்த்தே இல்லை ஜெய்”, என்று அஞ்சலி சொல்லும் போதே ஜெயந்தியின் உதடுகள் பிதுங்கினாலும், தலை என்னவோ அமோதித்தது.

வீடே ஜெயந்தியின் சாம்பார்சாத வாசனையில் கமகமக்க, “எப்ப கடைசியா சாப்பிட்ட ஜெய்?”, கைப்பையை ஓரம் வைத்து, ஒற்றை சோஃபாவில் அமர்ந்தபடி கேட்டாள்.

ஒரு வேளை இன்னும் குருபரன் இருந்தால், அவர் தாங்குவாரா என்று தெரியாததில், அவசரமாக சென்று அஞ்சலியின் கையைப் பிடித்து எழுப்பியவள், “போய் கைகழுவிட்டு வா, சாப்பிடலாம். காலையில சாப்பிட்ட ஒரு தோசையோடதான் நானும் இருக்கேன். ஒரு டீ குடிச்சதுலதான் சமைக்க தெம்பு வந்துச்சு.”, என்று அவளோடு நடந்தாள்.

“சரி… வாசனை இழுக்குது. முதல்ல சாப்பிடலாம். வயிறு ஃபுல்லா இருந்தா கொஞ்சம் நிதானம் இருக்கும். இல்லைன்னா இருக்கற கோவத்துக்கு என் மூளை கொஞ்சம் எக்ஸ்ட்ரீமா யோசிக்க ஆரம்பிச்சுடும்”, என்று கை அலம்பிவிட்டு வந்து அமர்ந்தாள்.

தட்டில் சிறிதே உணவிட்டு அதையும் அளைந்து கொண்டிருந்தாள் ஜெயந்தி. சாப்பிடு என்று உந்தினால் ஒரு வாய் சென்றது. “சீக்கிரம் சாப்பிட்டா, சீக்கிரமா என்ன பிரச்சனை, எப்படி சரி பண்ணலாம்னு பேசலாம். நீ முடிக்காத வரைக்கும் நீ மட்டும் தனியா சுமக்கற ஃபீல் இருக்கும் ஜெய். தட்டை காலி பண்ணு. கமான்.”

ஜெயந்திக்கு அறிவுரைத்தபடியே இரண்டாவது முறை போட்டுக்கொண்டதையும் வழித்து முடித்தாள் அஞ்சலி. அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஜெயந்தியிடம்,

“என்ன பார்க்கற? உன கஷ்டத்துலேயும் எனக்காக செஞ்சு வெச்சிருக்க.அதுக்கு நான் ஜஸ்டிஃபை பண்ண வேணாமா? இல்லை சாப்பிடாம இருந்தா பிரச்சனை போயிடுமா? சாபிட்டாதான் தெம்பா அழ முடியும் ஜெய். அதுக்காகவாச்சம் சாப்பிடு”, என்று கூறி ஜெயந்தியின் முறைப்பை வாங்கிக்கொண்டாள்.

அந்த கோவத்திலேயே ஜெயந்தி தட்டில் மிச்சமிருந்ததையும் உண்டு முடித்திருந்தாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் நீள்விருக்கையின் இரு புறமும் அமர்ந்து கொண்டதும் பேசத் தொடங்கியிருந்தாள்.

“நீ ஆஃபீஸ் போனதிலிருந்து என்ன நடந்துச்சுன்னு முடிஞ்ச வரை அப்படியே சொல்லு ஜெய். அப்பறமா சரி தப்பு எல்லாம் பேசலாம்.”, என்று மட்டும் சொன்ன அஞ்சலி அதற்குப் பின் பேசவில்லை. முன்னர் ஒரு முறை குருபரனிடம் பேசியிருந்ததால், இந்த முறை சற்று நிதானித்துக்கொண்டாள். தன் மேல் அபாண்டமாக சுமத்தப்பட்ட பழியைக் கூறும்போது கலங்கினாலும், முதல் முறை போல கதறிடவில்லை.

ஒரு வகையில் அதுவும் நல்லது. இல்லை அஞ்சலி அடித்திருப்பாள் என்று புரிந்தது. அவள் டிஸ்மிஸ் செய்யப்பட்டது வரையிலும் கேட்டு முடித்தவள்,

“இவ்வளவு நடக்கும்போதும் சஞ்சய் கூடவே சுத்திகிட்டு இருப்பானே செவ்வாழை, அவன் எங்க போனான்?”

அவளது விளிப்பில் லேசாய் புன்முறுவல் அரும்ப, “மோகனுக்குத் தெரியாது அஞ்சலி. அவர் இன்னும் யூ.எஸ்ல தான் இருக்கார். அதனாலதான் டெண்டர் வேலை நானும் சஞ்சயும் மட்டும் ஃபைனலைஸ் பண்ணது.”

தரையை உத்துப் பார்த்துக்கொண்டிருந்தவள், “உங்க இரண்டு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச ஒரு தொகை. நீங்க இரண்டு பேரும் சொல்லலை. ஒரு மணி  நேரத்துல நிரஞ்சனுக்கு தெரிஞ்சிருக்கு. சஞ்சய் அவன் கம்பனி சர்வர்ல யாரும் ஹாக் பண்ணி எடுக்கலைங்கறான். அப்ப விஷயம் தெரிஞ்ச அந்த மூணாவது மனுஷன், அந்த கம்பனி பேர் என்ன சொன்ன? ஆங்…விசியர். அங்கதான் லீக் இருக்கணும்.”

“எப்படி அஞ்சலி?”

“இருக்கற ஆப்ஷன்ஸ் அவ்வளவுதான் செல்லம். நிரஞ்சன் உன்னை மாட்டிவிட அந்த கம்பனியில ஏன் ஆள் செட் பண்ணியிருக்கக்கூடாது?   சஞ்சய் எதுக்கு டெண்டரை சப்மிட் பண்ண நேரமிருந்தும் நாலு மணி நேரத்துக்கு முன்னாடி அனுப்பணும்? பன்னெண்டு மணிக்கு க்ளோசாகுதுன்னா ஒரு பத்து  நிமிஷத்துக்கு முன்னாடி  அனுப்பியிருக்கலாமே? அப்படி செஞ்சிருந்தா, என்னதான் ஆள் செட் பண்ணாலும், அவங்களால அவசர அவசரமாய் டெண்டர் அமௌண்ட்டை குறைச்சிருக்க வாய்ப்பில்லை.  சோ அவர்தான் முதல் குற்றவாளி.”

தெளிவாய் யோசிப்பவளை ஆவென்று பார்த்திருந்தாள் ஜெயந்தி. “சஞ்சய் கிட்ட இப்படி பாயின்ட்டா பேச எனக்கு வரலை அஞ்சலி. நான் செய்யலைன்னு மட்டும்தான் திரும்பத் திரும்ப சொல்ல முடிஞ்சுது”

“நீ ஷாக்ல இருந்த ஜெய். கிரகிக்கவே டைம் தராம உன்னை தாக்கியிருக்கான் அந்த ராஸ்கல்”, அஞ்சலி பல்லைக் கடித்தாள். “அவன் பழி சொன்னா உடனே அது உண்மையாயிடுமா? என்னை இப்படி சொல்லிட்டாங்னேன்னு பிழிய பிழிய அழுவியா? சொல்லலைன்னு உனக்கு ப்ரூஃப் இல்லைன்னா, நீதான் சொன்னன்றதுக்கு அவனுக்கும் ப்ரூஃப் இல்லை. அப்பறம் என்ன பயம்?”

சரியாகப் பேசினாலும் சஞ்சயை ஏக வசனத்தில் திட்டுவது ஒரு மாதிரி இருந்தது. எதாவது சொன்னால் அஞ்சலி தன்னையும் பேசக்கூடும் என்பதில் ஜெயந்தி அமைதி காத்தாள்.

“சரி போட்டோக்கு வா…. அதெப்படி நாம பார்க்காம விட்டோம்? “

“இது கம்பனி போட்டோஸ்ல இல்லை அஞ்சலி. யாரோ எதிர்க்க இருந்து எடுத்திருக்கணும்.”

“யாரோ என்ன யாரோ…. அந்தப் பரதேசி பார்த்திதான் எடுத்திருப்பான். மே பீ அதை வெச்சுத்தான்  நிரஞ்சனுக்கே உன்  க்ரஷ் தெரிஞ்சிருக்கணும்.”

தீவிரமாக யோசித்தாள் அஞ்சலி. “நான் சஞ்சயைப் பார்க்கணுமே. இப்ப ஆஃபீஸ்ல இருப்பானா வீட்டுலையா?”

முழித்தாள் ஜெயந்தி. “ஆஃபீஸ்ல விசிட்டர்னா கண்டிப்பா உன்னை இந்த நேரத்துல உள்ள விடமாட்டாங்க. சஞ்சய்கிட்ட போன் செய்து பெர்மிஷன் கேட்டு அவர் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டா முடிஞ்சுது.”

“ம்ம்… இல்லை, அவனை திடீர்னு பார்க்கணும். நான் வரேன்னு சொல்லிட்டு போனா, உஷாராகிடுவான். சரி, நேத்து நைட்டும் வீட்டுக்கு வரலைங்கற. அப்ப இன்னிக்கு எப்படியும் வீட்டுக்கு வந்துதான ஆகணும். வீட்டு லோகேஷன் குடு.”

“ஏய்… இந்த ராத்திரில தனியா வேணாம் அஞ்சலி. காலையில பார்த்துக்கலாம். நைட் எப்ப வீட்டுக்கு வருவாரோ?”, ஜெய் மறுப்புக்கு அஞ்சலி செவி சாய்க்கவில்லை.