“ஜெயந்தியை யாரும் எதுக்கும் கான்டாக்ட் பண்ணக்கூடாது. ஃபைனான்ஸ்ல் இருக்கற அந்த இரண்டு பேர் வெச்சு நீங்களே மானேஜ் பண்ணுங்க. எதுவும்னா எங்கிட்ட கேளுங்க.”
“சார்… என்னாச்சு?”, என்று ராகினியும் அதிர,
“சொல்றதை செய்ங்க போங்க”, என்றவன் எவருக்கும் மேலும் விளக்காமல் ஜெயந்தியின், ஆலுவலகக் கதவை திறக்கும் பாஸ், கணினியை திறக்கும் லாகின் என்று எல்லாவற்றையும் அவனே முடக்கினான்.
அதற்கு மேலும் அங்கிருக்க முடியாதவனாய், வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
வீடு வந்து சேர்ந்ததே அவள் அப்பார்ட்மென்ட் கதவை திறக்கும்போதுதான் உணர்ந்தாள். மூளை ஸ்தம்பித்திருந்தது.
ஒற்றை சோஃபாவைப் பார்த்தவள் “குரு சார்”, என்று அதனருகே சென்று மடிந்து அமர்ந்தாள். கண்களில் இத்தனை நேரம் அணைகட்டி வைத்திருந்த கண்ணீர் வேகமாக இறங்கியது.
“ம்மா… ஜெயந்தி… அழாதேமா. இங்கதான் இருக்கேன்”, என்ற அவரில் மெல்லிய குரலில் இன்னுமே கதறத் தொடங்கிவிட்டாள்.
“என்னடாம்மா… சொல்லு…”, முயன்று சற்று சத்தமாக பேசினார்.
கேவலுடன், ”சஞ்சய்… என்னை சந்தேகப் படறார் குரு சார். நான்… நான் போய் கம்பனி சீக்ரெட்டை…. அந்த …அந்த நிரஞ்ச…சங்கிட்ட குடுத்தேனாம். அதுக்குத்தான் அவர் கூட… அவர் கூட பழகி…”, என்றவள் இன்னும் அழ, குருபரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் மகள் போன்றவளை இப்படிப் பார்க்க சகிக்கவில்லை.
முன்னர் போலிருந்தால் நேரே சென்று ஜெயந்தியை அழவைத்த குற்றத்திற்கே சஞ்சயை பந்தாடியிருப்பார். தமையா பிள்ளை என்பதெல்லாம் பின்னுக்குப் போய்விட்டது. என் பொண்ணை தப்பு சொல்வானா அவன் என்று கோவம் பொங்கியது.
“ஜெயந்தி… அழுகையை நிறுத்து. என்னாச்சுன்னு சொல்லு”, என்று அதட்டினார். குரல் மெலிந்து வந்தாலும் அதட்டலாய் வர, தன்னை ஒருவாராய் கட்டுப்படுத்தியவள், “எல்லாம் உங்களாலதான். நான் பாட்டு இருந்தேன். தமையா தமையான்னு நீங்க வந்ததுலர்ந்துதான் எல்லா பிரச்சனையும் ஆரம்பமாச்சு. நானே வேற வேலை தேடியிருப்பேன். தேவையில்லாம இரங்கசாமி பேரை போடுன்னு பொய் சொல்ல வெச்சீங்க. இன்னிக்கு திரும்ப கேட்டார். “, மூக்கை உறிஞ்சியவள், சஞ்சயிடம் கூறியதை அவரிடமும் ஒப்பித்தாள்.
“பொய் சொல்லி சேர்ந்ததே இதுக்குத்தானாங்கற மாதிரி கேட்கறார். அவர் கிட்ட இதுக்குத்தான் பழகினேனாம். எனக்குத் தேவையா சார்? எப்படி ஒரு சிக்கல்ல மாட்டி வெச்சிருக்கீங்க பாருங்க!”, அங்கே சஞ்சயிடம் போடாத சண்டையை குருபரனிடம் போட ஆரம்பித்தாள்.
“நீ சொல்ல வேண்டியதுதானம்மா ?”, என்றதுதான் தாமதம்,
“என்ன சொல்லச் சொல்றீங்க? நான் உங்க அம்மா பார்த்து வெச்ச வரன். ஆவியா வந்து அவங்க லவ்வர் பொண்ணு கேட்டு, எனக்குத் தெரியாமயே உங்க கம்பனில சேர வெச்சார்னு சொன்னா உடனே நம்பிடுவார் உங்க தமையா பிள்ளை…”
“நீ என்ன அந்த தீக்ஷனா பொண்ணு மாதிரியா அவன் மேல போய் விழுந்த? அவன் தானே விருப்பபட்டு உன்னைக் கேட்டான்?”, என்றவரிடம் கைக்காட்டி நிறுத்தியவள்,
“என் அன்பை அவர்கிட்ட நான் விவாதிக்க மாட்டேன். எனக்குத்தான் ராசியில்லை போல. நிரஞ்சனாவது என் திறமையை யூஸ் பண்ணிக்கத்தான் பார்த்தான். ஆனா சஞ்சய்… என்னை என் வேலை ஒழுக்கத்தையே களங்கப்படுத்தி கேவலப்படுத்திட்டார். வேணாம் எனக்கு யார் சகவாசமும் வேணாம் சாமி”, கும்பிட்டாள்.
சில நொடிகள் அமைதிக்குப்பின், “உன் அன்பை அந்த முட்டாளுக்கு விளக்க வேணாம்மா. ஆனா உன் வேலையில் நீ செய்யாத ஒரு பெரிய தப்பை உன் மேல சொல்லியிருக்கான். அதை நீ கண்டிப்பா முறிக்கணும். என்னாச்சுன்னு முழுசா சொல்லு ஜெயந்தி”, என்றவரின் குரல் அதற்குள்ளாகவே தேய்ந்தது.
“ம்ப்ச்… நீ பேசு. கேட்கறது எனக்கு பிரச்சனையில்லை. இன்னும் என் நேரம் எவ்வளவுன்னு தெரியலை.”, என்று அவர் பேசியது மிகவும் உன்னிப்பாய் கவனித்ததில் ஜெயந்தியால் அனுமானிக்க முடிந்தது.
மீண்டும் நடந்ததை சொல்லச் சொல்ல அழுகை முட்டியது. அதுவும் அந்த போட்டோவை அவரிடம் விவரிக்க அவள் மீதிருந்த கோவத்தில் தன் முகத்திலேயே அறைந்து கொண்டாள்.
“ம்ம்ம்”..”, முனகலாய் ஒரு மறுப்பு வந்தது குருபரனிடம். பழைய தெம்பிருந்திருந்தால் நிரஞ்சன் பார்ட்டியில் பார்த்ததுமே பின் தொடர்ந்து கவனித்திருக்கலாம். சஞ்சயிடம் யார் என்ன சொன்னார்கள் என்று விவரம் தெரிந்து பிரச்சனையை முளையிலேயே கிள்ளியிருக்கலாம். எதற்கும் ஆகாது ஊருக்குப் போய் இருந்த நேரத்தை வீணடித்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தார்.
இருந்த கொஞ்ச நஞ்ச சக்தியை திரட்டி, ”ஜெயந்திமா… இன்னிக்கு இராத்திரிக்குள்ள நான் போயிடுவேன்மா. இப்படி ஒரு இக்கட்டுல உன்னை விட்டு போறது அறுக்குதுமா என்னை. நீ… தனியா இதை சமாளிக்க முடியாது கண்ணு. மோகனை நம்ப முடியாது. நீ அஞ்சலி பொண்ணை வரச் சொல்லு. அவ இவனுங்களை சமாளிப்பா. திரும்ப என்னால பேச முடியமாப் போனாலும் உன் நினைப்பாதான் இருப்பேன்மா. இது எல்லாம் சரியாகும். நான் சாமியை வேண்டிக்கறேன். அஞ்சலி… கூப்பிடு”, திக்கித் திணறி அவர் கூறி முடிக்க, இவரும் தன்னை விட்டு சில மணி நேரத்திலேயே சென்றுவிடுவாரா என்பதில் இன்னும் கதறத் தொடங்கிவிட்டாள்.
மனம் வெகுவாய் குழம்பியிருக்க, யோசித்து யோசித்து களைத்துப் போயிருந்தான் சஞ்சய். அலுவலகத்திருந்து வந்த கையோடு படுக்கையில் விழுந்தவந்தான். மீண்டும் மீண்டும் ஜெயந்தியின் இவ்வளவுதானா நீ என்ற கேள்வியும், உயிர் ஊடுருவும் அவளது மிரண்ட பார்வையும் லூப்பில் ஓடியது. கைப்பேசி அதிர்ந்து அடங்க, அனிச்சை செயலாய் எடுத்துப் பார்த்தான்.
வாட்சப்பில் தெரியாத ஒரு நமபரிலிருந்து குறுஞ்செய்தி. நான் நிரஞ்சன், மினர்வா கம்பனி ஃபினான்ஸ் ஹெட். உங்ககிட்ட முக்கியமா பேசணும்.
‘இவன் எதற்கு பேச அழைக்கிறான்?’ என்று யோசிக்கும் முன்னர், அழைப்பும் வந்துவிட்டது.
“ஹலோ”
“ஹலோ சஞ்சய்.விசியர் டெண்டர் உங்களுக்கு கிடைக்கலை. என் ஆழ்ந்த வருத்தங்கள்”, அலட்டலாக வந்தது நிரஞ்சனின் குரல்.
“…”
“இந்த டெண்டர் எங்களுக்குக் கிடைச்சதுல உங்க ஸ்டாஃப் கொஞ்சம் உதவினாங்க. அதுக்காக கோவப்படாதீங்க. ஜஸ்ட் என் மேல உள்ள லவ்ல இது சென்சிடிவ்வான விஷயம்னு தெரிஞ்சும் சொல்லிட்டாங்க. இனி அப்படி செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டேன். அதுக்காக பாவம் ஜெயந்தியை வேலை விட்டெல்லாம் தூக்கிடாதீங்க”, என்று அக்கறையாக வந்தது நிரஞ்சனின் குரல்.
சஞ்சய் சுதாரித்தான். இது எவ்வளவு தூரம் போகிறது என்று பார்க்க, “இதுக்கென்ன ப்ரூஃப் நிரஞ்சன்? ஜெயந்தி உங்ககிட்ட முன்னாடி வேலை பார்த்திருக்கலாம். அதுக்காக நீங்க சொன்னதும் நான் ஏன் நம்பணும்?”, இலகுவாகவே கேட்டான்.
“ஹஹாஹா… உங்களை நல்லாவே மயக்கிட்டா போல? யாருக்கு என்ன பிடிக்கும்னு புரிஞ்சு நடக்கறது ஜெயந்தியோட ஸ்பெஷல் திறமை. நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும் சஞ்சய். ஒரு போட்டோ அனுப்பறேன் பாருங்க. அப்ப தெரியும் எங்க ரிலேஷன்ஷிப். “, சஞ்சய் பதிலுக்குக் கூட காத்திராமல் போட்டோ வந்து சேர்ந்தது.
நிரஞ்சனின் ஃபேஸ்புக், இன்ஸ்டா என்று தேடியதில் அவனின் முக நூல் பதிவில் ஏற்கனவே இருந்த , இவன் பார்த்து கொதித்துப் போய் காண்டாகியிருந்த அதே கம்பனி டின்னர் போட்டோ.
“ம்ம்…ஆனா நிரஞ்சன், இது எடுத்து ஒரு வருஷம் கிட்ட இருக்கும் போலவே… ஜெயந்தி இன்னும் உன்னோட இருக்காளா இல்லை வேலை விட்டு போனதும் ப்ரேக்-அப் ஆகிடுச்சா? ஒரு வேளை அதனாலதான் அவளை பழி வாங்க இப்படி இறங்கியிருக்கீங்களா?”, குரலில் வெறும் ஒரு யோசனையான விசாரிக்கும் பாவனை மட்டுமே இருந்தது.
“அடடா… சஞ்சய்… அவ்ளோ லவ்வா அவ மேல? ஆக்சுவலா ஜெயந்தி பழைய கம்பனி விட்டு வந்ததுக்கு காரணமே நாங்க இரண்டும் பேரும் சேர்ந்து சுத்தினது ஆஃபீஸ்ல கொஞ்சம் காசிப் கிளம்பினதுலதான். அப்பறம் அவ இல்லாம எனக்கும் அங்க இருக்க பிடிக்கலை.”
நிரஞ்சனின் கதையில் சஞ்சயின் கோபம் தலைக்கேறியது. இது உண்மையாக இருக்குமோ அதனால்தான் அலுவலகத்திற்கு நம் பழக்கம் தெரிய வேண்டாம் என்றாளா என்று மனதிற்குள் ஒரு சாத்தான் எடுத்துக்கொடுத்தது. அதே நேரம், நிரஞ்சன் என்ன சொன்னாலும் அது பொய் என்று கூறிய ஜெயந்தியின் முகமும் கண்ணில் வந்து சென்றது. அவளின் திகைப்பு, மறுப்பு, மிரட்சி என்ற உணர்வுகளை நடிப்பு என்று ஒதுக்கமுடியவில்லை. மனதில் இருப்பதை மறைக்காமல் காட்டிவிடும் முகமாகத்தான் ஜெயந்தியை அவன் பார்த்திருக்கிறான்.
“ஹலோ…சஞ்சய்?”
“ம்ம்… இருக்கேன். நிரஞ்சன் உங்களை மீட் பண்ணணுமே?”, யோசனையாக வந்தது சஞ்சயின் கேள்வி.
“அது… அது எதுக்கு சஞ்சய்? நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்பறம் உங்க இஷ்டம்”, ஜகா வாங்கினான். அதை சஞ்சய் உணர்ந்துகொண்டான்.
“இல்லை ஒரு டீல் பேசலாம். இரண்டு பேருக்கும் லாபம் வர மாதிரி ஒரு ப்ரபோசல் இருக்கு. நீங்களும் எத்தனை நாளுக்குத்தான் மாசச்சம்பளம் வாங்கிட்டு இருப்பீங்க?”, தூண்டிலிட்டான்.
“அது. நான் கொஞ்சம் யோசிக்கணும். நாளைக்கு…”, என்று நிரஞ்சன் பேசிக்கொண்டிருக்கும்போதே,
“இந்த ஆஃபர் இன்னிக்கு மட்டும்தான் நிரஞ்சன். நீங்க நான் மட்டும் சம்மந்தப்பட்டது. உங்களுக்கு லம்ப் சம் வரும். முதல் டீல் ஓகே ஆச்சுன்னா, அடுத்து சேர்ந்து வேலை பண்றது பத்தி பேசலாம். “, சஞ்சயின் விலகல் பேச்சில் ஆடு தானே வந்து சிக்கியது.
“உங்க வீட்டுக்கே நான் வரேன் நிரஞ்சன். வந்து பேசலாம். நைட் ஒரு எட்டு மணிபோல பார்க்கலாம். அட்ரஸ் அனுப்பிவிட்டுருங்க”, என்றதோடு அழைப்பினை துண்டித்தான்.
அழுது சோர்ந்த ஜெயந்தி குருபரனின் ஒற்றை சோஃபாவிற்கு எதிரில் இருந்த நீள்விருக்கையில் சுருண்டு படுத்திருந்தாள். உறக்கத்திலும் அவ்வப்போது விசும்பல் கேட்டது. குருபரன் அஞ்சலியிடம் பேசாமல் இப்படி அழுது உடம்பைக் கெடுத்துக்கொள்கிறாளே என்ற வருத்தம். ஆனால் அவரால் ஒன்றுமே முடியவில்லை. அவள் எழும் முன்னேரே தான் சென்று விடுவோம் என்று புரிந்து, இறைவனைத்தான் வேண்டிக்கொண்டிருந்தார். தெரிந்தோ தெரியாமலோ இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த கஷ்டத்தில் என் பங்கும் இருக்கிறது. யாருக்கும் தீங்கு நினைக்காத, எல்லாரிடமும் அன்பை மட்டுமே காட்டும் இந்தக் குழந்தையை ஏன் இப்படி சோதிக்கிறாய் என்று வாதிட்டுக்கொண்டிக்கும்போதே வா நேரே விவாதிப்போம் என்று இறைவன் அழைத்துக்கொண்டான்.