குருபரனிடம் பேசிய தாக்கத்திலேயே அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஜெயந்தி. ஒரு நல்ல ஆசானாக இந்த சில காலம் இருந்தவர் மறைந்துவிடுவார். மற்றொரு இழப்பைத் தாங்க வேண்டும். துக்கத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட வாய்ப்பில்லை. முடியாத போதிலும் இங்கே அவளிடம் சொல்லிவிட்டு செல்லவேண்டும் என்று அவர் குடும்பத்தை விட்டுவிட்டு இங்கே வந்தது மனதை உருக்கியது.
இந்த நினைப்பிலேயே அவள் மேசைக்கு வந்தவளை ராகினி, “சஞ்சய் உன்னை வந்ததும் வரச் சொல்லி கூப்பிட்டார் ஜெய்.”
அறைக்குள் சென்றவள், “மார்னிங் சஞ்சய்”, என்று இயந்திரமாகக் கூற , அவளை நிமிர்ந்து பார்த்தான் சஞ்சய்.
அப்போதுதான் அவன் நலுங்கிய தோற்றம் கருத்தில் பதிய, “என்னாச்சு, டயர்டா இருக்கீங்க?”
“ம்ம்… வீட்டுக்கே போகலை. இங்க வேலை நைட் பூரா இருந்துச்சு.”
“ஓஹ்… கொஞ்ச நேரம் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க சஞ்சய் கண்ணல்லாம் சிவந்திருக்கு பாருங்க.” அக்கறையாகப் பார்த்தாள்.
அதற்கு மேல் தாளாதவனாக, “இன்னிக்கு விசியர் டெண்டர் ரிசல்ட் ஜெயந்தி… மறந்துட்டியா?”
“ஓஹ்… ஆமாம். சாரி. மறந்திட்டேன். கிடைச்சுதா?
இ்ல்லை என்பதாக உதடு பிதுக்கினான்.
“ஓஹ்…சாரி… விடுங்க. மனசுல எடுத்துக்காதீங்க. அடுத்தது கண்டிப்பா நமக்கு கிடைக்கும்.”, என்று ஆறுதல் சொல்ல,
“நமக்கு கிடைக்கலைன்னு உனக்கு ஆச்சரியமா இல்லையா ஜெயந்தி? யாருக்கு கிடைச்சுதுன்னு தெரியுமா?”
அவன் கேள்வியின் தொனியில் புருவம் சுருக்கினாள். தெரியாது என்பதாக தலையசைத்தவளிடம்,
“உன் நிரஞ்சன் வேலை பார்க்கற மினர்வாக்குதான் கிடைச்சிருக்கு. அவனோட செலிபரேட் பண்ண இன்னிக்கு லீவ் வேணுமா?”, அடக்கப்பட்ட கோபமும் நக்கலும் தெரித்தது அவன் குரலில்.
உன் நிரஞ்சன் என்றதிலேயே அதிர்ந்து நின்றவளுக்கு அவன் அடுத்துப் பேசியது புரியவில்லை.
“நிரஞ்சனை உனக்கு தெரியாதுன்னு அன்னிக்கு டின்னர் மீட்ல எதுக்கு பொய் சொன்ன ஜெயந்தி?”, கூர்ந்து நோக்குபவன் பார்வையை எதிர்கொள்ள முடியாது, தலை குனிந்தவள், “அது… எனக்கு… அது என் பழைய கம்பனி பாஸ் அவன்”, மென்று முழுங்கினாள்.
அதை அப்படியே விட்டுவிட்டு, “உனக்கு மாயவரம் இரங்கசாமி அங்கிளை எப்படி தெரியும் ஜெயந்தி?”
“அது…. சொன்னேனே…”, திணறினாள். லேசாய் வியர்த்தது. சஞ்சயின் இறுகிய முகம் கொஞ்சம் உதறலைக் கொடுத்தது.
“அவருக்கு உங்கப்பாவை தெரியலை. நீயும் வேற சின்ன வயசு பேர் இருக்கான்னு கேட்டுட்டு வந்து சொல்றேன்னு சொன்ன, அப்பறம் அதைப் பத்தி பேசவேயில்லை. எங்க கங்கா மாமா கேள்வி கேட்கப்போறாரோன்னு அவர் வீட்டுக்கும் வரலை.”
அவன் பேசப் பேச பொறுக்க முடியாதவள், “ஆமா அவரை எனக்கோ எங்க அப்பாக்கோ தெரியாது. நான் வேற வேலை தேடிகிட்டு இருக்கப்போ என் வீட்டுகிட்ட ஒரு பெரியவரைப் பார்த்தேன். அவர்தான் இங்க வேலை இருக்கு, அப்ளை பண்ணுமான்னு சொன்னார். அவரே தான் இப்படி ஒரு ரெஃபரென்ஸ் சொல்லுன்னும் சொன்னார். அது இல்லாம அப்ளிகேஷன் எடுக்க மாட்டாங்க, அதனால போடுமான்னு சொல்லவும் போட்டேன்.”, வேகமாகக் கூறினாள்.
“யார் அந்த பெரியவர்ர்ர்ர்?”
அவன் நக்கலைப் பொருட்படுத்தாதவள், “குருபரன்னு பேர் சொன்னார். யார் வீட்டுக்கு வந்திருந்தார்னு தெரியாது. இரண்டு தரம் பார்க்ல பார்த்தேன். அதுக்கப்பறம் பார்க்கலை.”
“சோ பொய் சொல்லித்தான் சேர்ந்திருக்க?”
“ரெஃபர்ன்ஸ் நான் குடுத்ததை நீங்க செக் பண்ணிட்டுதான் வேலைக்குக் கூப்பிட்டீங்க. என் படிப்பும் தகுதியும் எக்ஸ்பீரியன்ஸ்லயும் பொய் இல்லை. இப்ப இதுனால என்ன பிரச்சனை சஞ்சய்?”
“பிரச்சனை? என்ன பிரச்சனைன்னு என்னைக் கேட்கறியா?”, எழுந்து நின்று இரு கைகளையும் மேடையில் ஊன்றி வைத்து,“என்னை நம்ப வெச்சு துரோகம் பண்ணதுதான் பிரச்சனை”, என்றவனின் குரல் அந்த அறையில் அதிர்ந்தது.
ஜெயந்தியின் உடல் தன்னால் உதறியது. மிரண்ட அவள் கண்கள் அவனின் முகம் பார்க்க, “சஞ்சய்?” குரல் மெலிந்து குழப்பமாக வந்தது.
ஒரு பொய் ரெஃபரன்ஸ் குடுத்ததுக்கா இவ்வளவு கோவம் என்று முழித்தாள். அன்று சிரித்துக்கொண்டே வாழ்க்கைக்கே நீன்னு முடிவாயிடுச்சு என்றவன் இன்று துரோகம் என்கிறானே?
“போதும்…தெரியாத மாதிரி நடிக்காதே. விசியர் டெண்டர் அமௌன்ட் எதுக்கு நிரஞ்சனுக்குக் குடுத்த? “
அடுத்த அதிர்வை உள் வாங்க முடியாதவள், “என்னது..? நான் குடுத்தேனா? இல்லை நான் யாருக்கும் தரலை சஞ்சய், அதுவும் அவனுக்கு…”, மறுப்பாய் வேகமாக தலையை ஆட்டினாள்.
ஓய்ந்து போனவனாய் பொத்தென்று நாற்காலியில் அமர்ந்தவன், “இதுக்கு மேல மறைக்கறதுக்கு ஒன்னும் இல்லை ஜெயந்தி. நீ செஞ்சிருக்க மாட்டேன்னு நம்பித்தான் இராத்திரி பூரா யாராச்சம் சர்வரை ஹாக் பண்ணி எடுத்தாங்களா, நீ லோக்கல் வெர்ஷன் எதாவது வெச்சிருந்தியோன்னு அலசிட்டேன். எதுவுமே இல்லை. அந்த நிரஞ்சனுக்கு ஏன் நீ இந்த விஷயத்தை சொல்லணும்னு குடைஞ்சிட்டே இருந்தது. ஒரு வேளை அவன் உன்னை எதாவது ப்ளாக்மெயில் பண்றானோன்னு கூட நினைச்சேன்… எவ்வளவு முட்டாள் நான்?”, அவனை நினைத்தே கசப்பாய் ஒரு சிரிப்பு வந்தது சஞ்சயிடமிருந்து.
“சஞ்சய்… அவனுக்கு நான் தரலை. நான் ஏன் தரணும்?”, அதிர்விலிருந்து மீண்டு பிரச்சனையைப் புரிந்துகொள்ள முயன்றாள்.
அவன் அறையில் இருந்த டீ.வி. திரையில் தன் கணினியை உயிர்பித்து ஒரு போட்டோவைக் காட்டினான். “இதுக்கப்பறமும் நீ தரலைன்னு சாதிக்கப் போறியா? மோட்டீவ்… இதோ இருக்கு பார்…”
அந்த புகைப்படம் அவள் பழைய கார் கம்பனி வருடாந்திர டின்னரின் போது எடுக்கப்பட்டது. அவர்கள் டேபிளில் நிரஞ்சன் மைக் பிடித்துப் பேசிக்கொண்டிருக்க, அவனது பக்கவாட்டில் ஜெயந்தி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அருகில் மற்றவர்கள் இருக்க புகைப்படம் எதிர் புறத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சாதாரண புகைப்படமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்தப் பெரியத் திரையில் ஜெயந்தி நிரஞ்சனைப் பார்க்கும் பார்வைதான் நாராசமாக இப்போது தெரிந்தது. அப்பட்டமாக அவனை கண்டு மையலாக, மயங்கி கிடக்கிறாள் என்பதாக ஒரு பரவசமான பார்வை, முக பாவனை.
அவமானத்தில் ஜெயந்தியின் முகம் சிவந்தது. இப்போதுதான் இந்த புகைப்படத்தைப் பார்க்கிறாள். இன்னும் எத்தனை பேர் பார்த்தார்களோ. நானா இப்படி என்று அசிங்கமாக இருந்தது. முயன்று அதைப் புறந்தள்ளியவள்,
“நான் அவங்கிட்ட டின்னர்ல பார்த்ததுக்குப்பறம் பேசவே இல்லை சஞ்சய். என் வேலை நேர்மையை சந்தேகப்படறீங்களா? இவன் என்ன சொல்லியிருந்தாலும் அது பொய்”
அவளை வெறுப்பாகப் பார்த்த சஞ்சய், “அவன் சொல்லலை. எனக்கு வேற ஒரு சோர்ஸ் மூலமா வந்த தகவல். நான் டெண்டர் சப்மிட் பண்ண ஒரு மணி நேரத்துக்குள்ள அவனுக்கு அமௌண்ட் தெரிஞ்சிருக்கு. என்னோட டின்னர் சாப்பிட வந்தவ, தலைவலின்னு பாதியிலயே கிளம்பிட்ட.”
“அதனால…”, ஜெயந்திக்கும் கோபம் வந்தது.
“உனக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்ச ஒரு விஷயம் உன் எக்ஸ் பாஸ், கரண்ட் லவ்வர்க்கு எப்படி தெரியும்? நான் சொல்லலை. அப்போ ?”, என்று நிறுத்தியவன், “இந்த வேலை பார்க்கத்தான், என் கூட நீ..”
“சஞ்சய்….” , அனாவசியமா வார்த்தையை விடாதீங்க. “ ஒரு போட்டோ வெச்சு பொண்ணோட காரெக்டரை முடிவு பண்ற சராசரி ஆள்தானா நீங்க?, குரலில் அத்தனை ஏமாற்றம்.
“கம்பனி சீக்ரெட்டை போட்டி கம்பனியில வேலை பண்றவனுக்கு குடுத்த பெரிய தப்பை நீ செஞ்சிட்டு என்னை பேசுவியா? என்னையும் நம்ப வெச்சு முட்டாளாக்கியிருக்க. உன்னை வேலையிலர்ந்து டிஸ்மிஸ் பண்றேன். உன் ஆக்சஸ் லாக் ஆகும். என்ன ஆக்ஷன் எடுக்கறதுன்னு நான் முடிவு பண்ற வரைக்கும் உன் நோட்டீஸ் பீரியட்ல நீ லீவ்ல இருக்கணும். வேற வேலையில் சேரக் கூடாது.” அழுத்தம் திருத்தமாய் வந்தது சஞ்சயின் முடிவு.
கலங்கிப்போய் நின்றாள் ஜெயந்தி. ஒரே நேரத்தில் அவள் சுய ஒழுக்கமும், வேலையின் நேர்மையும் பழிக்கப்படுகின்றது. இல்லை என்று சொல்வதைத் தவிர அவளிடம் எந்த ஆதாரமும் இல்லை. திக்கற்ற அவள் பார்வை சஞ்சய் மனதின் ஆழம் வரை பாய, மனதை இறுக்கிப் பிடித்தான்.
மறுவார்த்தை பேசாமல் திரும்பி வெளியே வந்தவள், ராகினி அழைப்பைக் கூட காதில் வாங்காது கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள்.