“எந்த விவரமும் கேட்கலைன்னு சொல்றேன். திருப்பி திருப்பி அதையே கேட்டா? போய் நான் சொன்னதை செய் சித்தி. ஏற்கனவே ஆஃபீஸ் கடுப்பு. அது பத்தாதுன்னு நீ வேற ஏழரையை கூட்டாத!”, இணைப்பை துண்டித்தாள்.
“துர்கைக்கு இவளுக்காக விளக்கு போட்ட இரண்டாவது வாரமே யாரோ நேராவே போய் பார்க்கற அளவுக்கு ஆர்வமா இருக்காங்க. இவ என்னடான்னா…”, என்று அனத்தியவர், “துர்கையம்மா, வரன் அனுப்பறதோட, இவ மனசையும் மாத்தி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைம்மா. அவ கையாலேயே எலுமிச்சை விளக்கேத்த வெக்கறேன் உனக்கு”, என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.
அங்கே கைப்பேசியை அணைத்துவிட்டு, சோஃபாவிலேயே படுத்து விட்டத்தைப் பார்த்த ஜெயந்தி, “சோ… சித்தி ஜாதகம் குடுத்திருக்காங்க. அதை மகனுக்குப் பார்க்க வாங்கிட்டு போன தமயந்தி இறந்துட்டாங்க. இதுல இந்த குருபரன் எங்க வந்தார்?” யோசித்தவள், தலையை உலுக்கி, “ஜெய்… வேணாம். இதை மொத்தமா மறந்துடு” என்று சொல்லிக்கொண்டாள்.
“ஆனா, நாளைக்கும் அந்த மனுஷன்… ச்சே.. ஆவி வந்து நின்னா? அப்படியே பார்க்காத மாதிரி, கேட்காத மாதிரியே நடிக்க வேண்டியதுதான். கொஞ்ச நேரத்துல அதுவே டயர்டாகி இன்னிக்கு மாதிரி போயிரும். எதுக்கும் நாளைக்கு சீக்கிரம் கிளம்பி கோயிலுக்கு போயிட்டு போகணும்”. புது தீர்மானத்துடன் உடை மாற்றி படுக்கச் சென்றாள்.
காலை பக்திப் பழமாக கோவிலுக்குச் சென்று பேய் எதுவும் துரத்தாம காப்பாத்து முருகா என்று சஷ்டிக் கவச வரிகளை மொபைலில் தேடிப்பிடித்து படித்துக்கொண்டே கோயிலை சுற்றி வந்தாள்.
“மொபைலைப் பார்க்கறதுக்கு எதுக்கு கோவிலுக்கு வருவானேன்”, என்ற பெண்மணியின் தோளைத் தொட்டு, “சாமியை கும்பிட வந்த இடத்துல எதுக்கு நாட்டாமை வேலை பார்பானேன்?”, என்று கலாய்த்து, அவருடன் வந்த மற்றொரு பெண்மணியிடம், மொபைலில் இருந்த சஷ்டிக்கவச வரிகளைக் காட்டிவிட்டு, “வேற எங்கேயும் மூக்கறுபடாம கூட்டிட்டு போங்க ஆன்ட்டி. என்னை துரத்தற பேயை உங்களுக்கு கைமாத்தி விட்டுடப்போறேன்!”
ஜெயந்தி சொன்னதில் ஸ்தம்பித்து நின்றவர்களை பார்த்து உதட்டை இழுத்து புன்னகை போல பல்லைக் காட்டிவிட்டு, “கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்”, என்று ஆரம்பிக்க வேக எட்டுகள் வைத்து நடந்த இருவரையும் பார்த்து சிரிப்பு வந்தது.
அலுவலகத்தில் அஞ்சலியிடம் காஃபி ப்ரேக்கில் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தாள்.
“அது சரி… உன்னை எந்த பேய் துரத்துதாம்?” என்ற அஞ்சலியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சிரித்து வைத்தாள் ஜெயந்தி. அலுவலகம் வந்ததிலிருந்து சுற்று முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள். குருபரன் கண்களுக்குத் தெரியவில்லை. இவளாக எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாகவே இருந்து கொண்டாள். ‘பேய் உலகம் ரொம்ப தூரமோ? இல்லை அவங்களுக்கு ஒரு நாள் நம்ம நாளை விட அதிகமோ?’, தேவையில்லாமல் யோசனை செல்வதை தடுத்து, “இன்னிக்கு கோயிலுக்குப் போகவே லன்ச் எடுத்துட்டு வரலை அஞ்சலி. வெளிய போவோமா? கான்டீன் போர்”, என்று கேட்டாள்.
உற்சாகமானாள் அஞ்சலி. “ஹே.. ஒரு புது ரெஸ்டாரண்ட் திறந்திருக்கான். பஃபே நல்லாயிருக்காம். போலாமா இன்னிக்கு?” ஜெயந்தி தலையாட்டவும், “புக்கிங் போட்டுடறேன். பன்னெண்டு மணி ஷார்ப்பா இறங்கணும். லேட் பண்ணாதே!” செல்ல மிரட்டலுடன் சென்றாள்.
வேலை இருந்தாலும் தள்ளி வைத்து நேரத்திற்கு கிளம்பினாள். நிரஞ்சனும், பார்த்தியும் பதினொன்றே முக்காலுக்கே கிளம்பி எங்கேயோ சென்றுவிட்டனர். மறுபடியும் ஒரு பிசினஸ் லஞ்ச் போல. நேற்று சொன்னாளே, அதற்காகவேனும் ஒரு முறை அழைத்தானா நிரஞ்சன்? ஹ்ம்ம்… அஞ்சலியின் டெங்கு ஐடியாவை செயல்படுத்த வேண்டியதுதான் என்று கறுவிக்கொண்டே லிஃப்டிற்கு நடந்தாள்.
பத்து நிமிட பயணத்தில் அஞ்சலியோடு அந்த உணவகம் வந்தவர்கள் கதையடித்துக்கொண்டே டேபிளில் அமர்ந்தார்கள். ஸ்டார்டர்கள் எடுத்து வந்து அமர அங்கே மூலையில் நிற்பது குருபரனா? சற்று உற்று நோக்கவும், அவர் இடதுபுறம் பார் என்பது போல சைகை செய்வது தெரிந்தது.
தனிச்சையாக இடது புறம் எட்டிப் பார்க்க, “என்ன ஜெய்? யாரைப் பார்க்கற? கேட்டபடியே எழுந்து நின்றாள் அஞ்சலி. அடுத்து, அவளே, “ஏய்… நிரஞ்சனும் ஜால்ராவும் இங்கதாண்டி வந்திருக்காங்க”, உட்கார்ந்தவள், “கூடவே மார்கெட்டிங் ஹெட், அப்பறம் இன்னும் மூணு பேர், கிளையன்ட் டீம் போல. எதாவது மீட்டிங் இருக்கா என்ன?”
“இருக்குமாக்கும். நான் கிளம்பறதுக்கு முன்னாடியே இரண்டு பேரும் போனாங்க.”, ஜெய்ந்தியின் விட்டேத்தியான பதிலில் அஞ்சலிதான் வெகுண்டாள்.
“ஏன் உன்னை கூட்டிட்டு போனா ஆகாதாமா அவனுக்கு? நீ வா, நாம அவங்க கண்ல படற மாதிரி போவோம். என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்”, ஜெயந்தியை கிளப்பினாள்.
“ப்ச்.. கிளையன்ட் மீட்ல எந்த கலாட்டாவும் வேணாம் அஞ்சலி.”
அவளை வித்தியாசமாகப் பார்த்தவள், “நாம ஒரு கலாட்டாவும் பண்ணப் போறதில்லையே? சும்மா ஜால்ராவை மட்டும் கொஞ்சம் கலாய்க்கலாம். நீ வா”
அஞ்சலி போகவும் அவளை அடக்க வேணும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஜெயந்தியும் சென்றாள். கண்களை சுழட்ட குருபரனைக் காணவில்லை.
மெயின் கோர்ஸ் நீள வாக்கில் இல்லாது வட்டமாக அமைத்திருந்தார்கள். ஜெயந்தியும் அஞ்சலியும் புது தட்டு எடுத்து, இரண்டு நான்களை வைக்க, எதிர்புறம் நிரஞ்சன் ட்ரை சிக்கன் இரண்டு துண்டுகள் வைத்திருந்தான். அவன் பின்னே பார்த்தி, நான், மட்டன் கிரேவி ஊற்றி, மாமிசத் துண்டங்களை தேடிக்கொண்டிருந்தான்.
“நாங்க சாப்பாடு நல்லாருக்கேன்னு கேள்விப்பட்டு வந்தோம். நீங்க என்ன சார் லன்ச் மீட்டிங்கா?”, என்ற அஞ்சலி, “பார்த்தி எங்களை மாதிரி சாப்பிடத்தான் வந்திருக்காருன்னு ப்ளேட்டை பார்க்கும்போதே தெரியுதே, என்ன பார்த்தி?” அஞ்சலியின் நக்கலில் மூக்கு விடைத்தான் பார்த்தி.
தட்டில், சிக்கன் பீஸ், மட்டன் கிரேவி, பன்னீர் என்று கலவையான சுழலில் நான்கு நான் துண்டுகள் அமர்ந்திருக்க, “என்ன பார்த்தி? கிளையன்ட் எதிர்க்க எப்படி சாப்பிடுவ”, என்று நிரஞ்சன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அருகில் இருந்த ஒரு பருத்த வடக்கத்திய பெண்மணி பார்த்தி மேல் குடை சாய்ந்தது போல பக்கவாட்டில் விழ, பார்த்தி தட்டோடு நிரஞ்சன் மேல் சரிந்தான்.
ஒரு நொடி என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. நிரஞ்சன் தரையில் இருக்க, அவன் மேல் தட்டில் இருந்ததெல்லாம் கொட்டி, பார்த்தி குப்புற விழுந்திருக்க, அவனின் மேல் பிரியாணியுடன், சன்னா, கீரை என்று அடுக்கியிருந்த தட்டோடு குண்டு பெண்மணி.
எதிர் புறம் நின்றிருந்ததில் அஞ்சலியும் ஜெயந்தியும் தப்பித்திருந்தார்கள். நடந்ததில் ஒரு நொடி எல்லோரும் உறைந்திருக்க, ஜெயந்தியின் அருகே, “நாந்தான் தள்ளிவிட்டேன் ஜெயந்திமா. அவனுக்கு பதிலா நீ போய் பேசு அந்த மீட்டிங்ல”, என்ற குருபரனின் குரல் கேட்டது.
வெயிட்டர்கள் ஓடி வர, சத்தமிட்டுக்கொண்டு அந்த பெண்மணி உருண்டு எழுந்து அமர, அவருடைய கணவனும் ஓடி வந்தான். ஒரு வழியாக நிரஞ்சனும், பார்த்தியும் எழுந்து நிற்க, சட்டை பேன்ட் எல்லாம் குழம்பும் கீரையுமாக, இலவசமாக முடியில் ஆங்காங்கே பிரியாணியும் இருக்க ஏரியல் பவுடர் போட்டு இவர்களையே மொத்தமாக வாஷிங் மெஷினில் போடும் அளவு ரெடியாக நின்றனர்.
நிரஞ்சன் முகம் உச்சகட்டக் கடுப்பில் சிவந்திருக்க, பார்த்தி, இடுப்பைப் பிடித்துக்கொண்டு முகம் சுளித்துக் கொண்டிருந்தான். மார்கெட்டிங் ஹெட் ஓடி வந்தார், “அச்சோ… என்ன நிரஞ்சன்? கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கக் கூடாதா? அந்த மனுஷன் நைட் கிளம்பறார். இப்ப எப்படி பேசறது?”, என்று கடிய, பார்த்தியை நோக்கி ஒரு கண்டனப் பார்வையை மட்டுமே வீச முடிந்தது நிரஞ்சனால்.
கிளையன்ட் கம்பனி பேரை சொல்ல, ஜெயந்தி, “ஓஹ்…ஷுர். அவங்களுக்கான ப்ரப்போசல் ரெடி பண்ணது நாந்தான். டெர்ம்ஸ் தெரியும்”, எனவும், மார்க்கெட்டிங் ஹெட் ஜார்ஜ், இந்த ஆர்டர் கிடைத்தால்தான் அடுத்த மாச சேல்ஸ் டார்கெட் தேறும் என்றதில், “தாங்க் த லார்ட்! நீங்க வாங்க ஜெயந்தி”, என்று அழைத்துச் சென்றுவிட்டார்.