அத்தியாயம் – 2

ஜெயந்தி கண் விழித்த போது, சோஃபாவில் பாதி உடலும், கால்கள் தரையிலுமாக இருந்தாள். விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க, ஒற்றை சோஃபா காலியாக இருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்து ஹாலைச் சுற்றி பார்வையை ஓட்டினாள். பெரியவர் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.

‘போயிட்டாரா?’, வாயிற்கதவை நோக்க, அது பூட்டியிருந்தது. மெதுவாக எழுந்து, படுக்கையறை குளியலறை அவளது அலுவலக அறை எல்லாம் பார்த்துவிட்டு இறுதியாக கிச்சனுக்குச் சென்றவள் சூடாக காபி போட ஆரம்பித்தாள்.

‘நாமதான் கனவு எதோ கண்டுட்டோமா?’, என்று யோசித்தவள், “இல்லை மயக்கம் வர முன்ன கண்ணு மங்கலா தெரிஞ்சுதா? மயக்கம் போட்டதும் அலறிகிட்டு அந்த மனுஷன் ஓடிட்டாரா ? கதவுதான் ஆட்டோ லாக் ஆகிடுமே”, என்று வாய்விட்டு பேசிக்கொண்டே காபி கோப்பையோடு வந்து சோஃபாவில் அமர்ந்து ஒரு வாய் பருகினாள்.

“ம்ம்ம்…”, ரசித்து துளித் துளியாய் குடித்து முடிக்கும்போது மீண்டும் பெரியவர் நிரஞ்சன் பற்றியும் அவள் அலுவலகம் பற்றியும் சொன்னது நினைவிலாடியது.

“யார் கிட்ட விசாரிசிருப்பார்? நிரஞ்சன் சரியில்லைன்னு வேற யார் தெரிஞ்சு இவருக்கு சொல்லியிருப்பாங்க?”, என்று தோன்றவும் யோசனையாக கோப்பையை சிங்கில் போட்டுவிட்டு வந்து அமர, மீண்டும் எதிரில் பெரியவர் தோன்றினார்.

ஆம் அப்படித்தான் இருந்தது. ஒரு நொடி இருக்கை காலியாக இருக்க, அடுத்த நொடி அவர் அமர்ந்திருந்தார்.

“ஹா”..மூச்சை சத்தமாக விடுத்தவள் நெஞ்சில் கை வைத்து சோஃபாவின் பின்னே சாய,

“அம்மாடி… பயந்து திரும்பவும் மயக்கம் போட்டுடாதே. உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்.”, இந்த முறை கைகளை சற்றே மெல்ல தூக்கிக் காண்பித்தார்.

“யா..யார் நீங்க… எதுக்கு வந்திருக்கீங்க?”, பயத்தில் விரிந்த ஜெயந்தியின் இமைகள் சிமிட்டவேயில்லை.

“அதுதான் சொன்னேனே. குருபரன், ஃபிசிக்ஸ் வாத்தியார். என்னால ரொம்ப நேரம் உன் பார்வைக்கு தெரியற மாதிரி இருக்க முடியாது. நான் தெரியலைன்னா பரவாயில்லையா? குரல் மட்டும் கேட்டா பயந்துக்க மாட்டியே?”

ஒரு நொடி கண் மூடித் திறந்தாள் ஜெயந்தி.  பெரியவர் எதிரில் இல்லை. “நான் லூசாயிட்டேனா? இருந்த ஸ்ட்ரெஸ்ல பயித்தியம் பிடிச்சிட்டுதா?”, கண்களை அழுத்தி மூடி திறந்தாள். எதிரில் ஒன்றும் இல்லை.

“இல்லை மா. நான் குரு..”

“யோவ்… எங்க இருக்க? பேர எத்தனைவாட்டி சொல்லுவ…வேற சொல்லு. இப்ப எதுக்கு இங்க வித்தை காட்டிட்டு இருக்க?”, கோவத்தில் எழுந்து நின்றுவிட்டாள் ஜெயந்தி.

ஒரு நொடி அமைதிக்குப் பின், “அது… நான் வந்து…ம்ம்…பயந்துக்காத… ம்ம்..”

ஜெயந்தி கண்களை ஹால் முழுதும் சுழற்றினாலும் எதுவும் வித்தியாசமாகப்படவில்லை.

“ நான் .. ஆவி.” குரல் தணிந்தே வந்தது.

“ஆங்… ஆ….வி…”, மிடறு விழுங்கி வலது புறம் இடது புறம் என்று வேகமாக திரும்பிப் பார்த்தாள்.

“பயப்படாதே… நீ அப்ப பார்த்த அதே சோஃபாலதான் இருக்கேன்”

“ஒஹ்… நீ… நீங்க… நல்ல ஆவியா?” என்று கேட்டவள், ‘ஐயோ… நல்லவரா கெட்டவரான்னு ஆவிகிட்ட போய் கேட்கறியேடி முண்டம்’, என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள்.

மெல்ல கதவு நோக்கி ஒரு எட்டு வைத்தாள்.

“நான் நல்லவந்தான் மா. ஒன்னும் செய்ய மாட்டேன். அது… மனுஷங்க கண்ணுக்கு தெரிய நிறைய சக்தி செலவாகுதா, ரொம்ப நேரம் தாக்குபிடிக்க முடியலை. உன் காதுக்கு என் குரல் கேட்கறதுக்கே நான் கஷ்டப்பட்டுதான் பேசறேன்.”

“அப்படில்லாம் கஷ்டப்படாதீங்க. ஒன்னும் பிரச்சனையில்லை. நீங்க கிளம்புங்க சார்.” பயத்தில் ஜெயந்தியின் குரல் சற்றே பிசிறு தட்டியது.

“நான் ஏன் வந்தேன்னு சொல்லவே இல்லையேமா”

“ஓஹ்… அது எங்க ஆஃபீஸ்ல யார்கிட்ட விசாரிச்சீங்க சார்?”, தாம் கண்ட ஆவியோடு வேரொருவர் பேசியிருந்தால் நல்லதாயிற்றே என்ற எண்ணம்.

“ஹி..ஹி… உன் ஆஃபீஸ்ல கூடவே இருந்து பார்த்தேன்மா. அந்த நிரஞ்சன் உன்னை வெச்சு எல்லா வேலையும் வாங்கிக்கறான்!”, பெரியவர் குரலில் ஆற்றாமை வெளிப்பட்டது.

“அங்கேயுமா இருந்தீங்க?” ஜெயந்தியின் ஆச்சரியத்தில், “உன்னை ஒரு வாரமா கவனிச்சிட்டுதான் இன்னிக்கு பேச வந்தேன்”, என்றார் குருபரன்.

“என்..என்னை ஃபாலோ பண்றீங்களா?”, நெஞ்சு படபடத்தது. ‘உன் ராசிக்கு பேய்தாண்டி உன்னை ஃபாலோ பண்ணுது’ என்று மைண்ட் வாய்ஸ் வேளை கெட்ட வேளையில் கவுண்டர் தந்தது.

“ம்ம்… நீ எப்படிபட்ட பொண்ணு என்னன்னு தெரியணுமே. அதுதான். வேற ஒரு தப்பு எண்ணமும் இல்லைமா”, அவசரமாக வந்தது குரல்.

“அ…ம்ம்.. உங்க சொந்தக்காரங்களை விட்டுட்டு … என்னை எதுக்கு சார் ஃபாலோ பண்ணனும்? தெரிஞ்சிக்கணும்?”

“சொந்தக்காரனுங்களா…அவனுங்க கிடக்காங்க காவாலிப் பயலுங்க. அவனுங்களைப் பத்தி புதுசா தெரிஞ்சிக்க ஒன்னுமில்லை ஜெயந்திமா.” கடுப்பாய் வந்தது அவர் குரல்.

பின் கனிவாய்..”நீ உட்காருமா.  உன்னை கல்யாணத்துக்கு கேட்கத்தான் வந்தேன்” என்றார் குருபரன்.

“யா…யாரோட கல்யாணம்? உங்களோடயா?”, இப்படி ஆவியோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதிலேயே மூளை பாதி ஸ்தம்பித்திருக்க, புரிதலும் குறைவாகவே இருந்தது ஜெயந்தியிடம்.

“ஹஹஹா…அட என்னம்மா நீ? எனக்காக இல்லை.. தமயந்திக்காக வந்தேன்.”

“கேர்ள் பேயிக்கு என்ன பொண்ணு பார்க்க வந்தீங்களா? ஐயைய்யோ! நான் அந்த மாதிரி இல்லைங்க!”, ஒரே எட்டில் கதவை அடைந்து திறக்கப்போனாள்.

“ஹே… ஏய்… இந்தாமா!  வந்து உட்காரு. நாம வேற வேற ட்ராக்ல பேசிட்டு இருக்கோம். கொஞ்சம் நிதானமாயிட்டு பேசலாம்.”

ஆழ்ந்து ஒரு மூச்சை எடுத்தவள், “ஸ்டெடி… முருகா…முருகா…”, என்று கூறிவிட்டு, “ப்ளீஸ் …என்ன சொல்லணுமோ தெளிவா ஒரே மூச்சுல சொல்லமுடியுமா சார்?” பரிதாபமான குரலில் கேட்டாள்.

“அதான்… நான் குருபரன். ரிட்டையர்ட்…” என்று மீண்டும் ஆரம்பிக்க,

“ஆர்ஹ்க்…”, கை முஷ்டிகளை இறுக்கியவள், “பிசிக்ஸ் வாத்தியார், பொண்ணு கேட்டு வந்திருக்கீங்க…வேற வேற சொல்லுங்க…”, என்றாள் எரிச்சலாக.

“பொறுமைமா… இப்படி கோவப்பட்டா எப்படி? அவனுமே கொஞ்சம் கோவக்காரந்தான்.” குரல் சற்று சந்தேகமாக வந்தது.

“அதான். நான் பேய் கூடல்லாம் செட் ஆக மாட்டேன். நீங்க தமயந்திகிட்ட சொல்லிடுங்க. வேற நல்ல பொண்ணா பாருங்க. சரியா? “, ஒற்றை சோஃபாவை நோக்கி கைகூப்பினாள்.

“நான் இங்க இருக்கேன் மா.” பக்கவாட்டிலிருந்து குரல் வரவும், பயந்து இரண்டு எட்டு பின்னால் சென்றாள் ஜெயந்தி.

“தமயந்தி பிள்ளைக்கு உன்னை கல்யாணம் பேச வந்தேன் மா.  அவன் உயிரோடத்தான் இருக்கான். இது விளங்குதா?”, ஆசிரியர் மக்குப் பிள்ளையிடம் கேட்பதுபோல இருந்தது அவர் தொனி.

“உயிரோட இருக்கறவருக்கு பொண்ணு கேட்க உயிரோட இருக்கவங்களை அனுப்பறதை விட்டுட்டு ஆவியா வந்து எதுக்கு சார் என் உயிரை எடுக்கறீங்க?”, அழமாட்டாத குறையாக வந்தது ஜெயந்தியின் குரல்.

“ஹஹா… நல்லா பேசற ஜெயந்தி!  நீ கேட்கறதும் கரெக்ட்டுதான். ஆனா பாரு அவனுக்கு சொந்தம்னு சொல்லிக்க தமையா மட்டும்தான் இருந்தா. அவளும் போயிட்டப்பறம் வேற சொந்த பந்தம் யாரையும் கிட்ட சேர்த்துக்க மாட்டேங்கறான். தமையா பிழிய பிழிய அழறாளே தவிர ஒன்னும் செய்ய முடியலை. அவ சாக முந்தி உன் ஜாதகம் வந்திருந்துச்சாம். அதுதான் நீ எப்படி, என்ன விவரம்னு பார்த்தேன்.”

இந்த முறை சற்றே கோர்வையாக பேசவும், ஓரளவு புரிந்தது ஜெயந்திக்கு.

“சரிங்க சார். ஆனா பாருங்க, எனக்கே தெரியாமதான் எங்க சித்தி என் ஜாதகத்தை பதிஞ்சிருக்காங்க.  எனக்கு இப்ப கல்யாணத்துல விருப்பம் இல்லை. அதனால, நீங்க அதே ஏஜென்சிக்கு போய் வேற நல்ல பொண்ணா பாருங்க சரியா?”, சோஃபாவிற்கு சென்று அமர்ந்தாள்.

“ம்ம்… எனக்கும் டயர்டா இருக்கு.  நீ கொஞ்சம் யோசி. நான் நாளைக்கு பார்க்கறேன். வரேன்மா”

“எதே… நாளைக்கா?”, ஜெர்க்கானவள் அவசரமாக,  “சார்… என் முடிவு மாறாது. நீங்க வரவேணாம்.”

ஜெயந்தி கூறியதற்கு மறுமொழி எதுவும் வரவில்லை. “சார்… குருபரன் சார்? இருக்கீங்களா?”

அமைதியே பதிலாக வந்தது. இரு கைகளையும் தலைக்கு முட்டுகொடுத்து தரையை பார்த்தபடி சிறிது நேரம் இருந்தாள். ‘நிஜமா பேய்கிட்ட பேசிகிட்டு இருந்தோமா?’ என்ற கேள்வியே சுற்றி வந்தது.

‘வெயிட்… முதல்ல ஃபாக்ட் செக் பண்ணுவோம்… ரமா சித்தி…’ பல்லைக் கடித்தவள், கைப்பையில் இருந்த மொபைலை தேடி எடுத்து சித்தியை அழைத்தாள்.

“ஹலோ ஜெய்? என்னடி அதிசயம், இந்த நேரத்துக்கு போன் பண்ற? எல்லாம் ஓகே தானே?”, வழமைபோல் படபடவென்று பேசினார் ரமாதேவி.

“நல்லா இருக்கேன் சித்தி. என் ஜாதகத்தை எந்த ஏஜென்சிலயாவது குடுத்து வெச்சியா?”

“…”

“சித்தி…”, அழுத்திக் கூப்பிட்டாள்.

“அது… ம்…ஆனா என்  நம்பர் தானடி குடுத்தேன். உனக்கு எப்படி தெரிஞ்சுது?”, டிஃபென்ஸ் ஆடினார்.

“ம்ம்? எங்க என்ன போஸ்ட்ல வேலை பார்க்கறேன்னு சொன்னியா அதுல?”

“கேட்டிருந்தாங்க. சொன்னேன். ஏன்?”

“அதை சொன்னா என்னை கண்டுபிடிக்கறது கஷ்டமா? “, காரமாய் கைப்பேசி வழியே வந்த குரலில் சற்றே முழித்தார் ரமா.

“ஏன் கண்ணு? யாராவது உன்ன  நேரா வந்து பார்த்தாங்களா? இல்லை போன் பண்ணாங்களா?”, பம்மியபடியே வந்தது பதில்.

“நேராதான் வந்தாங்க.”

“ஓஹ்… என் நம்பர் தான் குடுத்திருந்தேனே? எங்கிட்ட பேச வேண்டியதுதானே? எதுக்கு நேரா உங்கிட்ட வந்தாங்க?”, குழப்பமாய் கேட்டார் ரமாதேவி.

ஒரு நிமிடம் சித்தியின் முன் குருபரன் தோன்றியிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தவள், வாய்விட்டு சிரித்துவிட்டாள்.

“உன்னை வந்து பார்க்கலைன்னு சந்தோஷப்படு. உன் வீக் பாடி அந்த ஷாக்கெல்லாம் தாங்காது”, என்றாள் சிரிப்பினூடே.

“அப்பா… வாய்விட்டு நீ சிரிக்கக் கேட்டு எவ்வளவு நாளாச்சுடி! சரி வரன் யாரு என்னன்னு சொல்லு.” ஆர்வமாகக் கேட்டார்.

“விளையாடாதே சித்தி. இப்ப கல்யாணம் பண்ற மூட்ல இல்லை நான். அதையே சொல்லி அனுப்பிட்டேன்.”

“யார் வந்தா? அதை சொல்லு. நம்பர் எதாவது தந்தாங்களா?”

‘ஆவி போன் வெச்சிருக்குமோ?’ , என்று நினைத்துப் புன்னகைத்தவள், “அதெல்லாம் நான் கேட்கலை. ஒரு பெரியவர் வந்தார். எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை, என் ஜாதகம் குடுத்ததே தெரியாது. சாரின்னு சொல்லி அனுப்பிட்டேன். “

“என்ன பொண்ணே நீ?”

“லூசு பொண்ணு. அதான சொல்ல வர? இருக்கட்டும்.  நீ முதல்ல அந்த ஏஜென்சிக்கு போனைப் போட்டு, என் ஜாதகத்தை டிலீட் பண்ண சொல்ற? புரியுதா?”

“யார் வந்தான்னு நீ விவரம் சொல்லு. அப்பதான் நீ சொல்றதை நான் செய்வேன்.”, பிடிவாதமாக வந்தது ரமாதேவியின் குரல்.