“ஹே உபேந்த்ரா…”, திடமான ஒரு கைகுலுக்கலுடன் அங்கே காத்திருந்த வட இந்திய நண்பனின் நலம் விசாரித்து, அவன் எதிரே அமர்ந்தான்.
உபேந்த்ரா மிஷ்ரா, வால்ட் போன்றே சைபர் செக்யூரிட்டி பாதுபாப்புகள் செய்து தரும் மினர்வா கம்பனியின் அதிபர். மும்பையை தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும், இங்கே சென்னையிலும் கிளை உண்டு. சக போட்டியாளர் மட்டுமன்றி அமெரிக்காவில் படிக்கும்பொழுது சஞ்சய்க்கு சீனியர். ஆரோக்கியமான போட்டியுடன் நடபும் இருந்தது.
எப்போதாவது மிஷ்ரா சென்னை வரும்போது அல்லது சஞ்சய் மும்பய் சென்றால் பார்த்துக்கொள்வார்கள். இப்போதுதான் சைபர் செக்யூரிட்டி கான்ஃப்ரென்ஸில் பார்த்து பேசியிருக்க, அவனே டின்னருக்கு வா என்று அழைத்திருக்க, சஞ்சய் வந்திருந்தான்.
“என்ன உபேன்? இப்பதான் மீட் பண்ணோம். திரும்ப கூப்பிட்டிருக்க? எதுவும் விஷயமா இல்லை இது காஷுவல் மீட்டா?”, சஞ்சய் சற்று நேரத்துக்குப் பின் கேட்க, உபேந்திரா புன்னகைத்தான்.
முகத்தில் எந்த பாவனையும் காட்டாது சஞ்சய், “ஏன்…அதுக்குள்ள செலக்ட் பண்ணிட்டாங்களா என்ன?”
உதடு பிதுக்கிய உபேந்திரா, “நீ போட்ட தொகையைவிட நான் கம்மியா போட்டிருக்கேன். சோ, கிடைச்சா எனக்குத்தான் கிடைக்கும்”, என்று கூறி துல்லியமாக சஞ்சய் போட்டிருந்த தொகையைக் கூறினான்.
சஞ்சய் முகம் அதிராமல் ,”ஓ…அதுதான் நான் போட்டதா?”, என்று கேட்டான்.
“சஞ்சய்…. நான் உன்னை வார்ன் பண்ணத்தான் கூப்பிட்டேன். நான் புதுசா எடுத்த ஒரு ஆள் எனக்கு நீ போட்ட கொடேஷன்னு இதை இராத்திரி எட்டே முக்காலுக்குச் சொன்னான். உன் பக்கம் எங்கேயோ லீக் இருக்கு. கண்டுபிடிச்சு சரி பண்ற வழியைப் பாரு. அவனுக்கு நான் கட்டம் கட்டிருவேன். நாளைக்கு என் கொடேஷனை வேற யாருக்கும் விக்க வாய்ப்பிருக்கு. நம்ம நட்புக்காகத்தான் உன்னை கூப்பிட்டு சொல்றேன்.”, உபேந்திரா சொல்லவும்,
“ஆனா அவன் சொன்ன தகவலை நீ யூஸ் பண்ணிகிட்ட அப்பறம் வந்து சொல்ற?”, சஞ்சய் முறுவலிக்க,
“ஹாஹா… சஞ்சய்… வர வாய்ப்பு விடற அளவுக்கு நான் நல்லவன் இல்லை. அதே மாதிரி, உன்னை அழிச்சிட்டு தொழில் செய்ய நினைக்கற அளவுக்கு அயோக்கியனும் இல்லை. நீ கவனிக்காம விட்ட லூப் ஹோல்லுக்கான அபராதம்தான் விசியர் கான்ட்ராக்ட். சீக்கிரமே சரி செஞ்சுடு”, என்று அறிவுரைத்தான்.
“ஹ்ம்ம்… நியாயம்தான். தப்புக்கு கண்டிப்பா அபராதம் வேணும்தான். ஆனா உபேந்திரா, உனக்கு இந்த தகவலை கொண்டு வந்தவன் யாருன்னு சொல்லக் கூடாதா?”
“ம்ம்… சொல்லுவேன், நீ அவனை எந்த விதத்துலேயும் வார்ன் பண்ணக்கூடாது. நான் உன்னைப் பார்த்ததையும் சொல்ல மாட்டேன்னு நினைக்கறேன்?”
“இட்ஸ் அ ப்ராமிஸ்”
“என் புது ஃபினான்ஸ் ஹெட்”, என்று உபேந்திரா சொன்னதும் சஞ்சய் முகம் இறுகியது.
“நிரஞ்சன்…”. என்று அவனது பழைய கம்பனி மற்றும் பதவியை சஞ்சய் கூறவும், இப்போது ஆச்சரியமாகப் பார்த்தான் உபேந்திரா.
“என் ஸ்டாஃப்…அதுவும் புதுசா சேர்ந்தவன். அவனை தெரியுமா? சஞ்சய் நீ அவனை வெச்சு என் கூட எதுவும் கேம் ஆடறியா?”, லேசாக சந்தேகம் எட்டிப்பார்த்தது உபேந்திரா முகத்தில்.
“ம்ப்ச்…. அவனை கான்ஃப்ரென்ஸ்ல பார்த்து பேசிகிட்டு இருந்தேன். அதனால தெரியும். உங்கிட்ட எந்த கேமும் ஆடலை. ஆனா என்னை வெச்சு எதோ நடக்குது. நான் என்னன்னு பார்க்கறேன் உபேன். இதை எனக்கு சொன்னதுக்கு தாங்க்ஸ். கண்டிப்பா இது நமக்குள்ள மட்டும்தான் இருக்கும்”, என்று கூறியவன், அடுத்த பத்து நிமிடங்களில் கிளம்பிவிட்டிருந்தான்.
மனம் குழப்பமாக இருந்தது. உபேந்திரா கூறிய தொகைதான் அவன் டெண்டரில் போட்டது. அது இம்முறை அவனுக்கும் ஜெயந்திக்கும் மட்டும்தான் தெரியும். மோகனுக்குக் கூட தெரியாது. எட்டு மணிக்கு டெண்டர் கோப்பையை அனுப்பிவிட்டு, ஜெயந்தியோடு உணவருந்த கிளம்பிவிட்டான். ஆனால் அவளும் தலைவலி என்று சீக்கிரமே கிளம்பிவிட்டாள்.
மூளை வேகமாக அவள் கூறியிருக்கக் கூடிய வாய்ப்புகளை அலச, அவன் காதல் மனமோ, இல்லை அவள் அப்படிப்பட்டவள் இல்லை என்றது. சஞ்சயின் கார் அவன் கம்பனிக்கு வந்திருந்தது.
இறங்கிச் சென்றவன் நேரே சர்வர் ரூமுக்குச் சென்றான். அன்று இரவு அலுவலகத்தில் யாரும் இருக்கவில்லை.
ஒரு வேளை அவனது பாதுகாப்புகளையும் மீறி எவரேனும் அவனது கணினிகளை ஹாக் செய்து கோப்பைகளை பார்த்திருப்பார்களோ என்றுதான் முதலில் சோதனை செய்ய ஆரம்பித்தான்.
இரண்டு மணி நேரத் தேடலுக்குப் பின், இன்னும் பலப் படுத்தக்கூடிய ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டும்தான் கண்ணில் பட்டது. யாரும் அத்து மீறி நுழையவில்லை என்று புரிந்து போனது. அன்று அவன் எட்டு மணிக்கு கோப்பையை அனுப்பியபின் அன்று இரவு வரைக்குமே வேறு யாருமே லாகின் செய்யவில்லை, வேறு எந்த விதத்திலும் அணுகவில்லை.
ஒரு வேளை, அவள் மடிக்கணினியிலோ, அல்லது ஈமெய்லிலோ ஜெயந்தி மறந்துபோய் வைத்திருந்து அதை எவரேனும் எடுத்திருப்பார்களோ என்று மனம் எடுத்துக்கொடுத்தது.
அடுத்த சில மணி நேரங்களில் அதுவும் பொய்த்துப் போனது. அவன் அறைக்குத் திரும்பிய சஞ்சய் மனம் மரத்துப் போயிருந்தான். அவளாகக் கூறியிருக்காவிட்டால், கண்டிப்பாக இந்தத் தொகை வெளியே சென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஜெயந்தியா இப்படி? என்று ஒரு பக்கமும், அன்று அங்கே டின்னரில் நிரஞ்சனைப் பார்க்கவும் அவள் உடல் விறைத்தது ஒரு வேளை அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்திலா என்று மாறி மாறி யோசித்தது.
இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு வேளை நிரஞ்சன் அவளை மிரட்டுகிறானா? ஆனால் அதை என்னிடம் சொல்லியிருக்கலாமே? அதுவும் இத்தனை நெருக்கம் வந்த பின்பு என்ன தயக்கம்?
தலையை இரு கைகளிலும் ஏந்தி யோசிப்பது பிடிக்காமல், யோசிக்காமலும் இருக்க முடியாது தவித்திருந்தவனுக்கு நேரம் காலை ஒன்பதை நெருங்கிக்கொண்டிருப்பதோ, ஆட்கள் அலுவலகத்திற்கு வந்துகொண்டிருப்பதோ கூட உரைக்கவில்லை.
மனம் மீண்டும், மாயவம் இரங்கசாமிக்கு அவள் அப்பாவை தெரியவில்லை. கேட்டுச் சொல்கிறேன் என்றவளும் சொல்லவில்லை. கங்கா மாமா வீட்டிற்கும் உடல் நலம் சரியில்லை என்று தவிர்த்தது, அடுத்து நிரஞ்சனைத் தெரியாது என்றது எல்லாமாகச் சேர்ந்து, ஒரு வேளை இதெல்லாமே தன்னை ஏமாற்றிடத்தானா என்று தோன்ற ஆரம்பித்திருந்தது.
காலையில் எழுந்து காஃபியோடு வந்த ஜெயந்தி, ஒரு வேளை குருபரன் வந்திருப்பாரோ என்று “சார்… இருக்கீங்களா?”, என்று கேட்டு வைத்தாள்.
மெல்லிய பதில் வந்ததுபோல இருந்தது.
“சார்…. வந்துட்டீங்களா? கொஞ்சம் சத்தமா பேசுங்க. கேட்கலை”, என்று அவர் வழக்கமாக இருக்கும் ஒற்றை சோஃபாவிற்கு அருகில் வர,
“கிட்ட உட்காரும்மா. நான் போற நேரமும் வந்துருச்சி போல. உன்னைப் பார்க்காம போகக்கூடாதுன்னு வைராக்கியமா வந்து சேர்ந்துட்டேன். ஆனா உனக்கு கேட்கற மாதிரி பேசறதுக்கே முடியலை ஜெயந்திமா”, விட்டு விட்டு பேசினார்.
ஜெயந்தி கண்கள் கலங்கியது. “அச்சோ சார்… அதுக்குள்ளேயேவா? நீங்க இருந்து எங்க கல்யாணத்தை பார்க்க வேணாமா? “
அவள் பேச்சில் நெகிழ்ந்த குருபரன், “நேரம் முடிஞ்சா போகவேண்டியதுதானேமா. கவலைப் படாதே. சஞ்சய் நல்லபடியா உன்னைப் பார்த்துப்பான். அடுத்த பிறவின்னு ஒன்னு எடுத்தா, நீ எனக்கு பொண்ணா பிறந்து, உன் கல்யாணத்தை நானே ஜாம் ஜாம்னு நடத்தறேன் ஜெயந்திமா”, அவர் குரல் இன்னும் பலவீனமாக, அவர் பேசுவதைக் கடினப்பட்டே புரிந்துகொண்டாள் ஜெயந்தி.
“சார், நீங்க ரெஸ்ட் எடுங்க. அப்பறமா ஒரு விஷயம்”, என்று நான்கு நாட்களாய் அவரை அவள் தேடிக்கொண்டிருந்த விஷயத்தை கூறினாள்.
சில நிமிடங்கள் பதில் இல்லை. இருக்கிறாரா? என்று புரியாமல் “சார்”, என்று மீண்டும் குரல் தந்தாள்.
“ம்ம்… சாயந்திரம் பேசலாம்மா. நான் எதாவது யோசிச்சு வெக்கறேன். இன்னிக்கு ஒரு நாள் சமாளி”, என்று ஒருவாறாக சொல்லி முடிக்க,
“சரி சரி சார்… நீங்க ரெஸ்ட் எடுங்க. சாயந்திரம் பார்க்கலாம்” என்று கூறியவள், அவரிடம் விடை பெற்று அலுவலகம் கிளம்பினாள்.