சிங்கப்பூர் மற்றும் சென்னையில் இருக்கும் விசியர் என்ற அந்த கம்பனியின் டெண்டர் வேலை மிக மும்மரமாக நடந்துகொண்டிருந்தது. மொத்தம் ஐம்பது கோடி பெருமானமுள்ள வேலை. அடுத்த ஐந்து வருடங்களுக்கு வருவாய் தரும் அமுதசுரபி. அதனால் இன்னும் சிரத்தையாக அவர்களின் தேவை பார்த்து, என்ன பாதுகாப்பு செய்ய முடியும் என்று அலசிக்கொண்டிருந்தார்கள். சஞ்சய், மஞ்சு மற்றும் இருவருடன் இரண்டு நாட்கள் அவர்கள் அலுவலகத்தின் தேவைகள் பற்றிய இரண்டு நேர்காணலுக்கு சென்று வந்திருந்தார்கள். எதை எளிதாக்க முடியும், என்ன செலவில் என்ன பாதுகாப்பு முறைகள் கொண்டு வர முடியும் என்ற பேச்சே ஓடிக்கொண்டிருந்தது. இதில் நவீனும் அமெரிக்காவிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தான்.
“விசியர் டெண்டர் கிடைச்சா, சஞ்சய் சார் என்னை சிங்கப்பூர் அனுப்பறதா சொல்லியிருக்கார்க்கா”, என்று மஞ்சு சந்தோஷப்பட்டாள்.
அன்று மாலை, சஞ்சய் மற்றும் ஜெயந்தி இருவர் மட்டுமே அவன் அறையில் அமர்ந்து இறுதியாக ஒரு முறை டெண்டரை சரிபார்த்தார்கள். அமெரிக்காவில் இருக்கும் மோகனுக்கு வேலைகள் இழுத்துக்கொள்ள, அவனை அதிகம் தொந்தரவு செய்யாமல் சஞ்சயே பார்த்துக்கொண்டான்.
“என்ன ஜெயந்தி? உன் கட் ஃபீல் எதாவது சொல்லுதா? போட்டிருக்க தொகை ஓகேவா, இல்லை எதாவது அட்ஜஸ்ட் பண்ணனுமா?”, என்று சஞ்சய் கேட்க, சற்றே நெளிந்தாள் ஜெயந்தி.
‘எல்லாம் இந்த குரு சார் பண்ண வேலை…’, என்று உள்ளுக்குள் திட்டியவள், “இல்லை சஞ்சய், ஒன்னும் தோணலை. அது எப்பவும் தோணாது, ரொம்ப ரேர்தான்.”, என்று சமாளித்தாள்.
“நம்மளோட பெஸ்ட் சொல்லியிருக்கோம். பார்க்கலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு. நாம் யூ.எஸ்ல பண்ண ஒரு ப்ராஜெக்ட் அவங்களுமே தெரிஞ்சு வெச்சிருந்தாங்க. அந்த கிளையன்ட்கிட்ட நம்மக்கிருக்க நல்ல பேரும் தெரிஞ்சிருக்கு. விசியர் டெக் ஹெட் நல்லவிதமாத்தான் பேசினார்.”, என்று நம்பிக்கையோடு பேசினான் சஞ்சை.
“சரி, அனுப்பிடுவோமா?”, என்று கேட்டவன், அவள் சம்மதமான தலையசைப்பில், அவர்களின் பாதுகாப்பான ஃபைனான்ஸ் சர்வரில் இருந்த கோப்பை விசியர்ரின் ப்ரத்யேகமான லிங்கில் தக்க பாதுகாப்புடன் அவர்களின் டெண்டர் ஃபைலை அனுப்பிவைத்தான்.
“டின்னர் சாப்பிட்டு போலாமா ஜெயந்தி. இப்பவே ஏழாகிடுச்சு. அந்த கேரளா சேரன் மெஸ் திரும்ப போலாமா?”, என்று கேட்க சம்மதித்தாள் ஜெயந்தி.
பேச்சு கங்காதரன் வீட்டிற்கு செல்வது, பின்பு சற்று நேரம் அவன் வீட்டில் இருந்து, டின்னர் முடித்துவிட்டு அவள் வீட்டிற்கு கொண்டு வந்து விடுவது என்று சுற்றி வந்தது.
பேச்சுவாக்கில், “கங்கா மாமா ஊருக்கு போன போது மாயவரம் இரங்கசாமி அங்கிள் பார்த்து பேசிட்டு இருந்தாராம்.”, என்று சஞ்சய் சொல்லவும், யார் இது பேரை கேட்டது போல் இருக்கிறதே என்று புருவம் சுருக்கியவள், ‘ஒ…குருபரன் அவளது ரெசூமில் போடச் சொன்ன பேர் அல்லவா’, என்று அடையாளம் கண்டாள்.
“என்னாச்சு ஜெயந்தி?”, உணவை மென்று முழுங்கியவள்,
“ஆஹ்… இல்லை, அது இப்ப சாப்பிட்ட மீன்ல குட்டியா எலும்பு இருந்துச்சோன்னு நினைச்சேன், இல்லை பூண்டு துண்டு. நீங்க சொல்லுங்க. எப்படி இருக்காராம் அங்கிள்?”, என்று கேட்டு வைத்தாள்.
“நல்லா இருக்கார்னு சொன்னார். உன்னை வால்ட்டுக்கு அனுப்பி வெச்சதுக்கு கங்கா மாமா நன்றி சொல்லவும், அவருக்கு சட்டுன்னு உன்னை அடையாளம் தெரியலை.”
அவள் படபடப்பை மறைத்து, “அது என்னை அவ்வளவா தெரியாதே அதனால இருக்கும்.”
“அதான் மாமா உங்க அப்பா பேரு சிவமணின்னு சொல்லியிருக்கார், ஆனா அவருக்கு அந்த பேர்லையும் யாரையும் தெரியலைன்னிருக்கார்.”
‘குரு சார்… நீங்க பண்ண வேலை எங்க என்னை கொண்டு வந்திருக்கு பாருங்க. என்னை தனியா விட்டுட்டு நீங்க ஆளு எஸ்கேப். என்ன சொல்லி சமாளிக்க இப்ப?’, என்று லேசாய் முழிக்க,
“ஒரு வேளை அவருக்கு உங்க அப்பாவை வேற பேர்ல தெரியுமா ஜெயந்தி?”
அவன் எடுத்துக்கொடுத்ததை பிடித்துக்கொண்டவள், “ம்ம்… இருக்கலாம் சஞ்சய். ஏன்னா எனக்கு சித்தப்பாதான் சொன்னார். அப்பாவை மாயவரம் அங்கிள்க்கு ஞாபகப்படுத்தணும்னா என்ன ரெஃபரன்ஸ் சொல்லணும்னு நான் அவரை கேட்கறேன்”, என்று சமாளித்தவள், “ஏன் சஞ்சய், அவர் தெரியாதுன்னு சொன்னதால என்னை வேலை விட்டு தூக்கிடுவீங்களா?”, என்று சிரித்து வைத்தாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை. நீ டென்ஷனாகாதே. வாழ்க்கைக்கே நீன்னு முடிவு பண்ணியாச்சு. இது பேச்சு வரவும் கங்கா மாமா கேட்டார், மே பீ, நீ வீட்டுக்கு வரவும் அவருமே கேட்பார். அதான் பேச்சு வரவும் நான் கேட்டேன்.
“போச்சு…இப்ப எப்படி அவங்க வீட்டுக்கு போறது. குரு சார். இப்பன்னு பார்த்து வீட்டுக்கு கிளம்பிட்டீங்களே’, என்று யோசித்தவளுக்கு லேசாய் தலை வலிக்க ஆரம்பித்தது.
“சஞ்சய்… நான் கிளம்பட்டுமா? கொஞ்சம் டயர்டா இருக்கு?”, என்று கேட்கவும், “சர்… நான் வேணா ட்ராப் பண்ணவா? இல்லை ஓலா போடு”, என்றான் அக்கறையாக.
“கார்ல போனா ட்ராஃபிக்ல மாட்டுவோம். மெட்ரோ அரை மணியில கொண்டு விட்டுடுவான். நீங்களுமே டயர்டாதான் இருக்கீங்க. வீட்டுக்குப் போங்க.”, என்றவளை மெட்ரோ வாயிலில் விட்டுவிட்டுச் சென்றான்.
வீட்டிற்கு வந்தவள், “குரு சார்? இருக்கீங்களா?”, என்று கேட்டு வைக்க பதில் இன்றி அமைதியாக இருந்தது.
“ம்ப்ச்… இப்ப என்ன சொல்றது? நானாவது அந்த இரங்கசாமியைப்பத்தி டீடெயில் கேட்டு வெச்சிருக்கணும். அவரைப் பத்தி எதுவுமே தெரியாம என்னன்னு கங்கா சாரை சமாளிக்க?”, சலித்தவள் உடைமாற்றி படுக்கையில் விழுந்தாள்.
வெள்ளிக்கிழமை அலுவலகம் சென்று வந்தவள், சனிக்கிழமை காலையில் சஞ்சயை அழைத்துவிட்டாள்.
“சஞ்சய்…. வயித்து வலி அதிகமா இருக்கு. இன்னிக்கு என்னால வர முடியும்னு தோணலை. வெரி சாரி. கொஞ்சம் ஆன்ட்டி நம்பர் தாங்க அவங்ககிட்ட பேசி சொல்லிக்கறேன்.”, என்றாள். பொய் சொல்கிறோமே என்ற உறுத்தல் அதிகமாய் இருக்க, குரல் சங்கடமாகவே வந்தது.
“என்னாச்சு ஜெயந்தி? டாக்டர் பார்க்கணுமா? ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக நான் வரவா?”
“இல்லல்ல. இது பீரியட்ஸ் ப்ராப்ளம் சஞ்சய்… எப்பவாவது வலி ரொம்ப இருக்கும். மாத்திரை போட்டு படுத்து தூங்கிடுவேன். நைட் போல சரியாகிடும். ஆன்ட்டி நம்பர் அனுப்புங்க சரியா?”, என்று சொல்லி வைத்துவிட்டாள்.
காங்காதரன் மனைவி, “வெந்தயம் போட்டு மோர் குடிமா:, என்று பக்குவம் சொன்னபோது இன்னுமே குற்ற உணர்வில் தவித்தாள் ஜெயந்தி. வேறொரு நாள் வருவதாக வாக்களித்து வைத்துவிட்டு, நிஜமாகவே படுத்துவிட்டாள்.
அப்போதைக்கு சமாளித்துவிட்டாலும், இது தலையில் தொங்கும் கத்தியாகவே பட்டது. சஞ்சய் வேறு வலி இப்போது பரவாயில்லையா? நான் வேணும்னா வரவா, பேச்சு துணைக்கு? என்று மெசேஜ் அனுப்ப, அவனை சந்தித்து மேலும் நடிக்க மனம் ஒப்பாதவள், “இப்ப பரவாயில்லை சஞ்சய். சித்தி வீட்டுக்குப் போறேன். மண்டே அங்கிருந்தே வந்துடுவேன். ஒன்னும் பிரச்சனை இல்லை. சரியாகிடும்”, என்று பதில் அனுப்பி வைத்தாள்.
சித்தி வீட்டுக்கும் சென்று சில வாரங்களாகிவிட்டதால், கிளம்பி விட்டாள். ஒரு வேளை குருபரன் திரும்பியிருப்பாரோ என்ற சந்தேகத்தில், ஞாயிறு இரவே வீட்டுக்கு வந்து அழைத்துப் பார்த்தாள். அமைதி மட்டுமே பதிலாக வர, சஞ்சய் மீண்டும் இரங்கசாமிக்கு உன் அப்பாவை எப்படித் தெரியும் என்று கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியவில்லை. இப்போதுதான் சித்தி வீட்டிலிருந்து வருவதால், அவர்களைப் பார்த்து பேசவில்லை என்றும் கூற முடியாது. திங்களன்றும் லீவ் என்றால் சஞ்சய் கண்டிப்பாக வீட்டுக்கே வந்துவிடுவார்.
எல்லா வழியும் அடைபட்டிருக்க என்ன செய்வது என்று தவித்துப்போனாள் ஜெயந்தி. லீவ் முடிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைபோல வேண்டா வெறுப்பாக அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றாள்.
அங்கே அமெரிக்க புது ப்ராஜெக்ட் முதல் கட்ட வேலைகள் முடியும் தருவாயில் இருக்க, டெக் டீமுடன் மும்மரமாக இருந்தான். அதில் நிம்மதியானவள், தன் வேலைகளை கவனித்தாள். இடையில் சில நிமிடங்கள் காஃபி போடும்போது சந்தித்த போதும் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று மட்டுமே விசாரித்தவன், ராகினி வரவும், அவளிடமும் இரண்டு வார்த்தை பேசிவிட்டு சென்றுவிட்டான்.
இப்படி ஒவ்வொரு நாளும் பயந்துகொண்டா இருக்கமுடியும் என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வந்தவள், “குரு சார்… இருக்கீங்களா?”என்று கேட்க மீண்டும் அமைதி.
“புடிக்காத பொண்டாட்டி புள்ளையை பார்க்க நாலு நாள் வேணுமா? இங்கேயே குத்த வெச்சு இருந்த மனுஷனை, ஒரு சேஞ்சா இருக்கும் போய் பார்த்துட்டு வாங்கன்னு அனுப்பினேனே, என்னச் சொல்லணும்! அங்க யாருக்காவது எதாவது பிரச்சனைன்னு அதை தீர்க்க போயிட்டாரா? தமையா ஆன்ட்டி இருந்த வரைக்கும், எப்படியும் வந்துடுவார்ன்னு நம்பிக்கையாவது இருந்துச்சு. இங்க வேலை முடிஞ்சுதுன்னு நானே சொல்லிட்டேன்னு அவரும் நம்பி போயிட்டாரா? ஐயோ ஐயோ…. தருமி நாகேஷ் மாதிரி தனியா புலம்பவிட்டுட்டீங்களே சார்! இதை நான் யார்கிட்ட சொல்லமுடியும்!”, விட்டத்தைப் பார்த்து வாய்விட்டுப் புலம்பியும் ஒரு பலனும் இல்லை.
“இது தேறாது. பேசாம சஞ்சய்கிட்ட இவர் யாருன்னே தெரியாதுன்னு சொல்ல வேண்டியதுதான்”, என்று முணுமுணுத்தவள், “அப்பவும், இந்த பேர் யார் சொன்னது, எப்படி தெரிஞ்சுதுன்னு கேட்பாரே, அதுக்கு என்ன சொல்றது?”, என்றவளுக்கு லேசாக கண்ணைக் கரித்தது.
‘உண்மையைக் கூறினால் கண்டிப்பாக சஞ்சய் நம்பமாட்டார்’, என்று நினைத்தவள், “ஒரு வேளை குருபரன் சார் சஞ்சய் காதுல பேச, நானும் அங்க இருந்து பேசினா நம்பத்தானே வேணும்? எல்லாமும் சொல்லாம, வெறும் இந்த வேலை விஷயம் மட்டும் சொல்லச் சொன்னா போதுமே?”, லேசாய் ஒரு வழி தோன்ற, குருபரன் வரும் வரையிலும் சமாளித்தாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.