திங்கள் காலை ஜெயந்தி அலுவலகம் வர, அவள் முகவாட்டம் கண்டு, சஞ்சய் “என்ன ஜெயந்தி, முகம் வாடியிருக்கு?”, என்று குறுஞ் செய்தி அனுப்பியிருந்தான்.

நேத்து ராத்திரி உங்க அம்மாவோட ஆவி சத்கதி அடைஞ்சுதாம், இன்னிக்கு காலையில குரு சார் வருத்தமா சொன்னார். அவருக்கு இன்னும் எவ்வளவு நாளோன்னு நினைச்சு கஷ்டமா இருக்கு என்று சொல்ல முடியாதவளாய், “ஜஸ்ட் மூட் அவுட் சஞ்சய். சரியாகிடுவேன்”, என்று சிரிக்கும் பொம்மையுடன் அனுப்பி வைத்தாள்.

மீட்டிங் ரூம் வரவழைத்தவன், அங்கிருந்து மோகனுக்கு காணொளி அழைப்பு விடுத்தான்.

“ஹேய் ஜோடி புறாங்களா? எப்படி இருக்கீங்க?“, என்று சிரித்த முகத்துடன் மோகன் தெரிய, அதில் புன்னகைத்தாள் ஜெயந்தி.

“உங்க வீட்டுக்கு போயிருந்தோம் மோகன். உங்க அம்மா ரொம்ப ஸ்வீட், செம்ம ஜாலியா, ஃப்ரெண்ட்லியா பேசினாங்க”. பாராட்டுப் பத்திரம் வாசித்தாள்.

“ஆங்….அதெல்லாம் உங்கிட்டதான். என் காது தீஞ்சு போச்சு நேத்து. கம்ப்யூட்டருக்குள்ளயே தலையை விட்டுகிட்டு இருந்தவன் கூட எவ்வளவு அழகா, சமத்தா ஒரு பொண்ணை லவ் பண்ணி கூட்டிட்டு வரான். காலேஜ்லர்ந்து பொண்ணுங்க பின்னாடி சுத்தறதையே வேலையா வெச்சிருக்க உனக்கு ஒருத்தியும் சிக்கலை. சரியான வெத்துவேட்டுன்னு திட்டிட்டாங்க தெரியுமா?”, ஜெயந்தியிடம் புலம்பினாலும் சஞ்சயை முறைத்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சமும் வருத்தப்படாமல் புன்முறுவல் சிந்திக்கொண்டிருந்த சஞ்சய், “டேய்… எல்லாத்து பின்னாடியும் அலைஞ்சு டயர்டாகக் கூடாதுடா. நமக்கானவங்க வர வரைக்கும் வெயிட் பண்ணனும், வந்தா சட்டுனு பிடிச்சுக்கணும்”, என்று கெத்தாய் சொல்ல, பக்கவாட்டு சுவரில் முட்டிக்கொண்ட மோகன்,

“ஐயோ,…ஐயோ…. நேத்து முளைச்ச காளானெல்லாம் அட்வைஸ் பண்ற லெவலுக்கு வந்துட்டியேடா இராமோகன்… இந்த அவமானம் உனக்குத் தேவையா?”, என்று சத்தமாக முணுமுணுத்ததில் ஜெயந்தி சிரித்துவிட்டாள்.

அடிபட்ட பார்வை பார்த்த மோகன், “உனக்குக் கூட இந்த அண்ணன் மேல பாசம் இல்லைல்ல? அதான் அவன் கூட சேர்ந்து சிரிக்கற இல்ல ஜெயந்தி?”, என்று கேட்கவும், சட்டென்று முகம் மாறியவள், “அச்சோ அதெல்லாம் இல்லை மோகன். கண்டிப்பா உங்களுக்கானவ வருவா”, என்று சமாதானம் செய்தாள்.

“ஆமா, அது வரைக்கும் இருக்கவே இருக்கா ட்ரேசி”, என்று நக்கலாக வந்தது சஞ்சயின் குரல்.

“யாரு ட்ரேசி?”, அப்பாவியாக ஜெயந்தி கேட்க, மோகன் கண்ணைக் காட்டுவதை மீறி, “சனிக்கிழமை இராத்திரி சார் அடிச்ச கூத்தை பாரு”, என்று தன் போனில் ஒரு இன்ஸ்டா ஸ்டோரி காட்டினான் சஞ்சய்.

ஒரு வெள்ளைக்காரியுடன் டான்ஸ் என்ன, அவளுக்குப் போட்டியாக ஷாட்ஸ் குடிப்பதென்ன என்று வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவனாக இருந்தான் இராம்மோகன்.

ஐயோ பாவமே என்ற ஜெயந்தியின் பார்வை அடப்பாவியே என்று மாற, “அதான, ஒருத்தரும் என் மேல பரிதாபப்பட்டுடக் கூடாதே. உடனே கலைச்சு விட்ருவியே”, என்று சஞ்சய்யை திட்டினான்.

“சரி போதும் உன் கலாட்டா. வேலை விஷயத்துக்கு வா. நேத்து மீட் பண்ண கிளையண்ட் என்ன சொல்றான்?”, என்று கவனைத்தை திருப்பவும், அடுத்த அரை மணி நேரம் புதிதாக கிடைக்கக் கூடிய கான்ட்ராக்ட்களின் சாத்தியங்கள், அதற்கான முன்னெடுப்புகள் என்ன என்று பேச்சு ஒடியது.

“ம்ம்…இங்க ஒரு ப்ரபோசல் ஒன்னு இன்ட்ரெஸ்டிங்கா இருக்குடா மச்சி. இங்கேயும், சிங்கப்பூர்லையும் இருக்கு ஆஃபீஸ். “, என்று அதைப் பற்றி விவரித்தான் சஞ்சய்,

“செய்யலாம்டா. யாரு கான்டாக்ட் அனுப்பிவிடு. நான் பேசி விவரம் வாங்கறேன். கொடேஷனை குடுப்போம்.”, என்று மோகனும் வாக்களித்து விடைபெற்றான்.

“மேடமுக்கு மூட் மாறிடுச்சா?”, சஞ்சய் கேட்கவும் புருவம் உயர்த்தியவள், “ஓ அதுதான் மோகனை கலாட்டா செஞ்சீங்களா? பாவம், தான் ஒரு காமெடிப் பீசானது தெரிஞ்சா வருத்தப்படுவார்”, முறுவலித்தாள்.

“அவன் அதெல்லாம் கண்டுக்க மாட்டான். ஆனா உன்னை கூப்பிட்டது, அடுத்து வரப்போற வாய்ப்பு பத்தி தெரிஞ்சுக்கத்தான். இந்த கொடெஷனும் அவன் பேசிட்டு வந்த இரண்டு நாள்ல ரெடி செஞ்சுடணும். சோ, உன் டைம் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கற மாதிரி பார்த்துக்கோ ஜெயந்தி. இது போடறதுதான் முக்கியம்.”, என்றும் விளக்கி அனுப்பிவைத்தான்.

அவளை அனுப்பிவிட்டு மோகனை மீண்டும் அழைத்தான். “சொல்லு மச்சி?”

“டேய்…ஸ்ரீதர் சர் வீட்டுக்கு லன்ச் போனியே? என்ன சொன்னார்? தீக்ஷனா பார்த்தியா?”

“உங்கூடதான தீக்ஷனாக்கு சண்டை? ஆனா பாரு மச்சி, என்னையும் அவாய்ட் பண்றாடா! அன்னிக்கு போன் பண்ணப்போ, பிசியா இருக்கேன், மீட் பண்ணலாம் மோகன்னு சொன்னா அப்பறம் கூப்பிடவே இல்லை. நேத்தும் வீட்டுல இல்லை. சார், சும்மா பொதுவா பேசினார். அப்பறம்…”

“சொல்லு, ஜெயந்தி பத்தி கேட்டாரா?”, அவன் தயங்குவதிலிருந்தே புரிந்து கேட்டான் சஞ்சய்.

“ம்ம்… கொஞ்சம். எங்கருந்து வந்தாங்க. எப்ப கம்பனில சேர்ந்தாங்க? ஃபாமிலின்னு கேட்டார். பெருசா எதுவும் சொல்லிக்கலை. ஜெயந்தி ரெக்கார்ட் எடுத்துப் பார்த்தா என்ன தெரியுமோ அவ்வளவுதான் சொன்னேன்.“

“ம்ப்ச்…இதுக்கு மேலேயும் தீக்ஷனாவை கல்யாணம் பண்ணுவேன்னு நினைக்கறாரா?”

“இல்லைடா. நீ ஜெயந்திக்காக பார்ட்னர்ஷிப் முடிக்கற அளவு இவ்வளவு சீக்கிரம் ரெடியானது அவருக்கு கொஞ்சம் ஷாக். சோ,  யாருடா அந்த மேனகை ? நம்ம ருஷ்யசிங்கரையே மயக்கிட்டாங்கற ஒரு க்யூரியாசிட்டின்னு நினைக்கறேன்.”, அவன் கிண்டலை புறந்தள்ளியவன்,

“ஹ்ம்ம்… நீ திரும்ப வந்ததும், நாம இது பத்தி கொஞ்சம் பேசணும் மச்சி. அவர் பங்கு கொஞ்ச கொஞ்சமா நாம வாங்கிக்கலாம்னு பார்க்கறேன். “

“பண்ணலாம்டா, அதுக்கு அவர் ஏன் ஒத்துக்கணும்? ஒரேதா முடிக்கணும்னா கேட்கலாம்.  சரி. ப்ரபோசல் சொல்லு, எப்படி அவர்கிட்ட கொண்டு போறதுன்னு பேசலாம்.”, மேலும் சிறிது நேரம் பேசி வைத்தார்கள்.

அன்று மாலை கிளம்பும்போது, “நாளைக்கு காலையில கொஞ்சம் லேட்டா வருவேன் ஜெயந்தி. கங்கா சார் வரார். லேட் நைட் ஏர்போர்ட் போய் அழைச்சிட்டு வரேன்”, என்ற தகவல் சொல்லிவிட்டுச் சென்றான்.

ஜெயந்தி வீட்டுக்குள் நுழையவுமே, “அம்மா ஜெயந்தி….”, என்று வரவேற்றார் குருபரன்.

“சார்…என்ன எனக்கு முன்ன வந்திருக்கீங்க?”, என்று சோஃபாவில் வந்து அமர்ந்தாள்.

“ம்ப்ச்… தமையா போனப்பறம் என்ன பண்றதுன்னு தெரியலைமா. அவ இல்லாம அவ வீட்டுல என்னால இருக்கவும் முடியலை.  எதுவும் பிடிக்கலை. அதான் இங்க வந்துட்டேன். இருக்கட்டுமா?”, என்று கேட்க, “ஐயோ இங்கயே தங்கப் போறாரா?”, என்று ஒரு நொடி அதிர்ந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.

“என்ன சார் தமையா ஆன்ட்டி மிஸ் பண்றீங்களா? அவங்க ஆத்மா சத்கதி அடைஞ்சது  நல்லதுன்னு நீங்கதான சொன்னீங்க?”

“ம்ம்..அவ இருந்த வரைக்கும் உங்களை சேர்த்து வைக்க, சஞ்சய் பார்க்கன்னு எதாவது வேலை இருந்துட்டே இருக்குமா, நேரம் ஓடிரும். இப்ப ஒரே வெறுமையா இருக்குமா”, என்றவர் குரலே சோர்ந்து வந்தது.

மோகன் சொன்னது ஞாபகம் வரவும், “சார், சஞ்சய் ஃப்ரெண்டு மோகனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா? அவருக்கு வரன் செட் ஆகலைன்னு அவங்க அம்மா திருமணஞ்சேரிக்கெல்லாம் கூட்டிட்டு போயிட்டு வராங்க”, என்று கேட்க.

“ஐயோம்மா… ஆளை விடு. என்னால இன்னொரு கல்யாண ஏற்பாடெல்லாம் பார்க்க முடியாது!”, அலறினார்.

அதில் சிரித்தவள், “சார்… பொழுது போகலைன்னு சொல்லவும் கேட்டேன். சரி, உங்க வீட்டு பக்கம் போய் வைஃப் பிள்ளைங்க எல்லாரையும் பார்த்துட்டு வாங்களேன். ஒரு மாற்றமா இருக்கும்”

“ஹ்ம்ம்… எனக்கும் இன்னும் எத்தனை நாள் விதிச்சிருக்கோ. போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரேன். யாரும் என்னை தேடமாட்டாங்க. அவங்க நல்லா இருக்காங்களான்னு பார்த்தா போதும்”, ஏற்றுக்கொண்டார்.

இரவு இவள் தூங்கச் செல்லும்போதும் அங்கேதான் இருந்தார். கிளம்புங்கள் என்று சொல்ல வாய் வராது, ஜெயந்தி அமைதியாக சென்று படுத்துக்கொண்டாள். கொஞ்சம் பயமாக இருந்தாலும், சரி  தமையா ஆன்ட்டி போனதுல வருத்தம். அவர் ஒன்னும் பண்ண மாட்டார் விடு என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.

ஒரு வாரம் போல் ஓடிவிட்டிருந்தது. நாலைந்து நாட்களாக அவள் வீட்டிலேயே குத்த வைத்து உட்கார்ந்திருந்தார் குருபரன். இடையில் ஒரு நாள் அவளுடனே அலுவலகம் வந்து சென்றார். டி.வி பார்த்தார், அரசியல் பேசினார். இவள் சித்தியுடன் பேசுவதை கேட்டுவிட்டு ஒரு நாள், “ரொம்ப நல்லவங்கமா உன் சித்தி, சித்தப்பா. எப்ப சொல்லப் போற சஞ்சய் பத்தி?”, என்று ஆரம்பித்தார்.

“சொல்லணும் சார். திடுதிப்புன்னு எப்படி சொல்றது. அவங்க வீட்டுக்கு போயிட்டு பொறுமையா சொல்லணும். அப்பறம் சஞ்சய் கூட்டிட்டு போய் பேசணும். இதோ இப்ப இன்னொரு முக்கியமான டெண்டர். அதுக்கான வேலை போயிட்டு இருக்கு.”

அவள் சமாதானத்தை ஏற்காதவர், “வேலை எப்பவும் இருந்துட்டுதான் இருக்கும் ஜெயந்திமா. உங்களுக்குள்ள நீங்க முடிவு பண்ணிட்டீங்க. அப்பறம் எதுக்கு தாமதம்? சஞ்சய் பக்கம் அவன் கங்காதரன் மாமாதான் முன்ன நின்னு செய்யணும். அவரும் சென்னை வந்துட்டார்.”, என்று கரைக்க ஆரம்பித்தார்.

“சார்…. என்ன அவசரம? கொஞ்சம் நிதானமாவே ஆகட்டுமே? பெரியவங்களுக்கு சொன்னா, சஞ்சய்க்கு இருக்கற ப்ரஷர்ல இன்னும் கல்யாண பிரஷரும் கூடும். இத்தனைக்கும் கங்கா சார்கிட்ட உடனே சொல்லிட்டார் சஞ்சய். அவரும் எங்கிட்ட போன் பண்ணி பேசினார். சஞ்சய் முடிவுல அவருக்கும் சந்தோஷம்னுதான் சொன்னார். ஆன்ட்டி கூட நல்லா பேசினாங்க. அடுத்த வாரம் வீட்டுக்கு கூப்பிட்டிருக்காங்க. சோ,  நீங்க எதிர்பார்க்கற பாதையிலதான் போறோம். இன்னும் ஸ்பீடா போக சொல்லாதீங்க.”, சற்று நேரம் எடுத்து பொறுமையாக விளக்கினாள்.

“சரிமா. சரிமா. சஞ்சய் சொல்லிட்டானா?  நல்லதுதான்.”, என்று சமாதானமானார். கூடவே, “நானும் போய் பிள்ளைங்களை பார்த்துட்டு வரேன் ஜெயந்திமா. நீ தேடாதே.”, என்ற  நல்ல செய்தியும் பகிர்ந்தார்.

திங்கள் காலையில் சஞ்சயை கைப்பேசியில் அழைத்தார் கங்காதரன்.

“மார்னிங் மாமா. ஊர் பயணமெல்லாம் எப்படி இருந்துச்சு? கோவில் பூஜை எல்லாம் நல்லா முடிஞ்சுதா?”, விசாரித்தான் சஞ்சய்.

“ஆங்… நல்லா முடிஞ்சுதுடா. மாமி பிரசாதம் எடுத்துட்டு வருவா. அங்க ஊர்ல நம்ம மாயவரம் இரங்கசாமியை பார்த்தேண்டா. அவர் பேரனுக்கு மொட்டைபோட குடும்பத்தை அழைச்சிட்டு வந்திருந்தார்.”

“ஓஹ்…எப்படி இருக்கார்?”

“ம்ம். நல்லா இருக்கார். முகத்துக்கு நேரா நின்னு பேசுனா காது கேட்குது புரிஞ்சுக்கறார். அப்படி பேசும்போது ஜெயந்தியை அனுப்பி வெச்சதுக்கு தாங்க்ஸ் சொன்னேனா, அவருக்கு யாருன்னு தெரியலை. என்னய்யா? நான் போன் செஞ்சு கேட்டேனே, உனக்கு காது சரியா கேட்கலைன்னு உன் பெரிய பேத்தி் எங்கிட்ட பேசி உங்கிட்ட கேட்டாளே, நீயும் ஆமாம் நான் அனுப்பினேன்னு சொன்னியேன்னு ஞாபகப்படுத்தினேன். அப்பதான் ஒன்னு சொன்னார். “, சற்று இடைவெளி விட்டு,

“நான் சொன்ன பொண்ணுக்கு வரன் தகைஞ்சு, மாப்பிள்ளை பெங்களூருன்னவும் அவ அப்ளிகேஷனே போடலைன்னு அப்பறம்தான் தெரிஞ்சுது. நான் ஜெயந்தின்னு யாரையும் அனுப்பலையேடான்னு சொன்னார் சஞ்சய்.“

“அவ அப்பா பேர் சொன்னீங்களா? இன்டர்வ்யூல ஜெயந்தி அவ அப்பாவோட ஃப்ரெண்டு, சின்ன வயசுல பார்த்ததுன்னுதானே சொன்னா?”

“அதுதான், உடனே நானும் அதைத்தான் சொன்னேன். ஆனா சிவமணின்னு எனக்கு யாரும் தெரியாதேங்கறார் இரங்கசாமி. ஒன்னும் பிரச்சனை இல்லை, தவறான புரிதலாதான் இருக்கும். ஒரு வேளை ஊர்ல ஜெயந்தி அப்பாவை வேற பேர்ல தெரிஞ்சிருக்கலாம். நீ கேட்டுக்கோ அவகிட்ட. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்”, என்று சொன்னதோடு வைத்துவிட்டார்.

புருவம் சுருக்கினான் சஞ்சய். அன்று அவள் நிரஞ்சனுடன் பேசினதை யாரோ அடையாளம் தெரியாமல் பேசினார் என்று மறைத்துவிட்டாள். மறு நாளே அவன் யார் என்ற விவரம் எடுத்துவிட்டிருந்தான் சஞ்சய். வால்ட் போன்ற மற்றொரு கம்பனியில் ஃபைனான்ஸ் ஹெட்டாக இருக்கிறான். அவன் முன்னர் வேலை பார்த்த கம்பனி பெயர், பதவி கேள்விப்பட்டவுடன் ஜெயந்திக்கு தெரியாமல் இருக்காது என்று புரிந்துவிட்டது. அனேகமாக அவள் பாஸ்சாக நிரஞ்சன் இருந்திருக்கக் கூடும்.  இன்று கங்கா சார் இப்படி சொல்கிறார்.  ஆனாலும் ஜெயந்தியை தவறாக நினைக்க முடியவில்லை. இதை என்னவென்று அவளிடம் கேட்பது என்றும் புரியவில்லை.