சஞ்சய் வராத இரண்டு நாட்களும் மிகவும் மெதுவாக நகர்ந்தது. மாலை வேளைகளிலும் சிறு குழுக்களாக டின்னர் செல்வதனால் அவ்வப்போதான குறுஞ் செய்தி மட்டும்தான்.
அவன் கோட் சூட் அணிந்து மேடையில் பேசுவதன் கிளிப்பிங்க்ஸ் அவர்கள் சைட்டில் போடுவதற்காக எடுக்கப்பட்டிருக்க, அதைப் பார்த்து அஞ்சலியிடம் பொங்கி பூரித்தாள் ஜெயந்தி.
நிரஞ்சனைப் பற்றி பேச்சும் வந்தது. “ஏ…வேலை விட்டு போயிட்டான்னு சொன்னியே அஞ்சலி, அங்க அந்த பார்ட்டிக்கு வந்திருந்தான். திடீர்னு வந்து டால்னு பேச வேற செஞ்சான்”, என்றவள் சஞ்சய் அவனைப் பற்றி விசாரித்ததையும் தான் மழுப்பிவிட்டதையும் கூறினாள்.
“ஏன் ஜெய். பழைய கம்பனியில் மானேஜர்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே? எதுக்கு தெரியாதுன்னு சொன்ன?”
“இல்லை அஞ்சலி, சொன்னா இவர் போய் பேச செய்வார்.அவன் வேணும்னே அவர் எதிர்க்க வழிவான், அவன் மேல க்ரஷ் இருந்துச்சுன்னு எதாவது மறைமுகமா சொல்லுவான். அப்பறம் இதெல்லாம் சஞ்சய்க்கு சொல்லணும். எப்படி முடியும் அஞ்சலி?”
“சஞ்சய் அப்படி ஒன்னும் தப்பா எடுக்க மாட்டார் ஜெய். அப்படி பேசப் போனா டெர்ம்ஸ் சரியில்லை வேணாம்னு சொல்லியிருக்கலாம்.”
“தப்பா எடுக்க மாட்டார்தான். ஆனா, நான் இவனைப் பார்த்து முட்டாளானதை அவர்கிட்ட ஒத்துக்க முடியலைடி. அந்த நேரம் தெரியும்னு சொல்லி, அப்பறம் வர கேள்விக்கெல்லாம் சமாளிக்க எதுவும் தோணலை. விடு. இவனைத் தெரியாதுன்னு சொன்னதும் வேற எதுவும் கேட்டுகலை அவர்.”
“ஹ்ம்ம்… இந்த பூனைக்கு ஏழு ஜென்மம்னு சொல்ற மாதிரி, அவன் வேலை ஊசலாடுதுன்னு தெரிஞ்சதும் ஜம்ப் பண்ணிட்டான். அதுக்கேத்த மாதிரி அவனுக்கும் வேற வேலை கிடைச்சிருக்கு பாரேன்?”,அஞ்சலி அங்கலாய்க்க, “அவனைப் பத்தி விடு அஞ்சலி”, என்று பேச்சை மாற்றிவிட்டாள்.
மாலை டின்னர் முடித்து டீவி பார்த்துக்கொண்டிருந்தவள், “ம்ம்… நாலு நாள் ஆகப்போகுது, எங்க குரு சார் அட்டெண்டன்ஸ் போடக்காணோம்?”, என்று நினைத்துக்கொண்டாள்.
“ஒரு வேளை அன்னிக்கு சண்டை பிடிச்சதுக்கு கோவிச்சிக்கிட்டாரா? இல்லை எங்க வேலை முடிஞ்சுதுன்னு அவர் தமையா ஆன்ட்டி கூட சேர்ந்து டூயட் பாடப் போயிட்டாரா?”
“எங்களுக்குத்தான் டூயட் பாட நேரமில்லை. அவராவது எஞ்சாய் பண்ணட்டும்”, என்று பேசிக்கொண்டே படுக்கத் தயாரானாள்.
“நாளைக்கு ஆஃபீஸ் வருவீங்கல்ல? போர் அடிக்குது நீங்கயில்லாம?”, சிணுங்கும் அவள் குரலில், அவனிக்கிருந்த களைப்பை மீறி உற்சாகம் கொண்டான்.
“நானுமே உன்னை மிஸ் செய்தேன் ஜெயந்தி. கண்டிப்பா காலையில் ஜெயந்தி தரிசனம் தான்”, என்றவனிடம் அன்று நடந்தது பற்றி கேட்டுக்கொண்டு அலுவலக செய்திகளை பறிமாறிக்கொண்டு என்று சஞ்சய் வீட்டிற்கு செல்லும் வரையிலுமே பேசினாள்.
மறு நாள் பளிச்சென்று மெல்லிய கரையிட்ட ஒரு மரகதப் பச்சை காட்டன் சேலையில் வந்திருந்தவளைக் கண்டவனால் கண்ணை எடுக்க முடியவில்லை.
“என்ன விசேஷம்? இன்னிக்கு புடவை?”, என்றான் அவள் உள்ளே வந்த போது.
புன்னகைத்தவள், “ஒன்னுமில்லை கோவிலுக்குப் போயிட்டு அப்படியே வந்தேன்”, என்றாள்.
பின் மதியம் போல் வெளியே கிளம்பியவன் செல்வதற்கு முன் அவளை அழைத்து, “மோகன் அம்மா கூப்பிட்டாங்க ஜெயந்தி. சனிக்கிழமை மதியம் அவங்க வீட்டுல எதோ பூஜையாம், லஞ்ச்சும் அங்க சாப்பிடறதாம். போலாமா? மோகன் இல்லைங்கவும் நீங்க இரண்டு பேருமாவது வாங்கடான்னு சொல்றாங்க.”
“ஆன்ட்டி அங்கிள் ஜாலி டைப்தான். சரி. உன் நம்பர் அவங்ககிட்ட தரேன். அவங்களே போன் பண்ணி நேர அழைப்பாங்க. பார்த்துக்கோ. நான் நைட் பேசறேன்மா”, என்று சொல்லிச் சென்றான்.
சனிக்கிழமை காலை தலைக்கு குளித்து வந்து அமர்ந்தவள், “அம்மா ஜெயந்தி”, என்ற குரலில், “சார்…. என்னாச்சு ஒரு வாரமா ஆளையே காணலை? நல்லாயிருக்கீங்களா?”, சந்தோஷித்தாள்.
அவள் மகிழ்ச்சியில், முறுவலித்தவர், “ம்ம்… நல்லாயிருக்கேன்மா. அது தமையாக்கு முடியலை. அதுதான்”, என்று இழுத்தார்.
ஜெர்க்காகி எழுந்த ஜெயந்தி, “சார்… எதோ நாங்க இரண்டு பேருமா எப்படி இருப்போம்னு பார்க்க ஆசைப்பட்டாங்க, வீட்டுல, ஆஃபீஸ்லன்னு பல தரம் பார்த்தாங்க. இது டூ மச். நான் இதுக்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது.”, கண்டிப்பாய்க் கூறிவிட்டாள்.
“தெரியும் ஜெயந்திமா. சரி பூஜை முடிஞ்சாவது இரண்டு பேருமா வாங்களேன். அவளால முடிஞ்சுதுன்னா கிளம்பி வந்துடுவா. ஒரே இடமா முடங்கிக்கிடக்கறா பாவம்.”, பரிதாபமாகக் கூறினார்.
“சர்…எங்கேருந்து எங்க வந்துட்டு போறது? திடீர்னு இப்ப எதுக்கு என் வீட்டுக்கு வரன்னு சஞ்சய் கேட்டா நான் என்ன சொல்ல முடியும்? மோகன் வீட்டுலர்ந்து அவர் வீடு பக்கம்னாவாச்சம் எதாவது சாக்கு சொல்லலாம். அவர் வீட்டுக்கு போறதுக்கு இங்கேயே வந்துடலாம். இது ஆகாது சார். என்னை சிக்கல்ல மாட்டிவிடாதீங்க.”
“ம்ப்ச்..”, என்று குருபரன் உச்சு கொட்ட,
‘நல்ல வேளை இந்தம்மா உயிரோட இல்லை. கண்டிப்பா எனக்கும் அவங்களுக்கும் முட்டிகிட்டு இருக்கும். இப்படியா நொச்சு பண்ணுவாங்க ஒரு மனுஷனை?’, மனதில் தாளித்தாள்.
“நிறைய தரம் எங்களை ஒன்னா பார்த்துட்டாங்க சர். இன்னும் என்ன? வேற எதுவும் ப்ரோக்ராம் இல்லைன்னா கண்டிப்பா வீட்டுக்கு வரட்டுமான்னு கேட்டிருப்பேன், பட் இப்ப எப்படி? நாளைக்கு எதோ ஆஃபீஸ் வேலை வேற வெச்சிருக்கார்.”
ஒரு பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.
“சார், என் கஷ்டத்தையும் புரிஞ்சுக்கணும். எத்தனை முறை பார்த்தாலும் அதேதான். நீங்க இருக்கீங்கன்னாலே நான் கொஞ்சம் விலகி இருக்கேன். அதுக்கே சஞ்சய் என்னாச்சுன்னு பார்க்கறார் என்னாலேயும் ஒன்னும் சொல்ல முடியலை. உங்களுக்கே தெரியும். உங்க தமையாக்கும் புரியும், ஆனா புரிஞ்சிக்க பிரியப்படலை. இதுல நீங்க ஏன் சங்கடப் படறீங்க? நான் கூப்பிட்டேன், ஜெயந்தி இப்படி சொல்லிட்டா. அவ சொல்றதும் சரிதான். உன் புள்ளை ஏன்னு கேட்டா என்ன சொல்லுவாங்கறதோட விட்டுடுங்க. மிஞ்சி போனா அழுவாங்க, புலம்புவாங்க. பண்ணட்டும். ஒரு அளவுக்குத்தான சார் எல்லாம்?”, பொறுமித் தள்ளிவிட்டாள்.
“நீ சொல்றது ரொம்ப சரி கண்ணு. என்ன ஒன்னு, கடைசி ஆசைன்னு கேட்கறா. அதுதான் மறுக்க முடியாம வந்தேன்.”
“சர்… பல பேருக்கு இல்லாத குடுப்பினை உங்க தமையாக்கு இருக்கு. உயிர் போனப்பறமும், அவங்க விரும்பின மாதிரி அவர் பிள்ளைக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து, சேர்த்து வெச்சிருக்காங்க. இதுக்கும் மேல கடைசி ஆசைங்கறது பேராசை, உங்களை ப்ளாக்மெயில் பண்றதுக்காகவே சொல்றாங்க. மயங்கிடாதீங்க!”, ஜெயந்தியின் எச்சரிக்கையில் வாய்விட்டு சிரித்துவிட்டார் குருபரன்.
“பரவாயில்லை, மாமியார் குணத்தை நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்க! இவ்வளவு தெளிவு உனக்கு இருக்கறது ரொம்ப சந்தோஷம் ஜெயந்திமா. இரண்டு நாளா இந்த பக்கம் அந்தப் பக்கம் நகரவிடாம, என் கைக்குள்ளவே இருந்தா. அப்ப சொன்னா பாரு, அடுத்த ஜென்மத்துலயாவது நாம ஒன்னா வாழணும்ங்கன்னு, உங்கிட்ட மட்டும்தான் சொல்றேன், எனக்கு ஒரு நிமிஷம் திக்குன்னு ஆகிடுச்சு! ஐயோ மறுபடியுமான்னு மனசு அலறிடுச்சு. ஆண்டவன் வயசு காலத்துல பிரிச்சு விட்டு எனக்கு நல்லதுதான் செஞ்சிருக்கான்னு இந்த ஒரு மாசத்துல தோண வெச்சிட்டா.”, கொஞ்சம் வெறுத்துப்போய் வந்தது குருபரனின் குரல்.
“சர்… உங்க மனைவி பத்தி சொன்னதே இல்லையே?”
“சுலோசனா? அவளுக்கு அவ மகனுங்க போதும். நான் தேவையே இல்லை. கல்யாணமான புதுசுல இருந்த ஒதுக்கத்தை பழக்கமில்லை, வெட்கம்னு நினைச்சேன். குழந்தை உண்டானா, அவன் பிறந்ததும் அவனை பார்த்துக்கறதுதான் பிரதானமா இருந்துச்சு. எப்பவுமே எங்களுக்குள்ள ஆத்மார்த்தமான ஒரு உறவு இல்லை. அடுத்த பிள்ளை, அவங்க வளர்ப்பு, அப்படியே வாழ்க்கை போச்சு. ஆனா ஒன்னு சொல்லணும். எனக்குன்னு பார்த்து எதுவும் செய்தது இல்லை, அது மாதிரியே எங்கிட்ட அவளுக்கும் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. செஞ்சியா சரி, செய்யலையா, பரவாயில்லைன்னு போயிடுவா. ஒரு சண்டையும் கிடையாது சமாதானமும் கிடையாது. அவ பசங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கா. இருக்கட்டும். அடுத்த பிறவியில எனக்கு தமையாவும் வேணாம், சுலோவும் வேணாம். அடுத்த பிறவியே வேணாம் போ!”
“அட என்ன சார், இப்படி சொல்லிட்டீங்க? சரி தமையாவும் வேணாம், சுலோவும் வேணாம், அடுத்த பிறவியில காதாலாகி கசிந்துருகற ஒரு வாடாமல்லிய பார்த்து கட்டுவோம்”, என்று சொல்ல சத்தமாக சிரித்தார் குருபரன்.
“நீ எனக்கு பொண்ணா வந்து பிறக்கறன்னு சொல்லு ஜெயந்திமா, யாரை வேணாலும் கட்டிக்கறேன். உன்னைப் பார்த்ததும், உன் கூட பழகினதும்தான் நிஜமாவே என்னை சந்தோஷமா இருக்க வெக்குதுமா. நீ கவலைப்படாம சஞ்சய் கூட பூஜைக்குப் போ. நான் தமையாவ பார்த்துக்கறேன்.”, என்றவர் விடை பெற்று சென்றுவிட்டார்.