சஞ்சய் ப்ரபோஸ் செய்து இதோ இரண்டு வாரங்கள் முடிந்திருக்க, இடைப்பட்ட நாட்களெல்லாம் கனவுலகம் போன்றுதான் இருந்தது.
சஞ்சய் செய்யும் குறும்புகள், இவளின் துடுக்குத்தனத்தையும் கிளப்பிவிட, வெகு நாட்களுக்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது ஜெயந்திக்குப் புரிந்தது. அவளே மறந்துவிட்ட ஒரு ஜெயந்தி மெல்ல வெளியே வந்திருந்தாள்.
அன்று காலை சஞ்சய் அனுப்பிய செல்ஃபியை நூறாவது முறையாக பார்த்தாள். காலை எழுந்தவுடன் எடுத்திருந்தான். கலைந்த கேசம் முன்னெற்றியில் இருக்க, முக்கால் வாசி தேகம் போர்வைக்குள் இருந்தது. செல்ஃபி எடுக்கும் கையும் ஒரு பக்க தோளும், கழுத்துப் பகுதியும் மட்டும்தான் தெரிந்தது. ஆனாலும் அவன் மேலாடை அணிந்திருக்கவில்லை என்று புரிந்ததே வெட்கத்தை அள்ளித் தந்தது. இதில் நானும் என் படுக்கையும் உன் வரவுக்காக என்று எழுதியிருந்த மெசேஜ் பார்த்து இன்னும் சிவந்தாள்.
தூக்கம் இன்னும் மிச்சமிருக்க, ஒரு சோம்பலான புன்னகை தவழ்ந்திருந்தது முகத்தில். நெற்றியில் புரளும் கேசம் திருத்தி, முத்தம் வைத்து, படுக்கையிலிருந்து இவள் எழுப்ப, அவன் இழுத்து அவளையும் சேர்த்து படுக்கையில் விழ வைக்க என்று ஒரு நொடிப் பொழுதில் மனக்கண்ணில் வந்து சென்ற காட்சியில், காலையில் பாலை பொங்கவிட்டாள்.
“சஞ்சய்…. உங்க செல்ஃபி பார்த்து பாலை பொங்கவிட்டுட்டேன். இப்படியா காலையிலேயே குறும்பு பண்ணுவீங்க?” , என்று வாய்ஸ் நோட் அனுப்பிய அடுத்த நொடி அழைத்திருந்தான்.
“ஓய்… “
“என்ன ஓய்… இன்னிக்கு ஆஃபீஸ் வர லேட்டாகப் போகுது. எல்லாம் உங்களாலதான்.”
“ஆஃபீஸ் கட்டடிச்சிட்டு என் கூட வா. வெளிய போகலாம்.”
“அச்சோ… பாஸ் திட்டுவாரே”
“அவன் கிடக்கறான். ஹாஃப் டே லீவ் சொல்லு. நான் கிளம்பி வரேன். ஆளில்லாத தியேட்டர்ல சினிமா பார்க்கலாம்”, சஞ்சய் ப்ளான் சொல்ல சத்தமாக சிரித்துவிட்டாள்.
“சஞ்சய்…. ஆளில்லாத தியேட்டர்ல சினிமா பார்க்கவா வருவாங்க? நாட்டி பாய்”
“அச்சோ…சரி உங்களுக்கு ஓகேன்னா கிளம்பி வாங்க. பக்கத்துல எதாவது மால்ல சினிமா பார்த்துட்டு லன்ச் முடிச்சு ஆஃபீஸ் போகலாம்”
“ஹேய்…. நிஜமாவா சொல்ற? சின்சியர் ஸ்டாஃப், ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் ஜெயந்தியா வார நாள்ல சினிமா பார்க்க ஓகே சொல்றது?”, சஞ்சய் குரலில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் இணைந்தே வந்தது.
“உங்களுக்கு ஃப்ரீனா ஓகே. இல்லைன்னா இன்னொரு நாள் பார்த்துக்கலாம். “
“நோ நோ… உன் மனசு மாறதுக்குள்ள நாம போறோம். இன்னிக்கே. பீ ரெடி, வந்துட்டே இருக்கேன். உன் வீட்டுலதான் ப்ரெக் ஃபாஸ்ட். மோகன் கிட்ட நானே லீவ் சொல்லிக்கறேன்.”, என்று வைத்துவிட்டான்.
‘இவரோட…. என்ன ஒரு வேகம்’, என்று தலையை அசைத்தவள், பொங்கல் செய்து ஒரு தேங்காய் சட்னி அரைப்போம் என்று ஆரம்பித்தாள். ராகினிக்கு காலையில் அவசர வேலை என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.
அடுத்து வந்த ஐந்து மணி நேரம் சென்றதே தெரியவில்லை. ஒட்டி உரசி உட்கார்ந்து, பாப் கார்ன் ஊட்டி, ஒரு ஃபான்ட்டாவை இருவருமாக அருந்தி எதோ ஒரு ஆங்கிலப் படம் பார்த்தது முற்றுமுதலாக புது அனுபவம்.
உணவருந்த ஃபூட் கோர்ட் வந்து ஒரு மினி மீல்ஸ் வாங்கி அமர்ந்தவளின் முகம் இன்னுமே வெட்கம் கொண்டிருக்க, “ஜெயந்தி…. இப்படி போனா கண்டிப்பா ராகினி கண்டுபிடிச்சிடுவாங்க. “, என்றான் நமுட்டு சிரிப்புடன்.
“எப்படி?”
“கண்ணுல மயக்கம், முகத்துல ஒரு வெட்க்கம், எனக்கே உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போகத்தான் தோணுது”, என்றவனை சற்று திகைப்பாகப் பார்த்தாள் ஜெயந்தி.
“ஹே… சொன்னேன்… ரிலாக்ஸ். அதெல்லாம் கூட்டிட்டு போக மாட்டேன்.”
“ம்ம்…எல்லாம் உங்களாலதான். இதெல்லாம் எனக்கு புதுசு. ஃப்ரெண்ட்ஸ் அவங்க அனுபவம் சொன்னதை கேட்டதோட சரி. ட்ரை பண்ணனும்னு கூட தோணினது இல்லை”
“அடப்பாவி… நாம ஒன்னுமே பண்ணலை. கை பிடிச்சிட்டு உட்கார்ந்திருந்தோம். நீ சொல்றது கேட்டா என்னை தப்பா நினைச்சிடுவாங்க”, சிரித்தான் சஞ்சய்.
“ம்ம்… இன்னும் வேற என்ன பண்ண ஐடியா?”, குரலை தழைத்தவள், “பாப் கார்ன் ஊட்டி விடறேன்னு என் லிப்ஸ்டிக் எல்லாம் அழிச்சீங்க”, புகார் வாசித்தாள்.
“விரலாலதான். அதையும் சேர்த்து சொல்லு. என்னவோ கிஸ் பண்ணி அழிச்சிட்ட மாதிரி பில்-டப் குடுக்கற?”, அவளை ஏற்றி விட்டான்.
“ச்சேய்… பப்ளிக்ல போய்… சும்மா இருங்க. வேற பேசலாம்.”, அடக்கினாள். தமையாவும் குரு சாரும் வந்திருக்க மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை.
அன்றொரு நாள் அவரிடம் சண்டை கட்டியிருந்தாள். “உங்க ஆசை, உங்க தமையா ஆசைப்படி எங்களுக்குள்ள பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சுதில்லை சார்? ஏதோ ஒன்னு இரண்டு தரம் கண்ணு குளிர பார்த்துக்கணும்னு சொன்னாங்க சரி. இப்படி எங்களையே சுத்தி வந்தா என்ன அர்த்தம் சர்? நான் தள்ளிப் போனா சஞ்சய் ஏன்னு பார்க்கறார். உங்க அம்மா பக்கத்துலேயே இருக்காங்க, பார்த்து பேசுங்கன்னு அவர்கிட்ட சொல்லவா முடியும்? தனிமை தேவைப்பட்டா நாங்க தள்ளி போயிடுவோம்னு சொல்றதெல்லாம் ஆகாது சார். நீங்க இருக்கீங்களா இல்லையான்னு தெரியாம நான் படற அவஸ்த்தை எனக்குத்தான் தெரியும். எப்படியும் ஆஃபீஸ்ல எங்களை பார்த்துகிட்டுதான் இருக்கீங்க. அப்பறம் என்ன? இனி அவர் என் கூட வந்தா நீங்களோ, தமையா ஆன்ட்டியோ வரக்கூடாது. என் மேல சத்தியம் பண்ணுங்க”, என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
“நான் ஏற்கனவே சொல்லிட்டுதான் இருக்கேன் அவகிட்ட. ஆகட்டும் இனி நீயும் அவனும் வெளிய போனா வரமாட்டோம். ஏன் ஆஃபீச் ரூம்ல கூட நீங்க தனியா இருந்தா, அங்க இருக்கக்கூடாதுன்னு சொல்லிடறேன். சஞ்சய் மேல சத்தியம் பண்ணா, தமையா மீற மாட்டா”, என்ற வாக்குறுதிக்குப் பின்னேதான் சற்று இலகுவாக சஞ்சயுடன் பழக முடிந்தது.
அவள் முன்னே செல்ல, மோகனுடன் இணைந்து மூன்று மணி போல அலுவலகம் வந்தான் சஞ்சய். மோகன் ஜெயந்தியிடம், “என்ன ஜெயந்தி, காலையில் போன வேலை நல்லாபடியா முடிஞ்சுதா?”, என்று அப்பாவி போல கேட்க, வந்த சிரிப்பை அடக்கி “ஹ்ம்ம்… முடிஞ்சுது மோகன்”
“பாங்க் வேலையெல்லாம் சொன்ன டைம்ல முடிஞ்சதா சரித்திரமே இல்லை. ஆனா பாருங்க மோகன், கரெக்டா முடிச்சிட்டு இரண்டு மணிக்கு வந்துட்டா”, ராகினி சொல்லவும், “அதெல்லாம் சில பேர் ராசி ராகினி. குட், திரும்ப இப்படி திடீர் லீவ் எதுவும் இருக்காதில்லையாமா?”, நமுட்டுச் சிரிப்புடன் மோகன் கேட்க,
“அது பாங்க் மானேஜர் பொறுத்துதான் மோகன். திரும்ப கூப்பிட்டார்னா போக வேண்டியிருக்கும். ஆனா அட்லீஸ்ட் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ற மாதிரி பார்த்துக்கறேன்.” புன்னகை முகமாக பதிலளிப்பவளைப் பார்த்து,
“ம்ம்…பாங்க் அப்பாயின்மெண்ட்டெல்லாம் இந்த சனிக்கிழமைல வெச்சிக்க முடியாதாமா?”, என்று விடாமல் மீண்டும் கேட்க,
லேசாய் முறைத்தவள், “அது சாட்டர்டே அவரை பார்க்க வர கூட்டம் அதிகமா இருக்கு. வீக் டேல கொஞ்சம் ஃப்ரீயா பார்த்து பேச முடியுது. அதனலாதான் மோகன்”, என்று அவனுக்கும் லேசாய் ஒரு கொட்டு வைத்து சமாளித்தாள்.
“ஆமாமா, சனிகிழமையில பாங்க் பக்கம் போக முடியறதில்லை”, என்று வெள்ளந்தியாக ராகினியும் சொல்ல, அதற்கு மேல் அவளைக் கலாய்க்காமல் சஞ்சய் அறைக்குத் திரும்பியவன்,
“ம்ம்… நல்லாவே சமாளிக்கறாங்கடா உன் ஆளு.”, என்று அங்கே நடந்ததை சொல்லிச் சிரிக்க, “டேய்… பாவம்டா. விடு அவளை. நீ இப்படி அலம்பல் பண்ணா, இனி வீக் டேல கூப்பிட்டா வரமாட்டேன்னுவா. இன்னிக்கு வந்ததே உலகமகா அதிசயம்.”
“என்னது, திரும்பவுமா? மச்சி நாம பெரிய கம்பனி நடத்துறோம். ஞாபகம் இருக்கா?”, என்று கலாய்த்தான் மோகன்.
“நீ தானடா நான் எப்பவும் கம்பனி ஞாபகமாவே இருக்கேன். இந்த வயசுல ரிலாக்ஸ் பண்ணனும், எஞ்சாய் பண்ணனும்னு லெக்சர் அடிப்ப?”
“ம்ம்..அது நான் வெளிய சுத்த, நீ வேலை பார்க்கன்னு இருக்கும்போது. இப்ப நீ உன் காதலியோட சுத்திகிட்டு, நான் மட்டும் மாங்கு மாங்குன்னு வேலை பார்த்தா மனசு வலிக்குதுடா!” என்று தன் நெஞ்சை வேறு மோகன் நீவிவிட, சஞ்சையின் சிரிப்பு அறையை நிறைத்தது.
“அஞ்சலியோட உனக்கு செட் ஆகியிருந்தா, நீ ஒரு நாள், நான் ஒரு நாள்னு போயிருக்கலாம்.”, வேண்டுமென்றே சஞ்சய் கிண்டலடித்தான்.
“உன்னை அரை மணி நேரத்துல எடை போட்டு ஆஃப் பண்ணிட்டான்னு உனக்கு கோவம் மச்சி. ஜெயந்தி ஃப்ரெண்டு அவளை விட ஷார்ப்பா இருப்பான்னு தெரிய வேணாமா? “, சஞ்சய் கலாய்த்ததில் மோகன் காதில் புகை வந்தது.
அன்று ஜெயந்தி வீட்டில உணவருந்த சென்ற போது வழக்கம் போல அஞ்சலியிடம் கடலை போட மோகன் முயல, உன் மார்கெட்டிங், சேல்ஸ் வித்தையெல்லாம் என்னிடம் வேணாம் தம்பி என்று சிரித்துக்கொண்டே அவன் முயற்சிகளை தடுத்துவிட்டாள் அஞ்சலி. இதில் அவனை சீண்ட வேறு செய்ய, மோகனின் தன்மானம் தரை தட்டிப்போனது.
கிளம்பும்போது, “மோகன் ஒரு ஃப்ரீ அடவைஸ். நீங்க சொல்றதெல்லாம் அப்படியாங்க, நெஜமாவான்னு கேட்டுக்கற ஒரு வெள்ளந்தி பொண்ணுதான் உங்களுக்கு செட் ஆவா. அந்த மாதிரி ட்ரை பண்ணுங்க.”, என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தாள்.
சஞ்சய் அதிலிருந்து, “பேசாம அம்மாகிட்ட அந்த மாதிரி பொண்ணு தேட சொல்லு மோகன். உன்னை சாலஞ்ச் பண்ணாத பொண்ணுதான் உனக்கு செட் ஆவா. அஞ்சலி சரியாதான் சொல்லியிருக்கா. உன் ஈகோ எல்லாம் ஓரம் வெச்சிட்டு யோசி. வாழ்க்கையோட முக்கியமான முடிவு இது. மத்தவங்களுக்காக இல்லை உனக்கு எப்படி வேணும்ன்னு யோசி”, என்று அறிவுறுத்த ஆரம்பித்திருந்தான்.
அஞ்சலிக்கு சஞ்சயை பிடித்திருந்தது. “ம்ம்… நல்ல சாய்ஸ் ஜெயந்தி. உனக்கு ஏத்த மைண்ட் செட் இருக்க ஆளுமாதிரி தான் தெரியறார். இருந்தாலும் பொறுமையா பழகி பாரு. உடனே எந்த முடிவும் வேணாம் சரியா”, என்று ஒப்புதல் அளித்திருந்தாள்.
வாழ்க்கை அதன் போக்கில் இனிமையாகவே சென்று கொண்டிருந்தது. மோகன் அமெரிக்கா சென்று நடந்துகொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டுகள், அடுத்து என்ன, பழைய கிளையன்ட்டுகளின் புது தேவைகள் என்று பார்க்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.