நேற்று இரவே அஞ்சலியிடம்  பேசியிருந்தாள். சஞ்சய் ப்ரபோஸ் செய்தது, தான் சரியென்றது என்று ஆரம்பித்து, அடுத்த ஞாயிறு ப்ளான் வரை எல்லாம் சொல்ல, “அடிப்பாவி, ஓகே சொன்னதுமில்லாம, அவர் வீட்டுக்குப் போய் மொக்கிட்டு வேற வந்தியா?  நீ யாரு? என் ஜெய் எங்க?”, என்று பதறியவள் வீடியோ காலில் வந்துவிட்டாள். 

“சித்திக்கு தெரியுமா? சொல்லிட்டியா?  அந்த அப்சரஸ் என்ன ஆனா? அங்க ப்ரேக்-அப், உடனே உன்னை இங்க பிக்-அப்பா?”, என்ற சரமாரிக் கேள்விகளுக்கு, அதிகம் அலுவலகம் சார்ந்த விஷயங்களைக் கூறாது, குருபரன் தமையா பற்றியும் கூறாது, கொஞ்சம் தடுமாறித்தான் பதிலளித்தாள். 

“ஜெய்… கொஞ்சம் ஃபாஸ்ட்டா போற மாதிரி இருக்கா? ஸ்லோ பண்ணு, டைம் எடுத்துக்கோ. யோசி.”, என்றாள் அஞ்சலி சற்று  கவலையாக. 

“நீ அடுத்த சண்டே வீட்டுக்கு வா அஞ்சலி.  அவரைப் பார்த்து பேசு. உனக்குமே பிடிக்கும். மோகனும் வருவார். ஆஃபீஸ்லேயும் பெருசா எதுவும் காட்டிக்கப் போறதில்லை. கொஞ்ச நாள் போகட்டும்னுதான் சொல்லியிருக்கேன்.” என்றதும்தான் சற்று சமாதானம் ஆனாள். 

“ஹ்ம்ம்… சித்திகிட்டயும் இப்ப சொல்லாதே. உடனே கல்யாணத்துக்கு நெருக்குவாங்க. அவருக்கும் பேரண்ட்ஸ் இல்லைன்னு  சொல்ற. இனி அவர் வீட்டுக்கு தனியால்லாம் போகாதே. பொறுமையா போ”, என்ற அறிவுறுத்தலுடந்தான் அணைப்பை துண்டித்தாள். 

அவளது பயம் புரிந்தாலும், ஒரு கோழிக்  கறி  குழம்பு பாட்டிற்கே திருதிருத்தவனை நினைத்து இப்போதும் புன்னகைத்தாள். 

“என்ன ஜெய், வீக்கென்ட் நல்லா போச்சா? முகமெல்லாம் சிரிப்பா இருக்கு?”, என்று  ராகினி கேட்க, 

“ஹ்ம்ம்…”, என்று ஜெயந்தி சொல்லும் முன்னரே, “ஆமாமா., கோழிக் கறி குழம்பு, ஃபிஷ் ப்ரைன்னு பிரமாதமா போயிருக்கும். அதான் ப்ரைட்டா இருக்காங்க”, என்று வந்து நின்றான் மோகன். 

ராகினி “உங்களுக்கு எப்படி சார் தெரியும்?”  

“சித்தி வீட்டுக்கு போகப்போறேன்னு  சொல்லியிருந்தேன் ராகினி. அதுதான் மோகன் போட்டு வாங்கறார்”, என்று புன்னகைத்தவள், 

“எக் ஃப்ரைட் ரைஸ், மிளகு ரசம் அண்ட் கோழிக் கறி குழம்பு சார் நேத்து லன்ச் மெனு,  மூணுல ஒன்னு கரெக்ட்”, என்றாள். 

நமுட்டுச் சிரிப்போடு, அலுவலக  விஷயமாக தான் கேட்க வந்ததை கேட்டுவிட்டுச் சென்றான். 

ஒரு மணி நேரம் வேலை இழுத்துக்கொள்ள, காஃபி ப்ரேக் என்று எழுந்தவள்  காஃபியோடு இருக்கும் அவள் கோப்பையை படம் பிடிக்க, “என்ன ஜெய், புதுசா காஃபி கப்பை போட்டோ எடுக்கற?”, என்று பின்னே வந்தாள் ராகினி. 

‘இப்படி எல்லாரும் எங்களை சுத்தியே  இருந்தா என்னதான் பண்றது?’, என்று உள்ளுக்குள் அலுத்துக்கொண்டவள், “சித்திக்கு அனுப்ப. ஆஃபீஸ்ல காஃபி குடிக்கறேன். பால் உள்ள போகுதுன்னு ப்ரூஃப் அனுப்பறேன்”, என்று சமாளித்து, 

“காஃபியும் நானும் பான்ட்ரில இருக்கோம், பார்ட்னரைத்தான் காணலை”, என்ற  மெசேஜோடு சஞ்சய்க்கு அனுப்பி வைத்தாள். 

“குடுத்து வெச்ச காஃபி கப்!”, என்று  பெருமூச்சு சோக ஸ்மைலியுடன் உடனே பதில் வர ஜெய் முகத்தில் லேசான வெட்கப் புன்னகை. 

“ஓய்…. நான் இங்க என்ன சொல்லிட்டு  இருக்கேன், நீ பாட்டு போனை பார்த்து சிரிச்சிட்டு இருக்க? என்ன விஷயம்?”, என்று ராகினி அதட்டவும் தன் நிலை உணர்ந்தவள், “இல்ல, சித்தி நம்பிட்டேன்னு ஒரு மெசேஜ் போட்டாங்க, அதைப் பார்த்து சிரிச்சேன். சாரி. நீ சொல்லு.” 

 மதியம் உணவு நேரம் அவசரமாக வந்து  டப்பாவில் இருந்ததை அள்ளித் தின்றாள் மஞ்சு. 

“ஏண்டி இப்படி அடைச்சிக்கற. கொஞ்சம் மெதுவாதான் சாப்பிடேன்.” 

“இல்ல ஜெய்க்கா. மதியம் இரண்டு  மணிலர்ந்து அமெரிக்க ப்ராஜெக்ட் டெஸ்டிங் ஓடும். சஞ்சய் சார் வரதுகுள்ள இன்னும் கொஞ்சம் ரெடி பண்ணனும்.”, என்றாள் தண்ணியைக் குடித்து உணவை முழுங்கியபடியே. 

“அந்த புது க்ளையண்ட்டோடது. நவீன் பய க்ளையன்ட் டீமோட அங்கிருப்பான். இங்கருந்து நாங்க, சஞ்சய் சர் கூட சேர்ந்து  டெஸ்ட் பண்ணனும்.” 

“என்ன டெஸ்ட் பண்ணுவீங்கடா?” 

“செஞ்சு வெச்சிருக்க செக்யூரிட்டி  பாதுகாப்பெல்லாம் உடைக்க முடியுதா, திடீர்னு உள்ள ஹாக் பண்ணா, கண்டுபிடிக்க முடியுதான்னு பல டெஸ்ட் இருக்கும்கா. டேட்டா எல்லாம் கலெக்ட் பண்ணி, அனலைஸ் செஞ்சு ரிப்போர்ட் ரெடி செய்யணும். நைட் பூரா ஆகும். “, என்று விளக்கினாள். 

“ஓ… பாஸ் இருப்பாரா அவ்வளவு நேரமும்? உனக்கு கூட யார் இருப்பாங்க?” 

அதில் சிரித்தாள் மஞ்சு, “இருப்பார்க்கா. நாங்க எல்லாரும் கிளம்பி பத்திரமா வீடு போற வரைக்கும் ட்ராக்  பண்ணுவார். சில நேரம் மோகன் சார் பார்த்துக்குவார். அதெல்லாம் சேஃப்தாங்க்கா. எப்படியும் இன்னிக்கு நாங்க கிளம்பறதுக்கு விடிஞ்சிடும். ப்ரஷ், பேஸ்ட் எல்லாம் எடுத்துட்டுதான் வந்திருக்கோம்.” 

அதை உள்வாங்கியவள், எப்படியும் தானும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் அவனும்  பிசியாக இருப்பான் என்பதில் சற்றே வாட்டம் கொண்டாலும், தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள். 

வேகமாக உள்ளே நுழைந்த சஞ்சய் அவன் அறைக்குச் செல்லும் வழியில்  பக்காவாட்டில் திரும்பி தன்னைப் பார்த்திருக்கும் பாவையின் புறம் லேசாக தலையாட்டிச் சென்றான். 

பின்னோடே அவன் அறைக்குச் செல்லத்  துடித்த கால்களை அடக்கி, கணினியில் கவனம் வைத்தாள். ராகினி அழைப்பு வர சஞ்சய் அறைக்குள் சென்றாள்.  

“ஹூம் அவளை மட்டும் கூப்பிட்டு பேச  முடியும்”, என்று பொறுமிய மனதை அடக்க, சற்று  நேரத்திற்கெல்லாம், “உன்னை வரசொல்றார் ஜெய். என்ன கேட்கணுமோ இப்பவே கேட்டுகறதாம். டெஸ்டிங் ஆரம்பிச்சப்பறம் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதாம். போ”, என்று அமரவும், ஒரு சிறு நொடிப்புடந்தான் உள்ளே எழுந்து சென்றாள். 

“ஜெயந்தி”, என்ற அவனது ஆழ்ந்த  அழைப்பே அவளை நிலைப்படுத்தியது. 

“ம்ம்” 

“உட்கார். சொல்லணுமா?” 

உதடு பிதுக்கியவள் அவன் எதிரில் அமர்ந்தாள். “சாப்டீங்களா சஞ்சய் ?” 

“ம்ப்ச்…உங்கூட சாப்பிடணும், சீக்கிரம் வரணும் நினைச்சேன்.  எங்க முடியுது?” 

“சாப்டீங்களா இல்லையா?” 

“முறைக்காதே. சாண்ட்விச் சாப்பிட்டேன்.  இப்ப வரும்போது என்ன டல்லடிச்ச? ராகினியை முதல்ல கூப்பிட்டதுனாலயா?”, அவ்வளவு கவனிக்கிறானா என்று நினைத்தவள், 

“அதுதான் கூப்பிடீங்கல்ல, அப்பறம் என்ன?”, முறுக்கினாள். 

“ம்ம்… உன்னை மட்டும் தனியா கூப்பிட்டு பேச முடியாதே. அதான் முதல்ல அவங்களை கூப்பிட்டு பேசிட்டு கொஞ்சம்  பொறுமையா பேசலாமேன்னு”, என்று லேசாக கண்ணடிக்க, முறுவலித்தாள். 

“ஓ…அப்படி. ம்ம் புரிஞ்சுது. நீங்க  இல்லைன்னு தெரிஞ்சாலும் ரூம கதவை கதவை பார்த்துகிட்டு இருந்தனா. வந்ததும் என்னைக் கூப்பிடலையேன்னு வருத்தமா போச்சு”, நேர்மையாக தன் தேடலை ஒத்துக்கொண்டாள். 

அதில் மகிழ்ந்தவன், “வா, வெளிய போய் சொல்லிடுவோம்.  அப்பறம் யார் என்ன நினைச்சான்னு நீயே உரிமையா வந்து உட்காரலாம், இல்லை உன் டேபிளை இங்க மாத்திக்கலாம். அங்க ஜன்னலோரம் போட்டுருவோமா? “, திரும்பி பார்த்து சீரியசாக சஞ்சய் யோசிக்க, 

“அச்சோ…. இருங்க சஞ்சய். இந்த  தகிடுதத்தமும் கொஞ்சம் அனுபவிக்கலாம்.”, என்று காஃபி கப் போட்டோ எடுத்த போது ராகினி கேட்டதை சொல்லிச் சிரித்தாள். 

“ஹ்ம்ம்….உன் மெசேஜ் வந்தப்போ  கிளைய்ன்ட் சீரியசா எதோ பேசிட்டு இருந்தார். எனக்கா, என் மடியில உன்னை உட்கார வெச்சு, அந்த காஃபியை நீயும் நானும் ஷேர் பண்ணி குடிச்சா எப்படியிருக்கும்னு தாட் போயிட்டிருந்தது”, சஞ்சய் சொல்ல, “அச்சோ…. எங்க  வெச்சு என்ன பேசறீங்க”, அதட்டினாள். கண்டிப்பாக தமையா அங்கேதான் இருப்பார் என்பதில் லஜ்ஜையாகிப் போனது. 

“அட… நாம மட்டும்தான இங்க இருக்கோம். இது கூட பேசக் கூடாதுன்னா எப்படி  ஜெயந்தி? வேற யார்கிட்ட நான் சொல்றதாம்?” 

அவன் கேட்பதில் நியாயம் இருந்தாலும்,  உங்கம்மா முன்னாடி பேசற பேச்சா இது என்று கேட்க முடியாத நிலையில், “நான் சீட்டுக்குப் போய் உட்கார்ந்துட்டு இதை நினைச்சு சிரிச்சிட்டு இருந்தா ராகினிக்கு சந்தேகமாயிடும். விடுங்க. நான் அப்டேட் குடுத்துட்டு கிளம்பறேன். இன்னிக்கு நைட் முழுக்க வேலையிருக்காமே? மஞ்சு சொன்னா.” 

பேச்சை மாற்றியவள் அலுவல் சம்மந்தமாக பேசிவிட்டு கிளம்பினாள். மாலை நாலரை போல ராகினியே, “ஜெய் காஃபி ப்ரேக் எடுக்கலாம் வா”, என்று செல்ல, பின்னே நுழைந்தவள் கண்கள்  சர்வர் ரூம் பக்கமாகத்தான் சென்றது. 

அவள் நிழைந்து காஃபி போடும்போதே, “ப்ளீஸ் எனக்கும் யாராவது காஃபி போட்டு வைங்களேன் நான் வந்து எடுத்துக்கறேன்”, என்று உள்ளே இவர்களைப் பார்த்து  சொன்னவன், அப்படியே வாஷ்ரூம் பக்கம் செல்ல, 

“பாவம் சஞ்சய் ரொம்ப பிசி போல  இன்னிக்கு. நகரு. நான் போடறேன். நீ உன் காஃபியை குடி”, என்றாள் ராகினி. 

“அதுதான் நான் செய்யறேனே. மெஷிந்தான போடுது. இரண்டா போடறேன்”, என்று ராகினியை தடுத்தவள், தானே அவனுக்கு ஒரு கோப்பையை எடுத்து ஒரு ஸ்பூன்  சர்க்கரையிட்டு கலந்து முடித்தாள். 

உள்ளே நுழைந்து தனக்கானதை எடுத்துக்கொண்டவன், “தாங்க்ஸ் ஜெயந்தி”, என்று புன்னகத்தான். 

“சர்க்கரை சரியா இருக்கா பாருங்க சஞ்சய்.”, ராகினி கூற ஒரு வாய் குடித்தவன், “பெர்ஃபெக்ட்”, என்று கிளம்ப, 

“சஞ்சய் ஒரு ஸ்பூன் தான் போட்டுப்பாரா? உனக்கு எப்படி தெரியும் ஜெயந்தி? ஒரு  வருஷமா இங்க இருக்கேன், எனக்கே தெரியாது”, ராகினி கேட்க, 

“அது… அன்னிக்கு நான் இரண்டு ஸ்பூன் போட்டுக்கவும் பார்த்துட்டு இவ்வளவு  ஆகாதுன்னு லெக்சர் குடுத்தார். அதுனால தெரியும். வா சீட்டுக்குப் போலாம்.”, கிளம்பியவள் மைன்ட் வாய்ஸெல்லாம், ‘திரும்பின பக்கமெல்லாம் கண்ணி வெடியா இருந்தா  நான் என்னன்னுடா சமாளிப்பேன்’, என்று ஓடியது. 

யார் கிட்ட எப்ப என்னத்தை சொல்லி  மாட்டப்போறேனோ தெரியலை என்ற புலம்பலுடனேயே வேலையை தொடர்ந்தாள். 

கிளம்பும் வரையிலுமே சஞ்சய் கண்ணில்  படவில்லை. மோகனையும் காணவில்லை. சஞ்சய்க்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு, வீட்டிற்கு வந்தவளுக்கு, மதியமே சரியாக உண்ணாதவன், இரவும் வேலை பிசியில் பீட்சா பிரியாணி என்று எதாவது டீம் ஆர்டர் செய்வதைத்தான் உண்பான் என்று தோன்ற இருப்பு கொள்ளவில்லை. 

சூடாக சாதம் சற்று குழைய வைத்து, அவன் விரும்பிய மிளகு ரசம் விட்டு நன்றாக கரைத்து சூடு தாங்கும் ஒரு அகன்ற  தெர்மாஸ்சில் வைத்தாள், அடுத்து கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து கொஞ்சம் போல தயிர் சாதாம் தளதளவென்று பிசைந்து, ஒரு உருளை வறுவலுடன், கட்டி, சாப்பிட ஏதுவாக ஸ்பூன் வைத்து, டன்சோவில் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாள். 

டெலிவரி ஆகிவிட்டது தெரிந்ததும், அவன் அழைப்பிற்கு காத்திருக்க, கூப்பிட்டது மோகன். 

“ஏம்மா… உன் ஆளுக்கு மட்டும் சாப்பாடு  அனுப்பறியே, மத்தவன்லாம் என்ன ஆனா என்னன்னு கவலையே இல்லைல்ல?” 

மோகன் குரலின் காரத்தில், “அச்சோ…அப்படியில்லை. நீங்க ஆஃபீஸ்  வருவீங்கன்னு தெரியாதே. நான் கிளம்பற வரை வரலைன்னவும் நீங்க வீட்டுக்கு போயிட்டீங்கன்னு நினைச்சேன் மோகன்” 

“ம்ம்…  நண்பன் வேலையா இருப்பானே  அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தா, வாசல்ல செக்யூரிட்டி “சஞ்சய் சார் வீட்டுலர்ந்து சாப்பாடு வந்திருக்குங்கறான்” 

“என்னடா அதிசயம்னு பார்த்தா,  அனுப்பினது நீ, அதுவும் அளவா ஒரு ஆளுக்கு. அதையும் அவனேதான் மொக்கறான். பார்த்துக்கோ, டேஸ்ட் பண்ணுடான்னு கூட தரலை”, பொறுமலோடு வீடியோ காலில் வர, சஞ்சய் உணவருந்திக்கொண்டிருந்தது தெரிந்தது. 

“தாங்க்ஸ் ஜெயந்தி. அருமையா இருக்கு”,  என்ற சஞ்சய் விலாவில் குத்திய மோகன், “இருக்கும் மச்சான் ஏன் இருக்காது. நடக்கட்டும் நடக்கட்டும்”, புகைய, 

“இல்லை மோகன், அவர் மதியமே  சாண்ட்விச்தான் சாப்பிட்டாராம். இப்பவும் டின்னருக்கு எப்படியும் பீட்சா, பிரியாணின்னுதான் ஆர்டர் பண்ணுவாங்க. ஒரு வேளை வீட்டு சாப்பாடு போகட்டும்னுதான்”, என்று ஜெயந்தி சொல்ல, 

“ஹே… ஆமா என் ஆளுக்கு நான் அனுப்புவேன்னு  தைரியமா சொல்றதை விட்டுட்டு, இவன் கிட்ட எதுக்கு ரீசன் சொல்லிகிட்டு  இருக்கற?”, சஞ்சய் காலரை தூக்கிவிட்டு  மோகனிடம் பழிப்பு காட்ட,  

“நேரம்டா  நேரம். ஃபிகர் வந்ததும் நண்பன் தூரமா போயிட்டான்ல?”, இல்லாத  கண்ணீரை மோகன் சுண்டிவிட, “அப்படியெல்லாம் இல்லை. நீங்க சன்டே வீட்டுக்கு லன்ச்சுக்கு வாங்க மோகன். “, என்று அழைப்பு விடுத்தாள். 

“உன் ப்ரெண்டும் வராங்களாமே? அழகா  இருப்பாங்களா? சிங்கிளா?”, ஆர்வமாய் மோகன் வினவ, அவனது அதீத ஆர்வத்தில் பொங்கிச் சிரித்தாள் ஜெயந்தி.