அத்தியாயம் – 16 

அன்றைய பொழுது மிகமிக இனிமையாகக் கழிந்தது. “அப்படியே அம்மா வெக்கற ரசம் மாதிரியே இருக்கு ஜெயந்தி. செம்ம”, சந்தோஷத் திகைப்பில் இருந்தவன், அவள் கைவிரல்  பிடிக்க, “சஞ்சய்….”, என்று ஒரு சின்ன சிரிப்புடன் கையை உருவிக்கொண்டாள். 

விட்டிருந்தால் விரல்களுக்கு முத்தம்  வைத்திருப்பான் போல. ஆனால் கண்டிப்பாக அங்கே குருபரனும் தமையந்தியும் இருப்பார்கள் என்பதால் ஜெயந்தி கூச்சம் கொண்டிருந்தாள். 

அவள் மறுத்ததில் சற்று தலை சாய்த்து பார்த்த சஞ்சய், “ஜெயந்தி?” என்று கேட்க, கண்களை  சிமிட்டியவள், “அது…டிஃபால்ட் மோட். கொஞ்சம் பழகணும்”, என்று சமாளித்தாள். 

“ம்ம்…பழகிக்கலாம்”, என்றவன் அடுத்து வேறு  பேச, உணவு, பாட்டு என்று பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. 

பூரித்து போய் பார்த்திருந்தனர் பெரியவர்கள். இருவருமாக உண்டு முடித்து, பேசிக்கொண்டே மிச்சத்தை சிறு டப்பாக்களில் இட்டது, அவள் எடுத்து வந்த மீன் வறுவல் டப்பாவில், சிக்கன் குழம்பை சஞ்சய் ஊற்றி வைத்தது என்று இயல்பாக செய்ய, தமையா, “ரொம்ப ரொமப் சந்தோஷமா இருக்கு குரு. என் பிள்ளை இப்படித்தான் குடும்பம்  நடத்துவான்னு இருந்து பார்த்துட்டேன். “, என்று குருவிடம் மகிழ்ந்தார். 

ஹாலில் அமர்ந்து சஞ்சய் சிறு வயது ஆல்பம் ஒன்றை பார்த்து பேசிக்கொண்டிருந்தாள் ஜெயந்தி. ஆல்பம் எடுக்க மேலே வா என்று சஞ்சய் அழைத்தபோது தலையை மறுப்பாக அசைத்தவள், “உரிமையோட வரும்போது முதல் முறை பார்க்கற அந்த ஃபீல் கெடுக்க வேணாம்  சஞ்சய். நீங்க போய் எடுத்துட்டு வாங்க”, என்று அனுப்பியிருந்தாள். 

மாலை மணி நாலைத் தொடவும், குட்டி சஞ்சயை சிலாகித்து, டீனேஜ் சஞ்சயை கலாய்த்து, அமெரிக்க சஞ்சயை கண்ணாலே கபளீகரம் செய்து முடித்து, ஒரு சிறு பெருமூச்சுடன், “எல்லா ஸ்டேஜ்லேயும் அழகா, க்யூட்டா இருந்திருக்கீங்க சஞ்சய் ஆனா அந்த நாலு வயசு குட்டி பையன் முதல் நாள் ஸ்கூல் போற போட்டோ ச்சோ ஸ்வீட்”, என்று மீண்டும் ஒரு முறை அதை திருப்பிப் பார்க்க, சிரித்துக்கொண்டே, “நீயே வெச்சிக்கோ. நிஜத்துல ஒன்னு அதே மாதிரி வரும்போது இன்னொரு போட்டோ எடுத்து கம்பேர் பண்ணுவோம்”, என்று  அந்த போட்டோவை எடுத்துத் தர, நிஜத்தில் வருமா என்று புரியாது ஒரு நொடி பார்த்தவள், இருவருக்கும் அவனை போலவே ஒரு மகன் பிறந்தால் என்று சொல்கிறான் என்று புரிந்த நொடி “ஓஹ்..”, என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை. 

கண்ணுக்கு தெரிய மாட்டார்கள் என்று  தெரிந்தாலும், “அச்சோ சாருக்கும் ஆன்ட்டிக்கும் கேட்டிருக்குமோ”, என்று தோன்ற உதடு கடித்தவள், “ச்சூ”, என்று எழுந்துவிட்டாள். 

“போட்டோ எடுத்து வாட்சப்ல அனுப்புங்க போதும். ஆல்பத்துலருந்து எடுக்க வேணாம். வாங்க காஃபி போடலாம். நானும் கிளம்பணும்”, என்று  கூறிக்கொண்டே கிச்சன் புறம் செல்ல, அவள் வெக்கம் பார்த்து ஒரு லேசான சிரிப்புடன் அவளைத் தொடர்ந்து வந்தான் சஞ்சய். ‘என்ன இதுக்கே ஓடறா? உன் பாடு கஷ்டம்தான் போலடா சஞ்சய். மோகன் அனுப்பற பாட்டெல்லாம் இவளுக்கும் அனுப்பி வைக்கணுமா?’, என்ற நினைப்பில் புன்னகை மேலும் விரிந்தது. 

பால் காய்ச்சிக்கொண்டிருந்தவள் அருகில், “ஜெயந்திமா, கொஞ்சம் பால் சாமிக்கு  வைப்பியாம். அப்பறம் நால்ரை ஆறு  இராகு காலமாம் அதனால ஆறு மணிக்கு மேல கிளம்புவியாம்”, குருபரன் ஒப்பித்தார்

“சார்… உங்க முன்னாடி சஞ்சய் பேசறதுக்கே  சங்கடபட்டுகிட்டு இருக்கேன். ப்ளீஸ் .. இதெல்லாம் வேணாம்னு சொல்லுங்க.  ரசத்துக்கே மாட்டி அப்பறம் சமாளிச்சேன். இந்த இராகுகால சென்ட்டிமென்டெல்லாம் வேணாம். லேட்டானா அவரே வந்து  விடறேன்னுவார், தேவையில்லாத  அலைச்சல். கொஞ்சம்  ஃப்ரீயா விடுங்களேன் சர் எங்களை”, முணுமுணுத்தாள். 

“சரிமா… நாங்க வெளிய இருக்கோம். நீ  சந்தோஷமா பேசிகிட்டு இரு”, என்று கூறும்போதே 

வாசலருகே வந்த சஞ்சய், “என்ன முணுமுணுக்கற? என்ன வேணும் ஜெயந்தி?”, எனவும் திக்கென்றிருக்க, ஒரு மூச்சை உள்ளிழுத்து நிதானித்தவள், “உங்களுக்கு எவ்வளவு சர்க்கரை போடறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். இதைக்கூட கவனிச்சதில்லையேன்னு எனக்கு நானே பேசிகிட்டு இருந்தேன்”, என்று  சமாளித்தவள், “எத்தனை ஸ்பூன்?”, என்றாள். 

“எனக்கு ஒரு ஸ்பூன், உனக்கு இரண்டு”,  என்றான் நிலைப்படியில் சாய்ந்தபடி. 

“ஓ… எப்படி தெரியும்?”, எடுத்த  கோப்பைகளில் அவன் கூறிய அளவு  சர்க்கரையை இட்ட படி கேட்டாள். 

“ஆஃபீஸ்ல பார்த்திருக்கேன்”, என்று  சொல்ல அடப்பாவி என்று ஆச்சரியமாக  பார்த்தாள் ஜெயந்தி. 

“கேடிதான் போங்க. எனக்குத்தான் எதுவும் தெரியாம கொஞ்சம் தத்தியா  இருந்திருக்கேனா?”, அவனுக்கான  கோப்பையை தந்தபடியே பாவமாய் கேட்க, “நீ ராகினி இல்லை மஞ்சுவோட சீரியசா  எதாவது பேசிட்டு இருப்ப.  நான் வந்ததை  எங்க பார்த்த? அப்படியே பார்த்தாலும்,  லேசா ஒரு ஸ்மைல் அப்பறம் அவங்க  பக்கம் திரும்பிப்ப. நான் தான் பாவமாய்  திரும்பி வருவேன்”, சோகம்போல சஞ்சய் சொல்லவும், ஜெயந்திக்கே  பாவமாகிவிட்டது. 

கண்டிப்பாக குருபரன் அங்கே இருக்கமாட்டார் என்று தெரிந்து, சற்றே நெருங்கி வந்து அவன் மோவாயைப் பிடித்து லேசாய்  ஆட்டியவள், “இனிமே அலர்ட் மோட்ல இருக்கேன் சரியா? சாரி”, என்று கொஞ்ச, அவள் விரல்கள்  பற்றியவன், அவளிடமிருந்து பார்வை  விலகாது, மெல்ல விரல் நுனிகளை முத்தமிட்டான். 

கன்னம் சிவந்தாலும் பாவை இம்முறை கைகளை விலகிக்கொள்ளவில்லை. மீசை முடிகள் விரல்களை உரச, அவள் கைகளின் நடுக்கம் உணர்ந்தான் சஞ்சய். மெல்ல அவள் இதழ்கள் பிரிய, அவன் கண்கள் கவனம்  அங்கே சென்றது. பற்றியிருந்த ஒரு  விரலின் சதைப்பகுதியை அவனையும் மீறி லேசாய் கடிக்க, திகைத்த ஒரு மூச்சை  உள்ளிழுத்தாள் ஜெயந்தி. விரிந்த அவளது பார்வையில் தன்னை தொலைத்து,  அவளை நெருங்கி வந்தவன் மார்பில் ஜெயந்தியின் கை படர  நிதானித்தான். அவன் மார்பில்  பற்றுதலுக்காக கை வைத்தாளோ இல்லை தடுக்க  வைத்தாளோ தெரியாது.  

கிறங்கும் கண்களை மூடி  நிதானித்தவனுக்கு மார்பில் அவள் கை  சூட்டினை உணர்வதுமே இனிமையான  அவஸ்த்தையாகத்தான் இருந்தது. 

அவள் விரல்களை விட்டவன், மார்பில் இருந்த அவளது கையைப்பற்றி லேசாய் அழுத்தம் கொடுத்து மெல்ல விலக்கி, “நீ விலகி ஓடுறது கரெக்ட்தான் ஜெயந்தி.  இது கொஞ்சம் டைனமைட்தான். காஃபி  எடுத்துட்டு வா, ஆறிடப்போகுது”, என்று  சற்றே கரகரத்த குரலில் கூறியவன் விலக, வேகமாக அடித்துக்கொண்டிருக்கும்  இதயத்தை நீவிக்கொண்டே அடுப்பருகே சென்றவளுக்கு நாக்கு மேலண்ணத்தில்  ஒட்டிக்கொண்டது போலிருந்தது. வெளியே சென்று அவனை ஏறிட்டு பார்க்கவே  வெட்கமாக இருந்தது. 

ஐந்து மணி போல, ஓலா எடுப்பதாகக் கூறியவளைத் தடுத்து, சஞ்சயே அவளை விட்டு வரக் கிளம்பினான்.  

“நேரம் போனதே தெரியலை சஞ்சய்” ,  என்று அமர்ந்தவளிடம் ஒரு புன்னகையை சிந்தியவன், “இந்த நாளை இவ்வளவு அழகாக்கினது நீதான் ஜெயந்தி. ஒரு ரிலாக்ஸ்ட் சண்டே  இப்படித்தான் நல்ல சாப்பாடு, பாட்டு, பேச்சு ஒரு தோழமைன்னு இருக்கணும்னு நான் ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை காட்டியிருக்க”, என்றவன், “உனக்கு ஓகேவா? அடுத்த வீக்கென்ட் நீ ப்ளான் பண்ணு, உனக்கெப்படி இருக்கணும்னு தோணுதோ, அப்படி ஸ்பென்ட் பண்ணலாம்.” 

அவன் பேசியதில் நெகிழ்ந்தவள், “எனக்குமே பெருசா வெளிய சுத்தறது  பிடிக்காது சஞ்சய். மே பீ நீங்க என் அபார்ட்மென்ட் வாங்களேன். பாவம் மோகனும்  வரச் சொல்லுங்க. நான் என் ஃப்ரெண்ட்  அஞ்சலியையும் வரச் சொல்றேன். அவளும் கலகலப்பா பேசுவா.” 

“ஓ… நாம தனியா இருக்க வேணாமா  உனக்கு?”, என்றவன் குரலில் ஒரு லேசான ஏமாற்றம். 

இங்க குத்த வெச்சு உட்கார்ந்திருந்த உங்க அம்மாவும் அவங்க க்ரஷ்ஷும் அங்கேயும் வந்துடுவாங்க. வேணாம்னா, கண்ணு  குளிர பார்த்துக்கறேன் அது இதுன்னு  செண்டியா வேற தாக்குவாங்க. இதுல  தனியா எங்க என்று யோசித்தவள்,  அவங்களுக்குத் தெரியாம எப்படியாவது  சஞ்சயை தள்ளிட்டுப் போகணும் என்று யோசித்தாள். 

அவள் பதில் சொல்லாமல் யோசிப்பதில்  சங்கடமாக உணர்ந்தவன், “இட்ஸ் ஃபைன் ஜெயந்தி. நோ இஷ்யூஸ்”,  என்று காரை செலுத்துவதில் கவனம்  வைத்தான்.  

காரிலும் தமையா இருப்பாரரோ என்று யோசித்த ஜெயந்தி, “கொஞ்சம் ஸ்லோவா போலாமே சஞ்சய்”, என்று முறுவலித்தாள். “ஹ்ம்ம்”, என்றவன், “அப்போ ஆஃபீஸ்ல யாருக்கும் தெரியவேணாம் இல்லையா?” 

அதைப் பற்றி அதுவரை யோசிக்காதவள், “ஓஹ்….ஆமா. அது, நீங்க  தீக்ஷனாவைத்தான் கல்யாணம்  பண்ணிக்கப் போறீங்கன்ற மாதிரி  எல்லாரும் நினைச்சிருக்காங்க. இப்ப  உடனே இந்த மாதிரின்னு தெரிய  வேணாமே.” 

அவளை உற்று நோக்கியவன், “தீக்ஷனாவை வேணாம்னு சொன்ன உடனே உங்கிட்ட நான் ப்ரபோஸ் பண்ணதுதான் நீ தயங்கறதுக்கும் காரணமா ஜெயந்தி? “,  என்று கேட்டதில் ஜெயந்திக்கு கோவம்  வந்தது. 

“அப்படித்தான் நினைக்கறீங்களா? ஒரு  வாரம் முன்ன வரை நீங்க என் பாஸ்,  உங்களுக்கு ஆள் இருக்குன்னு  நினைச்சிட்டு இருந்தேன்” 

“இப்பவும் நான் உன் பாஸ், இப்பவும்  எனக்கு ஆள் இருக்கு”, என்று இடை புகுந்தான் ஒரு மந்தகாசப் புன்னகையுடன். என்னவோ அவளது கோவம் ஒரு இதத்தை தந்தது. 

அவளின் முறைப்பை வாங்கிக் கொண்டவன், “ஓகே…ஓகே. உனக்கு கொஞ்சம் டைம்  வேணும். ஃபைன் எடுத்துக்கோ. ஆனா  மத்தவங்க இருந்தாலும் இல்லாட்டாலும்,  ஆஃபீஸ் இல்லாத நேரத்துல நம்ம ரிலேஷன்ஷிப் நானும் மறைக்க மாட்டேன்.  உன்னையும் மறைக்க விடமாட்டேன்.” 

அவன் பேசியதில் புன்னகைத்தவள், “ம்ம்… டீல்” என்று ஒத்துக்கொண்டாள். 

திங்கள் காலை அலுவலகம் வந்தவுடன்  கண்கள் சஞ்சய் அறையைத்தான் தேடியது. காலையில் ஒரு க்ளையண்ட் மீட்டிங்  இருக்கிறது, மதியம் போல்தான் வருவேன் என்று நேற்றே சொல்லியிருந்தும்  அவனைத் தேடும் மனதை நினைத்துச்  சிரித்தாள்