“லுக்கிங் ப்யூட்டிஃபுல். வா வா”, என்றவன், உள்ளே அழைக்க, கவனமாக வலது கால் வைத்து கேட்டைக் கடந்தாள். ஒரு புறம் அவன் காரை பார்க் செய்திருக்க, மிச்ச இடம் விசாலமாக இருந்தது. தனி வீடு. முன்புறம் அலங்கார டைல்ஸ் ஒட்டி , சாம்பலும் வெள்ளையுமாக இரு வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கபட்டு கம்பீரமாக இருந்தது.
“முகப்பே அழகா இருக்கு சஞ்சய்”, என்பதில் மகிழ்ந்தவன், “தாங்க்ஸ். என்னோட டிசைன்தான். வா வா… உள்ள போகலாம்”, என்றவன் காம்பவுண்ட் சுவர் தாண்டி வலது புறம் இருந்த வீட்டைக் காட்டி, “அது கங்கா சர் வீடு. இப்ப அவரும் ஆன்ட்டியும் பொண்ணோட இருக்கதால பூட்டியிருக்கு, இல்லைன்னா இன்னேரம் ஆன்ட்டி அந்த பால்கனியிலிருந்து பார்த்துட்டு யாரு என்னன்னு கேட்க வந்திருப்பாங்க”, என்று சொல்லிச் சிரித்தபடியே வீட்டின் முன் கதவை திறந்து உள்ளே அழைத்தான்.
புடவையை லேசாய் உயர்த்தி உள்ளே வலது காலை வைத்து வர, அதை கவனித்து ஒரு புன்னகையை சிந்தினான் சஞ்சய். “ஆரத்தி எடுக்கணுமா?”, என்று கேட்க, “அதுக்குன்னு ஒரு நேரம் வரும், அப்போ எடுத்துக்கலாம்”, என்றாள் பதில் புன்னகையோடு.
வரவேற்பறை, சமையல், டைனிங், பூஜை என்று அங்கிருந்தே காட்ட, ஜெயந்தி தன்னால் பூஜை அறை நோக்கிச் சென்றாள். உள்ளே முருகன் படமும், காமாட்சி விளக்கும் இருக்க, பக்கவாட்டில் ஒரு நடுத்தர வயது தம்பதியர் படம் பெரிதாக இருந்தது.
தமயந்தியை பார்த்தாள். அழகாகத்தான் இருந்தார். இளமையில் இன்னுமே அழகாக இருந்திருப்பார் போல. எந்த முகப்பூச்சும் இல்லாத, சாந்தமான முகம் சற்றே குண்டு கன்னங்களும் லேசான புன்முறுவலுமாக இருக்க, அவன் தந்தையோ பார்பதற்கு கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசராகத்தான் இருந்தார்.
“ம்ம்…சின்ன வயசுல அப்படித்தான் நினைச்சிருந்தேன். நிறைய வெளியூர் போயிட்டு வரதுனால அம்மாவோடதான் நான் க்ளோஸ். அப்பா அவர் இருக்கும்போது அவர் டேஸ்ட்டுக்கு எல்லாம் இருக்கணும்னு எதிர்பார்ப்பார். அதுல எதாவதுன்னாதான் அம்மாவை கோவிப்பார். நான் பெருசா எதுவும் சேட்டையெல்லாம் பண்ண மாட்டேன், சோ என்னோட எப்பவும் பாசமாதான் இருப்பார். பிசினஸ் லாஸ் ஆனதுக்கு அப்பறம்தான் நிறைய என்னோட நேரம் செலவிட்டார், பேசினார், க்ளோஸ் ஆனார். அப்பவும் சமாளிச்சுக்கலாம்டா, நீ வளர்ந்து வா. எல்லாத்தையும் சேர்ந்து மீட்டுக்கலாம்னு பாசிட்டிவ்வாதான் பேசுவார். பட்…”, உதடு கடித்தவன்,
“ஒரு நாள் சூசைட் பண்ணிகிட்டார்”, என்றதும் அதிர்ந்தாள் ஜெயந்தி. “ஓஹ்,…சாரி சஞ்சய்”, என்று அவன் புஜம் பற்ற, அதை தட்டிக்கொடுத்தவன், “அவர் அப்படி செய்வார்னு நினைக்கவே இல்லை. ஆனா துரோகம் ரொம்ப வலிக்குதுடான்னு எழுதி வெச்சிட்டு, அவர் ஸ்கூட்டரை எடுத்துட்டு போய் ஆக்சிடென்ட் ஆகிட்டார். அவர் என் ரூமல எழுதி வெச்சதை நான் யாருக்குமே சொல்லலை. எனக்கு போன் வந்த போதுதான் எழுந்தேன். அவர் இறந்துட்டார்னு தெரிஞ்சு பதறி எழுந்து கிளம்பும்போதுதான் என் பர்ஸ் அடியில் இருந்துச்சு லெட்டர். அம்மாக்கே ஒரு ஆறுமாசம் கழிச்சுதான் காட்டினேன். இப்படி நம்ம தவிக்க விட்டு போனது அவருக்கு துரோகமா தெரியலையாடான்னு அதை கிழிச்சிப் போட்டுட்டாங்க.”, மெல்ல கதை கூறிக்கொண்டே வெளியில் வந்து சோஃபாவில் அமர்ந்தான்.
அவளுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. யாரிடமும் சொல்லாததை என்னிடம் மனம் திறக்கிறான் என்றதே நெகிழ வைத்தது. “உங்க மேல இருந்த நம்பிக்கையிலதான் அப்படி ஒரு முடிவு எடுக்க துணிஞ்சிருப்பாரா இருக்கும் சஞ்சய். அந்த நம்பிக்கையை நீங்களும் காப்பாதிட்டீங்க”, என்று சொல்லவும் அவளைப் பார்த்து முறுவலித்தவன், “இருக்கலாம். இதுவே நான் பொண்ணாயிருந்திருந்தா, அவர் இறந்திருப்பாரான்னு யோசிச்சிருக்கேன்.” ஒரு பெருமூச்சு விட்டவன், “வந்ததும் வராததுமா எதுக்கு இந்த ஹெவி டாபிக். வா ஜூஸ் குடிக்கறியா? சமையல் ப்ரெப் பண்ணிகிட்டு இருந்தேன். கிச்சன் வா”, என்று முன்னே நடந்தான்.
தான் கொண்டு வந்த சிறிய பேப்பர் பையிலிருந்து ஒரு டப்பாவை எடுத்தவள், “வீட்டுலர்ந்து ஃபிஷ் ஃப்ரை பண்ணி எடுத்துட்டு வந்தேன். பிடிச்சிருக்கா பாருங்க”, எனவும் மகிழ்வுடனே வாங்கிக்கொண்டான். திறந்து ஒரு சிறு துண்டு வாயிலிட்டவன், “நல்லாயிருக்கு ஜெயந்தி”, என்று பாராட்டினான்.
மாதுளை ஜூஸ் வைத்திருந்த கண்ணாடி குவளையை ப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து அவளிடம் தந்தவன், “கிளாஸ் அங்க ட்ரால இருக்கும் பார்”, என்று சொல்லிவிட்டு அடுப்பை ஆன் செய்தான்.
“என்ன செய்யறீங்க? இன்னிக்கு என்ன மெனு?”, என்று கேட்க, “சிக்கன் க்ரேவி, எக் ஃப்ரைட் ரைஸ். வேற எதுவும் வேணும்னா ஆர்டர் பண்ணிக்கலாம்”, என்றவனிடம் ஒரு பழரசக் கோப்பையை தந்தவள், “இதுவே போதும். நான் எதுவும் செய்யவா?”, என்று கேட்டாள்.
“ம்ம்…மிளகு ரசம் வெச்சு தறியா?,ரசம் பிடிக்கும் ஆனா எனக்கு நல்லா வராது. குக் வைப்பாங்க, பட் எனக்கு அவங்க ஸ்டைல் பிடிக்கலை, ரொம்ப தண்ணியா இருக்கும்.”, என்றவனைப் பார்த்து சம்மதமாய் புன்னகைத்தாள்.
“சரி, நான் பூண்டு தக்காளியெல்லாம் ரெடி பண்றேன்”, என்றவள் கட்டிங் போர்டுடன் வேண்டியதை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த உணவு மேசையில் அவனைப் பார்த்த வாக்கில் அமர்ந்தாள்.
“பாட்டு போடவா ஜெயந்தி. நான் வீட்ல இருக்கும்போது எதாவது பாட்டு ஓடிட்டே இருக்கும்”, எனவும் “ஷ்யூர், எனக்குமே வீட்டுல எதாவது சத்தம் கேட்டுகிட்டு இருக்கணும். போடுங்க”, என்றாள்.
“அலெக்ஸா, ப்ளே மை ஏ லிஸ்ட் சாங்க்ஸ்”, எனவும் “கண்ணைக் காட்டு போதும் நிழலாக கூட நானும் வாரேன்”, என்று குழைய அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தவன், எதுவும் பேசாது திரும்பி அடுப்பை கவனித்தான்.
பாட்டையும் இந்த சூழலையும் ரசித்துக்கொண்டே பூண்டை உரிக்க ஆரம்பித்தாள். “ஜெயந்திமா, முதல்ல பழுத்த இரண்டு தக்காளி பழத்தை நறுக்கி, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியோட சேர்த்து கால் மணி நேரம் ஊற வெப்பியாம். அதுக்கப்பறமா, பூண்டு, சீரகம் மிளகுன்னு மிக்ஸில போட்டு அரைச்சு”, என்று காதருகில் ரெசிப்பி கேட்டது.
லேசாய் வாயை மூடிய படியே, “சார்… மிளகு ரசம் வெக்க தெரியும்”, என்று சொல்ல, “தமையா அவ புள்ளைக்கு பண்ற மாதிரி உன்னை பண்ணித் தர சொல்றா மா. அவளுக்கு முடிஞ்சா அவளே இறங்கி வெச்சிடுவா. புள்ளை ஆசப்பட்டு கேட்கறான், கொஞ்சம் அவ சொல்ற மாதிரி பண்ணிக்குடுப்பியாம்”, என்று குருபரன் கேட்கவும், தட்ட முடியாது, தமையா சொன்ன பக்குவத்தில் செய்ய ஆரம்பித்தாள்.
அடுப்பில் மும்மரமாக இருந்தான் சஞ்சய். எல்லாவற்றிலும் இருக்கும் நேர்த்தி இதிலும் இருந்தது. உடைமேல் எதுவும் பட்டு தெரித்துவிடாதிருக்க, ஒரு ஏப்ரன் கட்டியிருந்தான்.
பாடல்கள் எல்லாம் மெலடியாக வர, கூடவே ஹம் செய்துகொண்டோ, விசிலடித்துக்கொண்டோ வேலை பார்த்தான். ஒரு பெரிய கடாயில் ஃப்ரைட் ரைஸ் அனாயசமாக பிரட்டி விட, “ரொம்ப பழக்கமா?” , என்றாள் வாசலருகில் நின்றபடி,
பக்கவாட்டில் திரும்பியவன், “ம்ம்… யூ.எஸ்ல ஹோட்டல்ல வேலை பார்த்தமே, அங்க சில நேரம் லேட் நைட் ஆர்டர்ஸ் வரும். அப்போ ஃப்ரைட் ரைஸ் வந்தா கடாயை பிடிச்சு, ஹை ஹீட்ல இப்படி டாஸ் பண்ணனும், அப்ப கொஞ்சம் கையை சுட்டு, கத்துக்கிட்டது.”
மேலும் சில நிமிடங்கள் பிரட்டியவன் கடாயுடன் திரும்பி, வெளிய ஹாட்பாக்ஸ் இருக்கும் பார், இதை எடுத்துட்டு வந்து வெக்கறேன். அதுல வெச்சிடலாம்” , என்று தூக்கிக்கொண்டு வந்தான்.
“தள்ளுங்க. நான் போட்டு வைக்கறேன்”, என்று கரண்டியை வாங்கிக்கொண்டாள். “இல்ல, சுடப் போகுது, நானே போடறேன்” எனவும், “போங்க சஞ்சய், நாங்க உள்ளூர்லயே கையை காலை சுட்டு சமையல் கத்துகிட்டோம். இப்போ சுட்டுக்காம எப்படி செய்யறதுன்னு தெரியும்”, என்று பழிப்பு காட்ட, “சரிம்மா சரி”, என்று மேசையில் வைத்துவிட்டு மீண்டும் கிச்சனுக்குச் சென்றான்.
“கோழிக்கறி குழம்பு ம்ஹூம் கொதிக்குது திரும்பு”, என்று சித்ரா அலெக்ஸா மூலம் ராகமாக இழுக்க, இதுவரை இப்படி மார்க்கமான பாட்டு எதுவும் வராதது, நிஜமாகவே அங்கே கோழிக்கறி குழம்பு கொதிக்கவும், பிடிபட்ட குழந்தையாய் அவளைப் பார்த்து சஞ்சய் முழிக்க, பக்கென்று சிரித்துவிட்டாள் ஜெயந்தி.
அதற்குள் இன்னும் பாடல் ராகமிழுக்க “அலெக்ஸா ஸ்டாப்”, என்றான் அவசரமாக.
“இந்த இடியட் மோகன் செஞ்ச வேலை ஜெயந்தி. என் ப்ளேலிஸ்ட்ல இப்படி எதாவது பாட்டு போட்டு, கில்மா பாட்டும் கேட்கணும் மச்சான்னு படுத்துவான். என்னவோ ஒழிடான்னு விடுவேன்.”, என்று தன்னிலை விளக்கம் வேறு தரவும் பாவமாகப் போய்விட்டது ஜெயந்திக்கு.
“ஓ…இது மோகன் சாய்ஸா? அப்ப என்ன பண்றீங்க ஒரு ஷார்ட் வீடியோ எடுக்கறோம். உங்க அலெக்ஸாவை பாட சொல்லுங்க”, என்றவள் செய்யப்போவதை விவரிக்க, “யெஸ்… லெட்ஸ் டூ இட்”, என்றான் சஞ்சய்.
பாடல் மீண்டும் ஒலிக்க, கோழி குழம்பு கொதிப்பதை க்ளோசப்பில் எடுத்தவள், அடுத்து சஞ்சய் திரும்புவது போல எடுத்து, தன்னை அவன் முன்னே நிற்பது போல வைக்க, கைப்பேசியை சஞ்சய் வாங்கி மேலே உயர்த்தி லேசாக டாப்-ஆங்கிளில் இருவரும் சிரிப்பதைக் காட்ட, பாட்டு பின்னணியில் முக்கி முனகியது.
கையை ஜெயந்தியைச் சுற்றி மொபைலை வாங்கி சற்றே நெருக்கத்தில் தூக்கிப் பிடிக்கவும் கொஞ்சம் ஜிவ்வென்றிருந்தது. தீக்ஷனா தன் மேல் ஈஷியபோதெல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. இத்தனைக்கும் இருவருக்குள்ளம் இடைவெளி இருக்கிறது, ஆனாலும் இப்படி லேசான நெருக்கமே படபடக்க வைத்தது சஞ்சய்க்கு சிரிப்பாக இருந்தது. ஜெயந்தியுமே சட்டென்று விலகி உணவு மேசைக்கருகில் சென்றுவிட்டாள்.
வீடியோவை ஒரு முறை பார்த்துவிட்டு கையோடு மோகனுக்கு அனுப்பி வைத்தான். “இந்த நேரம் கோயில் பூஜையெல்லாம் முடிஞ்சுருக்கணும்”, என்று சொல்லும்போதே, கழுத்தில் மாலையோடு சோகமாக நிற்கும் அவன் புகைப்படம் வந்து விழுந்தது, அழுகாச்சி ஸ்மைலியுடன்.
அடுத்து, புசு புசுவென்று காதில் புகையோடு ஒரு கார்ட்டூன் வந்தது. அதைக்காட்டி சஞ்சய் சிரிக்க, வீடியோ காலில் மோகனே வந்துவிட்டான்.
வாய்கொள்ளா சிரிப்புடன், “சொல்லுடா …”, என்று சஞ்சய் சிரிக்க, “நல்லா இருங்கடா… நல்லா இருங்க. இங்க ஒருத்தன் பலியாடு மாதிரி கழுத்துல மாலை போட்டு கோயில் சுத்திகிட்டு இருக்கான். அவனைப் பார்த்து பாவப்படவேணாம். இப்படி ஜோடியா வீடியோ, அதுவும் எனக்கு பிடிச்ச பாட்டு அதுக்கு ரீல்ஸ் பண்ணி அனுப்பறீங்களே நல்லவங்களா, நல்லா வருவீங்கடா”, என்று பொறும, கலகலத்துச் சிரித்தான் சஞ்சய்.
ஜெயந்தி அவனைப் பார்த்து கை அசைக்க, “ரொமப் ரொமப் ஹாப்பிமா. என் நண்பன் வாழ்க்கையில் ஒளி ஏத்தியிருக்க. அதுக்குன்னு உன் அண்ணனை கலாய்க்கக் கூடாது சரியா. நல்ல பொண்ணா நான் பார்த்து தரேன்னு சொல்லணும்”, என்று கேட்க ஜெயந்தியும் தலையசைத்துச் சிரித்தாள்.
“நீங்க பாட்டு இந்த பாட்டை அவர் லிஸ்ட்ல சேர்த்துட்டு போயிட்டீங்க. திடீர்னு இது வரவும், உங்க ஃப்ரெண்டு டென்ஷனாகிட்டார் தெரியுமா. அதுதான் பாட்டு போட்ட உங்களுக்கு மரியாதை பண்ணுவோம்னு ஐடியா பண்ணேன்”
“அதான பார்த்தேன். நம்ம பய இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டானே, எப்படி தைரியமா ரீல்ஸ் போட்டான்னு நினைச்சேன். உன் வேலைதானா?”, என்று பேசிக்கொண்டிருக்க,
“சஞ்சைகிட்டயா பேசற? அந்த பொண்ணு ஒத்துகிட்டாளாமா? அவனாவது கல்யாண சாப்பாடு போடுவானா?”, என்று எதிர்புறம் குரல் கேட்க, “இதோ, ஜெயந்தி அங்க அவன் வீட்டுலதான் இருக்காங்க. பேசுமா”, என்று அவன் அன்னையில் கையில் போனை திணித்து, தன் புகைச்சலை சற்று தணித்துக்கொண்டான்.
சற்று தடுமாறி பின் சமாளித்து ஓரிரு வார்த்தை ஜெயந்தி பேச, அவளிடமிருந்து கைப்பேசியை தான் வாங்கிக்கொண்டான் சஞ்சய்.
ரசம் வைப்பதில் ஜெயந்தி பிசியாகிவிட, அதை அவன் வெளியே வரும்போது பார்த்த மோகனின் அன்னை, “அடுப்படியில என்னப்பா பண்றா? ஜெயந்திக்கு சமைக்கத் தெரியுமா?”, என்று கேட்க, தனக்காக மிளகு ரசம் வைப்பதாகக் கூறியவன், அவள் செய்து எடுத்து வந்திருந்த மீன் வறுவலையும் காட்டி பெருமை பட, அதிலேயே விழுந்துவிட்டார் லலிதா. “தமையா கவலை தீர்ந்துச்சு போ. நான் போயிட்டா என் புள்ளை நாக்குக்கு ருசியா வரவ சமைப்பாளான்னு எத்தனையோவாட்டி சொல்லி புலம்பியிருக்கா உங்கம்மா. ரொம்ப சந்தோஷம்டா சஞ்சய். அப்பறமா ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வா. சீக்கரமே அவங்க வீட்டுல சொல்லி கல்யாணத்தை முடிங்க. சரியா?”, என்று அன்னையாய் அறிவுறுத்த,
“மா.. நேத்து ப்ரபோஸ் பண்ணி, இன்னிக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான். அவனே பயங்கர ஸ்பீட்லதான் இருக்கான். கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க.”, என்று அதட்டிய மோகன்,
“கங்க்ராட்ஸ் மச்சி, இன்னும் ஏழெட்டு கில்மா பாட்டு உன் லிஸ்ட்ல போட்டுவிடறேன், கேட்டு தேறிக்கோடா!” கண்ணடித்து இணைப்பை துண்டிக்க, கமகமக்கும் ரசத்தை எடுத்துக்கொண்டு வந்து டேபிளில் வைத்தாள் ஜெயந்தி.
“உங்க அம்மா வைக்கற மாதிரி இருக்குமான்னு தெரியலை. ட்ரை பண்ணிப் பாருங்க”, என்று சொல்லவும்,
“எங்கம்மா வைப்பாங்கன்னு சொல்லலையே உனக்கு? ஆனா ஸ்மெல் செம்மையா இருக்கு”, என்று அருகில் வர, சுதாரித்தவள், “மிளகு ரசம் வேற யார் வெச்சு தருவா? இதெல்லாம் சின்ன வயசு டேஸ்ட். அவங்கதான் வெச்சிருப்பாங்கன்னு சொல்லித்தான் தெரியணுமா?”, என்று சமாளித்தாள்.
‘இதுக்குத்தான் எதுவும் சொல்லாதீங்கன்னா கேட்கறாங்களா’, என்று உள்ளுக்குள் தாளித்தபடியே கிச்சன் மேடையை சுத்தம் செய்யத் திரும்பினாள்.