அத்தியாயம் – 15

ஒரு மணி நேரம் போதும் வாழ்க்கையை பிரட்டிப்போட என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தாள் ஜெயந்தி. அவள் தந்தையை இழந்தபோது முதலில் அனுபவித்தது. அப்போது அன்னை இருக்கவும், தடுமாறினாலும் தேறிக்கொண்டாள். இருவரும் கோவிட்டில் விழுந்து, இவள் சில நாட்களில் தேறிவிட, கண் முன்னே அன்னை உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்த போதும், பிழைத்துவிடுவார் என்று நினைத்திருந்தாள். கொஞ்சம் சரியாவது போல் நம்பிக்கை அளித்திருக்க, ஒரு மணி நேரத்தில் நிலைமை மோசமாகி ஜெயந்தியை தனியே விட்டுச் சென்றுவிட்டார்.

ஆனால் இந்த முறைதான் வாழ்க்கை ஒரு மணி நேரத்தில் நல்லவிதமாக பிரட்டிப் போட்டிருக்கிறது. காற்றில் மிதந்தபடிதான் வீட்டிற்குள் நுழைந்தாள் ஜெயந்தி.

சஞ்சய் எனக்குப் பிடிச்ச பொண்ணுகிட்ட பேசி சம்மதம் வாங்கப்போறேன் என்று கூறியவன், “சம்மதமா ஜெயந்தி?” என்று கேட்க, நிஜமாகவே விழித்தாள்.

“என்ன இவ்வளவு அதிர்ச்சி? எதிர்பார்க்கலையா ஜெயந்தி?”

“இல்லை…அது.. நீங்க…”, என்றவளைப் பார்த்து, “ரிலாக்ஸ். என்ன சொல்லணுமோ சொல்லு. எந்த கம்பல்ஷணும் இல்லை.”, என்று புன்னகைத்தாலும் அவன் முகத்திலுமே ஒரு டென்ஷன் இருந்தது.

“இல்லை. நீங்க இப்படி சட்டுனு கேட்பீங்கன்னு எதிர்பார்க்கலை.”, என்று பின்னகோலடாவை ஒரு சிப் குடித்தாள். அவள் ஆர்டர் செய்ததைவிட இது பிடித்திருந்தது.

அதில் முகத்தில் ஒரு புன்சிரிப்புடன், “என்ன எதிர்பார்த்த ?” என்று அவளைப் பார்த்தான்.

முகத்தில் சற்றே வெட்கம் தோன்ற, “அது… பிடிக்கும்னு ஒரு ஹின்ட் மாதிரி சொல்வீங்கன்னு நினைச்சேன்”, என்றவளை சுவாரஸ்யமாக நோக்கினான்.

“ம்ம்… ஹின்ட் குடுத்திருந்தா என்ன செய்திருப்பியாம்? க்ரீன் சிக்னல் கிடைச்சிருக்குமா?”, கன்னத்தில் கைவைத்து கண்கள் சிரிப்பில் ஒளிர கேட்பவனை முறைக்க முடியாது “எல்லாம் யோசிச்சு பண்றவர் இப்படி சட்டுனு கேட்டுட்டீங்கன்னு நான் ஷாக்ல இருக்கேன், நீங்க கிண்டல் பண்றீங்க!”

“ஹ்ம்ம்…சர்ப்ரைசிங் ஆனா உன் விஷயத்துல நான் யோசிக்கவே இல்லை. உன்னை பார்க்க, பழகப் பழக இதுதான் நான் தேடிகிட்டிருந்த லைஃப்ன்னு புரிஞ்சுது”, சஞ்சய் சொல்லவும் அவளையும் மீறி ஜெயந்தியின் முகம் விகசித்து அவள் மகிழ்ச்சியைக் காட்டியது.

“பதில் இன்னும் வரலை, எவ்வளவு  நேரம்தான் என்னை டென்ஷன்ல வெச்சிருப்ப ஜெயந்தி?”

“எனக்கும்…”, என்று சொல்லும்போதே முகம் சிவக்க பார்வை தழைந்தது ஜெயந்திக்கு.

“ஊஃப்…”, என்றவன் அவள் சன்செட் டிலைட்டை எடுத்து ஒரு வாய் குடிக்க, “அச்சோ..அது…”, என்றவள் நிறுத்த, நிதானமாக அவள் கோப்பையிலிருந்து மீண்டும் ஒரு வாய் பருகியபடியே , “அதுதான் பின்னகோலடா பிடிச்சிருக்கே நீ அதையே குடி” என்றான்.

விருப்பம் சொல்லிய பின் ஜெயந்திக்கு சகஜமாக பேச வரவில்லை. அவளை லேசாய் கலாய்த்தாலும், புரிந்து கொண்ட சஞ்சய், “நாளைக்கு லஞ்சுக்கு வீட்டுக்கு வரியா ஜெயந்தி. ஃப்ரீயா பேசலாம். உனக்கும் இந்த இனிஷியல் படபடப்பு அடங்கும்.”

“எனக்கு படபடப்பா இருக்கறது உங்களுக்கு எப்படி தெரியும்?”

“உங்கிட்ட சொல்ற வரைக்கும் எனக்கிருந்த அந்த ஃபீல் இப்ப உனக்கு. நான் ஃப்ரீ ஆகிட்டேன், ஆனா உனக்கு டென்ஷனா இருக்கறது பார்த்தாலே தெரியுது.”, என்று இலகுவாய் கூறுபவனை லேசாய் முறைத்தாள்.

“அப்போ மோகனுக்கு தெரியுமா?”, என்று பேச்சை மாற்றினாலும் புரிந்துகொண்டவன்,

“நம்ம மூணு பேரும் டின்னர் போனமே ரெட்மீ டெண்டர் முடிச்சுட்டு? அப்பவே கண்டுபிடிச்சு கேட்டான். உன்னை ஏன் பிடிக்கும்னு நான் சொல்லச் சொல்ல  லிஸ்ட் பெருசா போகுது ஆனா இதுக்கு பேருதான்டா லவ்வுன்னு சொல்லிட்டு போனான். அன்னிக்கு நைட் நீ பேசினது, கோவப்பட்டதுன்னு ஒவ்வொன்னா உன்னை பத்தி யோசிச்சு… அது ஒரு புது அனுபவம்”, சிலாகித்தவன், “இன்னிக்கு உனக்கெப்படி இருந்துச்சுன்னு நாளைக்கு சொல்லு”, என்றான்.

இதோ படுக்கையில் படுத்தவள், அவன் கூறியது போலத்தான் அவனோடு வாலிபால் ஆடியது, ஈ.சி.ஆரிலிருந்து காரில் வந்தது என்று ஒவ்வொன்றாக அசை போட்டு மகிழ்ந்திருந்தாள். பார்த்த உடனே பற்றிக்கொள்ளவில்லை. பார்க்கப் பார்க்கப் பிடித்தது.  பழகப் பழகப் பிடித்தது. என்னை மதிக்கும், என் யோசனைகளை, கருத்துகளை மதிக்கும் ஒரு கண்ணியமானவனிடம் மனதை கொடுத்திருக்கிறேன் என்று பெருமிதம் கொண்டாள். அழகில் மயங்கி காதல் சொல்லி, பின்பு உனக்கொன்றும் தெரியாது, சொல்வதைக் கேட்டு நட என்று இருக்கும் முக்கால்வாசி ஆண்களிலிருந்து சஞ்சய் தனித்துவமாய் இருந்தது ஜெயந்தியை மிகவும் கர்வம்  கொள்ளச் செய்தது.

“தீக்ஷனாவிடமில்லாத அழகா, ஆனால் அசரவில்லையே?”, என்று யோசித்தவள், “விஷயம் தெரியும்போது அவ முகம் போற போக்கை பார்க்கணுமே”, என்று முணுமுணுத்து உரக்கவே சிரித்தாள்.

காலையில் உற்சாகமாக எழுந்தவள் கையில் காஃபியோடு வரவும் “ஜெயந்திமா”, என்ற சந்தோஷக் குரல் ஒற்றை சோஃபாவிலிருந்து கேட்டது.

முகம் கொள்ளா புன்னகையுடன் வந்து அமர்ந்தவளைப் பார்த்தவர், “பார்த்தியா எங்க புள்ளை டக்குனு கேட்டுட்டான்”, எனவும்,

“ஓ…. அவர் உங்க புள்ளை, நான் யாரோதான? நேத்துதான் என் பொண்ணு மாதிரின்னு சொல்லிட்டு போனீங்க?”, பொய்யாய் கோபம் கொண்டாள்.

“என் பொண்ணுதான்மா நீ. நாம சம்மந்தியாகப் போறோம்னு தமையாகிட்ட அதைத்தான் சொன்னேன்.”, என்றார் மகிழ்ச்சியாக.

“அதுக்குள்ள உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது சார்?”

“நீதான் வரக்கூடாதுன்னு விரட்டிட்டே. உன்னை விட்டுட்டு சஞ்சய் வீட்டுக்கு வரும்போது அவனைப் பார்த்த உடனே தெரிஞ்சு போச்சு. அப்பறம் மோகனுக்கு போன் பண்ணி அவன் பேசவும் நீ சம்மதம் சொன்னதும் தெரிஞ்சது. நேத்து தமையாவைக் கையில பிடிக்க முடியலை போ.” , என்று சந்தோஷமாக அலுத்துக்கொண்டார்.

“ஆக நான் எதுவும் சொல்ல வேணாம். எல்லாம் தெரிஞ்சுட்டுதான் வந்திருக்கீங்க?”

“அதெப்படி? நீ சொல்லு. நாங்க சஞ்சய் பேசின ஒரு பக்கம்தான் கேட்டோம். இப்ப நீ சொல்லு, என்றவர், இதென்ன புதுசா செடி வாங்கியிருக்க?”, உணவு மேசையிலிருந்த பீஸ் லில்லி இப்போதுதான் அவர் கவனத்தை கவர்ந்திருந்தது.

“முதல் முறை வீட்டுக்கு வரோமேன்னு உங்க தமையா பிள்ளைதான் வாங்கிட்டு வந்தார். அழகாயிருக்குல்ல?”, எழுந்து அதன் அருகில் சென்றவள், லேசாய் அதன் இலைகளை நீவி விட்டாள்.

“ஹ்ம்ம்….எங்க காலத்துல பிடிச்ச பொண்ணுக்கு கண்ணாடி வளையல், மல்லிப்பூ வாங்கி குடுப்போம். இப்போ இப்படியா?”

அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தவள், “பொக்கே வாங்கிட்டு வந்தா ஒரு வாரத்துல வாடிப் போயிடும், அதுதான் செடியா வாங்கிட்டு வந்தேன்னு சொன்னார்.”

“ஓ…அதுவும் சரிதான். இதுக்கு என்னம்மா பேரு. தமையா கேட்பா”, என்பதில் ஜெயந்திக்கு தானாய் ஒரு புன்னகை அரும்பியது.

“இன்னிக்கு உங்க தமையா வீட்டுக்குத்தான் லன்ச் சாப்பிட வரப்போறேன். சஞ்சய் எனக்காக சமைக்கறேன்னு சொல்லியிருக்கார்.”

“என்னது? நிஜமாவா? பாருடா. இந்தப் பையன் மோகன் கிட்ட இந்த விஷயத்தைப் பத்தி பேசவே இல்லைமா. அங்க வரப்போறியா? ரொம்ப சந்தோஷம்டா”, ஆர்பரித்தார்  குருபரன்.

“இன்னிக்கு அங்கதான் இருக்கப்போறீங்களா இரண்டு பேரும்?”

“கண்டிப்பா! வேணாம்னு சொல்லிடாத கண்ணு, உங்க இரண்டு பேரையும் சேர்ந்து பார்க்கத்தானே இத்தனை பாடும்? உங்களுக்கு தனிமை தேவைப்படற மாதிரி இருந்தா, கண்டிப்பா தமையாவை இழுத்துகிட்டு வெளிய வந்துடுவேன். நீ அதெல்லாம் எதுவும் நினைக்காத சரியா? “, கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார்.

அடுத்து பத்து நிமிடமும், அவன் என்ன சொன்னான், அதுக்கு நீ என்ன சொன்ன என்று நேர்காணல் வைக்காத குறையாக அவள் வாயைப் பிடுங்கினார்.

“அச்சோ சார்… விடுங்களேன். அதுதான் அவர் கேட்டார், நான் ஓகே சொல்லிட்டேன்னு சொல்லியாச்சு, என்னென்ன சாப்பிட்டோம்னு கூட சொல்லிட்டேன். இதுக்கு மேல ஒன்னும் கிடையாது. போங்க போய் நான் வரப்போறதை உங்க தமையாகிட்ட சொல்லுங்க”, என்றாள் கண்டிப்புடன்.

“ம்ம்… சரி சரி, முதல் தரம் உன் புகுந்த வீட்டுக்கு வரப்போற, புடவை கட்டிட்டு வாம்மா. நல்ல நேரம் பார்த்து வரணும். 12 – 1:30 எம கண்டம். சீக்கிரமே வந்துடணும் சரியா? வரும்போது வலது கால் வெச்சு உள்ள வரணும்.”

“ஹ்ம்ம், அப்பறம் வேற எதுவும் கட்டளை இருக்கா?” என்று  இடுப்பில் ஒரு கை வைத்து, புருவம் உயர்த்தி சண்டைக்கு நிற்க,

“சரி சரி… உன் மாமியாரை மாதிரியே முணுக்குன்னு கோவப்பட்டா எப்படி?”, என்று சமாதானப்படுத்தினார்.

“அவங்க போட்டோ இருக்கா வீட்ல? அவங்களைப் பத்தி இவ்வளவு பேசியிருக்கோம். எப்படி இருப்பாங்கன்னு பார்க்கணும்.”, ஜெயந்தி கேட்கவும், “ம்ம்.. பூஜை ரூம்ல இருக்கு. சஞ்சய் அவன் அப்பா அம்மா போட்டோவை பெருசா மாட்டி வெச்சிருக்கான். பூஜை அறையில இருக்க வேணாம், வெளியில மாட்டச் சொல்லு.”

பதில் கூறாது அமைதி காத்தாள்.

அவரே, “உடனே சொன்னா நல்லாயிருக்காதுதான். நீ கல்யாணம் முடிச்ச அப்பறமா ஒரு நாள் சொல்லிக்கோ”, என்று இறங்கி வந்தார்.

“மணி ஒன்பதாகப்போகுது. நான் கிளம்பவா வேணாவா?”, என்று கேட்க, “இதோ போறேன்… சீக்கிரம் வந்துடுமா, சஞ்சையோட சேர்த்து மூணு பேர் உனக்காக காத்துகிட்டு இருப்போம்.”, என்றதோடு கிளம்பிச் சென்றார்.

பதினொரு மணிக்கு ஓலாவில் வந்திறங்கினாள் ஜெயந்தி. தான் வந்து அழைத்து வருவதாகக் கூறியிருந்தவனை தேவையில்லாமல் எதற்கு அலைச்சல் என்று முகவரியை வாங்கிக்கொண்டு அவளே வந்திருந்தாள். கேட்டிலேயே நின்றிருந்தான் சஞ்சய்.

இலகுவான ப்ரவுன் லெனின் பேண்ட்,  வெளிர் பச்சையில் காட்டன் அரைக்கை சட்டை என்று அணிந்திருந்தவன் வேகமாய் கேட்டை திறந்து வந்தான்.

“மார்னிங் சஞ்சய் “, என்று அதற்குள் காரை விட்டு இறங்கியிருந்தாள் ஜெயந்தி.

லைட் பிங்கில் வெள்ளை மற்றும் நீலப் பூக்கள் தூவியிருந்த மசகலி சேலையில் அவன் கண்களுக்கு புது ரோஜாப்பூவாக தோன்றினாள்.