ஆஃபீஸ் இந்த இரண்டு நாட்களாக எப்படி போனது என்று பொதுவாக கேட்டுவிட்டு, “இப்பவாவது என் மேல உங்க கோவம் போயிடுச்சா ?”, என்றான் ஒரு புன்னகையோடு.

“சாரி சஞ்சய். நீங்க அவங்க சீன் கிரியேட் பண்ற முயற்சியை தடுக்கத்தான் அப்படி செஞ்சீங்கன்னு, கொஞ்சம் யோசிச்ச அப்பறம் புரிஞ்சுது. ‘குரு சர் விம் போட்டு விளக்கின அப்பறம், ஆனா அதை சொல்ல முடியாதே!’, என்ற மனதை அடக்கிவிட்டு, “உங்களை கோச்சிக்க எனக்குத்தான் ரைட்ஸ் இல்லை. “, என்றாள் சற்றே வருந்திய குரலில்.

“நோ நோ…. அப்படியெல்லாம் இல்லை. உங்களுக்கு தப்புன்னு படறதை தைரியமா நீங்க சொல்றதை எப்பவும் தப்பா நினைக்கமாட்டேன். ஆனா என் நினைப்பை சரியா புரிஞ்சிகிட்டீங்கன்னு நினைக்க சந்தோஷம். உங்களுக்கு முக்கியத்துவம் இல்லை, ரைட்ஸ் இல்லைன்னு எல்லாம் நினைக்காதீங்க ஜெயந்தி.”, அதற்கு மேல் எப்படி சொல்ல என்று தெரியாமல் சஞ்சய் சற்றே திணற,

“நான் பேசினதை மனசுல வெச்சு மஞ்சு வீட்ல போய் பேசினீங்களாம். இன்னிக்கு சொன்னா. அதுலேயே தெரிஞ்சுது சஞ்சய். நல்ல விஷயம் சொன்னா நீங்க அதுக்கான இம்பார்ட்டன்ஸ் கண்டிப்பா தருவீங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம்.”, என்று ஜெயந்தி நெகிழ்ந்து கூற, “அட மஞ்சு வீட்டுல நான் பேசினது ஜெயந்திக்கு இவ்வளவு ஹாப்பியா? பாருடா சஞ்சய், உனக்கே தெரியாம, கரெக்டா வேலை பார்த்திருக்க?’, என்று உள்ளுக்குள் காலரை ஏற்றிவிட்டுக்கொண்டான்.

“நீங்க சொன்னதும்தான் எனக்குமே ஒரு முயற்சி செய்வோம்னு தோணுச்சு ஜெயந்தி. அதையே அவங்க வீட்டுல செஞ்சு பார்த்தேன். அங்கேயும் அது நல்ல பலனை தந்திருக்கு. சோ, கிரெடிட் ஐடியா குடுத்த உங்களுக்குத்தான்!”

பேச்சு இன்னும் சற்று அங்கேயே சுற்ற, அதற்கு மேல் பொறுக்க முடியாது, “ரெட்மீ டெண்டர் கிடைச்சுதுல நான் உங்களுக்கு ட்ரீட் வெக்கணும். சனிக்கிழமை ஃப்ரீயா சொல்லுங்க, டின்னர் போகலாம்”, கேட்டேவிட்டான்.

“ஓஹ்… அது…”, என்றவள் சஞ்சய் எதிர்பார்ப்புடன் அவளைக் காண்பதைக் கண்டு “ம்ம்… சரி போகலாம்”, என்று சம்மதித்துவிட்டாள்.

சனிக்கிழமை காலை தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தவள், இரவு டின்னருக்கு என்ன போடலாம் என்று உடைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். “ம்ம்… சல்வார் எல்லாம் ஆஃபீஸ்ல போட்டு பார்த்திருப்பார். சாரி… கொஞ்சம் டூ மச்சா இருக்கும். என்ன பண்ணலாம் ? “, என்று யோசிக்கும் வேளை, “அம்மா ஜெயந்தி?” என்று குருபரனின் குரல் ஹாலில் கேட்டது.

“என்ன சார் மதிய நேரம் வந்திருக்கீங்க?”, என்று கேட்கவும், “என்னம்மா சாயந்திரம் டின்னருக்கு ரெடியா?”, என்று மறு கேள்வி கேட்டார்.

“சார்… “, சிரித்தவள், “இப்ப மணி ஒன்னுதான் ஆச்சு. ஏழு மணிக்குத்தான் சஞ்சய் வரதா சொல்லியிருக்கார். அதுக்குள்ள என்ன?”

“இல்லைமா… என்ன ட்ரெஸ் போடப்போற? தமையா அவனுக்கு இலைப் பச்சை நிறம் ரொம்ப பிடிக்கும், அதுல எதாவது போடுவியான்னு கேட்கச் சொன்னா?”, ஆர்வமாய் கேட்டார் குருபரன்.

கலகலத்து சிரித்தாள் ஜெயந்தி. “டெண்டர் வின் பண்ணதுக்கு ஒரு டின்னர் கூட்டிட்டு போறார். அதுக்கு ஏன் சர் இவ்வளவு ஆர்வம்?”, தன் ஆர்வத்தையும், சந்தேகத்தையும் மறைத்து சாதாரணம் போல் கேட்டாள்.

“அதில்ல ஜெயந்திமா… ஒரு வேளை சஞ்சய்…”, என்று ஆரம்பிக்க,

“சர்…ஒன்னு சொல்லவா? நீங்க அங்க நடக்கறதை எங்கிட்ட சொன்னீங்கன்னா, அவர் எங்கிட்ட சொல்லும்போது  புதுசா கேட்கற மாதிரி நடிக்க வேண்டியதா இருக்கு. அசந்தாப்புல  நீங்க சொன்னதை வெச்சு நான் எதாவது பேசிட்டா கஷ்டமாயிடும். உங்களைப்பத்தி நான் எப்படி சஞ்சய்க்கு சொல்ல முடியும்? ப்ளீஸ் எதுவும் சொல்லாதீங்க சர்.”, அவர் இருக்கும் ஒற்றை சோஃபா பக்கம் கை கூப்பினாள்.

“ஓ… இல்லைமா இல்லை. நான் எதுவும் சொல்லலை. டெண்டர் கிடைச்சுதுன்னு சொல்லும்போதும் உன்னால சந்தோஷமா கேட்டுக்க முடியலை. நானுமே பார்த்தேன்.”, குருபரன் கூற, கண்களை உருட்டியவள்,

“டின்னருக்கும்  எங்க பக்கத்துலேயே டென்ட் அடிச்சு உட்கார்ந்துக்கறதா ப்ளானா?  நல்லாயில்லை சார்… கொஞ்சம் கூட நல்லாயில்லை. அப்பறம் அவர்கிட்ட நீங்க ஆஃபீஸ் விஷயம் பொதுவா மட்டும் பேசுங்க, வேற எதுவும் வேணாம்னு சொல்லுவேன்”, மிரட்டினாள்.

மறுபக்கம் சிறு மௌனம்.

“உங்க தமையா பேச்சை இந்த விஷயத்துல கேட்காதீங்க சர். எங்களுக்கும் கொஞ்சம் ப்ரைவசி தாங்க.”

“வாஸ்தவம்தான். அவளை சமாளிக்கணுமே. சரியான ஆர்வக் கோளாறா இருக்கா!”

“இலைப் பச்சையில  புது சல்வார் வாங்கி போட்டுட்டு போகணும்னா, நீங்களும் அவங்களும் டின்னருக்கு வரக்கூடாது”, என்றவள், “ஹ்ம்ம்… சஞ்சய் கார்லேயும் வரக்கூடாது. எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க. இந்த டீலுக்கு ஓகேன்னா ஓகே இல்லை டின்னர் வர முடியாது, சித்திக்கு திடீர்னு உடம்பு முடியலைன்னு போன் பண்ணுவேன்.”

“என்னம்மா ப்ளாக்மெயில் பண்ற?”, திகைப்பாய் கேட்டார்.

“வேற என்ன செஞ்சு உங்களை சமாளிக்கறதாம்? , இடுப்பில் கை வைத்து மிரட்டுபவளை பாசமாக பார்த்தவர், லேசாய் அவள் தலையில் கைவைத்து, “அவனுக்கு ஏத்த ஜோடிமா நீ”, என்று நெகிழ்ந்த குரலில் ஆசீர்வதிக்க, குருபரனின் தொடுகையை முதன்முதலாக உணர்ந்தாள்.

“சார்…”

“ஒன்னுமில்லை பயப்படாதே. எனக்கு மக இருந்திருந்தா இப்படித்தான் மிரட்டியிருப்பாளோ என்னவோ. இப்ப அனுபவிச்சுக்கறேன்.”, என்றவர், “சரி ஜெயந்திமா. உன்னிஷ்ட்டப்படியே நானும் தமையாவும் வரமாட்டோம். எதுவும் நல்ல செய்தின்னா நீ சொல்லணும். ஞாயித்துகிழமை காலையில எட்டு மணிக்கெல்லாம் வந்துருவேன்.”

புன்னகைத்தவள், “கண்டிப்பா சொல்லுவேன். ஆனா எதுவும் பெருசா எதிர்பார்ப்பு வெச்சுக்காதீங்க சார். நீங்க சொல்ற மாதிரி என் மேல பிடித்தம்னு இருந்தாலும் உடனே எதுவும் பண்ணமாட்டார்.”, என்று விடைகொடுத்துவிட்டு, பக்கதிலுள்ள மாலுக்குச் சென்றாள்.

குருவிடம் சொல்லிவிட்டாலும் மாலை சற்று படபடப்புடனே கிளம்பிக் காத்திருந்தாள். வீட்டை மீண்டும் ஒருமுறை எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்.  அவள் முகவரியை அனுப்பி, இம்முறை வீட்டிற்கு வரவேண்டும் என்று கூறியிருந்தாள். சஞ்சய் கிளம்பிவிட்டதாக குறுஞ் செய்தி அனுப்பியிருக்க, மீண்டும் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்.

அவனது விருப்பமான இலைப் பச்சையும் இள மஞ்சளும் கலந்த ஆர்ட் சில்க் சல்வார் அவளை சற்று ஒல்லியாகவே காட்டியதில் திருப்தியுற்றாள். என்ன இருந்தாலும் தீக்ஷனாவின் அழகோ, உடல் மொழியோ சுட்டுப் போட்டாலும் வராது. அவள் நக்கலடித்தது போல மிடில் க்ளாஸ் லுக்தான் ஜெயந்திக்கு பொருந்தியது. ‘ஆமாம் போடி’, என்றவள் வேண்டுமென்றே சென்று பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் வைத்து சிறு துளி விபூதியை பொட்டின் மேல் இட்டுக்கொண்டாள்.

அழைப்பு மணி அடிக்க, துப்பட்டாவை ஒரு பக்கமாக தோளில் சரியவிட்டவள், வேகமாக சென்று கதவை திறக்க, ஜீன்ஸ், வெள்ளையில்  கரு நீலக் கோடுகள் போட்ட டீ-ஷர்ட் என்று காஷுவல் லுக்கில் கலக்கலாக தெரிந்தான் சஞ்சய்.

“வாங்க”, புன்னகைத்து வரவேற்க, கையில் இருந்த ஒரு பையை அவளிடம் தந்துவிட்டு , ஷூவை வெளியில் கழட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

ஆடம்பரமில்லாத அலங்காரம் அவள் மட்டுமில்லை, அவள் வீடும் என்று பார்த்தவுடனே புரிந்தது. இலகுவாக வந்து  குருபரன் வழக்கமாக அமரும் ஒற்றை சோஃபாவில் அமர, தன்னையறியாது புன்னகைத்தாள் ஜெயந்தி.

“உங்களுக்குத்தான் ஜெயந்தி”, அவள் கையில் பிடித்திருந்த பெரிய ப்ளாஸ்டிக் பையை சுட்டிக்காட்டி புன்முறுவல் செய்ய, “ஓ…” என்று ஆச்சரியம் காட்டி பிரித்து உள்ளே பார்க்க, அடர் சிகப்பு இலைகள், மஞ்சள் குருத்துகள் என்று அழகான ஒரு பீஸ் லில்லி (Peace Lily) செடி தெரிந்தது.

“ஓஹ்…. அழகா இருக்கு“, என்றவள் மகிழ்வுடன், மேசையில் வைத்து செடியை வெளியே எடுக்க, அது வேலைப்பாடு மிக்க ஒரு அழகிய பீங்கான் சட்டியில் இருந்தது.

“பீயூட்டிஃபுல் சஞ்சய். எதுக்கு இந்த ஃபார்மாலிட்டில்லாம்?”, என்று கேட்டாலும் இந்த பரி்சு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. ‘பொக்கே கொண்டு போனா எதுவும் தப்பா எடுத்துகிட்டா என்ன செய்யறது, ஸ்வீட் எடுத்துட்டு போறது சரியா வராது’’ என்று இரண்டு மணி நேரமாக மண்டையை உடைத்துக்கொண்டு இரண்டு நாட்களில் வாடிவிடும் பூங்கொத்தை விட, அவள் வீட்டிற்குள் வைத்து வளர்க்க ஏதுவாக, அதிகம் தண்ணீர் தேவைப்படாத இந்தச் செடியையும் அதற்கு ஒரு அலங்கார சட்டியையும் ஒரு மணி நேரம் செலவு செய்து தேடிப் பிடித்தது வீண் போகவில்லை என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டான். மோகனைக் கேட்டிருக்கலாம் ஆனாலும் அவன் பூனைக்குட்டி என்று கலாய்த்ததில் தன்மானம் சீண்டப்பட்டிருந்தது.

“முதல் முறை உங்களை வெளிய அழைச்சிட்டு போறேன். முதல் முறை உங்க வீட்டுக்கு வரேன். அதெப்படி சும்மா வரமுடியும்? அதுதான்.”, என்று புன்னகைக்க அவன் கன்னக்குழியில் ஜெயந்தியும் விழுந்து எழுந்தாள்.

“ஒரு நிமிஷம்”, என்று உள்ளே சென்றவள்,  அவள் செய்திருந்த காரெட் கீர் நிரப்பி, இரு கண்ணாடிக் கோப்பைகளில் முதலிலேயே குளிர்பெட்டியில் வைத்திருந்ததை ட்ரேவில் வைத்து எடுத்து வந்தாள்.

“நானும் நீங்க ஃபர்ஸ்ட் டைம் வரீங்கன்னு ஸ்வீட் செஞ்சேன்”, என்று அவனிடம் நீட்டவும்,

“ஓஹ்… எனக்கு ரொம்ப பிடிக்கும் காரெட் கீர். உங்களுக்கு எப்படி தெரியும்?”, ஆச்சரியத்துடனே எடுத்துக்கொண்டான்.

லேசாய்  நமுட்டுச்  சிரிப்பொன்றை உதிர்த்தவள், “அது நம்ம ஆஃபீஸ் அவுட்டிங்ல தீக்ஷனா பஃபேல காரெட் கீர் இருந்ததை பார்த்துட்டு…” என்று இழுக்க, “அன்று கோப்பையில் எடுத்துக்கொண்டு அவனுக்கு பிடிக்குமே என்று கூறி ஊட்டாத குறையாக தீக்ஷனா அலப்பறை செய்தது ஞாபகம் வர”, கண்களை சுருக்கியவன், “அதெதுக்கு இப்போ”, என்றான் கண்களை உருட்டி.

“இல்லை என்ன ஸ்வீட் உங்களுக்கு பிடிக்கும்னு யோசிச்சப்போ ஞாபகம் வரவும், செய்ய தெரியுன்னவே செஞ்சேன். ஊட்டியெல்லாம் விடமாட்டேன். தைரியமா நீங்க சாப்பிட்டு பாருங்க”, என்று கூறவும்,

கலாய்க்கிறயா என்னை? என்ற பார்வையோடு சுவைத்துப் பார்த்தவன், “ரொம்ப நல்லாயிருக்கு ஜெயந்தி. ஹோட்டல்ல சாப்பிட்டதைவிட இது சூப்பர்”, மனதாரப் பாராட்டினான்.

வீட்டிலிருந்து கிளம்பி, சென்னை ட்ராஃபிக்கில் நீந்தி, நுங்கம்பாக்கத்தில் ஒரு ப்ரத்யேக உணவகத்தில் வந்து அமரும் வரையிலும் பேச எதாவது இருந்துகொண்டே இருந்தது இருவருக்கும்.

அந்த இடத்தை கண்களால் சுழற்றியவள், “இவ்வளவு ஃபான்சியா எதுக்கு சஞ்சய் டின்னர் ட்ரீட்?”, என்று கேட்க, ஒரு சிறு புன்னகையை உதிர்த்தவன், “இங்க சாப்பாடும் நிஜமாவே ரொம்ப நல்லாயிருக்கும். வெறும் பார்க்க மட்டும்தான் அழகுன்னா வரமாட்டேன். இங்க டேஸ்ட்டும் நல்லாயிருந்தது”, அவன் விளக்கத்தில், யாரு, அவளோட வந்திருப்பாரா என்று  நினைப்பது ஜெயந்தியையும் மீறி முகத்தில் தெரிய,

 “மோகனோட ஒரு முறை வந்திருந்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. இப்ப உன்னோட… ஐ மீன் உங்களோட வரது செகண்ட் டைம்”, கேட்காத கேள்விக்கு விளக்கமளிக்க,

“அ… இல்லை நீன்னே கூப்பிடுங்க.”, என்று ஒருமையில் அழைக்க சொல்லியவள், அவன் சொல்லிய தகவலை உதடு கடித்து தோள் குலுக்கி சமாளித்தாள்.

மெனு கார்டை அவள் புறம் நகர்த்தினான் சஞ்சய். “அதுதான் நீங்க ட்ரை பண்ணியிருக்கீங்களே. நீங்களே ஆர்டர் சொல்லுங்க. எனக்கு இதுதான் பிடிக்கும்னு இல்லை. டேஸ்ட்டா இருந்தா எல்லாமே எஞ்சாய் பண்ணுவேன்.”, என்றாள்.

“சரி. குடிக்கறதுக்கு என்ன வேணும்னாவது பாரு”, என்று சொல்லவும், புரட்டிப் பார்த்தவள், ‘சன்செட் டிலைட்’ என்றாள்.

அவளது வேகமான தேர்ந்தெடுப்பில் சஞ்சய் புருவம் உயர்த்த, “சோடா வகையறால ஆரன்சு மட்டும்தான் பிடிக்கும். மத்ததெல்லாம் என்னன்னவோ காம்பினேஷன் போட்டிருக்கான். இது சேஃப்”, என்று விளக்கமளித்தாள்.

அதில் சிரித்தவன், “யாரோ டேஸ்ட் நல்லாயிருந்தா எதுவும் சாப்பிடுவேன்னு இப்பதான் சொன்னாங்க?”

“ஹலோ. சாப்பாடு ஷேர் பண்ணுவோம், சோ எனக்கு பிடிக்கலைன்னா நீங்க சாப்பிடுவீங்க. இது நாந்தான் குடிக்கணும். எனக்கு ஆர்டர் செய்துட்டு வேஸ்ட் பண்ணவும் பிடிக்காது. அதுதான்”, என்றாள் ரோஷமாக.

பொங்கும் சிரிப்பை உள்ளுக்குள் அடக்கியவன், வெயிட்டரிடம், அவள் கேட்டதை கூறிவிட்டு, கூடவே வெர்ஜின் பின்ன கோலேடா அண்ட் அ டேஸ்ட்டர் கிளாஸ் என்றான்.

என்னது என்று பார்த்தவளை, “பைனாப்பிள் ஜூஸ்தான் கூட தேங்காய்பால், கொஞ்சம் லெமன், கொஞ்சம் பைனாப்பிள் துண்டு போட்டு தருவான். போன முறை சாப்பிட்டேன். அதுதான் உனக்கும் ஒரு டேஸ்ட்டர் கிளாஸ் கேட்டேன். கொஞ்சமா தருவாங்க”,

இது கூட தெரியலையா என்றும் இல்லை, நான் உனக்கு சொல்லித் தருகிறேன் என்ற பாவனையும் இல்லை, சாதரணம் போல விளக்கமளித்தான். அடுத்து ஸ்டார்ட்டரில் என்ன வகை என்று ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

முதல் வகை தீக்ஷனா என்றால் இரண்டாம் வகை நிரஞ்சன். இரண்டுமில்லாது அவளைப் போல எனக்கு தெரிந்தது உனக்கு சொன்னேன், அடுத்து என்ற தன்னைப்போலவே அவனுமிருப்பது ஜெயந்தியிடம் ஒரு இலகுத்தன்மையை உடனே கொண்டுவந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமும் பேசி சிரித்தார்கள். மோகன் கல்யாணம் நடக்க வேண்டி அவன் அம்மாவால் திருமணஞ்சேரிக்கு கடத்தப்பட்ட விஷயத்தைக் கேட்டு அப்படி ஒரு சிரிப்பு ஜெயந்திக்கு.

“சே…பாவம் மோகன். அவர் வாய்ஜாலத்திற்கு எந்த பொண்ணை வேணாலும் ப்ரபோஸ் பண்ணி சம்மதிக்க வைப்பார். அவரைப் போய்…”, என்று சிரிக்க,

“ம்ம்… என்னையும் வரச் சொன்னாங்க. ஆனா, இல்லை ஆன்ட்டி நீங்க போயிட்டு வரதுக்குள்ள எனக்கு பிடிச்ச பொண்ணுகிட்ட பேசி சம்மதமான்னு கேட்டு வைக்கறேன்னு சொல்லிட்டு வந்தேன்.”, பட்டென்று மனதிலிருந்ததை கேட்டதும் ஜெயந்திக்கு ஒரு நொடி பிடித்தது கிரகிக்க.

இன்றே, இங்கேயே இப்படி அவன் விருப்பத்தை சொல்லுவான் என்று அவள் சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. குருபரன் என்னதான் சொல்லியிருந்தாலும், மிஞ்சிப்போனால் எதாவது கோடி காட்டுவான், இன்னும் கொஞ்ச காலமாவது யோசித்து, பின்புதான் கேட்பான் என்று நினைத்திருந்தாள் பாவம்.