அத்தியாயம் -14

வால்ட் வழமைபோல இயங்கிக்கொண்டிருந்தது. நேற்று முழுவதும் சஞ்சய் அலுவலகம் வரவில்லை. மோகனும் வந்தவன் மதியமே சென்றுவிட்டான்.  பார்ட்னர்ஷிப் அக்ரீமென்ட் படித்த பின் ஸ்ரீதர் பிரிவது என்று முடிவெடுத்தால் கணிசமான பாதிப்பு என்பதை உணர்ந்ததில் ஜெயந்திக்கு சஞ்சயின் மேல் இருந்த வருத்தமும் பெரும்பாலும் காணாமல் போயிருந்தது.

‘அவர் உயிரைக் குடுத்து வளர்த்த கம்பனி. தீக்ஷனா சஞ்சய் அவளை ரிஜெக்ட் பண்ணது பொறுக்காம பொறாமையில கேவலமா பேசினா அதுக்கு சஞ்சய் இவ்வளவு பேசினதே பெரிய விஷயம். பொண்ணு பேச்சை கேட்டுட்டு அவ அப்பா பிரிஞ்சா எவ்வளவு சிக்கலாகும்? ஏற்கனவே அவளை விட்டுட்டு ரிசார்ட்லர்ந்து என்னை அவர் கார்ல அழைச்சிட்டு வந்ததுலர்ந்து தான் பிரச்சனையே ஆரம்பமாச்சு. இதுல மறுபடி மறுபடி என்னை வெச்சே பாவம் அவருக்கு தலைவலி. எவளோ எதுவோ குறைச்சிட்டு போனா உனக்கென்ன வந்தது ஜெய்? தட்டிவிட்டுட்டு போ. இதுல அவரை வேற முறைச்சிகிட்டு திரியுற?’, என்று மனதுக்குள் தன்னைத்தானே அவ்வப்போது தாளித்துக்கொண்டிருந்தாள்.

“ஜெய்க்கா…. “, ஓடி வந்த மஞ்சு அவள் இருக்கைக்கு பக்கவாட்டில் வந்து ஒரு கையால் அணைத்து, கன்னத்தில் முத்தம் வேறு பதிக்க,

“ஏய்…. என்னடி பண்ற… நகரு…”, என்று அவளை தள்ளிவிட்டு எழுந்தாள் ஜெயந்தி.

இது இன்னும் வாட்டமாகிவிட, குதித்துக்கொண்டே ஜெயந்தியின் இரு கன்னங்களையும் கிள்ளி முத்தம் வைத்தாள் மஞ்சு.

“அடங்கறியா மஞ்சு நீ? என்ன இவ்வளவு சந்தோஷம். நிதானம் ப்ளீஸ்”, என்று ஜெயந்தி சிரிக்க, ராகினி, இன்னும் அருகில் இருந்த இருவர் என்று அவள் இருப்பிடத்தில் கூடிவிட்டனர்.

“ஜெய்க்கா,  நேத்து சாயந்திரம் சஞ்சய் சார் வீட்டுக்கு வந்தார். அப்பா அம்மாகிட்டல்லாம் என் வேலை, என் திறமை பத்தியெல்லாம் பெருமையா பேசினார்.”

அவள் மகிழ்ச்சியில் ஜெயந்தியும் மகிழ்ந்து, “உண்மையைத்தானே சொல்லியிருக்கார். வீட்டுல எல்லாருக்கும் ஹாப்பியா? என்ன திடீர் விசிட்?”

“சாயந்திரம் இருப்பியா மஞ்சு. அந்தப் பக்கம் வருவேன். உன் வீட்டுக்கு வரலாமா?  பேரண்ட்ஸ் பார்க்கணும் கேட்கவும் ஒன்னுமே புரியலை. ஆனா பாருங்க, என்னைப் பத்தி பேசிட்டு, ஆஃபீஸ்ல வெளி நாடு போற நல்ல வாய்ப்பெல்லாம் உங்களுக்காக வேண்டாம்னு சொல்லிடறா. உங்களுக்கு இது தெரியுமான்னு கேட்டார்.”

“அப்பறம் குடுத்தார் பாருங்க ஒரு லெக்சர். இந்த காலத்துல எத்தனை பசங்க அப்பா அம்மாக்காகன்னு உங்க பொண்ணு மாதிரி  இருப்பாங்க? அப்ப உங்களுக்குன்னு கடமை இல்லையா? நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணம்னு ஆச்சுன்னா, உங்களை நீங்க பார்த்துக்கவேணும் தானே? கஷ்டம்தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா வருஷக்கணக்காவா அவ வெளி நாட்டுல இருப்பா? ஒரு மாசம் இரண்டு மாசம் உங்க பொண்ணுக்காக நீங்க சமாளிக்கக்கூடாதான்னு கேட்க கேட்க அம்மாக்கு ஒரே அழுகை.  சார் போனப்பறம் கூட என் வலியை மட்டுமே பார்த்துகிட்டு நான் ரொம்ப சுய நலமா இருந்துட்டேனான்னு ஒரே குற்ற உணர்ச்சியா போச்சு அவங்களுக்கு. அப்பாவுமே, நானே எடுத்து சொல்லி உங்கம்மாவுக்கு புரிய வெச்சிருக்கணும் மஞ்சு. ஓடுற முடிய ஓடட்டும்னு நானுமே யோசிக்காம இருந்துட்டேன்னு சாரி கேட்டார்”,  நடந்ததெல்லாம்  கொட்டிவிட்டாள்.

அவள் சொந்த விஷயம் மற்றவர்களுக்கு எதற்கு என்று தோன்ற, “சரி வா, காபி ப்ரேக் எடுப்போம். “, என்று ராகினியிடம் கண்ணைக் காட்டிவிட்டு மஞ்சுவை அழைத்துக்கொண்டு வந்தாள்.

“சரி மஞ்சு. அதுக்கு சஞ்சய் சார்கிட்ட தாங்க்ஸ் சொல்லு, எனக்கெதுக்கு முத்தம்?”, காபியை ஆர்டர் செய்துவிட்டு கேட்க,

“அதுதாங்க்கா ஹைலைட்டே! சார் சொன்னார். முதல் தடவை மஞ்சுகிட்ட கேட்டப்போ, இந்த மாதிரி சிச்சுவேஷன் சார். நான் அப்ராட் எல்லாம் போகமுடியாதுன்னு சொல்லவும், அவங்க இஷ்டம்னு நானும் விட்டுட்டேன். திறமை இருக்கற பொண்ணு ஃபாமிலி முக்கியம்னு சொல்லும்போது என்ன செய்ய முடியும்னு நினைச்சிட்டேன். அப்போதான் என் ஃபைனான்ஸ் ஹெட் ஒரு விஷயம் சொன்னாங்க. சில நேரம் வெளியாள் யாராவது உடைச்சு பேசினா சிலது புரிய வரும்னு சொல்லவும்தான் எனக்கே ஏன் ஒரு தரம் உங்களை பார்த்து பேசிட்டு போகக்கூடாதுன்னு தோணுச்சு. அதான் வந்தேன். நீங்க யோசிங்கன்னு சொன்னார்க்கா. அப்போ பிள்ளையார் சுழி போட்டது நீங்கதானே. எனக்காக பாஸ் கிட்ட பேசினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்க்கா. எங்க நானே கேட்டா எங்க அம்மா தப்பா நினைப்பாங்களோன்னு நான் கேட்காமலேயே இருந்துட்டேன். ஆனா நீங்க கவனிச்சு, பாஸ்கிட்ட சொல்லி, அவரும் அதை யோசிச்சு… எப்படியோ என் ப்ரோஃபெஷனல் லைஃப்ல விளக்கேத்திட்டீங்கக்கா!”

மஞ்சுவின் கண்களில் நீர் திரையிட, “ஏய்… மக்கு. அதெல்லாம் ஒன்னுமில்லை. உன்னோட திறமைதான் எல்லாத்துக்கும் காரணம். நீ கிளம்பறன்னா, அம்மாக்கு நல்ல நர்ஸா பாரு. அவங்க பயத்தை போக்கிட்டாலே அவங்க சரியாகிடுவாங்க.”, மஞ்சுவிற்கு ஆலோசனை கூறினாலும், தான் கூறியதை யோசித்து, அதை நல்லவிதமாக செயல் படுத்தியவனைக் கண்டு உள்ளம் நெகிழத்தான் செய்தது. ‘பாரு… என்னவோ நீ ஜஸ்ட் எம்ப்ளாயீ, உனக்கு ஏன் அவர் முக்கியத்துவம் தரணும்னு தாளிச்சியே, இதோ இப்ப என்ன சொல்ற? ஏத்துக்கக் கூடிய விஷயமெல்லாம் நீ சொன்னன்னு செய்யறாரே? டெண்டர் அமௌண்ட் கூட உடனே குறைச்சிட்டு உனக்கு சொல்லவும் செஞ்சார்‘, என்று யோசனைகள் தோன்ற, ‘அப்ப அவருக்கும் என் மேல குரு சார் சொன்ன மாதிரி ஒரு விருப்பம் இருக்குமா?’, என்று கேள்வி தோன்றியது. நெஞ்சம் லேசாக படபடக்க, குருபரன் சொல்லியது  போல, இவள் இரஞ்சித்தை பார்க்கும் முன் தீக்ஷனாவை வேண்டாமென்று சொன்னதைக் கூறியது, அன்று இரவு என்ன முடிவெடுத்தாய் என்று அழைத்துக் கேட்டது என்று வரிசையாக தோன்ற ‘அப்படித்தான் இருக்குமோ?’ என்று நினைக்கவும் லேசாய் வியர்த்தது.

எதிரில் மஞ்சு எதுவோ பேசிக்கொண்டிருந்தது காதிலேயே விழவில்லை. “..க்கா, ஏன் வேர்க்குது?”, என்று அவள் கைபிடித்துக் கேட்கவும், சுதாரித்தவள்,

“சூடா காஃபி குடிச்சதுல அப்படி இருக்கு.  நேரமாச்சு போலாம் வா”, என்று மஞ்சுவோடு அலுவலகம் திரும்பினாள்.

பின் மதியம் போல சஞ்சய் அலுவலகம் வர, கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டே அவன் அறைக்குச் சென்றுவிட்டான். அவனைப் பார்த்துக்கொண்டிருந்தவள், “ஷ்…. ஜெய் இது ஆஃபீஸ். என்ன பண்ணிட்டு இருக்க?”, என்று மனதை அடக்கி வேலையில் கவனம் வைத்தாள்.

பேசிக்கொண்டே வந்தாலும், சஞ்சய் அவள் மீது கவனம் வைத்திருந்தவன், அவள் பார்வை அவன் மீதே இருந்ததில் குளிர்ந்து போய் அமர்ந்திருந்தான். ‘நல்ல வேளை நான் எதுவும் இம்ப்ரெஸ் செய்யாமலேயே என் மேல கோவம் போயிருச்சு போல? பார்வையில் கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் தெரிஞ்சுதோ?  நாளைக்கு ஃப்ரைடே தானே, சனிக்கிழமைக்கு டின்னர் கேட்கலாமா?’, என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

தீக்ஷனா விஷயத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டு ஜெயந்தியிடம் விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் தீக்ஷனா இவன் அழைப்பை ஏற்கவில்லை. பேச வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பினால் செல்லவில்லை.  அவன் நம்பரை ப்ளாக் செய்திருந்தாள்.

தந்தையிடம் இவனைக் கட்டிக்கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டாள் என்பதே போதும் என்று முடிவெடுத்தவனாக, ஜெயந்தியிடம் காதலைக் கூறிவிட முடிவெடுத்தான். அதற்கு முதலில் அவள் அவனுடன் உணவருந்த வரவேண்டும். ஜெயந்தியிடமிருந்து மின்னஞ்சல் வந்து அவன் கவனத்தை கலைத்தது.

“பார்ட்னர்ஷிப் பிரிவதற்கான சாத்தியங்கள் தயாராக உள்ளது. உங்கள் வசதிக்கு மீட்டிங்கில் விவரிக்க முடியும்”, என்று செய்தி அனுப்பியிருந்தாள்.

பிரியப்போவதில்லை என்று ஸ்ரீதர் சொன்னதை அவளிடம் தெரியப்படுத்தவில்லை என்று உணர்ந்தவன், “ப்ளீஸ் கம் நவ்”, என்று பதில் அனுப்பினான்.

தன் மடிக் கணினியுடன் உள்ளே நுழைபவளைப் பார்த்தான். எளிமையான கச்சிதமான, கண்களுக்கு உறுத்தாத கரு நீலமும் பிஸ்தா பச்சையும் கலந்த ஒரு சல்வார். சுருட்டை முடியை கிளிப்பில் அடக்கியிருந்தாள். கழுத்து கைகளில் மெலிதான ஆபரணம், சிறிய பொட்டு,கண்ணாடி என்று எளிமையாக அதே நேரம் பாந்தமாக இருந்தாள்.

“உட்காருங்க ஜெயந்தி”, சுதாரித்துக் கூறவும் அமர்ந்தாள்.