ஒரு மணி நேரம் கழித்து வந்த மோகன் நேராக சஞ்சய் அறைக்குச் சென்று, “கங்ராட்ஸ்டா மச்சான் ! உன் ஆளு சொன்ன மாதிரி குறைச்சு போட்டது வொர்க் ஆகிடுச்சு போல. சோ ட்ரீட் கூட்டிட்டு போகப்போறியா?”, என்று ஆர்பரிக்க, சற்றே பாவமாக அவனைப் பார்த்தான் சஞ்சய்.
“என்னடா?”
காலையில் தீக்ஷாவுடனான சண்டை, மாலை மறுபடியும் ஜெயந்தி கோவித்துக்கொண்டது என்று கூறியவன், “இதுக்கு நடுவுல நான் டின்னர் கூப்பிட்டா வரவா போறா? நான் ஏன் அவளை பேச விடலைன்னு சொன்னாலும் புரிஞ்சக்கலைடா”, என்று ஆதங்கப்பட்டான்.
“அடப்பாவமே… நேத்து கடலை போட்டு இன்னிக்கு சண்டை போட்டுன்னு ஏண்டா உன் காதல் களேபரமா போகுது?”, என்று கன்னத்தில் கைவைத்த மோகன், சற்றே யோசித்து, “ ஐ திங்க் ஜெயந்தி இதை எமோஷனலா எடுத்துகிட்டு இருக்காங்க. அவங்களை தப்பு சொல்லவும் முடியாது. தீகஷனா பேசினதுக்கு அவ கன்னம் பழுத்திருக்கணும். ஜெயந்திக்கு நீ இவ்வளவு பேசினதே அதிகம்னு தெரிய வாய்ப்பில்லை மச்சான்.”
“ம்ம்… சரி இப்ப இதை எப்படி சரி பண்றது? அதுக்கொரு வழி சொல்லு?”, சஞ்சய் கேட்கவும் மோகனுக்கு அந்த நிலையிலும் சிரிப்பு வந்தது.
“எனக்கென்னவோ ஜெயந்திக்கு தீக்ஷனா மேல கொஞ்சம் பொறாமை இருக்கவும்தான் அவளை நீ நல்லா நாக்கப் புடுங்கற மாதிரி திட்டலைன்னு கோவம். அதாவது, நீ ஜெயந்திக்கு பரயாரிட்டி குடுக்கலைங்கற நினைப்பு.”
“டேய்… நான் அவளுக்காகத்தானே பேசினேன். தீஷா எப்படி வேணாலும் ட்விஸ்ட் பண்ணுவான்னு தெரியுமே. ஒன்னுக்கு பத்தா ஸ்ரீதர் சார்கிட்ட பேசி பத்த வைப்பா. இத்தனை பேச்சுக்கும் ஜெயந்தி பதில் பேசலைங்கறதுதான் அவளை ஸ்ட்ராங்கா காட்டும். இரண்டு பேரும் பேசி சண்டையாகி வெளிய தெரிஞ்சிருந்தா எவ்வளவு அசிங்கம்? அவளுக்குத்தான் புரியலைன்னா உனக்குமாடா புரியலை?”, சஞ்சய் விளக்கமளிக்க, கையை உயர்த்திய மோகன்,
“நீ கம்ப்யூட்டர்கிட்ட லாஜிக் பேசலாம். இது பொண்ணுங்க மனசு சம்மந்தப்பட்டது ராஜா. இதெல்லாம் பேசி புரிய வைக்கமுடியாது. ஜெயந்திக்கு நீ தர முக்கியத்துவத்தை உணர வைக்கற மாதிரி எதாவது பண்ணு. சரியாகிடுவாங்க.”
“அவ விழுந்து வெச்சு எதாவது முடியாமப் போச்சுன்னா, இங்க சஞ்சய்தான் பார்த்துக்கணும். அதையே காரணமா வெச்சு உன் பிள்ளையை வளைக்கப் பார்ப்பா. அதுதான் வேணுமா உனக்கு? அவ நடந்துகறதை அப்படியே விட்டாலே போதும், உன் பிள்ளை தானே ஜெயந்திகிட்ட காதலை சொல்லுவான்.” என்று பேசி புரிய வைத்திருந்தார்.
இப்போது நண்பனிடம் பேசும் மகனைப் பார்க்க தமையந்திக்கு மனசு நிறைந்து போனது .
சஞ்சய் எதிர்பார்த்திருந்தபடியே ஒன்பது மணி வாக்கில் ஸ்ரீதர் அழைத்துவிட்டார்.
“சொல்லுங்க சார்”
“டெண்டர் வால்ட்டுக்கு கிடைச்சது சந்தோஷம் சஞ்சய். கங்க்ராட்ஸ்”, என்று வாழ்த்தினார்.
அது பற்றி சில நிமிடம் பேசியவர், ஒரு பெருமூச்சுடன், “இன்னிக்கு தீஷா நடந்துகிட்டது ரொம்ப தப்பு சஞ்சய். அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.”, எனவும் ஆச்சரியமாக புருவம் உயர்த்தினான் சஞ்சய். ஆக இந்த முறை மகள் பேசியதும் தன்னை கேள்வி கேட்கவில்லை. விசாரித்துவிட்டு புரிந்து கொண்டுதான் பேசியிருக்கிறார்.
“தீக்ஷனா உணர்ந்து கேட்க வேண்டிய மன்னிப்பை அவளுக்காக நீங்களும் நானும் கேட்கறதாலதான் சார் உங்க மக இப்படி அகம்பாவத்துல ஆடறா. எதிர்க்க நிக்கறதும் அவளை மாதிரி ஒரு பொண்ணுன்னு கொஞ்சம் கூட யோசிக்காம எவ்வளவு கேவலமா…. அவகிட்ட இப்படி ஒரு அசிங்கமான முகம் இருக்குன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுது சார். உங்க பொண்ணுங்கறதால ஒரு அளவுக்குத்தான் நான் என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியும். இதனால நம்ம பார்ட்னர்ஷிப் வேணாம்னு உங்களுக்குத் தோணினா அதை சுமூகமா பேசிக்கலாம் சர்.”, சஞ்சய் உடைத்தே பேசிவிட்டான்.
ஒரு நொடி அமைதிக்குப் பின், “ஓ… ஜெயந்திக்கு உன் வாழ்க்கையில் அவ்வளவு முக்கியத்துவமா சஞ்சய்? உயிரா வளர்த்த வால்ட்டுக்கு பாதிப்புன்னாலும் பரவாயில்லையா?”, அவர் குரலில் வியப்பு மட்டுமே இருந்தது.
“உங்க வாழ்க்கையில் உங்க பொண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப் போறீங்க சார்? வால்ட் வருமானம் நம்பி நீங்க இல்லைன்னு தெரியும் ஆனாலும் பெருசா உங்க நேரத்தை எடுத்துக்காம கணிசமா வர லாபத்தை வேணாம்னு நீங்க சொல்லப் போறீங்களா?”
“அந்த மாதிரி எந்த எண்ணமும் எனக்கில்லை சஞ்சய். நீ எனக்கு மாப்பிள்ளையா வருவன்னு நினைச்சேன்.”
“அது கண்டிப்பா நடக்காது சார்”, இடைவெட்டினான்.
“ம்ம்… தெரியும். என் பொண்ணுமே இது நடக்காது டாட்ன்னு சொல்லிட்டா.”
அவரின் சஞ்சலம் கண்டு வருந்தினாலும், “தீக்ஷனாக்கு எந்த கவலையும் இருக்காம பார்த்துகிட்டதுக்கான விளைவுதான் சார் இது. அவ இன்னும் மெச்சூராகணும்னோ இல்லை வாழ்க்கையில உருப்படியா எதாவது செய்யணும்னோ எந்த எண்ணமும் இல்லாம இருக்கறதுதான் இப்படியல்லாம் நடந்துக்க சொல்லுது. இங்க அவ நட்பு வட்டம் எதுவும் சரியில்லை சர். நீங்க அவளை திரும்ப அமெரிக்கா வரச் சொல்லுங்க.“
அவரிடம் பேசி வைத்தவன், ஜெயந்தியை என்ன செய்து அவள் தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவது என்ற யோசனையில் ஆழந்தான்.
ஜெயந்தியோ அவள் வீட்டில் குருபரனின் எந்த சமாதானத்துக்கும் செவி சாய்க்கவில்லை.
“வேணாம் சார். நீங்களும் அங்க இருந்தீங்களே, அவ பேசின பேச்சுக்கு எதாவது செஞ்சிருக்க வேண்டியதுதானே. அவளை பேசவிட்டு சும்மாதான இருந்தீங்க ? நிரஞ்சனுக்குப் பதிலா அவளை என் கால்ல விழ வெச்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன் !”, எகிறிக்கொண்டிருந்தாள்.
“ம்ம்…அப்பறம் என்ன நடந்திருக்கும் சொல்லு? சஞ்சய் ஓடிப்போய் தூக்கியிருப்பான். இதுதான் சாக்குன்னு அவ நடக்க முடியலை, தலை சுத்துதுன்னு ஒரு நாடகமாடியிருப்பா. கையோட அவனை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருப்பா? தேவையா? நீயும் தமையா மாதிரியே பேசினா எப்படிமா? படிச்ச பொண்ணு, நாலும் யோசிக்கத் தெரிஞ்ச பொண்ணு, நீயே இப்படி கேட்கலாமா?”, குருபரன் பொறுமித் தள்ளவும், அவர் சொல்ல வருவது புரிந்து, சற்று சமாதானமாகி, “ஹ்ம்ம்…சரி சரி… உங்களை மன்னிக்கறேன்… ஆனா உங்க தமையா மகன் பண்ணது சரின்னு மட்டும் சொல்லாதீங்க. என்னால ஒத்துக்கவே முடியாது!”
“எந்த விதத்துலேயும் நீ இந்த விஷயத்துல சிக்கிடக் கூடாதுன்னுதான் ஜெயந்திமா தடுத்தான். அவகிட்ட நீ பேச, பேச்சு முத்தி ரூமை விட்டு சண்டையை பொதுவுல கொண்டு வந்து, உன்னை அசிங்கப்படுத்தணும்னுதான் அவ ப்ளான் பண்ணா. அதை உணர்ந்துதான் சஞ்சய் எதுக்கும் இடம் கொடுக்காம அவளை மிரட்டி அனுப்பி வெச்சான். ஒரு நிமிஷம் யோசி, அப்படி நடந்திருந்தா எவ்வளவு சங்கடமாகியிருக்கும்?”
குருபரன் விளக்கவும், சஞ்சய் வேகமாக கதவை மூடியது, அதிர்ந்து பேசாமல் அழுத்தமாக தன் சினத்தைக் காட்டியது என்று ஒவ்வொன்றாக நினைவில் வந்தது.
“சில நேரம் விவேகம் நல்ல விஷயம் ஜெயந்திமா. யோசி.”, என்றதோடு விடைபெற்றார் குருபரன்.