அசரடிக்கும் அழகை எடுத்துக் காட்டும் உடலை ஒட்டும் ஒரு கருப்பு ஃப்ராக் முட்டிக்கு சற்று மேலே நின்றது. வாழைத் தண்டு கால்களின் பாதங்கள் கருப்பு நிற கிட் பூட்ஸ்சில் அடங்கியிருந்தன. கதவைத் திறந்த தீக்ஷனாவின் மை தீட்டிய விழிகள் ஒரு கணம் ஜெயந்தி அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்து பின் சமாளித்துக் கொண்டு சஞ்சயை நோக்கின.
“ஓ…. சூப்பர். இந்தப் பக்கம் நான் இல்லைன்னதும், ரூமுக்கே வந்து வழியற அளவுக்கு போயாச்சா? உன் சீட் வெளியதானே ஜெயந்தி? இங்க என்ன செய்யற? சீ..சீ…வேலை வேணும்னு என்ன லெவலுக்கு வேணாலும் போவியா?”, என்று அருவருப்பாய் நோக்க, சினத்தில் சிவந்து போன ஜெயந்தி பதில் தரும் முன்னரே, வேகமாக இருக்கையை பின்னுக்கு நகர்த்தி எழுந்த சஞ்சய்.
“ஸ்டாப் இட் தீக்ஷனா. வாயை அடக்கு. “, என்று அழுத்தமான குரலில் சீறினான்.
அதில் அசராது, புருவத்தை உயர்த்தி போலி ஆச்சர்யத்தை காட்டிய தீக்ஷனா, “அடேயப்பா… ஜெயந்தியை சொன்னா என்ன கோவம் வருது உனக்கு?”, என்றவள் ஜெயந்தியைப் பார்த்து, “வாவ்… இழுத்துப் போர்த்தி ஹோம்லி லூக்ல ஆளை எப்படி வளைச்சு போடறதுன்னு பி.எச்.டி முடிச்சிருப்ப போல?”
ஜெயந்தி, எழுந்து தீக்ஷனாவை நோக்கி விரல் நீட்டி எச்சரித்து பேசப் போக, அதற்கு முன்னர், “எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு தீகஷனா, அண்ட் அதை தாண்டி பேசற. அவ்வளவுதான் உன் மரியாதை. முதல்ல ஜெயந்திகிட்ட சாரி கேளு. இப்படி அடுத்தவங்களைப் பத்திப் பேச உனக்கு எந்த ரைட்சும் இல்லை!”, என்று வந்து அவள் புஜத்தை பிடித்து திருப்ப, அவன் கையை உதறினாள் தீக்ஷனா.
“நான்.. இவ கிட்ட… புல் ஷிட்! நீ வேணா உன் மிடில் கிளாஸ் மென்டாலிட்டியை காட்டற இவளைப் பார்த்து மயங்கியிருக்கலாம். நான் தெளிவாத்தான் இருக்கேன்.”,அலட்சியமாக தலையை அசைக்க, விரிந்த அவளது கூந்தல் அசைந்து அழகாய் தோளில் அமர்ந்தது.
“என் பொறுமையை சோதிக்காத தீக்ஷனா. உன்னை விரட்டாம இருக்க ஒரே காரணம் உங்க அப்பா மேல நான் வெச்சிருக்க மரியாதை. இரண்டு நிமிஷத்துல இப்ப நீ பேசினதுக்கு ஜெயந்திகிட்ட சாரி கேட்டுட்டு ஆஃபீஸ் வீட்டு கிளம்பலைன்னா, உன்னை தரதரன்னு இழுத்துட்டு போய் வெளிய தள்ளுவேன். அந்த அவமானம் உனக்கு வேணும்னா…”, என்று கைவிரிக்க,
மூக்கு விடைத்தவள், “ஐ டேர் யூ. உன் கம்பனியைவிட்டு அப்பா வெளிய போனா, அடுத்த மாசம் இழுத்து மூடணும். என்னை தர தரன்னு…. முடிஞ்சா ட்ரை பண்ணுடா…”, சொடக்கிட்டு சவால் விட்டாள்.
ஒரு நக்கல் புன்னகையை சிந்தியவன், “தெரியும் உன் புத்தி! இங்க ஜெயந்தி பார்த்துகிட்டு இருந்தது பார்ட்னர்ஷிப் அக்ரிமென்ட் டெர்ம்ஸ்தான். நீ உங்கப்பாவை ஆட்டி வெச்சு, அது எங்க வந்து நிக்கும்னு தெரிஞ்சுதான் ரெடி பண்றேன். இன்னும் ஒரு நிமிஷம்தான் பாக்கி இருக்கு… சாரி சொல்றியா இல்லை..?”, என்றவன் இந்த முறை அவள் புஜத்தை அழுத்தமாகப் பற்ற, அவன் இறுகிய முகமும், துணிந்துவிட்ட உடல் மொழியும் உணர்ந்தவளுக்கு முதல் முறையாக சஞ்சயின் ஊடுருவும் பார்வை குளுரூட்டியது.
சொன்னதை செய்துவிடும் நோக்கில் மற்றொரு கை கொண்டு கதவை திறக்க முற்பட, “ஷிட்…விடு என்னை!”, என்றவள், திரும்பி ஜெயந்தியை ஒரு பார்வை பார்த்து “சாரி….” என்று துப்பிவிட்டு, தானே கதவை திறக்க, சஞ்சய் கையை விலக்கினான்.
“யூ வில் பே ஃபார் திஸ் !”, என்று அடிக்குரலில் சீறிவிட்டு, யாரையும் பார்க்காமல் வெளியேறினாள்.
கதவை மூடியவன், ஒரு பெரு மூச்சுடன் ஜெயந்தியின் புறம் திரும்பி மன்னிப்பு கோரும் பாவனையைக் காட்ட, அவன் எதுவும் பேசும் முன் கைகாட்டி தடுத்தவள், “எதுக்கு என்னை பேச விடாம தடுத்தீங்க சஞ்சய்? என்னால அவளை ஹேண்டில் பண்ண முடியாதுன்னு நினைச்சீங்களா?” என்று கோபத்தை மறைக்காமல் காட்டினாள்.
உதடுகளை மென்றவன், “அவ சேத்தை வாரி வீசினா. அதுக்கு மதிப்பு குடுத்து நீ எந்த பதிலும் பேச வேணாம்னு நினைச்சேன். நீ கோவத்துல எதுவும் சொல்ல, அதை அவ டிவிஸ்ட் பண்ண வாய்ப்பு இருந்தது. அதை தடுக்கவும், நானே பேசினேன். அவ என்னோட பிரச்சனை, அதை நீ ஏன் ஃபேஸ் பண்ணணும் ஜெயந்தி? இனி அவ ஆஃபீஸ் வரமாட்டா. முதல் வேலையா ஆக்சஸ் நிறுத்தறேன். இன்னிக்குள்ள அவளுக்கு ஒரு முடிவு கட்டறேன். உன் மூட் அப்செட் ஆகியிருந்தா சாரி. கொஞ்சம் டைம் வேணும்னா லீவ் எடுத்துக்கோ.”, என்று மென்மையாக பேச, இன்னுமே சமாதானமாகாதவள்,
“எனக்கு எந்த சலுகையும் வேணாம். நான் மீட்டிங் ரூம்ல உட்கார்ந்து மிச்ச ஃபைலை பார்த்து முடிக்கறேன்.”, என்று தன் மடிக்கணினியுடன் கிளம்பினாள். அவன் அவளை ஒருமையில் பேசியது அவளது கவனத்திலேயே இல்லை.
நெற்றியை நீவிவிட்டுக்கொண்டே இருக்கையில் வந்து அமர்ந்தான் சஞ்சய். தானுண்டு தன் வேலையுண்டு என்று போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ‘இதென்ன ட்ராமா? அதுவும் அலுவலகத்தில் வைத்து?’, என்று யோசித்தவனை, ‘கூட வேலை செய்யறவங்களை பிடிச்சுத் தொலைச்சா ஆஃபீஸ்ல ட்ராமா நடக்காம வேற எங்க நடக்குமாம்?’ என்று மனசாட்சி துப்ப, எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து வேலையில் கவனம் வைத்தான்.
அன்றைய ஒரே நல்ல செய்தி, ஜெயந்தி குறைத்து அனுப்பச் சொல்லியிருந்த அந்த ரெட்மீ டெண்டர் வால்ட்டிற்கே வந்தது. மாலை வரையிலுமே பாராமுகம் காட்டிக் கொண்டிருந்த ஜெயந்தியை இதையே சாக்காக வைத்து உள்ளே அழைத்தான்.
உள்ளே வந்தவள் உட்காராமல் நிற்கவும், “உட்காருங்க ஜெயந்தி” என்று சொல்லவும்,
அதில் சற்றே கோவம் வந்தாலும், “இதுவும் வேலை விஷயம் தான். அந்த ரெட்மீ டெண்டர் நமக்கே கிடைச்சிருக்கு. உங்க உள்ளுணர்வு சரியாத்தான் சொல்லியிருக்கு. பேட்டா மாதிரி ரேட் போட்டது நல்லாவே வொர்க் ஆகியிருக்கு. நமக்கும் அடுத்த டெண்டருக்கும் ஒரு லட்சத்துக்கும் கம்மியாதான் வித்தியாசம் இருந்துச்சாம். தாங்க்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன்.”, என்றான். என்னவோ அவள் எந்த உணர்வும் காட்டாது இருந்தது அவனின் மகிழ்ச்சியையும் குறைத்தது.
‘அதுதான் முன்னாடியே எனக்குத் தெரியுமே’ என்று நினைத்தாலும், ஒரு சிறிய புன்னகையை சிந்தியவள், “கங்க்ராட்ஸ் சஞ்சய். நீங்க நினைச்ச மாதிரி இது லோக்கல்ல, கவர்ண்மெட்ல பல கதவுகளை திறக்கும்.”, என்றாள்.
“இன்னும் கோவம் போகலையா ஜெயந்தி?”
உதட்டை சுழித்தவள், “கோவமில்லை. எரிச்சல். நீங்க என்ன சொன்னாலும் தீக்ஷனாவை மனசார ஒரு நாலு திட்டு திட்டியிருந்தா சரியாகியிருப்பேன். எவ்வளவு ஈசியா என் காரக்ட்டரை கிழிச்சிட்டு போறா? நீங்களானா, லிமிட்ட தாண்டற, இப்படி பேச ரைட்ஸ் இல்லன்னு சாஃப்ட்டா பேசறீங்க? அவ துப்பிட்டு போன சாரி அவ பேசின எல்லாத்துக்கும் சரியாகுமா?”, பேசப் பேச ஜெயந்தியின் கோவம் முகத்தில் பளபளக்க, இரு கைகளையும் உயர்த்திக் காட்டியவன்,
“அம்மாடி…இவ்வளவு கோவம் வருமா உங்களுக்கு?”
“வாட்? இது என்ன சின்ன விஷயமா உங்களுக்கு?”, என்று பதிலுக்கு முறைத்தவள், மேலும் நிற்காமல், கடுகடுவென்றே தன் இருக்கைக்குத் திரும்பினாள்.