“அவ பிள்ளையை விட்டுட்டு நீ வேற மாப்பிள்ளை பார்க்க போனதுல, உன் மேலையும் கோவமாத்தான் இருக்கா.”, உர்ரென்று வந்த அவரது குரலில்,
“ஐயோ… சஞ்சய் அவங்க பிள்ளைன்னு நீங்க சொல்லி இப்பதான தெரியும்? நீங்க சொல்லி புரிய வைங்க, கோவத்துல என்னை அடிச்சாங்கன்னா நான் தாங்கமாட்டேன் சார்…”, அவர் நிஜமாகத்தான் சொல்கிறாரா இல்லை கலாய்க்கிறாரா என்று பகுத்தறிய முடியாமல் ஜகா வாங்கினாள்.
குருபரன் விடைபெற்றதும், இரவு சிற்றுண்டியை செய்து உண்ணும் வேளை அஞ்சலி அழைத்தாள்.
“என்ன மேடம், நேத்து கூப்பிட்டதுக்கு இன்னிக்கு கால் பண்ற?”
“ஹேய்..இல்ல ஜெய்…நேத்து அம்மா கோவிலுக்கு கூட்டிட்டு போக சொன்னாங்களா…அதுதான் லேட்டாகிடுச்சு. நீ சொல்லு எப்படியிருக்க? புது வேலையெல்லாம் எப்படி போகுது?”
“சூப்பரா இருக்குடி. புதுசா நிறைய கத்துக்கறேன். நான் ஆசைப்பட்ட ரெகக்னிஷன் நிறைய கிடைக்குது”, என்று சற்று நேரம் பேச,
“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜெய். இங்க தினம் தினம் டிராமாவா போகுது. செம்மையா சொதப்பி அனுப்பினாங்க ரிப்போர்ட்டைன்னு போனதரம் நான் சொன்னேன் இல்ல? நாம பேசிக்கிட்ட மாதிரியே ஹெட் ஆஃபீஸ்லர்ந்து என்கொயரி வந்துச்சு. உன் பழைய பாஸ் நிரஞ்சன் சரியான கிரிமினலாச்சே. அப்படியே தப்பை பார்த்தி தலையில கட்டி, அவனை பலி குடுத்துட்டான்! “
“என்னடி சொல்ற?!”
“ம்ம். நேத்து டெர்மினேஷன் லெட்டர் குடுத்துட்டாங்க. நோட்டீஸ் பீரியடுக்கும் சேர்த்து காச குடுத்து உடனே ரிலீவ் பண்ணிட்டாங்க. நியாயமா நிரஞ்சனைத்தான் தூக்கியிருக்கணும். இவந்தான் பொறுப்பு, ஆனா மேலிடத்துலதான் இவன் உன் புண்ணியத்துல ஒரு பிம்பம் உருவாக்கி வெச்சிருக்கானே. பேசி மயக்கி பார்த்தியை அனுப்பிட்டான்.”
மேலும் கொஞ்சம் இதைப்பற்றி பேசிய பின், அஞ்சலி, “இந்தக் கதையை விடு, உன் புது பாஸ் எப்படி? டாலில பாடம் எடுத்த அந்த பெருசு கிளம்பிடுச்சா?”
“ஹே…கங்கா சர்… நல்ல மனுஷந்தாண்டி. பொண்ணு ஜெர்மனில இருக்குன்னு கிளம்பி போயிட்டார். பாஸ் சஞ்சய் செம்ம மூளை. அவரைப் பார்த்தப்பறம்தான் நிரஞ்சன் எவ்வளவு போலின்னு புரிஞ்சுது அஞ்சலி. பி.ஜி அமெரிக்கால படிச்சிட்டு, அங்கேயே வேலை பார்த்து, கம்பனியும் ஆரம்பிச்சாலும், சாதாரணமான சுத்தமான இங்கிலிஷ் பேசறார் தெரியுமா, இந்த அல்டாப்பு நிரஞ்சன் மாதிரி, காஷ், டால்னு ஒரு ஸ்லாங்கும் கிடையாது. ரொம்ப மரியாதையான பேச்சு, பார்வை.”
“ம்ம்…இரு. ஒரு க்ளையண்ட் டின்னர் போனப்போ எடுத்தோம். ஆங்..டின்னர் போனா தேவையில்லாத தொந்தரவுன்னு நான் சொன்னா திட்டுவியே, என்னாச்சு தெரியுமா?”, என்று அன்று ரோஜருடன் நடந்த நிகழ்வை கூறிக்கொண்டே வாட்சப்பில் அவர்கள் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், அவனை சுட்டிக்காட்டியும் அனுப்பினாள்.
“ஹ்ம்ம்.. நல்லா அழகாத்தான் இருக்கார். அவர் தோள்ல தொங்கிட்டு இருக்கே? அந்த அப்சரஸ் யாரு?”
“அது தீக்ஷனா. அமெரிக்கா அஃபீஸ் ஹெட். அவ அப்பா ஒரு பார்ட்னர்.”
“என்ன லேசா பொருமல் தெரியுது மேடம் குரல்ல?”, அஞ்சலி சரியாக நாடி பிடிக்கவும்,
“ம்க்கும்… அவ லேடி நிரஞ்சன் டி அஞ்சலி”, என்று டின்னரில் நடந்த கதையை விரிவாக கூறவும், தீக்ஷனாவைப் பற்றி விட்டுவிட்டு,
“கிளையன்ட் டின்னரை விட்டுட்டு, சஞ்சய் உன்னை கார்ல கூட்டிட்டு வந்து டிராப் பண்ணாரா?”
“ம்ம்.. பத்திரமா உங்களை திருப்பி அனுப்பறது என் பொறுப்புன்னு சொல்லவும்தான் டின்னருக்கே ஓகே சொன்னேன். நடந்த கூத்துல, அவரே அவர் கார்ல கூட்டிட்டு வந்துட்டார். நான் கடுப்புல இருக்கவும், ஏதோதோ பேசி அழகா என் மைண்ட் டைவர்ட் பண்ணார் தெரியுமா? அவருக்கும் பேரண்ட்ஸ் இல்லை பாவம். கொஞ்சம் அவர் கதை ஷேர் பண்ணிகிட்டார்”, என்று இன்னும் சஞ்சய் குண நலங்களை பேச, மறுபுறம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலி,
“ஜெய்… நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”
“என்னடி?”
“இல்லை… திரும்பவும் உனக்கு பாஸ் மேல க்ரஷ் வருதா?”
“…”
“அஞ்சு நிமிஷமா நிறுத்தாம சஞ்சய் பத்தி புகழ்ந்து பேசிகிட்டு இருக்க. அவரும் பார்க்க நல்லா இருக்கார். ஜெய்…வேணாம் மறுபடியும் அதே தப்பை செய்யாதே”, ஒரு நல்ல தோழியாய் எச்சரித்தாள் அஞ்சலி.
“இல்ல அஞ்சலி…”, மறுத்தாலும், அவளுக்குமே கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. அஞ்சலி சுட்டிக்காட்டவும்தான் சஞ்சய் பற்றி வாயோயாமல் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று புலப்பட்டது. இதில் குருபரன் கூறியதை எதுவும் கூற முடியாது.
“ஜஸ்ட் ஒரு வார்னிங் ஜெய். பார்த்துக்கோ”, என்ற அஞ்சலி, வேறு பேசிவிட்டு, ஒரு நாள் டின்னருக்கு பார்ப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இணைப்பை துண்டித்தாள்.
யோசனையோடே அமர்ந்திருந்தவளின் கவனைத்தை வாட்சப்பில் செய்தி வந்த ஒலி கலைத்தது. சஞ்சய் அனுப்பியிருந்தான். “ஹலோ… மீட்டிங் முடிஞ்சுதா…என்ன டிசைட் பண்ணிருக்கீங்க?”
குருபரன் வேறு, எதற்கு நீ வரன் பார்க்கப் போவதற்கு முன் பேசினான் என்று கேட்டு ஒரு புறம் குழப்பியிருக்க, மறுபுறம் அஞ்சலி வேறு அஞ்சு நிமிஷமா சஞ்சய் பத்தி பேசிகிட்டு இருக்க என்று சொல்லியதும் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்க, அவனின் இந்தக் குறுஞ்செய்தியை என்ன விதத்தில் எடுத்துக்கொள்வது என்று தெரியாமல் பார்த்திருந்தாள்.
மறுபுறம் சஞ்சய் அவள் ஆன்லைனில் இருக்கிறாள், செய்தியை பார்த்துவிட்டாள் என்று தெரிந்தும், உடனே பதில் வராததில், ‘யெஸ் சொல்லிட்டாளா? காஃபி முடிஞ்சு டின்னர் போயிட்டாங்களா? செட் ஆகிடுச்சா?’’ என்று ஏதேதோ நினைக்க, “அது ஒரு டைம் வேஸ்ட் சஞ்சய்”, என்ற பதிலில் “யெஸ்!”, என்று முஷ்ட்டியை மடக்கி, உலுக்கி மகிழ்ந்தவன், “சந்தோஷம்”, என்று பதில் அனுப்பினான்.
‘என்னது? சந்தோஷமா? இது என்ன? எதாவது சொல்ல வராறா? யார்கிட்ட கேட்கறது?”, அஞ்சலியை அழைக்கப் போக, அடுத்த நொடி, “வேணாம்… எதாவது நெகட்டிவா சொல்லுவா”. இவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே சஞ்சய் பொறுமையின்றி அழைத்துவிட்டான்.
“சஞ்சய்…”
“என்ன பதிலே இல்லை? என்னாச்சு? அவன் எதாவது சொன்னானா?”, வேகமாக கேள்விகள் வர,
“அச்சோ… அதெல்லாம் இல்லை. அவனோட இரண்டு வார்த்தை சேர்ந்தா மாதிரி நான் பேசக்கூட இல்லை.” அவள் பதிலில் சற்றே நிதானித்தவன், “என்னாச்சு சொல்லுங்க ஜெயந்தி”, என்று உந்தினான்.
நடந்ததை அவள் சொல்ல மறுபுறம் சிரிப்பலை. “ஹாஹா…உங்களுக்குள்ள இப்படி ஒரு வில்லங்க ஹூமர் இருக்கா ஜெயந்தி… பூவர் ஃபெல்லோ”, என்று இப்போது முகம் தெரியாதவனைப் பற்றி பாவப்பட்டான்.
‘நான் நிஜமாத்தான் கேட்டேன். உங்க அம்மாவோட லவ்வர் என்னை பாடாய் படுத்திகிட்டு இருக்கார். உங்க அம்மா வேற என்மேல கோவமா இருக்காங்களாம்’, என்று சொன்னால் அனேகமாக சஞ்சையும் தெறித்து ஓடக்கூடும் என்பதை நினைத்து புன்முறுவல் பூத்தவள், “அது எப்பாவாச்சம்தான் வரும்”, என்று சமாளித்தாள்.
அடுத்த அரை மணி நேரம் பேச்சு ஓடியது, ஆனால் என்ன பேசினீர்கள் என்று கேட்டால் சொல்ல ஒன்றுமில்லாது போயிருக்கும். இரவு டின்னரிலிருந்து அவன் அப்போது கேட்டுக்கொண்டிருக்கும் பாட்டு வரை பேச்சு சுற்றி வந்தது.
ஒரு இனிமையான மன நிலையில் இருவருமே விடை பெற்றுக்கொண்டனர்.
காலை அலுவலகம் சென்றதும் ராகினி பிடித்துக்கொண்டாள். “என்னாச்சு? டும் டும் தானா? சொல்லு சொல்லு” என்ற அவள் ஆர்வத்தில், சிரித்துவிட்டாள்.
“அடேயப்பா, தான் மாட்டின கஷ்டத்துல அடுத்தவங்களை மாட்டி விடறதுல அவ்வளவு ஆர்வம்? உன் மாமியார் கிட்ட நீ படற மாதிரி நானும் படணுமா?”, என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே, இராம் மோகன் அங்கே வந்துவிட,
“அப்ப மாமியார் இல்லாத வரனா பார்க்கலாம் ஜெயந்தி. நேத்து என்ன ஆச்சு? அதை சொல்லுங்க.”
“அடடா. இது என்ன சர் எல்லாருக்கும் என்னை கல்யாணம் பண்ணி வைக்க இத்தனை இன்ட்ரெஸ்ட்? நோ சொல்லணும்னுதான் போனதே, அதையே சொல்லிட்டு வந்துட்டேன். போதுமா விவரம்? “, என்று புன்னகைத்தாள். மோகன் மகிழ்ந்திட, ராகினியோ, “சே நான் ஒரு மௌன ராகம் ஸ்டைல் மாற்றம் எதிர்பார்த்தேனே.. வேஸ்ட்டா போயிடுச்சே”, என்று வருத்தப்பட்டாள்.
சஞ்சய் அறைக்குள் நுழைந்த மோகன், “டேய்.. வேணாம்னு சொல்லிட்டாங்களாம் ஜெயந்தி. அடுத்த வரன் பிக்சர்ல வரதுக்குள்ள நீ மூவ் பண்ணு”, என்று சொல்பவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்த சஞ்சய், “அது நேத்து நைட்டே தெரியும் மச்சி. இந்த வரன் பார்க்கறதை ஆறு மாசம் ஹோல்ட்ல போட்டிருக்கா”
உதடுகளை மடித்து சிரிப்பை மறைக்க முயன்றாலும், அவன் கன்னக் குழி காட்டிக்கொடுக்க, “என்னாச்சுன்னு தெரிஞ்சுக்காம தூங்க முடியாதுன்னு தோணுச்சு. அதான் நேத்து நைட் கால் செய்தேன். பேசிகிட்டு இருந்தோம்டா.”
கண்கள் ஆச்சரியத்தில் விரிய, “நீயாடா சஞ்சய் இது? என்ன பேசிகிட்டு இருந்தீங்க?”, அவன் எதிரில் அமர்ந்தவன் தன் முகத்தை இரு கைகளாலும் ஏந்தியிருந்தான்.
மீண்டும் ஒரு அழகான புன்முறுவல் தோன்ற, “சும்மாதான். அவங்க நோ சொன்ன கதை, அப்பறம் ஜென்ரலா..”, தோள் குலுக்கினான்.
“ஜென்ரலாவா… அதுக்கு பேரு கடலை மச்சி கடலை! ஜெயந்திகிட்ட நைட் போன் பண்ணி கடலை போட்டிருக்க நாயே… நான் அவ சம்மதம் சொல்லி வெச்சிருந்தா என்ன சொல்லி எப்படி கலைக்கன்னு கவலையில இருந்தேன். உன்னால ஒரு டெக்ஸ்ட் அனுப்ப முடியலை எனக்கு?”, மோகன் குறைபட்டுக்கொள்ள, இம்முறை வாய்விட்டே சிரித்துவிட்டான் சஞ்சய்.
“சாரிடா மச்சான். அவகிட்ட பேசிட்டு அந்த ஃபீல்ல அப்படியே போய் படுத்துட்டேன்…”, வருத்தமே இல்லாமல் பதில் வந்தது.
“அடடா…அடடா…இதைப் பார்க்க ஆன்ட்டி இல்லாமப் போயிட்டாங்களே… இவன் மட்டும் ஏன் மோகன் பொண்ணுங்க மேல ஆர்வமே இல்லாம இருக்கான்னு எத்தனை வருத்தப்பட்டாங்க. ஆன்ட்டி, உங்க பையன் இப்ப லவ் ஃபீல்ல சுத்திகிட்டு இருக்கான் பாருங்க”, என்று விட்டத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருக்க, அறையில் மூலையில் இருந்த தமயந்தி கண்ணில் ஆனந்தக் கண்ணீர்.
கதவு நாசூக்காக தட்டப்பட, சஞ்சய் குரலில் அவள் மடிக்கணினியுடன் உள்ளே வந்த ஜெயந்தி, “மார்னிங் சஞ்சய்”, என்று பளிச் புன்னகையை சிந்திவிட்டு, “மோகன் உங்க ரூம்ல இல்லைங்கவும் இங்க வந்தேன். வால்ட் பார்ட்னர்ஷிப் அக்ரீமென்ட் பார்க்கணும். ஃபைனான்ஸ் சர்வர், அந்த ஃபோல்டர் உள்ள போக, செகன்டரி பாஸ்வார்ட் வேணும்னு கேட்குது.”
“ஓ.. எனக்கு ஒரு கால் இருக்கு ஜெயந்தி. சஞ்சய், நீ இதைப் பாரு”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.
“உட்காருங்க ஜெயந்தி, இங்க கனெக்ட் பண்ணுங்க. நான் ஆத்தரைஸ் பண்றேன். இங்கேயே டெர்ம்ஸ் படிச்சிட்டு லாகவுட் பண்ணிடுங்க. வெளிய தெரியற மாதிரி உங்க டெஸ்க்ல பார்க்க வேணாம்.”, சஞ்சய் இலகுவாக சொல்ல, அவளின் பின்னால் வாயிலருகே நின்றிருந்த மோகன், “ஓ… அப்படியா?”, என்று செய்கையில் கேலி செய்து, “நடத்துடா “, என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு சென்றான்.
அவன் கேலியில் புன்னகைத்த சஞ்சயை அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தவள், சிரிக்கும் அவன் ப்ரவுன் கண்களையும், ஒரு பக்க கன்னத்தில் விழும் குழியையும் பார்த்து சில நொடிகள் உறைந்து, பின் மீட்டுக்கொண்டாள்.
“என்ன ஜெயந்தி?”
“அஹ்… ஒ..ஒன்னுமில்லை. “, அவள் தடுமாற்றத்தில் ஒரு புருவம் உயர்த்த, மனதை இழுத்துப் பிடித்தவள், கணினித் திரையில் பார்வையை செலுத்தினாள்.
அதற்கு மேல் எதுவும் கேட்காது, “அந்த ஆஸ்க் ஆத்தரைசேஷன் பட்டன் கிளிக் பண்ணி, என் பேர் செலக்ட் பண்ணுங்க. எனக்கு மெசேஜ் வரும்.”
அவள் அப்படியே செய்து முடிக்க, அவன் பாஸ்வர்ட் போடவும், அவளால் உள்ளே செல்ல முடிந்தது. அடுத்து அந்த ஃபைல் திறக்க மீண்டும் ஒரு சங்கேத வார்த்தை. அவன் கூறியதை போட்டு திறக்க, “இது ஒரு முறைதான் யூஸ் பண்ண முடியும் ஜெயந்தி, அடுத்த வாட்டி வேற தேவைப்படும். “
“இத்தனை செக்யூரிட்டி நான் பார்த்ததே இல்லை சஞ்சய்”, என்று சிரித்தாள்.
“நாம அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ற இடத்துல இருக்கும்போது அந்த வழிகளை நாமளே கடைபிடிக்கலைன்னா எப்படி? வால்ட் செக்யூரிட்டியை ஹாக் பண்ணிட்டாங்கன்னு மார்கெட்ல செய்தி போச்சுன்னா, கம்பனியை இழுத்து மூடவேண்டியதுதான் ஜெயந்தி.” , என்று சொல்ல சம்மதமாக தலையாட்டினாள்.
ஜெயந்தி அவன் எதிரில் அமர்ந்து ஃபைலைப் பார்த்து கணினியில் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் மெயில் பார்த்துக்கொண்டிருந்தான் சஞ்சய். ‘இது கூட நல்லாதான் இருக்கு’, என்றது மனது.